அவர் இங்கிலாந்தின் முன்னாள் அரசர். ஆனால் இப்போது இங்கிலாந்து அரசக் குடும்பம் அவரை உள்ளே அனுமதிக்க மறுக்கிறது; ‘எந்த வேலையும் செய்யாமல் தண்டமாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்’ என அவரை விமர்சிக்கிறது. இந்தச் சூழலில் அவர் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் வருகிறார். “என்னைப் பற்றி அரசக் குடும்பத்திடம் நல்ல வார்த்தைகள் சொல்லி, கொஞ்சம் பணம் அதிகமாகக் கொடுக்கச் சொல்லுங்கள்” என வேண்டுகிறார். “இங்கிலாந்தின் முன்னாள் அரசர் என்னிடம் வந்து பிச்சைக் கேட்பதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் இதைப் பரிசீலிக்கிறேன்” என்கிறார்.

அவர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் இன்னொரு கோரிக்கையும் வைக்கிறார். “என்னுடைய மனைவிக்கு அரசக் குடும்பத்திற்குரிய ஹைனஸ் பட்டத்தை வழங்க வேண்டும்” எனக் கேட்கிறார். அது முடியாது என மறுக்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். “ஏன்? அவள் முன்னாள் அரசரின் மதிப்பிற்குரிய மனைவி இல்லையா?” என்கிறார். “அதற்கும் முன்னால், அவர் இரண்டு பேருக்கு மனைவியாக இருந்து விவாகரத்து பெற்றவர் இல்லையா? அவருடைய கணவர்களாக இருந்தவர்கள் எல்லாம் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்! அவர்மீது நீங்கள் கொண்ட காதல் எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிட்டன” என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். “அதுதான் காதல்! வின்ஸ்டன், காதல்! இந்த உலகத்தின் மிக உயர்ந்த பொருள்” என்கிறார் அவர்.

அவர்? இங்கிலாந்தின் அரசர் எட்டாம் எட்வர்ட். இங்கிலாந்து அரச வரலாற்றில் மிகக் குறைவான நாட்கள் அரசப் பதவியில் இருந்தவர் எட்டாம் எட்வர்ட். இங்கிலாந்து வரலாற்றில் மிக அதிகக் காலம் அரசப் பதவியில் இருந்தவர் இரண்டாம் எலிஸபெத். இந்த இரண்டு வரலாற்றையும் ஒரு பேனாதான் எழுதியிருக்கிறது. அதன் பெயர் காதல்!

எட்டாம் எட்வர்ட் இங்கிலாந்து அரசராகப் பதவியேற்று  ஒரு வருடம்கூட நிறைவாகவில்லை (1936). அப்போது வாலிஸ் சிம்சன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்யவிருக்கிறார்.  அவருடைய காதல் திருமணத்தை இங்கிலாந்து அரசச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் வாலிஸ் ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர்.  காதலா? அரசப் பதவியா? எதையாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறார் எட்வர்ட். அரசப் பதவியைத் துறந்து காதல்தான் முக்கியம் என்று முடிவெடுக்கிறார்! அவரையடுத்து, எட்வர்டின் தம்பி ஆறாம் ஜார்ஜ் அரசப் பதவியை ஏற்கிறார். அவரும் குறைந்த வயதில் கேன்ஸரால் இறந்துபோனபின்(1952). இரண்டாம் எலிஸபெத் இங்கிலாந்து மகாராணியாகிறார்.

Walter Bagehot 1867 இல் வரையறுத்த இங்கிலாந்து  அரசமைப்புச் சட்டத்தின்படி, திறமை, கண்ணியம் (efficient and the dignified) என்ற இரண்டு முக்கியமான கூறுகள் இங்கிலாந்தை வழிநடத்துகிறது. இங்கிலாந்து அரசர் கண்ணியத்திற்குரியவர். பிரதமர் திறமையை வெளிப்படுத்த வேண்டியவர். பிரதமர் நாட்டிற்குரிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியையும், அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியவரும் ஆவார். கண்ணியத்திற்குரிய அரசர்,  பிரதமர் வடிவமைத்த கொள்கைகளை ஏற்று சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லவேண்டியவராவார். இங்கிலாந்தின் இந்த இரண்டு தலைமைகள் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்து நாட்டை வழிநடத்த வேண்டும். ஒருவர் இன்னொருவரை முழுமையாக நம்ப வேண்டும்.

