2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் முதல் 2022 செப்டம்பர் 12ஆம் நாள் வரை ஓராண்டுக் காலம் மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவைப் பெரும் சிறப்புடன் நடத்தியது தமிழக அரசு. 1982 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் பிறந்த நூற்றாண்டு விழாவையும் மிகச் சிறப்பாக கொண்டாடி பெருமைப்படுத்தியது அப்போதைய தமிழக அரசு. பிறந்த நாள் நூற்றாண்டு விழா, நினைவு நூற்றாண்டு விழா ஆகிய இரண்டையும் ஒருசேர, நேரே கண்டு களிக்கும் வாய்ப்பை காலம் எமக்குத் தந்திருந்தது.
திராவிடக் கட்சிகள் மகாகவி பாரதியாரின் புகழை மறைக்க முயன்றன, குறைக்க முயன்றன அல்லது கள்ள மவுனம் சாதித்தன என்கிற அவதூறு அர்த்தமற்றதும், உள்நோக்கம் கொண்டதுமாகும் என்பதை இந்த விழாக்கள் உலகிற்கு உணர்த்தின.
1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் மகாநாட்டில், மகாகவி பாரதியாருக்கு ஓர் முழு உருவச் சிலை அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணிக்கு எதிரிலேயே உருவாக்கப்பட்டது. கம்பனின் படைப்பை எதிர்த்துப் பகடி செய்து “கம்பரசம்” என்னும் நூலை எழுதிய திரு சி.என். அண்ணாதுரை அதே உலகத்தமிழ் மகாநாட்டில் கம்பனுக்கும் ஒரு சிலை வைத்து சிறப்பித்ததை நினைவில் கொள்ள வேண்டும். 1967 க்கு முன்னர் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் களப்போட்டியில், காங்கிரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய 20 ஆண்டுகாலப் பிரச்சாரத்தில் சில நடைமுறைத் தந்திரங்களைக் கையாண்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பலமான எதிரியை அடித்து வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டதன் காரணமாக, மாற்றுக் கருத்தாக்கங்களை, மாற்றுப் பிம்பங்களை, பிரபலங்களைக் களத்தில் உருவாக்கி நிலை நிறுத்த வேண்டிய போர் தந்திரத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்தது.
அதற்குத் தேவையான சூழலை காங்கிரஸே உருவாக்கித் தந்ததும் காங்கிரஸின் தோல்விக்கு வழி வகுத்தது.
தங்களது அரசியல் சீருடை என்று காங்கிரஸ்காரர்கள் பெருமையோடு அறிவித்த கதர்த் துணிக்கு மாற்றாக கைத்தறியை திராவிட இயக்கம் கையில் எடுத்தது. தமிழகத்து வீதிகளில் கைத்தறி துண்டுகளை திராவிட இயக்கத் தலைவர்கள் தோளில் சுமந்து விற்பனை செய்தார்கள்.
கூட்டங்களில் எல்லோருக்கும் அணிவிக்க கைத்தறி துண்டுகளையே பயன்படுத்தினார்கள்.
ஹிந்தி படிக்க வேண்டியதன் அவசியத்தைக் காங்கிரஸ்காரர்கள் தமிழில் சொல்லிக் கொண்டிருக்க, தமிழே பயிற்று மொழி என்று திராவிட இயக்கம் மொழி சார்ந்த போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்தது.
கவிதைத் துறையில் காங்கிரஸ்காரர்கள் சொந்தம் கொண்டாடிய பாரதியாருக்கு மாற்றாக தங்கள் தரப்பில் பாரதிதாசனை போற்றிப் புகழ்ந்தது திராவிட இயக்கம். பல முனைகளில் நடந்த இந்த அரசியல் போராட்டத்தின் இறுதியில் ஆட்சி அதிகாரம் கைகளுக்கு வந்ததும் அதுவரையிலான போர்த் தந்திரங்களை விலக்கி விட்டு நடைமுறை அரசியலுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் திரும்பிவிட்டதன் அடையாளமே பாரதிக்கும் கம்பனுக்கும் வைக்கப்பட்ட சிலைகள். இது பகடி செய்வதற்கு உரியது அன்று ; மாறாக, அறிந்து உணர்ந்து பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அதிலும், குறிப்பாக பாரதியின் சமூகச் சீர்திருத்த கருத்துக்களின்பால் மிகுந்த நன்மதிப்பும் உயர்ந்த எண்ணமும் கொண்டிருந்தார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றத்திற்குக் காரணமான முன்னாள் முதலமைச்சர் அமரர் சி. என். அண்ணாதுரை. 1948 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலிக்கு ஆற்றிய உரையில் சி.என். அண்ணாதுரை மகாகவி பாரதியாரை “மக்களின் கவிஞன்” என்று போற்றிப் புகழ்ந்தார்.
தனது உரையில் அவர் மேலும் விரிவாக இவ்வாறு குறிப்பிட்டார். “பாரதியாரின் மதம் புரோகித மதம் அன்று .
மனித குலத்திற்குச் சேவையும் விரிந்த பொருளில் சகோதரத்துவமுமே அவரது மதமாக இருந்தது. அவர் அந்நிய ஆட்சியில் இருந்து விடுதலையை விரும்பினார். ஆனால் அது அவரது இறுதி லட்சியம் அல்ல.
