தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான உதயநிதி அவர்கள் சனாதன ஒழிப்பு குறித்துப் பேசியது, நாடு முழுவதும் தீவிர பேசுபொருள் ஆகியுள்ளது. இதில் நாட்டில் உள்ள எல்லோரும் கலந்துகொண்டுள்ளனர். ‘பாரத்’ பிரதம அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் சனாதன தர்மத்தைத் தாக்குதல்களிலிருந்து காக்குமாறு தனது அமைச்சரவையைப் பணித்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுடனும் சங்கப் பரிவாரங்களுடனும் சனாதன தர்மத்தைக் காப்பதற்குக் களமிறங்கியுள்ள தலை கொய்யும் சாந்த சன்னியாசிகள் முதல் அறிவார்ந்த முறையில் உரையாடும் மூத்த பத்திரிகையாளர்கள், செக்யூலரிஸ்ட்கள் வரை சனாதனம் என்பதற்குப் பல்வேறுவிதமான விளக்கங்களைக் கூறிவருகின்றனர். இந்தப் பேச்சுகளிலிருந்து சனாதனம் என்பது என்ன? சனாதன தர்மம்தான் இந்து மதமா? சனாதன தர்மம் வருண-சாதி தர்மங்களைப் போற்றிப் பாதுகாக்கின்றதா, இல்லையா? இப்படியான பல கேள்விகள் எல்லோருடைய மனத்தையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. 

சனாதனம் என்கிற சொல்பதிவு

நவீன காலத் தமிழ் மொழி அகராதிகள் பலவற்றில் சனாதன தர்மம் என்ற சொல்பதிவே இல்லை. சென்னைப் பல்கலைகழகத் தமிழ்ப் பேரகராதியிலும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியிலும் மட்டும்தான் சனாதன தர்மம் என்கிற சொல்பதிவு உள்ளது. இது எந்த அளவுக்கு இச்சொல் தமிழ் மொழியில் புழக்கத்தில் இல்லை என்பதையும், அண்மைக்காலப் பயன்பாடு என்பதையும் காட்டுகின்றது.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, “சனாதனதர்மம் caṉātaa-tarmam , n. < sanātana +. The ancient moral law; புராதனமான அறவொழுக்கம்” என்று கூறுகிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “சனாதனதர்மம் பெ. [அ.வ.] 1: தொன்மையான அற ஒழுக்கம்; பண்டைய மரபு நெறி; eternal law (according to Hindu scriptures); orthodoxy” என்று கூறுகிறது. இந்த இரண்டு அகராதி விளக்கங்களும் வெளிப்படையாகச் சனாதன தர்மம் என்பது வருண-சாதி ஒழுக்கம் என்று சொல்லவில்லை. ஆயினும் அது தர்ம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்ற வருண-சாதி ஒழுக்கங்களைத்தான் மறைமுகமாகச் சுட்டுகிறது. இந்த அகாரதிப் பதிவில் உள்ள eternal law என்கிற சொல்லாடலைச் சனாதன தர்மத்தைக் காக்கக் களமிறங்கியுள்ள பலரும் பயன்படுத்தினர். இதன் பொருள் ‘என்றும் அழியாது நிலைத்துள்ள தர்மம்’ என்கின்றனர்.

சமஸ்கிருத மொழியில் மிகப் பழங்காலத்திலிருந்தே சனாதனம் என்கிற சொல் இருந்துவருகின்றது. அந்தச் சொல் ஆதி அந்தமில்லாத நிலையான தர்மத்தைக் குறித்தது என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால் இப்படி வாதிடுகின்றவர்கள் சமஸ்கிருத மொழி, தமிழ் மொழிக்கு முந்தையது அல்லது இணையானது, சமஸ்கிருத மொழியிலிருந்துதான் தமிழ் மொழி ஏராளமாகக் கடன்பெற்றுள்ளது என்று கருதுகின்றவர்கள். ஆனால், சனாதனம் என்கிற சொல்லை மட்டும் தமிழ் மொழி ஏன் தற்பவமோ, தற்சமமோ ஆக்கிக் கடன்பெறவில்லை என்று விளக்கம் சொல்ல வேண்டும்.

தமிழ் அகாரதிப் பதிவுகளை நோக்கும்போது, சனதானம் என்கிற சொல் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சொல். அது பண்டைய தரும சாத்திர வருண-சாதி ஒழுக்கங்களைக் குறிப்பிடப் பயன்பட்டது எனத் தெரிகிறது. ஆனால் சனாதன தர்மமாகிய வருண-சாதி ஒழுக்கம் ஏன் மாறாதது, காலங்காலமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது என்ற பொருள்பட ‘ஸநாதனம்’ எனப் பெயரிட்டு அழைத்தனர் என்கிற கேள்வி எழுப்பிக்கொள்வது மிகச் சுவாரசியமான அண்மைக்காலச் சமய வரலாற்றினுள் இழுத்துச் செல்லும்.

ஆரிய பார்ப்பன சனாதன இந்து தர்மம்

இந்தியாவின் உள்ள மத வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யும் எந்த அறிஞரின் கண்ணிலும், இந்து என்பது மதம் அல்ல; எண்ணற்ற வழிப்பாட்டுக் குழுக்கள், சமயக் குழுக்கள் ஆகியவற்றின் தொகுப்பு மட்டுமே எனத் தெட்டெனப் புலனாகிவிடுகின்றது. ஆயினும் இந்த எண்ணற்ற வழிப்பாட்டுக் குழுக்கள், சமயக் குழுக்கள் எல்லாம் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளனர், யார் தொகுத்து வைத்துள்ளனர். இந்தக் கேள்விக்கு “பிராமணர்கள்” என்று ‘இந்து மதம் எங்கே செல்கிறது?’ நூலின் ஆசிரியர் அக்னிஹோத்ரம் ரானானுஜ தத்தாச்சாரியர் கூறுகின்றார். ‘ஆரிய மதம் வேத மதமாகி, வேத மதம் பிராமண மதமாகி, பிராமண மதம் இந்து மாதம் ஆனது’ என்பது சங்கர மட வேதப் பண்டிதரின் கூற்று.