தி கிரௌன் என்ற வெப் சீரீஸின் திரைக்கதை இந்த முதுகெலும்பில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரீஸ் சொல்லுவது இங்கிலாந்து ராணியின் கதையில்லை. 71 ஆண்டுகள் ராணியாக வாழ்ந்தவரின் பார்வையில் இங்கிலாந்தின் வரலாற்றைச் சொல்வதும் இந்த சீரீஸின் நோக்கமில்லை. இங்கிலாந்தின் வரலாற்றில் ராணியும், ராணியின் காலத்தில் இங்கிலாந்தும் கொடுத்தது என்ன? எடுத்தது என்ன? என்பதைச் சுவையான சில சம்பவங்களின் வழியாகச் சொல்கிறார்கள். அதனால் ராணிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்குப் பிற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

 

மரியாதையும் அதிகாரமும்

இருபத்தாறு வயதில் இங்கிலாந்து மகாராணியாகிறார் எலிஸபெத். அப்போது நடந்த தேர்தலில் 82 வயது வின்ஸ்டன் சர்ச்சில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார். பதவியேற்கும்முன் எலிஸபெத் ராணியைச் சந்திக்க வருகிறார்.  சந்திக்க வந்தவர் நின்றுகொண்டே பேசுகிறார். வயதான முதியவர் நின்றுகொண்டே பேசுகிறாரே என நினைத்து, “உட்காருங்கள், உங்களுக்குத் தேனீர் அல்லது வேறேதாவது கொண்டுவரச் சொல்கிறேன்” என்கிறார் எலிஸபெத். “அய்யோ! ராணி உங்களுக்குச் சொல்லவில்லையா? இங்கிலாந்து முடியரசர் பிரதமருக்கு உபசாரம் செய்வதோ, நாற்காலிபோட்டு உட்கார வைப்பதோ கூடாது. உங்களுடைய முப்பாட்டி (விக்டோரியா மகாராணி) எல்லாம் எங்களைப் போன்ற பிரதமர்களைக் கவுன்சிலர்களைப் போலத்தான் நடத்துவார். நேரத்தை வீணடிப்பது பாவம்” என்கிறார்.

பிரதமரே ஆனாலும், ராணியைச் சந்திக்க சில நெறிமுறைகள் இருக்கின்றன. “மகாராணியைப் பார்க்கும்போது தலையைக் குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும். முதலில் அவரை Your Majesty என விளிக்க வேண்டும். பிறகு ”ma’am” என அழைக்க வேண்டும். அதனுடைய ஓசை ”ham” என்பதுபோல ஒலிக்க வேண்டும். மீண்டும் வெளியே செல்லும்போதும் Your Majesty எனச் சொல்லவேண்டும். அவர் உட்காருங்கள் எனச் சொல்லும்வரை உட்காரக்கூடாது. அவர் பேசும் முன்பு பேச்சைத் தொடங்கக் கூடாது. அவராகக் கைகளை நீட்டும் முன்பு அவரைத் தொடக்கூடாது. பேசி முடிந்ததும் அவர் மணியடிப்பார். உடனே வெளியேறிவிடக்கூடாது. போகும்முன்பு தலையைக் குனிந்து வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும்”

