ஒரு யூட்யூப் சேனலில் “பிராமணர்களின் ஆதிக்கம் மிகுந்த ஓட்டல் துறைக்கு எப்படி வந்தீர்கள்?” என்று திரைக்கலைஞர் சித்ரா லட்சுமணன் கேட்ட கேள்விக்கு “அதற்குத் தந்தை பெரியார்தாம் காரணம். எல்லோரும் எல்லாத் தொழிலிலும் வருவதற்கு அவர் பாடுபட்டார்” என்ற பதிலை அளித்திருந்தார் ‘அடையாறு ஆனந்தபவன்’ ஓட்டலின் உரிமையாளர் கே.டி.சீனிவாச ராஜா. உடனடியாக ‘அடையாறு ஆனந்தபவனைப் புறக்கணிப்போம்’ என்னும் இயக்கத்தைத் தொடங்கினார்கள் பார்ப்பனர்கள். சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதில்லையே தவிர, அசைவ உணவுப்பழக்கவழக்கம் உள்ளவர்களுக்குச் சைவம் சாப்பிடுவது பிரச்சனையில்லை என்பதால், இந்தப் புறக்கணிப்பு இயக்கம் ஆனந்தபவனின் விற்பனையைப் பாதிக்கவில்லை என்பதே எதார்த்தம். ஆனால், இந்தப் புறக்கணிப்புக்குப் பின்னால் உள்ள பெரியார் வெறுப்பரசியலை நாம் புரிந்துகொள்வது முக்கியம். இதை முன்னெடுத்தது பார்ப்பனர்கள் என்றாலும் பார்ப்பனியத்தையும் இந்துத்துவத்தையும் ஆதரிக்கும் சில பார்ப்பனரல்லாதாரும் இந்தப் போக்கை ஆதரித்தனர்.

அதேபோல் நல்லி சில்க்ஸ் விளம்பரத்தில் புடவை அணிந்த பெண்கள் பொட்டு அணியாமல் இருந்ததால் அதைப்புறக்கணிக்க வேண்டும் என்று பார்ப்பனரும் இந்துத்துவ நிர்வாகியுமான எஸ்.ஆர்.சேகர் தெரிவிக்க, அதையும் இந்துத்துவவாதிகள் ஆதரித்தார்கள். புடவை என்பது பொட்டு அணிந்த இந்துப்பெண்கள் மட்டும் உடுத்தும் உடையல்ல. முஸ்லீம் பெண்கள், பெந்தெகோஸ்தே பிரிவைச் சேர்ந்த பெண்கள், மதநம்பிக்கையற்ற பெண்கள் என அனைவரும் அணியும் புடவையை ‘ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதத்தை’ப்போல் ஒற்றை அடையாளத்துக்குள் திணிக்கப்பார்க்கிறது இந்துத்துவப் பார்ப்பனியம்.

இதுவரை ‘முஸ்லீம் கடையில் பொருட்களை வாங்காதீர்கள்’, ‘கிறிஸ்துவ நிறுவனங்களைப் புறக்கணியுங்கள்’ என்று பிரச்சாரம் செய்த இந்துத்துவ அமைப்புகள் இன்று இந்துக்கள் நடத்தும் நிறுவனங்களையே புறக்கணிக்கக் கோருகின்றன என்றால் அவை பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எதிராக இருக்கின்றன, பன்மைத்துவத்துக்கு இடமளிக்கின்றன என்பதால்தான். பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அமைச்சரவை அலுவலகங்களில் உள்ள 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். 15 மத்தியப் பல்கலைக்கழகங்களில் 4% பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் வெளியேறுவதும் தற்கொலை செய்வதும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பாதிக்கப்படும்போதெல்லாம் மௌனம் காக்கும் இந்துத்துவ அமைப்புகள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின்மீது சிறுவிரிசல் விழுந்தாலும் கொதித்தெழுகின்றன என்றால், இந்துத்துவ அரசியலின் நோக்கமே பார்ப்பன அதிகாரத்தை உறுதிசெய்வதுதான் எ ன்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தியா முழுவதும் உணவரசியலைக் கையிலெடுத்து தன் ஆதிக்கத்தை நிறுவப்பார்க்கிறது பார்ப்பனியமும் இந்துத்துவமும்.

