“தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட” எனும் கட்டமைப்பில் களத்திற்கு வந்தது தான், 1951 முதல் 1955 வரை, கல்கி இதழில் தொடராக வெளிவந்த, அவ்விதழின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் புதினம். புதினம் என்பது வரலாறு அல்ல. நூதனமான புதுமையோடு எழுதப்படுவது தான். புதுநூதனம் தான். பொன்னியின் செல்வன் புதினமோ, நூலினமான புதுமையாக இருந்தது.

அத்தகைய நூலினப் புதுமைகள்தான் “தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட” எனும் கட்டமைப்புக்கு காரணமாகவும் இருந்தது. கட்டமைப்புகளுக்கென்று தனி வரலாறு உண்டு. அதன் ஒற்றை இலக்கு யாதெனில், கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஆதிக்கத்தின் காலடியில் மண்டியிட வைப்பதே வரலாறாகவும் இருக்கிறது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஒரு நூலைப் படித்து, தமிழகமே கொண்டாடும் அளவுக்கான கல்வி அறிவு அன்றைய காலத்தில் இருந்ததா எனும் கேள்வி நம்முன் வந்து நிற்கிறது. “கல்விக்கண் திறந்த” காமராஜர், 1954 இல் அதிகாரத்திற்கு வந்தபிறகே பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன என்பது வரலாறு.

அதிலும் கூட, ராஜகோபாலச்சாரியார் மூடிய பள்ளிகளைக் காமராஜர் திறந்தார் என்ற சொல்லாடலே புழக்கத்தில் உண்டு.  ராஜகோபாலச்சாரியார் பள்ளிகளை மூடினார் என்பதற்கு முன்பு, யாரால் உருவாக்கப்பட்ட பள்ளிகளை மூடினார் என்று சொல்லாமல் கடந்துவிடுவதும் கூட ஒருவகையான அரசியல் கட்டமைப்புதான். நீதிக்கட்சி எனும் திராவிட இயக்கத்தினரால் உருவாக்கப்பட்ட பள்ளிகளை ராஜகோபாலச்சாரியார் மூடினார் என்பதிலிருந்தே வரலாறு தொடங்குகிறது. தமிழ் இலக்கியங்கள் மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த அக்காலத்தில், 1967க்குப் பிறகு தான், சங்க இலக்கியங்கள் தொடங்கி, திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் என்ற ஆய்வுகள் தமிழகத்தில் பரவலாக்கம் பெறுகிறது. தமிழகம் கொண்டாடத் தொடங்கியதும் அப்போது தான்.

கல்கியில் பொன்னியின் செல்வன் வெளியான 1951-1955 காலத்தில் தமிழகத்தில் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றிருந்தவர்கள் யாரோ, அவர்களே கொண்டாட்டத்திற்குக் காரணமானவர்கள். அவர்கள் கொண்டாடிவிட்டால், தமிழகமே கொண்டாடிவிட்டதாகப் பொருளோ?
இருப்பினும், புதினம் சொல்லும் நூதனம் என்ன? உண்மையான வரலாறு எதுவெனப் பகுத்தாய்ந்தால், ஏன் கொண்டாடப்பட்டது என்ற தெளிவு கிடைத்துவிடும். கல்கியால் பொன்னியின் செல்வன் எழுதப்படுவதற்கு முன்பு, தமிழில் அப்படியொரு புதினம் எழுதப்படவில்லை. அவ்வளவு பெரிய வரலாற்றுப் புதினத்தைத் தமிழில் எழுத அவருக்கு வேறு முன்னோடிகள் இல்லை.

கல்கிக்கு உந்துதலாக இருந்தது பிரெஞ்சுப் புதினமான மூன்று துப்பாக்கி வீரர்கள் (The Three Musketeers).  பிரெஞ்சுப் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த அலெக்சாண்டர் டுமா என்பவரால் 1844 இல் எழுதப்பட்ட புதினம். பொன்னியின் செல்வனின் கற்பனைப் பாத்திரமான நந்தினி, இப்புதினத்தில்  மிலேடி (Milady) என்ற பாத்திரத்தின் தழுவல்தான். வந்தியத்தேவன் பாத்திரமும் டார்த்தான்யன் ( d’artagnan ) பாத்திரத்தின் தழுவல்தான். வந்தியத்தேவன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைந்தவை. கதையின் சுவைக்காக அவர் அலெக்சாண்டர் டூமாவின் உத்திகளை எடுத்துக் கொண்டார். படிப்பவர்களுக்கு இவர்கள் இரவல் பாத்திரங்கள் என்று தெரியாமல் கல்கி எழுதினார். நந்தினி எனும் கற்பனைப் பாத்திரத்தைப் ஏன் படைத்தார்? அதற்குள் தான் புதுநூதனம், புதுநூலினமாக மாற்றும் “காரியமான ஆரியக்கூத்து” அரங்கேறுகிறது.

அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சோழர்கள் குறித்த வரலாறை ஆய்வு செய்து “The Cholas” எனும் மிகப்பெரிய நூலை, 1935 இல் வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரியும், அதைத் தொடர்ந்து 1949 இல் “பிற்காலச் சோழர் சரித்திரம்” எனும் நூலை சதாசிவப் பண்டாரத்தாரும் எழுதி வெளியிட்டனர். இவ்விரு வரலாற்று ஆதார நூல்களும் “கொண்டாடப்பட்டுவிடுமோ” என்ற அச்சம் கல்கிக்கு ஏற்பட்டிருக்கலாம்.  அதை அறிவதற்கு முன்னால், சோழர்கள் ஆட்சி எழுந்த வரலாற்றுப் பின்புலத்தை அறிதல் வேண்டும்.

உலகில் உருவான மன்னராட்சிகளின் பின்னணியில், ஏதேனும் ஒரு மதப்பின்புலத்தின் புறஅழுத்தம் இருந்தது என்பதே வரலாறு. ஐரோப்பாவில் கிறிஸ்தவம், அரேபியாவில் இஸ்லாம், ஆசியாவில் பௌத்தம் ஆகியவற்றின் பின்னணியிலேயே அரசுகள் இருந்து வந்துள்ளது. இங்கும் மன்னராட்சிகளின் பின்னணியில் மதங்கள் இருந்தது வெளிப்படை.  மதச்சார்பற்ற இந்தியா எனும் முகவுரையுடன் அரசியலமைப்புச் சட்டம் இருந்தாலும், வைதீகப் பார்ப்பனீய மதத்தின் புற அழுத்தம் இப்போதும் இருந்து கொண்டுதானே இருக்கிறது? மதச்சார்பின்மை என்றால், அரசிலிருந்து மதத்தை முற்றிலுமாகப் பிரித்து வைப்பதே. அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதல்ல. கன்னிப்பெண் என்றால் ஆண்களோடு உறவு கொள்ளாதவள் என்றே பொருள். எல்லா ஆண்களையும் சமமாக அணுகுபவள் எனப் பொருளல்ல. அதற்கு வேறு பொருள்.

சோழர்கள் ஆட்சி உருவாகி, அதிகாரத்தில் இருந்த காலம் கி.பி.848 முதல் கி.பி.1279 வரையிலான 431 ஆண்டுகள்.
விஜயாலய சோழவம்சம்
1.விஜயாலயச் சோழன் (ஆட்சிக்காலம்-கி.பி. 848-871)
த/பெ சுராதிராஜன்
தலைநகரம்-தஞ்சாவூர்

2.ஆதித்த சோழன் (871-907)
த/பெ விஜயாலயச் சோழன்
தஞ்சாவூர்

3.முதலாம் பராந்தகச் சோழன் (907-950)
த/பெ ஆதித்தச் சோழன்
தஞ்சாவூர்

4.கண்டராதித்தச் சோழன் (950-955)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகன்
தஞ்சாவூர்

5.அரிஞ்சயச் சோழன் (956-957)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் மூன்றாவது மகன்
தஞ்சாவூர்

6.இரண்டாம் பராந்தகச் சோழன் (957-973)
த/பெ அரிஞ்சயச் சோழன்
தஞ்சாவூர்

7.ஆதித்தக் கரிகாலன் (957-969)
த/பெ சுந்தரச் சோழன்
காஞ்சிபுரம்

8.உத்தமச் சோழன் (970-985)
த/பெ கண்டராதித்த சோழன்
தஞ்சாவூர்

9.அருள்மொழி என்ற முதலாம் ராஜராஜ சோழன் (985-1014)
த/பெ சுந்தரச் சோழன்
தஞ்சாவூர்

10.முதலாம் ராஜேந்திரச் சோழன் (1012-1044)
த/பெ. முதலாம் ராஜராஜ சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

