டெய்ஸி கங்கா நகரிலுள்ள தனது குடியிருப்பின், கொஞ்சம் பெரிய காற்றடித்தாலே பிய்த்துக் கொண்டு போய்விடுமளவிற்கு இருந்த, மரக் கதவைத் திறந்து வெளியே வந்து நின்று பார்த்தாள். தூரத்தில் கடல் ஊதாநிறத் துப்பட்டாவைப் போலப் பறந்து விரிந்து கிடந்தது. அதைக் கொண்டுபோய் வேறு எங்காவது வீசாமல் இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை நகரத்தின் மையப்பகுதியை ஒட்டி, இடிந்து விழுவதற்கும் இருப்பதற்கும் நடுவே ஊசலாட்டமாக உயிரைத் தாங்கிப் பிடித்திருந்த குடியிருப்பில்தான் வாடகைக்கு இருந்தார்கள். அதைவிடக் குறைந்த வாடகையென இங்கே வந்தார்கள். காரணம், டெய்ஸியின் அப்பா படுத்த படுக்கையாக இருக்கிறார்.
ஏதோ முடக்குவாதம் என அரசாங்க மருத்துவமனையில் மருத்துவர் சொன்னார். அதுபோக, இரண்டுமுறை இருதயம் செயலிழக்கிற புள்ளிக்குப் போய், அவசர சிகிச்சையால் திரும்பித் துடிக்கத் துவங்கியது. அதிலிருந்து அவளது அப்பாவான லோகு எழுந்து நடக்கவே இல்லை. ஓடியாடிய போதும்கூட ஒன்றும் செய்யவில்லை அவளுக்கு, வாய் வார்த்தைகளைத்தவிர. ஆனாலும் அத்தனை அனுசரணையாய் இருக்கும் அவருடைய சொற்கள். தங்கை டாரதியை விட அவருக்கு இவள்மேல்தான் பிரியம். அவள் வீட்டில் இருந்தால், எந்நேரமும் டெய்ஸியின் பெயரைச் சொல்லி அனத்தியபடியே கிடப்பார்.
சிலநேரங்களில் நல்ல மனநிலையில் இருந்தால், அருகில் போய் என்ன? என்பாள். மற்றநேரங்களில் தொழுவத்தில் மாடு கத்தும் ஓசையைப் போல அவரது அழைப்பினை எடுத்துக் கொள்வாள். அவரது மூத்திர வாடை பக்கத்தில் போனால் தன்னை வாஞ்சையோடு வாரியணைத்துக் கொள்ளுமோ எனப் பயந்தாள். “சின்ன வயசில அவருக்கு என்ன பிடிக்கும்தான். ஆனா இப்ப சுத்தமா எனக்கு அவரைப் பிடிக்கலை. தப்புன்னு தெரியுது. நான் என்ன பண்ணட்டும்? எங்கயாச்சும் தப்பிச்சா போதும்னு இருக்கு. எங்க போக?” என்று ஒருநாள் ஆற்ற மாட்டாமல் தன்னுடைய தோழி ஒருத்தியிடம் மட்டும் சொன்னாள்.