இதையே காசிப்பிரதான ஹிந்து வித்தியாசாலைக் கம்மிட்டியார் 1907 ஆம் ஆண்டில் பிரசுரஞ்செய்த ‘ஸநாதன தர்மம்’ நூலும் கூறுகின்றது. அந்த நூலின் முகவுரையே தெளிவான நோக்கத்தை அப்பட்டமாகச் சொல்கிறது. “ஹிந்துமதத்தின் கணக்கற்ற வுன்மத [உள் மதம்] வித்தியாசங்களைச் சம்பந்தியாமல், விசாலமும் சமரஸமும் பொருந்தியவாகினயுமிருத்தல் வேண்டுமென்பதுடன் ஹிந்துமதத்தின் எச்சார்பிலுமுள்ள விஷயங்களையும் பொதுவாய் விளக்கிக் கொண்டும்… பிரசித்தமான உட்சமயங்களிலுள்ளார் ஒருவருக்கொருவர் வாதம் புரிந்து வரும் பல வேற்றுமைகளனைத்தையும் விலக்கி நிற்றல் வேண்டும். இந்நாட்டில் தற்காலம் நடைபெற்று வரும் ராஜரீக சம்பந்தமானதும் வருணாசிரம தர்மங்களைப்பற்றியதுமான, வியவகாரங்களில் சம்புத்தித்தலு முதலாவது. பின்னை ஹிந்துமத, நீதிவிஷயங்களில் சிறுவர் இவ்விளமைப் பருவத்தில் ஆழ்ந்து அகன்ற அஸ்திவாரமெனக் கூறத்தகும் ஆஸ்திகாமானத்தைப் பெறும்படி செய்வித்தலே இவ்வித மதவிஷயப் பயிற்சியின் பயனாகும்.”(பக்கம் VI & VII )  

மேலும், ஸநாதன தர்மம் நூலின் முகவுரை, “ஹிந்துக்களனைவரையும் [ஒன்று சேர்ப்பித்து] ஏகமதஸ்ராகும் சகலபொதுவான கொள்கைகள் யாவும் [கல்வி பயிலும்] இச்சிறுவர்க்குத் தெளிவாயும் சுலபமாயும் போதிக்கப்படல் வேண்டும்” என்பதற்காக இயற்றப்பட்டது எனத் தெளிவாகக் கூறுகிறது.  இந்த நூல் “ஸநாதன தர்மம் என்றால் நித்தியமான மதம் அல்லது புராதனவிதி என்று பொருள்படும். இது வெகு காலங்களுக்கு முன் மானிடர்க்கு அளிக்கப்பட்ட புண்ணிய புஸ்தகங்களான வேதங்களை யாதாரமாகக் கொண்டது. இந்த மதத்திற்கு ஆரியமதம் என்ற பெயரும் இடப்பட்டிருக்கின்றது. ஏனெனில் ஆரிய மகாஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப்பட்டது… அக்காலத்திற்குப் பிறகு இம்மதம் ஹிந்துமதம் என்னும் பெயர் அடைந்தது. இப்பெயராலேயே தற்காலம் அது வழக்கமாய்க் குறிப்பிடப்படுகின்றது. இவ்வுலகில் பிரசித்திபெற்று விளங்கிவரும் சர்வமதங்களிலும் இதுவே பிராசீனமானது [அழிவில்லாதது]” என்று கூறுகின்றது. 

எவ்வாறு ஸாநதன தர்மம் அழிவில்லாமல் இருந்துவருகின்றது. முகவுரையின் முடிவில், “இப்புத்தகங்களின்  கொத்து அல்லது சமூகத்துக்கு ‘ஸநாதன தர்மம்’ என்னும் பெயர் வெகு விசேஷமாக வாலோசனை  விவாதங்கள்  நடந்தபிறகு அளிக்கப்பட்டது. அதிற் கூறியிருக்கும் மூல தத்துவங்களை மற்ற பெயர்களைக் காட்டிலும் மிக நன்றாக விளக்குகிறதென்னும் காரணம் பற்றி இப்பெயர் இடப்பட்டது. ஹிந்தியாவில்  சிலபாகங்களில்  இப்பெயர் ஒரு வுன் மதத்தையே [உள் மதத்தையே, அதாவது ஸ்மார்த்த பார்ப்பனரின் வேள்விச் சடங்குகளையும் சாதி ஒழுக்கங்களையும்] குறிப்பது  வாஸ்தவமாயினும், இவ்விடத்தில் அவ்விதக் கருத்துகள்  சிறிதுமின்றி  உண்மையான பொருளாகிய  ‘சாசுவதமான மதம்’  எனும் கருத்தையே அங்கீகரித்துப் பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற தென்பதை யாவரும் தெரிந்து கொள்ளக் கடவர்” (பக்கம் x). இந்த முகவுரையின் கூற்றுப்படியேகூட, சனதான தர்மம் என்பது ஸ்மார்த்த பார்ப்பன சாதியாரின் தர்மமே அன்றி, எல்லாவித பார்ப்பனர்களின் தர்மம்கூட அல்ல. இவ்வாறு இக்காலத்தில் பார்ப்பன அதிகாரத்திற்காகக் கட்டப்பட்டதுதான் ஸாநதன தர்மமாகிய இந்து மதம்.