இவ்வளவு மதிப்புக்குரியவர் ராணி என்றால் அவர் இங்கிலாந்தைக் கட்டி ஆள்வார் என்று நினைப்போம் அல்லவா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வெறும் மரியாதை மட்டும்தான். மகாராணியைச் சட்ட விதிகளும், கிறித்தவக் கன்சர்வேடிவ் மதக் கொள்கைகளும், போதகர்களும்தான் வழிநடத்துவார்கள். அவராக எதுவும் செய்ய முடியாது; கூடாது. அவர் விரும்பியபடி திருமணம் செய்துவிட முடியாது; வெறுக்கும்போது விவகாரத்தும் செய்துவிட முடியாது; விரும்பும் பட்டப் பெயரைச் சூட்டிக்கொள்ளவும் முடியாது; விரும்பும் வீட்டில் தங்க முடியாது; விரும்பும் பெர்சனல் செகரிட்டரியைக்கூட வைத்துக்கொள்ள முடியாது. ஒரு முறை எலிஸபெத் மகாராணி வெறுத்துப்போய், “என் வாழ்க்கையில் ஒரே ஒரு முடிவையாவது நானாக எடுக்க முடியாதா?” என்று கேட்பார். அப்போதும் “முடியாது Your Majesty” எனப் பணிவோடு சொல்வார்கள்.

மகாராணி எலிஸபெத் மிகக் குறைவான வயதில் பட்டத்திற்கு வந்தவர். அவரிடம் 15 பிரதமர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், ஆண்டனி, வில்சன், ஹீத், மார்க்ரெட் தாட்சர் போன்ற திறமையான பிரதமர்களைச் சந்தித்திருக்கிறார். அவர்களோடு ராணி முரண்பட வேண்டியிருக்கிறது. எதையும் செய்துவிடமுடியாத அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்களை எப்படிச் சமாளித்தார் என்பதையும், எலிஸபெத்தின் கணவர் பிலிப், தங்கை மார்கரெட், மகன் சார்லஸ், மருமகள் டயானா ஆகியோர் தனிப்பட்ட வாழ்வில் தவறு செய்து சிக்கலைக் கொண்டுவரும்போது அதை எப்படி எதிர்கொண்டார் என்பதையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது தி கிரௌன் சீரீஸ்.

கடவுளுக்கு மட்டுமே பதில்சொல்லக் கடமைப்பட்ட அரசக் குடும்பமாக இருந்தாலும், அவர்களைப் பற்றிய ரகசியங்களை உள்ளது உள்ளவாறே சொல்ல முடியும் என்பதும், நடிகர்களா இல்லை அரசக் குடும்பத்து ஆட்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைக்க வைக்கும் நடிப்பும் இந்த சீரீஸின் கூடுதல் பலம்.

அழகான புதிர் போட்டு தொடங்கும் ஒவ்வொரு எபிசோடும், புதிரை அவிழ்த்து அற்புதமான கவிதைபோல் முடிகிறது. கவித்துவமான தி கிரௌன் சீரீஸின் சில சுவையான பகுதிகளை இங்கு சொல்கிறேன்.

 

எலிஸபெத்வின்ஸ்டன் சர்ச்சில்:

எலிஸபெத்துக்கும் பிலிப்புக்கும் திருமணம் நடக்கும்போது வெளியில் மக்களின் ஆரவாரச் சத்தம் கேட்கிறது.  திருமணச் சபை ஸ்தம்பித்து நிற்கிறது. மிகப் பெரிய ஆரவாரத்தோடு வருகிறார் வின்ஸ்டன் சர்ச்சில். ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களும் எழுந்து நின்று அவரை வரவேற்கிறார்கள். இதற்கும் அவர் எதிர்க்கட்சித் தலைவர்தான். பிரதமராக இருக்கும் அட்லியை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஹிட்லர் என்னும் அரக்கனை அடக்க வேண்டும் என்றால் நாமும் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்’ என்று சொல்கிற ஆற்றல் மிகுந்த தலைவர் சர்ச்சில். எலிஸபெத் ராணியானபின் அவரைத்தான் முதன்முதலில் எதிர்கொள்கிறார்.

