ஜீன் டீல்மேன், 23 குவாய்டு காமர்ஸ் 1080 பிரஸ்ஸல்ஸ்.
சாண்டால் அகெர்மேன் பெண்ணிய திரைமொழி
சினிமா பற்றிய ஓர் குறிப்பு.
2022 ஆம் ஆண்டில் SIGHT & SOUNDS என்ற இதழின் சிறந்த 100 தலைச் சிறந்ந திரைப்படங்களின் பட்டியலில் முதல் திரைப்படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பெற்ற திரைப்படம். முதல் முறையாக ஒரு பெண் இயக்குனர் படம் இந்த பட்டியலில் பிடித்திருப்பதும் இதுவே முதல் தடவை.
ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கடந்துபோவதோடு அதைப்பற்றி எழுத வேண்டிய நிர்ப்பந்தம் செய்வதும் அதே சினிமாதான். சில படங்களை எழுதி செல்லாமல் நம்மால் மறக்க முடியாது. எழுதும் வரை அதன் நினைவுகள் நம்மை தொடர்ந்தும் வெவ்வேறு தருணங்களில் நம்மோடு பயணிக்கன்றது.
”நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில் நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும் போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள் மனதை ஒளிர்விக்கும்.” – ழான்கோலே-
2022 வருடம் SIGHT & SOUNDS என்ற சினிமா சஞ்சிகை மிக தலை சிறந்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் முதல் முறையாக நான் மிகவும் நேசிக்கும் பெண் திரை ஆளுமை சாந்தால் அகெர்மேனின் மிக நீண்ட பெயரை கொண்ட திரைப்படமான JEANNE DIELMAN, 23, QUAID COMMERCE, 1080 BRUXELLES, (1975) முதல் படமாக பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலை அந்த இதழில் ஆர்வமாக திருப்பிய போது இந்த படம் இருந்ததை என்னால் நம்பவே முடியாது இருந்தது. கூடவே என்னை எனது நினைவுகளை கேரள மாநிலமான திருவனந்நதப்புரத்தில் நடக்கும் அற்புதமான ஒரு சர்வதேச திரைப்பட விழாவான கேரள திரைப்பட விழா நோக்கி திருப்பியது.
அங்கே பல வருடங்களுக்கு முன்பு சாந்தால் அகர்மனின் இந்த அற்புதமான படத்தை ரெட்ரேஸ்பெக்டிவ் பிரிவில் அனைத்து படங்களையும் திரையிட்டார்கள். ஆனால் இந்த படம் மடடும் இரவு காட்சியாக திரையிட்டார்கள். இந்த படத்திற்கு அதிகமான கூட்டம் இல்லை, அதனால் மனதில் ஏதோவொரு பதற்றத்துடன் நாம் தவராக அரங்கில் நுலைந்தது போல இருந்தது. இத்துடன் இது என்ன இவ்வளவு பெரிய பெயராக உள்ளது என்ற மனநிலையில், நான் அந்த படம் திரையிடும் அரங்கில் சென்று இருக்கையில் அமர்ந்தேன். ஒரு சிறிய அரங்குதான் கொஞ்சம் பேர்தான் அமர்ந்திருந்தார்கள். இரவு காடசி என்பதால் பெரும்பாலும் கூட்டம் குறைவாகதான் இருக்கும். படம் தொடங்கியது. ஆனால் பலரும் இருக்கையை விட்டு நகர்ந்து சென்றபடி இருந்தார்கள். இறுதியில் அந்த திரைப்படத்தை இறுதி வரை பார்த்தது வெறும் மூவர் மட்டுமே.