காசி ஹிந்து வித்தியாசாலை தொகுத்த “ஸனாதனம்” எனும் சாசுவதமதம் பற்றிய சில கேள்விகள்

இருபிறப்பாளார்களான இந்த இருமுகத்தாரிடம்  இன்னும் கேட்கச் சங்கதிகள் உண்டு. ஸாநதன தர்மம் நூல் தொகுப்பட்டவிதம்  அதற்குப் பெயரிடப்பட்ட விதங்களை இவ்வளவு விரிவாகப் பேசிப் பதிவு செய்துவிட்டு, இந்த ‘ஸநாதனம் நிரந்தானமானது’, ‘அழிவில்லாதது’ எனப் பேசும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது. முதலில் இங்கு முன்வைக்கப்படும் கேள்விகளைத் தொகுத்துக் கொள்வோம். 

1) காசி ஹிந்து வித்தியாசாலையாரால் தொகுக்கப்படுவதற்கு முன் இந்த நூலும் இந்தப் பெயரும் இந்தக் கருத்திற்கு இருந்ததா?  

2) ஹிந்து போலவே ஸனாதனமும் ஒரு புதிய தொகுப்பு மதம்தானே? அப்புறம் எப்படி அது நிரந்தனமானது, அழிவில்லாதது ஆனது. அப்படியானால் அதனுள் தொகுக்கப்பட்ட ஏதோ ஒரு ‘உள் மதத்தின்’ குணம் இங்கே பொதுமையாக்கப்பட்டதா?  அந்த ‘உள் மதம்’ யாது ? அந்த மத ஆசாரங்கள் என்ன ?  அந்த மத நூல்களை இப்போது பரிசீலனை செய்து பார்க்குமளவில் உள்ளனவா? அப்படியானால் அந்த ‘நிரந்தரமான / அழிக்கவியலாத’ மதத்தின் கோட்பாடுகளைத்  தனியே விரித்துக் காட்டுவதுதானே முறை. அது பத்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்றெல்லாம் சொல்லப்படுவது  எந்த அளவில் நிருபிக்கவல்லது. 

3) அந்தப் புதிய தொகுப்பிற்கு ‘ஸனாதனம்’ எனப் பெயரிடப்பட்டது பல விவாதங்களிற்குப் பிறகுதானே? அந்த விவாதங்களின் விவரங்கள் உள்ளனவா?  

4) ஹிந்து மதமாகத் தொகுக்கப்பட்டது பல ‘உள் மதங்கள்’ தானே ? அதையும் ஸனாதனமாகத் தொகுத்த போது   அதே பெயரில் ‘ஹிந்தியாவின் சில பாகங்களில் இப்பெயர் கொண்ட  ‘ஸனாதன மதம்’  பின்பற்றிய  சாஸ்த்திரங்கள் சம்பிரதாயங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் என்ன?  

5) ஏன்  முகவுரை கவனமாக ‘இவ்விடத்தில்  அந்தவிதக் கருத்துகள் (ஸனாதன மத) ‘சிறிதுமின்றி’ உண்மையான பொருளாகிய சாசுவதமான மதம்  எனும் கருத்தையே அங்கீகரித்துப்  பிரயோகிக்கப்பட்டிருக்கிறதென்ற’ பிரகடனத்தைச் செய்கிறது?

6) அப்படியானால் கவனமாகத் தவிர்க்கப்பட்ட, ஹிந்தியாவின் சில பாகங்களில் பின்பற்றப்பட்ட ‘ஸனாதன மத’க் கருத்துகள் யாவை ? 

7) தலை ‘சீவும்’ சாமியார்களும், ஆளுநர் ஆர்.என். ரவியும், மணிப்பூரின் பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் திறக்க வைக்கவியலாத திருவாயைத் திறந்து, தனது அமைச்சரவை உறுப்பினர்களைக் கொந்தளிக்கப் பணித்த இந்தியத் திருநாட்டின் முதன்மையமைச்சரான  நரேந்திர தாமோதர் மோடி அவர்களும், இன்னபிறரும்  ‘அந்த ஸனாதன மதத்தினை’ அதன் தவிர்க்கப்பட  வேண்டிய கொள்கைகளையும் பின்பற்றுவோர்தானே?  

8) இந்த அகங்கார ஓலமிடுவோர் எண்ணித் துடிப்பதும், கொதிப்பதும்  எந்த ‘ஸனாதன’ ஒழிப்பின் பொருட்டு? இன்று புழக்கத்தில் இருந்து கைக்கொள்ளப்படுவதாகப் பேசப்படும்   காசி விதயாசாலையாரால்  நாமகரணம் வழங்கப்பட்ட ‘ஸனாதன தர்மம்’ குறித்து இல்லையா? 

கேள்விகளை அடுக்கலாம். ஆனால் பார்ப்பனரின் தந்திர மூளையில் பகுத்தாயும் பகுதி மிகப் பலவீனமானது.   மதவிவகாரங்களில்  ‘உள் மத’ சண்டைகளையே அழித்தொழிப்பால் மட்டுமே வென்று விடும் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள். அவர்களது பயிற்சி விவாதிக்க அல்ல. கேள்விகளைக் கடந்து செல்ல இன்னும் கூடுதலான பொய்யுரைகளை, புனைவுகளை, கட்டளைகளை இடுவது மட்டுமே. ஹிந்து / ஸனாதன தர்மம் எதுவென்ற விவாதங்களில் ஈடுபடாத ‘சூத்திர அடியாட்களை’க் கூலிப்படையாக்கி தங்கள் அதிகாரத்திற்கெதிரான அனைத்துவிதமான தடைகளையும் கடப்பது மட்டுமே அவர்களின் வித்தை.