11.முதலாம் ராஜாதிராஜச் சோழன் (1018-1054)
த/பெ முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன்
கங்கை கொண்ட சோழபுரம்

12.இரண்டாம் ராஜேந்திரச் சோழன் (1051-1063)
த/பெ முதலாம் ராஜேந்திரச் சோழனின்
இரண்டாவது மகன்
கங்கை கொண்ட சோழபுரம்

13.வீர ராஜேந்திரச் சோழன் (1063-1070)
த/பெ இரண்டாம் ராஜேந்திரச் சோழனின் மகன்
கங்கை கொண்ட சோழபுரம்

14.அதி ராஜேந்திரச் சோழன் (1070)
த/பெ வீர ராஜேந்திரச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

சாளுக்கிய சோழ வம்சம்
15.முதலாம் குலோத்துங்கச் சோழன் (1070-1120)
த/பெ முதலாம் ராஜேந்திரச் சோழனின் மகள் வழிப் பேரன்
கங்கை கொண்ட சோழபுரம்

16.விக்கிரமச் சோழன் (1118-1136)
த/பெ முதலாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

17.இரண்டாம் குலோத்துங்கச் சோழன் (1133-1150)
த/பெ விக்கிரமச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

18.இரண்டாம் ராஜராஜச் சோழன் (1146-1163)
த/பெ இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

19.இரண்டாம் ராஜாதிராஜச் சோழன் (1163-1178)
த/பெ இரண்டாம் ராஜராஜச் சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்
கங்கை கொண்ட சோழபுரம்

20.மூன்றாம் குலோத்துங்கச் சோழன் (1173-1218)
த/பெ இரண்டாம் ராஜராஜச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

21.மூன்றாம் ராஜராஜச் சோழன் (1216-1256)
த/பெ மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

22.மூன்றாம் ராஜேந்திரச் சோழன் (1246-1279)
த/பெ மூன்றாம் ராஜராஜச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

சோழ வம்சத்தில் இத்தனை மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் பெரும் வரலாறும் உண்டு. இப்பட்டியலைப் படித்தவுடன் ஒரு கேள்வி எழும். மன்னராட்சி என்பதே வாரிசு அரசியல்தான். இப்போது வாரிசு அரசியல் என முக்கிமுக்கி  முழங்குபவர்கள் பலரும், மன்னர் பெருமை பேசுபவர்களாகவே இருக்கிறார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப, அவரவர் அரசியல் பேச்சுகள் இருக்கிறது. அதில் அடிப்படையான விசயங்கள் இல்லாததே முக்கிய அம்சமாகவும் இருக்கிறது. பேரரசுகள் எல்லாம் வீழ்ந்தது ஏனென்று பேசுவார்களா? வாரிசுகள் என்பதால் மன்னர் பெருமைகளைப் பேசாமல் தவிர்ப்பார்களா? மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கி ஆண்டவர்கள் என்றே பொருள். இதற்கு எம்மதமன்னனும் விதிவிலக்கல்ல.எனவே தான் மன்னராட்சிகள் வீழ்த்தப்பட்டு, மக்களாட்சியை மனிதகுலம் ஏற்றது. வல்லரசு என்பதை விட, மக்களுக்கான நல்லரசுகளே தேவை.  சோழர்கள் ஆட்சி தொடங்கிய கி.பி.850 காலகட்டத்தில் இங்குள்ள மதஅரசியல் சூழல் என்ன என்பதிலிருந்தே, சோழர்கள் ஆட்சி உருவாக்கம் பற்றி அறியலாம்.

கி. பி.7 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் நிலப்பரப்பெங்கும் எம்மதங்களின் கோவில்களும் இல்லை. நடுகல் உள்ளிட்ட நாட்டுப்புற வழிபாட்டு முறையே இருந்தது.முருகனும் அவன் தாய் கொற்றவையுமே வழிபாட்டுத் தெய்வங்கள். கொற்றவையின் கணவன் யார் எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது.  ஏனெனில் தாய்வழிச் சமூக மதிப்பீட்டின் காலம் அது. முருகனை பார்ப்பனீயச் சுப்பிரமணியனாக்கிய வைதீக அரசியல் பிறகு செய்யப்பட்ட கலப்படம். இன்றைய இந்திய நிலப்பரப்பிலும் இதே நிலைதான். ஆசீவகத்தின் அய்யனார்களும், பௌத்த மடாலயங்களும்,சமணப் பள்ளிகளுமாய் காலம் கடந்தது. பௌத்த, சமண, வைதீக மதங்களுக்குள் கடும் மோதல்களும் ஏற்பட்டது. வைதீகத்தோடு மோதி, பௌத்தமும், சமணமும் வீழ்ந்தாலும், வைதீகப் பார்ப்பனீய மதத்தின் மீதான பிடிமானம் மக்களிடம் ஏற்படவில்லை. வைதீகப் பார்ப்பனீயத்தால் பௌத்தமும், சமணமும் கொடூரமான மனித உயிரிழப்புகளோடு வீழ்த்தப்பட்ட போது, இங்கு கிறிஸ்தவமும், இஸ்லாமும் இல்லை. பௌத்தத்தையும், சமணத்தையும் ஏன் வீழ்த்தியது? இப்போது கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மீது ஏன் தாக்குதல் தொடுக்கிறது எனும் கேள்வியை நீங்கள் எழுப்பினால், உங்களுக்கு “அர்பன் நக்சல்ஸ்”, “ஆண்ட்டி இந்தியன்” எனும் சில பட்டங்கள் இலவசமாக வழங்கப்படும்.  காலங்காலமாகப் பிறரை அழித்தே தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது வைதீகப் பார்ப்பனியம்.

இப்பின்னணியில், வைதீகத்திலிருந்து சற்று முரண்பட்டு சைவமும்,வைணவமும் உருவாயின.சைவத்தின் நாயன்மார்களும்,வைணவத்தின் ஆழ்வார்களும் சிவனையும், திருமாலையும் தூக்கிக் கொண்டு திக்கெட்டும் பயணமாயினர். பௌத்தத்தைப் பின்பற்றியவர்களை வைணவமும், சமணத்தைப் பின்பற்றியவர்களை சைவமும் உள்வாங்கியது. மாற மறுத்தவர்கள் கழுவேற்றம் செய்யப்பட்டனர். நாயன்மார்கள், ஆழ்வார்களின்  ஆதரவு பெற்றவர்களாக மன்னர்கள் மாற்றப்பட்டனர். “மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி” தான். அன்று வேறு வழியே இல்லை. நிறுவன சமயங்கள் எந்தவொன்றும் மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அதிகாரத்தின் மூலம் திணிக்கப்பட்ட ஒன்று தான். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கலாகாது எனும் முழக்கத்துடன் கோவில்கள் உருவாக்கப்பட்டன.அதுவரை மன்னன் இருந்த இடமே கோவில் எனும் நிலை மாறி, கடவுள் இருக்கும் இடம் கோவிலாக மாறியது.”கோ” என்றால் மன்னன் என்றும், “இல்” என்றால் இல்லம் என்றுமே பொருள். கோ+இல்=கோவில். அதன்பிறகு ஆன்மா லயிக்கும் இடம் என்ற பொருளில் “ஆலயம்” என அழைக்கத் தொடங்கினர்.

கோவில்கள் உருவாக்கப்பட்ட போது அதைச் சார்ந்து ஊர்கள் உருவானது. கோவிலை மையப்பகுதியாகக் கொண்டு ஊர்கள் உருவாக்கப்பட்டது. இதைக் கிராமம் என்றார்கள். க்ரமம் என்றால் வடமொழியில் வரிசை அல்லது அடுக்கு எனப்பொருள். அதுதான் கிராமம் என்றானது. சாதிய வரிசைப்படி ஆனது எனப்பொருள். கிராமத்தில் தான் சாதி குடி கொண்டிருக்கிறது.

