தமிழ்நாடு போலீஸ் அகாடமியால் வெளியிடப்பட்ட Drill and Training Manual Paper XIV இன் பிரிவு 29 துப்பாக்கி சூடு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிக் கூறுகிறது. சம்பவ இடத்தில் இருப்பவர்களிலேயே உயர் அதிகாரி தனக்குக் கீழுள்ள காவலர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து முன்னெச்சரிக்கை கொடுத்து துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்.

“ஆனால் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் அம்மாதிரி முக்கியமான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டன என்பதை நிரூபணம் செய்வதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. வெவ்வேறு காவலர்கள் வெவ்வேறு இடங்களில் எந்த விதமான ஒழுங்கு முறையும் இல்லாமல் ஒருங்கிணைப்பும் இன்றி உயரதிகாரி உத்தரவிட்டதன் பேரில் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகக் கூறிக் கொண்டு பிரிவு 29 (Clause 25) இல் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு முரணாக விருப்பம் போல் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றனர்.” (அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை).

இதுதவிர முதலில் போராட்டக்காரர்களுக்கு கலைந்து போகும்படி அவர்கள் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பின்பு கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீரங்கிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் இடுப்புக்குக் கீழ் சுட வேண்டும் என்று பல விதிகள் உள்ளன என்று ஆணையம் பட்டியல் இட்டுள்ளது. இதில் எந்த விதியுமே கடைப்பிடிக்கப்படவில்லை என்ற திட்டவட்டமான முடிவுக்குத் தான் வருவதாக ஆணையம் கூறியுள்ளது. நடந்த விதிமீறல்கள் என்று ஆணையம் பட்டியலிட்டுள்ளதை கீழ்கண்டவாறு சுருக்கித் தொகுக்கலாம்.

1. காவலர்கள் ஒரு பூங்காவில் மறைந்திருந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
2. போராட்டக்காரர்களுக்கு கேட்கும் வண்ணம் எச்சரிக்கை விடப்படவில்லை.
3. சட்ட விதிகளில் உள்ளபடி எச்சரிக்கை செய்யும் கலவரக் கொடி ஏற்றப்படவில்லை.
4. கொல்லப்பட்டவர்கள் யாருக்கும் இடுப்புக்குக் கீழ் காயம் இல்லை. எனவே கொல்லும் நோக்கத்துடனேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
5. ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது பின்னால் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதை காயங்கள் காட்டுகின்றன. தப்பி ஓடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் பின்னந் தலைவழியாக உள்ளே நுழைந்த குண்டுகள் வாய் வழியாக உறுப்புகளைச் சிதைத்துக் கொண்டு வெளியேறியுள்ளன. முதுகுவழியாக நுழைந்த குண்டுகள் இதயம் போன்ற பகுதிகளை சிதைத்துக் கொண்டு மார்பு வழியாக வெளியேறியுள்ளன. இது போலீஸ் ஸ்டேண்டிங் ஆர்டருக்கு முற்றிலும் எதிரானதாகும்.

தவிர காவலர்கள் தங்களுக்குப் போராட்டக்காரர்களால் ஆபத்து ஏற்படக் கூடிய சூழ்நிலையில் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தினார்களா என்பதையும் ஆணையம் விரிவாக ஆராய்ந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த இடத்தில் மணிகண்டன் என்ற ஒரே ஒரு காவலரைத் தவிர வேறு காவலர்கள் யாருக்கும் கொடுங்காயம் ஏதும் இல்லை. மணிகண்டனுக்கும் உதட்டில் கல்வீசிச்சில் ஏற்பட்ட காயம் சீழ் பிடித்ததுதான் சிக்கலானது. வேறு சில காவலர்களுக்கு அற்ப காயங்களே ஏற்பட்டுள்ளன. காயம் பட்டதாகச் சொல்லப்படும் காவலர்கள் சிலருக்கு வெளிக்காயங்களே இல்லை. எனவே காவலர்களுக்கு துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நெருக்கடியோ அச்சுறுத்தலோ ஆபத்தோ இல்லை என்று அருணா ஜெகதீசன் முடிவு செய்கிறார்.