நானும் நண்பன் ஹவியும்தான் படங்களின் பட்டியலை தயாரித்து தேர்ந்தெடுத்துப் பார்ப்பது உண்டு. ஆனால் நண்பன் ஹவியும் இந்த படத்திற்கு ஏனோ அயர்வாக உள்ளது என்று நினைத்து திரை அரங்கிற்கு வெளியே காத்திருந்தார். ஏனெனில் இந்த படத்தின் கால அளவு மூன்று மணி நேரம். திரையரங்கிற்கு அருகில் நாம் வசிப்பதற்கு தற்காலிமான அறை எடுத்திருப்பதனால் நானும் அவரும் படம் நிறைவு பெற்று இரவு 12.00 மணிக்கு அறையை அடைந்தோம். படம் முடிந்து நான் வெளியே வந்த போது துாக்க கலக்கத்தில் திரையரங்கைின் வாசலில் ஹவி மட்டும் மந்தமான இருளில் காத்திருந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
அகர்மனிக் இந்த படம நல்லதுதான் ஆனால் எனக்குதான் தொடர்ச்சியாக படம் பார்க்க இயலாமல் போனது. என்று அவர் சொன்னார். இப்படியாக இந்த படத்திற்கும் எனக்குமான உறவு என்பது பல வருடங்கள் கடந்து வருகின்ற நினைவுகள்தான். ஆனால் தலைச் சிறந்த சினிமாவாக முதல் இடத்தை பிடித்திருக்கின்ற செய்தி என்னை இந்த படம் பற்றிய நினைவுகளை எழுத துாண்டியது. கிட்டத் தட்ட 15 வருடங்களுக்கு பிறகும் இந்த படத்தின் நினைவுகளும் மனதில் அப்படியே இருப்பது ஏனென்று தெரியவில்லை. சாந்தால் அகர்மனின் திரைமொழிதான் காலம் கடந்தும் இன்னும் நினைவுகளில் முண்டியடித்து வருகின்றது. அவரின் வசிகரமான திரை ஆளுமை யாரையும் அசைக்கும்.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது இன்னும் நன்றாக நினைவில் உள்ளது. எனது சினிமா பற்றிய மொழியை இந்த படம் முற்றிலும் மாற்றி விட்டிருந்தது. ஒரு புதிய சினிமா மொழியின் தீவிரம் பற்றியும், கருத்தாழம் மிக்க ஒரு கனதியான விடயத்தை மிக எளிமையாக காடசி பிம்பங்கள் வழியாக நிலைத்திருக்கும் கேமரா கோணங்கள், சவுணட் என்ற கலையை மிக உன்னதமாக கையாண்டிருக்கும் நேர்த்தி, மளதின் ஆழ்ந்த உணர்வுகளை இவரின் சினிமா மிகவும் எளிமையாக காட்சிப்படுத்தி, மனதின் அழியாத கோலங்களாக மாற்றி விடுகினறது. இவரின் காட்ச படிமங்கள் ஒவ்வொன்றும் ஆத்மாவின் உள் அறைகளில் பாய்ந்து செல்கின்றது. அது நம்மை ஏதோவொன்றாய் மாற்றியும் விடுகின்றது.
”திரைப்படம் போல வேறெந்தக் கலை வடிவமும் மனித ஆத்மாவை ஊடுருவிச் செல்வதில்லை.” – இங்க்மர் பெர்க்மான் –
JEANNE DIELMAN, 23, QUAID COMMERCE, 1080 BRUXELLES, (1975) இவ்வளவு பெரிய நீண்ட தலைப்பை கொண்ட இந்த திரைப்படத்தின் மூன்று மணி நேர கதை என்னவென்று தெரியுமா…? ஒன்றும் இல்லை வெறும் இரண்டு வரி கதைதான்.
“ ஒரு விதவை பெண் தனிமையில் இருக்கிறாள். அந்த தனிமையும் வாழ்க்கை என்ற தொடர்ச்சியும் அவளை ஒரு கொலை செய்ய வைக்கின்றது.!” இதுதான் இந்த மூன்று மணி நேர சினிமாவின் சாராம்சம். இந்த கொலைக்கான காரணங்களை ஆய்வு செய்யும் பகுதியாக மீதமான காலங்கள் காட்சி மொழியில் திரையில் விரிகின்றது.
