ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது இந்திய மனநிலை. அரசுப்பணியில் இருப்போருக்கு வேறு வழியில்லை. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பணிஓய்வு பெறும் வயது வரை அதைக் கட்டிக்கொண்டு போராடித்தான் ஆகவேண்டும். தனியார் நிறுவனங்களில், கடைகளில் வேலை பார்ப்போருக்கு அந்தக் கட்டாயம் இல்லை. எனினும், யாரும் அத்தனை எளிதில் பணி மாறுவதில்லை. துணிக்கடையில் வேலை பார்த்தோர்  அந்த வேலை போய் விட்டால்,  கொரியர் கம்பெனியில் சேர்வதில்லை. மற்றொரு துணிக்கடைக்குத் தான் செல்கிறார்கள். எத்தொழிலிலும் அனுபவம் அல்லது முன்னனுபவம் என்பது நம் மனநிலையில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.  ஆனால், எல்லாவற்றிலும்  – அதாவது எண்ணம், செயல் ஆகியவற்றில் – கட்டற்ற சுதந்திரம் உள்ள அமெரிக்கா போன்ற இடங்களில் இது இவ்வாறாக இல்லை. நினா மெக்லாஃப்லின் என்ற பெண்ணுக்குத் தனது பத்திரிகை அலுவலக உதவியாசிரியர் பணி பிடிக்காமல் போனபோது, தச்சு ஆசாரியாக வேலைக்குப் போகிறாள். அந்த வித்தியாசமான அனுபவங்களை Hammer Head என்று புத்தகமாக எழுதியிருக்கிறாள்.  படிக்கப் படிக்க வியப்பூட்டும் புத்தகம்.  என் பத்திரிகைத் தொழிலை விட இதில் வருமானம் குறைவு என்ற புலம்பலும் இல்லை, நான் நினைத்ததை விட தச்சுத் தொழிலில் அதிகம் சம்பாதித்தேன் என்ற பெருமையும் இல்லை என்பது மற்றொரு வியப்பு. உடல் உழைப்பு, புதிய தொழிலைக் கற்றது என்று அனுபவம் சார்ந்த பதிவாக மட்டுமே எழுதிச் சென்றிருக்கிறாள் நினா.

நம் நாட்டைப் போலன்றி, அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளிலும் வீட்டின் தளம், உட்பக்கச் சுவர்கள் எல்லாம் மரத்தாலானவை என்பதால் தச்சர்கள்தான் வீட்டின் பெரும்பகுதியைக் கட்டுபவர்களாக இருப்பார்கள். அங்கு கொத்தனாரின் பங்கு குறைவு. எனவே, தச்சர்களுக்கு  வேலை நிறைய கிடைக்கும். என் ஐம்பத்தியேழு வயது வாழ்க்கையில் ஒரு பெண்தச்சரைக் கூட பார்த்ததில்லையே என்ற வியப்போடு, சரி, அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் போலும் என்ற எண்ணத்தோடு தான் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், அங்கும் அப்படித்தானாம். அமெரிக்காவிலும் தச்சுவேலை ஆண்களின் வேலைதான்.  அங்கு தச்சுதான் பிரதானமான கட்டுமானப்பணியாக இருக்கிறது. அதில்  97.6 சதம் ஆண்கள்தான் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் வெறும் 2.4 சதம்தான்.  1972 வரை 0.5 சதம் மட்டுமே பெண்கள் என்று இருந்தது. 2009இல் 1.6 சதமாக உயர்ந்ததாம்.  2.4 என்பது 2011ன் புள்ளிவிபரம். அதே போல், உடலுழைப்பைக் கோரும் தச்சத் தொழிலில் மட்டும்தான் வியப்பூட்டும் விதமாக கறுப்பின மக்களின் பங்களிப்பு குறைவு. அமெரிக்கத் தச்சர்களில் 90.9 சதவிகிதத்தினர் வெள்ளையர்கள்.  பொதுவாக மற்ற தொழில்களில் ஆதிக்கம் செலுத்தும்   ஸ்பானிய மக்களும் இந்தத் தொழிலில் குறைவுதான். இன்றளவும் அமெரிக்காவில் தச்சுத் தொழில் மட்டும் தனது இனவெறியை, பாலின அசமத்துவத்தை அப்படியே காப்பாற்றிக் கொண்டு வருவது மிகப் பெரிய காலமுரண்.