தமிழர்களின் உணவுமுறையைப் பார்த்தால் தொடக்கத்தில் இருந்தே தமிழர்கள் அசைவம் உண்பவர்களாகவே இருப்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவுசெய்கின்றன.  ‘தன் வீட்டில் வந்த விருந்தினருக்குத் தலைவி நெய் விட்டு இறைச்சியின் கொழுப்பைச் சமைக்கிறாள்’ என்று நற்றிணை – 41ஆம் பாடல் சொல்கிறது. மீனை உப்பிட்டுக் காயவைத்து, அதைப் பறவைகள் கொத்திச்செல்லாமல் மீனவப்பெண்கள் காத்து நின்றது குறித்த பதிவுகளும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ளன. மீன், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, வயல் ஆமைக்கறி, முயல்கறி, மான்கறி, உடும்பு இறைச்சி, பறவைகளின் இறைச்சி போன்ற பல்வேறு இறைச்சி குறித்த குறிப்புகள் சங்கப்பாடல்களில் உள்ளதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

எல்லா இறைச்சியையும் போலவே மாட்டிறைச்சியையும் தமிழர்கள் உண்டனர் என்பதற்குப் பல பாடல்வரிகள் சாட்சி.

உதாரணமாக

“வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை….”
அகநானூறு – 309
‘கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்’’
( அகநானூறு 129 ஆவது பாடல்)

ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.

கள்ளும் இறைச்சியும் தமிழர் உணவுகளின் ஒரு பகுதியாகவே நெடுங்காலம் இருந்திருக்கின்றன. பௌத்தமும் சமணமும் தமிழ்நிலத்தில் செல்வாக்கு பெற்றபோதுதான் கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை போன்ற மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டன. நீதிநூல்கள் எழுதப்பட்ட காலத்தில்தான் நாம் இத்தகைய குரல்களைக் கேட்கிறோம். இந்தியா முழுவதுமே பௌத்தம், சமணத்தில் இருந்த புலால் உண்ணாமையைப் பார்ப்பனியம் கையகப்படுத்தியது தமிழ்மண்ணுக்கும் பரவியது. பிறகு சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட நவபார்ப்பனியப் பண்பாடு மேலோங்கி, அதை பார்ப்பனரல்லாத நடுத்தரவர்க்கத்தினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்தபோதுதான் ‘விரதம்’ கடைப்பிடிக்கும் நடைமுறைகள் தோன்றின.

இந்துத்துவவாதிகளால் அந்நியர்களாகக் கட்டமைக்கப்படும் இஸ்லாமியர்கள் ‘நோன்பு’ மேற்கொள்ளும்போது இந்துக்களோ சமஸ்கிருதச் சொல்லான ‘விரதத்தை’க் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம். பழந்தமிழ் மரபில் வடக்கிருந்து உயிர் துறத்தல் போன்ற நோன்பு என்றாலே அது உணவை முற்றிலும் மறுக்கும் போக்காகத்தான் இருந்திருக்கிறது. வாரத்தில் சில நாள்களோ அல்லது ஒரு மாதம் முழுவதுமோ அசைவத்தை மட்டும் புறக்கணிக்கும் போக்கு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. புரட்டாசி விரதம், செவ்வாய், வெள்ளி விரதம் போன்றவையெல்லாம் பார்ப்பனியம் தமிழர் பண்பாட்டில் செல்வாக்கு பெற்றபிறகே எழுந்த பழக்கங்கள்.

