அவரவர் போக்கில்
ஏதோ பிரளயம் வரப்போகும் சங்கதியை
முன்னறிவிக்கச் செல்வதுபோல்
எல்லாம் அவரவர் போக்கில் போகின்றோம் வருகின்றோம்
ஓயாமல் விரையும் வாகனங்களின் பிட்டத்தில்
கரியநிறத்தில் வால்முளைத்து மறைகிறது,
யாரை யார் முந்துவதென்று மாரத்தான் ஓடுகின்றன
கடிகார முட்கள்.
தன் அச்சிலிருந்து விலகி ரகசியமாய்ச் சந்திக்கமுயலும்
இரு கிரகங்களைப்போல
அரிதாகத்தான் சிலநேரம் எல்லாவற்றையும் குறித்து
தீவிரமான யோசனைகள்முளைவிடும் – அவ்வளவுதான்
அடுத்த நொடியே உறைந்துவிடும் யுகம், சமநிலையிழக்கும் பிரக்ஞை.
பெரும் லட்சியங்களை நோக்கிஎய்யப்பட்ட அம்பானது
நடுவழியில் இலக்கை மறந்தபடி விழிபிதுங்க நிற்கும்
மேலும் அது குழப்பத்தில் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும்
யார் நான்…? எங்கிருந்து புறப்பட்டேன்…?
யாரிடம் எதை நிரூபிக்க ஓடுகிறேன்…?
ஆனால் நிஜத்தில் அதுகுறித்து வாதிப்பதற்கெல்லாம்
அவகாசங்கள் எப்போதும் இருப்பதில்லை என்றறிந்தும்
மீண்டும் அவரவர் போக்கில் போகின்றோம் வருகின்றோம்
நேரம்தவறாமல்
மேடையில் நிற்பவன்
உண்மையில் நான் நன்றாகப் பேசக்கூடியவன்தான்
ஏனோ அன்று சரியான அதிர்வெண்ணைத் தேடி
குரல்வளையை மேலும் கீழுமாய் வருடிக்கொண்டிருந்தேன்
ஒழுங்கின்றி வேயப்பட்ட பிரபஞ்ச மாடத்தில்
யாரோ எதையோ உருட்டும் சத்தம்
எல்லாச் சொற்களும் உடலே நிழலாகிப்போனவொரு
காக்கையின் குரலாகஒலிப்பதுபோலான பிரமை.
ஆகாசத்தின் பகலிரவு இளைப்பாறிச்செல்லும்
என் ஆண்ட்டெனாவின்உள்ளங்கையில்
அலைவரிசையின்பிக்க்ஷையையாரோ
மாற்றி இட்டுச்சென்றிருக்கின்றனர்.
திக்கின்றி திசையின்றி சங்கடத்தில் தத்தளிக்க
அதற்குள் அரங்கத்தில் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்
ஒரே சலசலப்புகளும், நமட்டுச் சிரிப்பொலிகளும்
கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகத் துவங்கின.
மேடையில் நிற்கும் நான்
இப்போது மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறேன்
என்றைக்கும் இல்லாதொரு மும்முரத்தில்
விரித்துவைத்த புத்தகத்தின் பக்கங்களாய்
அரங்கம் மொத்தமும்
நடுவில் வகிடெடுத்து சீவப்பட்டிருந்தது.
கவிதைகளே…… சற்று தானமிடுங்கள்
எண்ணங்கள் சலங்கை பூட்டி நேருக்குநேர் நின்று
சமர் செய்கின்றன.
நிசப்தத்தின் வரம்புகளை உணர்வெழுச்சிகள் மீறுகையில்
மூளையோ சாமர்த்தியமாய் சூழ்நிலையைப் பழிக்கின்றது.
பருவங்களோ சூசகமாகநாளையே மந்தமாக்கிவிடுகின்றன.
ஒருநாள் உணர்வற்று போ என்க
மறுநாள் செயலற்று போ என்க
ஏதோவொன்று என்னை எழுதவிடாமல் தடுக்கிறது.
நரம்புகளில் நடைபயிலும் சில்லிப்பு
தவறான திசையில் பூமியைச் சுழற்றுகிறேன் தைரியமாய்.
மனம் செவிமடுக்கும் திசையெங்கும்
மெய்துறந்த தன்னிலையின் ஆரோகணம்.
கனவுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் பொய்கள்
நிஜத்திலும் தைரியமாய் நடமாடும் தோரணை.
முன்னுக்குப் பின்னாய் அலைவுறுகிறது மார்பின் ஓசைகள்
கண்ணுக்குள் நிலைகொள்ளாத வண்ணங்களின் பேரொளி
எல்லையற்ற இருட்டுக்குள்என்னை வழிநடத்தும் மாயம்.
யாருக்கோ பயந்தோடி மூச்சுவாங்கும் யோசனைகள்
விளிம்போரம் நின்று நிதானிக்கின்றன
உற்று கவனிக்கின்றன
தண்ணீரில் பெய்யும் மழைத்துளிகள்
வந்த வானத்தையே சலனமடையச் செய்கின்றன.
தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளும் மனமோ
கவனமாகக் கூர்மழுங்கிய வாளோடு விசாரணைக்கு வருகிறது.
நானறிவேன்
அங்கே விழுங்க வருவது கடலல்ல – லௌகீகத்தின் கானல்
ஒன்றுக்குமுதவாத மனசாட்சியின் ஓலம்
கவனக்குறைவின் சிறு சிறு புள்ளிகள் ஒன்றையொன்று
அடையாளம் கண்டுகொண்டதால்
உத்தேசமாகத் தெரியும் அலட்சியத்தின் குற்றச் சித்திரங்கள்.
காணமனமின்றிக்கண்களைஇறுக்க மூடிக்கொண்டாலும்
அகன்றகடல்ஓசையிலும்தெரிகிறது
சொல்லிவைத்தாற்போல
எல்லா உவமைகளும் கைவிட்டுவிட்டன
எல்லாக் காட்சிகளும் பழையனவாகி விட்டன
உற்றுணர ஏதுமின்றி திக்கற்று நிற்கும் என்னை
வரிவரியாய் உதிர்த்து
உன் கருணையின் பலிபீடத்தில் கிடத்துகிறேன்.
சொற்களே, பேருண்மையே
இனி, நீயேனும் எம்மை வழி நடத்து…