சிந்தாந்த  பின்புலத்தோடு இந்தியாவில் உருவான இயக்கங்கள்,  அரசியல் கட்சிகள் குறைவே. தேசிய விடுதலையோடு தொடர்புடைய காங்கிரஸ் இயக்கம். அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை அடியொற்றி தலித் விடுதலை அரசியல் கோட்பாடுகளோடு  உருவான தலித் இயக்கங்கள், பிரமணரல்லாதோருக்கான அரசியல் உரிமை என்ற கோட்பாட்டோடு  உருவான திராவிட இயக்கம் போன்றவைகளைப் போல் அல்ல அதிமுக என்ற இயக்கம்.

எந்த சிந்தாந்த  பின்புலமுமின்றி உருவான அதிமுக தனது பொன் விழா ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்  பிணைந்தவை திமுகவும்-அதிமுகவும். இதில் திமுக  கட்சிக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் வந்த எல்லா அரசியல் பேரிடர்களையும் கடந்து ஆளும் கட்சியாக இருக்கிறது. எப்போதும் அதிமுக வெளியில் இருந்து அரசியல் பேரிடர் எதனையும் சந்தித்ததில்லை. அது சந்தித்த அத்தனை பேரிடர்களும் கட்சிக்குள் இருந்தே உருவானவை. இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகியிருக்கும் ஆறுமுகசாமி அறிக்கை வெளிப்படுத்தும் உண்மையும் அதுவே.

திமுக தலைவர்களுள்  ஒருவராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் கவர்ச்சி மிக்க தலைவராக இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர் ஏன் அதிமுக என்ற கட்சியை உருவாக்கினார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. புகழின் உச்சியில்  இருந்து திரைத்துறையை தன் கைக்குள் வைத்து கட்டுப்படுத்தி வந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் அரசியலில் எந்த தீர்க்கமான இடத்தையும் வகிக்க முடியவில்லை. ஆனால் சினிமாவில் இருந்து கிடைத்த மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது.

அப்போது சிந்தாந்த ரீதியாக தமிழ் மாநில உணர்ச்சி அரசியலை பேசிக் கொண்டிருந்த திமுகவை உடைக்க நினைத்த இந்திரா காந்தி அம்மையார் வருமானவரித்துறையை எம்.ஜி.ஆர். மீது ஏவினார். அதிக ஊதியம் பெறும் உச்ச நடிகரான எம்.ஜி.ஆருக்கு அது நெருக்கடிகளை உருவாக்கிய போது டெல்லி சென்று இந்திராகாந்தி அம்மையாரைச் சந்தித்து திரும்பிய எம்.ஜி.ஆர். திமுக தலைமையிடம் கணக்குக் கேட்டார்.

அதிமுக என்ற கட்சி உருவாக கணக்கு கேட்டதுதான் காரணம். திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர். உருவாக்குவதற்கான ஒரு  அரசியல் நியாயங்களும் அப்போது இல்லை.  அதிமுகவின் சிந்தாந்தம் என்ன என்ற  கேள்வி எழுந்த போது “அண்ணாயிசம்” என்றார்.  அதன் பொருள் இன்று  அதிமுகவின்  ஐந்து அணிகளாக  இருக்கும் எந்த தலைவர்களுக்கும் தெரியாது.

தன்னைச் சுற்றி நிழல் உலகம் ஒன்றை உருவாக்கிக் கொண்ட எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தின் அடிப்படையான இட ஒதுக்கீட்டு உரிமையில்  பொருளாதார அளவுகோலான கிரிமிலேயரைப் புகுத்தினார்.

மண்டைக்காடு கலவரம், நக்சல் வேட்டை என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொலை, மெரினா துப்பாக்கிச் சூடு, ஊடகவியலாளர்கள் வேட்டை என சட்டவிரோதக் காவல் கொலைகளில் இந்தியாவிலேயே தமிழகமே முதல் மாநிலமாக இருந்தது அவரது ஆட்சியில்.மிகக் குறிப்பிட்டுச் சொன்னால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆரைப் பயன்படுத்தியே ராஜீவ்காந்தி இலங்கை மக்கள் மீது அந்த ஒப்பந்தத்தை திணித்தார்.  செயலற்ற முதல்வராக  அவர் இருந்த காலம் தமிழகத்தின் இருண்ட காலமாகவே இருந்தது.

