வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட டெல்லியிலிருந்து மத்திய குழுவினர் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நாளிலிருந்து அந்த அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாறிமாறி தொலைபேசி அழைப்புகள். உயரதிகாரிகளின் அவசர உத்தரவுகள், இதன் காரணமாக வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றிய தயாபரன் பதற்றமாகியிருந்தார். அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகி பின் மண்டை மற்றும் புருவங்கள் வலிக்க ஆரம்பித்திருந்தன. வழக்கமாகச் சாப்பிடும் பிரஷர் மாத்திரையை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

ஐம்பது வயதைக் கடந்த தயாபரன், கறுப்பு அல்லது சாம்பல் நிற பேண்ட், அதற்குப் பொருத்தமாக வெளிர் நிறங்களில் முழுக்கைச் சட்டை அணிவது வழக்கம். ஸ்டார் முத்திரையுள்ள லெதர் பெல்ட் போட்டிருப்பார். கையில் ஒரு செல்போன். சட்டைப்பையில் ஒரு செல்போன். நாலாக மடித்த காகிதங்கள். முருகன் படம், கையெழுத்துப் போடுவதற்கான பச்சை மற்றும் கறுப்புப் பேனாக்கள் வைத்திருப்பார்.
அவர் சட்டைப் பையிலுள்ள ஐபோன் உயரதிகாரிகள் தொடர்பு கொள்வதற்கானது. அந்த அலைபேசியை இரவிலும் அணைத்து வைப்பதில்லை.
இந்த இரண்டு அலைபேசிகளைத் தவிர அலுவலக மேஜையிலும் வீட்டிலும் லேண்ட்லைன் தொலைபேசி இருந்தது. ஒரு நாளின் பெரும்பகுதி தொலைபேசியிலும் வாட்ஸ் அப் அனுப்பி வைப்பதிலும் கழிந்துவிடுவதாக உணர்ந்தார். அப்படியும் அலுவலக நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை.

பெரும்பான்மை நாட்கள் மதியம் ஹோட்டல் சாப்பாடுதான். கலெக்டர் அலுவலகக் கூட்டம் நடக்கிற நாட்களில் சாப்பிடுவதற்கு மூன்று மணிக்கு மேலாகிவிடும். இந்த நடைமுறை அவருக்குப் பழகிப் போய்விட்டிருந்தது.

இதனை ஈடுகட்டுவதற்காகப் பெரும்பான்மையான ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் பனிரெண்டு மணிக்கே சாப்பிட்டுவிடுவார். அதுவும் ஆட்டுக்கறி, கோழி, மீன், நண்டு, காடை என அசைவ வகைகள் அத்தனையும் சமைக்க வேண்டும். உணவு காரம் அதிகமாகவும் சூடாகவும் இருக்க வேண்டும். லுங்கி கட்டிக் கொண்டு சட்டை போடாத வெற்றுடம்புடன்தான் சாப்பிட அமர்வார். வேகமாக அள்ளி சாப்பிடும் போது அவருக்கு வியர்த்து வழியும். அதற்காகப் பேன் போடு வதற்கு அனுமதிக்க மாட்டார். சாப்பிட்ட பத்தாவது நிமிஷம் மாடி அறைக்குத் தூங்கச் சென்றுவிடுவார். விழித்து எழுந்து கொள்ளும் போது இரவு பத்து மணிக்கு மேலாகிவிடும். பின்பு குளித்துவிட்டு ரத்னா லாட்ஜிற்குச் செல்வார். அங்கே நண்பர்களுடன் கூடி குடித்துவிட்டுப் பின்னிரவில்தான் வீடு திரும்புவார்.

