1 ) மறுதலிப்பு

காட்டின் ஒற்றையடிப் பாதையில்

வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்

செய்வதறியாது மருண்டு நிற்கும்

கள்ளமற்ற மானைப் போல

உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்

ஸ்தம்பித்து நிற்கிறேன்

உண்மையில் எதிரே இருக்கையில் கூட

உன் கண்கள் என்னை

சந்திப்பதே இல்லை

நீ என்னிடம் பேசும் சொற்கள்

வேறு எவரையோ நோக்கியபடி தான்

சொல்லப் படுகின்றன

காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றி தவற விடும்

சிறு பார்வைக்காக

எனினும் அந்த மாயக்கணம்

தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி

நகர்ந்தபடி இருக்கிறது

மீன்களற்ற நதியின் மடியில்

சிறு தீண்டல் வேண்டி

நெடுங்காலமாய் பசும்பாசி

அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்

 

2 ) அல்லது

உன் விநோதமான அறிவுரைகள் யாவும்

எப்போதும் தனிமையை தனியாக

எதிர்கொள்ள வேண்டிய

அவசியம் குறித்து தான்

நீ கற்றுத் தேர்ந்த இசைக்கருவிகளுள்

எது தன்னைத் தானே

வாசித்துக் கொள்கிறது?

என் சிகையை ஒதுக்க வரும்

உன் விரல்கள் – காற்றில் நடனமிட்டபடி

பாதியிலேயே நின்று விடுகின்றன

நமக்கிடையே உடைக்க முடியாதவை

என நீ பாவிக்கும் சுவர்கள் எல்லாம்

வெறும் காற்றால் ஆனவை தான்

இவ்வளவு அஞ்சத் தேவையில்லை நீ

என் உடல் என்பது இவ்வளவு தான்

ஆயிரம் அல்லிகள் மலர வழியற்று

வாடி நிற்குமொரு நிறை தடாகம்

அல்லது

ஓர் ஆராய்ச்சிக் கூடத்தின்

கண்ணாடி சீசாவினுள்

விகசித்து மலர்ந்திருக்கும்

ஒரு செந்நிற தாமரை

 

3) தேன் மெழுகு

நம் அந்தியின் அறையில்

ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுகிறாய்

சிறிய தழல் இக்கடிய குளிரை

விரட்டும் யத்தனத்துடன்

தோல்வியை ஏற்க மறுக்கும்

தேசத்தின் கொடியென – காற்றில்

படபடப்புடன் அசைகிறது

சிதறும் மஞ்சள் வெளிச்சத்தில்

உன் முகம் துளியும்

விசனமற்று இருக்கிறது

என் தவிப்பைப் பற்றிய

எந்த உணர்தலுமின்றி

கடல்நாய்கள் நீந்தும்

பனிக்கடலின் பாறையென

நான் அவ்வளவு சில்லிட்டிருக்கிறேன்

நீ கொண்டு வந்திருக்கும்

இந்த சின்னஞ்சிறிய நெருப்பு

எனக்கு கொஞ்சம் கூட போதவில்லை

அறை வாசலிலேயே நீ நிற்பது

வெளி செல்வதற்கா

மீண்டும் உள் நுழைவதற்கா என

எவ்வளவு நேரம் உற்று நோக்குவது?!

கரைந்து கொண்டே இருந்தாலும்

உனதிந்த தேன் மெழுகு

எனக்காக உருகுவது இல்லை