கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பருவ நிலை காய்ச்சல் என சொல்லக்கூடிய இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த மாதம் நாளொன்றுக்குப் பத்து பதினைந்து என்ற அளவில் இருந்த இந்த காய்ச்சல் செப்டம்பர் முதல் வாரம் முதல் நாளொன்றிற்கு 1500 பேர் பாதிக்கப்படும் அளவிற்கு அதிகரித்துள்ள, மகாராஷ்டிராவில் இதுவரை 50 க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள், கேரளாவில் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள் எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த சில வாரங்களாக மிக அதிக அளவில் இந்தக் காய்ச்சல் பரவி வருகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் ஐந்தில் இருந்து பத்து குழந்தைகள் வரை விடுமுறையில் இருக்கிறார்கள் என ஆசிரியர்கள் சொல்கிறார்கள், குழந்தை
கள் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். “செப்டம்பர் மாதம் முதல் அதிகளவு
ஃப்ளூ பரவுவது இயல்பு தான் என்றாலும் இந்த ஆண்டு எண்ணிக்கையும் அதிகமாகயிருக்கிறது, நோயின் தீவிரமும் அதிகமாக இருக்கிறது” என தனியார் மருத்துவமனையில் உள்ள குழந்தை நல மருத்துவர் ஒருவர் சொன்னார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையின் உள் நோயாளி பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, இறப்பும் கூட கடந்த சில நாட்களில் அதிகம்தான் என்றார் பொது மருத்துவர் ஒருவர். எங்கே பார்த்தாலும் காய்ச்சல், வீட்டிற்கு ஒருவராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதையும் நாம் கடந்த சில நாட்களாக நேரடியாகப் பார்க்கிறோம். கொரோனாவா, டெங்குவா அல்லது வழக்கமாக வரும் பருவகாலக் காய்ச்சலா எனத் தெரியாமல் மக்கள் அவர்களாகவே காய்ச்சல் மருந்தை எடுத்துக்கொண்டு அலட்சியம் காட்டுகிறார்கள்.

அச்சப்படும் அளவிற்கு இல்லையென்றாலும் இந்தக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மருத்துவமனைகளுக்கு சில வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுப்பியிருக்கிறதாகச் சொல்கிறார். குழந்தை மருத்துவமனைகள் முன்னேற்பாடாகவும், தெளிவான சிகிச்சை வழி முறைகளையுடன் இருப்பதாகவும் அதனால் கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் சொல்கிறார். புதுச்சேரி, காரைக்காலில் செப்டம்பர் 25 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாட்டிலும் அதிகரித்து வரும் இந்தக் காய்ச்சலைக் கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். “குழந்தைகளின் உடல் நலத்தில் விளையாடாமல் உடனடியாகப் பள்ளிகளை மூட வேண்டுமென”மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறார். உண்மையில் என்ன நடக்கிறது? திரும்பவும் ஒரு வைரஸ் நோய் பரவுகிறதா? கொரோனாவை விட அது தீவிரமானதா? என்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன.

உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் மாதமே இது தொடர்பான எச்சரிக்கையையும், வழிகாட்டுதல்களையும் அனுப்பியிருந்தது. ஆனால் வழக்கம் போல அவற்றை யாரும் கவனம் கொள்ளவில்லை. பருவகால காய்ச்சல் என்பது வெப்ப மண்டலங்களில் இயல்பானது என்
றாலும் இந்த வருடம் ஏன் இது அதிகமாக இருக்கிறது? இன்னும் கோவிட் வைரஸிலிருந்தே முழுமையாக மீண்டு வராத நிலையில் அதிகரிக்கும் இந்தக் காய்ச்சல் திரும்பவும் நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்குமா என்ற அச்சம் மக்களிடம் வந்திருக்கிறது. இந்த சூழலில் ஃப்ளூ காய்ச்சல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? கோவிட் தொற்றிற்கும் இதற்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன? இதன் வீரியம் என்ன என்பதை பற்றியெல்லாம் நாம் இங்கே பார்ப்போம்.

