1.
நாம் இரு வெவ்வேறு நதிகள்.
நமக்கு இரு வெவ்வேறு கரைகள்.
நமக்கு இரு வெவ்வேறு மரங்கள்.
என்னில் நீராடும் எந்த உடலும் உன்னில் நீராடாது.
உன்னில் நீராடும் எந்த உடலும் என்னில் நீராடாது.
நமது கரையில் இருக்கும் முகங்களுக்கு
எந்தவிதமான பந்தமும் இல்லை.
நாம் ஏதோ நினைத்து நுரைத்து சாகிறோம்
இருந்தாலும் நாம் நமக்குள் ஒரு உறவைக்கொள்கிறோம்.
எனது மரத்தில் அமரும் பறவை எந்தப் பருவத்திற்கும்
உனது மரங்களை அடைந்ததில்லை
உனது மரத்தில் அமரும் பறவை எந்தப் பருவத்திற்கும்
எனது மரங்களை அடைந்ததில்லை.
என்னில் விழும் மழை உனது கோடையில் விழும் மழையல்ல.
உன்னில் விழும் மழை எனது கோடையில் விழும் மழையல்ல.
அவைகளுக்கு வானம் மட்டுமே பந்தமாகக் கூடும்.
நீயும் நானுமல்ல.
என்னில் விழுந்து தற்கொலை செய்தவர்களுக்கும்
உன்னில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களுக்கும்
வேறு வழிக்கான மார்க்கம் தெரியாது.
உன்னால் புனிதப்படுத்தப்பட்டவர்களும்
என்னால் அசுத்தப்படுத்தப்பட்டவர்களும்
ஒரு காலத்தின் கீழ் வாழ்பவர்களல்ல
உன்னில் நீரருந்தும் புலியால்
என்னில் நீரருந்தும் மான்
ஒரு போதும் வேட்டையாடப்படாது.
நீயுன் நானும் ஒரு போதும் சந்தித்துக்கொள்ளப் போவதில்லை.
உன்னைக் கொண்டாட மலர்தூவ ஆராதனை காட்ட ஆயிரம் கரங்களுண்டு.
எனக்கு அப்படியில்லை.
நாம் இறுதியாக சேரும் கடல் கூட ஒன்று அல்ல
இது இருவேறு பிரதேசத்தில் இரு வேறு பெயரில் இருக்கிறது.
நாம் ஏதோ நினைத்து நுரைத்து சாகிறோம் தவிர
நாம் நம்மை நினைத்துக்கொள்ளவில்லை
இருந்தாலும் நாம் நமக்குள் ஒரு
உறவைக்கொள்கிறோம்.
நாம் இரு வெவ்வேறு நதிகள்.
நமக்கு இரு வெவ்வேறு கரைகள்.
நமக்கு இரு வெவ்வேறு மரங்கள்.
இருந்தாலும் நாம் நமக்குள் ஒரு
உறவைக் கொள்கிறோம்
பிறகு நாம் நம்மை நினைத்து நுரைத்து சாகிறோம்…
2.
பத்து கரம் கொண்டு புணர்கிறாய்.
இரு கரம் மட்டுமே வைத்து உனை எங்கு
முதலில் தீண்டுவேன்.
உன் பசிய முலைகளை
ஊட்டு காளியே.
உனது ரத்தம் கதைக்கிறது.
எனது மௌனம் மேலும் மேலும் அதிர்கிறது.
உனது கண்களில் காமத்தின் நிறம்
உக்கிரத்தை தொடுகிறது.
ஒற்றை கிடைமட்ட இதழ்வழியே
இத்தனை கண்களை மேலெழுந்து சொருகச் செய்ய
நான் எத்தனை முறை மடிய வேண்டும்.
இதோ ஒற்றைத்துளி கண்ணீரின் நிழலில்
இருள்கிறது பூமி.
நீ ஆடை மாற்று அலங்காரம் மாற்று.
நான் ஓய்வெடுக்கிறேன்.
தாகத்திற்கு நீ அருந்தும் ரத்தம்
ஒரு நாள் என்னுடையதாக இருக்கலாம்.
திரிசூலம் நேரடியாக அடி வயிற்றைக் கிழிக்கிறது.
மதுவை அருந்தவிடாமல் வயிற்றில் ஊற்றுகிறாய்.
இத்தனை சிதிலமுற்ற ஓடுகளில் நான் யாரென்பதை எப்படி கண்டுகொள்வேன்.
காமம் ததும்பும் முகம்
காமம் தழுவும் விரல்
உன்னுடன் புணர்கையில்.
உன்னுடன் கூடுகையில்
ரத்த வாடையில் இன்னும் எரிகிறது ஆன்மா.
இத்தனை தலையற்ற உடல்கள்
நமக்குப் படுக்கையாகிறதே
இவர்கள் யார் இவர்களில் நான் யார்.
