அந்த நாளில் இந்திய சுதந்திரம் என்பது ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு எதிர்பார்ப்பையும்,கனவையும் கொடுத்திருக்க வேண்டும். பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களுடைய பொருளாதார முன்னேற்றம் கண்டிப்பாக மேம்படும் என்று கனவு கண்டிருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி கருத்துச் சுதந்திரம், பண்பாட்டு சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என பல்வகை சுதந்திரத்திற்கான வேட்கையை இந்திய சுதந்திரப் போராட்டம் நோக்கங்களாக கொண்டிருந்தது.

“நான் கற்பனை செய்து வைத்திருந்த ஜனநாயகத்தில் எல்லோருக்கும் சம அளவிலான சுதந்திரம் இருக்கும். எல்லோருமே அவரவர் எஜமானராக இருப்பார்கள். அதுபோன்றதொரு ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் கலந்து கொள்ளத்தான் உங்களுக்கு இன்று அழைப்பு விடுக்கின்றேன். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை மறந்து விட்டு சுதந்திரத்திற்கான பொதுவான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களாக மட்டுமே உங்களை எண்ணிக் கொள்ளூங்கள். நாடு முழு விடுதலை அடையும்வரை நாம் அமைதி அடையக் கூடாது. செய்வோம் அல்லது செத்து மடிவோம்” என்றார் மகாத்மா காந்தி.

இந்த அறைகூவல் நாட்டையே வீறு கொண்டு எழ வைத்தது. விளைவு, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சில ஆண்டுகள் சிறையிலடைக்கப் பட்டனர். துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். 57 பட்டாலியன் ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். சுமார் 600 சுற்று துப்பாக்கி பிரயோகம் செய்தனராம்.

18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஸ்தூரிபாய் 1944 பிப்ரவரி 22 உயிர் நீத்தார். ஆயிரக்கணக்கானோர் தியாகம் செய்து நிகழ்த்திய அற்புதம் அது.

ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சியில் செங்கோல் கை மாறி கை மாறி சுதந்திரப் போரட்டக் காலத்தில் பம்மியிருந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது ஈனஸ்வரத்தில் முழங்கிய குரல்கள் இப்போது சுதந்திரம் பற்றி சிம்ம கர்ஜனை செய்கின்றன.

“இங்கு அன்று போன்றதொரு ஒற்றுமை உணர்வு தேவை. செய் அல்லது செத்து மடி என்றார் காந்தி. என்றும் செய்வோம், செய்துகொண்டே இருப்போம் இதுவே என் அழைப்பு” என்று அறை கூவல் விடுத்துள்ளார் பிரதமர் மோடி அவர்கள். ஆக மொத்தத்தில் செஞ்சிடுவோம் என்பதே குறிக்கோள். செய்து கொண்டும் இருக்கிறார்கள்!

75 ஆண்டுகள் ஓடிவிட்டன. பல எதிர்பார்ப்புகளை சுதந்திரம் நிறைவேற்றி விட்டதா என்பது ஜனநாயக பூர்வமான கேள்விதானே! இது பற்றிய விரிவான உரையாடல்கள் நாட்டில் நடைபெற்றால்தானே குறைகளைக் களைந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் அர்த்தம் கொடுப்பதாக நாட்டின் சுதந்திரத்தை மாற்ற இயலும். ஆனால் நிஜம் சுடுகின்றது.

மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேறுவதாகப் புள்ளிவிவரங்கள் அள்ளி வீசப்படுகின்றன பெரிய கட்டமைப்புகளும் நவீனப் போர் விமானங்களும் தொழில்நுட்ப தொழிற்சாலைகளும் இந்தியா அதிவேக வளர்ச்சியில் இருப்பதற்கான சாட்சிகளாக காட்டப்படுகிறது. அவற்றில் எதையும் மறுப்பதற்கில்லை. இந்த வளர்ச்சிகளை உருவாக்குவது யார்? இந்த வளர்ச்சி யாருக் கானது? யாரை முன்னேற்றுகிறது? போன்ற கேள்விகளை உரக்க எழுப்பும்போதுதான் நாம் பெற்ற சுதந்திரத்தின் வீரியம் எவ்வளவு பலவீனப்படுத்தப்பட்டு விட்டது என்பது புரியவும் செய்கின்றது.

