காதல் என்று வந்தபிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருக்கிறேன். சாதாரணமான நாட்களில், இதில் ஒருநாள் பொழுது தவறியதில்லை. இடையில் மருத்துவமனையில் இருந்துவிட்டு வெளியே வந்தபிறகு  மட்டும், பத்து நாட்கள் குடிக்கவில்லை. மற்றபடி எல்லா நாட்களுமே விடாமல் குடித்திருக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் இவ்வாறு குடிக்கிற அளவிற்கு உடலில் தெம்பும் இருந்தது.

அதற்காக மொடாக்குடி என்றில்லை. தினமும் ஒரு குவாட்டர் மட்டுமே, அதுவும் சிக்னேச்சர் விஸ்கி மட்டுமே. எந்தெந்த நாட்களில் கடைக்கு விடுமுறை என்பதை விரல் நுனியில் வைத்திருப்பேன். அதற்கு முந்தைய தினமே போய் அடுத்த நாளைக்கும் சேர்த்து வாங்கி வைத்து விடுவேன்.

நகரத்தில் திடீரென விஸ்கிக்குத் தட்டுப்பாடு வந்தது. “உங்களை மாதிரி விடாப்பிடியா சிலர் மட்டும்தான் விஸ்கி குடிக்கிறீங்க. ஆனா பெரும்பாலும் பிராந்திதான் நல்லா போகுது. எதுக்காக நம்ம மக்களுக்கு பிராந்தி பிடிச்சுப் போச்சுன்னு தெரியலை. இப்ப புதுசா ஒண்ணு சொல்றாங்க. சுகர் இருக்கறவங்க விஸ்கி குடிக்கக் கூடாதாம். அதான் கம்பெனிக்காரனே கம்மியா சேல்ஸூக்கு அனுப்பறான். மத்த மாநிலங்கள்ல என்ன நிலைமைன்னு எனக்குத் தெரியலை” என்றார் வழக்கமாக நான் போகும் கடைக்காரர். அதனால் மொத்தமாக இருபது குவார்ட்டர் என்கிற மாதிரி வாங்கி என்னுடைய அலுவலகத்தில் பதுக்கி வைத்து விடுவேன்.

வீட்டுக்குக் கிளம்புகையில் என்னுடைய கடையில் வேலை பார்க்கும் பையன், அதிலிருந்து ஒரு குவார்ட்டரை எடுத்துக் காரில் வைத்து விடுவான். பத்தாயத்தில் அரிசி தீர்கிற மாதிரி அவனது கண்ணிற்குத் தட்டுப்பட்டால், என்னிடம் முன்கூட்டியே சொல்லி விடுவான். முதல்தடவை அவன் அப்படிச் செய்த போது, இரண்டு குவார்ட்டர் பாட்டில்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, “திடீர்னு எக்சசா அடிக்கணும்னு தோணுச்சுன்னா என்ன பண்றது? அதான்” என்றான்.

உடனே ஒரு குவார்ட்டரை எடுத்துப் போகச் சொல்லி விட்டு, “இங்க பாரு. கோடி ரூபா குடுத்தாலும் ஒரு குவார்ட்டருக்கு மேல குடிக்க மாட்டேன். அதிலயும் சிக்னேச்சர் இல்லாட்டி தொடவே மாட்டேன்” என்றேன். “ஒருவேளை அந்த கம்பெனிக்காரனே இல்லாம போயிட்டா?” என்றான். “டேய், அது எப்பேர்ப்பட்ட கம்பெனி தெரியுமா? அதுக்குன்னு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கறது அவனுகளுக்கு தெரியாதா? ஒருவேளை அப்படி சிக்னேச்சரை இழுத்து மூடிட்டா குடிக்கிறதைக்கூட ஒருவேளை நான் விட்டிருவேன்” என்றேன்.

வீட்டுக்குப் போவதற்கு முன்பு காரை பார்க்கிங் பகுதிக்கு அடியில் நிறுத்தி, பாடலை ஒலிக்கவிட்டு, குடித்து முடித்து விட்டு மேலே போவேன். அந்தக் குடித்து முடிக்கிற ஒருமணி நேரம்தான் எனக்கானது. அந்த நேரத்தில்தான் ஊரில் குடும்பக் காரியங்களைப் பேசிக் கொள்வேன். மேலே போய்விட்டால் லாவண்யாவின் முன்னால் வைத்து அதையெல்லாம் பேச முடியாது.

ஒருவேளை லாவண்யாவுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என முடிவு எடுத்து விட்டால், மேலே போய் அதை முடித்து விட்டுக் கீழே வந்து குடித்து விடுவேன். அவளுக்கு ரொமான்ஸ் ஆசை இருந்தால், சாயந்திரம் போலவே அதை வெளிப்படுத்தி விடுவாள். “எப்ப வருவ? சும்மாத்தான் கூப்பிட்டேன்” என்பாள். அந்தச் சும்மாத்தானில்தான் சங்கதி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வேன். மேலே போய்த் தணிந்த பிறகு கீழே வந்துவிடுவேன்.

அவளுக்குமே என்னுடைய இந்த வகையிலான போக்குவரத்து தெரியும் என்றாலும், போதையை முகத்தில் கூடக் காட்டாமல் பதவிசாக நடந்து கொள்வதில் சமாதானம் ஆகிவிட்டாள். பொதுவாகவே திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே, ஒருத்தரின் பழக்க வழக்கங்களை அடியோடு மாற்ற முடியாது என்கிற புரிதலுக்கு இரண்டு தரப்புமே வந்து சேர்ந்து விடும். அவளுடைய அம்மாவோடு அவள் தினமும் இரவு ஒருமணி நேரம் பேசும் புரணி எனக்குப் பிடிக்காது, ஆனாலும் பொறுத்துக் கொள்கிறேன்தானே?

இரண்டுமூன்று முறை அதைச் சொல்லிப் பார்த்தேன். “நீ கீழ காருக்குள்ள உக்காந்துகிட்டு உங்கம்மாட்டயும் அப்பாட்டயும் பேசறீயே. அதுவும் பொரணிதான். எங்களுக்கு சந்தோஷமா இருக்கு. அது உனக்கு உறுத்துதா? உன் குடும்பத்தைப் பத்தி ஒருவார்த்தை கேட்கிறேனா? நீ மட்டும் எதுக்கு மூக்கை நுழைக்கிற?” என்பாள்.

லாவண்யா எங்களது குடும்பக் கதையைப் பற்றிக் கேட்பதை நிறுத்தி ஏழு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பேசினாலே குழந்தையைப் பற்றிக் கேட்கிறார்கள் என்பது முக்கியமான காரணம். “நல்லா யோசிச்சுப் பாத்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் இடையில சண்டையே வர்றது இல்லை. உங்க்க் குடும்பக் கதையாலதான் சண்டை வருது. இனிமே நானும் கேட்கலை. நீயும் சொல்லாத” என்றாள் ஒருநாள். நல்லவேளையாகப் போயிற்று என அதற்கடுத்து சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.

அதற்கு முன்வரையெல்லாம் என் தொலைபேசியைப் பார்த்து விட்டு, எதற்காக அழைத்தார்கள் எனக் கேட்டுத் தொந்தரவு செய்து, அதிலிருந்து அவளுக்குத் தோதான விஷயத்தை எடுத்துக் கொண்டு சண்டையைத் துவக்கி விடுவாள். யார் பொறுப்பிலும் இல்லாமல் அதுபாட்டிற்கு அதுவாகவே துவங்கி விடும் என்பதுதான் உண்மை.

ஆனால், அந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு சிக்கலே ஏற்படவில்லை. எங்களது குடும்பத்தில் ஏதாவது சண்டை, சச்சரவுகள், விசேஷம், செய்முறை என்று வந்தால் மட்டும் ரொட்டியைத் தின்பதைப் போலப் பிய்த்துப் பிய்த்துச் சொல்வேன். அப்போதும் சண்டை வரும்தான். ஆனால் அந்தச் சண்டையில் உப்புசப்பு மட்டுப்பட்டிருப்பதை உணர்ந்தேன். தினமும் பயன்படுத்துகையில்தான் கத்தி கூர்மையாகிறது இந்த விஷயத்தில்.

