- மனமெரியும் மீதகாலங்கள்
எழும்போதே
ஒரு ஞாபகம் சடவு எடுத்துக்கொண்டிருந்தது
இரவெல்லாம் மனதின் ஆழங்களில் நீந்தி
இப்போது மேல்தளத்திற்கும் வந்துவிட்டது
வாசலியே கோயில் இருக்கிறது
தினமும் பார்க்கிற கடவுளும்
அதில்தான் இருந்தார்
ஆனால்
மனிதகுலத்துக்கு நீண்ட யுகங்களாக
அவருக்குச் சொல்ல எதுவும் இருந்ததில்லை என்பதுமாதிரி தெரிந்தார்
சிலைக்கு முன் மலைகளில்
இருந்தமாதிரிதான்
இப்போதும் இருந்தார்
தினமும் போகிற வருகிற
வழியில்தான்
அந்தக் கோயில்
அதன் கடவுள்
எதனையும் இதுநாள்வரை வேண்டினேனில்லை
ஆனாலுமென்ன
போகிற வருகிற வழியில்
ஒரு கடவுள் இருப்பது
நல்லதற்கு என்றுதான் தோன்றியிருக்கிறது
பயந்து பயந்து
நடுங்கும் ஒருநாளில்
கடவுளுக்கு அருகில்
எரியும் ஒரு சுடர் மாதிரி
கொஞ்ச நேரம் நம்பி எரியலாம்
மீத காலங்களில்
எரியுமென நம்பி
மனம் எரியலாம்
- உறைவும் அசைவும்
உறைந்த படிக்கட்டுகளில் ஏறி ஏறி
எங்கும் போய்ச் சேர்ந்தாற்போல் தெரியவில்லை
இந்த இரவில் தாம்பரம் பேருந்து நிலையத்தின்
நகரும் படிக்கட்டுகளில்
ஒருத்திச் செல்வதைப் பார்த்தேன்
அவள் நகரவே இல்லை
ஒரு படிக்கட்டில் அசையாது நின்றுகொண்டிருந்தாள்
புழு ஏறுவதுபோல நகர்ந்தன படிகள்
அவள் இதில் இருந்து இறங்கி
வீட்டுக்குப் போகிறவளாக இருக்கலாம்
அல்லது
பணிக்குச் செல்பவளாக
அல்லது
திரும்பப் போக விரும்பாத
சில இருப்புகளுக்கு
ஒரு நதிபோல ஓடும் படிக்கட்டுகளே
அவளை
எதிலிருந்து எதில் கரைசேர்க்க
நீங்கள் முன்னேறுகிறீர்கள்
அல்லது
பாழுங்கிணறுகளின் குறுக்குவழிகளாவது உங்களுக்குத் தெரியுமா
இல்லையெனில்
எல்லாவற்றையும் எங்கு தொடங்கி
எங்கு முடிக்கலாம் என்பதாவது
- இனியான காலத்தின் மொழி
வெற்றியின் தானியத்தை
தூவுகிறார்கள்
சிலக் குறிப்பிட்ட நிலங்களில் எழுகின்றன வெற்றியின் தளிர்கள்
நானோ வரலாறு துரோகித்த
தானியங்களுடன் வந்திருக்கிறேன்
அவை முளைக்க இதுதான் நிலமென்றில்லை
அவை எந்திலத்திலும் முளைக்கும்
யார் யாரெல்லாம்
துரத்தினார்களோ
அவர்களின் நுரையிரல்களில்
வேர்விடும்
பிறகொரு காற்று எழும்
அதிலொரு மொழி எழும்
அம்மொழி பாடும்
இனியான காலத்தை
இனியான நியாயங்களை
- மலர்உருவக வலி
என் வலது கையில்
என் காமம்போல
என் தனிமைபோல
எப்போதும் ஒரு வலியிருக்கிறது
நான் நினைக்காவிட்டாலும்
அது நினைத்துக்கொள்கிறது
தன் இருப்பை
மலர்போல விரிகிற வலி
அதுவரையிலான
வரலாற்றைப் புரட்டுகிறது
வெட்டுண்ட உடல்கள்
சுதந்திரத்திற்காக இறந்த உடல்கள்
கட்டளைகளுக்காக இறந்த உடல்கள்
வீண் அர்த்தங்களால் சிதறிய உடல்கள்
நம்பிக்கைகளால் எரிந்த உடல்கள் என
வலியெனும் மலர் விரிய விரிய
எல்லையற்ற உழைப்பின் வீச்சம் பரவுகிறது
உடல்களுக்கிடையிலான
தோல்வியின் கவுச்சி பரவுகிறது
பிறந்து ஒருகணம் ஆன
ஒரு சிசுவின்மீது படிந்த
யோனிக் குருதியின் மணம் பரவுகிறது
வலிகளை
ஒரு மலர்போல் எண்ண
அதிலிருந்து மணம் பரவுவதாகச் சொல்ல
என்ன நெஞ்சழுத்தம் இந்த வலிக்கு
உலகின் வன்முறைக்கு