அது ஒரு தொடக்கம் மட்டுமே. அச்சமற்ற சமத்துவமான அனைத்து விதமான தளைகளும் அறுக்கப்பட்ட ஒரு இந்தியாவைத்தான் அவர் விரும்பினார் அத்தகைய சமூக மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் ஓர் விடிவெள்ளியாக அவர் திகழ்ந்தார். அபத்தமான நடைமுறைகளை அவை மரபானவை என்ற போதிலும் உறுதியுடன் தீரத்துடன் எதிர்த்தார். மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடி இந்த மண்ணில் விஞ்ஞானம் தழைக்க வேண்டும் என விரும்பினார் .
சுருக்கமாகச் சொன்னால் புரட்சிகரமான சிந்தனைகளுடன் அச்சமின்றி அவர் போராடினார்.
அந்தப் போர் இன்னும் நிறைவு பெறவில்லை. இன்று அவர் நம்மோடு இல்லை. எனினும் , தொடர்ந்து போராடுவதற்கான கருத்துகள் ரீதியான ஆயுதங்களை (armoury of thoughts )அவர் தந்து விட்டுப் போயிருக்கிறார். இந்தப் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர அவர் தந்த ஆயுதங்களே போதுமானது. அந்த மக்கள் கவிஞனுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி அவர் தொடங்கிய போரைத் தொடர்ந்து நடத்துவதே ஆகும் .அதன் வழியே அவர் பாடிய, விரும்பிய மக்களின் முழுமையான, எல்லா விதத்திலும் மேன்மையான விடுதலையை நாம் பெற வேண்டும்.”
திரு சி.என். அண்ணாதுரையின் பாரதியார் பற்றிய அந்த நீண்ட செறிவான அழகான ஆங்கில உரையின் மிகச்சிறிய பகுதியைத்தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன். இந்த அடிப்படையான புரிதலுடன் தான் திராவிடக் கட்சிகள் பாரதியாருக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை.
இந்த ஆண்டு தமிழக அரசு அவரது நினைவான செப்டம்பர் 12ஆம் தேதியை மகாகவி தினம் என்று அறிவித்திருக்கிறது. அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் ஒரு தொகுப்பு மனதில் உறுதி வேண்டும் என்கிற தலைப்பில் 38 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பரிசாகத் தரப்பட உள்ளது.
உலக வரலாற்றில் பாடப்புத்தகத்திற்கு வெளியே ஒரு கவிஞனின் புத்தகத்தை இதுபோல் வழங்குவது இதுவே முதன்முறையாகும்.
அந்தப் பெருமையை கவிஞனாக பாரதியும், அரசாக இன்றைய தமிழக அரசும் பெறுகிறார்கள் என்பது பெரு மகிழ்ச்சிக்குரியது .
பாரதி நினைவு நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு 14 அறிவிப்புகளைச் செய்தது. அனைத்து அறிவிப்புகளும் ஏறக்குறைய முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.
நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அறிவிப்புகளுக்காக தமிழக அரசுக்கும் அதன் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பாரதிமீது கொண்ட தீராத காதலால் மட்டும் நான் இதனைச் சொல்லவில்லை.
மாறாக, இன்றைய அரசியல் சூழலில் மத வேற்றுமைகளையும் சாதிப் பிரிவுகளையும் மூலதனமாக வைத்துக் கொண்டு நடக்கும் அரசியல் ஆபாச நடைமுறைகளுக்கு நடுவே, பாரதிக்கு செய்யப்படும் இந்தப் பணிகள் அனைத்தும், கருத்தியல் தளத்தில் மிக முக்கியமான ஆயுதங்களாகப் பயன்படும்.
பாரதியாரின் சமூக சீர்திருத்த கருத்துகளுக்கு முன்னுரிமையும் முக்கியமும் தந்து விடாமல், அவசியமானால் அதை முற்றிலுமாகத் திரையிட்டு மறைத்துவிட்டு, அவரது தேச பக்திப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் ஆன்மிகத்தையும் மட்டும் முன்னிலைப்படுத்தி அவரைப் புகழ்கிற ஒரு கும்பல் இப்போது வீதிக்கு வந்திருக்கிறது.
அது இதற்கு முன்பு இல்லாத புதிய சொற்களில் பாரதி பற்றிப் பேசுகிறது. கிடைத்த இடத்தில் எல்லாம் பாரதியின் கவிதைகளை அது மேற்கோள் காட்டுகிறது. எங்கும் போட்டி போட்டுக் கொண்டு பெரும் பொருட்செலவில் பாரதி விழாக்களை நடத்துகிறது. பாரதியின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும் வாயே திறக்காமல் பாரதி பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் எல்லாத் தெய்வங்களையும் சமமென மதித்து முதலில் பாடிய போற்றிய மகாகவி பாரதியாரை ஓர் இந்துவாக மட்டுமே சிறுமைப்படுத்த அது முயற்சிக்கிறது . எளிமையான வார்த்தைகளில் சொன்னால் பாரதியைக் கடத்திக் கொண்டு போய் சனாதன சகதிக்குள் மூழ்கடிக்க விரும்புகிறது பிறர் குருதி குடித்து வாழும் இந்த ஓநாய்க் கூட்டம்.
பிறப்பால் பிராமணர் என்பதற்காகவே பாரதியாரின்மீது இவர்கள் “அன்பும் காதலும்” கொண்டிருக்கிறார்கள். இவர்களது அழைப்பை ஏற்று இவர்கள் யார் என்று அறியாமல் பாரதி புகழ்தானே பாடுகிறோம் என்று மயங்கி அவர்கள் தரும் பட்டுக்கும் துட்டுக்கும் ஆசைப்பட்டு ஓடுகிறது இன்னும் ஒரு சிறு கும்பல்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “கற்றும் அறிவில்லாத மூடர்களால்” பாரதிக்கு அவமானமும் அவப்பெயரும் சேர்க்க இவர்கள் முயற்சிக்கிறார்கள். பாரதியாரின் புகழைப் பாடும் எல்லோருமே பாரதியை முழுமையாக அறிந்து உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. காந்தியைச் சுட்டுக்கொன்றவர்கள் தானே காந்தி சமாதியின் முன்பு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். காந்தியின் பெயரிலான அனைத்து விழாக்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அற்புதங்கள் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் நிகழ்வதில்லை.
சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் குழந்தைத் தொழிலாளர்கள் தீப்பெட்டி ஆபீசில் வேலைக்கு எடுக்கப்படுவதை எதிர்த்தும் , அவர்கள் பள்ளிகளுக்குப் படிக்க அனுப்பப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில அரசியல் இயக்கங்களும் போராடின.
அது தொடர்பான சில இயக்கங்களில் சில மகாநாடுகளில் சில போராட்டங்களில் நானும் பங்கு பெற்று இருக்கிறேன். கையெல்லாம் புண்ணும் சிரங்குமாக வாழும் அந்தக் குழந்தைகளின் அவலம் குறித்து எங்கும் உரத்த குரலில் பேசி இருக்கிறோம். அந்த இழிவான உழைப்பில் இருந்து குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறபோது குழந்தையின் மூலம் கிடைத்த வருவாயை குடும்பத்திற்குப் பெற்றுத்தரும் மாற்று ஏற்பாடும் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். குழந்தைகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எந்த மாற்று ஏற்பாடும் செய்யாமல் முழுமுற்றாக அந்தத் தொழிலில் இருந்து அவர்களைத் துடைத்து எறிந்து விடுவது அவர்களது பொருளாதார நிலைமையில் பெரும் சரிவையும் சீரழிவையும் வறுமையையும் கொண்டு சேர்க்கும்.
எனவே தீப்பெட்டி ஆபீசுக்குப் போகாமல் பள்ளிக்கு வரும் குழந்தைக்குப் பள்ளிக்கு வந்த நாளைக் கணக்கிட்டு ஒரு சிறு தொகை அவர்களின் பெற்றோரிடம் தரப்பட்டது. அத்தகைய பள்ளிக்கூடங்களை ”நூறு ரூபா பள்ளிக்கூடங்கள்” என்று பலர் கேலி செய்வதை நானே கேட்டிருக்கிறேன். மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அதன் பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகள் உயர் கல்வியில் உச்சங்களைத் தொட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் குழந்தை தொழிலாளர்களின் அவல நிலையைச் சுட்டிக் காட்டும் ஒரு ஆவணப்படம் அந்த தருணத்தில் இந்தியா முழுவதிலும் இலவசமாக சுற்றுக்கு விடப்பட்டது. அதைக் கண்களில் கண்ணீர் பெருகாமல் எவராலும் பார்த்து விட முடியாது. அதைப் பார்த்த எவரும் குழந்தைகளின் கையால் செய்யப்படும் தீப்பெட்டிகளை எளிதில் வாங்கி விடத் துணிய மாட்டார்கள். தாங்கள் அவைகளை வாங்குவதை நிறுத்தினால்தான் குழந்தைகள் அந்தத் தொழிலில் இருந்து வெளியேறும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தவர்கள் நம்பினார்கள்.
பெரும்பான்மையாக மொத்தக் கொள்முதல் செய்யவரும் இந்தியாவின் பிற பகுதி வர்த்தகர்கள் கையால் செய்யப்படும் தீப்பெட்டிகளைத் தவிர்த்து எந்திரத்தால் செய்யப்படும் தீப்பெட்டிகளை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
அதன் விளைவாக பெருமளவு வீட்டுத் தொழிலாக, குடிசைத் தொழிலாக இருந்த தீப்பெட்டித் தொழிலில் இருந்து குடும்பங்களும் குழந்தைகளும் மாற்று ஏற்பாடு இன்றி வெளியே தூக்கி வீதிகளில் எறியப்பட்டார்கள்.
மனதை உருக்கும் ,நெகிழச் செய்யும், குழந்தைகளின் உடல்நலம், கல்வி பற்றி கண்ணீர் வடித்த அந்த ஆவணத் திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் எந்திரத்தால் தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களே உருவாக்கி இருந்தன.
அவர்களும் குழந்தைகளுக்காகத்தான் கண்ணீர் சிந்தினார்கள். ஆனால் எல்லா கண்ணீரும் ஒரே கண்ணீர் அல்ல. முதலையின் கண்ணீர் எது மதலையின் கண்ணீர் எது என்று பிரித்து அறியும் ஆற்றல் நமக்கு வேண்டும்.
பாரதியைக் கொண்டாடும், மேற்கோள் காட்டும் எல்லோரும் பாரதியை அசலாகவே முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.
அவர் பிறப்பால் பிராமணர் என்பதற்காகவும், அவரது ஆரம்ப காலப் படைப்புகளில் இருக்கும் சில கருத்துகளுக்காகவும் அவரது ஆன்மிகக் கவிதைகளுக்காகவும் மட்டுமே பாரதியாரைக் கொண்டாடுகிறவர்கள் உண்டு.
இது பற்றியும் திரு சி.என். அண்ணாதுரை தனது உரையில் குறிப்பிட்டுள்ளது கவனம் கொள்ளத்தக்கது.
ஒருபுறம் அவரது பூணூலுக்காக அவரைச் சொந்தம் கொண்டாடுகிறது ஒரு கூட்டம் .அது பாரதியாருக்குப் பல்லக்கு தூக்கிக் கொண்டு திரிகிறது என்றால் அவர் பூணூல் போடும் சமூகத்தில் பிறந்தார் என்பதற்காகவே அவர்கள் அதனைச் செய்கிறார்கள்.