ஃப்ளூ காய்ச்சல் என்றால் என்ன?

பொதுவாகவே மழைகாலத்தில் சில குறிப்பிட்ட வைரஸ் தொற்றுகள் பரவுவது என்பது இயல்பானது. இப்படி பரவும் இந்த வைரஸ் இன்ஃப்ளுயன்சா வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இந்த இன்ஃப்ளுயன்சா குடும்பத்தில் A, B, C, D மொத்தம் நான்கு வகையான பிரிவு இருக்கின்றன. இதில் இன்ஃப்ளுயன்சா A வகை பிரிவே இந்தியாவில் அதிகமானதாக இருக்கிறது. இந்தப் பிரிவு தான் H1N1 என்னும் ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சலுக்கு காரணம். உலக சுகாதார நிறுவனத்தின் படி உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் 2லிருந்து 5 மில்லியன் மக்கள் வரை இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள், மேலும் வருடத்திற்கு மூன்று லட்சத்தில் இருந்து 6 லட்சம் மக்கள் வரை இந்தக் காய்ச்சலுக்கு பலியாகிறார்கள் என்கிறது.

பெரும்பாலும் இந்த தொற்று தீவிரமற்றது, மிதமானதாகவே இருக்கிறது. சில நாட்கள் காய்ச்சல், சளி, இருமலில் முழுவதும் சரியாகக்கூடிய அளவில்தான் இதன் தன்மை இருக்கிறது, ஆனால் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்படும் போது இதன் தீவிரம் அதிகமாகி இறப்பு வரை செல்லலாம்.

யாருக்கெல்லாம் இதன் தீவிரம் அதிகமாகும்?

  •  நீரிழிவு நோய், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், நாள்பட்ட நோய்கள், புற்று நோய் போன்ற பிற இணை நோய்கள் உடையவர்களுக்கு இந்த தொற்று தீவிரமானதாக இருக்கும்.
  • முதியவர்களுக்கும் இதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.
  •  நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் தீவிரமானதாக வெளிப்படும்.
  •  குழந்தைகள், குறிப்பாக இணை நோய் உள்ள குழந்தைகள், ஐந்து வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த நோயின் தன்மையைத் தொடந்து கண்காணிக்க வேண்டும்.
  •  கர்ப்பிணிகளுக்கும் இந்த நோய் உடனடியாகத் தீவிர நிலையை அடையும்.

நோய் அறிகுறிகள்

சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, சோர்வு, தொண்டை வலி, கண்ணெரிச்சல், மூட்டு வலி போன்
றவை சில நாட்கள் இருக்கலாம். சில நேரங்களில் இருமல் மட்டும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரையிலும் இருக்கலாம். நோய் தீவிரமடையும் போது நீடித்த காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்படும். சில நேரங்களில் காய்ச்சல் அதிகமாகி சுய நினைவைக் கூட இழக்கலாம், நோய் தீவிர நிலைக்குச் செல்லும் போது உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் இறப்பும் கூட ஏற்படலாம்.

எப்படிப் பரவுகிறது?

பெரும்பாலான வைரஸ் தொற்றைப் போலவே இந்த வைரஸும் இருமல், தும்மலின் போது வெளிப்படும் நீர்த்திவலைகள் வழியாகவே பரவுகிறது. அதனால் மாஸ்க் அணிவதும், பொது இடங்களைத் தவிர்ப்பதும், அடிக்கடி கைகழுவதும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும் இந்த தொற்றிற்கும் தடுப்பு முறையாக அறிவுறுத்தப்படுகிறது. நோய்க்கிருமி ஒருவரிடம் பரவிய இரண்டு நாள்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும்.

என்ன சிக்கல்?

