அவனை நான் “தத்துவவாதி” என்றழைக்கவே விரும்புவேன், அடிப்படையில் அவனொரு தத்துவவாதி என்கிற எளிய காரணத்திற்காக. வாழ்க்கை, அவனுடைய பார்வையில், ஒரு முட்டையைப் போன்றது, முட்டை உலகத்தைக் குறிக்கிறது, மேலும் இந்த உலகமென்பது ஒரு புள்ளி, அதில் அவனும்கூட ஒரு புள்ளி, அத்தோடு அவனுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான புள்ளி, நான். எப்படியாகிலும் இதைத்தான் அவன் என்னிடம் சொல்கிறான்.

சிலசமயங்களில் அவன் என்னை “முட்டை” என்று அழைக்கிறான். வாழ்க்கையில், ஒரு முட்டை அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று விளையாட்டுத்தனமாக நான் கேட்கும்போது, எவ்விதத் தயக்கமுமின்றி அவன் பதிலளிக்கிறான், “வாழ்க்கையே ஒரு முட்டைதான், முட்டையே.” நாங்கள் ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்திருந்தோம். எங்கள் உறவு போகவேண்டிய திசையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் தற்போது வந்திருந்தது.

ஒரு மேல்நிலைப்பள்ளியில் அவன் தத்துவம் கற்பிக்கிறான், இந்த “முட்டை”யின் கூழ்மத்துக்குள் அது தொலைந்து போயிருக்கிறது, நான் வேதியியல் கற்பிக்கிறேன், வெடிகுண்டை உருவாக்கும் செயல்முறை என்பதைத்தவிர எனது மாணவர்களுக்கு அதில் வேறொன்றும் கிடையாது.

எப்போதும் பிரச்சினைகளைக் கொண்டுவரும் எனது மாணவன், உமர் ஹசன், ஓயாமல் கேட்கிறான், “எப்போது நாமாகவே ஒரு வெடிகுண்டை உருவாக்கப் போகிறோம், டீச்சர்?” சொல்வதெனில், நாங்கள் ஒன்றாகச்சேர்ந்து வெடிகுண்டை உருவாக்கும் வாய்ப்பு எப்போது எங்களுக்குக் கிட்டுமென்பது எனக்கும் தெரியாது, தத்துவவாதிகூட இந்தக்கேள்விக்கு ஒரு தீர்மானமான பதிலைத் தரவியலாமல் தடுமாறுகிறான். அவன் என்னை வெறித்துப் பார்க்கிறான், எனது தோற்றக்கூறுகளுக்குள் எதையோ அவன் தொலைத்துவிட்டான் என்பதைப்போல, முழுமையாக ஒருமணிநேரத்துக்கு அவன் ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. மாறாக, தனது தாடியை அரக்கத் தேய்த்தவாறிருக்கிறான், வெகுகாலமாக அதை அவன் மழித்திருக்கவில்லை.

அவனொரு தத்துவவாதி, ஆகவே விசித்திரமான முறையில் நடந்து கொள்வதென்பது அவனளவில் சரியான ஒன்றுதான், இன்னும் நான் அவன் மனைவியாகவில்லை என்கிறவரைக்கும். இந்த எளிய உண்மையை அவனுடைய காதுகளுக்குள் கிசுகிசுக்க விரும்புகிறேன் ஏனெனில் இதுகுறித்து சிலகாலமாகவே நான் யோசித்துவருகிறேன். ஆனால் உமர் ஹசனின் கேள்வி எனது நாவின் நுனியில் வீற்றிருக்கும் வார்த்தைகளை அமைதியாக்குகிறது.

சமீபத்தில், மீண்டும் இந்தக்கேள்வியை அவன் முன்வைக்க நான் தீர்மானித்தேன்: “எப்போது நாம் ஒரு வெடிகுண்டை உருவாக்கலாம், அசிங்கமான என் தத்துவவாதியே?” இது ஒரேநாளில் அவனைப்பற்றி நான் இட்டுக்கட்டிய பொய் அல்ல, ஏனென்றால் இயல்பாகவே அவன் வசீகரமற்றவனாயிருந்தான். அளவுக்கு அதிகமாக சிந்தனையால் அவனுடைய கருவிழிகள் வெளியே துருத்திக்கொண்டிருந்தன, மேலும் அவனது நீண்ட பற்கள் சீனப்பெருஞ்சுவரை நினைவுறுத்தின. அவனுடைய கேசத்தைப் பொறுத்தமட்டில் அவன் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலந்தொட்டே அவனது தோள்களின்மீது தளர்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும். உடல்சார்ந்த ஈர்ப்பை இதுவரைக்கும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் உண்மையாகவே அவன் அவ்வளவு அசிங்கமாயிருந்தான், என்றாலும் சிலசமயங்களில், அவனைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் ஒருபோதும் நான் சோர்வடைந்ததில்லை.

