நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள், ஆயிரக்கணக்கான இடப்பெயர்வுகள், ஏராளமான பொருட்சேதங்கள், பெண்களின் மீதான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் என சமீப காலங்களின் மிகப்பெரிய இனக்கலவரம் மணிப்பூரில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி இரண்டு இளம்பெண்கள் நிர்வாணமாக அழைத்துப் செல்லப்பட்டு மானபங்கப்படுத்தப்படும் வீடியோ சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதுவரை அமைதியாக இருந்த பிரதமரே இறங்கி வந்து முதல் முறையாக “இந்தியாவிற்கு அவமானம்” என சில நொடிகள் அதைப் பற்றிப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். உச்ச நீதிமன்றம் முதல் முறையாக இந்த விஷயத்தில் வாயைத் திறந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. நாடே கொந்தளிந்துக்கொண்டிருக்கிறது. மணிப்பூரின் ஆளும் பாஜக கட்சியின் முதல்வர், இவை போன்ற நூறு கலவரங்கள் இங்கு நடந்துகொண்டிருக்கின்றன என வீடியோ வெளியானதற்குக் கோபப்படுகிறார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் பற்றி எறிந்து கொண்டிருந்தாலும் அதுவரை கிடைக்காத கவனம் ஒரே ஒரு வீடியோவால் கிடைத்திருக்கிறது. மணிப்பூர் சென்று திரும்பிய பத்திரிக்கைக்காரர்கள் மணிப்பூரில் இணைய வசதி முடக்கப்பட்டிருக்கிறது, அது விலக்கிக்கொள்ளும் போது இதை விட அதிர்ச்சியான காணொளிகள் வெளியாகும் என்று சொல்லி இன்னும் அதிர்ச்சியடைய வைக்கிறார்கள்.

ஒரு மனநல மருத்துவராக அந்த வீடியோவையொட்டி எனக்குச் சில கேள்விகள் எழுந்தன.

ஏராளமான ஆண்களால் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்படும் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். நம்மைப் போலவே அன்றாட வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதர்கள். இன்னும் சொல்லப்போனால் இழுத்துச் செல்லப்படும் பெண்ணை முன்பே அறிந்தவர்களாகக் கூட இருக்கலாம். இவர்கள் அனைவரும் எளிய அல்லது நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த ஆண்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் அம்மாவுடனும், மனைவியுடனும், குழந்தைகளுடனும் போய் தான் சாப்பிடுவார்கள், தூங்குவார்கள். இவர்களெல்லாம் குற்றப்பின்னணியுடையவர்களோ அல்லது அரசியல் அடியாள்களோ கிடையாது. இப்போது எனக்கு எழுந்த கேள்விகள்:

இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும்போதோ, அவர்களின் அங்கங்களை சீண்டும்போதோ அல்லது அத்தனை பேர்களின் முன்பு அவர்களை மானபங்கப்படுத்தும் போதோ அவர்களுக்கு இது தவறு என்று எப்படித் தோன்றாமல் போனது?

இதைச் செய்யும்போது சிறு குற்றவுணர்ச்சி கூட அவர்களுக்கு இருந்திருக்காதா?

இந்தச் சம்பவத்தின் போது எந்த ஆணும் தங்களது வீட்டிலுள்ள பெண்களைப் பற்றி ஒரு கணம் கூட சிந்தித்திருக்க மாட்டார்களா?

இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது குற்றவுணர்ச்சி அவர்களுக்கு இருக்குமா? இருக்காதா?

அந்தப் பெண்களை மானபங்கப்படுத்திய பிறகு எப்படி இந்த ஆண்கள் தங்கள் வீட்டிற்குச் சென்று தங்களது வீட்டுப்பெண்களைப் பார்ப்பார்கள்? அவர்களுடன் எப்படி அன்றாட வாழ்க்கையை எந்தச் சலனமும் இல்லாமல் தொடர முடியும்?