காவலர்கள் சொல்வது போல ஆட்சியர் வளாகத்துக்குள்ளும் ஸ்டெர்லைட் குடியிருப்பிலும் தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் துப்பாக்கி சூடு நடைபெறவில்லை. துப்பாக்கி சூடு நடைபெற்றதால் தான் தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன என்ற முடிவுக்கு ஆணையம் வருகிறது.

காவலர்கள் முதலில் கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் குழாய் பீச்சியடிக்கும் முறை தடியடி போன்றவற்றைப் பயன்படுத்தாமல் நேரடியாக தூப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தூத்துக்குடியில் இருந்த இரண்டே இரண்டு வஜ்ரா வாகங்களில் ஒன்று ஸ்டெர்லைட்டைப் பாதுகாக்க அந்த ஆலை முன்பு நிறுத்தப்பட்டிருந்தது என்று காவலர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

ஐஜி அருகிலேயே இருக்கும் போதே டி ஐ ஜி துப்பாக்கி ஏந்திய காவலரான சங்கருக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டுள்ளார். டிஎஸ்பி லிங்க திருமாறன் ஏஸ் சூட்டர் எனப்படும் சாமிக்கண்ணுவுக்கு துப்பாக்கி சூடு நடத்த தன்னிச்சையாக உத்தரவிட்டுள்ளார். கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறை ஏவிஎம் என்ற தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் லத்தி கம்புகள் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியது இன்னொரு சம்பவமாகும்.

மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து மூன்றாவது நிலையில் உள்ள சார் ஆட்சியர் பிரசாந்த்தை பேச்சுவார்த்தை நடத்தும்படி கூறியுள்ளார் என்றும் ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வரம்பானது மிகவும் குறுகியதாகும்.

22.5.2018 ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு விளைவாக இறப்பு காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர் குலைவுகள் காரணமாக பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டது.

சூழ்நிலைகளுக்குத் தகுந்த பலப்பிரயோகம் நடத்தப்பட்டதா? துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டனவா ஆகியவற்றை மட்டுமே ஆணையம் விசாரித்துள்ளது. விசாரித்த வரையிலுமே கூட ஆணையத்தில் அறிக்கை அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக எஸ்.ஏ.வி. பள்ளியில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழக்கியது. ஆனால் அந்தப் பள்ளிக்குப் போகும் அனைத்து வழிகளிலும் தடையுத்தரவு போடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. எனவே பள்ளிக்குச் செல்பவர்கள் தடையை மீறிச் செல்ல வேண்டிய சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது என்று ஆணையம் கூறுகிறது.

1. முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை. கீழ்நிலை அதிகாரியான பிரசாந்த் என்பவரே பேச்சு வார்த்தைகளை நடத்தினார். எனவே நெருக்கடியை தவிர்க்கும் நோக்கும் ஆட்சியர் நடந்துகொள்ளவில்லை.
2. போராட்டக்காரர்களின் தலைவர்களைக் கண்டறிந்து கைது செய்ய முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை.
3. போராட்டத்துக்கு அனுமதி கொடுத்து போகும் வழியில் தடையுத்தரவு போட்டது. ஆகியவை சூழலை மோசமாக்கின. இதற்கு மாவட்ட நிர்வாகமும் போலீசாருமே பொறுப்பு என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. (தூத்துக்குடி முழுவதும் தடையுத்தரவு போடப்பட்டிருக்க வேண்டும். அல்லது பள்ளிக்குப் போகும் வழியில் தடை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது).

