தி.ஜானகிராமனின் சிறுகதை ஒன்று உண்டு. ஒரு கிராமத்தில் பேரழகியான விலைமாது ஒருத்தி இருப்பாள். மாட்டு வண்டி ஓட்டும் ஒருவன் எப்படியாவது அவளுடன் ஒரு நாளாவது இருக்க வேண்டும் என வெளி நாட்டுக்கெல்லாம் சென்று வருடக்கணக்கில் மிகக் கடுமையாக உழைத்து நிறையப் பணம் சம்பாதித்து வருவான். ஆனால் அப்போது அப்பெண் அழகு இளமையெல்லாம் இழந்து கிழவியாக இருப்பாள். அவனுக்குப் பலத்த ஏமாற்றமாக இருக்கும். அவனது அத்தனை பணமும் வீணானது போல் நினைப்பான். இயற்கையில் பல விஷயங்கள் அப்படித்தான். குறிப்பிட்ட காலத்தில் நடக்காமல் போனால் பின்னர் எப்போதுமே நடக்காது. குறிப்பாக ,மனித மூளை வளர்ச்சியிலும் அப்படித்தான்.

குழந்தை பிறந்த சில வருடங்களுக்குள் அது எந்த மொழியையும் எதிர்கொள்ளவே இல்லை என்றால் அதன்பின் எத்தனை தீவிரமாகக் கற்றுக் கொடுத்தாலும் அதனால் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளவே முடியாது எனப் போன கட்டுரையில் பார்த்தோம். அது ஏன் என இப்பொது பார்க்கலாம்.

குழந்தை பிறந்து வளர்ந்து வரும் காலத்தில் அதன் மூளையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திறனுக்கும்  ஒரு குறிப்பிட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதை Critical Period என்று அழைக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட செயல்கள் நடைபெறாவிட்டால் பின்னர் எத்தனை முயற்சி செய்தாலும் அது நடைபெறவே செய்யாது. குறிப்பாக, நமது மூளையில் இதுபோல் அதிகம் நடைபெறும்.

பிறவியிலேயே கண்புரை (கேட்டராக்ட்) மாதிரியான நோய்களால் கண்பார்வை இல்லாமல் பிறக்கும் சில குழந்தைகள். அக்குறைபாட்டினை உடனேயே சரிப்படுத்திவிட்டால் குழந்தைகளுக்குப் பார்வை முழுமையாகக் கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக ஏழ்மையினாலோ வேறுசில காரணங்களாலோ சில குழந்தைகளுக்கு இளமையிலேயே பார்வைக் குறைபாட்டினைச் சரிசெய்ய முடியாமல் போய்விடும். அக்குழந்தைகள் பதின்வயதை அடையும்வரை பார்வை இன்றி ஒலியையும் தொடு உணர்வையும் வைத்துக் கொண்டே உலகை அறிந்து வைத்திருப்பார்கள். பதின்வயதைக் கடந்தபின் அவர்களுக்கு யாராவது உதவி செய்து அக்குறைபாட்டினை நீக்கினாலும் அவர்களில் சிலருக்குப் பெரிய முன்னேற்றம் இருப்பதில்லை. அவர்களால் பார்க்க முடிந்தாலும் அவர்களால் பொருட்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போக நேரிடும். குறிப்பாக முப்பரிமாணமாக அவர்களால் உலகைக் காணுவதில் ஏராளமான பிரச்சனைகள்  ஏற்படும்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் கண்பார்வை கிடைப்பதற்கு முன் இருந்ததைப் போல அவர்கள் கண்களை மூடிக்கொண்டு நடந்தால் எளிதாக நடப்பார்கள். கண்களைத் திறந்து நடந்தால் சிரமப்படுவார்கள்.

பேசும்படம் என்ற திரைப்படத்தில் கமல்ஹாஸன் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் வசிப்பார். தினமும் இரவு அருகில் இருக்கும் சினிமா தியேட்டரிலிருந்து வரும் சண்டைக் காட்சிகளின் ஒலியிலேயே தூங்கிப் பழகியிருப்பார். அவரால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பஞ்சு மெத்தையில் மயான அமைதியில் தூங்க முடியாது. அந்தத் தியேட்டரின் ஒலிகளைப் பதிவுசெய்துகொண்டு வந்து கேட்டபடியே தூங்குவார். நமது மூளை ஒரு விஷயத்துக்குப் பழகிவிட்டால் பின்னர் அதனால் மாற்றிக் கொள்வது மிகக்கடினம். பார்வை இல்லாமலே பழகிய மூளைக்குப் பார்வை வந்தபின் இன்னும் கஷ்டமாக ஆகிவிடுகிறது. பேசும்படத் திரைப்பட கமல் மாதிரி. பார்வை என்பது அவர்களைப் பொறுத்தவரை வழுக்கை விழுந்த பிறகு கிடைத்த சீப்பு மாதிரி..

நாமெல்லாம் வாத்து மேய்ப்பதைப் பற்றிக் கிண்டலாகப் பேசுகிறோம். வாத்து மேய்த்தே ஒருவர் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார் என நான் என் மாணவர்களிடம் சொல்வதுண்டு. அவர் பெயர் கோன்ராட் லோரென்ஸ் (Kondrad Lorenz). உளவியல் ஆராய்ச்சியாளரான அவர் வாத்துகளிடம் செய்த ஆய்வுகளின்படி பிறந்த சில மணி நேரங்களுக்குள் வாத்துகள் முன் யார் அசைகிறார்களோ அவர்களையே அந்த வாத்துகள் தாயாகக் கருதுகின்றன. அது ஆராய்ச்சியாளராக இருந்தாலும் சரி, உயிரில்லாத பொம்மையாக இருந்தாலும் சரி! லோரென்ஸ் அவற்றின் முன் வந்து நின்றதும் அவரையே அம்மாவாகக் கருதி அவர் பின்னாலேயே வாத்துகள் சென்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின் அவ்வாத்துகளின் ஒரிஜினல் அம்மா வந்தாலும் அதனுடன் குட்டிகள் இணைவதில்லை. வளரும் மூளையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட விஷயங்களை மாற்ற முடியாது என்று கண்டறிந்த இந்த ஆய்வுக்காக அவர் நோபல் பரிசு வாங்கினார். இந்த விளைவுக்கு இம்ப்ரிண்டிங்க் (Imprinting) என்று பெயர்.