இத்தனை வருடங்களில் அந்த ஒரு மணி நேரத்தை அவள் களவாட நினைத்து, ஒருதடவைகூடக் கீழே இறங்கிக் கார் பக்கம் வந்ததே இல்லை. எங்களுடைய பால்கனியில் நின்று பார்த்தால் நான் கார் நிறுத்தி இருப்பது தெரியும். அங்கே வந்து நின்றுகூட அவள் பார்த்தது இல்லை. அந்த ஒப்பந்தம் என்னுடைய அந்த ஒரு மணிநேரத்தைப் பாதுகாப்பானதாகப் பதுக்கி வைத்து இருந்தது.

அன்று மாலையில் இருந்து அப்பா இரண்டு மூன்று தடவை அழைத்து விட்டார். தொடர்ச்சியாக இரண்டாவது முறை அழைத்தால்தான் அவசரம் எனக் கருதி தொலைபேசியை எடுப்பேன். ஒரு அழைப்பிற்கும் அடுத்த அழைப்பிற்கும் இடையில் ஒரு மணிநேரம், இரண்டுமணி நேரம் என இடைவெளி இருந்தால், ஏதோ குறுகுறுப்பாய்ச் சொல்ல அழைக்கிறார் என்று அர்த்தம். ஊரிலிருந்து சொல்வதற்கென கதையை வைத்துக் கொண்டு, தேன்சிட்டு சிறகடித்துத் துடிப்பதைப் போல, வெகுபாடு பட்டுக் கொண்டிருப்பார்.

எனக்குமே அது தெரியும் என்பதால், கொஞ்சம் குடித்தவுடன் ஏற்படுகிற மதமதப்பின் போது மட்டுமே திருப்பி அழைப்பேன். லகுவானதாக மனம் மாறி சரளமான பேச்சு அப்படியான சமயங்களில்தான் எனக்கு ஊற்றெடுக்கும். குடித்திருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் பேசுவேன். அவருமே அதைத் தெரிந்து கொண்டு நீக்குபோக்காகப் பேசுவார். அப்பாவைத் திருப்பி அழைத்த போது, “என்னப்பா சீக்கிரம் திருப்பி கூப்ட மாட்டீயா? வேலையில இருப்பீயேன்னுதான் மறுக்கா கூப்பிடலை” என்றார். அவர் உச்சகட்ட படபடப்பில் இருப்பது தெரிந்தது.

“இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றதுன்னு தெரியலை. உங்க லலிதா சித்தியை பத்தித்தான். ஊரே நாறுது. உஞ்சித்தப்பன் செத்த பெறகுல இருந்து அவ போக்கே சரியில்லை. அரசல் புரசலா சொன்னாங்கப்பா. நான் அப்ப நம்பலை. அதான் உண்ட்ட அப்ப சொல்லலை. பூராமும் ஆம்பிளை சகவாசம். குத்தாலத்துக்குப் போறேங்கறாளாம். கொடைக்கானலுக்குப் போறேங்கறாளாம். ஏதோ சும்மா சொல்றாங்கன்னு நினைச்சேன். இங்க இன்னைக்குக் காலையில வந்து நின்னாப்பா. வந்ததில் இருந்தே மப்பா பேசிக்கிட்டு இருந்தா. நானும் உங்கம்மாவாச்சு அவளாச்சுன்னு பேசாம இருந்தேன். திடீர்னு சத்தம் வரலை என்னன்னு போயி பார்த்தா அடுப்படிக்குள்ள நின்னு ஒரு பாட்டிலை வச்சு குடிச்சுக்கிட்டு இருக்காப்பா. பச்சை கலரு சப்பட்டை பாட்டிலு. எனக்கு திக்குனு ஆயிருச்சு” எனச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினார்.

“என்ன பாட்டிலுன்னு சொன்னீங்க” என்றேன். “பச்சைக் கலருப்பா. சப்பட்டையா பாட்டில் அழகா அம்சமா இருக்கு. நான் என்னைக்கு குடிச்சிருக்கேன். பேரெல்லாம் எனக்கு தெரியலை. என்னைப் பார்த்ததும் கட்டைப் பையிக்குள்ள சட்டுனு ஒளிச்சுக்கிட்டா. எனக்கே இப்டீ திக்குனு இருந்தா உனக்கு எப்டீ இருக்கும்?” என்றார்.

எனக்குமே அதைக் கேட்டதும் திக்கெனத்தான் இருந்தது. நான் பிறந்த போது, லலிதா சித்தி தாத்தாவின் வீட்டில் திருமணம் ஆகாமல் இருந்தாள். எங்கம்மாவின் மடியிலிருந்ததைவிட, அவளிடமே அதிகமும் புரண்ட ஞாபகம் எனக்குள் இருக்கிறது. நான் மூன்றாம் வகுப்புப் படிக்கையில்தான் அவளுக்குக் கல்யாணம் ஆனது. அதற்கு முன்வரை அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு ஊருக்குப் போகையில் எல்லாம், பந்தொன்றைப் போல அவளது மடியில்தான் போடுவாள். அதற்குப் பிறகு திரும்பி வருகிறவரை அங்கேதான் உருண்டு கிடப்பேன்.

என்னுடைய அம்மாவின் மடிச்சூட்டைவிட சித்தியினுடையதே எனக்குக் கதகதப்பாக இருக்கும். “இப்படியே விட்டா இந்தப் பிள்ளையிலயே அவ சுகம் கண்டிருவா. சீக்கிரம் அவளுக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பன்ணி வச்சிருங்கப்பா” என்று சொல்லி இருக்கிறார் மணி தாத்தா. ஆரம்பத்தில் திருமணம் வேண்டவே வேண்டாம் எனத்தான் மறுத்து இருக்கிறாள் சித்தி. அவளது விருப்பத்தை மீறித்தான் அவளைக் கட்டி வைத்தனர்.

இத்தனைக்கும் திருமணம் வரை அந்த வீட்டின் படியைக் கூடத் தாண்டியதில்லை அவள். அன்னியத்தில்தான் கட்டிக் கொடுத்தார்கள் அவளை. தாத்தா இருக்கிற வரை வந்து நின்று, “சீக்கிரம் போய்த் தொலைஞ்சா சரின்னு தலையை முழுகிட்டீங்க. அவனோட என்னால ஓடியாட முடியலை. தினமும் குடிக்கிறான். எந்நேரமும் போதையிலயே தலைதாழ்ந்து கெடக்கிறவனுக்கு எதுக்குப் பொண்டாட்டி? என் வாழ்க்கை கெட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு. நான் செத்தாலும் அந்தப் பாவம் உங்களைத்தான் சேரும்” என வீட்டு வாசலில் வந்து நின்று அழுது கொண்டிருப்பாள்.

தாத்தா செத்த பிறகு தனியாக இருந்த அம்மாத்தாவிடம் போய் நின்றாள். அம்மாத்தா செத்த பிறகு எங்களது வீட்டைப் பிடித்துக் கொண்டாள். அடிக்கடி கிளம்பி வந்து, “என் வாழ்க்கை கெட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு. நான் செத்தாலும் அந்தப் பாவம் உங்களைத்தான் சேரும். ஆனா உங்ககூட இருக்க என் பிள்ளையைப் போய் சேராது” என்பாள்.