”1975 ல் Jeanne dielman படம் வெளிவந்த பொழுது, திரைப்பட வரலாற்றில் பெண் சாதனையின் முதல் ‘மாஸ்டர் பீஸ்’ என்றார் லேமண்ட். பட உருவாக்கத்திலும் படத் தொகுப்பிலும் அசாதாரண சிறப்புத் தன்மையுடன் கூடிய புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியது இப்படம். Jeanne dielman ஒரு பெண்ணிய திரைப்படம் என்று சொல்வதற்கு அகர்மான் தயங்கவில்லை. ஒரு பெல்ஜிய விதவைத் தாயை பற்றியது இப்படம். புற உலகில் உள்ள இடையூறுகள் மூலம் சுயம் நசுக்கப்படுவதையும் மிகவும் ஆற்றலுடன் தனது அடையாளத்தையும் அடிப்படை உணர்வுகளையும் மீட்டெடுக்க வேண்டியதன் தேவையாகத் தான் Jeanne dielman ஒரு கொலையும் செய்ய வேண்டிய நிலை வருகின்றது. மிகவும் கவனத்துடன் படைப்புருவாக்க உத்திகளை அகர்மான் இப்படத்தில் கையாள்கிறார். உதாரணமாக நெடிய கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பொழுது அவளுடைய தினசரி நடவடிக்கைகளை அதிக பூடகத் தன்மையோடு தொடர்ந்து சித்தரிக்கிறார். ஒவ்வொரு நடவடிக்கையின் அசாதாரண தன்மைக்குள்ளும் அவர் ஆழ்ந்து செல்கிறார். தனது சுய வெளிப்பாட்டுக்காக அதி முக்கியத்துவம் வாய்ந்த காமிராவின் தன்மையையே மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதனை இப் படைப்பின் மூலம் பிரகடனப்படுத்தினார். ஒரு குடும்பத் தலைவி என்ற நிலையில் ஒரு பெண்ணினுடைய மனம் தினசரி பணிகளின் மீதும், விவகாரங்களின் மீதும் அந்நியமான நிலையைப் பற்றி மிகவும் நுட்பமான முறையில் அவர் திரைப்படம் செய்த பொழுது பெண்ணிய வாதத்தினுடைய உலகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உள்ள கடந்து வரவேண்டிய அந்த 18 ஆண்டுகளில் மிகவும் விவாதிக்கப்படக் கூடிய படைப்பாளியாகிவிட்டார்.Jeanne Dielman படம் மிகவும் இளவயது பெண்களின் சித்திரங்களின் வரலாற்றில் ஒரு மைல் கல்.” என்று தனது அகர்மன் பற்றிய ஒரு மொழிப்பெயர்ப்பு குறிப்பில் ஹவி எழுதியுள்ளார்.
ஒற்றை கதாபாத்திரம்தான் இந்த படத்தின் மையக் கதாப்பாத்திரம் மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் முகமற்ற ஓவியத்தின் புள்ளிகளாவவே உள்ளது. ஆனாலும் அந்த புள்ளிகளும் மையத்தை நோக்கி உணர்வை எழுதுகின்றது. அதிலும் தனது மகனுடன் இருவரும் சாப்பாட்டு மேசையில் மௌனமாக இருப்பதோடு காட்சிகள் கதையை பேசி கடக்கின்றது. படத்தின் காட்சிகள் பெரும்பாலுத் அந்த மைய பாத்திரத்தின் முகவரியில் உள்ள வீட்டின் அறைகளும் சாப்பாட்டு மேசையும், குளியலறையும், சமயலறையும், படுக்கையறையும் என்று உள்ளது. சில வெளிப்புறக் காட்சிகள் தனிமைதான் சட்டகம் முழுவதும் வருகின்றது.
கிட்டத்தட்ட முழு தனிமையில் வாழும் ஒரு விதவை அகெர்மனின் சொந்த நகரமான பிரஸ்ஸல்ஸின் நடுவில் அவள் அரிதாகவே பேசும் மகன். அவரது நேரம் வீட்டு வேலைகளைச் சுற்றி சம்பிரதாயமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது-சமைத்தல், துடைத்தல், தூசி துடைத்தல், படுக்கைகள் செய்தல், மளிகை சாமான்களை வாங்குதல்-மற்றும் இந்த நடவடிக்கைகளின் பல நிகழ்வுகள் நிகழ்நேரத்தில் காட்டப்படுகின்றன, அவை ஒரு இனவரைவியல் திரைப்படத்தில் இருக்கும் காட்சிகளைப் போல் நமக்கு காட்டப்படுகிறது.
தனிமை மனதின் சுயத்தை விவரிக்க ஒரு வழி கிளாசிக்கல் சோகத்துடன் கடக்கும் சமையலறையின் இனவரையலாக உள்ளது. வீட்டில் உள்ள பழமையான வானொலியில் இருந்து ஒலிக்கும் இசை மட்டுமே படத்தில் வரும் இசை. இந்த இசை கூட இளையராஜாவின் படத்தில் எங்கோ கேட்ட ஓசையாக உள்ளது. இங்கிருந்து இந்த இசையை யாரோ கடத்தி இருக்கலாம் என்று மனதில் ஒரு குரல் கேட்கிறது. அவள் தனது ஒவ்வொரு மதியம், இரவு உணவிற்கு உருளைக்கிழங்கை வேகவைக்க எடுக்கும் நேரத்தில், பல ஆண்கள் வழக்கமான மனிதர்களில் ஒருவரை தனது படுக்கையறைக்குள் அழைத்துச் செல்கிறார், அங்கு அவர் பணத்திற்காக உடலுறவை பரிமாறிக்கொள்கிறார்.