அவர் மறைந்த பின்னர்  அவரது மனைவி ஜானகிக்கும் முதல்வர் பதவியையும் அதிமுக என்ற கட்சியையும் கைப்பற்றுவது திட்டம். ஜெயலலிதாவுக்கும் முதல்வர் பதவியையும் கட்சியையும் கைப்பற்றுவது திட்டம். ஆனால், எம்.ஜி.ஆருக்கு இருந்த அதே சினிமா கவர்ச்சியும் இளமையும் ஜெயலலிதாவுக்குக் கை கொடுக்க அவர் ஜானகியை  வீழ்த்தி அரங்கிற்கு வந்தார். அப்போது அவர் சொன்ன பிரபலமான குற்றச்சாட்டு “ஜானகி எம்.ஜி.ஆருக்கு மோரில்  விஷம் கலந்து கொடுத்தார்” என்பதுதான். எம்.ஜி.ஆர். தான் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் மாபெரும் நிழல் உலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வணிகர்கள். கல்வி வள்ளல்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இருந்தனர். அதிமுக என்ற தோட்டத்தில் வளர்ந்து  நின்றவர்களுக்கு எதிர்காலம் இருண்டு நின்ற போது. ஜானகியா ஜெயலலிதாவா என்ற இரண்டு தெரிவுகளில் எதைத் தெரிவு செய்வது என்று குழப்பம் இருக்கவில்லை. ஓராண்டுக்குள் கட்சியின் பெரும்பான்மையான கட்டமைப்பு  ஜெயலலிதாவின் கைகளுக்கு வந்தது. அதற்கு உதவிய ஒன்றே ஒன்று ஜெயலலிதாவின் சினிமா பிம்பம்.

துரதிருஷ்டமாக  ஜானகிக்கு அது இல்லாமல் போனதால் ஜெயலலிதா எளிதில் வெல்ல முடிந்தது. எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் நிழல் உலகம்  ஒன்றை உருவாக்கி கொண்டது போல  ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை மையமாக வைத்து ஒரு நிழல் உலகத்தை உருவாக்கினார்.

அதில்   விடியோ கேசட் டெலிவரி செய்யச்  சென்ற சசிகலாதான் 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் தனி வாழ்க்க்கையையும்  அரசியல் வாழ்வையும் தீர்மானித்தவர். ஜெயலலிதா இல்லாத சசிகலாவை  இன்று நாம் பார்க்கிறோம். அளவு கடந்த மேக்கப்போடு அவர் பேசுவது அப்பிராணித் தனமாக இருக்கிறது. அனைவருக்கும் எழுகிற கேள்வி இப்படி ஒரு எந்த ஆளுமைப் பண்புமற்ற பெண்ணா ஜெயலலிதாவை 30 ஆண்டுகள் கட்டியாண்டார் என்பதுதான்.

ஒரு விலங்கு பண்ணை போல அதிமுக என்ற கட்சி பண்புரீதியாக இறுக்கமடைய முதல் 20 ஆண்டுகள் எம்.ஜி.ஆரும் பிந்தைய 25 ஆண்டுகளில் ஜெயலலிதாவும், மிச்சமுள்ள ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி போன்றவர்களும் காரணம். விலங்கு பண்ணைக்கே உரிய ஒட்டுண்ணித் தன்மையோடு அதிமுக வளர்ந்தது இப்படித்தான்.

இப்போது நீங்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை வாசியுங்கள் எம்.ஜி.ஆர். முதல் எடப்பாடி பழனிசாமி வரை எப்படி அதிமுக என்ற கட்சி ஒரு நிழல் உலகப் பண்போடு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இன்று அக்கட்சியின் தொண்டர்களும் பிரமுகர்களும் பாஜக பக்கம் தாவி வருவதையும் இதனோடு இணைத்துப் பாக்க முடியும் பண்பு அளவில் இவை  வேறு வேறு நிகழ்வுகள் அல்ல…

ஆறுமுகசாமி  விசாரணையத்தின் நோக்கம்!

2016- டிசம்பர் முதல் வாரத்தில் முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா இறந்த போது பொது மக்களிடம் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. அவை மட்டுமே உண்மையான சந்தேகங்கள். அதிமுக தலைவர்களிடம் தங்கள் தலைவிக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக யாதொரு சந்தேகமும் இருந்ததாக அவர்களின் பேச்சுக்களில் வெளிப்படவில்லை.

அமைச்சரவையை வழி நடத்திச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மறைவையொட்டி முதல்வரானார். இதற்கு முன்னரும் அவர் ஜெயலலிதா சிறை செல்லும் சூழல் வந்த போதெல்லாம் முதல்வர் ஆனார். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அவர் ஆக்டிவான முதல்வராக செயல்பட முயன்றார். அது  அவரை முதல்வராக்கிய சசிகலாவை அதிர்ச்சியடையச் செய்தது.

சசிகலா தானே  முதல்வராக முடிவு செய்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒப்புதல் கடிதங்களில் கையெழுத்துப் பெற்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தார். அவரோ  சசிகலா முதல்வராவதைத் தாமதப்படுத்தும் நோக்கில் டெல்லி சென்றார்.

சசிகலாவின் அழுத்தத்தில் ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ நடத்தினார். அதன் நோக்கம் ஜெயலலிதாவுக்கு  உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. மக்களிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் உள்ளது என்றார். தங்கள் தலைவியின் மரணத்தில் அதிமுக தலைவர்களுக்கே சந்தேகம் உள்ளது என்பது பன்னீர்செல்வம் மூலமாகவே வெளிப்பட்டது.