தவிர துப்பாக்கி சூடு எந்த விதிமுறைக்கும் உட்பட்டு நடக்கவில்லை. தான்தோன்றித்தனமாக காரணமின்றி நடத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆணையம் திட்டவட்டமாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஐவர் கொல்லப்பட்டனர். வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் மூவர் கொல்லப்பட்டனர். பின்பு டி.எஸ்.பி. மகேந்திரன் துப்பாக்கி சுடுவதில் வல்லவரான சாமிக்கண்ணுவை அழைத்துச் சென்று சுடும்படி உத்திரவிட்டதில் ஐவர் சாமிக்கண்னுவால் கொல்லபட்டுள்ளனர்.

தாசில்தார் மட்டத்திலிருந்த அதிகாரிகள் தங்கள் எல்லையை மீறிச் சென்று போலீஸ் சுடுவதற்கு அனுமதி அளித்துள்ளனர். இவை அனைத்துமே போலீஸாருக்கு எந்த ஆபத்தும் இல்லாத, அந்த அளவுக்கு பொதுச் சொத்துகளுக்கோ பொதுமக்களுக்கோ ஆபத்து இல்லாத சூழலிலேயே நடந்துள்ளன. இதை ஆணையம் சரியாகவே குறிப்பிட்டுள்ளது.

பதிலில்லாத கேள்விகள்:

பல மணிநேரம் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது முதல்வரின் காதுக்கு எல்லாமே அறிவிக்கப்பட்டும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் எந்தத் திட்டவட்டமான நடவடிக்கையும் எடுக்கவில்லை? நூறுநாட்களாப் போராட்டம் நடந்து வந்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அல்லது வேறு யாராவது அதிமுக அமைச்சர்கள் அந்தப் பேச்சுவார்த்தை குறித்து எந்தக் கவலையும் கொண்டது போலத் தெரியவில்லை. அவர்கள் யாரும் அதில் கலந்து கொண்டது போலவும் தெரியவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் மீது ஆணையம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மாநில அரசுக்கும் பொருந்தும். ஆணையத்தின் அறிக்கையைப் பார்க்கும் போது மாநில அரசு என்பதே மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் என்பது போன்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. ஸ்டெர்லைட்டை மூடும்படி பலமுறை பல நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அது ஏதோ ஒருவிதத்தில் செயல்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. அது மூடப்படும் என்ற உறுதியை முன்பே எடப்பாடி பழனிச்சாமி அளித்திருந்தால் இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஸ்டெர்லைட் தாமிர ஆலை குஜராத், கோவா, மஹாராஷ்ட்ரா ஆகிய மூன்று மாநிலங்களால் நிராகரிக்கப்பட்டது. சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மெண்ட் என்ற அமைப்பு இந்த ஆலை சுற்றுச் சூழலை நாசம் செய்யக் கூடியது என்பதே நிராகரிக்கப்பட்டதுக்கு காரணம் என்று தெளிவாகக் கூறியுள்ளது.

மஹாராஷ்ட்ராவிலிருந்து இந்த ஆலை வெளியேற்றப்பட்ட அதே ஆண்டில் தமிழ்நாட்டில் செல்வி ஜெயலலிதா இதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதே போலத்தான் உலகம் முழுவதும் அவப்பெயர் பெற்ற பெக்டெல் நிறுவனம் கொச்சபாம்பா போராட்டத்துக்குப் பிறகு அங்கிருந்து வெளியேற்றப்பட்டது, அது நேராக வந்தது திருப்பூருக்குத்தான். தமிழகத்தின் நகரமயம், முதலீட்டை ஈர்ப்பது, வளர்ச்சி என்பது இந்த அபாயகரமான விஷயங்களை உள்ளடக்கியது ஆகும்.

மகாராஷ்ட்ரா ரத்னகிரியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆலைக்கு இங்கே ஜெயலலிதா அரசு இடமளிக்காமலிருந்திருந்தால் இதற்கெல்லாம் தேவையே இருந்திருக்காது. இதே போலத்தான் கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கோகோ கோலா ஆலையை தமிழ்நாட்டின் நெல்லையில் அமைக்க ஜெயலலிதா அரசு 1994 ஆம் ஆண்டு அனுமதியளித்தது.