கோவிலின் முதல் சுற்றில் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லிக் கொண்ட பார்ப்பனர்ளும்,அடுத்த சுற்றில் பார்ப்பனர்களுக்கு அடுத்த சத்திரியர்களும்,அதற்கு அடுத்த சுற்றில் வைசியர்களும்,அடுத்த சுற்றில் சூத்திரர்களும் குடி அமர்த்தப்பட்டனர். கோவிலின் தென்மேற்கில் நீர்நிலைகளுக்கு நடுவில் பஞ்சமர்கள் குடி அமர்த்தப்பட்டனர்.கோவிலின் தென்மேற்கில் தான் எமன் குடியிருப்பதாகவும் பாழாய் போன ஐதீகம் சொல்கிறது. முதல் சுற்று இரண்டாம் சுற்றுக்கு ரதவீதி, மாடவீதி, மாசிவீதி என்று பெயரிடப்பட்டது.இது கடவுள் மக்களுக்கு வெளியில் வந்து அருள் பாலிக்கும் எல்லையே. தென்மேற்கிற்கு கடவுள் வரமாட்டார். அங்கிருந்து வந்து ஓரமாக நின்று கும்பிட்டுக் கொள்ள வேண்டும்.

பார்ப்பனீய மனுநீதிக் கொடுமைக்கு ஆளான விளிம்புநிலை மக்களோ, அதன் பிறகு இங்கு வந்த கிறிஸ்தவம், இஸ்லாத்தை ஏற்றனர். வேதங்களைப் படிக்கப் பார்ப்பனீயம் அனுமதிக்காததால், வேதம் என்பதற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத, பைபிள் சொல்லிக் கொடுத்த பாதிரியார்களும், அதைப் பின்பற்றியக் கிறிஸ்தவர்களும் “வேதக்காரர்கள்” என்று அழைக்கப்படலாயினர். நால்வருண முறைக்குள் அடங்காத இஸ்லாமியர்கள் குடியிருப்புக்கு “அஞ்சு வண்ணத் தெரு” என்றே பெயர். இதுவே வரலாறு. கிறிஸ்தவத்தை தனது சாதியக் கூட்டிற்குள் பார்ப்பனீயம் விழுங்கிச் செறித்தது பிந்தைய வரலாறு. எனவே தான் 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.64% த்தை தாண்டவேயில்லை. 1951 இல் இருந்த நிலையே இப்போதும் நீடிக்கிறது.

பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் சிற்றரசாக தஞ்சையை அடுத்த வல்லத்தை தலைநகராகக் கொண்டு, கி.பி.600 முதல் கி.பி.850 வரை ஆட்சி செய்தவர்கள் முத்தரையர்கள். முத்தரையர்களை வீழ்த்தியே சோழப் பேரரசு, சைவ, வைணவ பக்தி இயக்கத்தின் பின்னணியில் கி.பி. 848 இல் விஜயாலயச் சோழனால் உருவானது. வல்லத்தைச் சார்ந்த அரையர் குலத்தவன் தான் வல்லம்+அரையன்=வல்லவராயன் வந்தியத்தேவன். தேவன் என்பது சாதிப்பிரிவல்ல. சமணர்களின் முதல் தீர்த்தங்கரரின் பெயர் ரிஷபத்தேவர். 24 ஆவது தீர்த்தங்கரர் தான் மகாவீரர். சமணத்திலிருந்தே அது தொடங்குகிறது.

பொன்னியின் செல்வன் புதினமானது, 431 ஆண்டு சோழர்களின் முழுமையான வரலாறு அல்ல. பராந்தகச் சோழன், சுந்தரச் சோழன், சுந்தரச் சோழனின் மகன்கள் ஆதித்தக் கரிகாலன், பராந்தகனின் மகன் உத்தமச் சோழன், அருள்மொழி எனும் ராஜராஜ சோழன், சுந்தரச்சோழனின் மகள் குந்தவை, குந்தவையின் கணவன் வல்லவராயன் வந்தியத்தேவன் ஆகியோரைப் பற்றியது மட்டுமே. கி.பி.957 ஆதித்தக் கரிகாலன் முதல் கி.பி.1014 ராஜராஜ சோழன் காலம் வரையிலான 57 ஆண்டுகள் மட்டுமே. இதில் பாண்டிய மன்னனோடு நடைபெற்ற யுத்தமும் உண்டு.  கி.பி. 946 முதல் 966 வரை ஆட்சி புரிந்தவன் வீரபாண்டியன்.

மூன்றாம் இராசசிம்மன் இழந்த பாண்டிய நாட்டைச் சோழரிடமிருந்து மீட்டான். சோழ நாட்டை ஆண்டு வந்த சுந்தரச் சோழன் தன் மைந்தன் ஆதித்தக் கரிகாலனுடன் படையெடுத்துச் சென்று, வீரபாண்டியனோடு சேவூர் எனும் இடத்தில் போரிட்டான். கி.பி. 966 இல் நடைபெற்ற அப்போரில் ஆதித்தக் கரிகாலன் வீரபாண்டியனைக் கொன்றான். அப்போது வீரபாண்டியனின் வயது 22. இப்போர் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் மதுரை சோழர்களின் கைவசம் வந்தது. இதைத்தொடர்ந்து மதுரைப் பாண்டியர்களுக்கும், தஞ்சை சோழர்களுக்குமான சண்டைகள் நடைபெற்று வந்தது. மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் சோழர்களை முற்றிலுமாக வீழ்த்தி, சோழ அரசாட்சி முடிவுக்கு வந்தது. வீரபாண்டியனுக்கு நந்தினி என்ற பெண் வாரிசு இல்லை.  வீரபாண்டியனின் மகள் நந்தினி எனப் பொன்னியின் செல்வனில் ஏன் புனைய வேண்டும்? புனைய வேண்டிய தேவை பார்ப்பனீயத்திற்கு அன்று இருந்தது.

ஏனெனில் வீரபாண்டியனைக் கொன்ற ஆதித்தக் கரிகாலனைக் கொன்றது ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பார்ப்பன அண்ணன்-தம்பிமார்கள். ஏன் கொன்றார்கள்? இதற்கும், அன்றைய சைவ- வைணவ மோதலுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஏனெனில், மன்னர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் ஒருவர் வைணவ வழிபாட்டை மேற்கொண்டால், மற்றொருவர் சைவ வழிபாட்டை மேற்கொள்பவராக இருப்பர். ஆதித்தக் கரிகாலன் வைணவ வழிபாட்டினராகவும், ராஜராஜசோழன் சைவ வழிபாடு சார்ந்துமே இருந்தனர். இப்போதும் கூட, ஐயர்-ஐயங்கார் என்றும், ஐயங்காரிலும், வடகலை-தென்கலை என்றும் மோதிக் கொள்வதைக் காணலாம். எதுவாகினும், ஆதித்தக் கரிகாலனைக் கொலை செய்தது  நான்கு பார்ப்பனர்களே என்பது உடையார்குடி கல்வெட்டு கூறும் வரலாறு.

உடையார்குடி என்பது இன்றைய காட்டுமன்னார்கோவில். இங்குள்ள திருஅனந்தீஸ்வரர் கோவிலில், ஆதித்தக் கரிகாலனை கொலை செய்த நான்கு பார்ப்பனர்களுக்கு, ராஜராஜ சோழன் வழங்கிய தண்டனை விபரம் கல்வெட்டாக இருக்கிறது. கல்வெட்டின் விபரம் இதுதான். இக்கல்வெட்டு கி.பி.988 ஆம் ஆண்டு ராஜராஜன் பிறப்பித்த ஆணைப்படி வெட்டப்பட்டது.

1) ”ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்ம்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராய[ண] சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிக[ளா]ன சோம[ன்]……….. றம்பி

2) ரவிதாசன் ஆன பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிம்[ஆர்] பெற்றாளும் இ………ராமத்தம்

3) பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம் ஆணைக்குரியவாறு

4) கொட்டயூர் பிரம்மஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் தாலத் திடுக இவை குரு[காடி] கிழான் எழுத்து என்று இப்பரிசு வர

5) ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன் றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயண சது[ர்]வேதி மங்கலத்து மைபிடாகை தேவன்மங்கலம் ஆன பற்றில நிலம் ஸ்ரீவீரநாராயண சது[ர்]வேதி

6) மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூர் உடையான் நக்கன் அரவணையான் ஆன பல்லவ முத்தரைய மகன் பரதன் ஆன வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொரு பத்தி

7) ரு கழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி நா ன்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு [மூவா] யிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நி[ச]

8) தம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காசும் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உ[ண்]ணவும் வைத்தேன்  ஆரியன் பரதன் வியாழகஜமல்லப் பல்லவரையன் இ த[ர்]மம் ரஷிக்கின்ற மகாசபையார் ஸ்ரீபாதம் என்தலையின் மேலாக”.