மற்றபடி அவள் எப்போதும் வாயே திறப்பதில்லை வீட்டில். சின்னவயதில் இருந்தே அப்படித்தான் இருக்கிறாள் என்றாலும், ஏனோ கூடுதல் துயரங்கள் வருகையில், இருக்கிற கொஞ்ச சொற்களும் கழுத்துக்குள்ளேயே ஒளிந்து கொள்கின்றன என்பதைக் கண்டறிந்து இருந்தாள். அதைப் பற்றி அவள் சிந்தித்த போது அநிச்சையாய் தனது கழுத்தைத் தடவினாள். குரல்வளையை பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்துக் கவ்விப் பிடித்துக் கொண்டு யோசித்தாள், அப்படியே அறுத்துவிடலாமா? பத்தொன்பது வயதுப் பெண் தற்கொலை, காதல் தோல்வியா என காவல்துறை விசாரணை என்று செய்திவரும் என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
டெய்ஸியின் அம்மா அமலோற்பவம் இங்கிருந்து பதினைந்து ரூபாய் கொடுத்து பேருந்தேறிப் போய், அடையாறில் ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அங்கே அவளது அம்மாவைவிட வயதுகுறைந்த அம்மா ஒருத்தியை மட்டுமே பார்த்திருக்கிறாள் டெய்ஸி. அவளது அம்மாவிற்கு நல்ல உடையை அணிவித்தால், வீட்டுக்கார அம்மாவைவிட நன்றாக இருப்பாள் என யோசித்தும் இருக்கிறாள் டெய்ஸி. ஏழு மணிக்குக் கிளம்பிப் போனால், சாயந்திரம் ஏழிற்குத்தான் மறுபடியும் திரும்பி வருவாள் அமலோற்பவம். அவளுக்கும் அம்மாவிற்கும் ஏழாம் பொருத்தமும். பக்கத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிற தங்கையோடு அவளது அம்மாவிற்கு எந்தச் சிக்கலும் இல்லை. டெய்ஸி என்றால் மட்டும் குரலை உயர்த்தி, சண்டைக்கு நிற்பாள்.
டெய்ஸி அமைதியாய் கல்லுமங்கா மாதிரி அமர்ந்திருப்பதைக் கண்டால் அம்மாவிற்குப் பற்றிக் கொண்டு வரும். அவளது வாயைக் கிண்ட, துருப்பிடித்த அந்தப் பெரிய கரண்டியில் சொற்களை அள்ளிக் கொண்டு வருவாள். ஆனால் திரும்பி ஒருவார்த்தை பேச மாட்டாள் டெய்ஸி. அதுதான் அமலோற்பவத்தின் ஆத்திரத்தை மேலும் தூண்டும். சத்தம்போட்டு அவள் புலம்புகிற தொனியில் சொல்வது எதையுமே காதில் வாங்காமல் தலையைக் குனிந்து சுடிதாரைப் பிடித்துச் சுரண்டிக் கொண்டிருப்பாள்.
அம்மா ஒருவகையில் குடியிருப்பின் முக்கில் இருக்கிற தெருநாயைப் போலத்தான். தள்ளி நின்று குரைப்பாளே ஒழிய, பக்கத்தில் வந்து கடிக்கவெல்லாம் மாட்டாள். அந்தமாதிரியான நேரங்களில், “டெய்ஸி இங்க வந்திரு கண்ணு” என அவளுடைய அப்பா அரற்றுவார். அம்மா குரல்வந்த அந்தத் திசைப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாள். ஒருதடவை இப்படி நடக்கும் என யூகித்து ஏற்கனவே காதில் பஞ்சை அடைத்து வைத்து அமர்ந்திருந்தாள். அதைக் கூர்மையாகப் பார்த்த அவளுடைய அம்மா, “காதில இருக்கிறத எடுத்து மூக்கில வச்சுக்கோ. ஒரேடியா எல்லாம் முடிஞ்சிரும்” என்றாள்.
ஒழுங்காக இருக்கும் தன்மேல் அம்மாவிற்கு ஏன் இத்தனை ஆத்திரம் எனப் பலதடவை டெய்ஸி யோசித்துப் பார்த்திருக்கிறாள். எப்போதிருந்து அவள் இப்படிக் கத்திக் கொண்டிருக்கிறாள்? சரியாக அப்பாவிற்கு முடக்குவாதம் வந்த பிறகுதான் என்பதை உணர்ந்தாள். ஒருவேளை தன் மீதான பயமாக இருக்குமா? என பெரிய மனுஷியைப் போல யோசித்தாள். அப்படிச் சிந்தித்து முடித்தவுடனேயே அவளுக்குச் சிரிப்பும் வந்தது. அதற்கப்புறம் அம்மாவைப் பற்றிய ஆராய்ச்சியை நிறுத்தினாள். அதைப் பற்றி எல்லாம் யோசித்தால், அவளுக்கு மூளை வலிப்பதைப் போலவும் இருந்தது என்பதும் ஒருகாரணம். அப்பாவின் அனத்தல், கொசுக்கடி, சொறசொறப்பான பழைய ப்ளாஸ்டிக் தம்ளரில் ஊற்றப்பட்ட டீ, என்பதைப் போல அம்மாவையும் அந்த வரிசையில் இணைத்துக் கொண்டாள்.