பொருளாதார முன்னேற்றத்தை அளப்பதற்குப் புள்ளி விவரங்கள் தேவையில்லை. மாறாக இந்திய குடிமக்களின் வாழ்க்கை தரத்தை ஒரு பார்வை பார்த்தாலே போதும். கோவிட் நாட்டை உலுக்கிய போது, யூனியன் அமைச்சரகமே கூறுவது போல 1.14 கோடி கூலித் தொழிலாளர்கள் பல நூறு மைல்களை நடந்தே கடந்து ஊர் திரும்பினரே, அது ஒன்று போதாதா வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதற்கு? அவர்கள் யார்? எதற்கு மாநிலம் விட்டு மாநிலம் சென்றனர்? ஏன் திரும்பினார்கள்? அவர்களின் வாழ்க்கை நிலை ஏன் இப்படி அவலமாக இருக்கின்றது? இவர்கள் நாட்டின் பொருளாதர வளர்ச்சியின் முகங்கள் இல்லையா? புள்ளி விபரங்கள் இவர்களைப் பற்றி பேசுகின்றதா?

கங்கை நதியில் கொரோனாவால் இறந்தவர்களின் பிணங்கள் நூற்றுக்கணக்கில் மிதந்தனவே! இறந்தவர் கணக்கு கூட பொய்யாகக் காட்டப்பட்டோ அல்லது மறைக்கவோப் பட்டதே! அது எந்த வகை முன்னேற்றத்தைக் காட்டுகின்றது?

ஆனால் ஒன்று. பொருளாதார முன்னேற்றம் மட்டுமே ஜனநாயகத்தின் முழு அளவுகோலாக அமைய முடியாது என்பது மற்றொரு உண்மை.

அடிப்படை சட்டங்களின் சக்தி

ஏதோ வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்குள் புகுந்து சுதந்திரத்தை பிடுங்கிக் கொள்வார்கள் என்ற அச்சம் தற்போது யாருக்குமில்லை. இப்பொழுது அச்சம் எல்லாம் உள்நாட்டிலேயே சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிப்பவர்கள், விளைவித்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பதுதான். இவர்களில் பலர் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பது மிகவும் மோசமான விஷயம். நாம் பெற்ற சுதந்திரத்திலேயே மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால் அது நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் தான். ஆனல் உண்மையென்னவென்றால், இந்திய ஜனச் சமூகம் வைத்திருந்த பல எதிர்பார்ப்புகள் இச்சட்டங்களின் பெயராலேயே நசுக்கப்படுகின்றன.

நாம் அடிக்கடி அடிப்படை சட்டங்கள் சிலவற்றை மேற்கோடிட்டு உரிமைக்காக குரல் எழுப்புவது உண்டு. ஆனால் அம்மாதிரியான அடிப்படை உரிமைகளுக்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிப்பாக நீதிமன்றம் ஆணையிட முடியாது. அவை அரசின் விருப்பம் சார்ந்தவை ஆகும். நியாயமான ஊதியத்திற்கான உரிமை கேட்கும் சட்டம், தரமான வாழ்க்கை வாழ்வதற்கான சட்டம், சொத்துக்கள் ஓரிடத்தில் குவியாமல் அனைவருக்குமான பொதுவுடமையாக ஆக்கப்பட வேண்டிய சட்டம், எல்லோருக்கும் வேலை கொடுக்க வேண்டிய சட்டம், வாழ்வதற்கான ஊதியம் தரவேண்டிய சட்டம் போன்ற பல்வகை அடிப்படை உரிமைகள் சார்ந்த சட்டங்கள் செயல்படுத்தி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத சட்டங்கள்.