ஏறக்குறைய மூன்றரை மணிநேரம் ஓடும் நேரத்தின் நடுவில் படம் சதுரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாதி, விளக்கக்காட்சி, முதல் ஒரு ஆணின் வருகையுடன் தொடங்கி, இரண்டாவது புறப்படுவதில் முடிகிறது. (இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.) இரண்டாம் பாதியில், அவளின் வெறித்தனமாக கட்டமைக்கப்பட்ட உள் மனதின் குரூரத்தின் வெளிப்பாடுகளும், அடக்கப்பட்ட ஆசைகளின் வன்முறை தடம் வழக்கம் தவறாகப் போகத் தொடங்குகிறது; தவறுகள், துளிகள் மற்றும் கசிவுகள், அகெர்மன் ஒருமுறை “இருப்பில் உள்ள பிரச்சனை” என்று குறிப்பிட்டதை போல் தடுக்க முனையும் அவளின் வாழ்க்கையை பயன்படுத்திய ஆண்களின் மீதான ஒரு வன்முறையாக படம் சொல்ல முனையும் கதையை நம்மால் அப்படி ஒன்றும் சாதாரணமாக புரிந்து கடக்க முடியாது.
அவள் தனிமை வாழ்க்கையின் மூன்று நாட்கள் செல்கிறாள். ஒரு ஒற்றைத் விதவையும் தாயும் தன் மகன் இல்லாவிட்டால் உலகில் முற்றிலும் தனிமையில் இருப்பாள், அவள் உயிர்வாழ்வதற்கான எளிய காரணம் இதுவாக கூட இருக்கலாம். அவள் வாழ்வு தினமும் வழக்கப்படி போகின்றது. அவள் சமைக்கிறாள், சுத்தம் செய்கிறாள், பெரும்பாலும் தனக்குத்தானே ஒரு பிடிமானம் தரும் வாழ்க்கை வைத்திருக்கிறாள். அவள் ஒரு பாலியல் தொழிலாளி. அவள் பணம் சம்பாதிப்பதற்காக தன் வீட்டிற்கு ஆட்களை வரவழைக்கிறாள். குறிப்பிடத்தக்க வகையில், அகர்மேன் பெரும்பாலும் நமக்குக் காட்டாத அவரது வாழ்க்கையின் சில கூறுகளில் இதுவும் ஒன்றாகும். மாறாக, அவர்கள் ஒரு அறைக்குள் நுழைவதைப் பார்க்கிறோம், மேலும் இருள் காட்சியைப் பிடிக்கும்போது அவர்கள் ஒன்றாக நேரம் கடந்து செல்வதைக் காண்கிறோம். அதன் பிறகு அவள் அந்த மனிதனிடம் விடைபெறுவதையும் தன் நாளைப் பற்றி தொடர்வதையும் காட்டுகிறது. இது “மெதுவான சினிமா” என்று குறிப்பிடப்படலாம், ஆனால் இது ஒரு நகைச்சுவைக்குரிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது,
இது மட்டுமல்ல இந்த படத்தின் முடிவுதான் மற்ற இரண்டு மணி நேரத்தின் கதையை நகர்த்தி விடுகின்றது. உலகின் தலைச் சிறந்த சினிமா என்ற முதல் இடத்தை சுவிகரிப்பதற்கு காரணம் என்று எனக்கு தோன்றுகின்றது. இந்த திரைப்படத்தை பொறுமையாக கவனமாக பார்த்து முடிக்கும் போது வாழக்கைப் பற்றிய பல்வேறு கருத்துக்களை நமது சிந்தனை ஓட்டத்தில் கலப்பதை நம்மால் தவிர்க்க முடியாது போகும். ஒளிரும் மனதில் உள்ளார்ந்த நிற குடுவையில் மறைந்திருக்கும், நமக்குள் ஏற்கனவே விதைக்கப்பட்ட ஆதிக்க மனோ நிலையின் மீது இந்த சினிமா ஒரு அசைவை ஏற்படுத்தும்.