அவளது அம்மாவை தண்ணீர் எடுக்கப் போனபோது மரியம் மறித்து, “எதுக்கு வயசு வந்த பிள்ளைகூட போட்டிக்கு நிக்கற” என்றாள். “அவகூட எனக்கு என்ன போட்டி? என்னம்மா என்ன பண்ணலாம்ணு நாலுவார்த்தை அனுசரணையா பேசலாம்ல. சின்னவதான் சின்னப் பொண்ணு. அதுகூட இல்லாம அந்த வீட்டில எதுக்கு வாழணும். இவ எந்நேரமும் மூதேவி மாதிரி மூஞ்சை தூக்கிட்டே உங்காந்திருக்கா. சனியன் சண்டையாவது போடலாம்ல” என்றாள் பதிலுக்கு.
வேலைக்குப் போகையில் அவளும் அம்மாவும் ஒரே பேருந்தில் சிலசமயம் போனாலும், தனித்தனியாகத்தான் டிக்கெட் எடுப்பார்கள். அறிமுகமில்லாத பயணிகள் இருவரை அந்த மாநகரப் பேருந்து தன்பாட்டிற்கு வெவ்வேறு இடங்களில் இறக்கி விட்டுச் செல்கிறது. அவளுடைய அம்மா பிடித்துக் கொடுத்த வேலைதான் அது. நவநாகரீகத் துணிக்கடை ஒன்றில் உதவியாளர் வேலை. பனிரெண்டு முடித்தவுடன் பக்கத்து கல்லூரிக்குப் போய்விடலாம் என்றுதான் டெய்ஸி நினைத்திருந்தாள். அந்தநேரத்தில்தான் முடக்குவாதத்தில் விழுந்தார் அப்பா. அதனால்கூட அவர்மீது வெறுப்பு வருகிறதோ எனத் தனியாக அடையாறு பாலத்தின்மீது நின்று ஒருதடவை யோசித்து இருக்கிறாள். அப்போதும் வந்தது அந்தச் சிந்தனை. அப்படியே குதித்து விடலாமா? தீயணைப்புத் துறை ஆட்கள் கயிறு கட்டி இறங்குகிற காட்சியை நினைத்துக் கொண்டாள். ஏதோ யோசனையில் இடுப்பு உடையில் நாடா சரியாகக் கட்டப்பட்டு இருக்கிறதா என இழுத்துப் பரிசோதித்துக் கொண்டாள்.
வேறு எங்கும் போக்கிடமில்லாத டெய்ஸிக்கு தேவாலயம் மட்டும்தான் துணை. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை மாதிரி அளவில் சிறுத்ததுதான். ஆனாலும் உள்ளே நுழைந்து விட்டாலே அவளுக்குக் கதகதப்பாக இருக்கும். வேலைக்குப் போய்விட்டுத் திரும்புகிற போது அந்தப் பக்கம் தலையைக் காட்டிவிட்டுத்தான் வீட்டிற்கே வருவாள். நிறையப் பெண்கள் வந்தாலும் பாதிரியாருக்கு ஏனோ அவளைப் பிடித்திருந்தது. அவர் பிரசங்கம் செய்யும்போதுகூட கண்களை அவளை நோக்கி வீசுவார். அமைதியாய் கருணையின் வடிவாக மேரிமாதாவைப் போல டெய்ஸி அமர்ந்திருப்பதைப் போலத் தோன்றும் அவருக்கு. அவளது கதையெல்லாம் அவருக்குத் தெரியும் என்பதால், இந்தச் சிறிய பெண்ணிற்குத்தான் எத்தனை சோதனை என நினைத்துக் கொள்வார். ஒருமுறை தன்னையறியாமல் அதை ஒலிபெருக்கியில் சொல்லவும் செய்து விட்டார். கூட்டமே அந்தச் சிறிய பெண் யார் எனச் சுற்றித் தேடியது. அப்போதும் கண்களை மூடி முணுமுணுத்தபடி முழங்காலிட்டிருந்தாள் டெய்ஸி. அமைதியாய் அங்கேயமர்ந்து பாடல் கேட்கப் பிடிக்கும் அவளுக்கு.