மனித மூளையில்   பிறந்தது முதல் சில வருடங்கள் வரை ஏராளமான வளர்ச்சியும் மாற்றங்களும் ஏற்படுகின்றன… இந்தக் காலகட்டத்தில்  கண், காது போன்ற புலன்களிலிருந்து வரும் செய்திகள்  உள்வாங்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு மூளையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, மண், நீர், சூரியவெளிச்சத்துக்கு ஏற்றவாறு விதையிலிருந்து வெளிவரும் செடி தன்னை மாற்றி அமைத்துக் கொள்வது போல் மூளை நரம்புகளும் தன்னை மாற்றிக் கொள்கிறது. கற்றுக் கொள்கிறது.

ஆனால் மனித மூளை ஒரு காலகட்டத்துக்குப் பின் பெரிதாக மாறுதல்கள் அடையாமல் நின்று விடுகிறது. இன்னும் சொல்லப் போனால் பிறந்ததிலிருந்து மரணம் அடைவது வரை நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள செல்கள் மீண்டும் மீண்டும் புதிதாக உருவாகின்றன. தோலில் சில பகுதி சேதம் அடைந்தால் புதிதாக தோல் செல்கள் உருவாகின்றன. அதே போல் குடலில் உள்ள செல்களும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மூளை செல்கள் மட்டும் ஒன்றரை வயதுக்குப் பின் புதிதாக உருவாவதே இல்லை. ஒன்றரை வயதுக் குழந்தையின் மூளையில் சுமார் ஒரு லட்சம் கோடி செல்கள் (நியூரான்கள்) இருக்கின்றன. அதன்பின் ஒரு நியூரான்கூடப் புதிதாக உருவாவதில்லை. (விதிவிலக்காக மூளையில் ஓரிரு இடங்களில் புது நியூரான்கள் புதிதாக உருவாகின்றன எனச் சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆனாலும்  99 சதவிகிதம் மூளையில் புதிதாகச் செல்கள் உருவாவதில்லை).

பிறந்த குழந்தை சில வருடங்களுக்குள் ஒளியையோ, ஒலியையோ உணராவிட்டால் அதன் மூளை வளர்ச்சி நின்றுவிட்ட காலகட்டத்துக்குப் பின்னர் அதனால் புதிதாகக் கற்றுக் கொள்வது மிகமிகக் கடினமாகிவிடுகிறது. களிமண் காய்ந்து இறுகியபின் அதில் பானை செய்வது போன்றதாகும் அச்செயல். மொழியின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வதும் இப்படித்தான்.

கூட்டுக் குடும்பமுறையில் பல பிரச்சனைகள் இருந்தன. ஆனால் அதில் ஒரு நன்மையும் இருந்தது. தாத்தா, பாட்டி,அத்தை, மாமா எனப் பலர் வீட்டில் பேசிக் கொண்டே இருப்பதால் குழந்தைகள் மொழியைச் சீக்கிரம் கற்றுக் கொண்டு பேசத் துவங்குகின்றன. அதுமட்டுமின்றி அடுத்தவர்களுடன் பழகும் திறன்களையும் (Social skills) கற்றுக் கொள்கின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று குழந்தைகளைத் தாத்தா-பாட்டி எனப் பார்த்துக் கொள்ளாமல் தனிமையிலும் காப்பகங்களிலும் வளரும் குழந்தைகளுக்குப் பேசும் திறன் தாமதமாகவும் குறைபாட்டுடனும் வருகின்றன என்கின்றன ஆய்வுகள். அதேபோல் ஆட்டிசம் போன்று பிறருடன் பழகுவதில் குறைபாடுள்ள பாதிப்புகளும் அதிகமாக ஏற்படுகின்றன.  பிறவியிலேயே காது கேட்காமல் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் எத்தனை சீக்கிரம் சரி செய்கிறோமா அத்தனைக்கத்தனை அதற்குப் பேசும் திறன் அதிகரிக்கும்.  மூளை மாறுதலடைய இயலா நிலைக்குச் சென்றுவிடுவதற்குமுன் அக்குறைபாட்டைச் சரிசெய்ய வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை,

மொழி அறிவு என்பது மூளையில் ஒரே ஒரு பகுதியிலா இருக்கிறது? அதுவும் ஒலிகளை அறியும் பகுதியிலா இருக்கிறது.? மொழியின் அர்த்தம், இலக்கணம், சிலேடை, உருவகம் எனப் பலவிஷயங்கள் இருக்கின்றனவே இவையெல்லாம் எப்படித் தோன்றின? மூளையின் பாதிப்பினால் ஒரு உருவகத்தையோ நகைச்சுவையையோ புரிந்து கொள்ள முடியாமல் போகுமா? ஏற்கனவே ஒரு மொழியைக் கற்றிருந்தால் எத்தனை வயதானாலும் இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ள முடிகிறதே அது மட்டும் எப்படி?

இப்படிப் பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த வாரங்களில் விடை காணலாம். மூளையின் ஆச்சரியங்களோடு பயணிப்போம்!!

*************************************************************************************************************************

 

 

 

ramsych2@gmail.com