மத்தியக் குழு எந்த ஊர்களைப் பார்வையிடுகிறார்கள். அவர்கள் எங்கே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். அவர்கள் தங்குகிற விருந்தினர் விடுதியில் குளியல் அறை எப்படியிருக்கிறது. அவர்கள் சந்திக்கவுள்ள விவசாயிகள் யார் யார். எந்தப் பாதை வழியாகச் செல்கிறார்கள் என்பதைப் பற்றிய முழுமையான விபரங்களை அவர் அனுப்பி வைத்திருந்தார். ஆனாலும் ஒரு நாளில் பத்துமுறைக்கும் மேலாகக் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. இதற்கிடையில் மத்தியக் குழுவினர்களுடன் பத்திரிகையாளர்கள் பயணம் செய்யத் தனி ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. தேர்தல் காலங்களில் இது போன்ற பணிகளைச் செய்திருக்கிறார் என்பதாலும் சிறப்பாகச் செயல்படும் அதிகாரி என்பதாலும் அவரது முழுப்பொறுப்பில் விட்டுவிட்டார்கள்.

மத்தியக் குழு பார்வையிடவுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்மல் வர்மா பார்வையிடுவதற்காக வந்திருந்தார். அவருடன் இணைந்து பயணம் செல்ல வேண்டியிருந்தது.

தயாபரன் ஆட்சித்தலைவரை அனுப்பிவிட்டு மதியம் மூன்று மணிக்கு மேலாக அலுவலகம் திரும்பியிருந்தார். பசியும் களைப்பும் ஒன்றுசேரக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. தனது அறையிலிருந்த ஏசியை மிகவும் குளிர்ச்சியாக வைத்துவிட்டு தான் கொஞ்சம் கண் அயர்வதாக கிளார்க் லதாவிடம் தெரிவித்தார்.

“போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு ரெஸ்ட் எடுங்க சார். நாங்கள் பாத்துகிடுறோம்” என்று சொல்லியபடியே லதா இருக்கைக்குத் திரும்பினார்.
ஐந்துமணியை நெருங்கும் போது கலெக்டர் அலுவலகத்திலிருந்து தயாபரனை போனில் அழைத்தார்கள்.

லதா அவரை எழுப்புவதற்காகச் சென்றபோது அறை மிகவும் ஜில்லென்றிருந்தது. தயாபரன் ஒரு பனிக்கரடியாக மாறியிருந்தார். அதைக் கண்டு குழம்பிய லதா எப்படி இது நடந்தது எனப் புரியாமல், இயந்திரகதியில் “கலெக்டர் ஆபீஸிலிருந்து உங்களைப் பேச சொல்றாங்க சார்” என்றாள்.
பனிக்கரடி உருவத்திலிருந்த தயாபரன் “நான் பேசிக்கிடுறேன்” என்று மனிதக்குரலில் சொன்னார்.
“ஆள் உருவம் மாறியிருக்கிறது ஆனால் குரல் மாறவில்லையே” என்று எண்ணிக் கொண்ட லதா “உங்களுக்கு டீ சொல்லவா சார்?” என்று கேட்டாள்
“டீ வேண்டாம். ஜில்லுனு ஏதாவது சொல்லும்மா” என்றபடியே தனது செல்போனைத் தேடினார். மேஜைக்குக் கீழே அவரது பேண்ட் சட்டை கிழிந்த நிலையில் கிடந்தன. இரண்டு செல்போன்களும் மேஜை மீதிருந்தன. ஐபோனை எடுத்து கலெக்டர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.
“பயணத்திட்டத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பனிரெண்டாம் தேதிக்கு பதிலாகப் பதினான்காம் தேதி வருகிறார்கள். அதே ஊர்களைப் பார்வையிடுகிறார்கள்” என்று சொன்னார்கள் “எல்லாம் ரெடி சார். எப்பவும் அவங்க வரலாம்” என்று சொன்னார் தயாபரன்.
நிறைய ஐஸ் போட்டு கண்ணாடி டம்ளரில் கரும்புஜுஸ் கொண்டு வந்த பையன் அறையில் ஒரு பனிக்கரடி அமர்ந்திருப்பதைப் பார்த்து வேடிக்கையாகக் கேட்டான்
“ஒரு ஜூஸ் போதுமா சார்”.

