சொர்க்கம் இருப்பதாக நீங்களே வெறுமனே நம்பிவிட முடியாது. சொர்க்கத்தில் வசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காதவரை… – கம்போடிய பழமொழி.

போருக்கும் அமைதிக்கும் இடையேயான நூற்றுக்கணக்கான உணர்வுகளை, ஆயிரக்கணக்கான சம்பவங்களை லட்சக்கணக்கான பக்கங்களில் வாசித்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான திரைப்படங்களாகப் பார்த்திருக்கிறோம். சலிக்க சலிக்க காது வலிக்க வலிக்கப் பேசியிருக்கிறோம். இவற்றையும் தாண்டிப் பேசவோ, வாசிக்கவோ, கேட்கவோ ஏதேனும் இருக்கிறதா என்ன?

இருக்கிறது என்பதால்தான் கம்போடியாவில் பிறந்து, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் 52 வயதுப் பெண் எழுத்தாளரான லூங்க் வுங் (Loung Ung) தன் அனுபவங்களின் ஊடாக பாசிஸ ஆட்சி நடந்த கம்போடிய நினைவுகளைத் தொடர்ச்சியாகப் புத்தகங்களாக எழுதி வருகிறார்.

தான் எழுதும் நூல்களில் தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் உலகத்திடம் முன்வைக்கிறார். சரியா தவறா என்கிற விமர்சனத்தையெல்லாம் வாசகர்கள் செய்து கொள்ளட்டும். இதுதான் நடந்தது என்று ஒட்டுமொத்தமாகத் தான் கடந்து வந்த பாதையை அச்சில் பதிவு செய்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமானவை என்று சத்தியம் செய்கிறார்கள் வாசக அனுபவத்தில் கரை தேர்ந்த விமர்சகர்கள்.

லூங்கின் அப்பா, கம்போடியாவின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். அவருடைய அம்மா சீனாவிலிருந்து இடம்பெயர்ந்து இங்கே வசித்தவர். காதல் திருமணம். கம்போடியாவை ஆண்ட அரச குடும்பத்தில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றினார் லூங்கின் அப்பா. அந்தக் காலத்திலேயே நல்ல வசதியான குடும்பம். வெளியே போய்வர இரண்டு கார், ஒரு டிரக் இவர்களுக்கு சொந்தமாக இருந்தது. நல்ல வசதியான வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். போன் இருந்தது. பாத்ரூமில் ‘பாத்டப்’ இருந்தது. வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்ய வேலையாட்கள் இருந்தார்கள். உள்ளூர் நீச்சல்குளத்தில் நினைத்தபோதெல்லாம் நீந்திவிளையாட ‘பர்மனென்ட் பாஸ்’ இருந்தது. இதெல்லாம் சொகுசா என்று இன்று கேட்டால் அர்த்தமில்லை. எழுபதுகளில் இதுதான் ‘லக்ஸூரி லைஃப்’.

கூடவே கடுமையான உள்நாட்டுப் போரால் அந்நாட்டில் ஏற்பட்ட மோசமான பஞ்சத்தோடு இந்த ராஜபோக வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், கொஞ்சமல்ல நிரம்பவே ஆடம்பரம்தான்.

இந்த ஆடம்பரமெல்லாம் ஏப்ரல் 17, 1975 வரைதான்.

அங்கே அரசாட்சிக்கு எதிராக்க் கலகம் பிறந்தது. உலகின் படுமோசமான சர்வாதிகாரியாக இன்றளவும் பேசப்படும் போல்பாட் தலைமையிலான கிமர் செம்படை ஆட்சியைக் கைப்பற்றியது. ‘கம்பூச்சிய குடியரசு’ என்று பெயர்மாற்றி, மக்களை வதைக்கத் தொடங்கினார்கள். உழவுத் தொழிலில் ஈடுபட மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். வெளிநாட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டதால், சாதாரண நோயைக் கூட தீர்க்க வழியின்றி பல்லாயிரக்கணக்கானோர் மாண்டார்கள். நாட்டின் பல இடங்களில் ஹிட்லர் பாணியில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டன. அரசுக்கு எதிராக முணுமுணுக்கக் கூட வேண்டாம். மனசுக்குள் நினைத்தாலே போதும், பிடித்து வந்து கொலை செய்தார்கள் போல்பாட்டின் கொலைவெறி ராணுவத்தினர்.

இந்தக் கொடூர சம்பவங்கள் நடந்த காலகட்டத்தைதான் லூங் ‘First they killed my father’ என்கிற தன்னுடைய முதல் நூலில் பதிவு செய்தார்.

அப்போது லூங்குக்கு ஐந்து வயது இருக்கும். வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார். நகருக்குள் நுழைந்த ராணுவம், அங்கிருந்த மக்களை எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடும்படி ஆணையிட்டது. சுமார் இருபது லட்சம் பேர் ஒரே நாளில் தங்கள் வீடு, உடைமைகளை விட்டுவிட்டு நகரை விட்டு வெளியேறினார்கள். தங்களுக்கு சொந்தமான டிரக்கில் இலக்கில்லாமல், குடும்பத்தை அழைத்துக்கொண்டு சுற்ற ஆரம்பித்தார் லூங்கின் அப்பா.

ஒரு வாரம் இவ்வாறாக சுற்றியபிறகு கிராமம் ஒன்றில் இருந்த உறவினர் வீட்டில் அடைக்கலம் கிடைத்தது. முந்தைய ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்தவர்களைத் தேடித்தேடி கிமர் ராணுவம் வேட்டையாடத் தொடங்கியது. அவர்களையெல்லாம் சிறைசெய்து ஆங்காங்கே கொலைக்களங்களாக உருவாகியிருந்த முகாம்களில் அடைத்தது.