அவளுக்குக் குடும்பத்தில் இருந்த அத்தனை பேர் மீதும் வன்மமும் கோபமும் வெடிக்கக் காத்திருக்கிற கடுகைப் போல இருந்தது. ஆனால் காரம்கூடிய அந்த அஞ்சறைப் பெட்டிக்குள் என்னை மட்டும் வைக்கவே இல்லை. இந்த மாதிரி வாசலில் வந்து நிற்கிற சமயங்களில் என்னை மட்டும் அழைத்துக் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருப்பாள். பையிலிருந்து காசை எடுத்துக் கொடுத்துவிட்டு, “என் ராசால்ல, நீ போய் சீனிமிட்டாய் வாங்கிட்டு வா. அதுக்குள்ள அப்பா அம்மாட்ட ஒரு ரகசியம் பேசி முடிச்சிர்றேன். ஆம்பளைப் பிள்ளை அதை கேட்டா மாடு வந்து முட்டும்” என்பாள்.

சிறுவயதில் அதெல்லாம் எனக்குப் புரியாது. டுர்ரென சத்தம் போட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு சீனிச் சேவு வாங்கப் போய் விடுவேன். கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் அவளது அந்தச் சாபமும் ரகசியமும் எனக்குத் தெரிய வந்தது. தாத்தாவும் அம்மாத்தாவும் செத்தபிறகு சித்தி இருக்கிற திசைப்பக்கமே என்னை வீட்டில் விடவில்லை.

என்னைப் பார்க்க வேண்டும் என்பதைச் சாக்காக வைத்துக் கொண்டு, எப்போதாவது வீட்டிற்குக் கிளம்பி வந்து விடுவாள். வீட்டுக்குள் ஏறி, எவ்வளவு அழைத்தாலும் கை நனைப்பதில்லை. அவளது வைராக்கியத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். ஊரில் சித்தியைப் பற்றிய கதைகளைத் தொலைபேசி செய்து கேட்பேன்.

நான் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்து இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டு, ஒருதடவை வந்து நின்றவளிடம், “ஏன் சித்தி சாபம் விடறீங்க. அவங்க என்ன பண்ணுவாங்க. உங்க வாழ்க்கை கெட்டதுக்கு அவங்க எப்டீ பொறுப்பாளி ஆவாங்க. நீங்க பேசாம நான் படிச்சு முடிச்சதும் என்கூட மெட்ராஸ் வந்திருங்க” என்றேன் பாசமாக. அந்தத் தடவை மட்டும், “ராசா என் ஆத்தாமை அது. எங்க இறக்கி வைக்கிறதுன்னு தெரியாம செய்றேன்” என்று சொல்லிவிட்டு, நூறு ரூபாயை எடுத்து என்கையில் திணித்துவிட்டுக் கிளம்பிப் போனாள்.

கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது சித்தப்பா செத்துவிட்டதாகச் செய்தி வந்தது. குழந்தையில்லை என்பதற்காக நான்தான் கொள்ளி போட வேண்டும் என்று சொல்லி உடனடியாக அழைத்துக் கொண்டு கிளம்பிப் போனார்கள். எனக்குப் போக விருப்பமே இல்லை. சித்தப்பாவைப் பற்றிய நினைவுகள் எதுவுமே என்னுள் இல்லை என்பது ஒருகாரணமாக இருந்தாலும், சித்தியைச் சித்திரவதை செய்த நபர் என்பது நெஞ்சில் ஆழமாகப் பதிந்து இருந்தது.

தெரு வாசலில் பந்தல் போட்டு சித்தப்பாவைக் கிடத்தி இருந்தார்கள். அமைதியான மனுஷனாகத் தெரிந்தார் பிணமாகப் பார்க்கையில். ஊரில் உள்ள மற்ற பொம்பளையாட்கள் எல்லாம் சித்தப்பாவின் பிணத்திற்கு முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர். சித்தி மட்டும் எட்டு படிகள் ஏறி உள்ளே போகும் அமைப்பில் இருந்த அந்த வாசலில் உச்சாணியில் அழாமல், முழங்கால் வரை சேலையைத் தூக்கிவிட்டு உள்பாவாடை தெரிகிற மாதிரி, அமைதியாக அமர்ந்திருந்தாள். “புருஷனைச் சாகக் குடுத்திட்டு உங்காந்திருக்க சைஸைப் பாரு” என்றாள் அம்மா நுழைந்ததுமே.

அங்குள்ள புரோகிதர்கள் சாங்கியங்களை என்னை வைத்துச் செய்து கொண்டிருந்த போது, மேலே படியில் அமர்ந்திருந்த அவள், ஆங்காரமான குரலில், “எம்புள்ளையைக் கொண்டு போய் மொட்டை மட்டும் போட்டீங்கன்னு வைய்யி, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்றாள். “லலிதா அப்டீலாம் சாங்கியத்தை மீறி செய்ய முடியாதும்மா. செத்த பொணத்து மேல எதுக்கு வெறுப்ப கக்குகிற” என்றார் மணி தாத்தா. அவர் சொன்னால் அவள் ஓரளவிற்குக் கேட்டுக் கொள்வாள் என்பதால், அவருக்கு மட்டுமே அங்கே பேசத் தைரியமும் இருந்தது.

“சித்தப்பா, அவன் என்னோட புள்ளை. அந்தாளோடது இல்லை. எனக்குக் கொள்ளி வைக்கிற அன்னைக்கு அவன் போட்டுக்கட்டும்” என்றாள் குரல் தணிந்து.

”இருந்தாலும் அப்டீ செய்ய முடியாது லலிதா” என்று தாத்தா பேசத் துவங்கியதுமே, எழுந்து நின்ற அவள் கூந்தலை முடிந்து, “அவன் தலையில கையை வைச்சா நான் தீக்குளிச்சுக்குவேன்” என்றாள். அவள் சொன்னால் செய்வாள் என்பது ஊருக்கே தெரியும் என்று பேசிக் கொண்டார்கள்.

வேறு வழியில்லாமல் சித்தப்பா வழியில், தூரத்துச் சொந்தத்தில் இன்னொரு பையனைப் பிடித்து என்னையும் அருகில் வைத்துக் கொண்டு சாவுக் காரியங்களைச் செய்தார்கள். அதற்கு முன், “இப்ப டவுணு பக்கம் எல்லாம் இது சாதாரணம்ப்பா. லைட்டா கையில மட்டும் சிரைச்சுக்குறாங்களாம். மொட்டை போட்டுட்டு வேலை பார்க்குற இடத்தில நடமாடக் கூச்சமா இருக்கும் இல்லையா? இப்ப போலீஸ்ல வேலை பாக்கிறவங்க மலைக்கு மாலை போட்டா ஷூ போட்டுக்குறாங்கள்ல. அந்த மாதிரி செஞ்சு விட்டிருவோம்” என்றார் தியாகலிங்கம் மாமா. அவர் இந்த மாதிரி திருகு வேலைகளில் கைதேர்ந்தவர்.

“எம்பிள்ளை சாங்கியத்தை முழுசா செஞ்சா செய்யட்டும். இல்லாட்டி பழி பாவம் அவன் வம்சம் முழுக்க தொடர்ந்திரும். நாங்களே ஊருக்குக் கட்டுப்பட்டு இந்த எழவுக்கே வந்து நிக்கோம்” என்றாள் அம்மா. அதன்படியேதான் இன்னொரு பையனை அழைத்துக் கொண்டு வந்தார்கள். நானுமே கூட நின்று நீர்மாலை தூக்கிக் கொண்டு போனேன். கொள்ளியை அவன்தான் வைத்தான்.

இடுகாட்டில் இருந்து திரும்பியதுமே, சித்தி என்னை அருகில் அழைத்து அவள் மடியில் என்னுடைய கையை எடுத்துப் போட்டுக் கொண்டமர்ந்து, என் உடலெங்கும் மேய்ந்தாள். கழுத்தின் பின்புறம் திருப்பிப் பார்த்தாள். எங்கேயாவது சிரைத்து விட்டிருக்கிறார்களா என்பதைத்தான் பரிசோதித்தாள் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னிடம் ஏதாவது பேசுவாள் என எதிர்பார்த்தேன். எனக்குமே சாவின் போது, தொலையக் கொடுத்தவர்களிடம் எப்படி எதிர்வினையாற்றுவது என்பது தெரியாமல் இருந்தேன்.