சர்ச்சில் வலிமையான தலைவர்தான் ஆனால் திறமையான நிர்வாகி இல்லை. 1952-இல் லண்டனில் ஏற்பட்ட மிகப் பெரிய பனிமூட்ட நிகழ்வு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பனிமூட்டத்தால் ஏறத்தாழ 3500 முதல் 4000 பேர் இறந்துவிடுகின்றனர். ஆனாலும் பிரதமர் வின்ஸ்டன், ‘பனிமூட்டம், வறட்சி, பெருமழை என்பதெல்லாம் இயற்கையின் சீற்றங்கள் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்’ என்று கடந்து போகிறார். கடைசி நேரத்தில் பேருக்குச் சில அறிவிப்புகளை வெளியிடுகிறார். சர்ச்சில் வலதுசாரி கன்சர்வேடிவ் என்பதால், பத்திரிகைகள் எல்லாம் அவர் அறிவிப்புகளையே சாதனைபோல முதல் பக்கத்தில் போடுகின்றன. சர்ச்சிலின் அறிவிப்புகளை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று போற்றுகின்றன!

சர்ச்சிலின் அரசு உடல்நலமற்ற வயதானவர்களால் தள்ளாடுகிறது என்று பலர் விமர்சிக்கிறார்கள். ”சர்ச்சில் எதுவும் செய்யவில்லை” என எலிஸபெத் ராணி வருத்தப்படுகிறார். ஆனாலும், அவரால் ஒன்றும் செய்யமுடியாது என்பதுதானே எதார்த்தம். அதனால் சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் ஒரு முறை, சர்ச்சிலும் அவரால் நியமிக்கப்பட்ட வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனியும் உடல்நலமில்லாமல் இருக்கிறார்கள். உடல்நலக் குறைவின் காரணமாக ஆண்டனியால் சர்வதேசக் கூட்டத்திலும் கலந்துகொள்ள முடியாமல் போகிறது.  இதை எலிஸபெத்துக்குத் தெரியாமல் மூடி மறைக்கிறார்கள். எதிர்பாராத  ஒரு தருணத்தில் இந்தத் தகவல் ராணிக்குத் தெரியவருகிறது.

1867-இல் எழுதப்பட்ட  இங்கிலாந்து அரசமைப்புச் சட்டத்தின்படி அரசரும் பிரதமரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு செயல்படவேண்டும். நம்பிக்கையில்லாமல் செயல்பட்ட சர்ச்சிலை ஒரு பள்ளிச் சிறுவனைப்போல நிற்க வைத்துக் கேள்வி கேட்கிறார் எலிஸபெத். அவருடைய 56 வருட பொதுவாழ்க்கையில்  அப்படியொரு அவமானத்தைச் சம்பாதித்தது இல்லை. மக்களால் கொண்டாடப்பட்டாலும் வயதுமூப்பின் காரணமாகத் தோல்வியடைந்த தலைவராக இருக்கிறார். ‘No problem so complex, nor Crisis so grave that it cannot be satisfactorily resolved within 20 minutes’ என்ற கொள்கையைக் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில், ராணியைச் சந்தித்த அந்த 20 நிமிடத்தில்தான் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

சர்ச்சில் மூலம் எலிஸபெத்துக்கு இரண்டு முக்கியமான அனுபவங்கள் கிடைக்கின்றன. ஒன்று: ‘எதையும் செய்யாமல் இருப்பதுதான் இந்த உலகத்தில் கடினமான வேலை. நம்முடைய உடம்பில் இருக்கும் அத்தனை ஆற்றலையும் செலவு செய்துதான் அந்த வேலையைச் செய்யமுடியும். எதிரிகள் சூழ்ந்திருக்கும்போதும் செயல்படாமல் இருக்கும் நிதானம் இயற்கையாய் வராது. எல்லா மனிதர்களுக்கும் கிடைக்காது’ என்பதை இந்தக் காலகட்டத்தில் கற்றுக்கொள்கிறார். மற்றொன்று, சர்ச்சிலையே எதிர்கொண்ட பிறகு இனிவரும் எந்தத் தலைவரையும் ஒரு கை பார்க்கலாம் என்னும் தைரியதைப் பெற்றுக்கொள்கிறார்.