படிநிலை, சுதந்திரமின்மை, சமத்துவமின்மை, பாகுபாடு, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் உருவகமாக இருந்த பழைய சமூகத்தை மாற்றியமைத்து, ஒரு புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அறை கூவல்தான் இந்த அடிப்படை உரிமைச் சட்டங்கள். அவற்றை நிஜமாக்கவேண்டியதே சுதந்திர அரசின் பொறுப்பு. ஆனால் அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

அரசே முன் வந்து இந்திய சுதந்திரத்தை கடைசி மனிதர்வரை விஸ்தரிக்கும் பணியாக மக்கள் உரிமை சட்டங்களை விரிவு படுத்தியதாக வரலாறு இல்லை. மாறாக உரிமைகளை சுருக்கும், மறுக்கும் கொடும் சட்டங்கள்தான் தேசநலன் எனும் பெயரில் அமல் படுத்தப்படுகின்றன. தங்கள் உரிமைகளுக்கான சட்டங்கள் என்பதை அந்தந்த தரப்பினர் போராடியும், தியாகம் செய்தும் தான் பெறவேண்டியுள்ளது. அவையும் நடைமுறைபடுத்தப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.

தொழிலாளர்கள் நிலை:

தொழிலாளர் பணிப் பாதுகாப்பு சட்டமாக இருக்கட்டும் அல்லது தொழிலாளர் இன்சூரன்ஸ் சட்டமாக இருக்கட்டும் குறைந்த கூலிக்கான பாதுகாப்பு சட்டமாக இருக்கட்டும் இவையெல்லாம் அந்தந்தப் பகுதியில் போராடி அரசுக்கு நெருக்கடி கொடுத்து பெறப்பட்ட சட்டங்கள் ஆகும். ஏதோ அபூர்வமாக வி.பி.சிங் போன்றோர் சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதை மறக்கவும் முடியாது.

வேலை வாய்ப்புகள் உருவாகிவருவது பற்றி நிறைய பிரச்சாரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. ஆனால் தொழிலாளர் நிலை என்னவாக உள்ளது?

சுதந்திரம் பெற்றபின் ஏதோ நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு மக்கள் நல சட்டங்களாக எழுதிக்குவிக்கப் போகிறார்கள் அதை செயல்படுத்தவும் போகிறார்கள் என்று யாரேனும் கனவு கண்டிருந்தால் அவர்களின் ஏமாற்றங்கள் கின்னஸ் பதிவு பெற வல்லவை. எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடும்,அதுவும் நிரந்தரமாக என்று மக்கள் நினைத்தனர். ஆனால் நிரந்தரப் பணிகளை அரசு வழங்கும் என்ற கனவு தகர்க்கப்பட்டுவிட்டது.

ஒப்பந்தப் பணியாளர் முறையை பாதுகாக்கும் நடைமுறைகள் அதிகரித்துவிட்டன. கீழ்த்தட்டு வேலைகளில் குறிப்பாக சுகாதார பணி கழிவறை சுத்தம் செய்யும் பணி காவலாளி பணி போன்ற பணிகளுக்கு ஆள் சேர்ப்பது அரசாங்கத்தில் நிறுத்தப்பட்டு விட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட ஆரம்பித்து விட்டார்கள். இது தற்போது கல்வித்துறையிலும் ஊடுருவிவிட்டது. அரசு அனுமதி பெறப் படாத பணியிடங்களில் யாரேனும் ஒப்பந்த தொழிலாளராக பணியில் அமர்த்தப்பட்டு இருந்தால் அவர்களை அரசு நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது இதன் விளைவாக நீதிமன்ற பக்கம் சென்று நீதி கேட்கக் கூட ஒப்பந்த தொழிலாளர்களால் முடியாமல் ஆகிவிட்டது.

