அண்மையில் மலேசிய எழுத்தாளர் ம. நவீனுக்கும் நம்மூர் கதைசொல்லி பவா செல்லத்துரைக்கும் பேஸ்புக்கில் ஒரு மோதல் நிகழ்ந்த போது பவா பின்னூட்டத்தில் வந்து “மயிறு” எனக் கூறித் தன் எதிர்ப்பைப் பதிவு பண்ணியிருந்தார். அது ஒரு சிலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது – தமிழக இலக்கிய வரலாற்றின் மிக மோசமான வசைப் போர்களை அந்த ஒரு கெட்ட வார்த்தை முடித்து வைத்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், மிக அரிதாகத்தான் வறண்ட பூமியில் கருத்தியல் மோதல்களின் காய்ந்த இலைச்சருகுகளின் மத்தியில் அப்படி ஒரு பூ பூக்கிறது. நான் அப்படித்தான் நான் கெட்ட வார்த்தைகளின் மகத்துவம் பற்றித் தீவிரமாக சிந்திக்கலானேன்.

இருவருக்கு இடையில் கோபம் வெடிக்கும் போது அது கைகலப்பாக மாறாதிருக்கக் கெட்ட வார்த்தைப் பயன்பாடே உதவுகிறது, கெட்ட வார்த்தைகளே சொல்லத் தெரியாத ஒருவர் ஒரு கட்டையையோ கத்தியையோ எடுத்து பாவிக்கவே வாய்ப்பதிகம் என உளவியல் ஆய்வுகள் சொல்லுகின்றன. அது மட்டுமல்ல, கோபம் என்பதை நாம் உள்காயத்தினால் வரும் வலியின் வெளிப்பாடு எனக் கொண்டால் அங்கு முதல் நோக்கம் வலியைக் கட்டுப்படுத்துவது அல்ல குறைப்பதே. வலியைக் கட்டுப்படுத்த சிறந்த வழி வைவதே (hypoalgesia) என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐஸ் தண்ணீரில் கையை முக்கி வைத்து நீண்ட நேரம் குளிரின் வலியைப் பொறுக்கும் திறனைச் சோதிக்கும் ஆய்வு ஒன்றில் பங்கேற்பாளர்கள் கெட்ட வார்த்தைகளைச் சொல்லும் போது அவர்களுடைய வலி தாங்குதிறன் அதிகரிப்பதாக ராபர்ட்ஸன் மற்றும் ஸ்டீபன்ஸ் (2020) தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக உலகம் முழுக்க கெட்ட வார்த்தைகள் நோய்மை (சாக்காடு வராதா உனக்கு?), விலங்குகள் (நாயே, பன்னி, எருமை), உறவுமுறைகள் (இங்கு தான் நாம் சோபிக்கிறோம் – சிறந்த கெட்ட வார்த்தைகள் தாய், தந்தை உறவு, அதன் தகுதி பற்றியவை), மரணம் (அழுகி மண்ணோடு மண்ணாப் போவே, நாக்கில கேன்சர் வரட்டும்) என நால்வகைமைகளுக்குள் வரும் எனக் கூறுகிறார்கள். (ஸ்டேப்பிள்டன், பேகர்ஸ்டன், ஸ்டீபன்ஸ் மற்றும் பிறர் [2020]). மேற்குலகில் பொதுவாக கெட்ட வார்த்தைகள் பாலுறுப்பு, மூத்திரம், மலம், மதம் ஆகிய மூன்று பகுப்புகளுக்குள் வருவதாகக் கூறப்பட்டாலும் இந்தியக் கெட்ட வார்த்தைகளில் மதம், மலம், மூத்திரம் பெரிய இடத்தைப் பெறுவதில்லை. (பக்தி இலக்கியத்தில் இருந்து இன்றுள்ள சில பௌத்த / சமண வெறுப்புச் சொற்கள் வரை இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லை.) பிற இனத்தவர் / சாதிகளைத் தரமிறக்கும் சொற்களும் உலகம் முழுக்க கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. இவ்வகைக் கெட்ட வார்த்தைகளை சினிமாவில் கவுண்டமணி அதிகமாகவும் (கோமுட்டித் தலையா) வடிவேலு அவரை விடச் சற்றுக்குறைவாகவும் பயன்படுத்தினார். பொதுவாக இவ்வகை சினிமா கெட்ட வார்த்தைகளில் தலித்துகளும், பௌத்தர்களும், ஒரு சில இடைநிலைச் சாதிகளும் இலக்காக்கப்பட்டனர் என்பது என் பார்வை.

ஆனால், பொதுச்சமூகத்தில் வீடுகளிலும் உறவுகள் மத்தியிலும் அனேகமாக எல்லாப் பிற்படுத்த சமூகத்தினரும் கெட்ட வார்த்தைகளில் விமர்சிக்கப்பட்டனர். சினிமாவில் எங்குமே பிராமணர்கள் பற்றின கெட்ட வார்த்தைகளைக் காண இயலாது. ஆனால், நடப்புலகில் அவை தாராளமாக புழங்குகின்றன. அம்பேத்கர் தனது “தீண்டத்தகாதவர்கள்: அவர்கள் யார்? எப்படி தீண்டத்தகாதவர்கள் ஆயினர்?” எனும் நூலில் மகாராஷ்டிரத்தில் தலித் சமூகங்களில் பிராமணர்களைப் பழிக்கும், பகடி செய்யும் பல பழமொழிகள் உண்டெனக் குறிப்பிட்டு இதை வைதீக (×) பூர்வ பௌத்த சமரின் நினைவுப்படிமமாக விளக்குகிறார். தமிழில் உள்ள பிராமண வசைச் சொற்களை, பழமொழிகளையும் நாம் ஒன்று அம்பேத்கரிய வழியிலோ பிராமணியத்தைக் கைக்கொண்டு சமூக மேல்நிலையாக்கம் கொள்ளும் ஆவேசமாகவோ அர்த்தப்படுத்தலாம். இந்தக் கோணத்தில் நோக்குகையில் கெட்ட வார்த்தைகள் சாதிய சமூகத்தில் சமூகப் படிநிலையில் மக்களைத் தரமிறக்கும் எச்சரிக்கையைக் கொண்டவை.