 

எலிஸபெத்பிலிப் :

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பின்-காலனியத்துவக் காலம் என்பது இங்கிலாந்து அரசக் குடும்பத்துக்கு மகிழ்ச்சியான காலம் இல்லை. உலகெங்கும் ஜனநாயகச் சிந்தனை வீறுகொண்டு எழுந்த அந்தக் காலத்தில்தான் எலிஸபெத்தின் முடியாட்சி ஆரம்பமாகியது. எகிப்து, பல்கேரியா, இத்தாலி, துனிசியா என அடுத்தடுத்து பல நாடுகள் முடியாட்சியைத் தூக்கி எறிந்து மக்களாட்சிக்கு மாறியிருந்தன.

காலனிய நாடுகளில் மட்டுமல்லாது, இங்கிலாந்துக்குள்ளேயே ராணிக்கு எதிராகச் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் எலிஸபெத் மிக நிதானமாக நடந்துகொள்ளவேண்டிய தேவை இருந்தது.

எலிஸபெத்தின், குடும்பத்திற்குள்ளும் பல சிக்கல்கள்கள் எழுகின்றன. எலிஸபெத்தின் கணவர் பிலிப் தன்னுடைய இடம் என்னவென்று தெரியாமல் தவிக்கிறார். மௌண்ட்பேட்டன் என்ற தன்னுடைய குடும்பப் பெயரை வைக்க முடியாமல் தவிக்கிறார்.. (இந்தியாவின் கடைசி வைசிராய் லார்ட் மௌண்ட்பேட்டனின் சகோதரி ஆலிஸின் மகன்தான் பிலிப்). அவருடைய பதவியைத் துறக்கிறார். வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுக்கிறார். ராணிக்கு அடுத்தது ராஜா என்றால், அவருக்கான அதிகாரம் ஏதாவது இருக்குமல்லவா? அது வெற்றிடமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் இப்படிக் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் பிலிப், வாழ்க்கையின் பிற்பகுதியில் அரச குடும்பத்தின் ஆக்ஸிஜன் ராணி எலிஸபெத்தான் என்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு தத்துவ சபையை ஆரம்பிக்கிறார். ராபின் உட் போன்றவர்கள் அதில் கலந்துகொள்கிறார்கள். 1969-இல் நீல் ஆம்ஸ்ட்ராங்க் குழுவினர் நிலாவில் காலடி வைக்கும் முக்கிய அறிவியல் நிகழ்வு நடக்கிறது.

இயல்பாகவே சாகசங்களில் ஆர்வம் கொண்ட பிலிப்புக்கு இந்த சம்பவம் மிகப் பெரிய உற்சாகம் தருகிறது. “What is there in thee, Moon! That thou should’st move my heart so potently?” என்ற கீட்ஸின் வரிகளை எடுத்துப் பேசுகிறார்கள். “நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கின் உணர்வு என்ன? அப்போது கடவுளின் படைப்பைப் பற்றி என்ன நினைத்தார்? கல்வி என்பது ஒரு பள்ளியிலோ கல்லூரியிலோ போய்ப் படிப்பதில்லை. அது உலகத்தைக் கடந்து உலகத்தைப் படிப்பது. அன்றாடம் மக்கள் செய்வதெல்லாம் செயல்கள் அல்ல? ஆம்ஸ்ட்ராங்க், காலின், ஆட்ரின் செய்தார்களே அதுதான் செயல்” என்று நினைக்கிறார் ஃபிலிப்.

ஆன்ஸ்ட்ராங்க் குழுவினர் இங்கிலாந்து வருகிறார்கள் என்றதும், பக்கிங்காம் பேலஸில் வைத்து அவர்களைத் தனியே சந்தித்துப்பேச நேரம் கேட்கிறார். 20 நிமிடங்கள் தருகிறார்கள். அந்தக் குறைவான நேரத்தில் கேட்பதற்குரிய கேள்விகளைத் தயார் செய்கிறார். அவர்களின் வருகையை எதிர்பார்த்து நிற்கிறார். அந்த தருணம் வருகிறது. மூன்று பேரும் அவர்முன் இருக்கிறார்கள்.