இந்த முகாம்களில் பசி, நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் மாண்டார்கள். உணவில் விஷம் வைத்தும் பலர் கொல்லப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இதுபோன்ற ஒரு முகாமில் லூங்க் குடும்பம் வாழவேண்டியிருந்தது. வெளியுலகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இங்கே வந்து சில மாதங்களிலேயே லூங்கின் பதினெட்டு வயது அண்ணன், பதினாறு வயது அண்ணன், பதினான்கு வயது அக்கா ஆகியோர் பிரிக்கப்பட்டு வேறு வேறு முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இந்த முகாம்களில் குடும்பமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவர்களைத் தனித்தனியாகப் பிரித்து சித்ரவதை செய்வது முதன்மையான கொடுமையாக அமைந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு லூங்கின் பதினான்கு வயது அக்கா உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட செய்தி அவர்களை வந்து சேர்ந்தது. உடலை அடக்கம் செய்வதற்காக லூங்கின் அப்பாவை அழைத்துச் சென்றார்கள். அதன்பிறகு அவரை யாருமே பார்த்ததில்லை.

லூங்க் தன்னுடைய அம்மா மற்றும் மீதமிருந்த ஒரு சகோதரன், இரு சகோதரிகளோடு அதே முகாமில் இருந்தார். சில நாட்களிலேயே ஏழு வயது லூங்த் தனியாகப் பிரிக்கப்பட்டு வேறு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே கடுமையான பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒருமுறை முகாமிலிருந்து தப்பி தன்னுடைய தாயைப் பார்க்க வந்தார். அங்கே நிலைமை இன்னும் படுமோசம்.

இந்தக் கொடுமைகள் வியட்நாம் படையினர், கிமர் ராணுவத்தை அடித்து நொறுக்கும்வரை (1979-80) நீடித்தது. எல்லாம் முடிந்தபோது ஒரு சகோதரன், ஒரு சகோதரி மட்டுமே லூங்குக்கு மிஞ்சியிருந்தனர்.

வியட்நாமியர் அமைத்த முகாம்களில் இதுபோல லட்சக்கணக்கான குடும்பங்களைப் பிரிந்த குழந்தைகள் இருந்தார்கள். கொடூரமான மனவுளைச்சல்களுக்கு ஆளான இவர்களில் சிலர் படகுகள் மூலமாகத் தப்பி தாய்லாந்துக்கு சென்றனர். லூங்கும் அவரது சகோதர சகோதரியும் இப்படித்தான் பாங்காக் நகருக்குச் சென்றார்கள்.

அப்போது அமெரிக்க மதகுருமார்கள் சிலர் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். அதிர்ஷ்டவசமாக லூங்க் & கோ இம்மாதிரி தத்தெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கேயே படித்து வளர்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் லூங்க்.

தன்னுடைய சிறுவயது நாட்களை மாதவாரியாக லூங்க் பதிவு செய்து வெளியிட்ட நூலுக்குப் பரவலான பரிதாபமும், வரவேற்பும் கிடைத்தது. அரசியல் விமர்சனமாக இல்லாமல் போரில் பாதிக்கப்பட்டோரின் கோடிக்கணக்கான அப்பாவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குரலாக லூங்கின் குரல் பார்க்கப்பட்டது.

அதேநேரம் அமெரிக்கவாழ் கம்போடியர்கள் சிலர் இந்நூலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கவும் செய்தார்கள். கிமர் ராஜ்ஜியம் மலர்ந்தபோது லூங்குக்கு ஐந்து வயதுதான். அந்த வயதில் நடந்த இவ்வளவு சம்பவங்களை நினைவில் வைத்து இப்போது தொகுப்பது சாத்தியமில்லாதது. சில உண்மைச்சம்பவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு லூங்க் இவ்வளவு விரிவாக எழுதியிருப்பது புனைவு என்று விமர்சித்தார்கள்.

‘First they killed my father’ நூலில் வந்த சில சம்பவங்களை ‘Girl rising’ என்கிற திரைப்படத்தில் காட்சியாகவும் வைத்தார்கள்.

முதல் நூலின் தொடர்ச்சியாக Lucky child, Lulu in the sky என்று அடுத்தடுத்து இரண்டு நூல்களையும் வெளியிட்டார். இந்நூல்களில் தன்னுடைய இன்றைய வாழ்க்கை வரை அமெரிக்கவாழ் கம்போடியர்களின் பார்வையையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இதுவரை முப்பது முறைக்கும் மேல் தன் தாய்நாடான கம்போடியாவுக்குப் பயணம் செய்திருக்கிறார் லூங்க். அந்நாட்டில் இன்னமும் இரண்டரை ஏக்கர் நிலம் லூங்குக்கு உரிமையானதாக இருக்கிறது. அதில் ஒரு வீடு கட்ட வேண்டும், அந்த வீட்டுக்குத் தன்னுடைய அப்பா பெயரை சூட்டவேண்டும் என்பது அவரது கனவு.

நம் காலத்தில் நமக்கு மிக அருகில் கம்போடியாவில் நடந்ததைப் போன்ற மாபெரும் இன அழிப்பு நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் அப்பா, அம்மாவை இழந்து அனாதை ஆகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கைம்பெண்களாகி வாழ்வைத் தொலைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கை, கால் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். அரசியல் பாரபட்சமின்றி இந்தக் கொடுமைகளையும் லூங்க் போல யாராவது பதிவு செய்து உலகின் பார்வையை ஈர்க்கக்கூடாதா என்று ஆதங்கம் ஏற்படுகிறது.

 

yuvakrishna@gmail.com