அடுத்து உளவியலுக்கு வருவோம். தமிழ் அறிவுச்சூழலில் கெட்ட வார்த்தைகள் எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், சமகால ஆய்வுகள் கெட்ட வார்த்தைகளை மனித வாழ்க்கைக்கு அவசியமான ஒரு நேர்மறையான மொழிப்பயன்பாடாகவே பார்க்கின்றன. நாம் அடிப்படையில் மிருகங்கள் என்பதால் கெட்ட வார்த்தைகளை மிருகங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதில் இருந்தே ஆரம்பிக்கலாம். விலங்குகளைப் பொறுத்தமட்டில் காயத்தினால் ஏற்படும் வலியைச் சீறல், உடல்மொழியினால் மிரட்டுதல், பற்களைக் காட்டுதல் என்றே அவை வெளிப்படுத்தும். இவ்வெளிப்பாடு ஒரு நேரடியான சண்டை நிகழாதிருக்க உதவுகிறது. மிக அரிதாக தவிர்க்க இயலாத சூழலிலே விலங்குகள் பரஸ்பரம் காயப்படுத்தும். அது நிகழாதிருக்க ‘கெட்ட வார்த்தைகளே’ விலங்குகளுக்கு முக்கியமான கேடயமாகின்றன. நாய்களை எடுத்துக் கொண்டால் மனிதர்கள் தம் கோபத்தை, எரிச்சலைச் சொல்லின் வழியாக வெளிப்படுத்துவதையே அவை ஏற்கின்றன. அதாவது நீங்கள் கையை ஓங்கினால் கூட அதை ஒரு சைகைக் குறிப்பானாகவே அவை பார்க்கும். உங்களிடம் வராமல் விலகிப் போகும். கையை ஓங்காது ‘கெட்டப் பையன்’ (bad boy) என்று மட்டுமே சொல்லிப் பழக்கினால் நாய் அதை உங்கள் கெட்ட வார்த்தையாக எடுத்துக்கொண்டு உடனே பணியும். (இதை ஒரு நாய்ப்பயிற்சியாளர் எனக்குச் சொல்லித் தந்தார்.)

அதாவது கெட்ட வார்த்தையின் பொருள் நாய்மொழியில் வெறுப்போ, சமூக விலக்கமோ அல்ல, “நான் கோபமாக இருக்கிறேன், என்னருகே வராதே” என்பதே. சிம்பன்ஸி குரங்குகள் தம் மலத்தை எடுத்து எறிந்தோ காட்டியோ தம் கோபத்தைக் காட்டும். இச்சிம்பன்ஸிகளை ஆய்வுக்காக வளர்க்கும் போது மலம் கழிக்க வேண்டும் எனும் சொல்லுக்கு சைகை மூலம் ஒரு குறியைக் (sign) காட்ட சொல்லித் தருகிறார்கள். போகப் போக இக்குரங்குகள் தம் கோபத்தைக் காட்ட கெட்ட வார்த்தையாக அந்தக் குறியை சைகையாக தம் வளர்ப்பாளர்களிடம் காட்ட ஆரம்பித்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியே மனிதர்களுக்கு வருவோம்.

சாலையில் வாகன ஓட்டிகளில் தம் எரிச்சலை, கடுங்கோபத்தை வெளிப்படுத்தி கைகலப்புகளை தவிர்க்கவே கெட்ட வார்த்தைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாக ஸ்டேப்பிள்டன் தன் ஆய்வில் தெரிவிக்கிறார். எனக்கு இதைப் படித்த போது என்னுடைய பல்கலையில் வேலைக்குச் சேர்ந்த சில ஐரோப்பியர்கள் கன்னட மொழியில் கெட்ட வார்த்தைகளைக் கேட்டுக் கற்றுக்கொண்டது நினைவுக்கு வந்தது. அக்கெட்ட வார்த்தைகளே தம்மை நிம்மதியாக காரோட்ட அனுமதித்தாக அவர்கள் என்னிடம் குறிப்பிட்டனர்.

கெட்ட வார்த்தைகளைச் சொல்லும் போது நமது நரம்பியல் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பது சுவாரஸ்யமானது. கெட்ட வார்த்தைகளைச் சொல்லும் போது நம் மூளையில் மொழி மற்றும் நினைவுத்திறனுக்குப் பொறுப்பான பகுதிகள் விழித்துக்கொள்ள நாம் ‘சமரிடு அல்லது தப்பித்துச் செல்’ (fight or flight) எனும் மனநிலைக்குச் செல்கிறோம். அதனாலே விளையாட்டின் போதும் (கிரிக்கெட், குத்துச்சண்டை), செக்ஸின் போதும் கெட்ட வார்த்தைகள் நம்மை அதிக விழிப்புடன், தன்னிலை மறந்து உணர்ச்சிப்பெருக்குடன் செயலில் ஈடுபட உதவுகின்றன. அப்போது நமக்கு அதிக செயலின்பம் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆய்வில் சிலரை வீடியோ கேம் ஆட வைத்து அவர்களில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் அதிக விழிப்பாக இருந்து கூடுதல் புள்ளிகளை வென்றதைக் கண்டனர். இன்னொரு ஆய்வில் சமூகக் கூச்சத்தைத் தூண்டும் கெட்ட வார்த்தைகள் (தாயின் பிறப்புறுப்பு, தாயுடனான பாலுறவு) விதவிதமாகப் பயன்படுத்தப்படும் போது அவை வெகுசீக்கிரமாக நம் நினைவில் பதிவதாகவும், அப்போது நமது உணர்ச்சித்தூண்டலும், விழிப்பும் அதிகமாக இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

அடுத்து சமூக உறவாடலில் கெட்ட வார்த்தைகளின் இடமென்ன என்று பார்ப்போம்.