இன்றைய நிலையில் ஒருங்கிணைக்கப்படாத ஒப்பந்த தொழிலாளர்களாக 83% பேர் இந்தியாவிலே உள்ளனர். 17% தொழிலாளர்கள்தான் அமைப்பு ரீதியாக உள்ளனர்.

92% பணியாளர்கள் எந்தவிதப் பணி உத்தரவும் இல்லாமல், தொழிலாளர் சட்டத்துக்கு உட்படாமல் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்ற நாகரீகப் பெயரில் பாலம் கட்டும் பணியில் உயிரிழந்தும், சாயப்பட்டறைகளில் மரித்துப்போயும், மிகப் பெரிய துணி, நகைக் கடைகளில் அமரக்கூட சுதந்திரமின்றி நாள் முழுவதும் நின்று கொண்டும், சக்கடைக் கழிவு அகற்றும் பணியில் விஷவாயு தாக்கி தினமும் இறந்து கொண்டு இருப்பதும் எந்தவகை சுதந்திரத்திற்கு சான்று கூறுகின்றன?

ஐ.எல்.ஓ. இன்டர்நேஷனல், கோவிட்-19க்குப் பிறகு நிகழ்த்திய ஆய்வில் ஆசியாவிலேயே இந்தியா தான் மிகக் குறைவான கூலியை தொழிலாளர்களுக்கு வழங்குவதாகக் கூறியுள்ளது. பாகிஸ்தான், இலங்கை, சீனா,நேபாளம் போன்ற நாடுகள் கூட சற்று கூடுத
லாக ஊதியம் தருவதாக அது பதிவு செய்கிறது. கோவிட் சமயத்தில் பணி மேற்கொண்டவர்களுக்கு 25% ஊதிய வெட்டு ஏற்பட்டுள்ளது பல லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தொழிலாளர்களுக்கு சாதகமான 46 சட்டங்கள் நீக்கப்பட்டு அவை நான்காக மத்திய
அரசால் குறைக்கப்பட்டு விட்டது.எல்லா தொழிற்சங்கங்களும் பிஜேபி தொழிற்சங்க உட்பட இதை கண்டித்து இருக்கிறது. இந்தியா, தொழிலாளர் நலன்களுக்கு எதிரான ஒரு நாடாக வலுப்பெற்று வருவது வருந்தத்தக்கது.

பல தொழிற்சங்க போராட்டங்கள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளதை அதிகம் நாம் கவனிக்க வேண்டும். அன்று நடைபெற்ற மிகப்பெரிய ரயில்வே போராட்டம் கடைநிலை ஊழியர்களின் நிரந்தர பணியை காலி செய்து விட்டது. 1982ல் நடந்த மும்பை ஆடை தயாரிப்பு பணியாளர்களின் மாபெரும் போராட்டம் 65 மில்களை மூட வைத்து விட்டது.

மில் இருந்த நகரங்கள் இப்பொழுது மால் இருக்கும் நகரங்களாக மாறிவிட்டன.

அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இனிமேல் நிரந்தரமான பணி என்பதை என்னவென்று தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நல உரிமைகள் உண்டு என்பது கூட மறக்கடிக்கப்பட்டு வருகிறது. தொழிற் சங்கங்கள் பலவீனப்பட்டு வருகின்றன. புதிய வகை தகவல் தொழில்நுட்ப தொழிலகங்களில் சங்கம் வைப்பது என்பது பகல் கனவே. எட்டு மணி நேர வேலை என்பது மாறி பதினாலு மணிநேர வேலையாக மாறிவிட்டது. இதன் பக்க விளைவு இளையதலைமுறையின் மனஅழுத்தமும், பண்பாட்டு சீரழிவும்தான். இந்நிலையில் இந்தியா வல்லரசாக மாறி வருவதாக நம்ப வைக்கப்படுகிறது.

