பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. வேறு வழியில்லை.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மெயில் ஒன்றாவது நடைமேடைக்கு வருவதாக மலையாளம், ஆங்கிலம், இந்தியில் அர்த்த ராத்திரியில் பெண் குரல் குழைந்தது. பாலக்காடு இரயில் நிலையம் விழித்துக் கொண்டது. அரை உறக்கத்திலிருந்த மனிதர்கள் படக்கென்று எழுந்து கொண்டார்கள். உறிஞ்சுவதற்குத் தயார் நிலையில் டீ, காபி.
சிமெண்ட் இருக்கை ஒன்றில் உட்கார்ந்திருந்த அவன் அவசரம் காட்டவில்லை. சில்லென்ற காற்று வீசியது. முன் நெற்றியில் நீண்டு தொங்கிய முடி காற்றில் அலைந்தது. இரண்டு நாள் தாடி முகத்தைக் கோரமாக்கியது. சிகரெட்டால் கறுத்த உதடுகள். வெளுத்த ஜீன்ஸ். நிறமா, அழுக்கா என்று சொல்ல முடியாத சாம்பல் நிறத்தில் சட்டை. கழற்றியிருந்த ரப்பர் செருப்பில் கருப்பாய் கால் தடம். அறுந்த வாரினை தாங்கும் ‘பின்’ ஏழ்மையைச் சொன்னது.
சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தது. பற்றவைத்தால் மாட்டிக்கொள்வோம் என்று தெரியும். அதைவிடப் பெரிய கவலை பயணச்சீட்டு இல்லாமல் சென்னை செல்வது.
‘அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. உடனே வா’ பக்கத்து வீட்டுக்காரம்மா நேற்று கைப்பேசியில் சொன்னாங்க.
‘எப்ப பாத்தாலும் சீக்கு. போய் தொலைஞ்சா கூட நல்லா இருக்கும்’.
அப்படி நினைத்து இருக்கக் கூடாதோ?
நினைத்த ஒரு நாளுக்குள் போய்ச் சேர்ந்து விட்டாள்.
யாரிடமும் காசு கேட்க முடியாத நிலை. ஏற்கனவே எல்லா விதமான பொய்க் காரணங்களைக் கூறி எல்லா பக்கமும் ஏகத்துக்குக் கடன். முதலாளியும் இல்ல. கண்ணூரு போயிருக்காரு.
அங்க இங்க தேடி அம்பது ரூபாய்தான் புரட்ட முடிஞ்சுது.
பயணச்சீட்டு சுளையா 200 ரூபாய்.
பயணச்சீட்டு இல்லாமலேயே பயணிக்க முடிவு செய்துவிட்டான்.
ஒன்றும் புதிதல்ல. முன்பு ஒருமுறை இதே போலத்தான் சென்றான்.
அப்போது பொங்கல் சமயம். கூட்டம் அலைமோதியது.
நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது விசில் சத்தம் கேட்டது. வண்டி போய்விட்டால் அடுத்தது காலை 5 மணிக்குத்தான்.
ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தில் ஏறிவிட்டான். முன்பதிவு இல்லாத பெட்டி, நிரம்பி வழிந்தது. பயணத்தைத் திட்டமிட்டுப் பதிவு செய்து சொகுசாகப் போகிறவங்களுக்கு 20 பெட்டிகளுக்கு மேலே. ஆத்திர அவசரத்துக்கு ஓடும் கடைசி நேரப் பயணிகளுக்கு ஒன்று, இல்லையென்றால் இரண்டு பெட்டி. நாலு பேர் உட்காரும் இடத்தில் எட்டு பேர். நிற்கக்கூட இடமில்லாமல் புளி மூட்டை மாதிரி கூட்டம். கழிவறைக்குள் செல்ல முடியாது. அங்கேயும் இரண்டு பேர் நிற்பார்கள். சென்னை வரை நின்று கொண்டே பயணம்.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் யாராவது பயணச்சீட்டு கேட்டு வருவார்களோ என்ற அச்சம். நெருக்கித் தள்ளும் அந்தக் கூட்டத்தில் பரிசோதகர் எப்படி வரமுடியும்?
வரவில்லை.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இறங்கி நடக்கும் போது கோட்டு போட்ட இருவர் நின்றுகொண்டு பயணச்சீட்டு சேகரித்தனர். வெள்ளம்போல் பாய்ந்த கூட்டத்தில் அகப்படாமல் சென்றுவிட்டான்.
இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
அனுபவங்கள் அச்சத்தை அகற்றி விடுகிறது. இம்முறை எளிதில் துணிந்து விட்டான். சோகம் நிறைந்த சூழல்கள் பல நேரங்களில் தப்புகளுக்கு நியாயம் கற்பித்து விடுகின்றன.
வேகமாக ஓடி வந்த களைப்பில், பெருமூச்சு விட்டுக்கொண்டே இரயில் உள்ளே நுழைந்தது.
கடைசிப் பெட்டி.
சென்ற முறை போல நிரம்பி வழியும் கூட்டம் இல்லையென்றாலும், உட்காருவதற்கு இடம் கிடைக்கவில்லை.
அமர்ந்து இருந்தவர்கள் இவனைக் கண்டு கொள்ளவில்லை. நேருக்கு நேர் பார்த்தால் இரக்கம் வந்து விடுமோ என்கிற கலக்கம் தான்!
உட்கார வேண்டும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. எப்படியோ மாட்டிக் கொள்ளாமல் போய்ச் சேர்ந்தால் போதும்.
சிறிது நேரம் கழித்து, வேட்டி கட்டிக் கொண்டிருந்த ஒருவர், கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு, இவனை அழைத்தார்.
தயங்கினான்.
‘இவ்விட இருக்கி’.
உட்கார்ந்தான்.
சில்லென்ற காற்று முகத்தில் அடித்தது. மற்ற பயணிகளை நோட்டம் விட்டான். சன்னலோரம் ஒரு ஆணும் பெண்ணும் கைப்பேசியில் எதையோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அடுத்து நடுவயதர். பக்கத்தில் சிறுவன், அவர் மீது சாய்ந்து கொண்டு தனக்குள் பேசிக் கொண்டிருந்தான். இன்னும் நிறைய விதவிதமான முகங்கள். ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்திலிருந்த வேட்டி,
‘நிங்கள் எவ்விட போகுன்னு?’
‘மெட்ராஸ்’.
‘ஓ. அவ்விட எந்தா ஜோலி?’
‘ஜோலி பாலகாட்டில’.
‘பின்ன எந்த மெட்ராஸ்?’
எரிச்சலூட்டியது.
‘எங்க அம்மா செத்துட்டாங்க”.
வேட்டி அதிர்ந்து விட்டார். மற்றவர்களும் பேசுவதை நிறுத்திவிட்டுப் பரிதாபமாகப் பார்த்தனர்.
இவன் உட்கார்ந்திருந்த பகுதியிலிருந்தவர்கள் இன்னும் கொஞ்சம் இடதுபுறமாக நகர்ந்து, தாராளமாக இடம் கொடுத்தார்கள்.
திடீரென வண்டியில் அசாதாரண அமைதி.
இருளைக் கிழித்துக்கொண்டு
இரயில் விரைந்தது. சன்னல் வழியே முழு நிலவு. வானத்தில் தத்தித்தத்தி விளையாடிக் கொண்டிருந்தது. வேறு ஒரு சமயமாக இருந்திருந்தால் இரசித்திருக்கலாம்.
அம்மாவின் நினைவு வந்தது. சாகும்போது அவன நினைச்சு இருப்பாளோ? நெஞ்சு குமறியது.
இவன் பிறந்த சமயத்தில் அப்பா இறந்து போனார். ‘அப்பன முழுங்கிட்டு பிறந்தான்’னு சொன்னதோட அர்த்தம் ஏழு வயதாகும் போது தான் அவனுக்குப் புரிந்தது,
அம்மா வேலை செய்ற வீட்ல, மிச்ச மீதி உணவைத் தின்று வளர்ந்தான். வலுக்கட்டாயமாகப் பள்ளிக்கூடத்தில் கூட்டிப் போய் விட்டும் ‘போகலைன்னு’ வந்துட்டான்.
அம்மாதான் அழுதாங்க.
‘படிக்கலன்னா கூட பரவால்ல. ஸ்கோலுக்கு போனா, நல்ல சோறாவது திங்கலா’ன்னு சொல்லுச்சு. ஆனா டீச்சருங்ககிட்ட எவன் அடி வாங்கறது.
அவர்கள் குடிசைப் பகுதியில் இருக்கிற பசங்களோடு சேர்ந்து பருவத்துக்கு ஏத்த மாதிரி கோலி, காத்தாடி, பம்பரம்னு பொழுது போச்சு.