நிலவில் காலடி வைத்த தருணத்தில் என்ன நடந்தது, அந்தத் துகளில் கடவுள் தெரிந்தாரா இல்லையா? அந்த மௌனம் எப்படியானது? கனமாக இருந்ததா? சுகமாக இருந்ததா? எதுவுமற்ற வெளியை தரிசித்தபோது என்ன கேட்கமுடிந்தது? என நிறைய கேள்விகளைக் கேட்க நினைக்கிறார். ஆனால், அவர்கள் ஆரம்பத்தில் கேட்ட சில கேள்விகளுக்கே விளையாட்டுப் பிள்ளைகளைப்போல வெள்ளந்தியாகப் பதில் சொல்கிறார்கள். நிலாவில் காலடி வைத்தவர்கள் பக்கிங்காம் மாளிகையை அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள். இது பிலிப்புக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. 20 நிமிடத்திற்காகத் தயாரித்த கூட்டம் இரண்டு நிமிடத்தில் முடிந்துபோகிறது.

“நான் அவர்களிடம் பெரிதாக எதிர்பார்த்தேன்: அவர்களின்மூலம் கடவுளின் உண்மை தரிசனத்தை எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் வெறுமனே மூன்று இளைஞர்களாக இருந்தார்கள் அவ்வளவுதான். அவர்களிடம் கற்பனை துளியும் இல்லை. அவர்கள் சுயமற்றவர்களாக, சிந்தனையற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் பூமியிலிருந்து விண்வெளிவீரர்களாகப் போனார்களே தவிர மனிதர்களாகப் போகவில்லை” என ராபின் உட்டிடம் இந்த நிகழ்வு குறித்துப் பேசுகிறார்.

 

எலிஸபெத்மார்கரெட்

எலிஸபெத்தின் தங்கை மார்கரெட். இவரால் எலிஸபெத்துக்கு வரும் சிக்கல்கள் அதிகம். நாள் ஒன்றுக்கு அறுபது சிகரெட் பிடிக்கிறார். முதலில் பிரிட்டிஷ் ராயல் ஏர்ஃபோர்ஸ் கேப்டன் பீட்டர் டவுன்செண்ட் என்பவரைக் காதலிக்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் முடித்து விவாகரத்துப் பெற்றவர். அதனால் அந்தக் காதல் கைகூடவில்லை. அதையடுத்து டோனி என்னும் புகைப்படக் கலைஞரைக் காதலிக்கிறார். ஆனால் அவர் பல பெண்களோடு தொடர்புடையவர். இதைத் தெரிந்தும் அவரைத் திருமணம் செய்கிறார். அந்த வாழ்க்கை கூடிய விரைவிலேயே சிக்கலாகிறது. கடைசியாக வயதில் குறைந்த இளைஞனோடு உறவில் இருக்கிறார். அரசு விழாக்கள் என்றாலும் கெட்ட வார்த்தைகள் கலந்து ஜோக் அடித்துப் பேசுகிறார்.

”பொது இடங்களில் ஏன் இப்படிப் பேசுகிறாய்?” என எலிஸபெத் கடிந்துகொள்கிறார். “நானாவது அவர்களுக்குச் சில விசயங்களைக் கொடுக்கிறேன். நீ எதுவும் கொடுப்பதில்லை” என எலிஸபெத்தைக் கலாய்க்கிறாள். தங்கையைப் போல எலிஸபெத் வாழவும் முடியாது. பேசவும் முடியாது.  அக்காள் தங்கையாக இருந்தாலும் இரண்டுபேரும் இரண்டு துருவங்களாக வாழ்கிறார்கள்.

ஜான் கென்னடிக்குப் பிறகு அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜான்சன் வருகிறார். வியட்நாமோடு போர் செய்ததை இங்கிலாந்து ஆதரிக்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார் ஜான்சன். அப்போது இங்கிலாந்து கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கிறது. வீழ்ச்சியிலிருந்து மீள வேண்டுமென்றால் அமெரிக்காவிடமிருந்து நிதிவாங்க வேண்டும். ஜான்சனை சந்திக்க இங்கிலாந்து பிரதமர் வில்சன் அனுமதி கேட்கிறார். அவர் அனுமதிக்கவில்லை. இங்கிலாந்து ராணி அனுமதி கேட்கிறார். அவரையும் மறுக்கிறார் ஜான்சன். வேண்டுமென்றால் எலிஸபெத்தின் தங்கை மார்கரெட் ஜான்சனை சந்திக்கலாம் என அமெரிக்க அரசு கூறுகிறது.