இரண்டாவதாக பார்த்தால், மனித உரிமை மீறல்களின் பீடமாக இந்தியா மாறி வருகிறது. வடக்கு டெல்லியிலே ஜஹாங்கிபுரியில் ஏப்ரல் இருபதாம் தேதி புல்டோசர்கள் நுழைந்து மசூதியின் வாயிலையும், பல இஸ்லாமியர் வீடுகளையும் இடித்ததை மறந்துவிட இயலாது. நாட்டில் அச்சத்திலேயே இஸ்லாமியர்கள் தவித்து வருகிறார்கள் இஸ்லாமியர் குறி வைத்து தாக்கப்படுவதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியி
ருக்கிறது. அம்னெஸ்டி தங்கள் இந்திய அலுவலகத்தையே மூடும் அளவிற்கும் ஆகிவிட்டது. பிற மனித உரிமை அமைப்புகளுக்கும் அன்னிய வருவாய் தடை விதிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. டீஸ்டா செட்டல்வார்ட் போன்றோர் கைது அவ்வமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது.

பழங்குடியினரின் பதல்காரி இயக்கம்

சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் அனைவரும் அறிந்திருக்கின்ற அதே வேளையிலே பழங்குடி மக்களும் தங்கள் உரிமைகளை இழந்து வருவது என்பது அனைவரும் அதிக அளவில் அறியாத நிகழ்வாக இருக்கிறது

தமிழகத்தில் பழங்குடிகளின் எண்ணிக்கை மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் தான். இருளர் உள்ளிட்ட ஆறு தொல்குடிகளும் உள்ளனர்.

அதுவும் 36 பிரிவினராக உள்ளனர். இவர்களுக்கான நலதிட்டங்களில் அரசு தற்பொழுது கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் இவர்களுடைய உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்தியாவிலேயே பழங்குடி மக்கள் அதிகம் இருக்கின்ற சத்தீஸ்கர் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் இன்று பீமா கொரெகான் வழக்குகளால், பொதுவெளியில் பேசப்பட்டு வருகின்றன.

தேச வளர்ச்சி என்ற போர்வையில் ஜார்க்கண்டில் லட்சக்கணக்கான ஆதிவாசிகள் தங்கள் நிலங்களில் இருந்தும் வாழ்விடங்களில் இருந்தும் ஆதார வளங்களிலிருந்தும் அகற்றப்பட்டு வருவதை எதிர்த்து போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அவர்களின் போராட்டங்கள் சுதந்திரப் போராட்டகாலம் தொட்டே இருந்து வருகின்றன.

பிர்ச்சா முண்டா என்ற பழங்குடி இனத்தலைவர் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போருக்கு அழைப்பு விடுத்தது இன்றும் பேசப்படுகின்றது. அன்றுபழங்குடியினர் கொரில்லா போர் முறையில் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்பட்டார்கள். 1922 ஆம் ஆண்டில் சைமன் கமிஷன் முன் தனி ஜார்கண்ட் மாநில கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறாக பலவித உருவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வந்த ஜார்கண்ட் பழங்குடி சமூகம் 1986 இல் ஜார் கண்ட் மாணவர் சங்கத்தை உருவாக்கியது இவற்றின் விளைவாக நவம்பர் 2000த்தில் ஜார்கண்ட் மாநிலம் உருவானது.

2017ல் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு கூட்டி சுரங்கங்களுக்காவும்,தொழிலகளுக்காகவும் முதலீடுகளை செய்வதற்கன மையமாக ஜார்கண்ட் மாநிலத்தை மாற்ற கார்பரேட்டுகளுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யமுடியாத நிலங்களை வளர்ச்சி நோக்கங்களுக்காக பெரு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்தனர். இதன் விளைவாக மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இன, சூழலியல் சார்ந்த ஒரு இயக்கமாக மக்கள் இயக்கங்கள் தோன்றின. போராடினார்கள்.