கல்வெட்டு தெரிவிக்கும் காலம் குறித்த சிறப்பு செய்திகள் யாதெனில்,
1) ”மேஷஞாயற்று” இதில் ஞாயிறு என்பது மாதம். மேஷம் எனபது மாத்தின் பெயர். அன்று மாதங்களின் கணக்கீடு சூரியமாணத்தில் காணப்படுகிறது. சூரியன் கடக்கும் ராசி மண்டலம் மாதங்களின் பெயராக அமைந்துள்ளது. தற்போது கேரளாவில் மாதங்களின் பெயர் அவ்வாறு காணப்படுகிறது. ஆனால் இதன் பின்பும் (தற்போது) முழுநிலவுக்குப் பின்னணியாகத் தோன்றும் நட்சத்திரங்களின் அடிப்படையிலான சந்திரமாண பெயர்கள், மாதங்களுக்குத் தமிழில் சித்திரை, வைகாசி என வழங்கப்பட்டு வருகின்றன.

2) தேதியைக் குறிப்பிட ”பூரட்டாதி நாளன்று” என நட்சத்திரம் காட்டப்படுகிறது. அன்று மாதநாட்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களின் எண்ணிகையான 27 எனத் தெரியவருகிறது.

3) எல்.டி. சுவாமிகண்ணுப்பிள்ளை இக்கல்வெட்டின் காலத்தை கி.மு 988, ஏப்ரல் மாதம் 15 தியதி, ஞாயிற்றுக்கிழமை எனக் கணிக்கிறார்.

உடையார்க்குடி அனந்தீஸ்வரர்க்கோயில் கல்வெட்டு வழி கிடைக்கும் கொலைச்செய்தி:

1) உடையார்குடி எனும் இவ்வூர் காட்டுமன்னார்க்கோயில் என தற்போது அழைக்கப்பட்டு வருகிறது

2) ராஜராஜசோழனின் அரசாட்சிக்கு முன்  அவரின்  சிற்றப்பன்  உத்தமச்சோழன் எனும் மதுராந்தகன் ஆட்சி செய்தார். மதுராந்தகன் ஆட்சியின் முன் சுந்தரச்சோழர் ஆட்சி செய்தார்.

3) சுந்தரச்சோழரின் மூத்தமகன் ஆதித்தக்ம் கரிகாலன், சுந்தரச் சோழருக்குப் பின் ஆட்சிக்கு வர வேண்டியவர் என இருந்த  காலத்தில் கொலை செய்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பிராமணர்கள்.

4) அவர்கள் 1) சோமன், 2) இவன் தம்பி ரவிதாஸனான பஞ்சவன் பிரமாதிராஜன், 3) இவன் தம்பி  இருமுடிசோழபிரமாதிராஜன், 4) இவர்களின் உடன்பிறந்தான் மலையூரானான பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகும்.

5) இவர்கள் உத்தமச்சோழன் எனும் மதுராந்தகரின் ஆட்சிக்காலத்தில் தண்டிக்கப்படவில்லை.  இவர்கள் சொந்த நிலபுலன்களோடு, தனது உறவினர்கள், நண்பர்கள், குலத்தார் கூட்டத்தோடு, சிறப்பாகப் பதினெட்டு வருடங்கள் மதுராந்தகனுடைய ஆட்சியில் வாழந்து வந்திருக்கிறார்கள்.

6) இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

7) உத்தமச்சோழனான மதுராந்தக கண்டராதித்தர் ஏதோ ஒரு காரணத்தால் பதவியை விட்டிறங்கி பின்பு ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டு
இக்கொலை மீது மறுபடியும் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

8) ஆதித்தக்கரிகாலன் கொலைக்கான விசாரணை மதுராந்தகர் காலத்தில் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

9) பதினெட்டு வருடங்கள் கடந்த பின், ராஜராஜசோழன் தன் ஆட்சிக்காலத்தில் அதனைத் தூசுதட்டி விசாரணை செய்து, அந்த நான்கு பேரையும், அவர்களின் உறவினர்களையும்,  பெண் கொடுத்தவர்களையும், பிள்ளை கொடுத்தவர்களையும்  பேரன் பேத்திகளையும் வேட்டுவர்கள் எனப் பிராமணசாதியிலிருந்து நீக்கம் செய்கிறான்.

10) அவர்களின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்து நாடு கடத்துகிறான்.

11) இச்செய்தி மிகத்தெளிவான கல்வெட்டாக கோயிலில் இருக்கிறது.

12) சாதிநீக்கம், சொத்துப் பறிமுதல், நாடு கடத்தல் ஆகிய நடவடிக்கைகளை  ராஜராஜசோழன் நேரடியாக செய்து விடவில்லை.

13) தன்னைச் சக்கரவரத்தி என அறிவித்து ஒரு கடிதத்தை(ஸ்ரீமுகம்) கிராமசபைப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பித் தண்டனையை நிறைவேற்ற அவர்களுக்கு அதிகாரம் தந்திருக்கிறார். அந்த ஸ்ரீமுகத்தைப் படித்து அக்கட்டளையை நிறைவேற்றினோம் எனக்கல்வெட்டு கூறுகிறது.

14) அக்கல்வெட்டு கொலைகார நால்வரையும் துரோகிகள் என குறிப்பிடுகிறது.

15) நம்பிக்கைக்குரியவர் போன்று நடித்து, சோழதேச ஆதரவாளர் போல் காட்டி,அதே நேரம் சோழதேச இளவரசனைக் கொன்றதால், அவர்கள் துரோகி என அழைக்கப்பட்டனர். எதிரி என அழைக்கப்படவில்லை.

16) ஆதித்தக்கரிகாலன் இருக்கும் வரை தனக்கு அவ்வாய்ப்பு இல்லையென்பதால், இதை மதுராந்தகர் செய்திருக்கக் கூடும் என்ற ஒரு ஊகமும் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே இருக்கிறது.

17) கொலை செய்த இந்நால்வரும் ஏற்கனவே சோழ நாட்டினிலிருந்து தப்பி சென்றிருக்கலாம் . அதனால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை எனும் கருத்து திரு குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

18) சோழர் காலத்தில் பிராமணர் கொலை செய்திருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை, சிறை வாசம் அளிக்கும் வழக்கம் இல்லை. அவரின் உச்சிக்குடுமியை நீக்கி ,அவர்களின் சொத்தைப் பறிமுதல் செய்து,  அவர்களின் உடலில் பச்சைக்குத்தி நாட்டை விட்டுத் துரத்திவிடுவது அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. அப்போது மனு நீதி அவ்வளவு பெரும் வலுவாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

19) ராஜராஜ சோழன் தனது இரண்டாவது ஆட்சி ஆண்டில் அக்கிராமச் சபையாருக்கு “திருவோலை “எழுதி தனது அண்ணன் ஆதித்தக் கரிகாலனைக் கொலை செய்த துரோகிகளின் சொத்துக்களை ஏலம் விட கேட்டுக் கொண்டபடி சபையார் மேற்கண்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏலம் விட்டு, அதை ஒரு அரசு அதிகாரி வியாழ கஜமல்ல பல்லவராயன் என்பான் ஏலம் எடுத்து, அதில் வந்த பணத்தை அக்கிராமத்தில் உள்ள திருவனந்தீஸ்வரம் கோவிலுக்குத் தானம் கொடுத்து, அதனைக் கருவூலத்தில் வைப்புத் தொகையாக வைத்து வரும் வருமானத்தில்  தினமும் ஐந்து சிவாசாரியர்கள், கோயிலுக்கு தண்ணீர் வழங்கும் பிராமணன்  உட்பட 16 பிராமணர்களுக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளான்.

ஆதித்தக் கரிகாலனைக் கொலை செய்தவர்கள் பெயர்களைக் கல்கி சொல்கிறாரே, மூடி மறைக்கவில்லையே என்பார்கள். புதினத்தில் அவர்களைப் பதிவிடுகிறார். ஆனால்,அவர்கள் சாதியைப் பதிவிடவில்லை. சாதியைப் பதிவிடுவது சரியா என்பார்கள். அதற்கும் பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கி ஆதாரம் விட்டுச்சென்றுள்ளார். அதற்கு அநிருத் பிரம்மராயர் பற்றிய பகுதியைப் படிக்க வேண்டும்.

ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழனின் காலத்தில் அமைச்சராக இருந்தவர் அநிருத் பிரம்மராயர். கிருஷ்ணராமன் எனும் இயற்பெயர் கொண்டவர். பிரும்மாதிராயர் என்பது பார்ப்பனர்களுக்கு சோழ மன்னர்களால் வழங்கப்பட்ட பட்டம். இவரது தந்தை நாராயணன், அன்பில் அனந்தாழ்வார் சுவாமி கோவிலுக்குப் பணிவிடை செய்தவர். அநிருத் எனும் வடமொழிச் சொல்லுக்கு எல்லையற்றவன் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அநிருத் பிரம்மராயருக்குப் பத்துவேலி நிலத்தினைச் சுந்தரச்சோழன் தந்ததாக அன்பில் செப்பேடுகளில் உள்ளன.

அநிருத் பிரம்மராயரைப் பற்றி  பொன்னியின் செல்வனில், மிகவும் புகழ்ந்து எழுதியிருப்பார் கல்கி. அதோடு அவரின் சாதிய அடையாளத்தை தூக்கிப் பிடித்தும் எழுதியிருப்பார். ஆனால் ஆதித்தக் கரிகாலனைக் கொன்றவர்கள் பிரம்மராயர்கள் தான் என உடையாளூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.  ஆதித்தக் கரிகாலனைச் சூழ்ச்சி செய்து கொன்றவர்கள் சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதாசக் கிரமவித்தன் என எழுதிச் செல்வார் கல்கி. ஆனால் இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் எனச் சொல்லாமல், வேறு யாரோ என்று வாசகர்கள் எண்ணிக் கொள்வது போல் எழுதியிருப்பார். அநிருத் பிரம்மராயரைப் பார்ப்பனர் என எழுதத் தெரிந்த  கல்கிக்கு, ஆதித்தக் கரிகாலனைக் கொன்றவர்களின் சாதிய அடையாளத்தைத் தவிர்த்து விட்டுப் பெயர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பார் கல்கி.

அநிருத்துக்கு சுந்தரசோழன் பல ஊர்களைப் பிரம்மதேயமாகவும். இறையிலி நிலமாகவும் அளித்ததை அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆனால் கல்கி அதை மறைத்துவிட்டார். ஆதித்தக் கரிகாலனைத் தொடக்கம் முதல் சினம் மிக்கவனாகவும், பெரியோரை மதிக்காதவன் போலவும் படைத்துள்ளார். அதற்கு சான்றுகள் எதையும் வைக்கவில்லை. ஆவேசமும் மூர்க்கக் குணம் மட்டுமின்றி, ஒரு பெண் பித்தன் என்பது போலவும் படைத்துள்ளார்.

அவனை மட்டுமல்லாமல், அவனது நண்பனாகிய பார்த்திபேந்திரப் பல்லவன் எனும் பல்லவ வழிவந்த இளவரசனையும் அதைப் போன்றே படைத்துள்ளார். இவனும் வரலாற்று மனிதனே. பல கல்வெட்டுகள் பார்த்திபேந்திரப் பல்லவன் தொண்டை நாட்டில் ஆட்சி செய்ததற்குச் சான்று அளிக்கிறது. அவனும் கோவில்கள் முதலியவற்றிற்கு நன்கொடை அளித்தவன்தான். ஆதித்தக்கரிகாலனும் அவனுடைய காலத்திய அதிகாரிகளும், கோவில்களுக்கும். பார்ப்பனர்களுக்கும் கொடை அளித்த மன்னர்கள் தான். ஆயினும் அவர்கள் பாத்திரப் படைப்பை அப்படி அமைத்தற்குக் காரணம் என்ன? ஆதித்தக் கரிகாலன் ஒரு கொடியவன். வீரபாண்டியனின் தலையைக் கொய்த அறம் கொன்ற செய்கை புரிந்தவன் எனக் கட்டமைத்து, அவன் கொலை செய்யப்பட வேண்டியவனே எனும் முடிவிற்குப் படிப்பவர்களை இட்டுச் செல்லும் நோக்கம் மேலோங்கி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிப்பவர்கள் யாருக்கும் ஆதித்தக் கரிகாலன் மீது சிறிதளவும் அன்போ அல்லது பரிவோ ஏற்பட்டு விடாதவாறு அக்கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதையின் வில்லன் ஆதித்தக் கரிகாலன் எனக் கல்கி முன்வைக்கும்போது தான், அவன் தரப்பு நியாயம் தேடுதலுக்குள்ளாகிறது. திட்டமிட்டு ஆதித்தக் கரிகாலனை இழிவுபடுத்துவதற்குக் காரணம், அவனைக் கொலை செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை படிப்பவர்கள் மத்தியில் விதைப்பதற்கே.

ஏனெனில் ஆதித்தக் கரிகாலனைக் கொன்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. இப்படிச் சொல்வதன் நோக்கம், கல்கி சிறந்த எழுத்தாளர் எனும் புகழுக்குக் களங்கம் சேர்க்கும் முயற்சி அல்ல. பொன்னியின் செல்வன் தேவைக்கேற்ப புனையப்பட்ட செல்வன் என்பதை உணர்த்தத்தான்.

ராஜராஜசோழனை இந்து மன்னனாக்க முயற்சிக்கிறார்கள் எனும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு விவாதப் புயலைக் கிளப்பியது. ஏன் அப்படிச் சொன்னார்? இந்து என்றால் ஜாதிய அடையாளம் இருக்கும். ராஜராஜசோழன் என்ன சாதி என யாருக்காவது தெரியுமா? தமிழில் ஜாதி எனும் சொல்லே கிடையாது. தமிழர்களுக்கு ஜாதி இல்லை. எனவே அவர் தமிழ் மன்னன் என்பது அடையாளமாக இருக்கிறது. மொழி அடையாளத்துடன் இருக்கும் ராஜராஜனை, மத அடையாளத்திற்குள் கொண்டு வருவதையே, வலதுசாரிகளின் நடப்புச் செயல்களிலிருந்து விமர்சிக்கிறார். ராஜராஜன் சைவ மதப் பற்றாளன். சைவ மதத்தில் ஜாதியக் கட்டமைப்பு அன்று இல்லையே. ஜாதியைக் கட்டமைத்தது பார்ப்பனீய மதம்.அது இந்து எனும் சொல்லாடலுக்குள் ஒளிந்திருப்பதால் விமர்சிக்கப்படுகிறது.

ராஜராஜ சோழன் எந்தச் சாதி எனத் தெரியாதததால் தான், பலரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு  ராஜராஜனே ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சொந்தம் கொண்டாடுபவர்கள் முயற்சிக்கலாம். அது யாதெனில், ராஜராஜனுக்கு 15 மனைவிகள். “தன் பெண்டுகள்” என தஞ்சைக் கோவில் கல்வெட்டுகளில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
1. உலக மகாதேவி
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி,
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவி மகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி – பாண்டிய நாட்டு இளவரசி
9. திருபுவன மகாதேவி எனும் வானவன் மகாதேவி
10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
11. வீரநாராயணி
12. நக்கந்தில்லை அழகியார்
13. காடன் தொங்கியார்
14. இளங்கோன் பிச்சியார்
15. தைலாமாதேவி.
இப்பதினைந்து பேரிலிருந்து யார் யாருடைய வாரிசுகள் என்பதை அவரவர் சாதிக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்ட விதம் குறித்தும், அதைத் தற்போது படமாக்க வேண்டிய தேவை எங்கிருந்து உருவாகிறது எனும் அரசியலையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் 1991ஆ ம் ஆண்டு மிக முக்கியமானது. அதற்கு முன்பு உலகம் மூன்றாக இயங்கியது. 1.ஏகாதிபத்திய நாடுகள்  2.சோசலிச நாடுகள் 3. மூன்றாம் உலக நாடுகள். அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகளும், சோவியத் யூனியனை மையப்படுத்தி சோசலிச நாடுகளும், கூட்டுச்சேராக் கொள்கையைக் கடைபிடித்த இந்தியாவை மையப்படுத்தி மூன்றாம் உலக நாடுகளும் இயங்கின. உலகைத் தங்கள் காலடியில் கொண்டு வர வேண்டுமெனத் துடித்த ஏகாதிபத்தியத்தின் கொலை வாளில், அதுவரை பிற நாடுகளுக்கு எல்லா வகையிலும் உதவிய சோவியத் யூனியன் துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தப்பட்டது. இதற்கான முயற்சி 1991 க்கு முன்பே தொடங்கப்பட்டது. 1991 இன் உலக அரசியலை அறிந்தால், அது மேட்டுநிலம் முதல் அடி ஆழம் வரையுள்ள அனைத்தையும் விழுங்கிச் செறிக்க முயல்வதைக் காணலாம். கடல் விழுங்கல்களுக்கு சற்றும் குறைவில்லாததே ஆதிக்க விழுங்கல்கள். ஆதிக்க விழுங்கலின் அரசியல் வரலாறு என்ன?