சுத்தம் X அசைவம் என்னும் இருமை எதிர்வுகளின் வழியாகத் தீண்டாமையைக் கற்பித்த பார்ப்பனியம், சைவத்தைப் புனிதமாகவும் அசைவத்தைக் கீழானதாகவும் சித்திரித்தது. மேலும், அசைவத்திலேயே இன்ன இறைச்சி மேலானதாகவும் இன்ன இறைச்சி கீழானதாகவும் கட்டமைக்கப்பட்டது. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றை உண்ணும் தாழ்த்தப்பட்டோரும் சிறுபான்மையினரும் மிலேச்சர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். ‘ஆவுரித்து தின்றுழலும் புலையர்’ என்றது பக்தி இலக்கியம். ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின்  சட்டைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்திலோ ‘அர்ஜுனன் போன்ற பெரும் வீரர்கள் ஆண்ட இந்த தேசத்தைக் கேவலம் கோ மாமிசம் உண்ணும் ஜார்ஜ் என்ற ஒரு மிலேச்சன் ஆள்வதா?’ என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் தாழ்த்தப்பட்டோர் மற்றவர்களுடன் பொதுவெளியில் அமர்ந்து உணவு உண்ணுவதும் விலக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த சாதியப்படிநிலையில் உள்ள ஆதிக்கச்சாதியினருமே சமையற்காரர்களாகவும் ஓட்டல் நடத்துபவர்களாகவும் இருந்தனர்.  இத்தகைய உணவரசியல் ஆதிக்கத்தைத்தான் பெரியார் உடைந்தெறிந்தார்.

1937இல் நீடாமங்கலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சமபந்தியில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். இதைக் கண்டித்து ‘விடுதலை’ இதழில் தொடர்ச்சியாக எழுதி அம்பலப்படுத்திய பெரியார், தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து நீதிமன்றத்துக்கும் சென்றார். இத்தனைக்கும் எம்.சி.ராஜா போன்ற தலித் தலைவர்கள் நீடாமங்கலம் பிரச்னையில் மௌனம் காத்தபோதும் பெரியார் தொடர்ச்சியாகக் கணடன இயக்கத்தை மேற்கொண்டார். தாழ்த்தப்பட்டோரைப் போலவே நாடார் சாதியினரும் ஒடுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டபோது ‘விருதுநகர் நாடார் சமையல் உண்டு’ என்று தன் மாநாடுகளில் விளம்பரப்படுத்தினார் பெரியார். தன் மாநாடுகளில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.

“நான் 25 வருடங்களாக மாட்டு மாமிசம் சாப்பிடுகிறேன். மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்துவருகிறேன். இனியும் மாடு தின்னக்கூடாது என்பவர்கள் யாராயிருந்தாலும் மரியாதையாக நாட்டைவிட்டே வெளியேறுவதுதான் மானமுள்ள காரியமாகும்” என்றார் பெரியார்.

1964இல் மதுரை அனுமந்தப்பட்டியில் கோழிப்பண்ணைத் திறப்புவிழாவுக்குப் பெரியாரை அழைக்கிறார்கள். பெரியாரோ கோழிப்பண்ணையைத் திறந்துவைத்துவிட்டு மாட்டுக்கறி ஆதரவு பிரச்சாரம் செய்திருக்கிறார்.

“நம் நாட்டில் கோழி சாப்பிடுவான், மீன் சாப்பிடுவான். மாடு சாப்பிட மாட்டேன் என்பான். மாடு சாப்பிடுவான், பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் என்பான் இப்படியே ஒவ்வொன்றை விட்டு வேறு ஒன்றை சாப்பிடக்கூடியவர்களும் உள்ளார்கள்.

நம் நாட்டில் இந்துக்கள் என்னும் கூட்டத்தில் சிலர் மாடு தின்பது இல்லை. சில கூட்டத்தார் சாப்பிடுகின்றார்கள். உலகில் எங்கும் மாடு சாப்பிடுகின்றார்கள். நமது நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மாடு சாப்பிடுகின்றார்கள் மற்றும் அநேக ஜாதியார் மாடு சாப்பிடுகின்றார்கள்.

நான் விடுதலை-பொங்கல் மலரில் மக்களின் உணவு விஷயமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் மனிதனுக்குக் கிரமமான உணவு மாமிசம்தான். சும்மா அதைவிட்டுவிட்டுப் பழக்கவழக்கத்தை உத்தேசித்து அதனை ஒதுக்குகின்றார்கள். அதிலும் மாடு தின்பதை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள். மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக்கொண்டு தானியங்களை உற்பத்தி பண்ணுவதுபோல மாட்டுப்பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவைப் பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதியுள்ளேன்.

தோழர்களே! பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள் ஆவர். இராமாயணம் பாரதம், மனுதர்மம் பார்த்தாலே தெரியும். யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம். பிறகு எப்படியோ, அதனைப் பார்ப்பான் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களைக் கீழ்மக்கள் என்று கூறி விட்டான்.

நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச, உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என்றாலும், கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும்” என்று பெரியார் அந்தக் கோழிப்பண்ணைத் திறப்புவிழாவில் பேசினார்.

‘பிராமணாள் கபே’ என்ற பெயரில் வர்ணாசிரம முறையை நியாயப்படுத்தும்படியான உணவகங்களை எதிர்த்துப் பெரியார் இயக்கம் போராடியது. குறிப்பாக சென்னை முரளி கபே பிராமணாள் கபே எதிர்ப்புப் போராட்டம் புகழ்பெற்றது. போராடிய பெரியார் தொண்டர்கள்மீது ஹோட்டல் மாடியிலிருந்து வெந்நீர் கொட்டப்பட்ட கொடுமையும் நடந்தது. ஆனாலும் பெரியாரின் தீவிர போராட்டத்தின் காரணமாகப் ‘பிராமணாள் கபே’ என்னும் பெயர் மாற்றப்பட்டது.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிறார்கள், மது அருந்துகிறார்கள், சரிவரக் குளிப்பதில்லை, அசுத்தமாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைக் கோயிலுக்குள் விடுவதில்லை, தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது’ என்று நியாயப்படுத்தப்படும் சாதிய மனநிலையை அம்பலப்படுத்தியவரும் பெரியாரே.

“இக்குலத்தவர்கள் குளித்து சுத்தமாய் இருக்க வேண்டுமெனச் சிலர் கூறுகிறார்கள். குடிக்கக் கூடாதென்கிறார்கள். மாமிசம் சாப்பிடக்கூடாதென்கிறார்கள். இப்படிக் கூறுகிறவர்கள்தாம் சீர்திருத்தக்காரர்களாம். இப்படி அவர்கள்மீது குற்றம் கூறிக் கேவலமாகப் பேசுகிறவர்கள் கள், சாராயம் குடிப்பவர்களையும் மாமிசம் தின்னுகிறவர்களையும் குளிக்காமலிருக்கிறவர்களையும் தொடாமல்தான் இருக்கிறார்களா என்று கேட்கிறேன். நான் வாரத்திற்கு இரண்டொருமுறைதான் குளிக்கிறேன். என்னைப்போலவே எண்ணிறந்தோரும் இருந்துவருகிறார்கள். இப்பேர்ப்பட்டவர்களை அவர்கள் தொட்டுக்கொள்வதில்லையா?

நம் நாட்டில் உற்பத்தியாகிற கள்ளும், கொலை செய்யப்படுகிற மாமிசமும் இந்தத் தீண்டாதவர்கள் எனப்படுவோர் வயிற்றுக்குள்தானா போய் விழுகிறது? சிலர் இவர்கள் மாட்டு மாமிசத்தைத் தின்னுகிறார்களே என்கின்றனர். நம் நாட்டை அரசாண்டு வருபவர்கள் மாட்டு மாமிசத்தை முழுக்கத் தின்பவர்களாயிருக்கிறார்கள். மாட்டு மாமிசம் சாப்பிடுபவனின் ஆளுகைக்குட்பட்டு அவனது பிரஜையாக இருக்கச் சம்மதிக்கும் நாம், நமது சகோதரன் மாட்டிறைச்சி தின்றால் என்ன முழுகிப்போய் விடுகிறது? என்ன நீசத்தனம் வந்துவிடப்போகிறது? இவையெல்லாம் வெட்கக்கேடா, விதண்டாவாதக் கொழுப்பா?

வேறுசிலர் செத்த மாட்டைத் தின்னுகிறார்களே என்கிறார்கள். இதனால் என்ன தீட்டு எந்த உருவாக வந்து அவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது? பதறப் பதற, கதறக் கதற மாட்டை அறுத்துச் சாப்பிடுவது பாவமா, மாண்டு மடிந்து மண்ணுக்குள் போவதை இல்லாத கொடுமையால் வயிற்றுக்குள் போடுவது நியாயமா? புழு தின்னும் கோழியையும் மலம் தின்னும் பன்றியையும்விட புல்லையும் புண்ணாக்கையும் தின்னும் மாடு கேவலமானதா?