திராவிடக் கருத்துநிலையாளர் கால்டுவெல்லின் விமர்சனம்

இவ்வாறு இந்து மதம் ஆதி அந்தம் இல்லாத வேதங்களை ஆதாரமாகக் கொண்டது என்கிற பார்ப்பன வாதம் எவ்வளவு தூரம் போலியானது என்பதைப் பல அறிஞர்களும் தலைவர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர். இங்கு கால்டுவெல் தமிழ் மொழியில் எழுதிய பரதகண்ட புரதானம்[Indian Antiquities] என்ற நூலிலிருந்து விமர்சனக்கூற்று எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். 

“வேதம் ஆதியும் அந்தமுமில்லாமல் அநாதியாயிருக்கிறதென்று இந்து மதஸ்தர் சொல்லி வந்தார்கள். முற்காலத்திலுள்ள புத்த மத வித்துவான்களில் சிலர் இதை ஆட்சேபித்து மனிதருடைய பேர்கள் வேதத்திலிருக்கிறதினால் மனிதர் உண்டானதற்குப் பின்பு வேத முண்டானதேயல்லால் அது அநாதியல்லவென்று தர்க்கித்தார்கள். அதற்கு ஜைமினி முனியென்றொருவன் மனிதரைக் குறிக்கிறது போல வேதத்தில் காணப்படுகிற பதங்கள் அந்த அர்த்தமாத்திரங் கொள்ளாமல் வேறே அர்த்தமும் கொள்ளுமென்றான். ஜைமினி முனி சொன்னது வீண்போக்கேயல்லாமல் சரியான உத்தரவல்ல.” 

“இப்போது வழங்குகிற இந்து மதத்திற்கு சதுர்வேதமே அஸ்திவாரமென்று சிலர் சொல்லுவார்கள். ஆனாலும் வேதங்களைச் சோதித்துப் பார்க்குமளவில் இந்து மதத்திற்கு ஒரு வேதமும் அஸ்திவாரமல்லவென்றும், அது அஸ்திவாரமில்லாமல் மணலின் மேல் கட்டின வீடு என்றும் விளங்குகிறது. 

இந்த விஷயத்திலே பிராமணர் மேல் அதிகக் குற்றமுண்டு. அவர்கள் அந்தரங்கத்தில் செய்கிற சடங்குகள் வேறு. வெளியரங்கமாகச் செய்கிற சடங்குகள் வேறு. அவர்கள் ஸ்நானம் பண்ணும்போதும் தங்கள் குலாசாரமான நித்திய சடங்குகளைச் செய்யும்போதும், வேதத்திற் சொல்லிய பாட்டுகளை ஓதி, சூரியன் முதலான பஞ்சபூத தேவர்களை ஆராதித்து, இப்படிச் செய்தவுடனே வேதத்தை மறந்திருந்தாற்போல கிருஷ்ணன் கோயில்களுக்கும், சிவன் கோயில்களுக்கும் போய் அறியாமையினாலேயோ வேறெந்த முகாந்தரத்தினாலேயோ புது மதங்களுக்குரிய புதுத் தேவர்களுக்கு பூஜை செய்கிறார்கள். இது மனச்சாட்சிக்கேற்ற யதார்த்தமான நடக்கையா? பிராமணர் இப்படி இருமுகமுள்ளவர்களாய் நடந்தால் அவர்கள் புத்தி முன்னிலும் அந்தகாரப்படமாட்டாதா? ஒன்றுக்கொன்று வித்தியாசமாயிருக்கிற இரண்டு மதங்களை அநுசரிக்கிறது இரண்டு படகில் காலை வைக்கிறது போலவேயிருக்கும்.” 

“நூதனமாய் ஏற்படுத்தப்பட்ட மதாசாரங்களை உறுதிப்படுத்தவும் திருஷ்டாந்தப்படுத்தவும் பிரபலியப்படுத்தவும் அந்தப் புராணங்கள் எழுதப்பட்டன. புராணங்களிலிருந்து அந்த மதம் உற்பத்தியாயிற்று என்று சொல்லுகிறதற்கு ஏதுமில்லை. புராணங்களுக்குத் தற்கால இந்து மதம் ஆதாரமேயல்லாமல் தற்கால இந்து மதத்திற்குப் புராணங்கள் ஆதாரமல்ல.”

ஹிந்து மதங்கள் (Hindoo Religions) வெள்ளை இனமேன்மை உணர்வு காலனிய அதிகாரிகளும் அவர்களுடைய பார்ப்பன உதவியாளர்களும் தொகுத்துக் கொண்டிருந்த வேளையில், பார்ப்பனரல்லாத மக்களின் பக்கம் உளச்சாய்வு கொண்டிருந்த கால்டுவெல், மேலே எடுத்துக்காட்டிய விமர்சனக் கூற்றில் துல்லியமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். வேதங்களோ, உபநிடதங்களோ, தருமசாஸ்திரங்களோ, இதிகாசங்களோ, புராணங்களோ இந்து மதத்திற்கு ஆதாரமாக இல்லை. மாறாக, இந்து மதம் என்கிற கட்டுமானம்தான் அவற்றுக்கு ஆதாரமாக உள்ளது. இவற்றுக்குப் பார்ப்பன அதிகாரத்தை நிலைநிறுத்துவதுதான் நோக்கம். மேலும், இந்த விமர்சனத்தில் மிக முக்கியமானது ‘பிராமணர் இருமுகமுள்ளவர்களாய்’ (உள்ளொன்று வைத்து ப் புறமொன்று பேசுபவர்களாய்) நடந்துகொள்கின்றனர் என்பது ஆகும். அவர்களது வேதங்களுக்கும் கோயில் வழிபாடுகளுக்கும் ஒருதொடர்பும் இல்லை. ஆனால் கோயில் வழிபாடு வேத வழிவந்தது என்று கூசுமால் கதைகட்டுவார்கள். மக்களிடம் செல்வாக்கு பெறும் வழிபாடுகளுக்குள்ளும் சமயங்களுக்குள்ளும் புகுந்து உட்செறித்து, பலித்தவரை வருண-சாதி ஒழுங்கை நிலைநிறுத்தி, அதன் மூலம் காலந்தோறும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தப் பித்தலாட்டமான பார்ப்பன வழிமுறைக்குப் பெயர்தான் ஸநாதன தர்மம்.