வண்டி ஏதோ ஒரு நிலையத்துக்குள் நுழைந்தது. தமிழ் எழுத்துகள். போத்தனூர் ஆக இருக்குமோ என்று நினைத்தான். மூடியிருந்த கதவை வெளியே இருந்து யாரோ தட்டினார்கள்.
கருப்பு கோட்டு போட்ட ஆள் நின்றுகொண்டிருந்தார். பரிசோதகர்.
உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது என்ன செய்வதென்று அலங்க மலங்க விழிக்க,
‘டிக்கெட் செக்கிங்ஙானும்’ என்றான் வேட்டி.
‘கைல காசு இல்ல. டிக்கெட் எடுக்கல’ பதறினான்.
எதிர் வரிசையிலிருந்த நடுவயதர் தன் பக்கத்திலிருந்த சிறுவனை இருக்கைக்கு அடியில் அவசர அவசரமாகத் தள்ளிவிட்டார்.
வேட்டி, ‘யேய் நீயும் அவ்விட போய் ஒளிக்குக’ என்று கூறினான்.
இவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்குக் கீழே சாமான்கள் ஏகத்துக்கும் இருந்ததால் எதிர் பக்கம் போய் அந்த சிறுவனின் பக்கத்திலேயே படுத்துக் கொண்டான்.
சிறுவனைக் கீழே படுக்க வைத்தவர் இப்போது சில சாமான்களை எடுத்து இவன் படுத்திருந்த பகுதியின் முன்பக்கம் அடுக்கி விட்டார். இருவரும் உள்ளே படுத்து இருப்பது சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது.
இதற்குள் யாரோ கதவு திறக்க பரிசோதகர் உள்ளே ஏறினார்.
எதுவும் பேசாமல் கைகளை மட்டும் நீட்ட, ஒவ்வொருவராகப் பயணச் சீட்டைக் காட்டினர்.
இவர்கள் இருந்தது, பெட்டியில் மூன்றாவது பகுதி. இரண்டாவது பகுதியில், இருவரிடம் பயணச்சீட்டு இல்லை என்றவுடன் அபராதம் கட்டச் சொன்னார். பணம் இல்லை என்றவுடன் ‘அடுத்த இரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு இவர்கள் பகுதிக்கு வந்தார். எல்லோரும் இயல்பாகத் தங்களுடைய சீட்டை நீட்டினார்கள்.
அவனுக்கு உதறல் ஏற்பட்டது. மாட்டிக் கொள்வோமோ?
பெட்டியின் மங்கலான ஒளி இருக்கைக்கு அடியில் கொஞ்சமாக எட்டிப் பார்த்தது. இதெல்லாம் எனக்குப் பழக்கம்தான் என்பது போலச் சிறுவன் திரும்பி சுவர்களில் விரல்களை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். பரிசோதகர் மேலே பார்த்தார். சாமான்களுக்கு இடையில் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். தட்டியெழுப்ப, சலிப்பு எரிச்சலுடன் பயணச்சீட்டை நீட்டினான்.
சம்பிரதாயத்துக்குக் கீழே ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த பகுதிக்குச் சென்றார். எல்லாப் பகுதிகளையும் முடிக்கும் போது கூடுதலாக இன்னொரு பயணி. இன்றிரவு மூன்று சிக்கியதே என்கிற திருப்தியோடு அவர்களைப் பத்திரமாகத் தள்ளிக்கொண்டு போய் கதவருகே நிற்கவைத்து, அருகிலிருந்த இருக்கையில்
இருந்தவனை எழுப்பி உட்கார்ந்து கொண்டார்.
பையனை இருக்கைக்குக் கீழே படுக்க வைத்தவர், மெதுவாகக் குனிந்து,
‘வெளியே வராத. அங்கேயே இரு’ என்றார்.
வண்டி விரைந்து ஓடிக் கொண்டே இருந்தது. பையனின் சன்னமான குறட்டை ஒலி கேட்டது.
சிறுவயதில் குறட்டை விட்டதாக அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறான். வளர்ந்த பிறகு அவன் குறட்டை ஒலி சுற்றுவட்டாரத்தை அலற விட்டது.
பொண்டாட்டி, அவனை விட்டுப் போனதற்கு அதுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
‘உன் மூஞ்சியும் நீயும். பக்கத்துலப் படுத்தா குமட்டிக்கிட்டு வருது’.