மனிதனின் அடிப்படைப் பண்பே மனிதத்தன்மைதான். சக மனிதர்களின் நலனிலும், சமுதாயத்தின் நலனிலும் அக்கறையாக இருப்பவனே மனிதன். சமூகத்தின் நலனை பிரதானமாகக் கொண்ட இந்தப் பண்புதான் மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி வைத்திருக்கிறது. இந்தச் சமூகப்பண்பு ஆதியிலிருந்து மனிதனுக்கு இருப்பதல்ல. ஆதியில் அவன் விலங்காகவே இருந்தான். விலங்குகளுக்கு உரிய மூர்க்கம், சுயநலம், சுயதேவையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை, சுயதேவைகளை அடைவதில் இருக்கும் தடைகளை ஒழித்தல் என மனிதனும் விலங்காகவே காடுகளில் திரிந்தான்.

பின்னாளில் அவனுக்குள் உருவான இந்தச் சமூகப் பண்புதான் மனிதனை நாகரீகமடைய செய்தது. இந்த நாகரீக வளர்ச்சியே மனிதன் அத்தனை விலங்குகளுக்கும் மேலானவனாக இருப்பதற்குக் காரணம். சமூக நலனின் மீதும், பிறரின் நலனின் மீதும் இருக்கக்கூடிய பற்றின் விளைவாகத் தனது ஆழ்மன விருப்பங்களை, வக்கிரங்களை, மூர்க்கங்களைத் தனக்குள் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு இயல்பாக இருக்கிறது. மனிதனிடம் மட்டுமே உள்ள முன் ஃபிராண்டல் மூளை (Pre Frontal Cortex) இந்த ஆழ்மன உந்துதலைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது. அதாவது அடிப்படையில் மனிதன் இன்னமும் விலங்குகளுக்குரிய மூர்க்கங்களைத் தனது ஆழ்மனதில் கொண்டிருந்தாலும் மனிதத்தன்மை இந்த மூர்க்கங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

எந்த உயிரினத்திற்கும் பிழைத்திருப்பது மட்டுமே பிரதானமான ஒன்றாக இருக்கிறது. அதற்காக எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லும் நிலையில்தான் பிற உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால் மனிதனைப் பொறுத்தவரை பிழைத்திருப்பது என்பது தனது சமூகத்தைச் சார்ந்தது. தான் சார்ந்த சமூகம் பிழைத்திருக்க மனிதன் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய உந்துதலை இயல்பாகக் கொண்டிருக்கிறான். இதற்காக அவன் தனது உயிரையே கூட விட்டுத்தரும் நிலைக்குச் செல்கிறான். தான் பிழைத்திருப்பதைப் பிரதானமாகக் கொள்ளாத இந்தத் தன்மையை வேறு எந்த உயிரினத்திடமும் பார்க்க முடியாது. அப்படி இருக்கக்கூடிய உயிரினங்கள் மனிதத்தன்மையுடன் இருப்பதாகப் பொருள் கொள்ளலாம்.

மனிதனின் இந்த மனிதத்தன்மை குறைகிற போது,  முன்மூளை குற்றவுணர்ச்சியைக் கொடுக்கிறது. ஏனென்றால் இந்த உயர் விழுமியங்கள் பிழைத்திருப்பதற்கு அவசியமில்லாமல் போனாலும் கூட இருத்தலுக்கு அவசியம். இருத்தலை உறுதி செய்ய வேண்டுமானால் அவன் குற்றவுணர்ச்சியற்றவனாக இருக்க வேண்டும். மேலும் மனிதன் கொண்டிருக்கும் மதங்களும் இந்த அறவுணர்ச்சியை அவனுக்குத் தொடர்ந்து போதித்து வருகின்றன. மனிதனின் இருத்தலென்பது இத்தகைய அறங்களாலும், உயர் விழுமியங்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய அறங்களும், விழுமியங்களும் பிழைத்திருப்பதே பிரச்சினையாக உள்ளவர்களுக்கு முற்றிலும் அந்நியமானது. ஏனென்றால் ஒரு சமூகத்தின் இருப்பே கேள்விக்குறியாகும் நிலையில் அறங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற முடிவிற்கு அந்தச் சமூகத்தைச் சார்ந்த மனிதர்கள் வந்து விடுவார்கள்.