அகர்மனின் இந்த படம் நிச்சயமாக ஒரு முறை பார்க்க வேண்டியது, நல்ல சினிமாவை நேசிக்கும் நம் ஒவ்வொருவரினதும் தேடலையும் ஆழந்த படைப்பு மொழியின் அவசியத்தையும் ஏற்படுத்தும் என்பது மடடும் நிதர்சனம்.
”அகர்மானின் கனவு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது. எனவே பிரஸ்ஸல்ஸில் உள்ள பெல்ஜியன் திரைப்பள்ளியில் சேர்ந்தவருக்கு அங்கு கிடைத்ததோ வெறும் அச்சடிக்கப்பட்ட பாட திட்டங்களும், தொழில்நுட்ப ரீதியான கோட்பாடுகள் மட்டுமே. தனது தீராத படைப்பு வேட்கையை சுருக்கிக் கொண்டு ஒரு சாதாரண மாணவியாய் இருக்க முடியாமல் படைப்பு உருவாக்க அனுபவம் எதையும் தராத அந்த திரைப்பள்ளியிலிருந்து வெளியேறினார்.
1968ல் தனது முதல் சுய படைப்பான Saute Ma Ville யை எடுக்கிறார். வெறும் 13 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய அப்படத்தை எடுக்கும் பொழுது அவருக்கு வயது 18. அலுப்பூட்டக் கூடிய பள்ளியில் படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய அகர்மான் ஷோத்மாவில் உள்ள ஒரு ரெஸ்டாரொண்டில் சர்வராக பணிபுரிந்தும், நண்பர்களிடமிருந்து திரட்டிய சொற்ப பணத்தைக் கொண்டும் அப்படத்தை தயாரித்தார். முதல் படைப்பு அனுபவம் பற்றி அகர்மான் கூறும் பொழுது.
ஒரு நாள் எனக்கும் என்னைப்பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. அது தான் Saute Ma Ville என்ற படம். எனக்கு காமிராவும், கொஞ்சம் பணமும், ஏதாவது விளக்குகளும், காமிராவை இயக்கித் தரக் கூடிய ஒருவரும் தேவையாயிருந்தது. எனக்கே தெரிந்த ஒருவரிடம் உதவியை நாடினேன். மற்றொருவர் ஒரு காமிரா கடன் தந்தார். கொஞ்சம் திரைச் சுருள் வாங்கினோம். இப்படியாக ஒரே இரவில் இந்த சினிமாவை செய்தோம். பிறகு நான் தான் அதை படத்தொகுப்பு செய்தேன்.” என்று தனது மொழிப்பெயர்ப்பு குறிப்பில் எழுதுகிறார் நண்பர் ஹவி.
வீடும் வீட்டின் முகவரியே இப்படத்தின் தலைப்பாக வைத்திருப்பதன் காரணம் ஒரு வேலை வீடும் மற்றும் அதன் நிர்வாகத்தின் முக்கிய மையம் சமையலறை சார்ந்த வேலைகள் ஒரு பெண்ணின் வலியும்தான் காரணமாக இருக்கலாம். பல தருணங்களில் வீடு சிறையாக மாறி விடுகின்றது. அன்மையில் படுக்கையே வாழக்கை என்ற நிலையில் வாழும் எனது அம்மாவின் செயல் இழந்த உடல உறுப்புகளும், அவரது அந்திம வாழ்க்கையின் மீது இந்த வாழ்க்கை நியமித்த வலிகளும் அகர்மன் சொல்ல வரும் கடந்த வாழக்கையின் நராகரிக்கப்பட்ட சுயங்களின் இழப்பை இப்படி எனது அம்மாவை தாக்கிய முடக்கு வாதம் போல, இங்கே பெண்களின் இருப்பு உலகின் ஆதிக்க அதிகாரங்களினால் முடக்கப்பட்ட வலிகளின் கதைகளையே நாமும் எழுதுகிறோம் என்ற குற்றவுணர்கள் வந்து நம்மை தொந்தரவு செய்தாலும். இங்கே பெண் மட்டுமல்ல அனைவரினதும் உலகமும் எப்போதும் ஏதோவொரு அகப்பட்ட சிறையில் பிடிபட்ட வீட்டின் ஒற்றை அறைகளில் சாளரங்கள் மட்டுமே நமக்கு மீட்பை தரும் என்று எழுத தோன்றுகின்றது. இந்த சினிமாவின் உள்ளார்ந்த ஓட்டங்களாக அவ்வப்போதும் வரும் எனது நினைவு குறிப்புகளில் இப்படியே இன்னும் உள்ளது.
Mariemahendran134@gmail.com