இன்னொருபுறம் அவர் பூணூல் போடும் சமூகத்தில் பிறந்தார் என்பதற்காகவே அவரை எதிர்க்கிறது இன்னும் ஒரு கூட்டம். இரண்டுமே தவறான, முறையற்ற வரலாற்றுப் பிழையும் குற்றமும் ஆகும்.
ஒரு சாரார் பாரதியின் படைப்புகளில் தங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டுமே மேற்கோள் காட்டி அவரைக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
இன்னொரு சாரார் அவரது படைப்பில் தங்களுக்கு தேவையான பகுதிகளைத் தங்களுக்கு தேவையான விதத்தில் பொருள் சொல்லி மேற்கோள்காட்டி அவரைப் பழித்துத் தூற்றுகிறார்கள்.
இந்த இரண்டு கூட்டத்திற்கும் இடையில் பாரதி நிற்கிறான். ஒரு கூட்டம் சனாதன சகதிக்குள் பாரதியை அழுத்தி விட முயற்சிக்கிறது. இன்னொரு கூட்டம் சனாதனச் சகதிக்குள் பாரதியாரைத் தள்ளிவிட முயற்சிக்கிறது. இவை பாரதியைப் பற்றிய முழுமையான புரிதலும் வாசிப்புமின்றி செய்யப்படுபவை அல்லது வாசித்து முடித்த பின்னும் தங்கள் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பாரதியை வளைக்கவும் வீழ்த்தவும் முயலும் சிறுமையான செயல்கள்.
இவர்கள் இருவராலும் பாரதியை வீழ்த்தி விட முடியாது.
தமது சமூக சீர்திருத்த கருத்துக்களால், செயல்பாடுகளால் நெஞ்சுயர்த்திக் காலம் கடந்து நிற்கிறார் பாரதியார். அவரைக் கடத்தவும் முடியாது, அவரை கரைத்து விடவும் முடியாது. ஏனெனில் பாரதி அக்கினி குஞ்சு. இதை அவரை முழுமையாக அறிந்தவர்கள் அறிவார்கள்.
முதலில் எவரையும் அவரது பிறப்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்வதும் அணுகுவதும் கீழ்த்தரமானதும் இழிவானதும் ஆகும். பிறப்பின் அடிப்படையில் அணுகுவது என்றால் நீங்கள் ஒருவரை மதமாக, சாதியாக அணுகுகிறீர்கள் என்பதே அதன் பொருள். இந்த அணுகுமுறை மனித குல நாகரீக வளர்ச்சியின் அற்புதங்களைக் கேலிக்குள்ளாக்கும் அவமதிக்கும் பித்துக்குளித்தனமான வேலை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவனின் அடிப்படை அணுகுமுறையும் பார்வையும் இன்றிப் பொது வாழ்வில் கால் வைப்பதே தகுதியற்ற செயல். இந்த அணுகுமுறையுடன் செய்யப்படும் பாராட்டு, வசவு என எதுவானாலும் அது இடது கையாலும்கூடத் தொட முடியாத இழிவு.
இரண்டாவது ,மிக முக்கியமான ஒரு அடிப்படை அணுகுமுறை யாதெனில் காலத்தால் முற்பட்டவர்களை விமர்சிக்கும்போது கவனத்துடன் விமர்சிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த காலம், சூழல், அரசியல், சமூக, பொருளாதார காரணிகள் இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று நாமும் , நமது சமூகமும் அடைந்திருக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கருத்தியல் வளர்ச்சியும் தந்திருக்கிற அறிவின் வெளிச்சத்தில் நமது முன்னோர்களை நாம் எடை போட்டு நிறுத்திப் பார்க்கக் கூடாது.
நம் காலத்தின் வளர்ச்சியை, தெளிவை, மாற்றத்தை, முன்னேற்றத்தை அவர்களிடம் தேடுவதில் பொருள் இல்லை. இதையெல்லாம் மறந்துவிட்டு ஒரு தவறான அணுகுமுறையை நாம் தொடர்ந்தால், இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் தலைமுறை நாம் செய்யத் தவறியவைளுக்காக நம் கல்லறைகளின்மீது எறிய கைகளில் கல்லோடு வருவார்கள் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
மூன்றாவது, ஒருவரை மதிப்பீடு செய்கிறபோது அவரது ஒட்டுமொத்த பங்களிப்பையும் ஆய்வு செய்ய வேண்டும். படைப்புகள் எனில் அவைகளைக் கால வரிசைப்படுத்தி வாசித்து அறிந்து பிறகு அவர்களை மதிப்பிட வேண்டும்.
எவராக இருந்த போதிலும் அவர்களிடத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் மிச்சங்கள், தடயங்கள், எச்சங்கள், அழுக்குகள் சிறிதளவேனும் ஒட்டி இருக்கக் கூடும். இருக்கும் . முழுமையான 100 சதவீதம் இன்றைய நமது அளவுகோல்களுக்குப் பொருந்துகிற ஒருவரைக் கடந்த காலத்தில் போய் நின்று கொண்டு தேடக்கூடாது . அவர்களது ஒட்டுமொத்த சமூகப் பங்களிப்பில் தவறுகளும் குறைகளும் இருந்த போதும் , “குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” என்கிற குறள் நீதியைப் பின்பற்றத் தவறினால் நீங்கள் பின்பற்றுவதற்கு ஒருவருமே இருக்க மாட்டார்கள் .நீங்கள் முன்மொழிவதற்கு எவருமே கிடைக்க மாட்டார்கள்.