ஒவ்வொரு பருவ காலத்திலும் இந்த ஃப்ளூ காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் இந்தியாவில் இயல்பானதுதான் என்றாலும் இந்த முறை இதை அணுகுவதில் உள்ள முக்கியமான சிக்கல் இந்தத் தொற்றையும், கோவிட் தொற்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் இருப்பது தான். “நிறைய நேரங்களில் ஃப்ளூ அறிகுறிகளுடன் வருபவர்களை சோதனை செய்யும் போது கொரோனா இருப்பது தெரிய வருகிறது, அதனால் கொரோனாவிற்கான சிகிச்சை கிடைப்பதில் தாமதமாகிறது” என்கிறார் தெரிந்த அவசர சிகிச்சை மருத்துவர். கொரோனாவின் அறிகுறிகளும், இந்த தொற்றின் அறிகுறிகளும் வித்தியாசங்கள் எதுவுமின்றி இருப்பதே காரணம். சுவை இழப்பு, நறுமணம் இழப்பு, வேகமாக ஆக்சிஜன் குறைவது போன்றவைகளே வேறுபாடுகள் என்றாலும் இவை அனைத்து நோயாளிகளுக்கும் இருப்பதில்லை. அதனால் நோய் தொற்றுடைய ஒருவர் அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிப்பதே ஒரே வழி. அதனால் எந்தக் காய்ச்சலையும் இந்த சூழலில் அலட்சியப்படுத்தக்கூடாது, அதனால் தான் தமிழக அரசு மருந்தகங்கள் தன்னிச்சையாக காய்ச்சல் மருந்தை இந்தக் காலத்தில் கொடுக்கக் கூடாது என்ற விதிமுறையை விதித்திருக்கிறது.

சிகிச்சை முறைகள்

மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள் பரிசோதனை செய்து உறுதி செய்துகொண்ட பின்பு, வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. தமிழக அரசின் சமீபத்திய வழிகாட்டுதலில் மிதமான அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் ஃப்ளூ காய்ச்சலுக்கான ‘ஆண்டி வைரல்’ மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறது. அதனால் மிதமான அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைத் தொடர்பு கொண்டு அவரின் அறிவுரையின்படி மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம். குழந்தைகளைப் பொறுத்தவரை நோய் அறிகுறிகள் கொண்ட குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பாமல் விரைவாக சிகிச்சையை வீட்டிலேயே ஆரம்பிக்கலாம். நோய் அறிகுறிகள் தீவிரமாக இருந்தாலோ அல்லது தொடர்ச்சியாக இருந்தாலோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிப்பது அவசியமானது. இந்த முறை மிக அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாலும், குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிக எளிதாகப் பரவிவிடுவதாலும் குழந்தைகளின் தொற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

தடுப்பு முறைகள்

  •  கோவிட் பெருந்தொற்றில் நாம் பின்பற்றி வந்த அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
  •  மாஸ்க் அணியாமல் வெளியே செல்லக்கூடாது.
  •  பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
  •  சுகாதாரமான தனிமனித நடவடிக்கைகளான கைகழுவதுல், பொது இடங்களை அசுத்தபடுத்தாதிருத்தல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
  •  நோய் அறிகுறிகள் உடையவர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  •  நோய் அறிகுறிகள் உடையவர்கள் முதியவர்களையும், கர்ப்பிணிகளையும், தீவிர நோய் உடையவர்களையும் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  •  குழந்தைகளுக்கும், இணை நோய் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை மருத்துவர்களிடம் பேசி முடிவு செய்யலாம்.

ஏன் இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது?

“கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஃப்ளூ காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருக்கும், அதனால் அனைத்து நாடுகளும் தேவையான முன்னேற்பாடுகளை இப்பொழுதே எடுக்க வேண்டும்” என ஜூன் மாதத்திலேயே உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்திருந்தது.

இரண்டு விஷயங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு இந்தத் தொற்று தீவிரமாகும் என உலக சுகாதார நிறுவனம் கணித்தது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த காரணத்தினாலும், ஊரடங்கு பெரும்பாலான இடங்களில் அமலில் இருந்த காரணத்தினாலும், பள்ளிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினாலும் ஃப்ளூ காய்ச்சலின் பரவலும் இல்லாமல் இருந்தது.