அவனை முறைத்தபடியே அகன்ற கைகளை நீட்டி கரும்பு ஜூஸைக் கடகடவென வாயில் ஊற்றிக் குடித்தது பனிக்கரடி

“என்ன சார் ஆச்சு. இப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் கடைப்பையன்

“உன் வேலையைப் பாத்துட்டுப் போடா” என்று திட்டினார் தயாபரன். கண்ணாடி டம்ளரைக் கையில் எடுத்தபடியே அவன் வெளியேறிச் சென்றான்.
அலுவலகத்திலிருந்த ஊழியர்கள் அனைவரும் தயாபரன் பனிக்கரடியாக மாறிவிட்டதை அறிந்தார்கள். அதிகாரிகள் எந்த உருவமும் எடுப்பார்கள் என்று உணர்ந்தவர்கள் போல இயல்பாக எடுத்துக் கொண்டார்கள்.

தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட தயாபரனும் அதிர்ச்சி அடைவதற்குப் பதிலாகக் குழப்பமானார். அவரது குரல் அப்படியே இருந்தது. ஞாபகம் அப்படியே இருந்தது. அதே அரசு வேலை, அதிகாரம். எதுவும் மாறவில்லை. பின்பு பனிக்கரடியாக மாறியதால் என்ன பிரச்சனை
என்று தோன்றியது. தனது அகலமான கைகளையும் பருத்த உடலையும் விநோதமாகப் பார்த்துக் கொண்டார்.

அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற் காகக் கிளம்பியபோது அவரைக் காணக்காத்திருந்த பெண்மணி மட்டும் குழப்பத்துடன் கரடி எதற்காக இந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறது என்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சுந்தரம் ஜீப் எடு” என்று அவர் உத்தரவிட்டதும் டிரைவர் சுந்தரம் ஜீப்பை எடுத்தார். அவருக்கும் ஒரு பனிக்கரடி தனது ஜீப்பில் ஏறுகிறதே என்று குழப்பம் ஏற்பட்ட போதும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அதிகாரி கரடியாக இருந்தாலும் உத்தரவிற்கு அடிபணிய வேண்டும் என்று அவருக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது பனிக்கரடி ஜீப்பிற்குள் ஏறுவதற்குச் சிரமப்பட்டது. பின்பு கஷ்டப்பட்டுத் தனது கனத்த உடலை ஜீப்பிற்குள் திணித்துக் கொண்டு “போகலாம்” என்றது

சுந்தரம் ஜீப்பை ஒட்டத்துவங்கினார். நகரவீதிகளில் அந்த ஜீப் சென்றபோது பொது மக்களில் சிலர் பனிக்கரடியை வியப்போடு பார்த்தார்கள்.
ஏதாவது விழாவிற்குக் கொண்டு போகிறார்கள் போலும் என நினைத்துக் கொண்டார்கள். அவர் தனது வீடு போய்ச் சேர்ந்த போது கிரிக்கெட் விளையாடக் கிளம்பிக் கொண்டிருந்த அவரது மகன் விஸ்வா சப்தமாகச் சொன்னான்
“அம்மா வெளியே வந்து பாரு.”
தயாபரனின் மனைவி வெளியே வந்த போது பனிக்கரடி தனது பெரிய பாதங்களை எடுத்து வைத்து முன்கேட்டைத் தள்ளி நுழைந்தது
அவள் ஏதோ கேட்க முற்படுவதற்குள் அவரது கோபமான குரல் வெளிப்பட்டது
“அப்படி என்னத்தைப் பாக்குறே. உள்ளே
போடி.”
அவள் திகைப்புடன் “என்னாச்சி. ஏன் இப்படி வந்து நிக்குறீங்க?” எனக்
கேட்டாள். போதை உச்சமாகி சட்டையைத் தலைகீழாகப் போட்டு வந்து நின்ற நள்ளிரவில் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறாள்.

“ஒண்ணும் ஆகலை. இப்பவும் நான் உன் புருஷன்தான் போதுமா” என்றது பனிக்கரடி.