இருளில் எவ்வளவு அமைதியாக
நீ என்னை நெருங்கினாலும்
உன்னிலிருந்து பீறிட்டு வெளியேறும் காமத்தின் நெடி
எனது கனவுகளைக் கலைத்துவிடும்.
ஆடு பலியிடத் தயராகிவிட்டது
மழை வருகிறது உடல் கரையும் படியாகப் பெய்கிறது
உனது பெரிய நா எதோ சொல்லத் துடிக்கிறது
உடுக்கை சத்தம் அதற்குள்ளாக எழுந்துவிட்டது…
3.
நீ அருந்திய பாதி ஒயின்
நான் இறப்பதற்கான எல்லா சூட்சுமங்களையும்
கொண்டுள்ளது.
நாம் சியர்ஸ் சொல்லிக்கொண்டோம்.
எனது உடல் உனது க்ளாஸ் என
உனது உடல் எனது க்ளாஸ் என
நாம் சியர்ஸ் சொல்லிக்கொண்டோம்.
எல்லா இரவுகளிலும் ஞாபகத்தின் சுவடுகளில்
தனது வண்ணத்தை விட்டுப்போகிறது.
குருட்டுப் பட்டாம்பூச்சி.
அதற்கு நன்றாகப் பாதை தெரிந்தாலும் கூட
அது மீண்டும் மீண்டும் குருடாகவே இருக்க வேண்டுகிறது.
சாத்தானின் பிரார்த்தனை கண்களில்
நாம் ஏன் இத்தனை நல்லவர்களாக ஊடுருவுகிறோம்.
நமது கண்களில் ஊடுருவும் கொலைவாளில் இறைவன் ஏன் இப்படி ஒடுங்கிப்போகிறான்.
இருவர் கைகளிலும் தேக்கிவைத்த கடல்
வெக்கையில் கொதிக்கிறது.
அதில் இருவரின் உடல் அவியும் வாடை
நமது கண்களைத் தூங்கவைக்கிறது.
நாம் நமக்காக நம்மை இழக்கத் தொடங்கிய பிறகு
நாம் இருந்தோம் என்பதை மறக்கத் தொடங்கிவிடுகிறோம்.
எல்லாவிதமான ஏமாற்றங்களுக்குள்ளாகவும்
ஒரு செடியை வேண்டுமென்றே வளர்க்கிறோம்.
செடியில் பூ பூக்கிறது
அதில் எந்த மனமும் இல்லை.
கடல் மேலும் கொதிக்கிறது.
கண்கள் மேலும் உறங்குகிறது.
பூ மடலாக உதிர்கிறது.
உனது புல்வெளியில் எனது நிழல்
ஆடுகளாக மேயத்தொடங்கியது.
பிங்க் நிற நெயில் ஃபாலிஷ் இட்ட உனது விரல் நகங்களில்
புலியின் புருவ முடிகள் எட்டிப்பார்க்கின்றன.
பிங்க் நிறப் புல்வெளிகளில்
பிங்க் நிற வானத்தில்
பிங்க் நிறப் பள்ளத்தாக்குகளில்
எப்போதுமே ஒரு ஆடு தனது உயிரை
அவ்வளவு ஆசையுடன் இழக்கிறது.
பிங்க் ஆனது அந்தரங்கத்துக்குரிய நிறமாகிறது.
பிறகு எப்போதும் பிங்க் நிறத்திற்காக ஆடு இறக்க விரும்புகிறது.
ஒயின் க்ளாஸில் பிங்க் நிறக் கரைகள் படிகின்றது.
நாம் அப்போதும் சியர்ஸ் சொல்லிக்கொண்டோம்.
கனவுகளில் எந்த உலகமும் இருப்பதில்லை
பிறகு எதற்காக நாம் கனவு காண்கிறோம்.
எதற்காக அக்கறையுடன் நம்மைப் பேணிக்கொள்கிறோம்.
நாம் ஏன் இவ்வளவு தூரம் ஒருவருக்கொருவர்
இருப்பதைக் காட்ட இவ்வளவு மெனக்கெடுகிறோம்.
அன்பே
துயரங்கள் நிறைந்த காபியை
நானுனக்கு அளித்த போது
நீ எதுவுமே சொல்லாமல் குடித்துவிட்டாய்.
துயரங்கள் நிறைந்த சிகரெட்டை
நீ எனக்கு அளித்த போது
என்னால் உன்னைப்போல அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உன்னைப்போல என்னால் எதுவுமே முடியாத போதுதான்
பனித்துளிகள் உறங்கும் பூவை உனக்குப் பரிசளித்தேன்.
அகாலத்திற்கு என்னை நானாகப் பரிசளித்தேன்.
இன்னும் ஒரு க்ளாஸ் ஒயினிற்காக
ஈராயிரம் நூற்றாண்டுகளாக சேர்ந்து எரிகிறது சூரியன்.
சூரியனிலிருந்து எழுகிறது
இரு உடல்கள் இரு க்ளாஸ்கள்
சியர்ஸ் சொல்லிக்கொள்ளும் நிசப்த ஒலி