அவள் மடியில் எடுத்துப் போட்டுக் கொண்ட கையை விலக்கவே இல்லை. உள்ளே வந்த மணி தாத்தா, “காலேஜ் படிக்கிற வயசிலயும் மடியில பிடிச்சு வச்சுக்குவீயா. போடா அந்தப் பக்கம் எந்திரிச்சு” என்றார். எனக்கே அதைக் கேட்டவுடன் வெட்கமாகப் போய் விட்டது. எழுவதற்கு முயற்சி செய்த போது மட்டும், “அவன் கெடக்குறான் கெழட்டு பய. என் பிள்ளைதானே நீ” என்றாள்.

இதைக் கேட்டதும் அம்மா ஒருவித பாதுகாப்பற்ற மனநிலைக்குப் போய்விட்டாள் என்பது தூரத்தில் இருந்து பார்க்கையிலேயே தெரிந்தது. உடனே கிளம்ப வேண்டும் என அப்பாவை நச்சரிக்கத் துவங்கினாள். இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சித்தி, “நீ கிளம்பு ராசா. நீ தலையெடுத்து வர்ற வரைக்கும் உனக்காக சித்தி காத்திருப்பேன்” என்றாள் கடைசியாக. அதற்கு அடுத்து சித்தியைப் பார்க்கப் போக எனக்குச் சமயம் அமையவே இல்லை.

என் வீட்டாரோடு பேசுகையில் அவளைப் பற்றி விசாரித்தால், “அவ சங்காத்தமே வேண்டாம்னு ஒதுங்கிட்டோம். நீயும் வச்சுக்காத. இப்ப ஆளு சரியில்லை. அவன் வட்டிக்குப் பணம் குடுத்து வச்சிருப்பான் போல. அந்தக் காசை வச்சுக்கிட்டு ஊருக்குள்ள வட்டிக்காரன்கள் சிலரைப் பிடிச்சு வச்சு ஆட்டமா ஆடிக்கிட்டு இருக்கா. வாயில நல்ல சொல்லே இல்லை. நம்ம மக்கமாருகிட்டயும் அவளுக்கு மரியாதையும் இல்லை. கொடைக்கு பங்கு காசு வாங்கறதைக்கூட நிறுத்திட்டாங்களாம்” என்றாள் அம்மா.

அம்மா சித்தியைப் பற்றிப் பேசினால் அப்படியே எடுத்துக் கொள்ள மாட்டேன். சித்தி புளிக் குழம்பு வைத்தால் மட்டும், புளியை அளவுக்கு அதிகமாகவே கலந்து விடுவாள் அம்மா. வாயில் வைக்க முடியாது அந்தக் குழம்பை, பற்களே கூசும். ஆனால் அப்பா அப்படியில்லை. கொஞ்சம் வெளியில் நின்று நடுவாந்திரமாகப் பேசுவார். அவரே, “கொஞ்ச காலம் ஆகட்டும்பா. இப்ப நெலவரம் சரியில்லை. அவளுக்குமே அஷ்டமச் சனி நடக்குது. ஊர் உலகத்துக்கிட்ட இருந்து தன்னைத்தானே பிரிச்சுக்கிற காலம் இது. நாம ஒண்ணும் செய்ய முடியாது” என்றார்.

அதற்குப் பிறகு குடும்பத்திடம் அல்லாமல், சித்தியின் ஊரில் இருந்த ரகுபதி மாமாவிடம் அவளைப் பற்றிய கதைகளை விசாரித்துக் கொள்வேன். என்னைவிட அதிகம் போனால் நான்கு வயதே மூத்தவர். ஆனாலும் மாமா என்கிற மரியாதையை அவரிடம் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். ஓரளவிற்கு சம வயது என்பதால், கொஞ்சம் வெளிப்படையாகவே பேசிக் கொள்வோம்.

சித்தப்பா உயிரோடு இருந்த காலத்தில் பழக்கமானவர்கள் அந்த வட்டிக்காரர்கள். பணத்தை அவர்களிடம் கொடுத்து மற்றவர்களுக்கு வட்டிக்கு விட்டுக் கொண்டிருந்தார். ஊரில் தாட்டியமான ஆட்கள் என்பதால், அவர்கள்தான் இந்த வேலைக்குச் சரிப்பட்டும் வருவார்கள். சித்தப்பாவிடம் ஐந்து வட்டிக்கு வாங்கி அவர்கள் பிறருக்குப் பத்து வட்டிக்குத் தருவார்கள்.

அவர்கள் இருப்பதால் பணம் தொலைந்து போகாமல் இருப்பதற்கான உத்தரவாதம் இருந்தது. அதைப் போல முறையாக ஐந்து வட்டியைச் சரியாகத் தந்துவிடுவார்கள். இப்போது சித்தி அந்தக் குழுவினரோடுதான் ஒட்டுறவோடு அலைகிறாள் என்று சொன்னார் ரகுபதி மாமா.

“எங்க வீட்டில எல்லாம் தப்பா சொல்றாங்களே மாமா” என்றதற்கு, “கூட்டிக் குறைச்சு சொல்றது மனுஷங்களோட இயல்புதான மாப்பிள்ளை. நீ கண்ணால பாத்தீயா? தொழில் பார்க்க தெருவிற்கு இறங்குற பொண்ணுங்க எல்லாம் அப்படி செஞ்சிருவாங்களா? அதெல்லாம் நீ ஒண்ணும் மனசில ஏத்திக்காத. நான் போறப்ப எல்லாம் உன்னைப் பத்தி உன் சித்தி விசாரிக்கும். பேசறீங்களான்னு கேட்டா, அவனா தலையெடுத்த பிறகு வந்து பார்க்கட்டும். அவனா வர்ற வரைக்கும் நானா வர மாட்டேன்னு அவனுக்கு நல்லா தெரியும்னு சொல்லிருச்சு” என்றார் மாமா.

தீக்குளிப்பேன் எனச் சொன்னவள் ஆயிற்றே? மாமா சொன்ன பிறகு அவளது கடைசிச் சந்திப்பைப் பற்றிப் பின்னோக்கிப் போய் யோசித்துப் பார்த்தேன். “உனக்காகக் காத்திருப்பேன்” என்கிற வார்த்தையை அவள் அழுத்தம் திருத்தமாக உச்சரித்திருந்தாள். எனக்குப் போகக் கூடாது என்கிற எண்ணமெல்லாம் கிடையாது. வீட்டிற்குத் தெரியாமல் போகிற சந்தர்ப்பம் சத்தியமாக அமைந்து வரவில்லை.

படித்து முடித்ததுமே வேலை, அதற்குப் பிறகு தனித் தொழில் என மும்முரமாக அலைந்தேன். என்னுடையது காதல் கலப்புத் திருமணம். லாவண்யாவின் வீடு எங்களைவிட வசதியானது. “லலிதாவைக் கூப்டா நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன். பெத்தவளை அத்துவிட்டுட்டுக் கூப்டணும்னா கூப்பிட்டுக்கோ. அவ வந்தான்னா நிச்சயமா உங்க மாமனார் வீட்டில உன்னை அசிங்கப்படுத்திருவா. வேண்டாம்டா, நல்லா இருப்ப என் பேச்சை கேளு” என அம்மா விடாமல் ஒப்பாரி வைத்தாள்.