அவள் தனக்குதானே முணுமுணுத்தபடியே “குளிச்சிட்டு வாங்க” என்றபடியே சமையல் அறைக்குள் சென்றாள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் குளியல் அறையில் ஷவரைத் திறந்து விட்டுக் குளித்துக் கொண்டேயிருந்தது பனிக்கரடி. பின்பு ஈரத்துடன் நடந்து ஹாலை நோக்கி வந்தபோது “வீடெல்லாம் ஈரமாக்காதீங்க.” என்று மனைவி கோவித்துக் கொண்டாள் பனிக்கரடி அமர்வதற்கான பெரிய நாற்காலி எதுவும் அவர்களிடமில்லை. ஆகவே அவள் “அப்படி உட்காருங்க” எனத் தரையைக் காட்டினாள்.

“நான் வெளியே போயிட்டு வர்றேன்” என்று வெளியே கிளம்பியது பனிக்கரடி.

“கார்த்திகா வீட்டு ரிசப்சன் இருக்கு. நாம போக வேண்டாமா?” என்று கேட்டாள் மனைவி

“எட்டு மணிக்கு மேலே போவோம்” என்றபடியே பனிக்கரடி வெளியே செல்ல ஆரம்பித்தது

அண்டைவீட்டார் மற்றும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் பனிக்கரடியை வேடிக்கை பார்த்தார்கள்

“விஸ்வாவோட அப்பாடா” என்று ஒரு பையன் கேலியாகச் சொன்னான்.

மற்றவர்கள் சிரிக்கும் சப்தம் பனிக்கரடிக்கு நன்றாகவே கேட்டது. அவர் ஜீப்பில் ஏறிக் கொண்டார். நகைக்கடையில் அவருக்குச் சிறிய வேலை இருந்தது. மோதிரம் ஒன்றை சரிசெய்யக் கொடுத்திருந்தார். அதற்காகப் பஜாரில் இறங்கி நடந்த போது கடைவீதியிலிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சாவகாசமாக நடந்து தனது நகைக்கடையை நோக்கி வரும் பனிக்கரடியை எப்படி வரவேற்பது எனப்புரியாத முதலாளி மஸ்தான் பொதுவான புன்சிரிப்புடன் “வாங்க” என வரவேற்றார்.

“மோதிரம் சரிசெய்யக் கொடுத்திருந்தேன்” என்று சொன்னது கரடி. அந்தக் குரல் தயாபரனுடையது என்பதை அடையாளம் கண்டுகொண்ட மஸ்தான் “இன்னும் ரெடியாகிவரலை சார். வேற ஏதாவது காட்டவா” என்றார். “வேண்டாம்” எனக் கரடி தலையசைத்தது.

“புதுசா நாலு வடம் செயின் வந்துருக்கு. உங்க கழுத்துக்கு நல்லா இருக்கும்” என்றார் மஸ்தான்

“இப்போ வேண்டாம்” என்றபடியே வெளியேறியது பனிக்கரடி. இந்த வேடிக்கையைக் கடைப்பையன்கள் ரசித்தார்கள். பனிக்கரடி வெளியேறி போனபிறகு மஸ்தான் சொன்னார்

“கரடி ஒண்ணு தான் நம்ம கடைக்கு வராம இருந்துச்சி. அதுவும் இப்போ வந்துருச்சி.”
அதைக்கேட்டு அனைவரும் சிரித்தார்கள்.

அன்றிரவு அவரும் மனைவியும் கல்யாண ரிசப்சனுக்குப் போயிருந்த போது விபத்தில் கால் முறிந்தவரை விசாரிப்பது போலப் பலரும் ஏன் கரடியாகிவிட்டார் என மனைவியிடம் விசாரித்தார்கள். கரடியாக இருந்தாலும் அதிகாரி என்பதால் ஒரு வேறு
பாட்டினையும் காட்டவில்லை. மணமக்களுடன் பனிக்கரடி புகைப்படம் எடுத்துக் கொண்டது. சில இளம்பெண்கள் ஆசையாக
அருகில் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது பனிக்கரடிக்குப் பெருமையாகவே இருந்தது. ஆனால் அதைத் தயாபரனின் மனைவி விரும்பவில்லை.