தற்போது உலகைக் கொள்ளையடிக்க ஏழு கொள்ளையர்கள் கூட்டணி இருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, ஜப்பான். இந்த ஏழு பேர் கொண்ட ஏகாதிபத்தியக் கூட்டணிக்கு G7 நாடுகள் என்று பெயர். இந்த ஏழு பேரையும் உள்ளடக்கி, மேலும் 13 நாடுகளை இணைத்து G 20 நாடுகள் எனவும் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு 1999 இல் உருவாக்கப்பட்டது. இதில் இந்தியாவும் ஒரு அங்கமாக இருக்கிறது. G7 நாடுகளுக்குள்ளும் மோதல் இருக்கிறது. G20 நாடுகளுக்குள்ளும் மோதல் இருக்கிறது. G 20 மற்றும் G7 க்கும் இடையிலும் மோதல் இருக்கிறது. ஆனால் முக்கியமான மோதல் யாதெனில் இந்நாடுகளில் வாழும் மக்களுக்கும் இந்நாடுகளுக்குமான மோதல்தான்.

உலகை ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரும் ஏகாதிபத்திய நாடுகளின் திட்டமே 1991 இல் கொண்டுவரப்பட்ட உலகமயம்- தாராளமயம்-தனியார்மயம் எனும் முழக்கம். இத்திட்டத்தில் எல்லா நாடுகளையும் இணைத்து, அந்தந்த நாடுகள் அதுநாள் வரை உருவாக்கி வைத்திருந்த அனைத்து இறையாண்மைக் கொள்கைகள் மீதும் பலமான தாக்குதலைத் தொடுத்தது. இதை எதிர்த்துப் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் பெருமளவு நடந்தன. மக்களின் போராட்டங்களை அடக்க அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்  தாக்குதல் தொடுக்கப்பட்டது.1991க்கு முந்தைய உலகில் வாழ்ந்த 500 கோடி மக்களில் 200 கோடி மக்கள் சோசலிச முகாம் நாடுகளிலும், 150 கோடிப் பேர் ஏகாதிபத்திய நாடுகளின் முகாம்களிலும், 150 கோடிப் பேர் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் பின்னணியிலும் இருந்தனர்.

100 கோடி மக்கள் சந்தையைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது.உலகமயம் என்ற மாயவலைக்குள் சிக்கவைக்க நூறு கோடி சந்தையைக் கொண்ட இந்தியாவிலும் இதற்கான தாக்குதல்கள் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்டன. 1991 க்குப் பிறகு அந்தந்த நாடுகளில் திட்டமிட்டு நடைபெறும் சாதி,மத, மொழி, இன, நிறவெறி மோதல்களை இப்பின்னணியில் தான் அணுக வேண்டும். 1989-இல் வி.பி.சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி இந்தியாவில் இருந்தது. அது பாரதிய ஜனதாவால் கவிழ்க்கப்பட்டது. 1991 இல் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் மீண்டும் பெரும்பான்மையாக கூட்டணி ஆட்சியே உருவாகும் சூழல் இருந்தது. காங்கிரசை முற்றிலுமாக நிராகரிக்கும் மனநிலையே இந்திய மக்களின் மனநிலையாகவும் அன்று இருந்தது. அந்த அரசியலில் இடதுசாரிகள் மற்றும் திமுக உள்ளிட்ட மாநிலக்கட்சிகளின் பங்கு கூடுதலாகவும் இருந்தது.

காங்கிரசை அதிகாரத்திற்கு கொண்டு வந்து தங்களின் நவீனக் காலனி ஆட்சியை இந்தியாவில் நிறுவும் தேவையும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருந்தது. ஆனால் காங்கிரசிற்கு வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. அதற்காக ஏகாதிபத்தியத்தால் செய்யப்பட்ட செல்லக் கொலையே ராஜீவ்காந்தி படுகொலை என்று அப்போது பலர் தெரிவித்த கருத்துகள் ராஜீவ்காந்தியின் ரத்தக்கறைக்குள் மறைக்கப்பட்டது.  இக்கொலையில் ஏகாதிபத்திய நாடுகள் உள்ளிட்ட பலரின் தொடர்புகள் இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் கண்டு கொள்ளப்படவில்லை. விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே இது அணுகப்பட்டது. 1987 ஜூலையில் சிங்கள ராணுவ சிப்பாய் விஜயமுனி விஜித ரோஹன டி சில்வா தனது துப்பாக்கியால் ராஜீவ்காந்தியைத் தாக்கியதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த சிரில் ரணதுங்கா எழுதிய From peace to war, insurgency to terrorism எனும் நூலில் ராஜீவைக் கொலை செய்ய இலங்கை திட்டமிட்ட செய்தியை எழுதியுள்ளார்.இலங்கை என்பது குறியீடு தான். திட்டமிட்டபடி மற்ற அனைவரும் பாதுகாப்பாக இருக்க ராஜீவ்காந்தியும், உயிரை ஏன் விடுகிறோம் என்று தெரியாத உயர் அதிகாரிகளும் உயிர் துறந்தனர். உலக வணிகத்திற்காக நடத்தப்பட்ட உள்ளூர் கொலை. ராஜீவ் கொலையின் அனுதாப அலையில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தோடு அதிகாரத்திற்கு வந்தது. அதன் பிறகு உலகவங்கியின் செல்லப்பிள்ளையான மன்மோகன்சிங் உலகமயம்- தாராளமயம்-தனியார்மயம் என்ற கொள்கையைத் தூக்கிக் கொண்டு இந்தியத் தெருக்களில் பவனி வரத் தொடங்கினார்.

1991 சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் ஒற்றைச் சுரண்டலில் உலகம் சிக்கித் தவிக்கிறது. இதற்கு எதிரான உலக மக்களின் குரல் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது. போராடும் மக்களைப் பிரிக்க வலதுசாரி பிற்போக்குவாதிகளை ஏகாதிபத்தியம் அந்தந்த நாடுகளில் திட்டமிட்டு வளர்க்கிறது. 1992 பாபர் மசூதி இடிப்பும், அதன் பிறகு சதாம் உசேன் தூக்கும் உலகமயக் கொள்கை அமலாக்கத்திற்கான முன்னோட்டம்தான். உலகில் அதுவரை ஒலிக்க வைக்கப்பட்ட கம்யூனிசத் தீவிரவாதம் என்ற குரல் தணிந்து, இஸ்லாமியப் பயங்கரவாதம் எனும் குரல் ஒலிக்கத் தொடங்கி வைக்கப்பட்டது. அது இன்றளவும் ஒலிக்கிறது.

உலகமயம் அமலாக்கப்பட்ட 91 களுக்குப் பிறகு  நிதிமூலதனம் பலமடங்கு உயர்ந்து பெருகியுள்ளது. இந்நிதிமூலதனம் நாடுவிட்டு நாடும், கண்டம் விட்டு கண்டமும் பாய்கிறது. நிதிமூலதனத்தின் முதல் குறி லாபவெறியே. லாபவெறியை மையமாகக் கொண்ட நிதிமூலதனத்தின் வருகையால் அந்தந்த நாட்டின் இயற்கை வளங்கள் மீதும், உள்நாட்டுத் தொழில்கள் மீதும் கடும் தாக்குதல் நடக்கிறது. இத்தாக்குதலில் வெகுமக்கள் அலை அலையாகப் போராட்டக் களத்தில் இறங்குகின்றனர். உலகின் பலநாடுகளில் இதுதான் நடக்கிறது. வெகுமக்களின் கோரிக்கைகளுக்கு முதலாளித்துவத்திடமும், அதன் நவீனப் பெரு வடிவமான கார்ப்பரேட்டுகளிடமும் எவ்விதத் தீர்வுமில்லை. எனவே அழித்தொழிக்கும் வேலையைச் செய்ய திட்டமிடுகிறது. இத்திட்டமிடல் பல வடிவங்களில் உலகில் செயல்படுத்தப்படுகிறது.