திருமணத்திற்கான நாள் நெருங்கும் போது சமாதானப்படுத்தி அழைத்துக் கொள்ளலாம் எனத்தான் நினைத்து இருந்தேன். மணி தாத்தாவும் அம்மாவோடு சேர்ந்து கொண்டார். “ரெண்டும் என் புள்ளைகதான். ஆனால் உங்காத்தாளுக்கு மனசு விலகிக்கிருச்சு. நாம வற்புறுத்த முடியாது. அம்மாவா லலிதாவான்னு பார்த்தா நீ அம்மா பக்கம் நிக்கறதுதான் ஞாயம்” என்றார். என்னால் யார் பேச்சையும் மீறவே முடியாத இக்கட்டில் இருந்தேன்.

ஏற்கனவே காதல் திருமணம் என்பதால், இரண்டு பக்கக் குடும்பங்களிலும் சூடு பரவித் தணிந்துதான் திருமணமே நிச்சயமானது. மேலும் புதிய குழப்பங்கள் வந்துவிடக் கூடாது என நானும் இயைந்து போகிற நிலை வந்துவிட்டது. ரகுபதி மாமாவிடம், “என்ன பண்றதுன்னே தெரியலை. சித்தி எப்படி எடுத்துக்கும் இதை?” என்றேன்.

அவர் சித்தியிடம் பேசி விட்டு, “அதெல்லாம் எங்க இருந்தாலும் என் வாழ்த்து என் பையனுக்கு உண்டு. ஒட்டு மொத்த குடும்பத்திலும் அவன் மட்டும்தான் எனக்கு கணக்கு. அவன் மட்டும் தோணறப்ப என்னைப் பார்க்க வந்தா போதும்” என்று சித்தி சொல்லியதாகச் சொன்னார். அரை மனத்தோடு மணமேடையில் அமர்ந்தேன்.

தாலி கட்டித் தனிக்குடித்தனத்திற்குப் புகுந்த அன்றைக்கு இரவு லாவண்யா என்னிடம், “உன் சித்தி பக்கம் நீ நின்னுருக்கணும். அவங்கதான் உன் அம்மா மாதிரி மனசால உன்னை நினைக்குறாங்க. எனக்கே அவங்களைப் பார்க்கணும்னு தோணுது” என்றாள். வந்தவுடனேயே மாமியார் மருமகள் சண்டையை அவள் துவங்கி விட்டாளே என எரிச்சலும் வந்தது எனக்கு. அதற்குப் பிறகு என்னுடைய சித்தி பற்றிய கதைகளை அவளிடம் முழுமையாகச் சொல்லாமல் தவிர்ப்பேன். “ஆமா, உன் சித்தி எப்டீ இருக்காங்க. ஒண்ணுமே பேச்சைக் காணோம்” என்பாள் எப்போதாவது. “ஏன்  நல்லாத்தான் இருக்காங்களாம். ரகுபதி மாமா சொன்னார்” என்பேன் பட்டும்படாமல்.

அவளைப் போய்ப் பார்க்காவிட்டாலும், சித்தி குறித்த கதைகளோடு கதகதப்பாய் இருப்பேன். அவளது மடிச்சூடு எப்போதும் என் நினைவில் இருக்கும். ரகுபதி மாமாவின் சொற்கள் வழியாகச் சித்தியைக் குறித்த நல்ல சித்திரங்களே எனக்குக் கிடைத்தன. ”ஒருதடவை வந்து பாத்திட்டுப் போயிரு மாப்பிள்ளை. அவங்க மனசும் சமாதானம் ஆயிரும். உன்னை மட்டும்தான் நினைச்சுக்கிட்டே இருக்காங்க” என்றார். நானுமே ஒருநாள் கிளம்பி வருவதாக வாக்களித்தும் இருந்தேன்.

சித்தி ஒரு நிறைவேற்ற முடியாத வேண்டுதலைப் போல என்னுள் தொடர்ந்தாள். அது எங்கப்பாவிற்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் அவளைப் பற்றிய இப்போதைய சித்திரத்தைத் தீட்டியபோதுகூட, “எனக்கே இப்டீ இருந்தா உனக்கு எப்டீ திக்குனு இருக்கும்” என்று சொன்னார். அப்பாவின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தாலும், ஏதோ நெருடியது. தம்ளரைப் பிடிக்கக் கூட முடியாதளவிற்கு கைகள் நடுங்குவதை நானே பார்த்தேன்.

நிறைய யோசித்து விட்டுத்தான் ரகுபதி மாமாவை அழைத்து, “மாமா பயங்கர மன அழுத்தத்தில இருக்கேன். சித்தியைப் பத்தி எங்க அப்பா சொல்றது உண்மையா? நேர்மையா பதில் சொல்லுங்க” என்றேன். “ஆமா மாப்பிள்ளை, லேசா உண்மை இருக்கற மாதிரிதான் தெரியுது. எண்ட்ட இப்ப அவங்க பேசறதை நிறுத்திக்கிட்டாங்க. இல்லாட்டி ரெண்டு நாளைக்கு ஒருதடவை என் வீட்டுக்கு என்னைப் பார்க்க வருவாங்க. எங்கம்மா உங்க சித்திக்கு நல்ல ப்ரெண்டுதான். ஆனா அதுவே கடைசியா வந்த அன்னைக்கு, ‘லலிதா வீட்டுக்கு வர்றதை நிறுத்திக்கோன்னு’ சொல்லிட்டாங்க” என்றார்.

நமக்கேன் என ஒதுங்கிப் போகலாம்தான். ஆனால், என்னால் அப்படி இருக்கவே முடியவில்லை. அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து மனதிலேறிய பாரம் இறங்கவே இல்லை. சித்தியைப் பற்றி மட்டுமே மறுபடி மறுபடி யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்தில் படுத்த வாக்கில் கிடந்த அந்தச் சப்பட்டை பாட்டிலைப் பார்த்தேன். என்னையறியாமலேயே அழுது கொண்டிருந்தேன். அப்போதுதான் அவ்வளவு நேரமாகியும் மேலே வராததால், இறங்கி வந்து காரின் கண்ணாடிக்கு அந்தப் பக்கத்தில் நின்று தட்டினாள் லாவண்யா. நீண்ட கனவொன்றில் இருந்து திடுக்கிட்டு விழித்தேன்.

மேலே போகையில் ஒன்றும் கேட்கவில்லை அவள். வீட்டினுள் நுழைந்து அமைதியற்று குட்டி போடக் காத்திருக்கும் பூனையைப் போல, நான் அலைந்ததைப் பார்த்துவிட்டு, “என்னாச்சு, என்ன பிரச்சினை? அழுதிருக்க போல” என்றாள். ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றேன். பக்கத்தில் வந்து நின்று என் தோளைத் தொட்டாள். “எங்க சித்தி குடிக்குதாம்” எனப் பலகீனமாகச் சொன்னேன்.

“ஏன் குடிச்சா என்ன தப்பு? நான் கூடத்தான் உன்னோட கொடைக்கானல் வந்தப்ப குடிச்சேன். நீதானே குடி குடின்னு வற்புறுத்தி குடிக்க வச்ச. அப்ப தப்பா தெரியலையா உனக்கு?” என்றாள். அவள் கேட்டது மிகச் சரியான கிடுக்கிப் பிடியாக இருந்தது. ஆனால் அதைமீறிய ஒன்றிற்காகவே நானழுதேன் என்பதை அவளிடம் எப்படிச் சொல்வது எனத் தெரியாமல், “இல்லை வேற மாதிரி தப்பாவும் சொல்றாங்க” என்றேன்.

“நீ பாத்தியா? உங்க குடும்பத்தில அவங்களை வாழவே விடமாட்டீங்களா? ஒட்டும் உறவும் வேண்டாம்ங்கறீங்க. ஆனா நெதமும் அவங்களைப் பத்தித்தான் பேச்சு. இன்னைக்குக் கூடுதலா குடிச்சிட்டீயா என்ன? ஒழுங்கா போய்ப் படு. முடிஞ்சா அவங்களைப் போய் பாத்திட்டு வா” என்று ஆறுதலாகச் சொன்னாள்.