இரண்டு ஆண்டுகளாக ஃப்ளூ காய்ச்சல் பரவ முடியாத சூழல் இருந்த காரணத்தினால் பெரும்பாலான
வர்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருந்தார்கள், அதனால் இந்த இன்ஃப்ளுயன்சா வைரஸிற்கு எதிரான நோயெதிர்ப்பாற்றலும் யாரிடமும் இல்லாமல் இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த வைரஸ் பரவும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதற்குண்டான நோயெதிர்ப்பு சக்தி உடலில் தோன்றி விடும், அதனால் அடுத்த முறை இந்த தொற்றுக்கு ஆளாகும் போது நோயெதிர்ப்பு சக்தி இருப்பதால் நோய் தீவிரமடையாமல் மறைந்து விடும். ஆனால் கடந்த இரண்டாண்டுகள் இந்த வைரஸ் யாரையும் தாக்காத காரணத்தினால் அந்த நோயெதிர்ப்பு சக்தியும் உடலில் ஏற்படவில்லை. அதனால் தான் கோவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதும், பள்ளிகளை திறந்ததும் முந்தைய ஆண்டுகளைவிட மிக வேகமாகவும், தீவிரமாகவும் நோய் பரவத்தொடங்கியிருக்கிறது.

தொற்று நோய்களில் இருந்து நிரந்தரமாக மீள்வதற்கான வழி என்ன?

கொரோனா பெருந்தொற்று வருவதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பாக, உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது, அதன்படி “நவீன அறிவியலின் வளர்ச்சியால் நாம் தொற்று நோய்களைப் பெருமளவு கட்டுப்படுத்தி விட்டோம், பெரியம்மை, சின்னம்மை, போலியோ போன்ற பெரும் நோய்களை எல்லாம் தடுப்பூசியின் விளைவாக நாம் வெற்றிகொண்டு விட்டோம், அதனால் இனி வரும் காலங்களில் நாம் தொற்று நோய்களைப் பற்றிக் கவலைப்படாமல் நமது கவனத்தை தொற்றா நோய்களை (Non Communicable Diseases) தடுப்பதில் திருப்ப வேண்டும். தொற்று நோய்களை விட அதிகமான மக்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றா நோய்களினாலே இறக்கிறார்கள், மேலும் அதனால் ஏற்படும் நிதியிழப்பு தான் அதிகமாக இருக்கிறது, எனவே உலக நாடுகள் இந்தத் தொற்றா நோய்களைத் தடுப்பதில் தங்களது நிதியை செலவிட வேண்டும்” என்றது. இந்த அறிக்கை வெளிவந்த அடுத்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் வந்தது. இப்போது நாம் திரும்பவும் தொற்று நோய்களைத் தடுப்பதை பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டோம்.

தொற்று நோய்களில் மிக முதன்மையானது வைரஸ்களே! வைரஸின் மிக முக்கியமான பண்பு “மாற்றமடைவது”. தனது மரபணுவை வைரஸ்கள் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டேயிருப்பதால் புதுப்புது வைரஸ்கள் தோன்றுவதை நம்மால் ஓரளவிற்கு மேல் தடுக்க முடியாது. மேலும் வைரஸின் இந்த உருமாறும் திறன் தடுப்பூசியையும் மதிப்பிழக்கச் செய்கிறது. அதனால் தொற்று நோய்களுக்கு எதிராக நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று எப்போது சொன்னாலும் அடுத்த சில கணங்களில் ஒரு புதிய வைரஸ் வந்து கதவிற்குப் பின்னால் நிற்கிறது.
தொற்றா நோய்களைத் தடுப்பதில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுவதற்கு முக்கியமான காரணம், அது தனி மனித வாழ்க்கை முறையைச் சார்ந்திருப்பதே, தனி மனிதன் தனது வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் அந்த நோய்க
ளின் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும். உதாரணத்திற்கு ரத்த அழுத்தத்தை தடுக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் வேண்டும், தினமும் உடற்பயிற்சி, நல்ல தூக்கம், போதைப் பொருட்கள் பழக்கம் இல்லாமை போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும், அதனால் அதைத் தடுக்க வேண்டிய முழு பொறுப்பும் தனி நபரிடம் வந்து விடுகிறது. அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதுமானது. அதுவே தொற்று நோயைத் தடுக்கும் பொறுப்பு பெரும்பாலும் அரசாங்கத்திடம் இருக்கிறது, சுகாதாரமான வாழிடம், குடிநீர், கொசுக்கள் அழிப்பு, கழிவு நீர் மேலாண்மை, தடுப்பூசிகள் உற்பத்தி என அத்தனை பொறுப்பும் அரசாங்கத்திடம் இருக்கிறது. தனி நபர்கள் கைகழுவுவது, சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, பொது இடத்தை அசுத்தமாக்காமல் இருப்பது என சுகாதார நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டால் போதும். ஆனால் பெரிய பணி என்பது அரசாங்கத்திற்கே! அதனால்தான் தொற்று நோயை வென்று விட்டோம் என மிக சீக்கிரமாக அவர்கள் அறிவித்துக்கொள்கிறார்கள்.