கெட்ட வார்த்தைகள் சமூகக் குழுமங்களில் மனிதர்களுக்குத் தம் ஒற்றுமையை வளர்க்க, எதிர்த்தரப்பை ஒடுக்கித் தம்மை வலுப்படுத்த, ஒரு சேதியை வலுவாக வெளிப்படுத்த, உணர்ச்சியை வெளிப்படுத்த உதவ என நான்கு வகைகளில் செயல்படுவதாக ஆலன் மற்றும் பூரிட்ஜ் சொல்கிறார்கள் (2006). பொதுவாக, பதின்வயதினர் தமக்கான நண்பர் குழுக்களை உருவாக்கும் போது கெட்ட வார்த்தைகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம். நகைச்சுவைக்கும் கெட்ட வார்த்தைகள் அவசியம். இளைஞர்களின் குழுக்களில் நகைச்சுவையாக வைபவர்கள் பிரசித்தமாக இருப்பதை, விரைவில் குழுத்தலைவர்களாக அவர்கள் முன்னேறுவதும் இதனாலே. சமூகமாக்கல் திறன் குறைவானவர்களுக்குக் கெட்ட வார்த்தைத் திறனும், பொதுவாக மொழித்திறன், நினைவுத்திறனும் குறைவாக உள்ளதைப் பார்க்கும் போது ஒரு சமூகத்தில் உணர்ச்சிகரமான கெட்ட வார்த்தைப் பயன்பாடு அருகும் போது அங்கு மக்கள் ஏன் தனித்தனி தீவுகளாகி மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் என்பதை அவதானிக்க முடியும். (இதில் ஆண், பெண் பேதமில்லை.)

அரசியல் சமூகத் தளங்களில், இலக்கிய உலகில் மட்டுமல்ல மத்திய வர்க்க்க் குடும்பச் சூழலில் கூட இன்று நான் காணும் வினோதங்களில் ஒன்று ‘நாகரிகமாக’ பரஸ்பரம் திட்டுவது. நாகரிகமாக மிகக் கொடூரமாக விமர்சிப்பது. அதன் வழியே ஒருவரை மிக மோசமாகக் காயப்படுத்துவது. அதாவது நாம் கெட்ட வார்த்தைகளின் நற்பயனை இழந்து வருகிறோம்.

இலக்கிய உலகில் யார் மீதாவது துவேசம் ஏற்பட்டால் “உனக்கு எழுத்து வராது, தலைகீழாக நின்றாலும் வராது” எனத் தொடங்கி “நீ எழுதுவதெல்லாம் குப்பை” என ரவுண்டு கட்டி “அடேய் பையா உனக்கு இலக்கிய வரலாற்றில் இடமே இல்லை” என்று காறித்துப்புவதுடன் சமர் முடியும். இந்த “யாரில்” நானும் சேர்வேன். எனக்கும் சக எழுத்தாளர்கள் மீது கோபம் ஏற்பட்டால் அவர்களை “இலக்கியத் தகுதி அற்றவர்” என்று வையவே செய்வேன். ஆனால் உணர்ச்சிகள் வடிந்த பிறகே இதன் அபத்தம் உறைக்கும். ஏன் இப்படிச் செய்கிறோம்? இலக்கிய தகுதிதான் பஞ்சாயத்தா என்றால் இருக்காது. வேறேதோ ஒன்று – நடத்தை, கருத்துகள் என. ஆனால் நடத்தையையும் சொற்கள் / கருத்துகளையும் எப்படி எதிர்கொள்வது? அதுதான் நமக்குத் தெரியவில்லை.

முன்பு நாம் ஒருவருடைய மோசமான நடத்தையையும் சொற்களையும் கெட்ட வார்த்தைகளால் எதிர்கொண்டோம். அவை அவரது உடல், தாய்-தந்தையரின் நடத்தையைப் பழிப்பதாக இருந்தன. யாரும் அச்சொற்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டதாக இல்லை. மிக மோசமாகக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு அடுத்த நிமிடமே கட்டி அணைத்துக் கொள்பவர்களை நான் கிராமங்களில் சாமான்யகளிலும், எல்லா ஊர்களில் செயல்படும் இலக்கியக் குழுக்களிலும் பார்த்ததுண்டு. மனிதர்களிடம் கசப்பும் கோபமும் ஏமாற்றமும் கொள்ளும் போது, அழுத்தம் தாள முடியாத நிலைக்குப் போய் வெடிக்க இருக்கும் போது நம் சமூகம் அதைச் சரிசெய்ய கண்டுபிடித்த ஷார்ட் சர்க்யூட்தான் கெட்ட வார்த்தை. அது நம்மை உடனடியாக லகுவாக்கி விடும்.