அவர்களைச் சாப்பிடுவதற்காக மேல்தளத்திற்கு அழைத்துக் கொண்டு போகையில் மாப்பிள்ளையின் சித்தப்பா அவரிடம் “கரடி
யாகிட்டா புது டிரஸ் எடுக்க வேண்டிய தேவையில்லை” என்று அசட்டு நகைச்சுவையைப் பகிர்ந்து கொண்டார்
பனிக்கரடியாக இருந்த தயாபரன் இலையில் வைக்கபட்ட உணவுகளைப் பிசைந்து அள்ளி சாப்பிடுவதை முகம்சுழித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள் அவரது மனைவி.

அவர்கள் வீடு திரும்பும் போது “சாப்பிட்ட எச்சில் கையை நீங்கள் கழுவவேயில்லை” என்று மனைவி கோவித்துக் கொண்டாள்
அந்த ஒரு நாளைக்குப் பிறகு அவர் பனிக்கரடியாக உருவெடுத்தது பற்றி எவரும் கவலைப்படவில்லை. வியப்படையவும் இல்லை. அவரது அலுவலகத்திலோ அல்லது வீதியிலோ கூட யாரும் அதைப்பற்றிப் பேசிக் கொள்ளவில்லை. அவரது கையிலிருந்து சொட்டும் தண்ணீரால் அலுவலகக் காகிதங்கள் நனைந்துவிடுவதை மட்டும் ஊழியர்கள் குறையாகச் சொன்னார்கள். உத்தரவுகளைச் சரியாக நிறைவேற்றும்வரை அதிகாரி பனிக்கரடியாக இருந்தாலும் அரசாங்கம் கவலைப்படாது என்பது உண்மையானது.

பருத்த உடலோடு படுக்கை முழுவதையும் அவரே நிரப்பிக் கொண்டதால் மனைவி தரையில் பாயை விரித்துப் படுக்கும் நிலை உருவானது. பனிக்கரடியாக இருந்தபோதும் அவர் தவறாமல் டிவியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் பார்த்தார். பழைய சினிமா பாடல்களைக் கேட்டார். உயரதிகாரிகளின் உத்தரவுகளை நிறைவேற்ற பதற்றமாகச் செயல்பட்டார். எப்போதும் போலவே இரவில் நண்பர்களுடன் குடிப்பதற்குச் சென்றார். பின்னிரவில் வீடு திரும்பினார். பனிக்கரடியாக மாறியதால் வாரம் முந்நூறு ரூபாய்க்கு அவரது உடைகளை அயர்ன் பண்ணி வாங்குவது மட்டும் மிச்சம் என்று மனைவி சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

சில இரவுகளில் அவர் மொட்டைமாடியில் நின்றபடியே வானத்து நட்சத்திரங்களை ஏன் வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் அவர்களுக்குப் புரியவில்லை. ஒருநாள் தனது மனைவியிடம் “இப்போதெல்லாம் எனக்கு கனவுகளே வருவதில்லை. ஏன் இப்படி ஆனது” எனக் கேட்டார். அவளுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

திட்டமிட்டபடியே மத்தியக்குழு வருகை புரிந்த நாளில் கூடப் பனிக்கரடியாக இருந்த அவர் தனது ஜீப்பில் பின்தொடர்ந்தார். அந்தக் குழுவில் இருந்தவர்கள் அலுவலக நெருக்கடியால் தயாபரன் பனிக்கரடியாக மாறிவிட்டார் என்பதைச் சிறந்த வேடிக்கையாகக் கருதினார்கள். வெள்ளபாதிப்புகள் குறித்து அவர் பணிவான குரலில் விபரங்கள் தருவதை ரசித்தார்கள். மறுநாள் பத்திரிகையில் வெளியான புகைப்படத்தில் பனிக்கரடி ஒன்று ஓரமாக நிற்பதைப் பொதுமக்கள் பார்த்தபோதும் ஒருவரும் ஆச்சரியம் அடையவேயில்லை.

ஒரு ஞாயிறுகாலையில் அவர் வீட்டிற்கு வருகை தந்த மாலினியின் நான்கு வயது மகள் ஸ்வேதா “அங்கிள் எனக்குப் பனிக்கரடி முதுகில் ஏறணும்னு ஆசை.