சாப்பிடக் கூட இல்லாமல் உடனே போய்ப் படுக்கையில் விழுந்தேன். நள்ளிரவில் அந்தக் கனவு வந்தது எனக்கு. படுக்கையொன்றில் சாய்ந்தபடி சித்தியும் முகம் தெரியாத ஒரு ஆணும் தங்களது முன்னே சிக்னேச்சர் விஸ்கி பாட்டிலை வைத்துக் குடித்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது கருகருவென கையில் முடி முளைத்த அந்த ஆணின் கரம் பாவாடையைத் தூக்கி சித்தியின் தொடையைத் தடவுகிறது. வெண்மையாய் வழுவழுவென இருக்கிறது தொடை. இந்தக் காட்சி தெரிந்ததுமே மூச்சு முட்டி விழித்துக் கொண்டேன்.

நிஜமான காட்சியைப் போலவே இருந்தது அது. உடனடியாகப் படபடப்பு எழுந்து நெஞ்சு அடித்துக் கொள்கிற சத்தம் கேட்டது எனக்கு. லாவண்யாவை எழுப்பலாமா என நினைத்தேன். பிறகு வேண்டாமென நினைத்துத் தண்ணீரைக் குடித்து விட்டு விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டு படுத்தேன்.

மறுநாள் வேலையில் இருந்த போது முழுக்கவே அந்தக் கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். சித்தியின் தொடையைக் காட்சியில் பார்த்த குற்றவுணர்வும் இருந்தது எனக்கு. அந்தக் காட்சியைத் திரும்பவும் யோசிக்கவே கூடாது என எச்சரிக்கை உணர்வு எனக்குள் தலையெடுத்தபடியே இருந்தது. வெள்ளை நிறப் படுக்கை காட்சிக்குத் தட்டுப்படும் போதே என்னுடைய நினைவை வெட்டிக் கொள்வேன்.

அதைப் பற்றிய யோசனைகளை வலுக்கட்டாயமாகத் தவிர்த்தேன். சாயந்திரம் போல, அதிலிருந்து முற்றிலுமாக விலகினேன். வழக்கம் போல அன்றைக்குக் காரை நிறுத்தி விட்டு, சிக்னேச்சர் பாட்டிலை டேஸ்போர்டில் இருந்து எடுத்த போது அந்தச் சிந்தனை மறுபடியும் வந்தது. பாடலைப் பெரும் சத்தத்தோடு ஒலிக்க விட்டு அவசர அவசரமாகக் குடிக்கத் துவங்கினேன். “என்ன சார் இன்னைக்கு பாட்டுச் சத்தம் அதிகமா இருக்கு. அதான் எட்டிப் பார்க்க வந்தேன்” என்றார் குடியிருப்பின் காவலாளி.

அவரைப் போகச் சொல்லிக் கைகாட்டி விட்டு, வேகமாகக் குடித்து முடித்தேன். வீட்டிற்குள் நுழைந்த என்னை லாவண்யாவுமே வித்தியாசமாகப் பார்த்தாள். வழக்கமாக ஒரு குவார்ட்டரை நான்காகப் பிரித்து மெதுவாக அடிப்பேன். அதனால் போதையும் மெதுவாக ஏறும். உடனடியாக இப்படி அவசரக்குடி அடித்து எனக்குப் பழக்கம் இல்லை என்பதால், நாக்கு குழறியது. “ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பாரு. உங்க குடும்பம் அந்தம்மாவையும் லூஸாக்கி, உன்னையும் லூஸாக்கித் தெருவில விடப் போகுது. குடும்பம்னா கதை கேட்டோமா விட்டோமான்னு இருக்கீங்களா? முழுக்க செண்டிமெண்ட்ஸ், அழுகை ரத்தம்னு சீரியல் தோத்திரும் உங்க்கிட்ட” என்று கோபமாகவே சொன்னாள்.

ஒருவார்த்தைகூடத் திருப்பிப் பேசாமல் போட்ட தோசையைத் தின்று விட்டுப் படுத்துக் கொண்டேன். ஏனோ தோசை அன்றைக்குக் கோணலாகத் தெரிந்தது.  படுக்கும்போதுதான் வீட்டிற்கு அழைத்துப் பேசவில்லை என்பதே எனக்கு உறைத்தது. இன்னும் ஒருவாரத்திற்கு அவர்களை அழைக்கவே கூடாது என்றும் தோன்றியது. வேண்டாம், எந்தக் கதையும் எனக்கு வேண்டாம் என முணுமுணுத்தபடி படுக்கையில் விழுந்தேன். அன்றிரவும் அதே கனவு. தொடையைத் தடவுகையில் சித்தி சிரிக்கிற மாதிரி கூடுதலாகக் காட்சி வந்த போது வியர்த்து விறுவிறுத்து எழுந்து விட்டேன்.

“என்னாச்சு. ஏதாச்சும் கெட்ட கனவா” என்று சொல்லிவிட்டு எழுந்த லாவண்யா, விபூதியை எடுத்துப் பூசி விட்டு என்னைப் படுக்க வைத்து அணைத்துக் கொண்டாள். அவளது மடியில் கைவைக்கப் போய் விலக்கிக் கொண்டது இருளிற்குள் அவளுக்குத் தெரிந்திருக்குமா? என்னுடைய உடல்நடுக்கம் படிப்படியாக அடங்கி என்னையறியாமல் உறங்கிப் போனேன்.

அதற்கடுத்து அடுத்தடுத்த நாட்கள் அந்தக் கனவு தொடர்ந்து வந்தபடியே இருந்தது. ரகுபதி மாமாவை அழைக்கலாமா என யோசித்துவிட்டு, வேண்டாமென முடிவு செய்தேன். லாவண்யாவிடம் வெளிப்படையாக விஷயத்தைச் சொல்லலாமா அல்லது மருத்துவர் யாரையாவது போய்ப் பார்க்கலாமா? யாரிடம் போனாலும் அசிங்கம்தானே? மருத்துவரிடம் சொல்வது எப்படி அசிங்கமாகும்? என்றெல்லாம் குழப்பங்கள் என்னுள் கூடின. மதியம்கூடத் தூங்கப் பயமாக இருந்தது எனக்கு.

இறுதியாய் நானே எனக்கு இருக்கிற அறிவை வைத்துக் கொண்டு ஒரு ஏற்பாட்டிற்கு வந்து சேர்ந்தேன். எனக்கும் சித்திக்கும் நடுவே அந்த சப்பட்டை பாட்டில் குறுக்கே கிடப்பது போல எனக்குத் தோன்றியது. சிக்னேச்சர் விஸ்கிக்குப் பதிலாக வேறு எதையாவது குடித்துப் பார்க்கலாம். ஆனால் இந்தச் சூழ்நிலையில் குடிக்காமல் மட்டும் என்னால் இருக்கவே முடியாது என்றும் தோன்றியது. சிக்னேச்சர் இல்லாமல் வேறு ஒன்றைக் கேட்ட போது, “என்ன சார் இன்னைக்கு பூமி இடிஞ்சு விழுந்திரும் போல இருக்கு. வேற கேட்கிறீங்களே?” என்றார் கடைக்காரர் சிரித்தபடி. அவரிடம் பதில் சொல்லும் நிலையில் எல்லாம் இல்லை என்பதால் பணத்தைக் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

வேகவேகமாகக் குடித்துவிட்டு, மேலே பேசுவதற்கான வாய்ப்பு எதையும் தராமல் காருக்குள்ளேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் போய் உடனடியாகவே படுத்துக் கொண்டேன். அப்போது ஹாலின் ஓரத்தில் இருந்த சோபாவில் டவுசரை மட்டும் போட்டுக் கொண்டு கால்களை மடக்கி அமர்ந்து இருந்தாள் லாவண்யா. அவளது தொடையைப் பார்ப்பதைத் தவிர்த்தது அந்தப் போதையிலும் உறைத்தது எனக்கு.