நான் என் இளமையில் முழுக்க கெட்ட வார்த்தைகளால் சூழப்பட்டே வாழ்ந்தேன். அப்போது எனக்கு மனிதர்கள் என் வசைகளாகப் பொழிகிறார்கள் எனப் புரியவில்லை. அதில் ஏன் மானக்கேடு உள்ளதாக நான் கருதவில்லை என்றாலும் கூட, வீட்டில் இருந்து பள்ளிக்கு, கல்லூரிக்கு எனப் போன போதும் நான் என் சகமாணவர்களிடத்துக் கெட்ட வார்த்தைகளின் பிரளயத்தையே கண்டேன். சென்னைக்குப் படிக்கப் போன போது கல்லூரி வளாகத்தில் இதே கெட்ட வார்த்தைகளின் ஆங்கிலத் தூசு மண்டலத்தின் நடுவே சிக்கினேன். ஒரு வாக்கியத்தில் நான்கு fuck இல்லாமல் அங்கு யாராலும் பேச முடியாது. ஆனால் ஆச்சரியமாக, கெட்ட வார்த்தை கேட்டு என் ஊரில் யாரும் மனம் புண்படவில்லை, சென்னையில் கல்லூரிக்குள்ளும் கெட்ட வார்த்தைகள் வெறுப்பையோ கோபத்தையோ அன்றி அந்நியர்கள் மத்தியில் அணுக்கத்தையும் கூட்டு மகிழ்ச்சியையும் வரவழைத்தன.

ஆனால், இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது – குறிப்பாக சமூகவலைத்தளங்களுக்குப் பிறகு. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அதிக பணப்புழக்கம் மற்றும் பணவீக்கத்திற்குப் பிறகு ஒரு போலியான ‘அரசியல் பிரக்ஞை’ ஏற்பட்டிருக்கிறது. ‘முற்போக்கு அரசியலின்’ பெயரிலான ஒரு ஒழுக்கவாதம் அது. இந்த ஒழுக்கவாதம் கூட ஒழுக்கம் மீதான பிடிப்பு அல்ல. இந்த ஒழுக்கவாதம் ஒரு நுண் அரசியல் நடவடிக்கைக்கான கேடயம். நுண் அரசியல் கண்காணிப்பின் வழி கிடைக்கிறது. அதற்கு முதலில் பலியானது ‘உடலை ஒடுக்கி அணுக்கத்தை நிறுவும்’ மொழிதான் (கெட்ட வார்த்தைகள்). இது ஒரு வினோதமான முரண். சாதிய உளவியல் படி பார்த்தால் இந்திய சமூகம் மேலும் மேலும் பிராமணியமாக மாறி வருவதை இது காட்டுகிறதா? தெரியவில்லை. ஆனால், நம் சமூக உளவியல் இப்படித்தான் இருக்கிறது.

இது தீவிர இலக்கியம், விவாதங்களில் இருந்து பாலின / சாதி ஒழிப்பு அரசியல் செயல்பாட்டுவாதிகள் வழியாக வெகுஜன ஊடகங்களுக்கு சென்றது. போலீஸ் வன்முறை வழியான சமூக ஒழுங்கு, அதன் வழியான பாசிசத்தை திரை அழகியலாக்கியவர் ஹரியும் கௌதம் வாசுதேவ மேனனும். ஹரியின் “அருள்” (2004) “அநியாயமா பேசினா ஆண்டவனுக்குப் பிடிக்காது, அசிங்கமாப் பேசினா அருளுக்குப் பிடிக்காது” எனும் பஞ்ச் வசனத்துக்குப் பிரசித்தமானது. கெட்ட வார்த்தைகள் கேட்டால் கொந்தளித்து எதிர்வினையாற்றி அதனாலே கடைசியில் டானாகும் ஒருவரின் கதை அப்படம். இன்னொரு பக்கம் சமூகவலைத்தளங்கள் வழியாகப் பொது ஊடகத்திலும் கெட்ட வார்த்தைப் பயன்பாடு என்பது ஒருவரது உடலை அசிங்கப்படுத்துவது, பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தை விமர்சிப்பது, சாதியைப் பழிப்பது என ஒரு கருத்தாடல் பொதுச்சமூகத்தில் உள்ள மத்திய, மேல்மத்திய வர்க்கத்தினருக்கு சென்றது என நினைக்கிறேன்.

கெட்ட வார்த்தைகளைப் பேசுவது அசிங்கம், அநாகரிகம் என்பதில் இருந்து அது பிற்போக்கானது, ஆதிக்கமனநிலையால் ஆனது, நுண்ணுணர்வற்றது எனும் எண்ணம் தோன்றிப் பரவலாகியது. அதாவது இது மனதளவிலான மாற்றம் அல்ல, மொழியளவிலான மாற்றம் மட்டுமே. இது நல்ல மாற்றங்களைக் கொண்டு வராமல் ஒர் அச்சத்தை மக்களிடையே விதைத்தது. இதையே நான் ‘போலி அரசியல் விழிப்புணர்வு’ என்கிறேன்.

எந்த உள்ளார்ந்த பண்பாட்டு மாற்றமும் மொழியிலே ஆரம்பிக்கும் எனும் மூடநம்பிக்கை நம்மில் சிலரிடம் உள்ளது. (மொழியின் உளவியல் பயனில் இருந்து இது வேறுபட்டது.) ஏன் மூடநம்பிக்கை என்கிறேன் என்றால் பின்நவீன யுகத்தில் மொழி எந்த சாரத்தின் வெளிப்பாட்டு முகமும் அல்ல. மொழியே ஒரு ‘சாரம்’ தான். மொழி அதன் வழி நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ அதற்கு நிகரான ஒன்று. நகலும் நிஜமும் சமமானது எனும் போது நகலே நிஜம் இன்று. ஆகையால் நாம் வசதியாக மொழியளவிலான மாற்றங்களையே இன்று முன்னெடுக்கிறோம். உள்ளுக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு ‘உள்ளே’ இல்லாதவர்களாக மாறி வருகிறோம்.