1996 ஆம் ஆண்டு நேஷனல் டிரஸ்ட் ஃபார் கிளீன் என்விரான்மெண்ட் என்ற அமைப்பு ஸ்டெர்லைட்டுக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. 1997 ஆம் ஆண்டு ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் பலர் பாதிக்கப்படுகின்றனர். 1998 ஆம் ஆண்டு நேஷனல் என்விரான்மெண்ட்டல் இன்ஜீனியரிங் கார்ப்பரேஷன் என்ற அமைப்பானது ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளை மீறியுள்ளது என்பதைக் கண்டுபிடிக்கிறது. 1999 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் ஊழியர்கள் இந்த ஆலையிலிருந்து வந்த விஷவாயுவினால் பாதிக்கப்பட்டனர். இருந்தும் கூட அதன் உற்பத்தி 35 ஆயிரம் டன்னில் இருந்து 70000 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவு சுவாசக் கோளாறுகள், நோய்கள் உள்ளன என்று கண்டுபிடிக்கிறது. 2010 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இந்த ஆலையை மூடும்படி உத்தரவிடுகிறது. ஆனால் உச்சநீதிமன்றம் திறக்க உத்தரவிடுகிறது. ஆனால் கம்பெனி 100 கோடி ரூபாய் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று உத்திரவிடுகிறது. 2013-ல் தூத்துக்குடி மக்கள் விஷவாயு வெளியேறியதால் பாதிக்கப்படுகின்றனர். ஜூன் 2013 ஆம் ஆண்டு தேசிய கிரீன் டிரிபியூனலானது கம்பெனி எந்தத் தவறும் செய்யவில்லை. விஷவாயு கசிவுக்கு அது காரணமில்லை என்று கூறுகிறது. 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தனது உற்பத்தியை இருமடங்கு ஆக்குவதற்கு திட்டமிட்டதைத் தொடர்ந்து போராட்டம் தொடங்குகிறது. நூறுநாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரைக் கொல்கிறது. (ANTI-GLOBALIZATION MOVEMENTS & ROLE OF THE STATE -THE CASE OF THOOTHUKUDI அனிர்பன் பானர்ஜி).

1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Environmental Impact Assessment (EIA) அதாவது சுற்றுச் சூழல் பாதிப்பு என்ன என்ற ஆய்வு இல்லாமலேயே மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த ஆலைக்கு அனுமதியளித்தது. ஆலையானது பாதுகாக்கப்பட்ட சுற்றுச் சுழல் மண்டலமான மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் அது 14 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது. இத்தனை இருந்தும் உச்சநீதிமன்றம் இந்த ஆலை இயங்க அனுமதித்தது.

எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் National Environmental Engineering Research Institute (NEERI) ஸ்டெர்லைட் எந்த சூழல் மாசும் செய்யவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது. இந்த நிறுவனத்தின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே அரசுகள் தங்கள் ஸ்டெர்லைட் ஆதரவு நடவடிக்கைகளை நியாயப்படுத்தின. ஆய்வுகள் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரும்பு 17-20 மடங்கு அதிகமிருக்கிறது என்கின்றன. சுவாசக் கோளாறுகள் 13.6 சதவீதம் அதிகம் இருக்கின்றன. ஆஸ்துமா இருமடங்கு உள்ளது (அனிர்பென் பானர்ஜி மேற்கண்ட கட்டுரை).

இவ்வளவு இருந்தும் ஏன் அரசுகள் பல்வேறு முறைகளில் இந்த ஆலைக்கு உதவிக்கொண்டே இருந்தன? வெறும் லஞ்சம், பணம் என்ற சொல்லில் இதை அடக்கிவிட முடியாது. இதற்கான பதில் இன்னமும் ஆழமானது.