தன் பத்திரிகைப் பணி பிடிக்காமல் போன நிலையில் நினா அந்த வேலையை உதறிவிட்டு, வேறு வேலை தேடுகிறார்.  உடலுழைப்பைக் கோரும் வேலையைச் செய்வது என்று முடிவு செய்கிறார். பொதுவாகவே அமெரிக்கப் பெண்கள் திடகாத்திரமாகத்தான் இருப்பார்கள். நினா சற்று கூடுதல் திடகாத்திரம். இணையத்தில் வேலை தேடும் போது, மேரி என்ற தச்சர் தனக்கு  உதவியாளர் வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்ததைப் பார்த்து விண்ணப்பிக்கிறார். இவரும் இரண்டு கட்ட வடிகட்டலுக்குப் பிறகு நினாவை உதவியாளராகச் சேர்த்துக் கொள்கிறார்.  கட்டற்ற சுதந்திர தேசத்தின் பெண் என்பதன் முழு வடிவம் இந்த மேரி. இவர் தன்பால் ஈர்ப்பாளர். ஒருபெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துபவர். அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆண் மூலம் பிறந்த குழந்தை ஒன்று உண்டு என்பதால், இயல்பாகவே மேரி கணவனாகவும், அந்தப் பெண் மனைவியாகவும் வாழ்கிறார்கள்.  வேலை முடிந்து மேரி வீடு சென்றதும், முகம் கழுவிக் கொண்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சோபாவில் உட்கார, மனைவியானவள் டீ போட்டுக் கொண்டுவரும் நம்மூர் காட்சி அன்றாடம் நடக்கிறது.

நினா பத்திரிகையாளர். எம் போன்றோர் அடிக்கடி சொல்வது போல் கருத்தால் உழைத்துக் கொண்டிருந்தவர். திடீரென கரத்தால் உழைக்க ஆரம்பிக்கும்போது அவருக்கு எல்லாமே புதிதாய் இருக்கிறது. எல்லாவற்றையும் புத்தகங்கள், வாசிப்பு மூலமாகவே அறிந்தவருக்கு, கண் நிதானத்தில் காலரைக்கால் அங்குலம் விட்டு மரத்தை அறுக்க வேண்டும் என்பது மாதிரியான வேலைகள் மிகவும் புதுமையாக, திகைப்பாக இருக்கிறது.  அரை நாள் உட்கார்ந்து கட்டுரை எழுதுபவர். எழுதி, எழுதி, திருத்தித் திருத்தி மீண்டும் மீண்டும் எழுதி அழித்து படைப்பை உருவாக்குபவர். பல முறை அளந்து பார்த்து விட்டு, ஒரே ஒரு முறைதான் மரத்தை அறுக்க முடியும் என்ற முதுமொழியை எத்தனையோ முறை படித்தவர்தான். ஆனால், தச்சுத் தொழிலில் பேக்ஸ்பேஸ் கிடையாது. Control + z கிடையாது. கேட்டுக் கேட்டு, பார்த்துப் பார்த்து மேரியிடம் திட்டு வாங்காமல் தொழிலைப் பழகுவது பெரிய சவாலாகத் தான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த சவாலில் வெல்லவும் செய்கிறார்.

இணையத்தில் தச்சுத் தொழில் சார்ந்து நிறைய படிக்கிறார். சுத்தியல் பற்றிப் படிக்கிறார். இவரது வீட்டிற்கு 90 மைலுக்கு வடக்கே, ஜுநோ என்ற இடத்தில் சுத்தியலுக்கான ஒரு தனி அருங்காட்சியகம் இருக்கிறது. 1973இல் ஆரம்பிக்கப்பட்டது. சுத்தியலின் வரலாறு, 1500க்கும் மேற்பட்ட விதவிதமான சுத்தியல்கள் எல்லாம் இருக்கின்றன. எல்லாம் பார்த்து வருகிறார். ஆனால், அப்படித்  தெரிந்து கொண்டவை எவையும் சுத்தியலை வைத்து ஒரு ஆணியை ஒழுங்காக அடிக்க உதவவில்லை. ஓங்கி அடித்தால், கையில் படுகிறது. ஆணி தெறித்து பறந்து சென்று விழுகிறது. வளைந்து போகிறது.   அளவுகளும் அவ்வாறே. அளவுகள் பற்றி ஏராளமாகப் படிக்கிறார். அடி என்றால் என்ன, கஜம் என்றால் என்ன? இரண்டு கை நீளத்திற்கு என்ன பெயர்?  நம் புராணங்களில் வரும் யோஜனை, க்ரோஸம் என்பது பற்றிக் கூடப் படிக்கிறார். ஒரு மாட்டு வண்டி ஒரு நாள் பொழுதில் கடக்கக் கூடிய தூரமே ஒரு யோஜனை. கிழட்டு மாடு, மேடுபள்ளமான சாலை என்றால் யோஜனை மாறுமே என்று யோசிக்கிறார். க்ரோஸம் என்றால் ஒரு பசு ம்மா என்று கத்தும் குரல் கேட்கும் தூரமாம்.  மாட்டுக்குத் தொண்டை கட்டியிருந்தால் ? காற்று எதிர் திசையில் வீசினால்?  ஸ்குரூடிரைவரின் வரலாறு பற்றி one good turn என்று ஒரு முழு புத்தகமே படிக்கிறார். ஸ்குரூடிரைவர் 1580 முதல் பயன்பாட்டில் இருக்கிறது என்ற தகவல், ஸ்குரூடிரைவரை மேரி போல் எளிதாக, வேகமாகப் பயன்படுத்த ஒரு போதும் நினாவிற்கு உதவவில்லை !