அறங்களுடன், உயர் விழுமியங்களுடன் வாழ்வதென்பதே ஒரு சொகுசு. அது எல்லோருக்கும் சாத்தியமல்ல. எனவே, இந்த விழுமியங்களிலிருந்து சற்றுப் பிறழ்வான வாழ்க்கையே எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சில சமரசங்களைத் தனக்குள் செய்துகொண்டுதான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிறார்கள். சமரசம் செய்து கொண்ட, அறவிழுமியங்களிலிருந்து சற்றே பிறழ்வான இந்த வாழ்க்கை குற்றவுணர்ச்சியைக் கொடுக்கிறது.அதனால் பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையே  குற்றவுணர்ச்சி நிரம்பியதாக இருக்கிறது. இதைத் தான் மதங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. மதங்கள் இந்தக் குற்றவுணர்ச்சிகளுக்கு உடனடித் தீர்வுகளைக் கொடுக்கின்றன. அந்தத் தீர்வுகள் அன்றாட மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவையாக இருக்கின்றன. மொட்டையடிக்காத, பரிகாரங்களை நிர்பந்திக்காத, பாவ மன்னிப்பு கேட்காத ஆலயங்கள் எந்த மதங்களிலும் இல்லை. ஏனென்றால், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையே அத்தனை குற்றவுணர்ச்சி நிரம்பியதாகயிருக்கிறது.

சிறு பிறழ்வே குற்றவுணர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும்போது மனிதர்கள் எப்படி கொடும் குற்றங்கள் இழைக்கிறார்கள்? கொடும் செயல்கள் செய்கிறார்கள்?

எந்த ஒரு குற்றத்தின் முடிவிலும் மனிதன் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறான். குற்றவுணர்ச்சியைக் கொடுக்காத செயல்கள் குற்றமாகக் கருதப்படுவதில்லை. இன்றளவும் நமது சட்ட நடைமுறைகள்  இந்தக் குற்றவுணர்ச்சியை நிரூபிப்பதையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. குற்றவுணர்ச்சியை நிரூபித்தால் மட்டுமே தண்டனையை (To prove the Guilty) உறுதிசெய்ய முடியும் . ஒரு தனிப்பட்ட இலாபத்திற்காக மனிதன் குற்றவுணர்ச்சி இருந்தால் கூட பரவாயில்லை என்ற அறமிழந்த நிலையில்தான் குற்றங்கள் செய்கிறான். அப்படி அறமிழந்த நிலையில் பிற மனிதனைக் கொல்வது போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவன், அடிப்படை மனிதப் பண்புகள் அற்றவனாகிறான். ஆழ்மன குரூரங்களை, மூர்க்கங்களைக் கட்டுப்படுத்த இயலாதவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்? அதனால்தான் அவன் சமூகத்தில் இருப்பதற்கு இலாயக்கற்றவனாக ஆகிறான். அதனாலேயே அவன் சிறையில் அடைக்கப்படுகிறான், தூக்கிலுமிடப்படுகிறான்.