அரச வன்முறையால் மட்டுமே அதை செய்துவிட முடியாது. எனவே பத்தாம்பசலித்தனமான வலதுசாரி பிற்போக்குவாதிகளை அது ஊக்குவிக்கிறது. தற்போது உலகின் பலநாடுகளில் வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னணியும் இதுதான்.ஊருக்கு ஊர் அதன் முகங்கள் மாறும். மதத் தீவிரவாதங்களை அது வளர்க்கும். அதற்கு எந்த மதத்தின் பெயரையும் தேவைக்கேற்ப சூட்டிக் கொள்ளும். அது காட்டும் வெளிச்சத்தில் வெகுமக்களில் வாழும் மத உணர்வாளர்கள் கொம்பு சீவி விடப்படுவார்கள். இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற கருத்தைக் கட்டியமைப்பதே ஏகாதிபத்தியத்தின் இன்றைய உலக அணுகுமுறை.

இஸ்லாமிய நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் திட்டம். இதைச் செயல்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள எடுபிடிகளைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.இதில் சூட்சுமம் என்னவென்றால் எடுபிடிகளை வைத்து நவீனக் காலனி ஆட்சியை நடத்தாமல், அவர்களை வைத்து சொந்த நாட்டின் குடிகளைக் கொன்று குவிப்பதன் மூலம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற ஒரு பொதுச் சிந்தனையையும் உருவாக்குவதுதான். ஏகாதிபத்தியம் இஸ்லாமியர்கள் அல்லாத நாடுகளில் இந்த அணுகுமுறையைக் கையாள்வதில்லை. ஒன்று நேரடியாக காலனி ஆட்சி செய்வது. இல்லையேல் பொம்மை அரசுகளை உருவாக்கி நவீன காலனி ஆட்சி நடத்துவது. இந்தியாவும் கூட 1991 க்குப் பிறகு ஏறக்குறைய ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பாவையாக மாறிக் கொண்டிருக்கிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் வெடிக்கும் குண்டுகள் அந்நாடு மட்டுமே சார்ந்ததல்ல. அது உலக குண்டுவெடிப்புத் திட்டங்களின் உள்ளூர் சத்தமாகவே உணர முடிகிறது.

கலையும், இலக்கியமும் மக்களுக்கே. கலை என்பது மக்களை ஈர்க்கும் முக்கியப் பண்பாட்டுக் கருவி. அதில் சினிமாவின் பங்களிப்பு மக்களை ஊடுருவித்தாக்கும் வல்லமை கொண்டது. 1991 க்கு முந்தைய தமிழ் சினிமாக்களில், ஏழைகளுக்கு உதவுபவர்களாகவும், ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்ப்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியர்களை, 1991 க்குப் பிறகு, குண்டு வைப்பவர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் சினிமாக்கள் வரத் தொடங்கின. தமிழில் அதை “ரோஜா” திரைப்படத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் மணிரத்னம். ஷங்கர் போன்றோர் மேலும் அதை முன்னெடுத்துச் சென்றனர். இது ஏகாதிபத்தியத்தின் உலகமய அரசியலோடு தொடர்புடையது.

தற்போது பாசிச வலதுசாரி கருத்தியலாளர்கள் தமிழகத்தில் அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றனர். அதற்கான முன் கட்டமைப்பு அவசியமாகிறது. அதைப் பண்பாட்டுத் தளத்தில் கொண்டு செல்லும் முக்கியமான தேவையும் இருக்கிறது.கடந்தகால வரலாறுகளின் மீட்டுருவாக்கம் எனும் கதைகளின் மீதே உலகம் முழுவதும் பாசிசம் கட்டமைக்கப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டில் ஜப்பானின் மைஜியின் ராணுவ எதேச்சதிகாரம் ஹிண்டோயிசத்தின் மீதும்,மன்னர் வழிபாட்டின் மீதும் உருவானதே. சீனாவில் 1930 களில் சியாங்கே ஷேக்கின் பாசிஸ்டு புதுவாழ்வு இயக்கம்,பண்டைய கன்பூசியஸ் தத்துவத்தின் மீதுதான் உருவானது.

ஹிட்லரும்-முசோலினியும் கடந்தகால பத்தாம்பசலித்தனமான கோட்பாடுகளின் மீதே பாசிசத்தைக் கட்டி எழுப்பினர். ஈரானின் ஷா மக்கள் ஆட்சியை நிறுவுவேன் என்று கூறித்தான், ஆதிகால முடிசூட்டுவிழாவைத் தனக்கு நடத்திக்கொண்டார்.

இந்தியாவின் நடுத்தர மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் வர்ணாசிரம தர்ம அடிப்படையில் தங்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திர அடையாளத்திலிருந்து நழுவி அதைத் தலித்துகளுக்கானதாக ஆக்கினர். வர்ணாசிரமம் என்ற  கடந்தகாலக் கேவலங்களில் இருந்தே இந்தியப் பாசிசம் கட்டமைக்கப்படுகிறது. அக்கட்டமைப்பின் ஒரு வெளிப்பாடே, மன்னர்கள் காலத் திரைப்படங்கள் எனும் பெயரில் பாகுபலிகளும், சீதாராமம்களும், பொன்னியின் செல்வன்களும், வேள்பாரிகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் படைத்தல் மதிக்கப்பட வேண்டும். அந்த இலக்கியத்தின் அளவுகோல் எது? பெரும்பகுதி உழைக்கும் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பது தானே?

பொன்னியின் செல்வன் புதினம் புனையப்பட்டது தான். அதைக் காட்சிப்படுத்துவதில் செய்யப்பட்ட அரசியல் அருவருப்புகளையும் சொல்லாமல் கடந்து செல்ல முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். முதல் காட்சியில் ராஷ்டிரக்கூடர்களோடு ஆதித்தக் கரிகாலனும், வந்தியத்தேவனும் யுத்தத்தில் வெற்றி பெறுகிறார்கள். வந்தியத்தேவன் கள் குடித்து ஆடுகிறார். அடுத்த காட்சியில் ஆதித்தக் கரிகாலனைச் சந்திக்கிறார். கள் குடித்திருக்கிறாயா எனக் கேட்கிறார் ஆதித்தக் கரிகாலன். “கள்ளழகரை” வழிபட்டுக் கள் குடித்தேன் என்கிறார் வந்தியத்தேவன். இது அப்பட்டமான வரலாற்றுப்பிழை. “கள்ளழகர்” எனப்படும் வழிபாட்டு முறை, மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்த 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட மரபு. அழகரைக் கள்ளழகராக ஆக்கிய வைதீக அரசியலின் வரலாற்றையும் அறிந்துவிடுவோம்.

மதங்கள் உருவாக்கிய கடவுள்களை எதிர்த்து,உழைக்கும் மக்களின் கலகக்குரலில் எழுந்ததே கள்ளழகர்.தங்களின் வழிபாட்டு முறைகள் அவமதிக்கப்படும் பொழுதும்,வழிபாட்டுஉரிமைகள் நிராகரிக்கப்படும் பொழுதும்,தங்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் புறக்கணிக்கப்படும் பொழுதும், எதிர்த்துப் போராடிய வரலாறு இங்கு ஏராளம்.அதில் ஒன்று கள்ளழகர்.