கெட்ட வார்த்தைகள் மட்டுமல்ல அரசியல் சரித்தன்மை இல்லாத எந்தச் சொல்லையும் இன்று கடுமையாக ஒறுத்து நம் அதிகாரத்தைக் காட்ட விழைகிறோம். முக்கியமாக நாம் இன்று ‘நம்மையே’ சாடுகிறோம், கண்டிக்கிறோம், கட்டுப்படுத்துகிறோம். நாவின் நுனி வரை வரும் கெட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு அதற்குப் பதிலாக “நீங்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்? இது தவறு அல்லவா? நாம் இவ்விவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிய மாட்டீர்களா?” என்று போதிக்கத் தொடங்குகிறோம். இதனால் முற்போக்கு மனோபாவம் கொண்டவர்களுக்கு குடும்பத்துக்குள், பொதுவெளியில் தம் உணர்ச்சிகளைக் காட்ட முடியாமல் போய் அவர்களின் எளிய கோபம் குரோதமாக, கடும் வெறுப்பாக மாறுகிறது. கெட்ட வார்த்தைகள் இல்லாமல் மனிதர்கள் இடையே ஒருவித அந்நியோன்யம் காணாமல் போய் வெறுப்பும், அந்நியத்தன்மையும் அதிகரிப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இன்னொரு பக்கம் நமக்கு வசையைக் ‘காவல் புரிவதில்’ ஒரு தனித்த மகிழ்ச்சி கிடைக்கிறது. ஒரு பருவப்பெண்ணை அருவா கம்புடன் பாதுகாப்பதைப் போன்ற கிளர்ச்சி அது. அது நுண் அதிகாரத்தின் தித்திப்பு. அதிகார மிக்கவரின் முன்பே நாவடக்கத்தைப் பின்பற்றுவோம். மொத்த சமூகமே தனக்காகவும் பிறருக்காகவும் நாவடக்கம் பேணும் போது எல்லாருமே அதிகாரம் மிக்கவராக ஆவதாக ஒரு பாவனை தோன்றுகிறது அல்லவா அதுவே நான் சொன்ன தித்திப்பு. அந்த சர்க்கரைத் துகளுக்காக நாம் நாவைச் சப்புக்கொட்டிக் கொண்டு சுய-பாஸிஸ்டுகளாக மாறிவிட்டோம். மோடி ஆட்சிக்கு வருமுன்பே இந்த பாசிச நாடகம் இங்கு துவங்கி விட்டது. இதன் திரைக்கதையாளர்கள் துரதிஷ்டவசமாக முற்போக்கு சிந்தனையாளர்களும் பாலின சமத்துவ, சாதியொழிப்பு செயல்பாட்டாளர்களே.

மோடியின் காலத்தில் பொதுவெளியில் சுத்தபத்தமாகப் பேச வேண்டிய கட்டாயம் அரசியலையும் விளையாட்டு போன்ற கேளிக்கைத் துறைகளையும் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டது. இப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாகப் பேசத் தயங்கி அறிக்கைகளை தலைவர்களும் பிரபலங்களும் வாசிப்பதும், பேச நேரும் போது கூட மிக கவனமாக அரசியல் சரித்தன்மையுடன் பேசுவதும் நடக்கிறது.

எதிரணி வீரர்களை மிக மோசமாக வசை பாடி அச்சுறுத்தி வந்த ஆஸி கிரிக்கெட் வீரர்கள் கூட எதிரணியினரின் கையைப் பற்றி “ஹி ஹி ஹி நல்லா இருக்கீங்களா பாஸ்” என ஏட்டு ஏகாம்பரம் போலக் கேட்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதை ஒரு நல்ல மாற்றம் எனச் சொல்பவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் – முன்பை விட இன்று பாசிச அதிகாரப் பயன்பாடு அதிகாரித்துவிட்டது. “மோடி எனும் பெயர் கொண்டவர்கள் திருடர்களாக இருப்பார்கள் போல” எனச் சொன்னதற்கு ராகுல் காந்தி என்ன நிலையானார் என நாம் அறிவோம். அவரளவுக்கு அதிகாரம் இல்லாத பொதுமக்கள் “மோடி என்பது ஒரு திருடரின் பெயர்தான், ஆனால் அதற்காக அவர் மோடி என்றும் பொருளில்லை, அவர் திருடர் என்று மட்டும் ஆகி விடாது” என்று ‘எனக்கு ஒரு பொண்ணுன்னா ஒரு பொண்ணு, ரெண்டு பொண்ணுன்னா ரெண்டு பொண்ணு, ஆக மொத்தத்தில எனக்கு ரெண்டு பொண்ணு’ என “ஜீன்ஸ்” பட எஸ்.வி சேகர் போலப் பேசும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள்.

சின்னச்சின்ன பிழைகளுக்காக மக்கள் பரஸ்பரமும், அரசாலும் கடுமையாக ஒடுக்கப்படும் சமூகக் கலாச்சாரம் தோன்றியதில் எல்லாரும் ஒருவித அச்சத்திலே வாழ்கிறோம். பேச்சு சுதந்திரம் அதிகரித்து விட்டதாலே, நமக்கு கட்டுப்பாடுகள் தேவை என்று சிலர் இதை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், பேசவே சுதந்திரம் இல்லாத போது அது எப்படிப் பிரச்சினையை ஏற்படுத்தும் என யாருக்கும் புரியவில்லை. (பேசத்தான் சுதந்திரமே ஒழிய அவதூறு செய்ய அல்ல எனக் கூறும் நிலையும் வந்துள்ளது. கெட்ட வார்த்தை பேசுவது ஒரு தொழில்ரீதியான சைபர் செல் உத்தியாக மாறியதே அதற்குக் காரணம். அதைப் பற்றிக் கடைசியாக.)