தேவாலயத்தில் இருந்து வெளியே வருகையில் ஒருத்தி டெய்ஸியின் அம்மாவிடம், “எந்த வம்பு தும்புக்கும் போறதில்லை. அவ்ளோ கஷ்டம் இருந்தாலும் பிள்ளைக ரெண்டையும் நல்லமாரிக்கு வளர்த்திருக்க பாரு. எல்லாம் உன் சாமர்த்தியம். வாய்ச் சொல் வாங்காம வாழ்றதும் ஒரு தெறமைதான்” என்றாள். அமலோற்பவத்திற்குப் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பேசியவளின் கையை இழுத்துப் பிடித்துக் கொஞ்சநேரம் பிடித்துக் கொண்டாள். கண்ணில் நீர் அருவியைப் போலப் பொங்கியது. ஆனால் தான் துக்கத்தில் இல்லை என்பதையும் அப்போது உணர்ந்தாள்.
டெய்ஸியின் துணிக்கடையில் துணிகளைத் தடவி எடுத்து மடித்து வைக்கும் வேலையெல்லாம் மற்றவர்களுடையது. அவளால் அதைத் தொடக்கூட முடியாது. ஏனெனில் அத்தனையும் விலைகூடினவை என்றார்கள். படகு மாதிரி காரில் வந்து இறங்குபவர்களுக்கான கடை அது. வாடிக்கையாளர்கள் போனபிறகு நாற்காலி, அவர்கள் வந்துபோனதன் அடையாளமாய் தரையில் பதியும் மண் தடம் பதிக்கும் காலடிகளைத் துடைக்க வேண்டும். மற்றவர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுக்க வேண்டும். மிச்ச நேரங்களில் எப்போது அழைப்பார்கள் எனக் காதைத் தீட்டி கடையின் பின்பக்கம் இருக்கிற இருளான அறையில் காத்திருக்க வேண்டும். குறைவான சம்பளம்தான் என்றபோதும், ஒருவகையில் அந்த வேலை அவளுக்குப் பிடித்தும் இருந்தது. ஏனென்றால் இங்கே யாரிடமும் கதையளக்கத் தேவையில்லை.
தூரத்தில் இருந்து தூக்கிப் போடும் உடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள். மேலே பொருத்தியிருக்கிற மஞ்சள் விளக்கின் ஒளியில் அவை காற்றில் பறக்கிற காட்சியை வைத்தகண் வாங்காமல் பார்ப்பாள். நெஞ்சுப் பகுதியில் முத்துக்களும் ரத்தினங்களும் விளக்கொளியில் மின்னும். வீட்டில் இருக்கையில் அப்படி ஒருதடவை தன்னுடைய உடையைக் கட்டிலில் விசிறி விரித்துப் பார்த்தாள். டர்ரெனக் கிழித்துவிடலாம் போலத் தோன்றியது அவளுக்கு. என்றைக்காவது ஒருநாள் கடையில் அப்படி ஒரு சுடிதாரை போட்டுக் கொண்டு படியேற வேண்டும் என அந்த நேரத்தில் நினைத்துக் கொண்டாள்.