வைணவர்களின் பாண்டிநாட்டு திருப்பதிகளில் ஒன்று திருமாலிருஞ்சோலை.இங்கு எழுந்தருளி இருப்பவர் சுந்தரராஜ பெருமாள்.மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமாலிருஞ்சோலையிலிருந்து (அழகர் கோவில்)ஒவ்வொரு ஆண்டும் சுந்தரராஜப்பெருமாள்,வைகை ஆற்றில் எழுந்தருளி, மண்டூக முனிவரின் சாபத்தைப் போக்கி திரும்புவதாக ஐதீகம்.இதுவே சித்திரைத் திருவிழாவாக நடக்கிறது.உடைமைவர்க்கத்தின் பெருந்தெய்வமான சுந்தரராஜப்பெருமாள் தன்னுடைய ஐதீகக்கோலத்துடன் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை வருவதில்லை.ஒரு கையில் வளரித்தடி, மற்றொருகையில் சாட்டைக்கம்பு, தலையில் கொண்டை, காதில் கல்வைத்த கடுக்கண், அரைக்கால்அளவும்,இடுப்புக்கு மேலேயும் கருப்புநிறஆடை என கள்ளர் கோலத்தில்தான் அவர் மதுரை வருகிறார்.

அதே நேரத்தில் கள்ளர் கோலத்துடன் மதுரைக்குள் நுழைவதில்லை.தல்லாகுளம் வந்தவுடன்,கள்ளர் கோலத்தை கலைத்துவிட்டு, பெருந்தெய்வ வேடமணிந்து வைகை ஆற்றிக்கு செல்கிறார்.அதேபோல் தல்லாகுளம் வரை வந்து,மீண்டும் கள்ளர்வேடம் அணிந்து அழகர்கோவிலுக்கு திரும்புகிறார்.

வைதீகசமயமரபில் பெருந்தெய்வமொன்று,கீழ்சாதியொன்றின் பழக்கவழக்கத்தின்படி வேடமணிந்து கீழிறங்கி பவனிவருவது வேறெங்கும் இல்லாத,சாஸ்திரங்கள் அனுமதிக்காத ஒரு முக்கிய நிகழ்வாகும்.ஏன்?எப்படி?

மதுரைக்கும்,அழகர்கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதி,கள்ளர் இனமக்கள் அதிகமாக வாழ்ந்த மேலூர் கள்ளர்நாட்டுப் பகுதியாகும்.தங்கள் பகுதியில்,தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, வழிபடாத, முன்பின் பார்க்காத பொன்னால் செய்யப்பட்ட விக்கிரகங்கள் தூக்கிச்செல்லப்பட்டபோது,அதை மறிக்கவும்,தங்கத்தைக் கொள்ளையடிக்கவும் செய்தனர், மேலூர் நாட்டுக்கள்ளர்கள். மதுரையை ஆண்ட நாயக்கர்களால்,கள்ளர்களைக்கட்டுப்படுத்த முடியவில்லை. வேறுவழியின்றி கள்ளர் இனமக்களோடு ஒரு சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி உழைக்கும் மக்களின் சாமிபோல வேடமணிந்துதான் கள்ளர்நாடு முழுமையும் பெருமாள் வரவேண்டும்.இல்லையேல் கொண்டுசெல்ல அனுமதிக்கமாட்டோம் என்றனர்.அதன்படியே முடிவானது. சக்ராயுதம் கழட்டப்பட்டு,உழைக்கும் மக்களின் ஆயுதமான வளரியைக் கையில் ஏந்திக்கொண்டபின் தான் வைணவக்கடவுள் வைகை நோக்கி வர முடிந்தது.இதுதான் இன்றளவும் நடக்கிறது. இதில்வேடிக்கை என்ன தெரியுமா?

ஆகமங்களின்படியும்,பிரம்மபுராணத்தின்படியும் ஒருதெய்வத்திற்கு வேறொரு தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்தாலே தீட்டு. அத்தீட்டை நீக்க சம்ரோஷன சடங்கு செய்யப்படவேண்டும்.ஆனால் இங்கு உருவமே மாற்றப்பட்டு விட்டது.அதுவும் கீழ்சாதி உருவம்.

வைகையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவிலுக்குச் செல்வார்.அங்கு அவரைக் கோவிலுக்கு உள்ளே உடனே கொண்டு செல்லாமல் விளக்குமாற்றால் அடிப்பார்கள் பார்ப்பனர்கள்.ஒரு கடவுளையே விளக்குமற்றால் அடிக்கக் காரணம் யாதெனில்,அவர் கீழ்சாதி கள்ளர் வேடம் போட்டதால் தீட்டைக் கழிக்கிறார்களாம்.அதிகாரமும்,ஆட்சிபீடமும்,தங்கள் பண்பாட்டை, சமயமரபை, அழிக்க முயலும்போது உழைக்கும்மக்கள் போராடுகின்றனர்.பார்ப்பனியம் அதற்காகத் தனது கொள்கையில் சமரசமும் செய்து கொள்ளும். ஆனால் தீட்டு தீட்டுதான் என்பதிலும் உறுதியாய் இருக்கும்.கள்ளர் இனமக்களின் போர்க்குரலின் அடையாளமே கள்ளழகர்.

இதில் முக்கியமான விசயம் ஒன்று உண்டு. மீனாட்சி கல்யாணத்திற்காக அவர் வருகிறார் என்பது நாயக்கர்கள் காலத்தில் செய்யப்பட்ட இடைச் செருகல் தான்.மீனாட்சி திருமணம் தனிக்கதை.மண்டூக முனிவரின் சாபம் போக்குவது தனிக்கதை. இரண்டையும் ஒன்றாக்கியது நாயக்கர்கள் தேவைக்காக செய்யப்பட்டது

இப்போது யாருடைய தேவைக்காக, 16 ஆம் நூற்றாண்டில் வழிபடப்பட்ட கள்ளழகரை, 9 ஆம் நூற்றாண்டில் வந்தியத்தேவன் வழிபட்டதாக, யாருடைய தேவைக்காக ஜெயமோகனும், மணிரத்னமும்  வசனம் எழுதினார்கள். தேவர் சமூக மக்களை வலதுசாரிகளின் பின்னால் அணிதிரட்டும் தேவைக்காகவா? கள் குடித்தது வந்தியத்தேவனா? ஜெயமோகனா? மணிரத்னமா?

பெருமை என்றால் சோழர் வரலாறு என்பதும், கேள்வி எழுப்பினால் புனைவுப்புதினம் என்பதும் எவ்வகையான அறம்? இப்படி வசனம் எழுதுவதற்கு ஜெயமோகன் அரசியல் அறிவு அற்றவரா? அறிவு நாணயமே இல்லாதவரா? இல்லையேல் பணம் பெற்றுக் கொண்டு எழுதினாரா? அந்தப் பணம் யாருடைய தேவைக்காகக் கொடுக்கப்பட்டது என்பதை ஜெயமோகன் சொல்வாரா? இன்றைய அழகர்கோவிலுக்குச் சென்று “கள்” படையலை அழகருக்கு அளிக்கும் தைரியம் ஜெயமோகனுக்கு உண்டா?

பெருமை என்றால் சோழர் வரலாறு என்பதும், கேள்வி எழுப்பினால் புனைவுப்புதினம் தானே என்பதும் எவ்வகையான அறம்? பெருமை என்றால் பிராமணர் என்பதும், பிரச்சனை என்றால் இந்து என ஓடி ஒளியும் அதே தந்திரம் தான். சோழர்களின் புலிக்கொடியும், பாண்டியர்களின் மீன் கொடியும் படத்தில் எங்கும் இடம் பெறவில்லையே ஏன்? லாபத்திற்காக இயங்கும் ஒரு சமூக அமைப்பில் நியாய தர்மம் என்பது லாபத்திற்கு உட்பட்டது தானே? படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லோரும் கதாபாத்திரமாகவே ஒன்றிவிடவில்லை. நடிகர்களாகவே கண்முன் நிற்கிறார்களே ஏன்? விக்ரம் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பு, கைதி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார் லோகேஷ் கனகராஜ். பொன்னியின் செல்வன் பார்ப்பதற்கு முன்போ, பார்த்த பின்போ, கார்த்தியும், பார்த்திபனும் நடித்து, செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தைப் பார்த்துவிடுங்கள்.

சோழர்கள் சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை தெரியும். ஏனெனில் அவர்கள் பொன்னியின் செல்வர்கள் அல்ல. வைகைச் செல்வர்கள். தஞ்சாவூர்க்காரர்களுக்கும், மதுரைக்காரர்களுக்கும் நடந்த அதிகாரம் மற்றும் சதியின் வெளிப்பாடு தான் பொன்னியின் செல்வன். இது புதினம் மட்டுமே. புனிதமல்ல. புனிதம், தீட்டு என்பதும் ஆதிக்கக் கோட்பாடுகளே.

 

 

 

xaviersuji@gmail.com