மார்கரெட் அந்த நேரத்தில் அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஏற்கனவே  சீர்கெட்டு எரிந்துகொண்டிருக்கும் அமெரிக்க இங்கிலாந்து உறவில், மார்கரெட் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிவிடுவாரோ என எலிஸபெத்தும் பிரதமர் வில்சனும் பயப்படுகிறார்கள். யாருமே சந்திக்காமல் போவதைவிட யாரையாவது பேச்சுவார்த்தைக்கு அனுப்புவதே சிறப்பு. வேறு வழியில்லாமல் மார்கரெட்டை அனுப்புகிறார்கள்.

ஒரு மிகப் பெரிய விருந்தில், உச்சகட்ட போதையில் மார்கரெட் ஜான்சனை சந்திக்கிறார். தொடக்கத்திலேயே  அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் செக்ஸ் பிரச்சனையை முன்வைத்துதான் பேசத்தொடங்குகிறார். ஆரம்பத்தில் பார்ட்டியில் உள்ளோர் அதிர்ந்தாலும், மெல்ல இயல்பாகி, பாட்டு, கூத்து கும்பாளமாகப் போகிறது அந்த சந்திப்பு. அந்த சந்திப்பில் மார்கரெட் சொல்கிற செக்ஸ் ஜோக் உலகப் புகழ்பெற்றது. அந்த ஜோக் இதுதான்,

There was a young lady from Dallas

who used a dynamite stick as a phallus…

they found her vegina

in North Carolina

and her arsehole in Buckingham palace

ஜான்சனுடன் மார்கரெட் சந்தித்த அந்த நிகழ்வு வெற்றிகரமாக முடிகிறது. அமெரிக்கா கொடுத்த நிதியால் இங்கிலாந்து வீழ்ச்சியிலிருந்து மீள்கிறது. ஒருவேளை எலிஸபெத் சந்தித்திருந்தாலும் இது நடந்திருக்குமா என்பது சந்தேகமே! வரலாற்றில் நல்லவர்களே எல்லா சாதனைகளையும் நிகழ்த்தமுடியும் என்பதில்லையே!

 

 எலிஸபெத்யானா

முதல் இரண்டு சீசன்களில் வரும் ராணி நம்மை முழுமையாக ஆட்கொள்வார். மூன்றாவது சீசன் கொஞ்சம் டல்லாக இருக்கும். நான்காவது சீசனில் டயானா வந்தபிறகு தொலைக்காட்சியில் நெருப்புப் பற்றியதுபோல் பரபரவென காட்சிகள் ஓடும். டயானாவின் அழகு, டயானாவின் உணர்வு, டயானாவின் உலகம் எல்லாமே நம்மை வசப்படுத்திவிடும். பக்கிங்காம் மாளிகை என்பது வெறும்கூடுதான். டயானாதான் அதன் வண்ணம். அவள் சிரிக்கும்போது மாளிகை ஒளிவீசுகிறது. அவள் வருத்தப்படும்போது மாளிகை பொலிவிழந்து போகிறது.

டயானாவின் கதை இதுதான்:  சார்லஸ் கமில்லாவைக் காதலிக்கிறார். ஆனால் கமில்லா சார்லஸை விரும்பும் அதே நேரத்தில் ஆந்த்ரே பார்க்கரையும் காதலிக்கிறார்.  இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும்போது, சார்லஸை நிராகரித்துவிட்டு 1973-இல் பார்க்கரைத் திருமணம் செய்துகொள்கிறார் கமில்லா. இதனால் சார்லஸ் மனம் உடைந்து போகிறார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சார்லஸ் டயானாவைத் திருமணம் செய்யப்போகும்போது மறுபடியும் சார்லஸ் வாழ்க்கைக்குள் கமில்லா வருகிறார்.