குளிப்பதற்கு வசதி வாய்க்கப்பெறாதவன் எப்படிக் குளிக்க முடியும்? மகந்துகளையும் மடாதிபதிகளையும் ஒரு வீட்டுக்குள் போட்டுக் குளிக்கவும் பல் விளக்கவும் தண்ணீர் கொடுக்காமல் ஒருமாதம் வரை பூட்டி வைத்திருந்து திறந்துவிட்டால் அவர்களுடைய வாய் நாறாதா? உடம்பில் துர்வாடை வீசாதா? தண்ணீர் கொடுபடாமலும் தொட்டுக்கொள்ள விடுபடாமலும் தவிக்கும் தீண்டத்தகாதாரென்போர் உடம்பு குளிக்கவில்லை என்பது என்ன மதியீனம்? இறைச்சி வாங்கித் தின்பதற்குப் பணவசதி இல்லாமலடித்து அவனது உழைப்பிலிருந்து வரும் உணவுப்பொருட்களை அவனது வயிற்றுக்குப் போகாதவாறு பிடுங்கிக்கொண்டால் அவன் செத்த மாட்டையும் செத்த ஆட்டையும் தின்னாமல் என்ன செய்வான்? காடு மேடெல்லாம் அலைந்து, இரவு பகலென்றும் பாராமல் தண்ணீரில் நனைந்து, வெயிலில் வெந்த வியர்வையில் குளித்து விவசாயம் செய்வோன் தனது அலுப்புத் தெரியாது என்பதற்காகக் கள் குடிப்பதால் அவன் கேவலமாகிவிட்டானா?”

– இது 29.09.1929ல் நடைபெற்ற பள்ளர்கள் மாநாட்டில் பெரியார் பேசிய உரையின் ஒருபகுதி. ஒருபுறம் தலித் மக்களைத் தூய்மையற்றவர்களாகச் சித்திரித்து தீண்டாமையை நியாயப்படுத்தும் சாதியவாதிகள், இன்னொருபுறம் தலித் மக்கள் மாமிசம் அருந்தாமல், குடிக்காமல் இருக்கும்படி ‘சீர்திருத்த’ முயன்ற சகஜானந்தா போன்ற தலித் தலைவர்கள். ஆனால், பெரியாரோ முழுமையாக ஒடுக்கப்பட்டோர் பக்கம் நின்று அவர்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்ததுடன் ஆதிக்கவாதிகளை அம்பலப்படுத்தவும் செய்தார்.

இப்படி தொடர்ச்சியாக உணவின் பின்னுள்ள நுண்ணரசியலைப் புரிந்துகொண்டு அதைத் தன் இயக்கச் செயல்பாட்டின் ஒருபகுதியாக மாற்றியவர் பெரியார்.

இப்போதும் தமிழ்நாட்டில் தலித்துகள், இஸ்லாமியர்களைத் தவிர பெரும்பாலான சாதி இந்துக்கள் வீடுகளில் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால், வடமாநிலங்களில் பசு அரசியலும் மாட்டிறைச்சியும் எதிர்கொள்ளப்படுவதற்கும் தமிழ்நாட்டில் எதிர்கொள்ளப்படுவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இங்குப் பசுவை வழிபடும் கோமாதா வழிபாட்டு மனநிலை என்பது மிகமிகக்குறைவு. ‘மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் உடலில் துர்நாற்றம் வீசுகிறது’ என்பது போன்ற கற்பிதங்கள் மாட்டிறைச்சியின் மீதான அருவெறுப்பில் இருந்து பிறப்பவை. இங்கு மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்பவர்கள் மாட்டிறைச்சியின் மீதான அருவெறுப்பில் சாப்பிடாமல் இருக்கிறார்களே தவிர, பசு புனிதம் என்னும் மனநிலையிலிருந்து அல்ல. ‘பசுப்பாதுகாப்பு’ என்ற பெயரில் இங்கு வன்முறைத் தாக்குதல்களோ கொலைகளோ நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் பெரியாரும் திராவிட இயக்கமும்.