விசயங்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் விவாதிப்பதைத்தான் அவன் விரும்புவான். அவற்றை அவன் வகைப்படுத்துவான், எங்களுக்குத் தெரிந்த சங்கதிகளுக்கு வினோதமான பெயர்களைப் புதிதாகக் கண்டுபிடிப்பான், மேலும் வெளிப்படையானவை என நாங்கள் நம்பக்கூடியவற்றைப் பற்றி எண்ணற்ற கேள்விகளை முன்வைப்பான். அவன் வித்தியாசமானவன்.

இன்னும் அவன் என்னை வெறித்துப் பார்த்தவாறிருக்கிறான், பிரச்சினைகளைக் கொண்டுவரும் உமர் ஹசனை ஆற்றுப்படுத்தும் ஒரு விடைக்காக நான் காத்திருக்கும் வேளையில். அவனது கண்களைத் தாண்டி அவனுடைய ஆழ்மன எண்ணங்களுக்குள் சுற்றித்திரிய இது எனக்கொரு வாய்ப்பு. எப்படியாவது இன்று, தனது மனதைச் சமாதானப்படுத்தி ஒரு தீர்மானத்துக்கு வந்து, எங்களுடைய நிச்சயதார்த்தத்துக்கு ஒரு நாளை அவன் முடிவு செய்வானா என்று நான் அதிசயிக்கிறேன், எங்களுடைய திருமணத்துக்கான ஒருநாள், கலையரங்கத்தில் நிகழும் எங்களின் அனைத்து ரகசியச் சந்திப்புகளுக்கும் முடிவுகட்டும் ஒருநாள். இன்று அவன் தன்னுடைய மனதைச் சமாதானப்படுத்துவானா?

“நம்முடைய திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கிறாயா, தத்துவவாதி?”

“முட்டை, என் அன்பே, திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, நீ, திருமணம் என்கிற கருத்தாக்கம் தங்களின் எண்ணங்களை ஆதிக்கஞ்செலுத்த அனுமதிக்கும் மற்ற பெண்களைப் போலவே, அவ்வளவு முட்டாளாகத் தெரிகிறாய்.”

“ஆனால் திருமணம்தான் இருவருக்கிடையே உள்ள உண்மையான உறவை –”

அவன் என்னை முடிக்க விடவில்லை: “நம்மிடையே ஓர் உண்மையான உறவை நிர்ணயிப்பதைப் பற்றியே எப்போதும் நினைப்பதால்தான் நம்மால் வெடிகுண்டை உருவாக்கமுடியவில்லை. நாம் நினைக்கிறோம்.. நினைக்கிறோம்..”

இந்தப் பைத்தியக்காரன் என்ன சொல்லுகிறான்? அவன் என்னைப் பதற்றத்தால் நிரப்புகிறான். கண்ணை ஒருமுறை சிமிட்டுவதற்குள் அவன் என்னுடைய அடையாளத்தை ஒரு விபச்சாரி என்பதாக மாற்றுகிறான் – நமது சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் பாற்பட்டு.

“ஆனால் நான் உன்னைக் காதலிக்கிறேன். நான் உன்னைக் காதலிக்கிறேன்,” அவன் அறிவிக்கிறான். “எனது வாழ்க்கையை உன்னோடு தொடரவேண்டுமென்று விரும்புகிறேன். உனக்குப் புரியவில்லையா? இந்தப் புள்ளியில் இதை நிறுத்துவது எனக்குக் கடினம்தான், உன்னோடு சேர்ந்து நான் ஆரம்பித்த உறவுக்கான சரியான முடிவை இது பிரதிபலிக்கவில்லை..”