குற்றம் கண்டு தூற்றுவது என்று நீங்கள் தீர்மானித்து விட்டால் , எவருடைய வாழ்க்கையில் இருந்தும் அல்லது படைப்பில் இருந்தும் ஏதேனும் ஒன்றை எடுத்து அவர்களைப் பழிப்பது எளிதானதுதான். மிக மிக எளிதானது .
எல்லோரையும் எல்லாவற்றையும் தரைமட்டம் ஆக்கிவிட்டால் நமக்கென்று ஒரு இறந்த காலமே இல்லாமல் போய்விடக்கூடும். தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் வேறுபாடு காணும் புத்திக் கூர்மை நமக்கு இருந்தாக வேண்டும்.
மகாகவி பாரதியாரைப் பொறுத்தவரையில், அவர் இளைஞராக இருக்கும்போதே தனது 39 ஆவது வயதில் காலமானார். அவர் கலை இலக்கிய அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டது 1904 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான 17 ஆண்டுகள் மட்டுமே.
தனது வாழ்வின் முற்பகுதியில் தான் எழுதிய பலவற்றைத் தனது வாழ்வின் பிற்பகுதியில் பாரதியார் மாற்றிக் கொண்டிருக்கிறார். மரபான சிந்தனைகளிலிருந்தும் நடைமுறைகளில் இருந்தும் விடுபடுவதற்கு இடையறாது ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டு இருந்தார் .
சனாதனமான குடும்பத்தில் பிறந்து குடும்பமும் உறவும் சுற்றமும் விதித்த பல நடைமுறைகளை மீறியதன் வழியாகப் பலரது பகையையும் எதிர்ப்பையும் பாரதி சம்பாதித்திருக்கிறார்.
அவரது மனைவியின் சொந்த ஊரான அன்றைய திருநெல்வேலி மாவட்டம் கடையத்தில் வாழ்ந்தபோது ஊரில் இருந்த சனாதனிகள் அவரை ஊரை விட்டு விலக்கித் தண்டித்ததும் அவருக்கு நடந்திருக்கிறது. ஊர் விலக்கம் செய்யப்பட்ட நாட்களில் அவருக்கு உணவு தருவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
புதியன விரும்பும் பண்பும், பழைய மூடநம்பிக்கைகளை நிராகரிக்கும் துணிவும், எண்ணியதைச் செயலில் மேற்கொள்ளும் திறமும் ,படைப்பில் வெளிப்படுத்தும் கம்பீரமும் பாரதியாருக்கு இருந்தது.
அதனைக் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்புக்களை ஆய்வு செய்கிற போது நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது. மரபில் இருந்த மேன்மையான ஏற்றுக்கொள்ளத் தக்க செழுமையான பகுதிகளைக் கொண்டாடவும் பாரதியார் தயங்கவில்லை.
அரசியல் விடுதலையில் துவங்கி சமூக விடுதலை ,பெண் விடுதலை, ஆன்மீக விடுதலை, மொழியில் விடுதலை என்று தனது செயல்பாட்டுத் தளங்களை உயர்த்திக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் இருந்தார் பாரதியார்.
அவரோடு வாழ்ந்து அவரது பேச்சு, செயல், எண்ணம் இவைகளை உடனிருந்து அவதானித்து உணர்ந்த இருவரின் வாக்குமூலங்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பாரதிதாசன் என்று தன்னைப் பெருமிதத்துடன் அறிவித்துக் கொண்ட பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் இப்படி எழுதினார்:
“பாரதியாருக்கு எல்லா மதமும் ஒன்று. கூடுமானால் மதமே இல்லை என்றாலும் பரவாயில்லை. சாதி இல்லை என்பது அவருடைய அகராதியில் தீர்ந்த விசயம். மூடநம்பிக்கையை ஒழித்தவர் பாரதியார். இந்த தேசம் உருப்பட வேண்டுமானால் தமிழர்கள் சுதந்திரத்திற்கு லாயக்கானவர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பது பாரதியின் கருத்து. தமிழினால்தான் தமிழர்கள் வீரர்களாக முடியும். தமிழ் உயர்ந்தால் தமிழர் உயர்வார். இதுதான் அவருடைய மதம்.”
பாரதி என்கிற பார்ப்பனரின் பெயரையும் ,தாசன் என்கிற வடமொழிச் சொல்லையும் இணைத்து தனக்கு அவர் பெயர் புனைப் பெயர் சூட்டிக் கொண்டதை அவரோடு இருந்த பலர் எதிர்த்தனர். பலருக்கு மனம் ஒப்பவே இல்லை. அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுகூட அவரிடத்தில் வலியுறுத்தி இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பின்னாளில் பணிபுரிந்த பேராசிரியர் க. அன்பழகன் ஒரு முறை பாரதிதாசனைச் சந்தித்தபோது “பாரதியின் மேல் உங்களுக்குப் பற்று இருக்கலாம். மதிப்பும் இருக்கலாம், அதற்காக நீங்கள் பாரதிதாசன் என்னும் பெயரை வைத்துக் கொள்ள வேண்டுமா? “என்று வினாவினார்.
அதற்கு பாரதிதாசன் இவ்வாறு பதிலளித்தார், “பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவதைப் போலவே நீயும் கருதுகிறாயே அவரோடு நான் 12 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை. பிராமணர்களை அவர் துளிக்கூட மதிப்பது கிடையாது .மேலும் என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்கு கருத்துகளுக்கு பாரதியாரே காரணம்” என்றார்.