ஆனால், மனிதர்களுக்கிடையே நடக்கக்கூடிய கலவரங்களில் இந்தக் குற்றவுணர்ச்சி எதுவுமில்லாமலேயே சாதாரண இயல்பு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் சராசரி மனிதர்கள் பெருங்குற்றங்களைச் செய்கிறார்கள். அங்கு அவர்களின் ஆழ்மனக் குரூரங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படுகின்றன. அதுவரை மதத்திற்குப் பயந்த, மனசாட்சிக்குப் பயந்த மனிதர்கள் எப்படி திடீரென ஒரு சூழலில் அத்தனை விழுமியங்களையும் கழற்றிப் போட்டு விட்டுத் தனது ஆதி நிலைக்குச் செல்கிறார்கள்?, திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கு வருகிறார்கள்? என்பது பல காலங்களாக உளவியலில் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலைக்குக் காரணம் மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களிடமும் இருக்கக்கூடிய பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வே “Survival Instinct”. இந்த உள்ளுணர்வு வெளிப்படும் நேரங்களில் முன்மூளை என்று சொல்லக்கூடிய முன் ஃபிராண்டல் மூளை தற்காலிகமாகச் செயலிழந்து போகிறது. ஆழ்மன உந்துதல்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் இந்தப் பகுதியே குற்றவுணர்ச்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஒரு உயிரினத்தை பொறுத்தவரை பிழைத்திருப்பதே முதன்மையானது என்பதால் அதற்கு ஆபத்து வரும் நேரம் மட்டும் இந்த[ பகுதி செயலிழக்க வைக்கப்படுகிறது.

 

மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் பிழைத்திருப்பதன் அர்த்தங்கள் மாறியிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பிழைத்திருப்பது என்பது உயிரோடிருப்பது மட்டுமல்ல, தான் சார்ந்த சமூகத்தின் கண்ணியமான இருப்பே (Dignified existence) பிழைத்திருப்பது. இதற்கு ஆபத்து வரும் தருணங்களில் அவனது உள்ளுணர்வு தூண்டப்பட்டு மூர்க்கமாகிறான். தான் சார்ந்த சமூகத்தின் கண்ணியமான இருப்பின் மீதான இந்த அச்சம் அவனுக்கு ஒரே நாளில் ஏற்படுவதில்லை. அது படிப்படியாக உருவாகக்கூடியது. அப்படி படிப்படியாக வளர்தெடுக்கப்பட்ட அச்சம் வெறுப்பாக இன்னொரு சமூகத்தின் மீது மாறுமேயானால் அங்கு மனிதன் மூர்க்கமாகிறான், தன்னிலை இழக்கிறான்.

இந்த வெறுப்பு எப்படி உருவாகிறது?

மனிதர்கள் ஓரினமாக ஒர் இடத்தில் வாழ்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதில் வாழும் மனிதர்களுக்கிடையேயான வெறுப்பு உருவாக வேண்டுமானால் அதில் சில படிநிலைகள் இருக்கின்றன:

தனித்த அடையாளத்தை உருவாக்கி ஒரு குழுவைப் பிரித்தல்- ஏதேனும் ஒரு தனித்த அடையாளத்தின் அடிப்படையில் ஒரு குழுவை மட்டும் பிரிக்க வேண்டும். அந்த அடையாளம் அவர்களது வாழ்க்கை முறையாக இருக்கலாம், பேசும் மொழியாகவோ, வணங்கும் கடவுளாகவோ அல்லது சார்ந்திருக்கும் மதமாகவோ இருக்கலாம். இதன் அடிப்படையில் குழுக்களுக்கிடையே பிரிவினையை உருவாக்க வேண்டும். நாம் ஒன்றாக இருந்தாலும் கூட ஒன்றல்ல என்ற எண்ணத்தை அந்தக் குழுக்களில் விதைக்க வேண்டும்.

பிரிக்கப்பட்ட குழுவை அந்நியப்படுத்தல்- அப்படிப் பிரிக்கப்பட்ட குழுவை இன்னொரு குழுவிடம் முற்றிலுமாக அந்நியப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒரே சமூகத்தில் இருப்பவர்களின் மீது பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு தூண்டப்படாது, அந்நியர்களின் மீதே தூண்டப்படும். அதனால் அவர்கள் நமது ஆள்கள் இல்லை என்ற நம்பிக்கையை இன்னொரு குழுவிடம் உருவாக்க வேண்டும்.