ஒருபக்கம் போதை இழுக்க, இன்னொரு பக்கம் அந்த நினைவுகள் இழுக்க எனத் தடுமாறி, உறங்கியது எப்போது? உறங்கினேனா? என்பதெல்லாம் தெரியாத மந்தமான நிலையில் கிடந்தேன். காலையில் எழுந்த போது கடுமையாகத் தலை வலித்தது. பிராந்தி எனக்குச் சுத்தமாக ஒத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்தேன். பல் துலக்கிய பிறகும் வாயில் இருந்து கெட்ட வாடை அடித்தது. தலை சுற்றுவதைக் குளியலறையில் நிற்கையில் உணர்ந்தேன்.

வெளியில் வந்து மெல்லிய தலைசுற்றலுடன் இருந்த போது, “நைட்டெல்லாம் பயங்கர உளறல். வேண்டாம். முதல்ல இந்த கதையில இருந்து வெளியே வா” என்றாள். “ஏன் நல்லாத்தான் இருக்கேன். அப்படி என்ன உளறுனேன்?” என்றேன் சகஜமாக இருப்பதைப் போல நடித்து. “வேண்டாம்டா சாமி அதைச் சொன்னா மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிரும்” என்று சொல்லிவிட்டு அறைக் கதவைச் சத்தமாகச் சாத்தினாள்.

என்னால் வேலையில் கவனத்தை ஊன்றவே முடியவில்லை. என்ன உளறியிருப்பேன்? மறுநாளும் பிராந்தி இதே அனுபவத்தைத்தான் எனக்குத் தந்தது. மிகையாக வீங்கிப் போன என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு, “சீக்கிரம் டைவர்ஸ் வாங்கிக் குடுக்காம உன் குடும்பம் ஓயாது” எனக் கடுமையாகச் சொன்னாள். அந்தக் கடுமையைப் பல ஆண்டுகள் கழித்து அப்போது பார்த்தேன்.

தொடர்ச்சியாகப் பல வருடங்கள் குடித்துவிட்டுத் திடீரெனக் குடிக்காமல் தூங்கப் போவது குறித்த சிந்தனை பகலில் எழுந்த போது படபடப்பும் உடல்நடுக்கமும் எழுந்தது. காரணமே இல்லாமல் எல்லோர் மீதும் எறிந்து விழுந்தேன். மாலையாகிவிடக் கூடாது என வேண்டிக் கொண்டேன். அந்த நேரம் பார்த்து, “சார் சிக்னேச்சர் வாங்கணும். நேத்தே சொல்லலாம்னு நெனைச்சேன்” என்று சொன்னவனிடம், “உண்ட்ட நான் கேட்டேனா? ஒழுங்கா போயி உன் வேலையைப் பாரு. இல்லாட்டி வேலையில இருந்து தூக்கி விட்டிருவேன்” என்று கடுமையாகச் சத்தம் போட்ட போது, கடையில் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

இரவு வீட்டிற்குப் போவதற்கு முன்பு பிராந்தி வாங்கலாமா? வேண்டாமா? என யோசித்தேன். அந்த நேரத்தில் நாக்கில் சிக்னேச்சர் விஸ்கியின் சுவையும் படர்ந்தது. அது நிச்சயமாக எனக்கு நன்றாகத் தெரிந்தது. அந்தச் சுவையை மாற்ற கையில் இருந்த சாக்லெட்டை வாயில் போட்டேன். வேகமாகப் போய் ஒரு பிராந்தி பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்து காரில் அமர்ந்து அதில் பாதியை மட்டும் குடித்துவிட்டு மீதியைத் தூக்கி வெளியில் போட்டுவிட்டு, வீட்டுக்குப் போய் தோசையைத் தின்று விட்டுப் படுத்தேன். மறுநாள் காலையிலும் பிராந்தி அதே அனுபவத்தைத்தான் எனக்கு அளித்தது, இன்னும் சற்றே கூடுதலாக.

ஆனால், பழைய மாதிரி சிக்னேச்சரைக் குடிப்பதைப் பற்றிய சிந்தனையையே எனக்குள் ஊன்றவில்லை. மிக மோசமாக மனநிலை மாறத் துவங்கியது. என்னால் குடிக்காமலும் இருக்க முடியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் குழப்பங்களோடு நடமாடுகிறவனாக எல்லோர் பார்வையிலும் மாறிப் போய் இருந்தேன். யாரிடமாவது சொல்லி விடலாம் என நினைத்து அப்பாவை அழைத்து, “டீடெய்லா கேக்காதீங்க. சித்தி கனவில வர்றாங்க. அந்தக் கனவு தூங்கவிடாம தொந்தரவு செய்யுது” என்றேன். அந்தப் பக்கத்தில் அமைதியாக இருந்த அவர், “எல்லாம் உன் மனப் பிராந்திப்பா. லாவண்யாவைக் கூப்டுகிட்டு எங்கயாச்சும் போய்ட்டு வா. உனக்குன்னு பிள்ளை பிறந்தா மனசு மாறிக்கும். கொஞ்ச நாள் எந்தக் கதையும் பேச வேண்டாம் விடு. நாங்களுமே டெய்லி கூப்பிடலை. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என்றார்.

அவர் சொன்னபோது மனதிலிருந்து பாரம் படிவழியாக இறங்கியதைப் போல இருந்தது எனக்கு. சற்று நேரத்திலேயே ரகுபதி மாமா அவராகவே அழைத்தார். ”என்னாச்சு மாப்பிள்ளை? உங்கப்பா என்னைக் கூப்டு கடுமையா வஞ்சாரு. எந்த கதையும் அவண்ட்ட சொல்லாதன்னாரு. ஏதோ நாந்தான் உன்னைக் கெடுக்கிற மாதிரி. மாமா ஒருநாளும் எண்ட்ட இப்டீ பேசினது இல்லை. உன்னை கூப்டக் கூடாதுங்கறாரு. எனக்கும் அசிங்கமா போயிருச்சு. வைக்கிறேன் மாப்பிள்ளை” என்று சொல்லிவிட்டு அவராகவே இணைப்பைத் துண்டித்தார். திரும்பவும் அப்பாவிற்கு அழைக்கலாமா? என யோசித்துவிட்டு, இது வேண்டாத வேலை என விட்டு விட்டேன்.

இரவு வீட்டுக்குப் போகையில் மறுபடியும் அழைத்த ரகுபதி மாமா, “உங்க சித்தி இன்னைக்கு வீட்டுக்கு வந்துச்சு. நல்லா இருக்கானானுன்னு கேட்டுச்சு. அவனைப் பத்தி எண்ட்ட எதுவும் கேக்காதீங்க. அவனுமே அவங்களைப் பத்தி எதுவும் எண்ட்ட சொல்லாத மாமான்னு சொல்லிட்டான்னு வெடுக்குனு சொல்லிட்டேன். வேகமா வீட்டை விட்டு வெளியேறிருச்சு” என்றார்.

உடனடியாக கோபமாக, “அப்படி எதுக்கு சொன்னீங்க. நான் அப்டீ சொல்லவே இல்லையே?” என்றேன். “எதையும் வெடுக்குனு முடிச்சு விட்டுறணும் மாப்பிள்ளை. அதான் கரெக்டு. நானுமே உன்னைக் கொஞ்ச நாள் கூப்பிடலை” என்று சொல்லி வைத்துவிட்டார்.

அன்றைக்குக் குடித்து விடக் கூடாது என்கிற தீர்மானத்தில்தான் இருந்தேன். வீட்டிற்குப் போன போது ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா. குடியை மறக்க வீட்டைச் சுத்தப்படுத்தத் துவங்கினேன். சமையலறையில் கிடந்த பாத்திரங்களை எடுத்துக் கழுவிய போது சத்தம் கேட்டு லாவண்யா வந்து நின்று, “என்னாச்சு” என்றாள்.