சவரம் பண்ணாத முள் தாடி, வியர்வை, சிகரெட், சாராயம் கலந்த ‘காக்டெய்ல்’ நாற்றம், வாய பொளந்துகிட்டு குறட்டை, போதாததற்கு ஒழுங்கா ஒரு தொழிலும் இல்லாதவனுக்கு வாக்கப்பட்டவ நொந்துக்கறது நியாந்தானே.
வேலையில்லாமல் திரிஞ்சிகிட்டு இருக்கிறவனுக்குக் கல்யாணம் பண்ணா பொறுப்பு வந்திடுமென்று
அங்க இங்க தேடி, அம்மா கட்டி வச்சா.
சின்ன வயசுல வீட்டு வேலைக்குப் போகும்போது புள்ள அழாமல் இருக்க, கைல ஏதாவது விளையாட குடுத்துட்டு போவா.
கட்டிக்கிட்டு வந்தவளையும் அதுமாதிரி எனப் புரிந்து கொண்டான். ஊர் சுற்றி விட்டு, ராத்திரி வீட்டுக்கு வந்தவுடன், அவள் ஆக்கி வைத்திருக்கிற சோற்றை வயிறு முட்டத் தின்று விட்டு, அவள் என்ன ஏது என்று உணர்வதற்குள் உறவு பூண்டு உறங்கி விடுவான். எல்லாமே துரித கதியில். இது அவனது தின வாழ்க்கை.
தான் வேலைக்குப் போனால் பொறுப்பு வருமோ என்று ஒரு நிறுவனத்தில் துப்புரவாளராக சேர்ந்தாள். சொற்ப சம்பளத்தில் வண்டி ஓடியது.
அவன் திருந்திய மாதிரி தெரியவில்லை. நாளெல்லாம் உழைத்து விட்டு வருபவளை ஈவு இரக்கமின்றி பயன்படுத்திக் கொண்டான்.
மாதவிடாய் தள்ளிப் போன போது
அச்சத்தோடு மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றாள். சிறுநீரைப் பரிசோதித்து உறுதி செய்தனர். இருப்பதற்கே வழி இல்லை, இதில் புதிதாக எதற்கு என்று கலைத்து விட்டாள். அவனிடம் சொல்லவில்லை. இது ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை நடந்து விட்டது. மருத்துவர் இதுதான் கடைசி என்று எச்சரித்து அனுப்பினார்.
அவன் மாறவில்லை.
ஒரு முறை வலுக்கட்டாயமாகப் புணர்ந்தபோது,
‘யோவ், இதில துளிகூட இஷ்டம் இல்லைய்யா. நீ பண்றத என்னால தடுக்க முடியலை. பயித்தியமே புடிச்சிடும் போல இருக்கு’ அரற்றினாள்.
‘நீ இப்பிடி சித்திரவத செய்யறத நிறுத்தலன்னா எங்கியாவது கண்காணாத எடத்துக்கு ஓடிப் பூடுவேன்’.
போய்விட்டாள்.
இவன் கொஞ்ச நாள் பித்துப்பிடித்தவன்போல அலைந்தான். தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் ‘என்னோடு வா’ என்று பாலக்காட்டுக்கு அழைத்துச் சென்று, மர ஆலையில் வேலை வாங்கிக் கொடுத்தார்.
திறன்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. மரங்களை வண்டியில் ஏற்றுவதும் இறக்குவதும் என பாரக்கூலியாக இருந்தான்.காசநோய் அம்மாவைப் பாடாய்ப் படுத்தியது. மகன் சம்பாதித்து அனுப்புவான், ஓய்வெடுத்து உடலைச் சரி செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்தாள். ஆரம்பத்தில் அவள் அவனுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அனுப்புவதை நிறுத்திவிட்டு அவனிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்க, ஒன்றுமே வரவில்லை. தன்னிடம் எதிர்பார்க்கவில்லை என்பதே ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.
தன் எதிர்காலமே மகன்தான் என்று அவன் மீது அன்பும் நம்பிக்கையும் வைக்க மொத்தத்தையும் குலைத்து விட்டான்.
அவனுக்கு அவன்மீதே எரிச்சல் வந்தது. கண்களின் ஓரத்தில் கண்ணீர். ஆச்சரியமாக இருந்தது. நினைவு தெரிந்து முதன் முறையாகக் கண்ணீர். வழிந்து தோளை ஈரப்படுத்தியது.
