அப்போது வசந்தம் வந்திருக்கவில்லை
ஒரு புதிய பிரியம்
தளும்பத் தொடங்கும்போதெல்லாம்
எப்போதும் கேட்கும் கேள்வி
ஒன்றே ஒன்றுதான்
“இத்தனை காலமாய் எங்கிருந்தாய்?”
அதற்குப் பதில் சொன்னாள்
“இங்குதான் இருந்தேன்
உனக்குத்தான் அடையாளம் தெரியவில்லை
காரணம்
அப்போது எனது வசந்தம்
வந்திருக்கவில்லை”
**
கடைசியில் எனக்கு ஒரு வாசனைத்திரவியம் கிடைத்தது
இன்று ஜெர்மானியன் ஒருவனை சந்தித்தேன்
ஒரு ப்ராஜெக்டிற்காக
சந்திக்க வந்திருந்தான்
ஒரு சிறந்த வாசனைத் தைலத்தைப் பரிசளித்தான்
கை மணிக்கட்டிற்குக் கீழ்
லேசாகத் தெளித்து நுகர்ந்து பார்த்தேன்
அதில் காமத்தின் வாசனை இருந்தது
அன்பே
உடனே நான் அதைப்பற்றி
உன்னிடம் கூற
அலைபேசியை எடுத்தேன்
அப்புறம்தான் நினைவுக்கு வந்தது
நீ என்னிடம் பேசி நெடுநாளாயிற்று என்று
நீ என்னிடம் பரிசுகள் வாங்குவதை
நிறுத்திக்கொண்டாய் என்று
நமக்குள் உறவு முறிந்துவிட்டது என்று
நான் எப்போது
எனக்கு ஒரு சிறந்த வாசனைத்திரவியம்
கிடைத்தாலும்
அதன் முதல் துளியை மட்டும்தான்
நான் நுகர்வேன்
பிறகு அதை உன்னிடம் தந்துவிடுவேன்
எனக்குக் கிடைக்கும்
எல்லா சிறந்தவையும்
உன்னிடம்தான் இருக்கவேண்டுமென
விரும்பியிருக்கிறேன்
சில சமயம் ஏதேனும் ஒரு வாசனைத் திரவியம்
எனக்கு மிகவும் பிடித்திருந்தால்
உனக்குத் தெரியாமல்
நானே அதை வைத்துக்கொள்ளவேண்டும் என
ஆசைப்பட்டிருக்கிறேன்
ஆனால் அப்படி செய்ததே இல்லை
மறுநாள் அதை உன்னிடம்
பத்திரமாக ஒப்படைத்துவிடுவேன்
இந்த உலகின் எல்லா நறுமணங்களும்
உனக்கு மட்டுமே உரியவை என்பதில்
உறுதியாக இருந்தேன்
இப்படியெல்லாம்
ஒரு காதலைத் தக்கவைக்கலாம் என
குழந்தைத்தனமாக
நம்பியிருக்கிறேன் போலும்
அப்படிப்பட்ட ஒருவனைத்தான்
நீ எந்தத் தயக்கமும் இன்றி
கைவிட்டாய்
இதோ இந்த நறுமணத் தைலத்தை
நானே வைத்துக்கொள்ளலாம்
நமக்குள் இன்னும் பேச்சுவார்த்தை
இல்லாமல் போகவில்லை
நான் ஒருவேளை
இதைத் தந்தால்கூட
நாசூக்காய் மறுப்பாய் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை
இனி நான் உனக்குத் தரும்
எல்லாமே குற்ற உணர்வின்
நறுமணங்களால் ஆனவையாக இருக்கும்
இந்த வாசனைத் திரவியம்
நன்றாக இருக்கிறது
இதை நான் மனமுவந்து தருவதற்கு
ஒருவருமே இல்லை
இதை நானே பயன்படுத்துவேன்
இப்போது நீங்கள்
என்னை அணைத்துக்கொள்ளலாம்
அவ்வளவு நறுமணமாய் இருப்பேன்
எந்தக் காதலும் இல்லாதிருந்தால்
நாம் மிகவும் வாசனையுடையவர்களாகிவிடுவோம்
**
என் அன்பின் கடல்கள்
நான் யாரை நேசித்தாலும்
இப்படித்தான் சொல்கிறார்கள்:
“நான் உன்னை நேசிக்காமலில்லை
ஆனால் நீ என்னை நேசிக்கும் அளவு
நான் உன்னை நேசிக்கவில்லை”
சில சமயம் ஆதங்கத்துடன்
நான் கேட்பதுண்டு
“என்னை நினைத்தாயா?”