சென்னையில் நட்சத்திர விடுதிகளில் மாட்டிறைச்சி, ஏன் பன்றியிறைச்சிகூட கிடைக்கிறது. ஆனால் சுக்குபாய் பிரியாணிக்கடை போன்ற ஒருசில உணவகங்களைத் தவிர தலப்பாக்கட்டு, புகாரி, ஸ்டார் போன்ற புகழ்பெற்ற அசைவ உணவகங்களில் மாட்டிறைச்சி சமைக்கப்படுவதில்லை, அவை முஸ்லீம்களால் நடத்தப்படும் உணவகங்களாக இருந்தாலும்.

என் சொந்த ஊர் திண்டுக்கல். அங்கு தலப்பாக்கட்டு பிரியாணிக்கடையும் வேணு பிரியாணிக்கடையும் எந்தளவுக்குப் புகழ்பெற்றவையோ, வணிகரீதியிலாக லாபம் சம்பாதிக்கின்றனவோ அதே அளவு புகழ்பெற்ற, லாபம் சம்பாதிக்கும் மாட்டிறைச்சி பிரியாணிக்கடைகளும் உண்டு. கோவையிலும் இதே நிலை. தமிழ்நாட்டின் சாலையோரக் கடைகளில் பெரும்பாலும் மாட்டிறைச்சி விற்கப்படுகிறது, பரிமாறப்படுகிறது. இதற்கு இதுவரை எந்தத் தடையுமில்லை. இந்துத்துவ அமைப்புகளின் அரசியல் இங்குச் செல்லுபடியாகவில்லை. சாலையோரக்கடைகளில் மாட்டிறைச்சி உண்பவர்கள் அனைவரும் தலித்துகள், முஸ்லீம்கள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. பிற்படுத்தப்பட்டோரும் இந்தக் கடைகளில் மாட்டிறைச்சி உண்கிறார்கள். அதேபோல் டாஸ்மாக்கும் மாட்டிறைச்சியைப் பரவலாக்கியிருக்கிறது. ஒரு டாஸ்மாக் பாரில் நீங்கள் ‘போட்டி அல்லது குடல்’ என்று கேட்டுவாங்கினால் அது 99% மாட்டுக்குடலாக இருப்பதற்கான சாத்தியம்தான் அதிகம். அதை வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கும் அது தெரியும்.

அதேநேரத்தில் தலித்தல்லாத, இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் வீடுகளில் மாட்டிறைச்சி சமைப்பதில்லை. கோழி, ஆடு, மீன், முயல் இறைச்சி கிடைக்கும் உணவகங்களில் மாட்டிறைச்சி மட்டும் விலக்கப்படுகிறது. உணவகங்களில் பார்ப்பன ஆதிக்கம் குறைந்து மற்ற சாதியினர் சைவ உணவகங்களில் உள்நுழைந்திருக்கின்றனர். ஆனால், பார்ப்பனரல்லாதார் நடத்தும் உணவகங்கள், பேக்கரிகளின் பெயர்களும் ஆரியபவன், அய்யங்கார் பேக்கரி என்றிருக்கிறது. தேவர் ஹோட்டல், கோனார் மெஸ், கோழிநாடார் கடையெல்லாம் சாத்தியமானாலும் இன்றும் பள்ளர்/தேவேந்திரகுல வேளாளர், பறையர், அருந்ததியர் பெயரில் தமிழ்நாட்டில் உணவகமே இல்லை.

இவையெல்லாம் நம் முன் உள்ள சவால்கள், காத்திருக்கும் பணிகள். இன்னும் கடந்துசெல்ல வேண்டிய தூரம் அதிகம். அதேநேரம் இன்னொன்றையும் சொல்லவேண்டும். அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் பெரியார் பெயரைச் சொன்னதற்காகப் பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் குமுறுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நாம் தமிழர் கட்சியினரும் விலகல்வாத தலித்தியவாதிகளும் குமுறுவதும் அவதூறுகளை முன்வைப்பதும் முழுக்க முழுக்க பெரியார் மற்றும் திராவிட இயக்கம் மீதான வன்மத்தின் காரணமாகத்தான். இவர்கள் பார்ப்பனர்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் மறைமுகக்கூட்டாளிகளே.

sssugunadiwakar@gmail.com