அளவுகள் முறைப்படுத்தப்பட்டது நெப்போலியன் காலத்தில் என்று அறிகிறார். பாரீஸ் வழியாக நிலநடுக்கோட்டிலிருந்து வடதுருவத்திற்குச் செல்லும் நேர் கோட்டின் பத்துலட்சத்தில் ஒரு பங்குதான் ஒரு மீட்டர் என்கிறார் நெப்போலியன் காலத்து விஞ்ஞானி ஒருவர். ஒரு மீட்டர் மரத்தை வெட்ட நிலநடுக் கோட்டிலிருந்து வடதுருவம் பயணிக்க வேண்டுமா? வேண்டாம் என்றால் அதைவிட சுலபமான வழி இருக்கிறது. காற்றில்லாத வெற்றிடத்தில் ஒரு விநாடியின் 1/ 299785588 பாக நேரத்தில் ஒளி கடக்கக் கூடிய தூரம்தான் ஒரு மீட்டர் என்று வைத்துக் கொள் என்கிறார் மற்றொரு விஞ்ஞானி.  மேரி போன்ற அனுபவப் பள்ளி ஆசான்கள் இவை எதுவும் தெரியாமல் டக்டக்கென்று அளக்கிறார்கள். கண் நிதானத்தில் அளந்து வெட்டுகிறார்கள். படிப்பிற்கும் அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டை அனுபவபூர்வமாக உணர்கிறார் நினா.

மேரிக்குப் பொதுவாக படுக்கையறை, சமையலறை ஆகியவற்றைப் பிரித்து, தயார் செய்யும் வேலைதான் நிறைய வருகிறது. மத்திய காலகட்டத்தில் வீடுகளில் இப்படிப்பட்ட அறைகளே கிடையாது. எல்லோரும் பாதுகாப்பிற்காகவும், கதகதப்பிற்காகவும் ஒரே அறையில் வசித்த காலமது.  நாகரீகம் வளர வளர, அக்கம்பக்கத்தினர், விலங்குகள், பூச்சிகள், குளிர் ஆகியவை உள்ளே வராமலும், வெப்பமும், குடும்ப ரகசியங்களும் வெளியே செல்லாமலும் தடுக்கவே அறைகள் உருவானதாக நினாவின் படிப்பு சொல்கிறது. அவற்றை மரப்பலகைகள், சட்டங்களை வைத்து உருவாக்க மேரி சொல்லித் தருகிறாள்.  நல்ல உடல் பலம் உள்ளவள்தான் நினா என்றாலும், அந்த பலத்தை வைத்து நாள் முழுவதும் உழைப்பது கடினமாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் டைல்ஸ் பெட்டிகளை மூன்றாவது மாடிக்கு ஏற்றும் வேலை.  ஒவ்வொரு மாடிக்கும் முப்பது படிகள். அன்று மட்டும் கிட்டத்தட்ட அரை டன் எடை உள்ள டைல்ஸ்களை மூன்று மாடிகள் ஏறி இறங்கி ஏற்றியிருக்கிறாள் நினா. உடல் உழைப்பு என்றால் என்னவென்று புரிகிறது.   பத்திரிகை  அச்சுக்குப் போகும் கெடு முடிவடைய சில நிமிடங்களுக்கு முன்னால், ஒரு நீண்ட புத்தக மதிப்புரையை எழுதி முடிக்கும் திருப்திக்கும், இதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. கட்டுரையை எழுதி முடித்த மறுகணமே அதை முடித்த  மகிழ்ச்சி வடிந்து போய், அதிலுள்ள பிழைகளும், கருத்து முரண்களும்தான் பெரிதாய்த் தெரியும். ஆனால், டைல்ஸ் பெட்டிகளை ஏற்றி முடித்ததும் முழுத் திருப்தி. கூடுதலாக நாளுக்கு நாள் கைகளும், தொடைகளும், மார்புகளும் இதுவரை இல்லாத திண்மையை, வடிவத்தைப் பெறுகின்றன.

