இதயம்.. இதயம்…

நானும் என் இதயத்துடன்
மேசையில் அமர்ந்து
தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்
எந்திரன் போல் இருக்கிறாய்
சுக்கு நூறாய் நொறுங்குகிறாய்
பின் தானாகவே அசெம்பிள் ஆகிறாய்
எப்போது துடிக்க வேண்டும்
எப்போது நிறுத்த வேண்டுமெனத்
தெரிந்து வைத்திருக்கிறாய்
என்னதான் நடக்கிறது என்றேன்
சிரித்துக்கொண்டே எழுந்து ஓடுகிறது

என் இதயத்திற்கு
அழுத்தம் அதிகம் தான்
மூடு இல்லாமல் பேசவே பேசாது
கலவிக்குப்பின் அது
இன்னும் வேகமாகத் துடிக்கிறது

எத்தனையோ பேர்
கால் பந்து போல்
என் இதயத்தை
உதைத்து விளையாடுகிறார்கள்
என் மரடோனா மட்டும்
உள்ளே இருந்திருந்தால்
திருப்பி உதைத்திருப்பான்

பெரும்பாணனின்
மகிழ்ச்சியான பன்றிக்குட்டியின்
வெட்டியெடுக்கப்பட்ட இதயம்
துடித்துச் சிலிர்ப்பதுபோல்
உன் இதயத்தையும்
தனியாக வெட்டியெடுத்து
மேசையின் மீது வைக்க வேண்டும்
படம் வரைந்து
பாகங்கள் குறித்த இடங்களைத்
தொட்டுப்பார்க்க வேண்டும்
எனக்காக எப்படித்
துடிக்கிறதென ரசிக்கவேண்டும்
பின் மெல்ல மெல்ல
கடித்து மென்று சுவைக்க வேண்டும்

எமிலியின் பறவை ஒன்று
கீழிறங்கி நடந்து வருவதைப்போல்
என் இதயமும் இறங்கி
தெருவில் நடந்து செல்கிறது
ஈரத்தரையில் மிதக்கிறது
பனியைக் குடிக்கிறது
சாரலின் ஈரத்தில் நனைகிறது
குளிர் காற்றில் மிதந்து செல்கிறது
வெயிலுக்கு ஹலோ சொல்கிறது
இப்போது மழையுடன் நின்று
பேசிக்கொண்டிருக்கிறது

என் இதயத்திற்குள்
சின்னஞ்சிறு ஊதாங்குழல்கள்
நுழைத்துச் செருகப்பட்டுள்ளன
அவை நீண்டு கொண்டே செல்கின்றன
உடல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன
லேயர் லேயராக இருக்கும்
உன் நினைவுத் திசுக்கள்
அதில் படிந்து கிடக்கின்றன
என் இதயத்திற்கான
பேரூட்டச்சத்து நீ மட்டுமே
இருந்தாலும்
சந்தோசத்தை மட்டும்
சாப்பிட விரும்புகிறேன்

இதயத்தின் மொழி துடிப்பு
என் இதயம் துடிக்க துடிக்கப் பேசுகிறது
யாருக்காகவும் இவ்வளவு
வேகமாகத் துடித்ததில்லை
நெஞ்சைக் கிள்ளுகிறது
அட்ரலின் அதிகம் சுரக்க சுரக்க
முஷ்டியைத் திருப்பிக்காட்டுகிறது
மூக்கின் மேல் கோபத்தைக் காட்டுகிறது
என் இதயம் எனக்கே சவால் விடுகிறது
புரோக்கன் ஹார்ட் என்றாய்
என்னிடம் இருக்கும் இதயத்தை
நீ எப்படி உடைக்க முடியும்?

என் இதயத்திற்குள் வீடு ஒன்றைக்
கட்டிவைத்திருக்கிறேன்.
வீட்டிற்கு யார் யாரோ வந்து போகிறார்கள்
விருந்துக்கு வருகிறவர்கள்
வீட்டிற்குள்ளேயே தங்கிவிடுகிறார்கள்
இதயத்தை உடைத்து நொறுக்குகிறார்கள்
கள்ளத்தனமாகச் சுவரேறிக் குதிக்கிறார்கள்
எல்லோரையும் வீட்டை விட்டு
அடித்துத் துரத்த வேண்டும்.