பின்னர் ஆதரவிருந்தும் சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை சிறைக்கு அனுப்பி விடுவார்கள் என முன்கூட்டியே தெரிந்து கொண்ட சசிகலா தனக்கு விசுவாசமாக இருப்பார் என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டுச் சிறை சென்றார்.

பாரதிய ஜனதாக் கட்சி தலையிட்டு பன்னீர்செல்வத்தையும்-எடப்பாடி பழனிசாமியையும் இணைப்பதற்கான ஒரு இழையாக ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சந்தேகங்களைக் களைய விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பயன்படுத்திக் கொண்டது. துரதிருஷ்டமாக ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால தோழிக்கு அதுவரை விசுவாசிகளாக இருந்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிராகத் திரும்பினர்.

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றவாளி என்பதை நிரூபிப்பதே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் நோக்கம்.  சசிகலாவை குற்றவாளி ஆக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதுதான் ஆறுமுகசாமி ஆணையத்தின் நோக்கம். எடப்பாடி பழனிசாமி ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே அதற்காகத்தான்.

ஆணையம் சொல்வதென்ன?

2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணையம் ஆறு நிதியாண்டுகளில் மொத்தம்  4 கோடியே 81 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை செலவு செய்து 613 பக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட அறிக்கை என்பதால் இயல்பாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவதற்கு முன்பு இருந்த நோய்கள், உடல் உபாதைகள், யார் யார் மருத்துவர்கள் என்பதும், அனுமதிக்கப்பட்ட பின்னர் யார் யார் சிகிச்சையளித்தவர்கள், என்ன சிகிச்சை யாரால் வழங்கப்பட்டது என்பதும், முக்கிய சிகிச்சைகளுக்கான அனுமதி யாரிடம் பெறப்பட்டது என்பதுமே ஆணையத்தின் அறிக்கை முழுக்க பரவிக்கிடக்கிறது.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் முதல் நான்கு நாட்கள் சரியான சிகிச்சையை பெற்றார்.முதல் 15 நாட்களுக்குள் அவருக்கு ஏற்பட்ட தொற்று சரி செய்யப்பட்டது. ஆனால், பின்னர் நுரையீரல் வீக்கம், இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. துவக்கத்தில் அவருக்கு இருந்த  செப்சிஸ் வகை தொற்று சரி செய்யப்பட்டபோதும், அவருக்கு உருவான வெஜிட்டேசனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. ரிச்சர்ட் பீலே, ரஸ்ஸல், சமின் ஷர்மா போன்றோர் ஆஞ்சியோ சிகிச்சைக்கு வலியுறுத்தியும் அது கடைசி வரை செய்யப்படவில்லை. ஜெயலலிதாவைப் பரிசோதித்த ரிச்சர்ட் பீலே அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க சம்மதித்தால் தானே விமானத்தில் அவரோடு செல்ல தயராக இருப்பதாக சொல்லியும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் விட்டுள்ளார்கள் என்கிறது ஆணைய அறிக்கை.

2016-செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். ஒன்று, அப்போதைய ஒன்றிய அமைச்சர் வெங்கையாநாயுடு மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கி வைக்க வந்தார். அவரை நேரடியாக அரசு விழாவில் சந்திப்பதைத் தவிர்த்த ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலமாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர், அரசுப் பேருந்துகளை அறிமுகம் செய்யும் விழாவில் சில பேருந்துகளை மட்டும் கொடியசைத்து துவக்கி வைத்து விட்டு. தனது வாகன ஓட்டுநரிடம் உடல் நலம் சரியில்லை, நேராக வீட்டிற்குச் செல்லுங்கள் என்று காரில் அமர்ந்து போயஸ் இல்லம் செல்கிறார். அங்கு காரில் இருந்து இறங்கும் போது கால் தடுக்கி கீழே விழ இருந்து பின்னர் சமாளித்து வீட்டிற்குள் செல்கிறார். அதன் பின்னர் அவரை அவரது உதவியாளர்களே சடலமாகத்தான் பார்த்தார்கள்.

செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்ட போது அப்பல்லோ நிர்வாகம்  செப்டம்பர் 22  அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்கிறது என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் அப்பல்லோ சொன்னது, சிகிச்சையை ஓய்வு என்றது.

பாபு குருவில்லா ஆப்ரஹாம்,டாக்டர் பாபு மனோகர், டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், டாக்டர் ஏ. இராமச்சந்திரன்,எம்.ஆர் .கிரிநாத் போன்ற முன்னணி மருத்துவர்கள் உட்பட பல மருத்துவர்கள் அப்பல்லோ சார்பில் சிகிச்சையளித்தனர்.