சில நேரங்களில் காதலின் அர்த்தத்தை நம்மால் விளங்கிக்கொள்ளவே முடியாது. கமில்லாவைவிட அழகான, பொருத்தமான, இளமையான டயானா கிடைத்தபிறகும், இரக்கமில்லாமல் நிராகரித்துவிட்டுப்போன கமில்லாவை ஏன்தான் சார்லஸ் காதலிக்கிறார் எனத் தெரியாது. நமக்கே இவ்வளவு வருத்தம் இருந்தால் இங்கிலாந்து மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்.  அவர்கள் டயானாவைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் அதேநேரத்தில் கமில்லாவின் உருவத்தைக் கேலி செய்து கன்னாபின்னாவென்று திட்டுகிறார்கள். உருவக் கேலி செய்வது தவறுதான் என்றாலும், கமில்லாவும் சார்லஸும் டயானாவுக்குச் செய்யும் துரோகம் மிக அதிகம்.

பதிலுக்கு டயானா இங்கிலாந்து அரசக் குடும்பத்தைத் தெறிக்கவிடுகிறார். இது ஆரம்பம்தான், இன்னும்  என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பது இனிமேல் வரும் சீசனில்தான் தெரியவரும்.

வரலாறு என்பது மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். இங்கிலாந்து அரசியலமைப்பை போன்றதுதான் இந்திய அரசியலமைப்பும். அங்கு நடந்த காட்சிகள் எல்லாம் இந்தியாவிலும் நடப்பதைப் பார்க்கமுடியும். எட்டாம் எட்வர்ட் பதவியைப் பறிகொடுத்துத் தவித்ததுபோல நம் ஊரில் ஓ. பன்னீர்செல்வம் தவியாய்த் தவிக்கிறார்.

குடும்பத்தோடு வாழாதவர்களை இங்கிலாந்து மக்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ஒரு முறை அந்தத் தவறையும் செய்கிறார்கள். ஹீத்தைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் விளைவு நிலக்கரியில்லாமல் நாடே இருளில் மூழ்கியிருந்தபோது அவர் கவலையே இல்லாமல் பியானோ வாசித்துக்கொண்டிருக்கிறார்.  கொரோனா காலத்தில் தண்ணீர்கூட இல்லாமல் நடையாய் நடந்து சென்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் மயிலுக்கு உணவுகொடுத்து மாளிகையில் இருந்த நம் பிரதமரைப் போல…|

மந்திரிகள் பலரைப் பொம்மைகள்போலக் கருதி அடிக்கடி தூக்கி எறியும் மார்கரெட் தாட்சரை இரும்புப் பெண்மணி என்கிறார்கள். ஜெயலலிதாவையும் அப்படித்தானே அழைத்தார்கள்.

இப்படியான வெவ்வேறு குணம் கொண்ட அனைவரையும் கண்ணியத்தோடு கடந்து சென்றவர்தான் தி கிரௌன். வெகு சில நேரங்களில் மட்டுமே  உயர்ந்த பதவிக்கு மிகப் பொருத்தமானவர்கள் வருவார்கள். அவர்கள் திட்டமிட்டு அந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று வருவதில்லை.  காலம்தான் அதைத் தீர்மானிக்கிறது. எலிஸபெத் காலம் கொடுத்த கண்ணியத்திற்குரியவர். ”நான் மற்றவர்களுக்கு மௌனத்தைக் கொடுக்கிறேன். மௌனம் என்றால் எதுவும் அற்றது. சத்தம் இல்லாதது. அது வெற்றுக் காகிதம். அதில் அவர்கள் விரும்பியதை எழுதிக்கொள்ளலாம்”  என்று எலிஸபெத் சொல்கிறார். உண்மையில் கண்ணியம் என்பது அவர் கட்டிக்காத்த மௌனம்தான்!

 

 

 

sankarthirukkural@gmail.com