திரும்பி அவளைப் பார்த்த போது என்னையும் அறியாமல் அழுகை வந்தது. “அட ஏன் அழுகுற? என்னாச்சு உனக்கு? நான் இருக்கேன்” என ஓடி வந்து கட்டிக் கொண்டாள். “என்னால குடிக்காம இருக்க முடியலை. பயங்கர நடுக்கமா இருக்கு. மேல இருந்து குதிச்சிடலாம்னுகூட தோணுது. பயமா இருக்கு. ப்ளீஸ் என்னைக் காப்பாத்து” என்றேன் அழுதபடி.

அப்படி நானழுது அவள் பார்த்ததே இல்லை என்பதால் பதறி விட்டாள். “வா எங்கயாச்சும் போயிட்டு வரலாம்” என வலுக்கட்டாயமாக என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். “என்னால கார் ஓட்ட முடியாது. ப்ளீஸ் நீ ஓட்டேன்” என்றபோது பயந்து போய், “குடியை நீ விட்டா எனக்கு சந்தோஷம்தான். ஆனா இப்படி சட்டுனு உன்னை யாரு குடிக்க வேண்டாம்னு சொன்னா? நானே ஒன்னும் சொல்லலை. உண்மையைச் சொல்லு, என்ன நடக்குது உங்க குடும்பத்தில?” என்றாள்.

சண்டையிடும் தோரணையில் அதை அவள் கேட்கவில்லை என்பதும் தெரிந்தது. அவள் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, சிந்திச் சிதறி அந்தக் கனவு குறித்தும் சிக்னேச்சர் உடனான என் விலகலைப் பற்றியும் சொன்னேன். “எனக்கு அழறதா சிரிக்கறதான்னு தெரியலை. ஜஸ்ட் ஒரு கனவு. கனவுல இந்த மாதிரி ஆட்கள் இடம் மாறி வர்றது எல்லாம் சகஜம். பெங்களூர்ல இருக்க என் ப்ரெண்டு ஒருத்தி கனவில நம்ம பக்கத்து வீட்டில இருந்தா. நீ உங்கப்பாம்மா சொன்ன கதையையும் எல்லாத்தையும் போட்டுக் குழம்பி நீயாவே ஒரு கதை கட்டிக்கிட்ட. ஜஸ்ட் ரிலாக்ஸ். மைண்டை அப்ளை பண்ணு” என்றாள்.

“இல்லை, லாவண்யா, சிக்னேச்சர் குடிச்ச அத்தனை நாளும் அந்தக் கனவு வந்திருக்கு” என்றேன்.

“வராம எப்படிப் போகும்? கனவு வரும்னு நீ யோசிச்சுக்கிட்டேதானே படுக்கிற? நாம யோசிக்கிறதுதானே கனவா வருது நைட்ல” என்றாள்.

“இல்லை, நான் யோசிக்கல்லாம் செய்யலை” என்றேன் பலகீனமான குரலில்.

“உன்னை அறியாம உன் ஆழ்மனம் யோசிக்கும்ல. இன்னைக்கு ஒண்ணு பண்ணு என்னோட குடி. நைட் முழுக்க கூட தூங்காம இருக்கேன். அந்தக் கனவு வருதான்னு பார்த்திரலாம்” என்றாள்.

வேறொரு கடைக்குப் பக்கத்தில் காரை நிறுத்தி, கால்கள் நடுங்க நடந்து போய் சிக்னேச்சர் பாட்டிலை வாங்கி வந்து அவசர அவசரமாக மூடியைத் திறந்த போது அதைக் கையில் பறித்துக் கொண்டாள் லாவண்யா. கடற்கரைக்குப் போனோம். அநேகமாக ஒருவருடம் கழித்து அங்கே போயிருந்தோம். அமாவாசை இருள் கடலைப் போர்த்தி இருந்தது.

காருக்குள் அமர்ந்து அவள் கையாலேயே எனக்கு ஊற்றிக் கொடுத்தாள். “மெதுவா ரசிச்சுக் குடி. என்னை நினைச்சுக்கோ. உனக்கு நான் இருக்கேன்” என்றாள். அவளுக்காகவாவது நான் மீளவேண்டும் என அப்போது தோன்றியது. முழு குவார்ட்டரையும் அணு அணுவாகப் பிரித்து ஊற்றிக் கொடுத்தாள். குடித்துக் கொண்டு இருக்கையில், என்னிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருந்தாள். எங்களது காதல் காலகட்டத்தில் வந்து அமரும் சிமெண்ட் நாற்காலியைச் சுட்டிக் காட்டி, “அப்பல்லாம் என் மடியிலதான் உன் கை இருக்கும். இப்ப நைட்டு கையைக்கூட விலக்கிக்குற. சும்மா வெளையாட்டுக்கு சொல்றேன். சிரி” என்றாள்.

கடற்கரையிலேயே சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டுக்குப் போன போது படுக்கையில் சாய்ந்து அமர்ந்து, “வா இன்னைக்கு என் மடீல படுத்துக்கோ. இதுவரைக்கும் நீ அப்டீ படுத்ததே இல்லை” என்று வாஞ்சையாக அழைத்தாள். அந்த நேரத்தில் அவளிடம் சரணடைவதைத் தவிர என்னிடம் வேறு வழியே இல்லை.

தலையை அவளது மடியில் குப்புறப் போட்டுப் புதைத்துக் கொண்டு, “உண்மையைச் சொல்லணும்னா என்னோட சித்தியை என் அடியாழத்தில இருந்து சிலசமயம் வெறுத்தேன். இதுக்கு முன்னாடி எனக்கு இப்டித் தோணினதே இல்லை” என்று சொல்லிவிட்டு ஒருக்கலித்து அவளை மேல்நோக்கிப் பார்த்தபோது, தூங்கு என்கிற மாதிரி சைகை செய்தாள். மீண்டும் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். எப்போது தூங்கினேன்? எப்போது என்னை எடுத்து தனியாகப் படுக்க வைத்தாள்? என்பதெல்லாம் அதிகாலையில் விழிப்பு வந்த போது தெரியவே இல்லை. அந்தக் கனவைப் பற்றிய சிந்தனையே என்னிடம் அற்றிருந்தது. “நல்லா அடிச்சு போட்ட மாதிரி தூங்குன. புலம்பவும் இல்லை. அடிச்சுப் பிடிச்சு எந்திருக்கவும் இல்லை. நைட் பூரா உன் முகத்தையே பாத்துக்கிட்டு இருந்தேன். ஒரு குழந்தை மாதிரி மடியில கிடந்த.  இப்ப பயம் போயிருச்சா” என்று சொல்லிவிட்டு அர்த்தம் பொதிந்து சிரித்தாள்.

பிரச்சினை பிராந்தியிடமா? என்னிடமா? சிக்னேச்சர் விஸ்கியிடமா? கனவில் இருந்து சித்தி திடீரென எப்படிக் காணாமல் போனாள்? எனத் தொகுத்து அறிவைக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்த போது என் தொலைபேசி அடிக்கிற சத்தம் விடாமல் கேட்டது. தூரத்தில் இருந்த அதை எடுத்து என் கையில் கொடுக்கும் முன், “எதுக்கு உங்கப்பா இந்த நேரத்தில கூப்டுறாரு? வாழவே விடமாட்டாங்களா?” என்றாள் லாவண்யா.

இணைப்பில் அந்த முனையில் அலோ எனச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார் அப்பா. எனக்குள் என்னவோ மாதிரியான உணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கையில், “நேத்து நைட் லலிதா செத்துட்டாப்பா. கொளுத்திக்கிட்டாளாம்” என்றார். என் கையில் இருந்து போன் நழுவிப் படுக்கையில் விழுந்தது.

ஓவெனக் கதறியழுவதற்கு முன்பு வெள்ளை நிறப் படுக்கையில் அதைப் பார்த்தேன்.

பச்சை நிறச் சப்பட்டை பாட்டில்.