அப்பல்லோ மருத்துவர்களுக்கு உதவ அரசு மருத்துவர்கள் ஆறு பேரை நியமித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். டாக்டர் விமலா, டாக்டர் ஆர். நாராயணபாபு,டாக்டர்  ஆர்.முத்துச்செல்வன், டாக்டர் பி.கலா, டாக்டர் எஸ்.டிட்டோ, டாக்டர் பி.தர்மராஜன்.

இது போக, ஒன்றிய அரசு எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்றை  ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க நியமித்தது.  அதில், டாக்டர் நிதீஷ் நாயக்,டாக்டர் ஜி.சி. கில்னானி, டாக்டர். அஞ்சன் த்ரிகா,டாக்டர் நிகில் டாண்டன் ஆகியோர் இருந்தனர்.

இது போக,  பிரிட்டன் மவுண்ட் எலிசபெத் மருத்துவர் ரிச்சட் பீலே, அமெரிக்க மருத்துவர் சமின் ஷர்மா, ஆகியோரும்  நேரில் அழைக்கப்பட்டனர். இது போக, அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் இதய நோய் நிபுணரான டாக்டர் ஸ்டூவர்ட் ரஸ்ஸலிடமும்  ஆலோசனை பெறப்பட்டது.

மொத்தத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 மருத்துவர்கள் ஜெயலலிதா சிகிச்சைக்காக குவிக்கப்பட்டும் அவரது உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.

இந்த ஆணையத்தின் அறிக்கையைக் கவனமாக வாசித்தால் ஒரு யதார்த்தமான உண்மை புலப்படும்.  ஜெயலலிதா எப்படி தன்னை மிஞ்ச முடியாத ஒரு பெருந்தலைவராக நினைத்து தனிமைப்படுத்திக் கொண்டு போயஸ் இல்லத்தில் வசித்தாரோ அவரது இயல்புக்கு ஏற்பவே இந்த சிகிச்சையும் நடந்தது.

இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்ற மருத்துவர்கள் இருந்தும் அவருக்குக் கிடைக்க வேண்டிய சிகிச்சை கிடைக்கவில்லை. மருத்துவர்கள், அப்பல்லோ  மருத்துவர்கள் அனைவருமே நம்பிக்கைக்குரிய நபராக சசிகலாவிடமே ஆலோசனை பெற்றார்கள்.

ஆனால்.  அவருக்கு வழங்க வேண்டிய ஆஞ்சியோ சிகிச்சையை பாபு ஆபிரஹாம் சாக்குப் போக்குச் சொல்லி தடுத்து விட்டார்.  ஜெயலலிதாவை அழைத்துச் சென்று வெளிநாட்டில் சிகிச்சையளிக்காலம் என்று சொன்ன போது அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “அது  உள்ளூர் மருத்துவர்களை அவமதிக்கும் செயல்” என்பது போன்று சொன்னதாக ஆணையம் சொல்கிறது.

உச்சக்கட்டமாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி நவம்பர் 11-ஆம் தேதி  “ஜெயலலிதாவின் நோய்த் தொற்று முழுமையாக கட்டுக்குள் இருக்கிறது. அவர் மருத்துவமனையில் இருந்து விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். அது அவருடைய முடிவைப் பொறுத்தது. திரும்பிச் செல்ல அவர் புத்துயிர் பெற்று உடல் நலம் தேறுவது அவசியம்” என பிரதாப் ரெட்டி குறிப்பிட்டதைக் குறிப்பிட்டு இது உண்மைக்குப் புறம்பானது என்கிறது ஆணையம்.

முடிவில்,  ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவின் அந்தரங்க மருத்துவராகப் பணியாற்றிய கே.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் குற்றமிழைத்தவர்கள் என்கிறது.

மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டி,டாக்டர் பாபு குருவில்லா ஆபிரஹாம், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் ஆகியோர் இதில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்கிறது ஆணையம்.

ஜெயலலிதா-சசிகலா விசுவாசத்தின் பெயரால்!

1984-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்குள்  நுழைந்த சசிகலா ஜெயலலிதாவுக்கு சகலமாகவும் மாறினார். அவரது உறவினரான டாக்டர் வினோதகன்தான் ஜெயலலிதாவுக்கு மருத்துவராக இருந்தார். பின்னர் அவர் மறைந்த பின்னர் இன்னொரு உறவினரான கே.எஸ். சிவக்குமார் ஜெயலலிதாவின் மருத்துவராக இருந்தார்.