இந்த விமர்சனக் கூற்று வந்து நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் பார்ப்பனச் சூழ்ச்சியை அம்பலமாக்கும் செயல் தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த இடத்தில் இப்போதைய இந்திய அரசியல் களத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஸனாதனச் சர்ச்சைகளைத் தொகுத்துப் பேசலாம். 

இந்து மதத்திற்குப் பதிலாக சனாதன தர்மம்: ஓர் இந்து ராஷ்டிர அரசியல் முன்னெடுப்பு 

ஆளுநர் ரவி போன்ற பார்ப்பன இந்து வெறியைத் தூண்டும் சக்திகளால் மதம் குறித்த உரையாடல்களில் ஏன் ‘சனாதன மதம்’  முதன்மைப் பேசுபொருளாகியது. இங்கு இந்துமதத் தீவிரவாதங்களுடனான விவாதங்களில் பகுத்தறிவாளர்களாகிய நாமும் ஏன்    இந்துமத ஒழிப்பு என்ற சொல்லாடலிலிருந்து ‘சனாதன ஒழிப்பு’ எனும் நிலைப்பாட்டிற்கு மாறியிருக்கிறோம் என்பதையும் பேசி விடுவது நல்லது.  

மதவாத சக்திகளும் அதன் ஏவலாட்களான  ரவி போன்றவர்களும் ‘இந்து மதம்’ என்பதையே ‘சனாதன மதம்’ எனப் பெயர் மாற்ற விரும்புகிறார்களா?  எதற்காக இந்த முயற்சி ?  அசலாகப் பார்த்தால் இங்கு இரண்டு பெயர்களும் புழக்கத்தில் இருந்தவைதானே?  ‘இந்தியா’ வை ‘பாரத்’ ஆக்கும் முயற்சியாவது உடனடியான தேர்தல் அரசியல் நிர்பந்தங்களால் எனப் புரிந்து கொள்ளலாம், ஆனால் ‘இந்து’ ஏன் ‘சனாதனம்’ ஆகிறது என்பதற்கான விளக்கம் அவ்வளவு எளிதானதாகவோ, மேலோட்டமானதாகவோ தெரியவில்லை. உண்மையில் இந்த இந்துமதத் தீவிரவாதம் அதன் அடுத்தகட்ட நகர்வைத் துவங்கியுள்ளது என்றே புரிந்து கொள்ள வேண்டியதாகிறது. 

ஏற்கனவே வெகுமக்கள் மனங்களில் பதிக்கப்பட்டு விட்ட இந்து எனும் பொதுமை அடையாளத்தை ஏன் ‘சனாதனம்’ என மாற்றத் துணிகிறார்கள். அதிலும் இந்து என்பதன் அடிப்படையில் ‘ இந்துத்துவா’, ‘ இந்து ராஷ்ட்ரம்’ போன்ற கற்பித உன்னதங்களை  சாவர்க்கர், ஹெட்கவார் போன்ற அடிப்படைவாதிகள் கட்டமைத்துக் கையளித்துச் சென்றுள்ள நிலையில் எதற்காக ‘ஸனாதனம்’ எனும் புதிய முன்னுரிமை பெறும் கூச்சல். இந்தப் புதிய அல்லது விபரீத முன்னெடுப்பு யாருடைய நலன் அல்லது அதிகாரம் கருதியது.  நிச்சயமாக அது பார்ப்பன மேலாதிக்க நலன் கருதியதாக மட்டுமே இருக்க முடியும். அதனால்தான் பகுத்தறிவாளர்களாகிய நாமும் ‘இந்து மதம்’ எனும் தொகுப்பை முதல்குறியாகக் கொள்ளாது பார்ப்பனச் சதி ஓங்கிப் பிடிக்க முயலும் பார்ப்பன மதமான ‘ஸனாதனத்தை’ அதன் தர்மக் கோட்பாடுகளைக் குறிவைக்கிறோம். 

இன்னொரு காரணமும் உண்டு, அசலான தொற்றாக பார்ப்பன ஸனாதனம் விடுத்து மற்றொரு தொகுப்பான ‘இந்துமத ஒழிப்பு’ என்பதை அறியாமையால் அதனை ஏற்றுக் கொண்டவர்களையும் வருத்தங்கொள்ளச் செய்கிறது என்பது கருதியும்கூட. இது தேர்தல் அரசியல் கருதிய நிலைப்பாடும் கூட.  மதவெறி பாஜக எதிர்க்கட்சியினரை ‘இந்து விரோதிகள்’ என வர்ணித்துப் பிளவு நச்சை விதைக்கும் போது, இந்து மதம் என்பதன் உயிராக உள்ளுறைந்துள்ள பார்ப்பன ஸனாதனத்தை ஒழிப்பதுதானே.  

இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும், அவர்கள் எந்த உள் / அந்நிய மதத்தைப் பின்பற்றுவோராக இருந்தாலும், இந்துக்களே எனும் ஆர்எஸ்எஸ்-இன் அடிப்படைவாதக் கோட்பாடு ஒருவகையில் பார்ப்பன அதிகாரத்திற்கான வெளியை விரித்துப் பரவலாக்கியது. இந்த அநீதியான கொள்கையை ஏற்பார் சொற்பமானவர்கள்கூட இல்லை. ஆனால் அதே வேளையில் தொகுக்கப்பட்ட இந்து மதத்தின் தொகுப்பில் வலிந்து திணிக்கப்பட்டு ‘இந்துவாக’ அடையாளம் பெற்றவர்கள் பெருந்தொகுதி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, யாரெல்லாம் இஸ்லாமியர், கிறித்தவர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்களே. அதன் பொருட்டே ‘இந்து’ எனும் அடையாளத் தொகுதியில் திணிக்கப்பட்டவர்கள். ‘சட்டப்படி’ அந்தத் தொகுப்பின் பகுதியாக இருந்து கொண்டே அதற்கெதிரான குரலை வைக்க முடிகிறது. ஆனால், இந்தக் குரல்கள் பலவேளைகளில் ‘இந்து’ எனும் அடையாளத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டு, தான் வணங்கும் பல்வேறு தெய்வங்களும் இந்து தெய்வங்களே எனக் கொள்வோருக்கு, தான் ‘இந்து’ என்ற உணர்வையும் நம்பிக்கையையும் ஊட்டுவதையும் மறுப்பதற்கில்லை.  ஒரு நூற்றாண்டிற்கும் சற்றுக் கூடுதலான காலமாகவே ‘இந்து’ அடையாளம் பரவலாக்கம் பெற்றது. அனைத்து விதமான மதவழிபாட்டினையும் ஏற்கும் எளிய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடம், அதாவது அந்நிய மதங்களாகக் கருதப்படும் இஸ்லாம் , கிறித்துவம் உள்ளிட்ட   அனைத்தையும் ‘ வழிபடத்’ தயங்காதவர்களிடம் ‘ இந்து மத’ ஏற்பும் சார்பும் ஆச்சர்யங்கொள்ளத் தக்கதல்ல. 

எனவே, பார்ப்பன ஆதிக்கவாதத்தை மீள அரசியல் தளத்திலும் நிறுவ விளையும் கூட்டம் அதனை ‘ஸனாதனம்’ எனும் பழைய, தவிர்க்கப்பட வேண்டிய கருத்துகள் கொண்டதாகக்  காசி வித்யாசாலை கமிட்டியார் கருதிய, மதமாகவே நிறுவ முனைவதாகக் கருத வாய்ப்புள்ளது. அவர்களைப் பொருத்தமட்டில் இந்து மேலாண்மை இந்தப் பத்தாண்டு கால மதவாத  ஒன்றிய அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் நிறைவுற்று விட்டது. ஆர்எஸ்எஸ்-இன் அடிப்படை நோக்கங்களான 

1) காஷ்மீர் சிறப்புரிமை நீக்கம் ( ஆர்ட் 370)

2) இஸ்லாமிய முத்தலாக் சட்ட ஒழிப்பு 

3) அயோத்தி ராமர் கோவில் 

ஆகியவை நிறைவேற்றப்பட்டுவிட்டன.

கூடுதலாக இஸ்லாமியரை இரண்டாம் தரக் குடியுரிமை கொண்டோராக்கும் குடியுரிமைச் சட்ட நிறைவேற்றமும் ( C A A / N R C ) . இனி இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாகத் தனியாக அறிவிக்கத் தேவையில்லை. ஏனெனில், எந்தவிதமான நாடாளுமன்றச் சட்டத் திருத்த நடவடிக்கைகளும் இல்லாமலே, அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலிருந்து செக்யூலர் மற்றும் சோசலிசம் நீக்கப்பட்ட வடிவில் ஒரு படியை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்து விட முடிகிறது பாஜக மதவாத அரசால். 

அப்படியான ஹிந்து ராஷ்ட்ரம் அமையும் போது ‘பாரத்’தின் அதிகாரப்பூர்வ மதமாக ஹிந்து என மட்டும் இருப்பது பார்ப்பன மேலாதிக்க அதிகாரத்துக்கு உகந்ததாக இருக்காது. ஏனெனில் அந்த ஹிந்து என்ற பெயரை வெள்ளையர்கள் உருவாக்கியதாகக் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர ஸரஸ்வதி அவர்களே பதிவு செய்துள்ளார். ஹிந்து குறித்த ஆய்வறிஞர்களின் கூற்றும் அந்தப் பெயர் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த சமூகத்தினரைக் குறிக்க ’அந்நியர்’ பயன்படுத்தியது என்றே பதிவு செய்கிறது. எனவே ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளிற்கும் மேலாகத் தங்களது வேதம், ஸ்மிருதி, சம்பிரதாயங்களால் மேலாதிக்கம் செய்த ஆரிய வேதப் பார்ப்பனக் கூட்டம், இடையில் வந்த அந்நிய ஆட்சிகளைப் பலவாறாக சமரசங்கள் வழியாக சமாளித்த போதும், இருபதாம் நூற்றாண்டின் மக்களாட்சி ஏற்பாடு ஒரு பெரும் சவாலை முன் வைத்தது. மக்களாட்சியின் அனைவருக்குமான வாக்குரிமை ஒருவகையில் மீற முடியாத தடைச் சுவர் ஆனது. எனவே  புழக்கத்தில் இருந்த ‘ஹிந்து’ எனும் தொகுப்பில் பெரும்பான்மை சமூகத்தவரை இணைத்துக் கொண்டு முன்னேறியது பார்ப்பன அதிகாரம். ஆனால், அதேவேளையில் தங்கள் குழந்தைகளுக்கான மதபோதனையை ‘ஸனாதனம் ‘ எனும் மற்றொரு தொகுப்பின் வழியாகக் கட்டமைத்தது. இந்த ஸனாதனம் ஏற்கனவே புழக்கத்திலுள்ள ஹிந்துவிற்கு மாற்று. ஸனாதனம் தொகுத்துக் கொண்ட உள் மதங்கள் பற்றிய விபரங்கள் அந்த நூலில் இல்லை. ஆனால் அவையனைத்தும் பார்ப்பன மதங்களே. ஆனால், அவற்றிற்கான பொதுப் பண்பு கொண்ட கோட்பாடுகள் ஏற்கனவே பௌத்த, சமண சிந்தனைகளிலிருந்து பெறப்பட்டவை. எனவேதான் கவனமாக  அன்றும் உயிருடன் ஹிந்தியாவின் பகுதிகளில் இருந்த ‘ஸனாதன மதத்தின் ‘ தவிர்க்கப்பட வேண்டிய கொள்கைகள் விடுபட்டன. 