கடவுளையே வசைபாடும் ஒரு மரபு நம் ஊரில் உண்டு. ஆனால், இன்று கேரளாவின் ‘தெறிப்பாட்டிலேயே’ கெட்ட வார்த்தைகள் வருவதில்லை. அது ஒரு தளுக்கான எதிர்ப்பாட்டாக மட்டுமே உள்ளது. கடவுள் முகம் சுழிப்பார் என்றல்ல, அதிகார வர்க்கமும் முற்போக்கு பொதுசமூக அதிகார மையமும் முகம் சுளிக்குமே என்றுதான்.

‘இலக்கிய வசைகளைப்’ பற்றி ஆரம்பத்தில் சொன்னேனே. இலக்கிய வசை என்பதே ஒரு வேடிக்கையான சொற்சேர்க்கைதான். ஏனெனில் அதில் ‘வசையே’ இல்லை. அதற்குப் பதிலாக ஒருவரைப் பற்றி அவதூறை இறைப்பதும், இலக்கிய மதிப்பீடுகளைக் குவித்து அவரது இடத்தை மறுப்பதுமே ‘வசை’ என இங்கு அறியப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் இலக்கிய வசை என்பது ‘கறாரான இலக்கிய விமர்சனம்’ தான். யோசித்துப் பார்த்தால் ‘ஓத்தா …. பையா, கொம்மால ஒன்ன சாவடிக்காம விட மாட்டேன், உன்…’ எனும் வசைத்தொடரை விட இது மிகவும் காயப்படுத்தும் கூர்மையும் வன்மமும் மிக்கது. அதனாலே நம்மைக் கெட்ட வார்த்தையால் திட்டியவரை உடனடியாக மறந்தும் மன்னிக்கவும் செய்து கட்டியணைக்க முடிந்தால் நம்மால் அவர்கள் இலக்கிய வசை பொழிந்தால் அதை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

அண்மையில் ஒர் இலக்கியப் பதிப்பாளர் என்னிடம் தன்னை முன்பு ஒரு முக்கிய எழுத்தாளர் கடுமையாக இலக்கிய வசைபாடி தன் இணையதளத்தில் ஒரு நீண்ட இலக்கியக் கட்டுரையை வெளியிட்ட போது, அதனால் மனத்தளவில் மிகவும்பாதிக்கப்பட்ட அவர் இரவு முழுக்க விழித்திருந்து அதற்குப் பதில் அனுப்பியும் அடுத்த பல ஆண்டுகளாக அது ஒரு கொடுங்கனவாகத் தன்னைத் தொடர்ந்ததாகவும் என்னிடம் சொன்னார். அதை என்னிடம் பகிரும் போது தன்னால் அந்த முதுகெலும்பில் ஜில்லிடும் அச்ச உணர்வை, அழுத்தத்தை அப்போதும் உணர முடிகிறது என்றார். எனக்கும் இதே எழுத்தாளரால் முன்பு இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டதுண்டு. அன்று நான் என் பதிப்பாளரிடம் சென்று மாலை முடியும் வரை நெடுநேரம் அழுதுகொண்டிருக்க அவர் என்னை ஆறுதல்படுத்தி அனுப்பியது நினைவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் இரு ரேப் விக்டிம்களைப் போல எங்களுடைய மனக்காயங்களைப் பரிமாறிக் கொண்டோம். அப்போது எனக்குள் எழுந்த கேள்வி இது:

அந்த இலக்கிய வசைக்கட்டுரைகள் எழுதும் வரை ஜாலியாக “இந்த வாழ்க்கை என்பது ஒரு ரோஜாப்பூவின் மென்மையைக் கொண்டது” என்று புன்னகை ததும்ப பேசியவர்கள் சட்டென ஏன் கறாரான விமர்சகர்களாகிச் சாமியாட வேண்டும்? இவர்கள் ஏன் விமர்சனத்தை ஒரு பொறுப்பாக எடுத்துக் கொள்வதில்லை? ஏன் திடீர் என்கவுண்டர் ஏகாம்பரம்களாகி காய்கறிக்கடைக்காரர்களை மிரட்டுகிறார்கள்? இதற்குப் பதிலாக ரெண்டு கெட்ட வார்த்தைகளைச் சொல்லிச் சாடியிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு துன்பத்தைத் தவிர்த்திருக்க இயலும்! (புறவயமான விமர்சனங்களை நான் இங்கு வசையாகக் காணவில்லை.) ஏன் அவர் அதைச் செய்யவில்லை? இதைப் புரிந்து கொள்ள தமிழின் கறாரான விமர்சகர்கள் யார் என்று விசாரித்தால் போதும். அவர்கள் பாசிஸ்டுகள் தானே? ஆக பாசிசத்துக்கும் கறாரான விமர்சனத்துக்கும் ஒரு வலுவான தொடர்பு உள்ளதாலே நாம் கோபம் வரும் போதெல்லாம் லத்தியை எடுத்துத் தட்டுகிறோம். இலக்கியவாதிகள் (கூடவே அரசியல் கோட்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர்களும்) சிறுபத்திரிகைகள் துவங்கப்பட்ட காலம் முதலே முசோலினி, ஹிட்லர்கள்தாம் என்பதாலே இந்தப் போக்கு இலக்கியவாதிகளிடம் இருந்து வெகுஜன சமூகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்!