அந்நியப்படுத்தப்பட்ட குழுவின் மீது அதிருப்தியை உருவாக்குதல்- அப்படி அந்நியப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையின் மீது, அவர்களின் பழக்க வழக்கங்களின் மீது, அவர்களின் தொழிலின் மீது அதிருப்தியை உருவாக்க வேண்டும். அவர்களின் மீது உருவாக்கப்பட்ட இந்த அதிருப்தியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும்.

அச்சத்தை ஏற்படுத்துதல்- ஏதேனும் ஒரு வகையில், இன்னொரு குழுவினரின் மீது அச்சத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்குக் கெடுதல் செய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஆபத்தாக உணரவைத்தல்- அந்த அச்சம் முழுமையாக உருவான ஒரு காலகட்டத்தில், ஏதேனும் ஒரு சம்பவத்தைத் திட்டமிட்டு உருவாக்கி அதன் வழியாக பிரிக்கப்பட்ட அந்தச் சமூகம் ஆபத்தானது என்பதை உணரவைக்க வேண்டும். இது எவ்வளவு வேகமாகப் பரவுகிறதோ அவ்வளவு வேகமாகக் கலவரங்கள் பரவும், அவ்வளவு வேகமாக மனிதன் நிதானமிழந்து போவான்.

மணிப்பூர் மட்டுமல்ல, உலகம் முழுக்க இரண்டு இனக்குழுக்களுக்கிடையே நடந்த அத்தனைத் திட்டமிட்ட கலவரங்களும் இந்தப் படிநிலைகளின் வழியாகவே நடத்தப்பட்டிருக்கின்றன.  நீண்ட காலமாகத் திட்டமிட்டுப் படிப்படியாக வெறுப்பை வளர்த்தெடுத்து நடத்தப்பட்ட கலவரங்கள் அனைத்துமே இந்தப் படிநிலைகளின் வழியாகவே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.  இந்தியாவில் இதற்கு முன்பாக நடந்த குஜராத் கலவரங்களையும், ஈழப்படுகொலைகளையுமே கூட நாம் உதாரணமாகக் கொள்ளலாம். சராசரியான மனிதர்களுக்கு, சக மனிதர்களின் மீது வெறுப்பையூட்டி அவர்களை மூர்க்கமாகவைக்க இந்தப் படிநிலைகள்தான் பின்பற்றப்படுகின்றன.  மனிதர்களின் அடிப்படை உள்ளுணர்வான “பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு” தூண்டப்பட வேண்டுமானால், அது திட்டமிட்டுப் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். இப்படித்தான் மணிப்பூர் கலவரங்களும் உருவாக்கப்பட்டன.

இதன் பின்ணணியில் நாம் மணிப்பூரின் பிரச்சினையைப் பார்ப்போம்.

மணிப்பூரில் இரண்டு விதமான குழுக்கள் இருக்கின்றன. ஒரு குழுவினர் பிரதானமாக சமவெளியில் வாழ்கிறார்கள், இன்னொரு குழுவினர் மலைகளில் வாழ்கிறார்கள். சில காலங்களுக்கு முன்பு வரை இரண்டு குழுவினருக்கும் பொதுவான வழிபாடுகளும், கலாச்சாரங்களும் இருந்திருக்கின்றன. இரண்டு குழுவினரும் சில முரண்களைக் கடந்து ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள்.

தனித்த அடையாளம் உருவாதல்:

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மெய்த்தி இனமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்திற்குள் கொண்டுவரப்படுகிறார்கள். மலைவாழ் பகுதியில் இருக்கும் குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் பெரும்பாலும் கிருத்துவ மதத்தினராக இருக்கிறார்கள். மெய்த்தி இன மக்கள் மதத்தின் வழியாகவும், புதிய வாழ்க்கை முறைகளின் வழியாகவும் குக்கிகளிடம் தனித்துவ அடையாளம் கொண்டு பிரிகிறார்கள். இப்படியே மெய்த்தி இன மக்களுக்குத் தனித்த அடையாளம் உருவாக்கப்படுகிறது.