கால் பகுதியிலும் ஈரத்தை உணர்ந்தான். திடுக்கிட்டு என்னவென்று தொட்டுப் பார்க்கத் தரை ஈரமாக இருந்தது. சிறுவன் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பவன் போல. வேறு ஏதாவது சந்தர்ப்பமாக இருந்தால் கோபப்பட்டுத் தாக்கி இருப்பான். ஏனோ அந்த சிறிய தண்டனை அப்போதைக்குத் தேவைப்பட்டது.
வெளியே என்ன நிலவரம் என்று தெரிந்துகொள்ள மெதுவாகத் தலையைச் சற்று வளைத்துப் பார்க்க எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கூடுதலாக வேறு சிலர் இருக்கைகளை நிரப்பி இருந்தார்கள். பரிசோதகர் இறங்கி இருப்பாரா? எழுந்து வெளியே வந்தாலும் உட்கார இடம் கிடைக்காது. இப்போதைக்கு இந்த இடமே சொர்க்கம் தான்.
சிறுநீரின் ஈரத்தைத் தாங்க வேண்டும். கூடவே நாற்றத்தையும்.
அம்மாவிடம் பெரிதாக மாற்றுத் துணிகள் இருந்ததில்லை. சில நேரங்களில் சரியாகக் காயாத ஈரப் புடவையைக் கட்டிக் கொள்வாள். அதிலிருந்து வரும் வினோத வாசம் அவனுக்குப் பிடிக்கும்.
அம்மா உடலை எப்படிக் கிடத்தி வைத்திருப்பார்கள்? பக்கத்து வீட்டுக்காரம்மா இருப்பாங்களா? லைன்ல இருக்கிற வீடுகளிலிருந்து யாராவது வந்திருப்பார்களா? தங்களுக்கு மட்டும் ஏன் உறவுகளே இல்லை?
விடை தெரியாத பல கேள்விகள்.
அம்மாவின் முகம் வந்து வந்து போனது. அவள் உடல் மட்டும் தனியாக இருப்பது போலக் காட்சி மிரட்டியது. தாறுமாறாக எண்ண ஓட்டம்.
உறங்கிப் போனான்.
அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் வண்டி நுழைந்தது. இறங்கினான். கால் சட்டைக்குள் ஏதோ ஊர்ந்து.
ஈரம் காய்ந்து உலர்ந்திருந்தது. கையால் தட்டினான். காலுக்கடியில், கரப்பான் பூச்சியொன்று வெருட்டென ஓடியது.
வாயிலை நோக்கி நடந்தான். எச்சரிக்கையோடு வெளியேற வேண்டும். அதோ தூரத்தில் பரிசோதகர். சீருடை தவிர்த்து,
கருப்பு முழுக்காற்சட்டை, தொளதொளவென அரைக்கை சட்டையுடன் கையில் சிறிய பையுடன் நின்று கொண்டு பயணச் சீட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் யாரையும் நிமிர்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. தேடிப்போய் சீட்டு கேட்கவும் இல்லை. வெளியேறுவோர், கைகளில் திணித்ததை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டார். ‘அப்பாடா’ என்றிருந்தது. பாதையிலிருந்து சற்று விலகி, அடுத்த நடைமேடையில் புறப்படுவதற்குத் தயாராக இருந்த வண்டியை ஒட்டி விறுவிறுவென நடந்தான்.
திடீரென யாரோ தோளின் மீது கைவைத்து,
‘டிக்கெட்’ என்றார்கள்.
திரும்பினான். இளம் வயதுப் பையன். இந்திக்காரன் போல் இருந்தான்.
‘என்ன?’ முறைப்புடன் கேட்டான்.
‘டிக்கெட் தேனா?’ இந்தியில் கேட்டான்.
இது என்னடா புது பிரச்சனை என்று தோன்றியது. திடீரென அவனைத் தள்ளி விட்டு வேகமாக நடந்தான். நடையைக் கூட்டி, ஓடலாம் என்று எத்தனிக்க,
படீரென்றுப் பின்னங்கழுத்தில் அடி விழுந்தது.
நிலைகுலைந்து திரும்ப, சீருடையில் ரயில்வே காவற்காரர்.
இவன் கைகளைப் பற்ற,
‘அய்யோ அண்ணே, அம்மா செத்துட்டாங்க. அவசரமா போறேன்’
‘அரே சைத்தான்…புளுவாதே’.
நெட்டித் தள்ளி ஏற்கனவே மாட்டிக் கொண்ட ஆட்களோடு சேர்ந்து நிற்க வைத்தார்.
(முற்றும்)