கடையில் துடைக்கப் போகிற போது யாரும் நோட்டம் பார்க்காமல் இருக்கிற சமயங்களில் அவளுக்குப் பிடித்த உடைகளைத் தன் தொலைபேசியில் படமாக எடுத்துக் கொள்வாள். வீட்டிற்குப் போய் இருளிற்குள் அமர்ந்து தனது தோழிகளுக்கு அதை அனுப்புவதை வாடிக்கையாகவும் வைத்திருந்தாள். டெய்ஸியின் தோழிகள் எல்லாம் இப்போது வெவ்வேறு கல்லூரிக்குப் படிக்கப் போகிறார்கள். அங்கேயும் பல கஷ்ட ஜீவன்கள் இருக்கின்றனதான் என்றாலும், யாரும் படிப்பை நிறுத்துகிற அளவிற்குப் போகவில்லை.
இதை யோசித்துக் கொண்டிருந்தபோது, தங்கையை எப்படியாவது அந்தக் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் என்கிற உறுதியும் அப்போது டெய்ஸிக்குள் உதித்தது. அவள் அனுப்புகிற படங்களுக்கு எல்லோரும் இதயக்குறி போட்டு அனுப்புவார்கள். அதைப் பார்க்கப் பார்க்க டெய்ஸிக்குள் குதூகலம் பொங்கும். வாய்க்கு வந்த விலையை அவர்களிடம் அடித்துவிடுவாள். ஒருலட்சம் என்று சொன்னால்கூட அங்கே நம்புவதற்குத் தயாராக இருந்தாள்கள். அதில் ஒருத்தி, “ஏடி ஒரு சுடிதாரை போட்டுக்கிட்டு படம் அனுப்பு. அப்பத்தான் நம்புவோம்” எனச் செய்தி அனுப்பியதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் டெய்ஸி.
டெய்ஸியின் அம்மா ஏனோ இடுப்பைப் பிடித்துக் கொண்டு, அடிக்கடி வலியில் அப்போதெல்லாம் அமர்வதைப் பார்த்தாள். என்ன ஆச்சு என்கிற வார்த்தை அவளது கழுத்துவரை வந்தது. அதை எதிர்பார்த்து அவளுடைய அம்மா அமர்ந்த இடத்தில் இருந்து உற்று நோக்குவதைப் போலவும் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் எழுந்து போக அவளுக்கு மனம் வரவில்லை. நடிப்பென அம்மா நினைத்துக் கொள்வாளோ என எண்ணினாள் டெய்ஸி. தங்கைதான் அம்மாவை இழுத்துக் கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துப் போனாள். திரும்பி வந்த அவள், “ஏதோ கர்ப்ப பையில கட்டின்னு டாக்டர் சொன்னார். இந்த வயசில உடம்பில தேவையில்லாத உறுப்பாம் அது. வெட்டித் தூக்கி எறிஞ்சரணும்னு சொன்னார். வேற கேள்வி கேட்டா மூஞ்சை திருப்பிக்கிறாங்க” என்றாள். மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கிற அம்மா பக்கத்தில் போய் அமைதியாக நின்றாள் டெய்ஸி.
“சனியன் இப்பவாச்சும் ஒருவார்த்தை பேசுதான்னு பாரேன். இங்க இவ இருந்தா ஆஸ்பத்திரீல இருந்து நேரா என்னை பொண வண்டீலதான் ஏத்திட்டு போவா” என்றாள் தங்கையிடம் அம்மா. அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் நின்றவளிடம், “சம்பளமா நல்ல காசு தர்றாங்க நான் வேலை பார்க்கிற வீட்டில. அதை இழந்திர முடியாது. தங்கச்சிக்கும் கடைசீப் பரிட்சை இருக்கு. உன் வேலை போனா உடனடியா இன்னொன்னை வாங்கிருவேன் நானு. ஒழுங்கா நான் வர்ற வரைக்கும் என் வேலைக்கு நீ போ. நல்லா இருப்ப. குழி தோண்டி மண்ணோட மண்ணா அதை புதைச்சிராத” என்றாள் அம்மா.