“மரபுமீறிய ஒரு பெண்ணாக ஏன் உன்னால் இருக்கமுடியவில்லை? மரியாதையைக் கொண்டுவரும் எனச் சொல்லப்படும் ஓர் ஆவணத்தை வாங்கியபிறகும் மாறாமல் இருக்கும் அசாதாரணமான பெண்ணாக ஏன் உன்னால் இருக்கமுடியவில்லை? ஒரு கனவுப்பெண்ணாக ஏன் உன்னால் இருக்கமுடியவில்லை?, எனது ஆய்விலும் கல்வியிலும் பெரும்பங்கு வகிக்கக்கூடிய ஒருத்தியாக, அத்துடன் வரலாற்றிலும்? ஆமாம், நீ என் கனவுகளின் பெண்ணாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறேன், முட்டையே. என்றென்றைக்குமாக நீ உத்வேகத்துடன் இருக்க விரும்புகிறேன். உணவு, குழந்தைகள், சச்சரவுகள் மற்றும் இரவுணவு அழைப்புகளை எண்ணித்திரியும் மனைவியாக – மற்றவர்களுக்கான ஒரு பெண்ணாக – நீ இருப்பதை நான் விரும்பவில்லை. நீ அது போலிருப்பதை நான் விரும்பவில்லை.”

அத்தனை ஆண்களும் பொய்சொல்கிறார்கள். பொதுவாகவே அவர்கள் பொய்சொல்கிறார்கள். தத்துவவாதியும் கூட, இந்தச் சொற்பொழிவுக்குப்பிறகு ஒரு வருடம் கழித்து, வேறொரு பெண்ணை மணந்து அவள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டான், கலையரங்கத்தில் அவனோடு எனக்கிருந்த உறவின் காரணமாக கெட்டுப்போனவள் என்கிற நிரந்தர அடையாளத்தை மட்டும் எனக்கு வழங்கிவிட்டு. சாசனமாக எனக்கு அவன் அளித்துச்சென்ற தாழ்வுணர்ச்சிகளைக் களையக்கூடிய ஒரு கணவனை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை, ஆகவே அவன் கனவுகளின் பெண்ணாக இருக்குமிடத்திற்கு நான் திரும்பிச் சென்றேன். விசித்திரமானவகையில், அவனுடைய திருமணத்திற்குப்பிறகு, அதற்குமேலும் என்னால் உமர் ஹசனின் கேள்வியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, “எப்போது நாம் ஒரு வெடிகுண்டை உருவாக்கலாம்?” அவன் இவ்வாறு கேட்பதாக எனக்குத் தோன்றியது, “உங்கள் காதலனோடு எப்போது நீங்கள் உண்மையான உறவை நிர்ணயித்துக்கொள்வீர்கள்? எப்போது உங்களுக்குத் திருமணம் நடக்கும்?” அவனுடைய கேள்வியை நான் வெறுக்கத் தொடங்கினேன், அவனுடைய முகத்தை, அவனுடைய இருப்பையும். ஆகவே ஒரு மரபார்ந்த வெடிகுண்டைத் தயாரிக்கும் வழிமுறையை நான் அவனுக்குத் தந்தேன், அதன்மூலம் அவனுடைய கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். பிற்பாடு, அவனை முழுக்கவே மறந்துபோனேன், வெறுமனே கனவுகளின் பெண்ணாக நான் மாறியபோது.

……………………………

ஃபாதிலா அல்ஃபாரூக் (1967-)

அல்ஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் இதழியலாளர். கல்லூரிப்படிப்பின் வாயிலாக இலக்கியத்தை முறையாகப் பயின்றவர். அல்ஜீரிய வானொலியில் ஃபாதிலா தொகுத்து வழங்கிய “The Havens of Creativity” எனும் நிகழ்ச்சி மக்களிடையே அவரைப் பிரபலமாக்கியது. தவிரவும் அல்ஜீரியாவின் முக்கியப் பத்திரிகையான “al-Hayah”வில் வாராவாரம் அவர் பத்திகள் எழுதியிருக்கிறார். ஃபாதிலாவின் புனைவுகள் பெரும்பாலும் பெண்களின் அகவுலகையும் சமூகத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் விரிவாகப் பேசுபவை. அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 1997-இல் வெளியானது, முதல் நாவல் 2003-ல். கற்பழிப்பு மற்றும் அதுசார்ந்த அராபியச் சட்டங்களைக் கேள்விக்கு உட்படுத்திய ஃபாதிலாவின் நாவலான The Feminine Shame எழுதி இரண்டு வருடங்கள் வெளியிடப்படாமலே இருந்தது. இறுதியில் மற்றொரு எழுத்தாளரான எமாத் அல்அப்துல்லாவின் துணையோடு நாவல் வெளியானது. ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.