நேர்மையாகப் பதில் சொல்கிறார்கள்:
“நினைக்காமலில்லை
ஆனால் நீ என்னை நினைக்கும் அளவுக்கு
நான் உன்னை நினைக்கவில்லை”
ஒரு நர்ஸ் சிரிஞ்சில்
எவ்வளவு கவனமாக
அளவாக மருந்தை எடுத்துச் செலுத்துவதுபோல
அவ்வளவு அளவாக
என்னிடம் உங்கள் அன்பைச் செலுத்துகிறீர்கள்
இவ்வளவு வயதாகிறது
எனக்குத்தான் இன்னும் தெரியவில்லை
காபியில்
எவ்வளவு சர்க்கரை சேர்க்கவேண்டும் என்று
விஸ்கியில்
எவ்வளவு சோடா சேர்க்கவேண்டும் எனறு
என் அன்பின் கடல்களை
எந்தக் கிண்ணத்தில்
ஊற்றித் தருவதென்று தெரியவில்லை
**
நம் காலத்து நண்பர்கள்
நீங்கள் என் அன்பிற்குரியவர்
உங்களுக்காக நான் உயிரையும்
கொடுப்பேன்
உங்களுக்கு யாருமே இல்லாவிட்டாலும்
நான் இருப்பேன்
நினைவிருக்கிறதா?
நீங்கள் ஒரு காதலில் மனம் முறிந்து அழுதபோது
நான்தான் உங்களை அருகிருந்து தேற்றினேன்
நீங்கள் உடல் நலமற்றிருந்தபோது
தினமும் உங்களைக் காண
மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருப்பேன்
என் குழந்தைக்கு
புதுத்துணி வாங்க வைத்திருந்த பணத்தை
நீங்கள் குடிக்கக் கேட்டீர்கள் என்பதற்காக
ஒருமுறை தந்திருக்கிறேன்
நான் உங்களிடம் எதையுமே எதிர்பார்த்ததில்லை
ஒரு சிறிய பதில் அன்பை வேண்டியதில்லை
நான் உங்கள் சந்தோஷத்திற்காக அல்ல
என் சந்தோஷத்திற்காகத்தான்
உங்களை நேசிக்கிறேன்
ஒரு சின்ன வருத்தம் ,
என் சோற்றில் விஷம் வைத்தவர்களோடும்
நடுத்தெருவில் என் வேட்டியை உருவியவர்களோடும்
நீங்கள் குலாவுவதைப்
பார்க்க நேர்ந்தது
அது உங்கள் உரிமை
அது உங்கள் உலகம்
எனக்காக அவர்களை நீங்கள்
இழக்க வேண்டும் என்பதில்லை
ஆனாலும்
எனக்கு சங்கடமாக இருந்தது
எந்த நம்பிக்கையில் வாழ்வதென்று தெரியவில்லை
நான் இன்று
உங்கள் வீட்டு வழியாகத்தான் போனேன்
திரும்பிப் பார்க்காமல் போய் விட்டேன்
நாளை நிச்சயம் உங்களோடு
எப்போதும்போல சகஜமாக இருப்பேன்
நாளை வருவதென்பதே
எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளத்தானே
**
வாசனைத் திரவியப் புட்டிகளில் அடைக்கப்பட்ட பூதங்கள்
வாசனைத் திரவியங்களை
ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள் எனத் தெரியவில்லை
அவை பெரும்பாலும் துன்ப நினைவுகளையே
கொண்டு வருகின்றன
அல்லது புதிய துன்பத்திற்கான
வாசல் ஒன்றைத் திறக்கின்றன
எனக்குப் பரிசாகக் கிடைத்த
’நஞ்சு’ என்பதன்
ஆங்கிலப் பெயரைக் கொண்ட (poison)
வாசனைத் திரவியத்தின்
படத்தைக் காட்டினேன்
ஒரு பெண் தளுதளுக்கும் குரலில்
ஒரு வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தாள்:
’நஞ்சு’ என்ற
அந்த வாசனைத் திரவியம் அற்புதமானது
நம் கனவுகளைத் திறக்கக் கூடியது
நம் அந்தரங்க முடிச்சுகளை அது அவிழச் செய்யும்
என் வாழ்க்கையின்
மிக மகிழ்ச்சியான பருவமொன்றில்
அது எனக்குக் கிடைத்தது
தொலைதூர தேசமொன்றிலிருந்து
