1.
உவன் எருமைச் சாணத்தைக்
கடந்துவந்தேன் என்கிறான்.
அவன் எருமையைக் கடந்துவந்தேன் என்கிறான்.
இவன் எருமை முதுகுப் பறவையைக்
கடந்துவந்தேன் என்கிறான்.
சொற்ப வித்தியாசம் தான்.
ஆனால் பெரிய வித்தியாசம்.
2.
புதிய செருப்பு அல்ல.
அறுந்த வார் உடையதும் அல்ல.
ஒரு குறிப்பிட்ட காலத் தொடர் பயன்பாட்டில்
விரல்களின் அழுத்த வழுவழுப்பு உடையவை.
மறதியில் அல்ல, ஞாபகத்துடனே
விட்டுவிட்டுப் போனவை.
ருசி உண்டாகிவிட்ட பாதங்கள்
எப்போதும் கிறுக்குப் பிடித்தவை..
3.
இறந்து போனவன் எழுதிய குறிப்புக் காகிதம்.
பழைய ஆல்பத்தின் கருப்பு இலைகளின் நடுவில்
துருத்தி நின்றது.
இப்படி எழுதப்பட்டிருந்தது அதில்,
“என் தற்கொலைக்கு வேறு யாரும் அல்ல,
என் குடும்ப ஆல்பமே காரணம்.’’
4.
இரண்டும் ஒரே உயரம்.
ஒரே அளவுக் கண்ணாடிக் குவளைகள்.
இதில் இருந்த திரவத்தை
அதில் ஊற்றினேன்.
யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
எனக்குத்தான் பெரும் வாதை
ஒரு சொட்டு பாக்கிவிடாமல்
முழுவதையும் ஊற்றமுடியவில்லை என்று.
vannadasan@gmail.com