 

அந்நியப்படுத்தல்: 

அடுத்து, குக்கி இனக்குழுவினரை மெய்த்தி இனக்குழுவில் இருந்து அந்நியப்படுத்த வேண்டும். குக்கி பழங்குடியினர் மியான்மரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். அவர்கள் பூர்விக மணிப்பூரிகள் கிடையாது என்ற பிரச்சாரம் தொடர்ச்சியாக மெய்த்தி இனமக்களிடம் செய்யப்படுகிறது. இன்றைய மணிப்பூர் முதல்வருமே கூட பழங்குடியினரை மியான்மரில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். மெய்த்தி இன மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குக்கிகள், அந்நியர்கள் என நம்பத் தொடங்குகிறார்கள். இப்படி நம்புவதுதான் அவர்களது குற்றவுணர்ச்சியைக் குறைப்பதற்கான முதல்படி.

அதிருப்தி உருவாகுதல்:

மியான்மரிலிருந்து வந்த பழங்குடிகள் என்று அவர்களை  அந்நியப்படுத்திய பிறகு அவர்களின் மீதான அதிருப்தி ‘போதைப் பொருட்களை விளைவிப்பவர்கள்’ என்ற ரீதியில் உருவாக்கப்படுகிறது. ‘பாப்பிஸ்’ என்ற ஒருவகையிலான மருத்துவப் பயன்பாடுள்ள தாவரம் அங்கு இயற்கையில் விளைகிறது. அதுவே மலைப்பகுதிகளில் பெரும்பாலான வேளாண்மையாகவும் இருக்கிறது. இது இப்போதல்ல, காலம் காலமாக நடக்கிறது. ஆனால் இதையொட்டி போதைப் பொருள் மாஃபியாவாக குக்கிகளைச் சித்தரிக்கும் போக்கு சமீபத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. ‘இந்தப் போதைப் பொருள் மாஃபியா, மியான்மரில் இருந்து வந்தவர்களுடன் சேர்ந்து காடுகளை அழித்துக்கொண்டிருக்கிறது’ என்ற பிரச்சாரம் மெய்த்தி இன மக்களுக்குக் குக்கிகளின் மீது அதிருப்தியைக் கொடுக்கிறது. மேலும் குக்கிகளுக்குப் பழங்குடி இடஒதுக்கீடு இருக்கிறது என்பதும், அவர்களால் சமவெளியில் நிலங்களை வாங்க முடியும் ஆனால் மெய்த்தியின மக்களால் காடுகளில் நிலங்களை வாங்க முடியாது என்பதும் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகத் தங்களுக்கும் பழங்குடி இட ஒதுக்கீடு வேண்டும் என மெய்த்தியின மக்கள் போராடத் தொடங்குகிறார்கள்.

அச்சத்தை ஏற்படுத்துதல்:

மெய்த்தி இன மக்களின் தங்களுக்கும் பழங்குடியின இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை ஆளும் பாஜக அங்கீகரிக்கிறது. மணிப்பூர் உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளிடம் இது தொடர்பாகப் பரிந்துரையை கடந்த ஏப்ரல் மாதம் கோரியது. அது குக்கிகளிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே அரசுப் பதவிகளிலும், கல்வியிலும் பெரும்பாலானவர்கள் மெய்த்தியினரே இருப்பதாலும், 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் மெய்த்தினர் வசமாக இருப்பதாலும், தங்களுக்கென்று இருக்கும் பழங்குடி இடஒதுக்கீட்டையும் பறித்துக்கொண்டால் தங்களது வாழ்வாதாரமும், எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதும் உணர்ந்த குக்கியின மக்கள் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் போராட்டத்தை அறிவிக்கின்றனர். ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற அந்தப் போராட்டம் நடந்த போது, மெய்த்தியினப் பெண்ணை குக்கியின மக்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகப் பொய் செய்தி திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. அந்தப் பொய்ச் செய்தி காட்டுத்தீ போல மெய்த்தியினர் மத்தியில் பரவத் தொடங்குகிறது. இதன் விளைவாக மெய்த்தியின மக்களுக்குக் குக்கியினத்தினரின் மீது இருந்த அதிருப்தி அச்சமாக மாறுகிறது. அதன் விளைவாக அவர்களும் வன்முறையில் இறங்குகிறார்கள்.