சரி, இவ்வாறு கெட்ட வார்த்தை ஒழிப்பு, நாகரிகமாற்றல் மாற்றத்திற்குப் பின்னர் நம் சமூகத்தில் கெட்ட வார்த்தைகள் ஒரேயடியாக ஒழிந்துவிடவில்லை – பின்நவீன படைப்புகளில் குறிப்பாக, கெட்ட வார்த்தைகள் ஒரு ‘ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்’ ஆகிவிட்டன. வெகுஜனப் பரப்பில் கெட்ட வார்த்தைகளைச் சொல்வது தேசத்துரோகம் போல பார்க்கப்படும் காலத்தில்தான் தமிழ் சினிமாவிலும் தீவிர இலக்கியத்திலும் மிக அதிகமாக்க் கெட்ட வார்த்தைகள் படைப்பு மொழியாக வெளிப்படுகின்றன. ஆனால், கவலையில்லாமல் வெளிப்படையாக மக்கள் கெட்ட வார்த்தை பேசிக்கொண்டிருந்த காலத்திலோ சினிமாவும் இலக்கியமும் தூய ஆத்துமாக்களாக வெள்ளைச் சேலை அணிந்து ஜெபித்துக்கொண்டிருந்தன. என்னவொரு முரணான நிலை!

கடைசியாக, இந்தக் ‘கெட்ட வார்த்தை ஸ்டைல்’ பற்றியும் பார்ப்போம். தீவிர இலக்கியத்தில் கெட்ட வார்த்தைகள் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்துக்கும், பின்நவீன கலக எழுத்துக்கும் ஒரு பொதுமொழியாக (lingua franca) மாறிவிட்டது. கெட்ட வார்த்தைகள் பொதுவாக ஒருவரது கோபத்தின், எதிர்ப்பின் வெளிப்பாடு. ஆனால், இன்றோ எழுத்தில் அது ஒரு ‘நடையாகி’ விட்டபின் அது ஒர் அழகான மொழியாக, ரசிக்கத்தக்க சொல்லாடலாக, ஒர் அதிர்ச்சிக் கருவியாக, அலங்கார வளைவாக இருக்கிறது. சமூக வலைத்தள எழுத்திலோ சீண்டி ரசிக்கும் ஒரு கேளிக்கையாக கெட்ட வார்த்தைகள் உள்ளன. ஊரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சீண்டி ஏச வைத்து அதைக் கேட்டு மக்கள் ரசிப்பார்களே அதேபோல கெட்ட வார்த்தை எழுத்து சமூகவலைதளங்களில் நம்மைக் கிளுகிளுப்பாக்குகிறது. இப்படி நடையும் கேளிக்கையும் வேடிக்கையுமான கெட்ட வார்த்தை கொண்டாடப்பட, நேரடியான (நிஜமான) வசைகளோ மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன.  “ச்சே இவர் இப்படியானவர்னு நான் நெனக்கல. கமெண்டில வந்து மயிருன்னு சொல்றாரு.” என்று வாசகர்கள் ஏமாற்றம் கொள்கிறார்கள். ஆனால், அதே நபர் தன் கவிதையிலோ கதையிலோ இதை விடப் படுகொடூரமான கெட்ட வார்தைகளை பாவித்தால் ‘ஐயா இவ்வளவு ஆபாசமாகப் பேசுகிறீர்களே, நீங்கள் உயர்வானவர் என்றல்லவா நம்பினேன்’ என்று கேட்க மாட்டோம்.

இன்னொரு பக்கம், பாஜகவின் சைபர் செல்கள் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு ஒரு கட்சியை மிரட்டிப் பணிய வைத்து அதிகாரத்தைக் கோரும் பண்பாடும் இன்று வலுத்துள்ளது. இதற்காக மட்டுமே அவர்களின் மாநிலத் தலைமை சில கோடிகளை வருடத்திற்குச் செலழிப்பதாகச் சொல்கிறார்கள். Cyber bullying என இதற்கு ஒரு பெயரும் உள்ளது. இந்த ஆள்மிரட்டல் கதையாடல் இணையத்தில் தனிமனிதர்கள் மத்தியில் கத்திக்குத்து கந்தன்களின் பிச்வாக்கத்தியாகத் தோன்றி இன்று பலமிக்க அரசியல்வாதிகளின் இணைய ரவுடிகளின் வீச்சருவாளாக மாறியுள்ளது. இவர்கள் வசையை ஒரு தொழிலாகவே மாற்றி அதன் மூலம் மாதம் 30,000-50,000 வரை சம்பாதிக்கிறார்கள். இதை நான் என் மாணவர் ஒருவர் வழியாகவே அறிந்தேன்.

அவர்தான் இதை ஒரு பார்ட் டைம் தொழிலாகச் செய்து வருதாக சொல்லி எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களோ தலைவர்களோ எங்கு பேசினாலும் அங்கு உடனடியாகச் சென்று எப்படியெல்லாம் வசைபாடி நிலைகுலைய வைக்க வேண்டும் எனத் தனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாகச் சொன்னார். உ.தா., இத்தகையோர் ஒருவரைப் பற்றி மிக மோசமாக பழிச்சொல்லை உதிர்ப்பார்கள். ஆனால், அவர் மீது இவர்களுக்கு எந்த வருத்தமோ கோபமோ இராது, அவருடைய கருத்தியல், நம்பிக்கைகள், பின்னணி குறித்து ஒன்றையும் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, தாம் ஆதரிக்கும் கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் பற்றிக்கூட இவர்களுக்குச் சரிவரத் தெரியாது. இந்த ஜோம்பிகள் இதை ஒன்று பணத்துக்காகவோ ஆதிக்கவாதிகளுடன் நிற்கையில் கிடைக்கும் தற்காலிக அதிகாரத்துக்காகவோ செய்வார்கள்.