பொண வண்டி என அவள் சொன்னதைக்கூட பொறுத்துக் கொண்டாள் டெய்ஸி. ஆனால் அந்த வீட்டிற்கு வேலைக்குப் போகச் சொன்னதைத்தான் அவளால் பொறுக்க இயலவில்லை. அவளுடைய அம்மா பல ஆண்டுகள் அந்த வீட்டில் வேலைபார்த்த வகையில், சிலதடவை அவளோடு அந்த வீட்டிற்குப் போகவும் செய்திருக்கிறாள் டெய்ஸி. சமையலறையில் எப்போதோ தண்ணீர் குடிக்க வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் தம்ளரில் டீயை ஊற்றிக் கொடுத்து, “அங்க போயி உக்காந்து குடி” என வாசலுக்கு வெளியே விரட்டியதை அவள் மறக்கவே இல்லை. ஒரு டீயைக்கூட கௌரவமாய்க் குடிக்க முடிகிறதா? என அந்த வயதிலேயே அடையாறு பாலத்தின்மீது நின்று யோசித்தும் இருக்கிறாள்.
ஆனால் அம்மா இதையெல்லாம் பக்குவமாக எடுத்துக் கொண்ட தோரணையில் இளித்துக் கொண்டு குடிக்கும் காட்சியை அடியாழத்தில் இருந்து வெறுத்தாள் டெய்ஸி. பன்றிகூட சுதந்திரமாகத்தான் மலத்தை மேய்கிறது என நினைத்த போது, அவளுக்கு மனசில் பாரம் இறங்கியதைப் போல இருந்தது. அதற்கடுத்து அங்கே போனாலும், இலையில் ஒட்டும் நீர் போல விலகி நிற்பாள். “பெரிய மஹாராணியை வளர்க்குறேன்னு நெனைப்பு உனக்கு. ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் உன்னை இவ உன்னை தெருவில நிறுத்தப் போறாளா இல்லையான்னு பாரு. உனக்காக பார்க்குறேன். இல்லாட்டி இங்க நிக்காத போன்னு தொரத்தி விட்டிருவேன். அவளை பார்க்க பார்க்க வெலம் வருது” என்றாள் அந்த வீட்டுக்கார அம்மா.
திரும்பி வரும் வழியில் அவளுடைய அம்மா, “நம்மளை மாதிரி மனுசனா பொறந்தா மொதல்ல பணிவு வேணும். இல்லாடி குடும்பத்தில பொழப்பு நடக்குமா” என்றாள். ஆனாலும் அன்றைக்கு அதிகம் திட்டவில்லை அம்மா. டெய்ஸி அங்கே நடந்து கொண்ட விதத்தை அம்மாவுமே ஒருவேளை விரும்பினாளோ என்கிற கேள்வி இரவு படுத்து இருக்கையில் எழுந்தது டெய்ஸிக்கு.
அதற்கடுத்து அவளைவிட்டு விட்டுத் தங்கையை அழைத்துக் கொண்டு போகத் துவங்கினாள் அம்மா. இப்போது வேறு வழியே இல்லாமல், அம்மாவிற்குப் பதில் டெய்ஸி போயே ஆக வேண்டும். அந்த வீட்டின் வாசல் படியில் கால்வைக்கவே அவளுக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. நாள்முழுவதும் அந்த அம்மா கடுகடுவெனவே இவளைப்பார்த்து அலைந்து கொண்டிருந்தாள். “இங்க எல்லாம் போட்டது போட்ட மாதிரிக்கு விட்டுட்டு உங்க ஆத்தா ஆஸ்பத்திரீல போயி படுத்துக்கிட்டா. கர்ப்பப் பைதானே? என்னமோ இதயம் மாதிரி ஒரு நெனைப்பு” என்றாள். ஆங்காரமாகப் பதில் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது டெய்ஸிக்கு. வலியில் முனகுகிற அம்மாவின் முகம் நினைவில் வந்தது அப்போது. இன்னும் ஒருவாரம்தானே எனப் பொறுத்துக் கொண்டாள்.