அதை வாங்கி வந்தவன்
இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை
அந்த வாசனைத் திரவியமும்
அப்போதே தீர்ந்து போய் விட்டது
அதை நான் எங்கெங்கோ தேடி விட்டேன்
கிடைக்கவே இல்லை
உங்களுடைய ‘நஞ்சு’ கறுப்பு நிறப்புட்டியில் இருக்கிறது
பெண்களுக்கான ‘ நஞ்சு’ சிவப்புப் புட்டியில் இருக்கும்
அந்த வாசனைத் திரவியம் இருந்தால்
நான் என் இழந்த வசந்தத்தை மீட்டு விடுவேன்
எனக்கு யாரிடமிருந்தாவது வாங்கித் தாருங்கள்
எவ்வளவு பணமானாலும் செலுத்தி விடுகிறேன்’
என்று அதில் சொல்லியிருந்தாள்
நான் மனமுடைந்து போகிறேன்
எனக்குக் காதலின் பரிசாகத் தரப்பட்ட
எல்லா வாசனைத் திரவியங்களுமே
நஞ்சாகி விட்டன
அவை சாபத்தின் மலர்களாலானவை
நான் மூன்று பெண்களைக் காதலித்தேன்
மூவருமே
என் மூன்று பிறந்த நாட்களில்
வாசனைத் திரவியங்களைத்தான்
பரிசளித்தார்கள்
அவர்களை இழந்த பிறகு,
அவர்கள் என் வாழ்க்கையின்
எல்லா நறுமணங்களையும்
சாரமிழக்கச் செய்த பிறகு
அவர்களைப் பற்றிய
எல்லாவற்றையும் நான் மறந்து விட்டேன்
ஆனால் அவர்கள் அளித்த
வாசனைத் திரவியங்களின்
நறுமணம் மட்டும் எங்கோ
இதயத்தின் ஆழத்தில் தங்கி விட்டது
நேற்று லிஃப்ட்டில் ஒருத்தி
நான் இழந்த காதலின்
ஒரு வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டு
என்னுடன் வந்தாள்
எனக்குத் தலை சுற்றியது
நான் இறங்க வேண்டிய தளத்திற்கு
முந்தைய தளத்திலேயே
இறங்கிப் போய் விட்டேன்
இன்னொரு முறை
இன்னொரு இழந்த காதலின்
வாசனைத் திரவியத்தை
நான் மலைச்சரிவில் கண்ட
மலர் ஒன்றில் நுகர்ந்தேன்
நான் அந்த மலையிலிருந்து விழுந்து விடாமல்
மரக்கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டேன்
நான் இறுதியாக இழந்த காதலின்
வாசனைத் திரவியத்தை
நான் இறுதியாக இழந்த பெண்ணின்
புதிய காதலனிடம் நான் அறிந்த நாளில்
வெயில் கடுமையாக அடித்தது
வாசனைத் திரவியங்கள்
ஏவல் பொருள்கள் போல இருக்கின்றன
அவை இல்லாமல் போனவர்களின்
ஆவிகள் போல இருக்கின்றன
அவை சில சமயம்
ஒரு சொட்டு அமிலத்தைக் கையில் விட்டது போல
சருமத்தைப் பொசுங்க வைக்கின்றன
ஆனாலும் தொடர்ந்து
வாசனைத் திரவியங்களை வாங்குவேன்
அவற்றின் லாகிரிகளில் மூழ்கிப் போவேன்
பிறகு அவற்றின் கண்ணீர் கடல்களில் போய் வீழ்வேன்
ஒரு வாசனைத் திரவியப் புட்டியை
நன்றாக உற்றுப் பார்
அதற்குள் அடைபட்ட பூதம் ஒன்று
தலை விரித்தாடுவதை
**
வெறும் பனித்துளி
நான் பனித்துளி போல்தான்
ஒவ்வொரு நாளும்
இந்த வாழ்விற்குள் நுழைகிறேன்
காய்ந்த புற்களின் மீது
கொஞ்ச நேரம்
அர்த்தமற்ற நம்பிக்கையோடு
அமர்ந்திருப்பேன்
பிறகு
நான் உலர்ந்து மறைவதை
நானே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்
காய்ந்த புற்களுக்கு
நான் வந்ததும் தெரியாது
போனதும் தெரியாது
manushyaputhiran@gmail.com