சசிகலாவின்  உறவினர் கிருஷ்ணப்ரியா, விவேக், டாக்டர் சிவக்குமார், சமையல் பெண் ராஜம்மாள். ஜெயலலிதாவுக்கும் கட்சிக்கும் இடையில் பாலமாக இருந்த பூங்குன்றன் இவர்களே ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் அனைவருமே சசிகலாவின் விசுவாசிகள்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்வதற்கு மூன்று நாட்கள் முன்பே செப்டம்பர் 19-ஆம் தேதியே காய்ச்சல் இருந்திருக்கிறது. சோதித்த மருத்துவர்கள், அய்யப்பன் கோவிலுக்குச் சென்றிருந்த டாக்டர்  கே.எஸ்.சிவக்குமாரிடம் கேட்க அவர் பாரசிட்டமால் போதுமானது என்கிறார்.22-ஆம்  தேதி இரவு ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர்தான் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படுகிறார்.

வீட்டிலும் சரி, மருத்துவமனையிலும் சரி சசிகலா குடும்பத்தினரிடமே மருத்துவர்கள் முழுமையான ஆலோசனையைப் பெறுகிறார்கள். சுமார் பத்து அறைகள் சசிகலா உறவினர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. இது போக வெளியில் எல்லா நட்சத்திர விடுதிகளிலும் அறைகள்,  உயர்தர உணவுகள் என அந்த 75 நாட்களிலும்  பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள்.

சரி, இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் சசிகலாவைக் குற்றவாளி ஆக்குவதுதான்.ஆணையமும் அதையே சொல்கிறது. சசிகலாவும் சரி, டாக்டர் சிவக்குமாரும் சரி ஜெயலலிதா உடல் நிலையைக் கவனிக்கத் தவறியிருக்கிறார்கள். 19-ஆம் தேதி உடல் நலம் குன்றிய ஜெயலலிதாவை அன்றே மருத்துவமனையில் அனுமதித்திருக்கலாம். 22-ஆம் தேதி அவர் போயஸ் இல்லத்தில் தடுக்கி விழப் போன சூழலையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் “அக்காள் வந்துவிடுவார்” என சசிகலா நம்பியதாகச் சொல்கிறார். எப்படி அதிமுக தொண்டர்கள் வேப்பிலை கட்டி,மண் சோறு சாப்பிட்டு, மொட்டையடித்து வேண்டிக் கொண்டால் அம்மா வந்து விடுவார் என நம்பினார்களோ சசிகலாவும் அப்படியே நம்பினார்.

ஆனால், அப்படி ஒரு நம்பிக்கையை வைத்து, மக்களோ சசிகலா கட்சிக்குள் வளர்த்து விட்டவர்களோ அவரை நம்பவில்லை என்பதையே ஆணையம் சொல்கிறது.

சசிகலா, சிவக்குமார், பாபு ஆப்ரஹாம் ஆகியோர் சிகிச்சையைத் தாமதித்தனர். கொஞ்சம் நிதானமாக யோசித்தால் 19-ஆம் தேதி முதல் இந்த சிகிச்சை தாமதமாகவே நடந்திருக்கிறது. ஆஞ்சியோ செய்யப்படவில்லை. இதற்கு சசிகலா, சிவக்குமார், அப்பல்லோ மருத்துவர்களைத் தவிர வேறு யார் பொறுப்பாக முடியும்?

கடந்த 30 ஆண்டுகளில் சசிகலாவை மீறி எவரும் போயஸ் இல்லத்திற்குள் நுழைய முடியவில்லை. ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகளே போயஸ் இல்லத்திற்குள் நுழைய முடியவில்லை. அதே போன்றுதான் ஜெயலலிதாவின் சிகிச்சையிலும் சசிகலா மற்றும் அவர்களின் உறவினர்களை மீறி எவராலும் எந்த உண்மையையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒன்றிய அரசின் அணுகுமுறை!

ஜெயலலிதா சிகிச்சைக்காக ஒன்றிய அரசு எய்ம்ஸ் மருத்துவர்களை நியமிக்கிறது. ஆனால் அவர்களோ தாங்கள் சிகிச்சையைக் கண்காணிக்கவே வந்தோம். சிகிச்சையளிக்க வரவில்லை என ஆணையத்தில் சொல்லியிருக்கிறார்கள் .கண்காணிக்க என்றால் எதைக் கண்காணிக்க? ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக கண்காணித்து யாருக்கு இவர்கள் அறிக்கை அளித்தார்கள். இந்தக் கேள்வி மிக முக்கியமானது. காரணம்,  ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே தமிழக அமைச்சரவையை வழி நடத்திச் சென்ற பன்னீர்செல்வத்தை பாஜக தன் நிழலில் எடுத்துக் கொண்டது. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்றவற்றுக்கு அவர் சுயநினைவின்றி இருந்த காலத்திலேயே ஒப்புதல்  வழங்கப்பட்டு விட்டது.

தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ஆனால் கடைசி வரை தற்காலிக ஆளுநரை மட்டுமே  நியமித்தது ஒன்றிய அரசு. அரசியல் குழப்பங்களைத் தனக்கு தோதாகப் பயன்படுத்த தற்காலிக ஆளுநர்களைப் பயன்படுத்தியது பாஜக அப்படியே, தமிழ்நாட்டுக்கும் தற்காலிக ஆளுநராக  வித்யாசாகர் ராவ் இருந்தார். அப்போதைய ஒன்றிய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் அதீத அக்கறையோடு அடிக்கடி வந்து சென்றார். இது அனைத்திற்கும் துவக்கமாக எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை அமைந்ததா என்பதும் சிந்திக்க வேண்டியது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சைக்கு உதவ அமைத்த ஆறு அரசு மருத்துவர்களும் அப்பல்லோவில் ஒரு அறைக்குள் முடங்கினார்கள். அவர்கள் ஜெயலலிதா இறந்த செய்தியைத் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டதாகக் கூறியது அதிர்ச்சியை உருவாக்குகிறது.

மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை ஒருங்கிணைத்த அப்பல்லோ மருத்துவர்களும் சசிகலாவின் உறவினர் சிவக்குமாரும் அதை முறையாகக் கையாளவில்லை என்பதே ஆணையம் கூறும் குற்றச்சாட்டு. ஆனால் அதை  உள்நோக்கத்தோடு செய்தார்களா அல்லது பணியில் கவனக்குறைவாக விடுபட்டதா என்பதுதான் கேள்வி.

இதில் சசிகலா குற்றமிழைத்தவர் என்பதை நிரூபிக்க கூடுதலாக வலு சேர்க்க வேறு சம்பவத்தை ஆணையம் நினைவு கூர்கிறது. 2011-ஆம் ஆண்டு சசிகலாவின் உறவினர் திவாகரனோடு சேர்ந்து பெங்களூருவில் வைத்து முதல்வர் பதவியைக் குறி வைத்து சதி ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டதாக உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவுக்கு ஒரு தகவல் பரிமாறப்பட மொத்த சசிகலா குடும்பத்தையும் கட்சி-ஆட்சி இரண்டையும் விட்டு விலக்கி வைக்கிறார் ஜெயலலிதா. ஆனால், அதே காலகட்டத்தில் துக்ளக் சோ ராமசாமியின் உறவினர்கள் ஜெயலலிதாவை நெருங்குகிறார்கள். சோவுக்கும் சசிகலாவுக்கும் இடையில்  உருவான மோதலின் வெளிப்பாடே இவை. சசிகலா போயஸ் இல்லாத்தில் இல்லாமல் இருந்த காலத்தில் சோ ராமசாமியின் மகன் ஸ்ரீராம் ஜெயலலிதாவின் ஆலோசகர் போல செயல்பட்டார்.

பின்னர் 2012 –இல் சசிகலா மீண்டும் போயஸ் இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு நிலை சுமுகமாக இல்லை என்கிறது ஆணையம்.  முதல்வர் பதவியைக் கைப்பற்ற நினைத்ததாக சசிகலாவைக் குற்றம் சுமத்தி அத்தோடு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை மாயத் தோற்றம் என்கிறது ஆறுமுகசாமி ஆணையம். உண்மையில் ஜெயலலிதா மீது அக்கறை கொண்டவர்கள் என்றால் ஒரு தெராசிக் மருத்துவரை நியமித்து  வெஜிடேசன் தொற்றுக்கு உரிய சிகிச்சைய அளித்திருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருக்கலாம் என்பதுதான்  ஆறுமுகசாமி ஆணையம் உணர்த்தும் உண்மை.

மரணத்தை தவிர்த்திருக்கலாம், ஆனால் சசிகலா மட்டுமே குற்றவாளி அல்ல.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாத பல உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. மவுண்ட் எலிசபெத் மருத்துவர் ரிச்சர்ட் பீலே வந்த பின்னர்தான் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தொற்று சரி செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு இதயத்தில் , நுரையீரலில் இருந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டே அவர் ஒன்று ஜெயலலிதாவை விமானத்தில்  வெளிநாடு அழைத்துச் செல்லலாம்.அல்லது இங்கேயே ஆஞ்சியோ செய்யலாம் என்றார். இது புறக்கணிக்கப்பட்டது ஏன்? முடிவெடுக்கும் இடத்தில் இருந்தவர்கள் யார்?

சந்தேகமே இல்லாமல் சசிகலாதான் அந்த இடத்தில் இருந்தார். அவரும் அவரது உறவினரான கே.எஸ். சிவக்குமாருமே முடிவெடுக்கும் இடத்தில் இருந்திருக்கிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த சசிகலா தனது 9234 என்ற கைதி எண்ணைக் குறிப்பிட்டே பிரமாணப்பத்திரம்  தாக்கல் செய்கிறார்.அது அம்மாவுக்காக நான் சிறையில் இருக்கிறேன் என்பதும்தான் அது.