படுக்கையறையைத் தண்ணீர் போட்டுத் துடைத்துக் கொண்டு இருந்த போது அந்தக் காட்சியைப் பார்த்தாள். துணிவைக்கிற அலமாரிக்கு உள்ளேயும் தன்னுடைய கடையில் இருப்பதைப் போல விளக்குகள் பொறுத்தப்பட்டு இருந்தன. எழுந்து அதைத் திறந்து பார்க்கையில், முகத்தில் வெளிச்சம் பரவியதை உணர்ந்தாள். சிவப்பு நிறத்தில் நெஞ்சுப் பகுதியில் முத்துக்களும் ரத்தினங்களும் நட்சத்திரங்களைப் போல விரவிக் கிடக்கிற மாதிரியான சுடிதார். நிச்சயம் இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் விலையிருக்கும். அவசரமாகத் திரும்பி அறைவாசலை நோக்கிப் பார்த்தாள். வீட்டுக்கார அம்மா உடற்பயிற்சிக் கூடத்துக்குக் கிளம்பிப் போனது நினைவிற்கு வந்தது. அதை ஆசையாகக் கையால் தடவிக் கொடுத்தாள் டெய்ஸி.
அம்மாவை அன்றைக்கு மதியம்தான் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள். இவள் போன போது அவளுடைய அம்மா மெதுவாக நடந்து கொண்டிருந்த காட்சி தெரிந்தது. இவள் தலை கண்டதும் மறுபடி ஓடிப் போய்ப் படுத்துக் கொண்டதைப் பார்த்தவாறு உள்ளே நுழைந்தாள் டெய்ஸி. கத்தரிக்காய் போட்டுக் காரக் குழம்பும் வாழைக்காய் பொறியலும் செய்து வைத்து விட்டுப் பக்கத்தில் இருக்கிற தோழி வீட்டிற்குப் போனாள். இரண்டு பேர் தனித் தனிப் படுக்கையில் படுத்தபடி அனத்துவதை அவளால் சகிக்கவே முடியாது.
நடந்து போகையில் சர்ச்சில் இருந்து ”எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுகிறார்” எனப் பாட்டுச் சத்தம் தூக்கலாகவே கேட்டது. அன்றைக்குச் சிறப்பு ஆராதனை எதுவோ போல. ரசிகாவின் வீட்டில் அவள் இருந்த போது தங்கை படபடப்பாக ஓடி வந்து டெய்ஸியின் முன் நின்று, “அம்மா வேலை இருக்கற வீட்டுப் பொம்பளை பாதர் முன்னாடி வந்து பயங்கர சண்டை. அம்மாவும் அங்கதான் இருக்கா. நீ சீக்கிரம் வா” என்றாள்.
எழுந்துநின்ற டெய்ஸிக்கு அப்போது தலைசுற்றுவதைப் போல இருந்தது. உடன் வருகிறேன் எனச் சொன்ன ரசிகாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தங்கையோடு விரைந்தாள். தூரத்தில் இருந்து பார்த்த போது, சர்ச்சில் பாதிரியாரிடம் தொலைபேசித் திரையைக் காட்டி அந்த அம்மா பேசிக் கொண்டு இருந்தாள்.
இவள் போய் நின்ற போது, “ஏன் பாதர் சர்ச்சில அடுத்தவங்க பொருளை திருடறதுக்குத்தான் கத்துக் குடுப்பீங்களா. பாவம், புண்ணியம், தர்மம்ன்னு எதையும் சொல்லித் தர மாட்டீங்களா” என்றாள். எதையும் யோசிக்காமல், “நான் திருடலை” என்று சத்தம் எழுப்பினாள் டெய்ஸி. “திருடிட்டு அவளோட திமிரை பாத்தீங்கள்ள. அதான் நான் அவள் வந்து போற சர்ச்சுக்கு வந்து கம்ளைண்ட் பண்ணேன். இப்ப போலீஸூக்கும் போவேன். அதில பத்தாயிரம் ரூபாயையும் காணோம்” என்றாள்.
