கலைஞர் நூற்றாண்டு துவங்குகிறது. கலைஞர் சரித்திரமாகிறார். அவர் நவீன தமிழகத்தின் பல்வேறு வரலாற்றுப் பாதைகளை உருவாக்கினார். கலைஞர் நூற்றாண்டில்தான் நினைக்கப்படுகிறார் என்பது பொருளற்றது. அவர் கோடிக்கணக்கான தமிழர்களின் அழிவற்ற நினைவாக எப்போதோ மாறிவிட்டார். அவரது இறுதி தினங்களில் ஒலித்த ‘எழுந்து வா தலைவா’ என்ற முழக்கம் இப்போது தமிழர்களின் உரிமைக்முழக்கங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. எப்போதெல்லாம் தமிழ் நிலம் அந்நிய சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, தமிழர் நலன் எதிரிகளால் சிதைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் கலைஞர் நம் நெஞ்சில் எழுகிறார். ‘எழுந்து வா தலைவா’ என்ற குரல் நம் மனச்செவிகளில் ஒலிக்கிறது.
ஓர் அரசியல் கட்சி அதிகாரத்தை வெல்வது பெரிதல்ல. ஆனால் அது ஒரு மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றி
யமைக்க முடியும் என்பதையும் அதன் வளர்ச்சியை ஒரு நூற்றாண்டு முன்னோக்கி செலுத்த முடியும் என்பதையும் கலைஞர்
நிகழ்த்திக் காட்டினார். இந்த நவீன அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான முன்னுதாரணம், திராவிட மாடல் என்பதை உண்மையில் நாம் கலைஞர் மாடல் என்றே சொல்ல வேண்டும்.
சற்று பின்னோக்கிச் செல்வோம்.
திராவிட மாடல் சமூக,பொருளாதார, பண்பாட்டு அடித்தளங்கள் நீதிக்கட்சிக் காலத்தில் துவங்கப்பட்டன. பிராமணரல்லாதோருக்கு அரசியல் அதிகாரம் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற குரல்கள் அங்கிருந்துதான் துவங்கின. அது தம்மளவில் அன்றைய காலகட்டத்தில் ஒரு புரட்சிகரமான எதிர்க்குரல் என்பதில் சந்தேகமில்லை. அது இடைநிலை சாதியினருக்கான பிரதிநிதித்துவத்தையே பிரதானமாகக் கொண்டிருந்தது. அனைத்து தரப்பு மக்களுக்கான ஒரு செயல் திட்டம் கனிந்துவருவதற்குக் காலம் கனிய வேண்டியிருந்தது. நீதிக் கட்சியின் பிற்காலத்தில் ஏற்பட்ட பலவீனங்களுக்குக் கூட இதுவே காரணமாக அமைந்தது.
இன்னொருபுரம் சாதி ஒழிப்பையும் பெண்ணடிமை ஒழிப்பையும் பகுத்தறிவுச் சிந்தனை பரவலையும் பெரியார் தீவிரமாக முன்னெடுத்தபோதும் அது ஒரு சமூக சீர்த்திருத்த பரப்புரை இயக்கமாகவே இருக்க வேண்டுமென்று பெரியார் விரும்பினார். நீதிக்கட்சியின் வரையறைக்கு உட்பட்ட சமூகநீதிக் கொள்கை, பெரியாரின் சமூக சீர்த்திருத்த லட்சியவாதம் இரண்டையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்று சமூக முழுமைக்குமான ஒரு செயல்திட்டமாக மாற்றவேண்டியதன் அவசியத்தை அண்ணாவும் கலைஞர் உள்ளிட்ட இளம் தலைவர்களும் அன்று புரிந்துகொண்டார்கள். அந்த மாற்றத்திற்கான காலம் கனிந்து விட்டதை அண்ணாவின் அபாரமான மதிநுட்பம் கண்டுகொண்டது. சமூகநீதி, மாநில சுயாட்சி, மொழி உரிமைப்போர் எனும் முப்பெரும் வாள்களை கையிலேந்தி அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் இறங்கியது. வெகுவேகமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தேர்தல் களத்தில் முன்னேறிய தி.மு.க. 1967 – இல் ஆட்சி அதிகாரத்
தையும் கைப்பற்றியது. இயற்கை ஆள்வதற்கும் வாழ்வதற்கும் அண்ணாவை இரண்டாண்டுகள் மட்டுமே அனுமதித்தது. ஆனால் அப்போதே திராவிட மாடல் அரசின் அடிக்கல்கள் நாட்டப்பட்டுவிட்டன. மெட்ராஸ் மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டப்பட்டது. சீர்த்திருத்த திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன.
அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞர் முதல்வராகிறார். நீதிக் கட்சித் தலைவர்கள், பெரியார், அண்ணா உருவாக்கிய சமூக நீதிப் பாதைகளை கலைஞர் பெரும் ராஜபாட்டையாக மாற்றுகிறார். சமூக மாற்றத்திற்கான பல்வேறு கிளைச் சாலைகள் அந்த ராஜபாட்டையோடு இணைக்கப்பட்டன. கலைஞர் உருவாக்கியது நவீனத் தமிழகத்தை உருவாக்குவதற்கான மாபெரும் வரைபடம். அது வெறும் கனவல்ல. உறுதியான வழிமுறைகளையும் இலக்குகளையும் கொண்ட சாதுர்யமான செயல்திட்டம். எப்போது போராட வேண்டும், எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார். வெளிப்படையான சமூக மோதல்களை அவர் உருவாக்கவில்லை. மாறாக, அவர் இயல்பானதும் ஓசைகளற்றதுமான மௌனப்புரட்சிகளை உருவாக்கினார்.
கலைஞர் கொண்டுவந்த நில சீர்திருத்தச் சட்டம், குத்தகை தாரர்கள் பாதுகாப்பு சட்டம் போன்றவை கிராமப்புறங்களில் இருந்த நிலவுடைமை சார்ந்த அதிகாரத்தைப் படிப்படியாகச் சிதைத்தது. ஆண்டான் அடிமை உறவுமுறைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. கிராமப்புற நிர்வாகத்தைப் பாரம்பரியமாக அந்த அதிகாரத்தை கையில் வைத்திருந்த உயர்சாதிக்காரர்களிடமிருந்து கைப்பற்றி அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் மூலமாகப் பல்வேறு சமூகப் பிரிவினரும் அரசுப் பணிக்கு வந்தார்கள். தனித்தனியாகச் செய்யப்பட்ட இந்த சீர்திருத்தங்கள் உள்ளூற ஒன்றோடொன்று மிகத்தீவிரமான தொடர்புகளைக் கொண்டிருந்தது. இன்னொருபுறம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் கிராம உள்ளூராட்சிகளுக்கும் மாநில ஆட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நிலப்பகிர்வும் கிராமப்புற ஆட்சி நிர்வாக மாற்றமும் இன்னமும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவந்திராத சூழலில்
கலைஞர் தன்னுடைய சமூகப் புரட்சிப் பாதையை இன்னும் விரிவுபடுத்துகிறார். அடிப்படை சமூக மாற்றத்திற்கும் மனிதவள மேம்பாட்டிற்கும் அடிப்படையாக இருப்பது உணவு, கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவையே. இவற்றில் எந்த மாநிலம் தன்னிறைவை அடைகிறதோ அது மனிதவளக் குறியீட்டின் மேலான இடத்தைப் பெறும். கலைஞர் இதைத் துல்லியமாக அறிந்திருந்தார். அவர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, மிக நவீன சமூக சிந்தனையாளர். பல நூற்றாண்டுகளாக இறுகிக் கிடக்கும் ஒரு ஏற்றத்தாழ்வான சமூகத்தை சம்மட்டி கொண்டு அடித்து நெகிழச்செய்ய வேண்டுமெனில் அந்தத் தாக்குதலைப் பல்வேறு முனைகளில் நிகழ்த்தவேண்டும் என்று கலைஞர் அறிந்திருந்தார்.
நீதிக் கட்சியால் துவங்கப்பட்டு காமராஜரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட கல்விப் புரட்சியை கலைஞர் பெருமளவிற்கு மேலெடுத்துச் சென்றார். கலைஞர் கொண்டுவந்த உயர்கல்விப் புரட்சியின் மூலம் எங்கெங்கும் கலை மற்றும் தொழில்நுட்ப, மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்
பட்டன. பெரும் அலையென சமூகத்தின் அடிமட்டங்களில் இருந்தும் பட்டதாரிகள் உருவாகி வந்தார்கள். இன்று தமிழகம் பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்வோரின் எண்ணிக்கையில் 52% என்ற இலக்கை எட்டியிருக்கிறதென்றால் அது கலைஞர் உருவாக்கிய உயர்கல்விப் புரட்சியே காரணம். இதன் விளைவு தகவல் தொழில்நுட்ப புரட்சி துவங்கியபோது அதற்கான படித்த இளைஞர்களைக்கொண்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. உலகத்தின் போக்கிற்கு ஏற்ப கலைஞர் எவ்வாறு தமிழ்நாட்டினை நவீனப்படுத்தினார் என்பதற்கு இதுவொரு சான்று.