ஆபத்தாக உணர்தல்:

பெரும்பாலும் பழங்குடியினரின் மீதும், அவர்களின் வாழ்விடங்களின் மீதும் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள் இருபக்கமும் நடந்ததாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. குக்கியின மக்களைச் சட்டவிரோதமாகக் குடியிருக்கிறார்கள் எனச் சொல்லி அரசாங்கம் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றுகிறது. அவர்களின் சர்ச்சுகளை இடிக்கிறது. மியான்மரில் இருந்து வந்தவர்கள் என்ற பிரச்சாரம் தொடர்ச்சியாக மெய்த்தின மக்களிடம் செய்யப்படுகிறது. இதன் விளைவாக மெய்த்தியின மக்களிடம் அச்சம் உருவாகிறது. அவர்களின் இருப்பு அனைத்து வகைகளிலும் தங்களுக்கு ஆபத்தானது என்ற உணர்வு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதன் விளைவாக “பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு” மெய்த்தியின மக்களிடம் உருவாகிறது. அரசாங்கமும், அதிகாரமும் தங்கள் பக்கம் இருப்பதால் அவர்கள் இன்னும் மூர்க்கமாகக் குக்கியினரின் மீதான வன்முறைளில் எந்தக் குற்றவுணர்ச்சியுமின்றி இறங்குகிறார்கள். இந்த உள்ளுணர்வு அவர்களைக் குற்றவுணர்ச்சியில் இருந்து காக்கிறது. இன்னும் தாங்கள் சார்ந்த சமூகத்திற்குச் செய்யும் போராட்டமாகவே இதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு கொடூரமானத் தாக்குதலைப் பெண்களின் மீது அவர்களால் நடத்த முடிகிறது.

அதிகார சக்திகளால் நடத்தப்படும் முதல் கலவரம் மணிப்பூர் இல்லை. அதே போல, அவர்களின் கடைசி கலவரமும் மணிப்பூர் கிடையாது. மக்களைப் பிளவுபடுத்தி அதன் வழியாகத் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக்கொள்வதே அவர்களின் பிரதானமான அரசியல் தந்திரமாக இருப்பதால் மக்களாகிய நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சகிப்புத்தன்மையே இந்தியாவின் மனசாட்சி. அதனால்தான் இப்போதும் இந்தச் சம்பவத்தையொட்டி நாடு கிளர்ந்தெழுந்திருக்கிறது. தான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றிருந்த பிரதமரே இறங்கி வந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். அந்தச் சகிப்புத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மதம், இனம், சாதி, மொழி கடந்து பிற மனிதர்களின் மீதான உண்மையான கரிசனமும், அவர்களின் நலனைத் தன்னலனாய் நினைக்கக் கூடிய மனமும் வாய்த்திருப்பதே மனிதர்களுக்குப் பெருமை சேர்க்கிறது. அந்த மனிதத்தன்மையை எந்தக் காலத்திலும் நாக்கைத் துருத்திக்கொண்டு இரத்தத்தை நாடிக் காத்திருக்கும் வேட்டை நாய்களுக்கு இரையாக்கிவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

sivabalanela@gmail.com