வேறு ஒரு தருணத்தில் பாவேந்தர் இவ்வாறு குறிப்பிட்டார், “நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குள்ள காரணம் அப்போது அவர் என் உள்ளத்தில் முதல் இடம் பெற்றிருந்தது தான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தான். சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரிய தொடங்கிய பல நாட்களுக்குப் பிறகு பெரியார் இயக்கம் தோன்றியது என்று பாவேந்தரே விளக்கியுள்ளார்.
பாரதியோடு வாழ்ந்த, பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டு, “இன்று முதல் நீ பிராமணன்” என்று பிரகடனப்படுத்தப்பட்ட ரா. கனகலிங்கம். இவ்வாறு எழுதுகிறார்.
“பாரதியார் புதுவையில் தஞ்சம் புகுந்திருந்த காலத்தில் அவர் ஊரில் பல ஆலயங்களிலும் சிவாலயங்களோ, விஷ்ணு ஆலயங்களோ, அம்மன் ஆலயங்களோ எவற்றிலும் ஜாதிப்பேய் தலைவிரி கோலமாய் தாண்டவம் ஆடிக் கொண்டுதான் இருந்தது. ’அத்தகைய கோவில்களில் தெய்வம் இல்லை ’ என்று என் குருநாதர் தைரியமாகச் சொல்லுவார் அந்த தெய்வங்கள்மீது ஒரு பாட்டு பாடக் கூட அவருக்கு விருப்பம் கிடையாது. இது பகிரங்க ரகசியம். ஆகவே அரிஜன மக்களுக்குச் சொந்தமான தேசமுத்து மாரியம்மன் புதுவை உப்பளம் நடுப்பகுதியில் கோவில் கொண்டிருக்கும் அம்மனையே மனம் உவந்து பாடி இருக்கிறார். ஜாதி பேதம் தாண்டவம் ஆடும் கோயில்களை பாரதியார் பாடுவதே இல்லையே.
அரிஜனங்களுக்கு ஆலயப்பிரவேசம் அளித்துவரும் இன்றைய தமிழகத்திலும் “இதயப்பிரவேசம்” அளிக்கும் உயர் குலத்தினர் மிகச் சிலரே ஆவார். இப்படி இருக்க அந்த நாளிலேயே ,பாரதியார் தம் இதயக் கோவிலில் அரிஜனங்களைத் தாராளமாகப் பிரவேசிக்க செய்து அத்தகைய பிரவேசத்தை தேச சேவையின் முக்கிய அம்சமாகவும் கருதினார்.
பாரதியாருக்கு உபதேசம் வேறு, அனுஷ்டானம் வேறு என்றுதான் கிடையாதே….
அக்காலத்தில் புதுச்சேரி ஜாதி வித்தியாசம் பாராட்டுவதில் எந்த வைதீகப் பிரதேசத்திற்கும் சிறிதும் பின்வாங்கியதில்லை. ஆனால் கவியரசருக்குதான் இதைப்பற்றிக் கவலையே கிடையாதே இவரது இதயக் கோவிலில் தான் ஜாதி பேதம் நிற பேதம், அந்தஸ்து பேதம் முதலான பேதம் ஒன்றும் இல்லாமல் யாரும் பிரவேசிக்கலாமே.
ஜாதி கர்வமும் தீண்டாமையும் தலைவிரித்துப் பேயாட்டம் ஆடிய அன்னாளில் பாரதியார் இப்படி எல்லாம் அரிசனங்களுக்குத் தமது இல்லத்தில் மட்டுமல்ல, இதயக்கோவிலிலும் பிரவேசம் அளித்து அன்பு விருந்து செய்தார்.”
விரிவு அச்சம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இதே போன்ற கருத்தை அவரோடு வாழ்ந்த பலர் எழுதி உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் .அவர் வாழ்ந்ததைப் பார்த்து அவர்கள் அதனை எழுதி இருக்கிறார்கள்.
அவரது எழுத்துக்களைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உரை எழுதிப் பொருள் செய்து அவரை எப்படியும் சனாதனியாகக் காட்சிப்படுத்து விட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவரது வாழ்க்கையை நேரில் தரிசித்தவர்கள் அல்ல.
குழந்தை திருமணத்தின் நோக்கம் அகமண முறையைக் காப்பாற்றுவதுதான் . அக மணமுறை தான் சாதி உயிர் வாழும் மூலஸ்தானம்.
கர்ப்பக்கிரகம். இன்றும் இப்போதும் குழந்தைத் திருமணத்தை தங்கள் பாரம்பரியப் பெருமை என்று பேசும் இழிசனங்கள் வாழும் ஒரு நாட்டில், அன்றே குழந்தைத் திருமணங்களை முன்னோர் பெற்றோர்கூடிச் செய்த கொலை என்று விமர்சித்த ஒருவரை எப்படி சாதி வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்த முடியும்?
சாதி பிறப்பெடுக்கும் ஊற்றெடுக்கும் அதன் ஆதார மையத்தையே பாரதியார் அசைக்கிறார் எதிர்க்கிறார், என்பதை மறந்து விடக்கூடாது.
சாதி மேட்டிமைத்தனமும் சனாதனமும் என்றும் எப்போதும் ஏற்றுக் கொள்ளாத, ஒப்புக்கொள்ளாத பெண் கல்வி குறித்தும் பெண் விடுதலை குறித்தும் தமிழில் முதலில் பேசிய, எழுதிய, முன்மொழிந்த பெருமை பாரதியாருக்குத்தானே இருக்கிறது.
விதவைத் திருமணங்களை ஆதரித்து தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கிய படைப்பு மகாகவி பாரதியாரின் சந்திரிகையின் கதையே ஆகும்.