இதயம் ஒரு நாள்
என் மேசையின் மீது
ஏறி அமர்ந்துகொண்டது
என் எழுத்துகளைப்
படித்துப் பார்த்தது
கிறுக்கு என்று திட்டிக்கொண்டே
தாளைக் கிழித்துப்போட்டுவிட்டுப்
பேனாவைப் பிடுங்கி
எழுத ஆரம்பித்துவிட்டது

இதுவரையில்
என் இதயத்திற்கு அருகில்
யாரும் சென்றதேயில்லை
இதுவரையில்
என் இதயத்தை யாரும்
திருடியதே இல்லை
இதுவரையில்
என் இதயத்தை யாரும்
தொட்டதேயில்லை

என் இதயத்திற்குள்
ஓராயிரம் பிசாசுக்கள்
ஒளிந்து கொண்டிருக்கின்றன
ஒரு லட்சம் குணங்கள் வட்டமிடுகின்றன
ஒருகோடி உணர்வுகள் துடிக்கின்றன
எத்தனை பேய்களை நீ
வளர்த்துக்கொண்டிருக்கிறாய்

மனம் இருப்பது
என்னிடமா உன்னிடமா
மூளைக்கும் இதயத்திற்கும்
பெரும் சண்டை நடக்கிறது
நீ ஒரு சிடுமூஞ்சி என்கிறது
நீ ஓர் அரக்கி என்கிறது
நீ ஓர் ஆங்காரி என்கிறது
நீ ஒரு ராட்சசி என்கிறது
நான் நிசம்பசூதனி என்கிறது
நான் மகிசாசுரமர்த்தினி என்கிறது
இறகுப் பந்துபோல் அடித்து வீசினார்கள்
வழக்கம்போல் இப்போதும்
முச்சந்தியிலே கிடக்கிறது மனம்

நேற்றிரவு
இரண்டு அவகாடோ பழங்களை
வாங்கிவந்தேன்
அவற்றுக்கு
மூளை, இதயம் எனப் பெயரிட்டு
குளிர்ப்பெட்டியில் வைத்தேன்
இன்றிரவு என்னுடைய
இதயத்தையும் மூளையையும்
இடம் மாற்றி வைக்கப்போகிறேன்
என்ன நடக்கப்போகிறதென்று பார் என்றேன்
இரண்டும் வெண்ணெய்ப் பழங்களென
நிரூபித்துவிட்டன

தினசரி என் இதயத்திடம் கேட்கிறேன்
நல்ல உணவு தருகிறேன்
நல்ல தண்ணீர் தருகிறேன்
நல்ல தூக்கம் தருகிறேன்
உனக்கொரு நல்ல பணிப்பெண்ணாக இருக்கிறேன்
இன்றாவது
சிறந்த கவிதை ஒன்றை
எழுதிக்கொடுத்துவிடு என்றேன்
இன்றும் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை
சண்டாளி

ஒரு நிமிடம் கூட
என் இதயம் சும்மா இருப்பதில்லை
வழியில் பார்க்கும் எல்லோருடனும்
ஓடியோடிப் பேசிக்கொண்டே இருக்கிறது

ஆசையென்னும் மீன்
என இதயத்துக்குள்தான்
வசித்துக்கொண்டிருக்கிறது

இன்று
கட்டெறும்பு ஒன்று நேராக
இதயத்திற்குள் நுழைந்து கடித்துவிட்டது

என்னிடம்
கருப்பை இருதயப்பையென
இரண்டு பரிசுத்தப் பைகள் இருக்கின்றன
ஒவ்வொன்றிலும் அதிகபட்சம்
ஒன்றரை அவுன்சு
திரவம்தான் இருக்கக்கூடும்
அதை வைத்துக்கொண்டு
இரண்டும் படுத்தியெடுக்கின்றன

என் இதயம்
சொற்களாலான செங்கற்கூடு
ஒவ்வொரு திசுக்குள்ளும்
எண்ணற்ற சொல்லும்
கணக்கற்ற செல்லும் இருக்கின்றன
ஒவ்வொரு செல்லாக
ஒவ்வொரு கல்லாக
ஒவ்வொரு சொல்லாக
எடுத்து வைத்து
இதயச்சுவரை எழுப்பிவிட்டேன்
வாசற்கதவினை வைக்க மறந்துபோனதால்
கல்லறையாகிவிட்டது
ஒரே ஒரு சொல் மட்டும் உடைந்து விழுந்தது
இரு கைகளாலும்
கதவைத் திறந்துகொண்டு
வெளியில் வந்து விட்டது உயிர்

உன்னுடைய
உயிரை மட்டும் வேரோடு பிடுங்கி
இறுக்கிப் பிழிந்து
கோப்பையில் ஊற்றி
எலுமிச்சைச் சாறும் தேனும்
கலந்து குடிக்கவேண்டும்
எப்போது வரட்டும் பித்தனே?

a.inbha@gmail.com