பாஜகவின் நோக்கம்

ஜெயலலிதா சுயநினைவின்றி அனுமதிக்கப்படுகிறார். அவரது சிகிச்சை ஒரு மாதத்தையும் கடந்து நீண்ட போது சந்தேகம் அடைந்த ஒன்றிய பாஜக அரசு  ஜெயலலிதாவின் நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் அறிந்து கொள்கிறது. ஜெயலலிதா மீண்டு வருவது கடினம், அப்படியே மீண்டு வந்தாலும் பழையது போல ஆக்டிவான ஒரு முதல்வராக அவரால் இருக்க முடியாது. இந்த சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதற்கு உகந்த ஆளாக பன்னீர்செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அனைத்துமே பாஜக  வழிநடத்தலில் மட்டும்தான் நடந்தது.

பன்னீர்செல்வத்தின் நோக்கம்

பெரியகுளம் ரோசி கேண்டீன்  முதலாளி  பன்னீர்செல்வத்தை தனது விசுவாசியாகக் களத்தில் கொண்டு வந்தவர் சசிகலா.  உண்மையில் பன்னீர்செல்வமும் அப்படித்தான் இருந்தார். ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் ஜெயலலிதாவின் மிக நம்பிக்கைக்குரிய நபராக இருந்தார். செயல்படாத பொம்மை போல விசுவாசம் என்ற ஸ்டிக்கரை  நெற்றில் ஒட்டி வாழ்ந்தவர்.  ஆனால், ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அவர்  முதல்வராக செயல்பட முயன்றார். அது சசிகலா கண்ணை உறுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி தானே முதல்வராக முயன்று பாஜக தலையீட்டால் அது தடுக்கப்பட்டு சிறை சென்றார்.

சசிகலாவின் நோக்கம்

சசிகலா குடும்பம் எப்போதுமே தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தங்கள் திரைமறைவு ஆட்சியை நடத்தியவர்கள்தான். அவர்களுக்கு ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஆட்சி தங்கள் குடும்பத்தின் கைகளுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் நிச்சயம் இருந்திருக்கலாம். அது இல்லாமல் இருக்க கடுகளவு  சிந்திக்கக் கூட முடியாது. காரணம் கடந்த 30 ஆண்டுகளில் போயஸ் இல்லத்தைப் பயன்படுத்துத் தமிழ்நாட்டையே சுடுகாடாக்கிய கொள்ளைக் கூட்டம்தான் மன்னார்குடி கும்பல். அதன் தலைவிதான் சசிகலா. அவருக்கு  ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கும் ஆசை இருந்ததை நாம் மறுத்து விடமுடியாது. கே.எஸ். சிவக்குமார் அதன் சூத்திரதாரியாக இருந்திருப்பார். நிச்சயம் ஒரு சூழ்ச்சியின் நிமித்தமே  இந்த சிகிச்சை குறைபாடுகள் என நாம் உறுதியாகக் கருத இடமுண்டு.

நீண்டகாலம்  ஜெயலலிதாவோடு பழகி அவரது உடல் நிலை பற்றி அறிந்தவர்கள் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் மிக மிக கவனக்குறைவாக இருந்திருக்கிறார்கள். அந்தக் கவனக்குறைவால் விளைந்த மரணம்தான் ஜெயலலிதாவின் மரணம் என்பதை அறிக்கை தெளிவாகச் சொல்கிறது.

சிலர் ஆறுமுகசாமி என்ன மருத்துவரா எனக் கேட்கிறார்கள். இல்லை, நிச்சயம் சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும், பன்னீரும், கூட மருத்துவர் இல்லை. ஆனால் , நோயுற்றோருக்கு தேவையான சிகிச்சையை வழங்குவதும் தாமதம் ஏற்பட இவர்கள் அனைவருமே காரணம் என்பதை நீதிபதி ஆறுமுகசாமி சொல்கிறார்.

சசிகலா இன்று தான் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்கிறார். அதை எவர்  ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் சசிகலாமீது ஒரு மாபெரும் பிம்ப உணர்ச்சி உருவாகியிருந்தது உண்மைதான். அதை உடைக்க பாஜக- எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செலவம் என மூன்று மையங்களுமே பல கோடி ரூபாய் செலவு செய்தார்கள்.