விதவைகள் மறுமணம் குறித்து விவேகானந்தரும் மகாத்மா காந்தியும் சொன்ன யோசனைகளை நிராகரித்து அவை காரிய சாத்தியமற்றவை என்று துணிந்து பேசிய பெருமை பாரதியாருக்கு உண்டு .இள வயது ஆண்கள் துணிந்து மனமுவந்து விதவைப் பெண்களை மணப்பது ஒன்றே வழி என்று எழுதியவர் எங்ஙனம் சனாதனச் சகதிக்குள் சிக்க இயலும் ?
தமிழ்ச் சமூகத்தில், இலக்கியப் பரப்பில் தீண்டாமைக்கு எதிரான முதல் குரல் மகாகவி பாரதியாரிடம் இருந்தே வந்தது என்பதை எவரால் மறுக்க முடியும்?
சுயசாதி மறுப்பும், சாதி மேட்டிமைக்கு எதிரான சீற்றமும் பாரதியிடம் மிக மிக இயல்பாகக் காணப்பட்ட பண்புகள் .
தான் பிறந்த சாதியின் உயர்ந்த அடையாளமாகக் கருதப்பட்ட பூணூலைக் கழற்றி எறிந்தவர் பாரதியார். பாரதியாரைப் பிடித்துத் தர முன்வருவோருக்கு உதவியாக பிரிட்டிஷ் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அவர் பூணூலை எடுத்து விட்டவர் என்கிற குறிப்பும் இடம் பெற்றிருந்தது.
மாபெரும் சமூக சீர்திருத்த விடிவெள்ளியாகத் திகழ்ந்த ராஜாராம் மோகன் ராய் இறந்தபோது பாரதியார் அவரைப் “பாதி வீரன்” என்று குறிப்பிட்டார் .ஏனெனில் சாதி சமயக் கட்டுகளை எல்லாம் அவர் அறுத்து வெளியேறிய போதிலும் மரண காலத்தில் அவர் மார்பின்மீது பிராமணர்கள் போடுகிற முப்புரிநூல் தவழ்ந்து கொண்டிருந்ததால் அவ்வாறு குறிப்பிட்டார்.
அப்படியானால் தான் கழற்றி எறிந்த பூணூலை பாரதியார் கனகலிங்கத்திற்கு ஏன் அணிவிக்க வேண்டும் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.
எல்லோரையும் பிராமணர்கள் ஆக்கிவிடும் மேல்நிலையாக்கல் என்னும் செயல் குறித்தே பாரதியார் அவ்வாறு செய்தார் என்று குறிப்பிட்டு, எனவே பாரதி வளர்த்தது பிராமணியமே என்று பேசுவோரும் உண்டு. ஆனால் பாரதியாரின் அந்தச் செயலின் உட்பொருளும் நோக்கமும் அதுவல்ல.
உண்மையில் பாரதியார் கனகலிங்கத்திற்குப் பூணூல் அணிவித்தது நுட்பமான ஒரு புரட்சிகரமான சமூக சீர்திருத்த நடவடிக்கையே ஆகும்.
தான் அணிந்திருக்கும் ஒரு நூல் காரணமாகவே ஒருவர் தான் மற்றவர்களைவிட உயர்ந்தவர் என்று கருதுவாரானால் அதை முன்னிட்டு அவர் மற்றவர்களைத் தாழ்வாகவும் நடத்துவார் எனில்…. இதோ அந்த நூலை நானும் இப்போது அணிந்து இருக்கிறேன் என்று அணிந்து காட்டுவது பகடியும் எதிர்ப்பும் ஒன்று சேர்ந்த நுட்பமான ஒரு போராட்ட வடிவம் .
இதே செயலை பாரதியார் வாழ்ந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் நிகழ்த்திக் காட்டுகிறார் .தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறார். பூணூலின்மீதான புனிதத்தைக் கட்டுடைக்கிறார்.
பிராமணன் என்பது பிறப்பால் வருவது என்பதை மாற்றிக் காட்டுகிறார்.
விவேகானந்தரின் ஞான குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பால் பிராமணர். அவரது முதன்மைச் சீடரான விவேகானந்தர் பிராமணர் அல்லர்.
சாதி வேறுபாடுகள் மலிந்திருந்த வங்காளத்தில் குரு தேவருக்குப் பிறகு தான் சந்தித்த சாதி வேற்றுமைகளால் வெகுண்டு எழும் விவேகானந்தர் தீண்டாமைக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறார்.
1898 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தனது குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜெயந்தி விழாவில் நூற்றுக்கணக்கான பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு தானே பூணூல் அணிவிக்கிறார். அவர்களுக்கு காயத்ரி மந்திரத்தைச் சொல்லித் தருகிறார். இன்றிலிருந்து வேதங்களை படிப்பதற்கான அதிகாரத்தை உங்களுக்கு தருகிறேன் என்றும் அவர்களுக்கு சொல்லுகிறார்.
அப்போது பாரதியாருக்கு வயது 16.
பாரதியார் காலமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு , தான் தொடங்கிய சமதா சங்கத்தின் மூலம் பலருக்குப் பூணூல் அணிவிக்கத் தொடங்கினார் பாபாஸாகிப் அம்பேத்கர். 1929 ஆம் ஆண்டு சிப்லூன் எனும் நகரத்தில் மிகப்பெரிய அளவில் தீண்டத்தகாதவர்களுக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கு நடத்தப்பட்டது, அந்த நிகழ்வில் அண்ணல் அம்பேத்கர் உடல் அளவிலும் ஆன்மீக நோக்கிலும் பூணூல் அணிவதன் சிறப்பை விளக்கி உரையாற்றினார். பூணூல் அணிவதன் மூலம் வேதங்களை ஓதுகிற உரிமையை மீண்டும் பெற்று விட்டதாக தீண்டத்தகாத சமூகத்தினரை அவர் பாராட்டினார். அவருடைய பிராமண நண்பரான தேவுரவ் நாயக் என்பவர் அன்றைய நாளில் 6000க்கும் மேற்பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார்.