இந்தப் புள்ளியில் ஒரு கேள்வி நம் முன் எழுப்பப்படும். இப்போது ஏன் மீளவும் பழைய ஸனாதன மதத்தை  உயிர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப நாட்களில், ஒரு புதிய நாடு எனும் சாத்தியத்தை முன் வைத்து உருவாக்கப்பட்ட ‘ஸனாதனம்’ எனும் மதம் கைவிடப்பட்டு எதற்காகப் ‘பழைய ஸனாதன மதம்’ மறுபடியும் முன் வைக்கப்பட வேண்டும். காசி வித்யாசாலை கமிட்டியாரால் உருவாக்கப்பட்ட இந்த நூலில் மநுநீதியும், வர்ணாஸ்ரமும், ஸ்மிருதிகள் பேசிய தீண்டாமையும், பெண்களுக்கெதிரான அநீதிகளும் முற்றாக விட்டு விடப்படவில்லையெனினும், அவற்றின் கூரான கிழிக்கும் கூறுகளைச் சமன் செய்துள்ளதை ஆங்காங்கு காண முடிகிறது. அதுதான் இருபதாம் நூற்றாண்டின் புனிதப்பசுவான ‘ஸனாதனம்’. ஆனால், அதே மூச்சில் ஏன் ‘ கைவிடப்பட வேண்டிய கருத்துகள் கொண்ட ‘ஸனாதன’ மதப்  பெயர் தேர்வானது என்றால் விடை கிடைக்கும். ஏனெனில், அதுதான் ஆரிய வேதப் பார்ப்பன மதம். அதன் கொடூரமான, வேதம் கேட்ட கீழ்ச்சாதியான் காதில் ஈயத்தை ஊற்றுவது உள்ளிட்டக் கொள்கைகள் நவீன ‘ஸனாதனத்தில்‘ கைவிடப்பட்டது. ஆனாலும், அப்போதே அந்த வேத மதத்தின் பெயரைத் தவிர்க்கவியலவில்லை. இப்போது மீளவும் ஸனாதனமாக, இந்தியாவின் அதிகாரப்பூர்வமான மதமாக ஆக்கப்படும் போது அதன் மூலாதாரப் பண்புகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை மீட்டெடுத்தால்தானே, பார்ப்பன மேலாண்மை முழுமையடையும். 

மாதிரிக்கு இப்போது தமிழ்நாட்டில் ஸனாதனப் பரப்புரையாளராக இயங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி  உரைகளைக் கேளுங்கள். மாறாதது, அழியாதது , பத்தாயிரம் ஆண்டு தொன்மையானது எனும் பிதற்றல்களோடு, கூடுதலாக அவர் பரிந்துரைப்பது/ ஆதரிப்பது  குழந்தைத் திருமணம். அண்ணலின் சாதி உருவாக்கக் கருத்தின் மூலமான ‘ அகமணமுறை’யைப் பரிந்துரைக்கிறார். அம்பேத்கர் சாதி உருவாக்கத்தின் அடிப்படையாகக் கருதிய அகமணத்தின்  தொடர்ச்சி சாதியிருப்பினைத்  தொடர்வதற்கான உத்தி, அந்த உத்தியை நடைமுறைப்படுத்த தீர்க்கமான வழி பால்ய விவாகம். எந்தத் தயக்கமுமில்லாமல் இந்த நபரால் இதைத் தொடர்ந்து பேச முடிகிறது.  அரசியல் சாசன அதிகாரம் கொண்ட நபர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ‘மாமிசக் கடைகள்’ இருப்பதைக் கண்டு பதைபதைக்கிறார். அவரின் பேச்சும் செயலும் பசுக் குண்டர்களின் செயலை ஒத்ததாக இருப்பதைக் காண முடிகிறது. ரவியின் பேச்சுகள் ஸனாதன பாரத்திற்கான சங்கொலி. ஆனால், இதைச் செய்யும் ஒரு பார்ப்பன வெறியரின் செயலை, அவரது அரசியல் சாசன அதிகாரத்திற்கெதிரானது எனச் சொல்ல இங்கு  நீதித்துறை  உள்ளிட்ட எந்த அமைப்பும் இல்லை.

அமைச்சர் உதயநிதி அவர்களின் உரையும் சர்ச்சையும் 

அமைச்சர் உதயநிதி அவர்கள் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தது நம் தோழர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர். அரங்கின் பெயரே ‘சனாதன ஒழிப்பு மாநாடு’. அதில் பேசிய இளைஞரணிச் செயலாளர் பத்து நிமிடங்களே பேசினார். அந்தக் கருத்துகள் கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இந்தத் திராவிட மண்ணில் பலமுறை பலரால் பேசப்பட்ட ஒன்று. சமரச சன்மார்க்கம் பேசிய வள்ளலார் வழிநின்றுதானே உதயநிதி பேசினார். ‘இந்துமத ஆபாச தர்சினி’ எழுதிய அத்திப்பாக்கம் வெங்கடாசலனார்தானே அமைச்சரின் கருத்துநிலை முன்னோடி. மனோன்மணியம் சுந்தரனார் இந்துப் பார்ப்பன மதச்சீர்திருத்தம் குறித்துப் பேசியதுதானே அவருக்கு வழிகாட்டியது. ‘வேஷப் பார்ப்பனரையும்’ அவர்தம் மதத்தையும் அம்பலப்படுத்திய பண்டிதர் அயோத்திதாசரின் கருத்து வெளிச்சத்தில்தானே உதயநிதி பயணித்தார்.  பெரியார் நாள் தவறாமல் பேசியது இந்தக் கருத்தைத்தானே.  அண்ணல் அம்பேத்கர் சொல்லாத கருத்தினையா பேசி விட்டார் அமைச்சர். 