கலைஞரின் ஆட்சிக் காலத்தில் பொது விநிேயாக திட்டத்தின் மூலம் எளிய மக்கள் பசிப் பிணியில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஒரு மௌன உணவுப் புரட்சியை நடத்தினார். கிராமங்கள் சாலை வசதியாலும் போக்குவத்து வசதியாலும் நகரங்களோடு இணைக்கப்பட்டன. அதன் விளைவாக இடம் பெயர்தல் எளிதானது. மனிதர்கள் புதிய பொருளாதார வாய்ப்புகளைத் தேடிச் சென்றார்கள். மின்சாரம் எல்லா கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. நவீன சாதனங்கள் கிராமப்புறங்களில் பரவலாக நுழைந்தன. இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி கிராமப்புறங்களில் பெரும் தொலைத்தொடர்பு புரட்சியை ஏற்படுத்தியது.
ஒருபுறம் விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள். இன்னொருபுறம் சிறுகுறு, நடுத்தர, பெருந்தொழில் வளர்ச்சி என ஒரு பிரமாண்டமான பொருளாதார எழுச்சியை கலைஞர் தமிழகத்தில் உருவாக்கினார். அரசுப் பணிகளிலும் – உள்ளூராட்சிப் பணிகளிலும் இட ஒதுக்கீட்டின் மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பும் அதிகாரமும் முதல்முறையாக சமூகத்தில் அதிகரித்தது.
இது எல்லாவற்றையும் இப்போது நினைத்துப் பாருங்கள். இதுதான் கலைஞரின் அனைவருக்குமான சமுதாய வரைபடம். அதை அவர் வெற்றிகரமாகவும் உறுதியுடனும் நிறைவேற்றினார்.
முரண்பட்ட நலன்களைக் கொண்ட பிளவுட்டுக்கிடந்த தமிழ் சமுகத்தைக் கலைஞர் தமிழ் அடையாளம், மாநில சுயாட்சி என்ற மையங்களோடு இணைத்தார். அது உண்மையில் ஒரு வலுவான இணைப்புக்கண்ணி. அது வேற்றுமைகளினூடே ஒற்றுமைகளை உருவாக்குகிறது. இரண்டுமுறை ஒன்றிய அரசால் ஆட்சிக் கலைப்பு நடந்தது. எமர்ஜென்சியை எதிர்த்து தெருவில் இறங்கினார். கட்சி பிளவுபடுத்தப்பட்டது. எல்லா நெருக்கடிகளிலும் கலைஞர் மன உறுதி குலையாது நின்றார். தன் இயக்கத்தை மறுபடி மறுபடி கட்டியெழுப்பினார்.
கலைஞரின் அரசியல் களம் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் இருந்தது. ஒன்றிய அரசில் ஆட்சியதிகாரங்களைத் தீர்மானிப்பதில் கலைஞர் பலமுறை பங்கெடுத்தார். பல கூட்டணி அரசுகளில் தி.மு.க. பங்கேற்றது. பதினான்கு ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஒன்றிய அரசின் அதிகாரத்தில் பங்கேற்ற கட்சி தி.மு.க. கலைஞரின் அரசியல் சதுரங்கத்தின் வெற்றியே இதற்கு ஆதாரம். மத்தியில் இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி எளிதில் தேசிய நீரோட்டத்தில் கரைந்துபோக வாய்ப்பிருந்தும் மாநில சுயாட்சியிலும் சமூக நீதியிலும் சிறு சமரசமும் செய்துகொள்ளாத ஒரு அரசியலை கலைஞர் வழிநடத்தினார். அதை இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார். திராவிட மாடல் இப்போது சமூக நீதி, மாநில உரிமைகளுக்கான தேசிய மாடலாக உருவெடுத்திருப்பதுதான் கலைஞர் நூற்றாண்டில் கலைஞருக்குக் கிடைக்கும் பெரும் அங்கீகாரம்.
கலைஞரின் மொழித்திறனும் சொல்வன்மையும் மரபும் சமகாலத்தன்மையும் நிறைந்த அவரது படைப்பாற்றலும் அவரது எழுத்துக்களை காலத்தின் பெரும் சாட்சியங்களாக மாற்றியிருக்கின்றன.
கலைஞரின் நூற்றாண்டு என்பது தமிழர்களின் ஒரு நூற்றாண்டு நவீன வரலாற்றைப் பேசுவதாகும். தொடர்ந்து பேசுவோம்.