ராமானுஜர் ,விவேகானந்தர், பாரதியார் , அம்பேத்கர் ஆகிய நால்வரும் செய்த இந்தச் செயலுக்கு அவர்கள் வாழ்ந்த காலம், சூழல், நோக்கம், பின்னணி இவற்றில் மாறுபாடுகள் உண்டு.
ஆனால் பிராமணன் என்பது பிறப்புடன் தொடர்புடையது அது பிறப்பால் வருவது என்பதை நால்வருமே தகர்த்திருக்கிறார்கள். அதை அணிவதன் மூலம் மட்டுமே ஒருவர் மற்றவரிடம் இருந்து உயர்வானவர் என்று உணரும் மேட்டிமைத்தனத்தை அது எதிர்த்திருக்கிறது. மூன்று இழைகள் கொண்ட ஒரு நூல்தான் உன்னையும் என்னையும் வேறுபடுத்தும் என்றால், அதனை நான் அணிந்த பிறகு அதற்குரிய மந்திரங்களைச் சொல்லிய பிறகு என்னிலிருந்து நீ எப்படி வேறுபட முடியும் என்கிற வினாவை அது உருவாக்குகிறது.
இப்போது நீயும் நானும் ஒன்றுதானே என்று பகடி செய்ய அந்தப் பூணூல் பயன்பட்டிருக்கிறது.
இந்த நால்வரில் ராமானுஜர், விவேகானந்தர், அண்ணல் அம்பேத்கர் ஆகிய மூவரும் வேறு வேறு இயக்கங்களின், நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலே இருந்தார்கள் .
பாரதியாரோ தனி ஒரு நபராக, ஒரு கவிஞனாக, ஒரு பத்திரிகையாளராக மட்டுமே இருந்து கொண்டு இதனைச் செய்கிறார். பாரதியார் தனது இல்லத்தில் கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்ட நிகழ்வில் பிராமணர்களும் பிராமணர் அல்லாதவர்களும் ஒருசேரக் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜாதி மதங்களைப் பாரோம்…
சாதி இரண்டொழிய வேறில்லை என தமிழ் மகள் சொல்லிய வார்த்தை அமிழ்தென்போம் என்று பேசிய, பாடிய, வாழ்ந்த பாரதி மத வேற்றுமைகளுக்கும் சாதிக் கொடுமைகளுக்கும் எதிரான கருத்தியல் ஆயுதங்களை நமக்குத் தந்து விட்டுப் போயிருக்கிறார்.
அத்தகைய ஞான சூரியனுக்கு ஒப்பான மகாகவி பாரதியாரை ,சாதி வட்டத்திற்குள் அடைத்துப் பூணூல் அணிவித்துப் புறம்போக்குக் கூட்டம் ஒன்றின் கையில் ஒப்படைப்பது எப்படி நியாயமாகும்?
தங்களுக்கென்று வெட்கமில்லாமல் வெளியே சொல்லிக் கொள்கிற மாதிரி வரலாறும் , தலைவர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் இல்லாத மூட, நீர் மூட, மூடமூட மத வெறியர்களுக்கும் , சாதிச் சனியன்களுக்கும் உதவும் பணிய எவரும் எப்போதும் செய்யாதீர்கள்.
பாரதியாரைக் கால வரிசைப்படி முழுமையாக வாசிக்காமல், அவர் வாழ்ந்த காலச் சூழலை அறிந்து உணராமல், ஆழ்ந்திருக்கும் பாரதியின் கவியுள்ளம் காணாமல் பாரதியை எதிர் முகாம்களுக்கு ஏற்றுமதி செய்துவிடாதீர்கள்.
உங்கள் வாசிப்பின் புரிதலில், பாரதி சாதிய எல்லைக்குள்ளேதான் வாழ்கிறான் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம் .உங்கள் விமர்சன உரிமை. ஆனால் பாரதியை நிராகரிப்பதோடு நின்று விடுங்கள்.
வேறு ஒரு வண்ணம் பூசி இன்னும் ஒரு முகாமில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் தவறான தரகு வேலையைப் பார்க்காதீர்கள்.
நிறைவாகச் சொல்கிறேன்.
பைந்தமிழ்த் தேர் பாகனை
செந்தமிழ் தேனீயை
சிந்துக்குத் தந்தையை
குவிக்கும் கவிதைக் குயிலை இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசை
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலாவை காடு கமழும் கற்பூரச் சொற்கோவை
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையலை
திறம்பாட வந்த மறவனை
புதிய அறம் பாட வந்த அறிஞனை
நாட்டில் படரும் சாதிப்படைக்கு மருந்தை
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பை
அயலார்எதிர்ப்புக்கு அணையா விளக்கை…
எதிரிகளின் முகாமுக்கு ஏற்றுமதி செய்து விடாதீர்கள் .
பிறரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் திருடித் தின்னும் கூட்டத்தின் கையில் ஞானத் திருவிளக்கை ஒப்படைக்காதீர்கள்.
அதிலும் வளையாத நிமிர்ந்த எழுதுகோலோடு ஒருவனை எதிரிகளின் முகாமுக்கு அனுப்பித் தருவது தற்கொலைக்கு ஒப்பானது.
bkkumar.theroots@gmail.com