நான் உங்க முதுகில ஏறிக்கிடவா?” என்று கேட்டாள். சரியெனத் தலையாட்டினார். அவரது முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு தலையைத் தடவிக் கொடுத்து “முன்னாடி போ” என்று உத்தரவிட்டாள். பருத்த உடலோடு அவர் முன்நகர்ந்தார். அந்த நிமிஷத்தில் மட்டுமே அவர் தான் ஒரு பனிக்கரடி என்பதை முழுமையாக உணர்ந்தார். முதன்முறையாக அவரது கண்களில் ஈரம் கசிந்தது.

பனிக்கரடியாக மாறியதால் அவரது அலுவலக இருக்கை பெரிதாக மாற்றப்பட்டது. நாளில் நான்குமுறை குளிக்கிறார் என்பதால் புதிய குளியல்
அறையை உருவாக்கினார்கள். ஜீப்பில் ஏறுவது சிரமம் என்பதால் அலுவலகத்திற்கு நடந்து போய்வரத் துவங்கினார். செல்போனில் முன்பு போலவே பொறுமையாகப் பலருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். உத்தரவுகளில் தயாபரன் என அழகாகக் கையெழுத்திட்டார். வணக்கம் சொல்பவர்களுக்குத் தனது பருத்த கையை உயர்த்தி வணக்கம் வைத்தார். அதிகாரி கரடியாக மாறியதால் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அலுவலக ஊழியர்கள் ரசித்தார்கள்.

தனியே இருக்கும் நேரங்களில் அவரது முகம் சோகமடைந்து காணப்பட்டது. மனைவி பிள்ளைகளிடம் உரையாடுவதைக் குறைத்துக் கொண்டார். பின்பு ஒருநாள் காலையில் தொட்டிசெடியில் பூத்திருந்த மஞ்சள் ரோஜாவை வியப்போடு பார்த்தபடியே இருந் தார். அதைப் பறிக்கும்போது அவரது கை நடுங்கியது.

ஆரம்பத்தில் பனிக்கரடியைக் கண்டு குலைத்த தெருநாய்கள் இப்போது வாலாட்டியபடியே பின்தொடர்ந்தன. சிறுவர்களும் கேலி செய்வதை மறந்தார்கள். பனிக்கரடியாக இருந்த தயாபரன் பின்னொரு நாள் அலுவலகம் விட்டு வீடு திரும்பாமல் நெடுஞ்சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எங்கே போனார். என்ன ஆனார் என்று எவருக்கும் தெரியவில்லை.

குடும்பத்தினர் அவரை ஊர் ஊராகத் தேடினார்கள். இமயமலைக்குப் போய்ச் சாமியார் ஆகிவிட்டார் என்றார் ஒரு ஜோதிடர். மற்றவர் இது அவருக்கு ஏற்பட்ட சாபம், அதற்கான விமோசனம் தேடிப் போயிருக்கிறார் என்றார். அலுவலகப் பொறுப்பைக் கைவிட்டுப் போனதற்காக அரசாங்கம் மெமோ அனுப்பியது. அவர் வீடு திரும்பவேயில்லை. காணாமல் போனது ஒரு மனிதனா அல்லது பனிக்கரடியா என்பதை அரசாங்கத்தால் முடிவு செய்ய முடியவில்லை. அதன் காரணமாக அவருக்கு வரவேண்டிய சேமிப்புநிதி மற்றும் பிறதொகைகள் நிறுத்திவைக்கபட்டன.

சில ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு இரவு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட துருவப்பிரதேசத்தில் பனிக்கரடி ஒன்று தனியே நடந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட தயாபரனின் மனைவி அக்கரடி தனது கணவன் என்றே நினைத்துக் கொண்டாள். அவளை அறியாமல் கண்ணீர் வந்தது. பாவம், அந்தக் கரடி எனத் தோன்றியது. அத்தோடு தன்னையும் கூட அழைத்துக் கொண்டு போயிருந்தால் வேளாவேளைக்குச் சமைத்துப் போட்டிருப்போமே என்றும் அவளுக்குத் தோன்றியது

writerramki@gmail.com