உலகமய அரசு என்பது கார்ப்பரேட் அரசு. அரசானது வணிகம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து அனைத்து துறைகளில் இருந்தும் வெளியேற வேண்டும். இவற்றை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்த அரசுகளின் பொருளாதாரக் கோட்பாடு. எனவே அரசுக்கான வருமானம் ஈட்டுதல், வேலை வாய்ப்பு அளித்தல், உலக வணிகச் சங்கிலியில் இந்தியாவை இணைத்தல் ஆகிய அனைத்துக்கும் அரசுகள் கார்ப்பரேட்டுகளையே நம்பியிருக்கின்றன.

கார்ப்பரேட்டுகளைக் கைவிடுவது என்பது அரசுகளுக்கு தற்கொலைக்குச் சமம்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா உலகமயமும் தனியார் மயமும் பெற்றெடுத்த குழந்தை ஆகும். இந்தக் குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் பாட்னாவில் சிறிய அளவில் அலுமினியம் கண்டக்டர் உற்பத்தி செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அனில் அகர்வால் மும்பை சென்று இதே தொழிலில் ஈடுபடுகிறார். பின்பு செம்பு கம்பிகள் செய்யும் தொழிலை தொடங்குகிறார். செம்பின் விலை ஏறி இறங்குவதால் தனது லாபம் பாதிக்கப்படுவதை உணர்ந்து அதைத் தோண்டி எடுக்கும் தொழிலையும் தானே கைப்பற்ற முடிவு செய்கிறார்.

அந்த நேரத்தில் தான் அரசு சுரங்கங்களையும் செயல்படாத அரசு ஆலைகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது என்ற கொள்கை முடிவை எடுக்கிறது. அனில் அகர்வால் தமிழ்நாட்டின் மால்கோ, மத்திய அரசு நிறுவனமான பால்கோ இப்படி பல நிறுவனங்களை வாங்கி பிரம்மாண்டமாக வளர்கிறார்.

ஒரிஸாவின் நியாம்கிரியிலும் ஜாம்பியாவிலும் இந்த நிறுவனம் புனிதமான மலைகளை அழித்தும், ஆறுகளில் தாமிரக் கழிவுகளைக் கொட்டியும் சர்வ நாசம் ஏற்படுத்தியது. நியாம்கிரியில் அடியாட்படைகளைக் கொண்டு பீதியை ஏற்படுத்தியது. ஒரு போர் போன்ற சூழநிலை அங்கே நிலவியது. ஆனால் வேதாந்தாவின் படைகள், அரசு, அதிகாரம் அனைத்தையும் முறியடித்து பழங்குடி மக்கள் வெற்றி கண்டனர் என்பது வரலாறு.

தூத்துக்குடியிலும் இதுவே நடந்திருக்கிறது என்றாலும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகளும் அரசு நிறுவனங்களும் எடுத்த நடவடிக்கைகள் இல்லை என்றாகிவிடாது. சில காவல்துறை அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் என்று தண்டிக்கும் அதிகாரம் இல்லாத ஒரு கமிஷன் கூறியுள்ள காரணத்தாலேயே கொல்லப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கியதாகிவிடாது.

பதிமூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300 பேர்காயம் பட்டுள்ளனர். விஷவாயுக் கசிவுகளால் ஆயிரக்கணக் கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளர். விஷவாயு ஆலையிலிருந்து வெளியேறி பலர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் உற்பத்தியை 35,000 டன்னில் இருந்து 70,000 டன்னாக உயர்த்துகிறது என்றால் அது எப்படிப்பட்ட பேராசை பிடித்த நிறுவனமாக இருக்கும்!

இவை தனியார் மயம் செய்த கொலைகள். கார்ப்பரேட் பேராசையே இதற்குக் காரணம். தவறான, மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளே இந்த நிலைக்கு இட்டுச் சென்றன. களத்தில் நின்று கொலை செய்தவர்களுடன் திரைமறைவில் இதற்குக் காரணமாக இருந்து தூண்டியவர்களும் மக்கள் மன்றத்தில் நிறுத்தப்பட்டால் மட்டுமே முழுமையான நீதி கிடைத்ததாக எடுத்துக் கொள்ள முடியும்.

 

 

iramurugavel@gmail.com