சமையலறை, படுக்கையறை வேலைகள் பலவும் ஏற்கனவே ஆட்கள் வசிக்கும் வீடுகளில்தான் நடக்கின்றன. மரமாத்து வேலைகள், மாற்றியமைத்தல் என்பதான வேலைகள் தான் நிறைய வருகின்றன.  தச்சுத் தொழில் சகமனிதர்களின் வாழ்க்கையை வெளியிலிருந்து பார்க்கும் தொழிலாக இல்லை. அவர்கள் வீட்டிலேயே, அவர்கள் வசிக்கும்போதே, ரியல்டைமில் அருகிலிருந்து பார்க்க முடிவதான ஒரு தொழிலாக இருக்கிறது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? காபி எந்த விதமாகப் போடுகிறார்கள்? சுவரில் என்ன மாதிரியான படங்களை மாட்டியிருக்கிறார்கள்? அவர்களது புத்தக அலமாரிகளில் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன? ஏன் ஒரு செய்தித்தாளில் வந்திருக்கும் அஞ்சலிக் குறிப்பைக் கத்தரித்து வைத்திருக்கிறார்கள்? சுவரில் எழுதி வைத்திருக்கும் கைபேசி எண் யாருடையது? அந்த வீட்டுப் பெண் உருளைக்கிழங்கை உரிப்பது,  பல் தேய்ப்பது, இரண்டு கைகளையும் தூக்கி  டீஷர்ட்டை அவிழ்ப்பது எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது.  இவை எதையும் கவனிக்கக் கூடாது என்று மேரி சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.ஆனால், நினாவிற்குள் இருக்கும் எழுத்தாளினி அவற்றைக் கவனித்துக் கொண்டே இருக்கிறாள்.

புத்தகம் முழுவதும் எழுத்துத் தொழிலுக்கும், தச்சுத் தொழிலுக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை சொல்லிக் கொண்டே செல்கிறார் நினா. தச்சுத் தொழிலைக் கண்டுபிடித்தது யார் என்று பிளைனி சொன்னதை மேற்கோள் காட்டுவார். ரம்பம் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஓவிட் சொல்வது ஓரிடத்தில் வரும்.  “கடைசியில் இலக்கியம் என்பது தச்சுத் தொழில்தான்… இரண்டிற்குமே கடின உழைப்பு தேவை.. இரண்டிலுமே நீங்கள் மரம் போன்ற ஒரு கடினமான ஒன்றை , ஒரு யதார்த்தத்தை வைத்துத்தான் வேலையை ஆரம்பிக்கிறீர்கள்,” என்று கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் சொன்னதை மேற்கோள் காட்டுவார்.  அதோடு கூடவே மார்க்வெஸ் தச்சுத் தொழில் செய்ததில்லை. சொற்கள் மாறக்கூடியவை. ஒரு மரத்துண்டு அப்படியல்ல என்று சேர்த்தும் சொல்வார்.

நினா இப்போது சொந்தமாக காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்கிறார். மேரி அழைக்கும் போது அவருக்கு உதவியாளராகவும் செல்கிறார். தொழில் கற்கும் காலத்தில், “முயற்சி செய். தோல்வியடை. மீண்டும் முயற்சி செய். முன்பை விட சற்று மேம்பட்ட தோல்வியை அடை,” என்ற சாமுவெல் பெக்கெட்டின் வார்த்தைகளை மனதில் கொண்டே முயற்சி செய்து தொழில் கற்றார். தொழில் கற்கும் போது மேரி ஒரு முறை, “தச்சுத் தொழிலில் முக்கியமான விஷயமே தவறுகளை எப்படி சரி செய்வது என்பதுதான்.  ஏதேனும் ஒன்று தவறாகி விட்டால், அதை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொண்டால், பாதி தொழிலைத் தெரிந்து கொண்டதாக அர்த்தம்,“ என்பாள்.

அந்த அறிவுரை எல்லாத் தொழில்களுக்கும்தான் என்று நான் புரிந்து கொண்டேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Hammer Head by Nina Maclaughlin.

 

subbarao7@gmail.com