அரசின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி களம் அமைப்பதற்கு பெருவாரியான காடுகளை அழிக்கவும், பழங்குடி மக்களின் நிலங்களை இழக்கவும் திட்டம் தீட்டப்பட்டது. 23 வது பீரங்கி படையின் பயன்பாட்டுக்காக 2.3 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வனப்பகுதியில் உள்ள நிலங்களை, விவசாய நிலங்கள் என்றும் பாராமல் மக்களிடமிருந்து அபகரிக்க அரசு ஏற்பாடு செய்தது. அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினர் இதை கடுமையாக எதிர்த்தார்கள் பழங்குடியினர் போராட்டத்தில் இது முக்கியமான போராட்டம் ஆனது. இதன் விளைவாக அவர்கள் நிகழ்த்திய போரட்ட வடிவம்தான் பதல்காரி போராட்டம் என்றறியப் படுகின்றது.

ஜார்கண்டில் குந்தி மாவட்டத்தை சேர்ந்த முண்டா ஆதிவாசிகள் பழங்குடியின பகுதிகளுக்கு சிறப்பு சுயாட்சி வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் ஐந்தாவது அட்டவணையின் விதிகள் பொறிக்கப்பட்ட கல் பலகைகளை தங்கள் கிராமங்களில் 2010 களில் அமைக்க தொடங்கினார்கள். மூதாதையர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, பூர்வீக நிலங்களை வரையறுக்க கல்பலகைகளை அமைக்கும் பழங்கால பாரம்பரியத்தை பின்பற்றி செய்யப்பட்டது இந்த கல் நடும் இயக்கம். இவற்றின் மூலம் அப் பிரதேசம் பழங்குடியினரின் இறையாண்மை பிரதேசமாக அறிவிக்கப்படுவதுடன், வெளியாட்கள் நுழைவதையும் தடைசெய்கின்றது. பதல்காரி பழங்குடியினரின் சுய ஆட்சிக்கான உறுதிப்பாயாகக் கருதப்படுகின்றது. ஆதிவாசிகளின் அரசியல் உரிமைகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கற்கள் இவை. இப்படி இவர்கள் பிரகடனப்படுத்தியது தங்களுக்கு அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைக் கொண்டே ஆகும். ஆனால் அரசு எப்படியாவது இந்நிலங்களை கார்பரேட்டுகளுக்கு பிடுங்கிக் கொடுப்பதில் குறியாக இருக்கின்றது.

இந்த பதல்காரி இயக்கத்திற்கு எதிராக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.பல ஆயிரம் பேர் கிராமங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போராட்டங்களில் மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். பழங்குடியின போராளிகள் கொலை செய்யப்பட்டார்கள். வீடுகள் சூறையாடப்பட்டன பல்லாயிரம் பழங்குடியினர் மீது சுமார் 44 ஆயிரம் வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் உள்ளதாக ஒரு முறை மாவட்ட தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இன்றும் பழங்குடியினர் போராடி வருகிறார்கள்.

அனைத்து வளங்களுக்கும் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளை நிலை நிறுத்தும் அரசியல் அமைப்பு விதிகள் இருந்த போதிலும், மறுபுறம் இந்த உரிமைகள் அரசு நிறுவனங்கள் மற்றும் முகவர்களால் மீறப்படுகின்றன மேலும் பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகின்றன. ஜார்கண்ட் சிறைகளில் குறைந்தபட்சம் பலநூறு ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்கள் அவதிப்படுவதாக மதிப்பீடு உள்ளது. இவர்களைத்தான் அரசு மாவோயிஸ்டுகள் என்றும், அபின் விவசாயிகள் என்றும், கிறித்துவ சமயப் பரப்புனர்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றது. இவர்களுக்கு குரல் எழுப்ப கற்றுக்கொடுத்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களுடன் துணை நின்ற அருட்தந்தை ஸ்டான்சாமி அவர்கள் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மரித்தும் போனார். இப்படி அரசுக்கு எதிராக வெவ்வேறு களங்களில் அழுத்தமாகக் குரல் எழுப்பியவர்களை பீமா கொரேகான் வழக்கில் கைது செய்து, மேலும் பாரதப் பிரதமரைக் கொல்ல சதி தீட்டியவர்கள் என்றும் அரசு பல ஆயிரம் பக்கங்கள் குற்றப் பத்திரிக்கை சமர்பித்துள்ளது.