ஒரு பக்கம் கெட்ட வார்த்தைகளைக் கண்காணித்து ஒடுக்குவது, ஒரு நுண்-அதிகாரத்தைத் தரும்போது   கெட்ட வார்த்தைகளை ஒரு ஸ்டைலாக மாற்றுவது, அதைச் சற்று பிளாஸ்டிக்காக, ஆபத்தானதாக மாற்றுகிறது. இது எந்தளவுக்குப் போய் விட்டதென்றால் கெட்ட வார்த்தைகள் கோபத்தில் கன்னத்தில் அறைவதைப் போல இருந்து இன்று அவை ஒருவரை கடுமையாக அவமதித்து துன்புறுத்தி உளவியல் நோயாளியாக மாற்றும் ஆயுதங்கள் ஆகிவிட்டது. இருபது, முப்பதாண்டுகளுக்கு முன்பு கெட்ட வார்த்தைகளை ஒரு பதில் வசையால் எதிர்கொண்டு இயல்பாகக் கடந்திருப்பேன். ஆனால், இன்றைய பிளாஸ்டிக் சூழலில் யாராவது என்னைக் கெட்ட வார்த்தையால் திட்டினால் என்னால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில், வசையென்பது பொருளற்றதாக மாறிவிட்ட இன்றைய சூழலில் அவ்வசைக்கு எதாவது ஒரு புலப்படாத பொருள் இருக்குமோ என அஞ்சுகிறேன், பதற்றமாகிறேன்.

பண்டைய கெட்ட வார்த்தைகள் என்பவை பாலியல் (அல்லது சாதிய) உடலைக் குறித்த கூச்சத்தில் இருந்து வந்தவை தாம். ஆனால் உதிர்க்கப்பட்ட மறுநொடியே அது நாம் என்றும், அது நாம் அல்ல என்றும் நாம் முரணாக எதிர்வினையாற்றினோம். ‘நான் அல்லன் அவ்வார்த்தையில் குறிக்கப்பட்டவன், அவன் நீதான்’ எனச் சொல்லத் தலைப்பட்டோம். ஆகையால் பௌதீக உலகில் இருந்து விடுபட்டு அன்பு, கடமை, உணர்வுகள், கருத்துகள் என மிதப்பவர்கள் ஒரு வசைச்சொல்லால் பூமிக்கு மீட்டு வரப்பட்டார்கள். அவர்கள் தம்மைப் பழித்தவர்களையும் அவ்வாறு கீழே பிடித்து இறக்கினார்கள்.

உடலான இந்த உலகுக்கு மீளும் ஒர் எளிய விளையாட்டாகக் கெட்ட வார்த்தைகள் இருந்தன. ஏன் கெட்ட வார்த்தைகளில் பாலியல் ஒழுங்கீனம் மையமாக உள்ளதென்றால் அதுவே உடலுக்கும் நமக்குமான பிணைப்பு. செக்ஸைத் தொடர்ந்து பேச முடியாத சூழலில் செக்ஸ் மீறலைப் பேசி நம்மை உடலுக்குள் மீண்டும் பொருத்திக்கொள்ள முயல்கிறோம். அவ்விதத்தில் கெட்ட வார்த்தைகள் மிக ஆரோக்கியமான ஒர் உளவியல் விளையாட்டாகவே இருந்தன. அரசியல் கதையாடல்கள் வழியாக நாம் இன்று அந்த விளையாட்டை ஒர் ஒடுக்குமுறையாகத் தவறாகப் புரிந்துகொண்டு சுய-கைதிகளாகி விட்டோம்.

பாலியல் பழிச்சொற்களான கெட்ட வார்த்தைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும் என்பதால் கெட்ட வார்த்தைகளில் வரும் பெண்ணுடல் ஒரு பொதுவான சமூகப்பெண்ணுடலே என நினைக்கிறேன். (எப்படி அம்மனும் ஐயனாரும் பொதுவான தெய்வங்கள் அன்றி தனிப்பட்டவர்கள் அல்லவோ அப்படி.) ஆகையாலே இரு பாலினத்துக்கும் இச்சொற்கள் பொதுவாக இருந்தன. ஆனால், நிகர்நிலை உலகில் நாமும் நமது பிம்பமும் ஒன்றாகி விடுவதால் கெட்ட வார்த்தைகள் பயங்கரமான உருக்கொண்டு நம்மை ஒடுக்குகின்றன. ஒரு சொல்லுக்காக நாளெல்லாம் மருகிக்கொண்டிருப்பவர்களை இவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நடப்புலகக் கெட்ட வார்த்தைகளுக்கு இத்தாக்கம் இருப்பதில்லை.

இப்படி, கெட்ட வார்த்தைகளில் இருந்து விலகி நாம் ஒரு மிக மோசமான இடத்துக்கு வந்துவிட்டோம். உடலின் சுதந்திர உலகில் இருந்து கருத்துகளின் பாசிச உலகுக்கு வந்துவிட்டோம். இதற்குத் தீர்வு ‘மகத்தான கெட்ட வார்த்தைகளுக்குத்’ திரும்புவதே.

உசாத்துணை:

Karyn, Stapleton, Kristy. Beers Fägersten, Richard. Stephens, Catherine. Loveday. “The power of swearing: What we know and what we don’t”. Lingua, Volume 277, 2022.

Stephens, Richard. “Think Swearing isn’t Big or Clever? Think Again.”  allaboutpsychology.com.

abilashchandran70@gmail.com