ஹிந்து மதம் என எத்தனை தேன் தடவினாலும் அதன் சாராம்ச குணம் பிறப்பு சமத்துவமின்மையும், பாலியல் சமத்துவமின்மையும்தான்.  அண்ணல் அம்பேத்கர் ‘நான் ஹிந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக இறக்க மாட்டேன்’ எனச் சபதம் செய்து,  ஹிந்துமதத்தால் அதன் வளைவிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பட்டியலினத்தவர் பல லட்சம் பேருடன் பௌத்தத்தைத் தழுவியது அதற்காகத்தானே. பெரியார் வாய் ஓயாமல் இந்து மதமும், அதன் அஸ்த்திவாரங்களான மநு உள்ளிட்ட ஸ்மிருதிகளும், வர்ணாஸ்ரமும் உள்ளிட்ட சாஸ்த்திரங்களும், புராண இதிகாசப் புளுகுகளும் இருக்கும் வரை சாதியும், அதன் அடிப்படையான பிறப்பால் மேல் கீழ் எனும் கோட்பாடும் அழியாது, எனவே இந்து மதத்தை ஒழிப்போம் என்றார். மனிதரை இழிவு செய்யும் ஆரிய வேதப் பார்ப்பன  மதத்திற்கெதிரான குரல்களின் நீட்சியும், தொடர்ச்சியும்தானே உதயநிதியின் உரை.  

பிறகு ஏன் இந்தக் கூச்சல்? உடனடியான பதில் ஒன்றியத்தில் ஆளும் பார்ப்பன இந்து பாசிச மோடி அரசாங்கம் படுதோல்விகளையும் ஊழல்களை மூடி மறைத்துக் கொள்ளவும், மக்களிடம் மத உணர்வைத் தூண்டி இன்னொருமுறை வெற்றிபெறவும் நடத்தப்படும் பரபரப்பு ஊடகப் பிரச்சாரப் போர் என்பதாகவே இருக்கும். இந்தப் போரில் சண்டையிடாமல் வெற்றிபெற வழியில்லை. ஸநாதனத் தொற்றுகளும் மோடி அரசாங்க ஊழல்களும் அதானி கொள்ளைகளும் வேறுவேறல்ல. எல்லாம் ஒரே சரடில் பிணைக்கப்பட்டுள்ளன. அது சித்பவன் பார்ப்பன – குஜராத்து பனியா கும்பலின் ஆதிக்கம். இந்தக் கும்பல் ஆதிக்கத்தை சனாதன  நோய்க்கூறு என்று அமைச்சர் உதயநிதி சரியாகச் சுட்டியுள்ளார். இத்தொற்று சமீபகாலமாக முற்றித் தொற்றாகியிருக்கிறது. அது கருதியே அந்த உரையில் தொற்றுநோய் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றார்.

ஆல்போல் தழைக்கும் திராவிட இயக்கம்

இதோ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைமுறையை, திராவிட கருத்தியல் ஆசான்கள் பெரியார், அண்ணா, கலைஞர், தளபதி ஸ்டாலின் ஆகியோர் காட்டிய திசையில் வழிநடத்தப் போகும் இளம் தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இந்தப் பாசிச சக்திகளுக்கெதிரான அறைகூவலை விடுத்ததோடு அதில் உறுதியாகவும் இருக்கிறார். இந்தியா என்ற பாரத் தென் திசையின்  சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை  கொடியேந்தி வரும் இளந்தலைவரை அவரது திராவிடக்  கொள்கையோடு அடையாளங் கண்டுகொண்டுள்ளது.  அவரது வார்த்தைகளைத் திரித்து குற்றஞ் சாட்டத்துணிந்தவர்கள் அவரது தொடரும் அசையாத உறுதி கண்டு அயர்ந்து போயுள்ளார்கள். தாத்தா கலைஞரைப் போலவே ‘தலைக்கு விலை வைத்தவனை’ப் பகடி செய்து களமாடுகிறார். 

இது போர். பார்ப்பனச் சனாதனத்திற்கும் சுயமரியாதைச் சமத்துவத்திற்குமான போர். வெற்றுப் பெருமிதமல். இந்தியத் துணைக்கண்டத்தில் நாம் பட்டியலிட்டுக் கொண்ட ஆசான்களே பார்ப்பன சனாதன சமத்துவமின்மைக்கெதிரான கருத்தியல் போரை இடைவிடாமல் தொடர்ந்தவர்கள். அவர்களின்  வழியில் நாம் தொடரும் சனாதன ஒழிப்பு என்பது  ஸனாதனிகளின் பாசிச நடவடிக்கை போன்றதல்ல, சமூகநீதிக்கானது, சாதி சமத்துவமின்மைக்கு எதிரானது, பெண்ணுரிமைக்கானது, சுயமரியாதைக்கானது, அது வன்முறைக்கு முற்றிலும் எதிரான பகுத்தறிவு சார்ந்தது . இந்த மதவாத பாசிச சக்திகளை முறியடிக்கும் வரை, இந்தியத் துணைக் கண்டம் விழித்துக் கொண்டு அதன் பிடியிலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை ஓங்கி ஒலித்தபடியே இருக்கும்.