இருள் சூழும் பிற பிரதேசங்கள்

தேசிய அளவில் தேசத்துரோகம், AFSPA, UAPA மற்றும் NSA போன்ற கொடூரமான சட்டங்களை இயற்றுவது, மாநில அளவில் இயற்றப்பட்ட ஒத்த இயல்புடைய சட்டங்கள் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு எதிரான அவர்களின் கண்மூடித்தனமான துஷ்பிரயோகம் ஆகியவை சுதந்திரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க கறைகளாக படிந்து வருகின்றன.

இத்தகைய சட்டங்களின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டவர்களின் எண்ணிக்கையில் செங்குத்தான உயர்வு ஏற்பட்டுள்ளது, மேலும் அவர்கள் எந்த விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர். அரசு தனது மக்களுடன் போரில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்று ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார்.

இவற்றைத் தாண்டி பெண்கள், பட்டியலினத்தினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் பரவலாக அதிகரித்து வருகின்றன, மேலும் அவர்கள் மீதான தனது கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பில் அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் சிவில் சமூக அமைப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு அச்சம் கவ்வுகின்றது.

கல்வித்துறையிலும் ஒற்றைப் பரிமாண முறை திணிக்கப்பட்டுவருகின்றது. ஜனநாயக பூர்வமாக இயங்கும் பல்கலைகழகங்களும், உரிமைக் குரல் எழுப்பும் மாணவர்களும்கூட அடக்குமுறை சட்டங்களுக்குப் பலியாகின்றனர்.

பணபலமும், தசை பலமும் தேர்தல் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன, இது இப்போது நேர்மையான மற்றும் சாதாரண குடிமக்களுக்கு எட்டாதது. இவற்றோடு மக்களின் அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் திட்டமிட்ட வகுப்புவாதமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை ஸ்வீடனில் வசிக்கும் வி-டெம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன் லிண்ட்பெர்க் கூறுகின்றார்:

‘‘இந்தியாவில் ஜனநாயகம் சரிந்துகொண்டிருக்கிறது. விரைந்து அதைச் சரிசெய்யாவிட்டால் இந்தியா தன் ஜனநாயகத் தன்மையை இழந்துவிடும். இந்தியாவின் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மாறுபட்ட கருத்துகளின் சுதந்திரம், மக்கள் சமூகத்தின் சுதந்திரம், நடைபெறும் தேர்தல்களின் தரம், சுதந்திரமான கல்வி போன்ற பல காரணிகளில் இந்தியா சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முக்கியமாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஊடக சுதந்திரம் பறிபோய்வருகிறது. பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கைதுசெய்யப்படுகிறார்கள், அரசாங்கம் ஊடகங்களை அடிபணியவைக்க முயல்கிறது. அரசை விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சர்வாதிகாரத்தின் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அடங்கும்’’ என்றும் அவர் அறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது, என்ன செய்யப் போகிறோம் எப்படி செய்யப் போகிறோம் என்று யோசிப்பதற்கான தருணங்கள்கூட மிகக் குறைவாக இருக்கிறது. போலி பகட்டான வெளிச்ச விளக்குகள் மயக்கத்தை உண்டாக்குகின்றன. ஆனாலும் மக்கள் விழிப்பும், பங்கேற்பும் அற்புதங்களை நிகழ்த்தும்.

murali_phil@hotmail.com