அவர் சிறையில் இருந்து வரும் வரையில்தான் இந்த பிம்பமே நிலைத்தது. அவர் பிரமாண்டமான வரவேற்போடு வந்து மக்கள் முன்னால் என்று மைக்க பிடித்தாரோ அந்தோ பரிதாபம் அந்த பிம்பம் அடியோடு குலைந்து விழுந்து விட்டது. அவரிடம் கவர்ச்சிகரமான பேச்சோ, உணர்ச்சிகரமான நடவடிக்கைகளோ,  விசுவாச வேட்கையோ எதுவும் இல்லை. கள்ளர் சாதியின் மினிமைஸ் செய்யப்பட்ட அடையாளமாக சுருங்கிப் போனார்.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா சுயநினைவின்றி அப்பல்லோவில் இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி கவுண்டர் சாதி வாக்குகளுக்காகவும் அந்த சாதியினரின் அடையாளமாகவும் அதிமுகவில் பார்க்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா தலைமையில் மருத்துவமனையில் காவிரி நதி நீர் கூட்டம் நடந்ததாகவும் அதில் தானே பங்கேற்றதாகவுமான தோற்றத்தை உருவாக்கியவர் இவர்.  45 நிமிடம் நடந்த கூட்டத்தின் முடிவில் ஜெயலலிதா தயாரித்த அறிக்கை ஒன்றிய நீர்ப்பாசனத்துறை அமைச்சக கூட்டத்தில் வாசித்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், உண்மை என்னெவென்றால் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இருந்த அறைக்குள் செல்லவே இல்லை.  இந்த சூழலை அறிந்த கலைஞர் மு.கருணாநிதி ஒரு புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டதற்கு அதிமுகவினர் மிக மோசமாக அவரை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.

சசிகலா ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்.

பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு பாஜக கொடுத்த உந்துதலில் சசிகலாவுக்கு துரோகமிழைத்தார்.

சசிகலா தனது விசுவாசியாக எடப்பாடி பழனிசாமிக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம் பேசி முதல்வர் பதவியைக் கொடுத்து விட்டுச் சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமியோ பாஜகவோடு சேர்ந்து சசிகலாவை ஓரம் கட்டி விட்டார்.

பின்னர் சசிகலாவின் அரசியல் வாழ்வோடு சேர்த்து அவருக்கிருக்கும் ஒரே பிம்பமான ஜெயலலிதாவின் 30 ஆண்டுகாலத் தோழி என்ற  பிம்பத்தை அழிக்க பன்னீர்செல்வத்தின் கோரிக்கையைப் பயன்படுத்தி ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார்.

ஆனால், காலந்தோறும்  பழனிசாமி இந்த சதிச் செயல்களின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளார்.

இன்று பழனிசாமியின் விசுவாசிகளாக இருக்கும் ஜெயக்குமார், ஆர்,பி. உதயகுமார், சி.வி. சண்முகம், வேலுமணி என அனைவருமே 2016 வரை சசிகலாவின் அடிமை விசுவாசிகள்தான். பலநூறு கோடி ரூபாய் பேரங்கள், ஒப்பந்தங்களே இவர்களை பழனிசாமியின் விசுவாசிகளாக மாற்றியது.

விசுவாசிகளின் கடைசி க்ளைமாக்ஸ்

விசுவாசம் என்ற அடிமை மனோபாவத்தில் சலிப்படைந்திருந்த அல்லது, சசிகலாவுக்கு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுப்பதை விட  தாங்களே அந்த அதிகாரத்தின் அத்தனை பலன்களையும்  நேரடியாக அடையும் ஆசையை டெல்லி ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டவர்கள் பரஸ்பரம் துரோகம் இழைத்தனர். அனைவருமே அனைவருக்கும் துரோகம்

இழைத்து  அதிமுக என்பது விசுவாசத்தால் பின்னப்பட்ட கட்சி என்ற பிம்பத்தை உடைத்தனர்.இந்த துரோகத்தின் அடையாளமாகவே இந்த 613 பக்க விசாரணை ஆணையத்தைப் பார்க்க முடியும்.

மக்களை சந்தித்து முதல்வர் பதவியை அடையாமல் ஜெயலலிதா உருவாக்கிய நிழல் உலகத்தில் பேரங்கள் மூலம் முதல்வர் பதவியை அடைந்தவர்கள், அடைய முயன்றவர்களே என்றே இவர்களைச் சொல்ல முடியும். அதுவே யதார்த்தமும் கூட,

இன்னும் இந்த அறிக்கை வெளிக்கொண்டு வராமல் போன உண்மைகள் பல. தொலைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், விடியோ ஆதாரங்கள் சசிகலா தரப்பிடமோ, அப்பல்லோவிடமோ இருக்கும். அவை அனைத்தும்  ஜெயலலிதாவோடு புதைக்கப்பட்ட ரகசியங்கள். இன்றிருக்கும் சூழலில்  பாஜக-அதிமுகவின் சசிகலா-தினகரன், எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அனைவருமே ஜெயலலிதா நிழலில் இருந்து இடம் பெயர்ந்து மோடியின் நிழலுக்குள் சென்று விட்டவர்கள்.

பிழைப்பு , விலங்குப்பண்ணையின் ஒட்டுண்ணித்தனம் பதவி, அதிகாரம் இவைகளைத் தவிர இவர்களுக்கு வேறு எந்த எண்ணங்களும் இல்லை.  ஜெயலலிதாவை எவரும் நினைக்க முடியாத அளவுக்கு அவரை ரகசிய அறைக்குள் தள்ளி, இருட்டுக்குள் வைத்தவர்கள் இவர்கள்தான்.

 

 

arulezhilan@gmail.com