நீண்ட கால நோக்கில் தொற்று நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?:

நிறைய வைரஸ் சோதனை மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு மாநிலத்திலும் அதி சிறந்த பிரத்தியேக வைரஸ் பரிசோதனை மையங்களை உருவாக்கி அதில் நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதன் வழியாக வைரஸ்களை இன்னும் புரிந்து கொள்ள முடியும். தொற்று நோய்க்கென சிறப்பு மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும், அதில் நவீன சிகிச்சை முறைகளைக் கொண்டு வர வேண்டும். பருவகாலத்திற்கு முன்பே தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளின் கட்டமைப்பு, போதுமான மருந்துகள் போன்றவைகளையெல்லாம் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கென சில வழிகாட்டுதல்களை முன்கூட்டியே கொடுக்க வேண்டும், காய்ச்சல் உள்ள மாணவர்களைக் கண்டறிவது, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது போன்றவற்றை பள்ளிகள் வழியாக ஒருங்கிணைக்க வேண்டும். பள்ளி விடுமுறைகள் தொடர்பாக முடிவெடுக்க மருத்துவர்கள் அடங்கிய அடங்கிய குழு அமைக்க வேண்டும்.

தடுப்பூசிகள் மீதுள்ள எதிமறையான எண்ணங்களைக் களைந்து, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இணை நோயுள்ளவர்களையும், முதியவர்களையும் தனிமைப்படுத்துவதெற்கென சமூக அளவில் தனி இடங்களை அமைக்க வேண்டும். அதில் அவர்களைக் கண்காணிப்பதற்கான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். தொற்று நோய் வந்தவர்களுக்கான பொருளாதார தேவைகளையும், தேவையான விடுமுறை கிடைப்பதையும் உறுதி செய்ய அரசாங்க சில நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

தனிபர்கள் சுகாதார நடவடிக்கைகளை வாழ்க்கை முறைகளாகக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல சமூகம் என்பது அது சுகாதார நடவடிக்கைகளில் எத்தனை உறுதியாக இருக்கிறது என்பதைப் பொறுத்ததே! ஜப்பானில் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் உறுதியாக சுகாதார நடவடிக்கைகளைப் பின் தொடர்கிறார்கள். அதே போல நாமும் சுகாதார நடவடிக்கைகளை நம்முடைய வாழ்க்கை முறை
யாக்க் கொண்டு அதைப் பெரிய இயக்கமாக மாற்ற வேண்டும்.

தொற்று நோய்களைத் தடுப்பது என்பது வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகளையும்,மருந்துகளையும் கண்டறிவதோடு நிறைவடையாது, அரசாங்கமும், தனி நபர்களும் எந்த அளவிற்கு சுகாதாரத்திற்கும், நலமான வாழ்க்கை முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு நாம் பெருந்தொற்றுகளிலிருந்து விடுபட முடியும்.

sivabalanela@gmail.com