அவளைக் கையமர்த்தி விட்டு, பாதிரியார் டெய்ஸியைக் குறுகுறுவெனப் பார்த்துவிட்டு, “அவங்க ட்ரெஸ்ஸ எடுத்து போட்டு போட்டோ எடுத்தது தப்பில்லையா” என்றார். பதிலேதும் சொல்லாமல் குனிந்து கொண்டாள் டெய்ஸி. அதைப் பார்த்த வீட்டுக்காரி, “என்னா நெஞ்சழுத்தம் பாருங்க. காணாம போன பத்தாயிரம் ரூவா எனக்கு இப்பவே வேணும். அவ போட்ட ட்ரெஸ்ஸ எப்பவோ நான் எரிச்சுட்டேன். எனக்கு காசு வராட்டி இப்பவே போலீஸூக்கு போவேன்” எனப் பாதிரியாரை நெருங்கிப் போய்க் கத்தினாள்.
அங்கே இருந்த கூட்டத்திடமும் இதைத் திருப்பியும் சொன்னாள். அமலோற்பவத்தால் அவமானத்தால் பொங்கிய அழுகையை அடக்க முடியவில்லை. அருகில் இருந்த வயர்க்கூடையை எடுத்து டெய்ஸியின் முதுகில் சத்தம் வர அடித்து விட்டு, “நெனைச்சேன். செஞ்சு முடிச்சிட்டா. குடி கெடுத்த பாவி” என்றாள்.
பாதிரியார், டெய்ஸியின் தாய்மாமா இருவரும் பணம் பற்றித் தனியே அழைத்துப் போய் வாய் வலிக்கக் கேட்டுப் பார்த்தார்கள். குனிந்த தலையை அவள் நிமிர்த்தவே இல்லை. ஒன்றும் அவளது வாயில் இருந்து வெளியே வரவே இல்லை. குரல் வளையிலேயே ஒட்டிக் கொண்டது அச்சொல்.
பாதிரியார் அந்தப் பணத்திற்குத் தான் பொறுப்பு என ஏற்றுக் கொண்டு சமாதானம் செய்து அந்த அம்மாவை அனுப்பி வைத்தார். டெய்ஸி தேவாலயத்தின் வாயிற்படிக்கு அருகில் தலைக்கு மடியை முட்டுக் கொடுத்து அமர்ந்து இருந்ததைப் பாதிரியார் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவள் வேறு எதுவும் செய்துவிடக் கூடாது என்கிற பதைபதைப்பு அவருக்குள் இருந்தது.
தீர்மானமாய் எழுந்து நின்ற டெய்ஸி, பாவமன்னிப்புக் கூண்டை நோக்கி நடந்தாள். புரிந்து கொண்டவராய் பாதிரியாரும் அதனை நோக்கிச் சிறுபுன்னகையுடன் ஆவலோடு முன்னேறி வந்தார். டெய்ஸி வழக்கம் போல அதிகமாக எல்லாம் பேசவில்லை. நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் அதைக் காதினுள் வீசிவிட்டு எழுந்த அவள், முதுகைத் திருப்பி நின்றமேனிக்கு இருந்த யேசு சிலையை வெறித்து ஒருதடவை பார்த்து விட்டு, காற்றைப் போல நடந்து மறைந்த காட்சியைப் பாதிரியார் அந்தத் தேவாலயத்தில் தீர்மானமான ஒன்றாகப் பார்த்தார்.
இரவு உறக்கத்தில் டெய்ஸி முனகும் சத்தம் லோகுவிற்கு நன்றாகக் கேட்டது. இருளிற்குள் விழித்துக் கொள்கிற அவருக்குக் கடைசியாய் அவள் சொன்னது, ஒரு சத்திய வாக்கைப் போலக் காதிற்குள் ஒலித்தது. விரக்தியைப் போலவொரு பாவனையை ஏந்தி இருளிற்குள் சிரித்தார். திரும்ப அந்த வாக்கைத் தனக்குள் சத்தமாகச் சொல்லிக் கொண்டார் லோகு.
“இனிமேல் அந்தாளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”.