பெரியார் கலந்து கொள்ளும் கூட்டங்களில், தக்காளி, முட்டைகளை வீசுவதற்கென்றே சின்னக் கூட்டமொன்று வரும்.

75 விழுக்காடு மக்கள் செருப்பணியாத காலமும் அன்றிருந்தது. வாங்க காசில்லாததால் அல்ல. அவர்கள் செருப்பணிந்து கொண்டு சில தெருக்களில் நுழைய முடியாது. அனுமதிக்கப்பட்ட பொதுச் சாலையில் எவரேனும் ஆதிக்கச் சாதி ஆட்கள் வந்துவிட்டால் அதை அவிழ்த்து ஓரம் வைத்துவிட்டே அவர்களிடம் பேச வேண்டும் அல்லது அவர்கள் முன் அதைக் கைகளில் ஏந்தி கடக்க வேண்டும்!

அத்தகைய காலகட்டத்தில் பெரியார் பேசிக்கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் மேடையை நோக்கி செருப்பை வீசிவிட்டார்.

ஒரு செருப்பில்லாம நீ என்ன பண்ணப்போற, இத தனியா வச்சிக்கிட்டு நான் என்ன பண்ண முடியும் ? அந்த மிச்ச செருப்பையும் வீசு, யாரோ ஒருவருக்காவது உபயோகமா இருக்கட்டும் என்று அந்த அநாகரீகச் செயலை அறத்தோடு அடித்து நொறுக்கியவர் பெரியார்!

அப்பேர்ப்பட்ட பெரியாரை ஆசானாக ஏற்ற பாரம்பரியத்தில் வந்த ஒருவர் மீது, அவர் சென்ற கார் மீது என்பதுதான் சரி. அந்தக் கார் மீது செருப்பை வீசியெறிந்து அரசியல் செய்திருக்கிறது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி!

அட, அப்படி ஆவேசமாக அதை வீச ஒரேயொரு நியாயமான காரணத்தை அவர்கள் சொல்லியிருக்கலாம் அல்லவா ?

ஒன்றுமே இல்லை என்பதுதான் உச்சகொடுமை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு. லட்சுமணன் அவர்கள் காஷ்மீரில் வீரமரணம் அடைந்ததால், அவருடைய உடல் மதுரை விமான நிலையத்தை வந்தடைகிறது. அந்த வீரமகன் உடலுக்கு புகழஞ்சலி செய்ய, தமிழ்நாடு அரசு சார்பாக அங்கு சென்றார் தமிழ்நாடு நிதியமைச்சர் திரு. பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு, மாநில அரசு சார்பாக கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை, உரிய அரசு நெறிமுறைகளின் படி அளிக்கச் சென்ற அமைச்சரை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி ஏன் எதிரியாகப் பார்க்க வேண்டும் ?

தாம் ஆட்சி புரிவதால் இந்த நாடு மட்டுமல்ல, நீதிமன்றம் மட்டுமல்ல, அதிகார மய்யங்கள் மட்டுமல்ல, ராணுவமும் தங்களுடையதே என மூடத்தனமாய் நம்பும் கூட்டம் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி. அதன் தமிழ்நாட்டுக் கிளை மட்டும் என்ன வித்தியாசமாகவா செயல்படும்?

இதுக்கு மட்டும் ஏன் வந்தாரு என்று அவர் மாலையிட்டு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் போதே முணுமுணுத்தனர் சிலர்.

சூழலுக்கு முற்றும் பொருந்தாத அவர்களுடைய அந்தச் சலசலப்பை உடனடியாக அங்கேயே கண்டித்தார் அமைச்சர். என்ன உங்க பிரச்சினை என அவர்களை நோக்கி கேட்டார். அமைச்சருடன் இருந்த காவலர்கள் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தினர்!

முடித்துவிட்டு வெளியே வரும்போது, மேலும் வெறியேறி அவருடைய காரை மறித்து சில விநாடிகள் நிறுத்தினர் பாரதிய ஜனதாக் கட்சியினர். மிகவும் கொச்சையான வசை வார்த்தைகளால் அவரை ஏசினர். ஒரு பெண்மணி அவருடைய ஒற்றைச் செருப்பை எடுத்து அமைச்சர் கார் மீது வீசினார். அது அமைச்சருடைய காரின் கண்ணாடி மீது பட்டு அங்கேயே அப்படியே காரின் முன்பக்கத்தில் வசதியாகத் தங்கி விட்டது!

விமான நிலையக் காவலர்களும், அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த காவலர்களும் உடனடியாக பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்தவர்களை கலைத்து, விரட்டியடித்தனர். அமைச்சரின் கார் புறப்பட்டது. அமைச்சரின் காருக்குப் பின்னால் ஆளுங்கட்சியினரின் பல கார்கள் தொடர்ந்து சென்றன. அவர்கள் நினைத்திருந்தால் காரிலிருந்து இறங்கி அந்தச் சிறு கூட்டத்தை நையப் புடைத்திருக்கலாம். கலவர விரும்பிகளும் அதைத்தான் எதிர்பார்த்தனர். ஆனால், ஆளுங்கட்சியினருக்கு முதலமைச்சர் கூறியிருந்த அறிவுரைகள் அவர்களை பண்படுத்தியிருந்தன!

அன்று மாலை, அதுபற்றி அமைச்சரிடம் கேட்டபோது, இறுதி அஞ்சலி என்பது நம் நாட்டுக்காகத் தன் இன்னுயிரை நீத்தவருக்கு நாம் செய்யும் மரியாதை. இன்று இதைப்பற்றிப் பேசுவது கூட முறையாகாது, நாளை பேசுகிறேன் என ஊடகவியலாளர்களிடம் சொல்லியனுப்பினார் அமைச்சர்!

இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரிடம் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டனர் மதவாதக் கட்சியினர் ?

நிதிவிவகார வாதங்களில் ஒட்டுமொத்த ஒன்றிய அமைச்சக ஆட்களைக் கிழித்தெடுப்பவர் நம் நிதியமைச்சர். வெளிப்படையாக ஒன்றிய அரசின் பல குளறுபடிகளைப் பேசி குட்டுடைப்பவர். ஒன்றியத்தில் அதிகப் பங்களிக்கும் மாநிலமாக நாங்களிருந்தாலும் எங்களுக்கு ஒதுக்கப்படும் திட்டங்களும், நிதியும் மிகக் குறைவு என்று புள்ளிவிவரங்களுடன் பேசுபவர். அவரைத் தேவையின்றி விமர்சிக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி ஆட்களை மதிக்காதவர். மதித்துப் பதிலளிக்குமளவு அவர்கள் தகுதியற்றவர்கள் என விமர்சிப்பவர். குறிப்பாக வானதியைக் கடைந்தெடுத்த பொய்யர் என்று வர்ணித்தார். எச். ராஜா போன்றவர்களின் வாதங்கள் ஞமலிகளின் குரைப்புக்கொப்பானவை, அதைப் பொருட்படுத்த வேண்டாமென ஊடகவியலாளர்களிடம் அவரை நிராகரிக்கச் சொன்னவர். இந்தக் கடுப்பு அந்தக் கட்சியினரைத் தீராக்காழ்ப்பில் ஆழ்த்திவிட்டன!

தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல்தான் என்ன ?

ஏன் அவர்கள் தறிகெட்டு மனம் பிறழ்ந்தவர்களைப் போல செயல்படுகிறார்கள்?

அரிசிக்கும் – தயிருக்கும் வரி

நாடாளுமன்றத்தில் அரிசிக்கும், பாலுக்கும், தயிருக்கும் கூட GST வரிகளை விதித்த ஒன்றிய அரசுக்கெதிராகத் தங்களுடைய ஆவேச எதிர்ப்பைப் பதிவு செய்தனர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணியைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள். குறிப்பாக, கனிமொழி, பாலு, திருமாவளவன் போன்றோர். அதற்கு ஒன்றியத்தின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கும்போது ஒரு மோசமான பொய்யை மக்களவையில் சொன்னார். அதற்கு அவர் காட்டிய உடல்மொழிகள் அருவருப்பானவை. GST ஆலோசனைக் கூட்டத்தின்போது, இந்த வரிகளையெல்லாம் ஒன்றும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டு, இங்கு வந்து நாடகமாடுகிறீர்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார் திருமதி நிர்மலா!

மறுநாளே இந்தப் பொய்யைத் தோலுரித்தார் பழனிவேல் தியாகராஜன். ஆலோசனைக் கூட்டத்தின்போதே, இத்தகைய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்திருக்கிறது தமிழ்நாடு. ஆனால், ஆலோசனைக் கூட்டத்திலிலுள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவாளர்களைக் கொண்டு, அத்தகைய எதிர்ப்புகளை நீர்க்கச் செய்து, இந்தியச் சாமானிய மக்களின் தலைகளில் அந்த வரிச்சுமையை ஏற்றி வைத்துள்ளது மோடி, நிர்மலாவின் ஒன்றிய அரசு. ஆனால் பொய் கூற அஞ்சாத, கூசாத அந்தக் கூட்டம், தமிழ்நாடு அரசு ஒப்புதலுடன்தான் அந்த வரிகளை விதித்தோம் என்பது வெட்கக்கேடானது. கோயபல்ஸ் கூட்டம் ஓரிடத்தில் சொன்ன பொய்யை, மீண்டும் மீண்டும் பலவிடங்களிலும் பொய்யுரைத்து, கீழ்த்தரமான அரசியலைச் செய்வதுதான் தமிழ்நாடு கமலாலயத்தின் வேலை!

தமிழ்நாடு நிதியமைச்சரின் இத்தகைய நேரடித் தாக்குதல்களுக்கு எந்தப் பதிலுமில்லாததால்தான், அவரைக் கீழ்மை செய்கிறோம் பேர்வழி என செருப்பைக் கையிலெடுத்து அரசியல் செய்ய முனைந்திருக்கிறது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி! அன்றிரவே தன் காரின் மீதிருந்த செருப்பின் புகைப்படத்தைப் பதிவேற்றி ஒரு ட்வீட் போட்டிருந்தார் பழனிவேல் தியாகராஜன். ஒன்றிய அரசின் விமான நிலையப் பாதுகாப்பு படையின் அனுமதி இல்லாமல் பாரதிய ஜனதாக் கட்சியின் பத்துக்கும் மேற்பட்ட ஆட்கள், விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்குள் வந்திருக்கவே முடியாது. அதனால்தான் என் காரை வழிமறித்து தாக்க அவர்களுக்குத் துணிவும் வந்திருக்கிறது. செருப்பை வீசிய சிண்ட்ரெல்லா என் அலுவலகம் வந்து அந்தச் செருப்பை எடுத்துச் செல்லலாம். என் பணியாளர்கள் அந்தச் சேவையை உங்களுக்குச் செய்யத் தயாராக இருக்கிறார்கள்!

மிகவும் கண்ணியமான சொற்களால் எழுதப்பட்டிருந்த அந்த வரிகள், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடலுக்கு ஒப்பான ஒன்று. இவரையும் விஞ்சிய ஓர் அறம்போற்றி இருக்கிறார். அவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின்!

உடனடியாக எதிர்வினை ஆற்றினால் தொண்டர்கள் சீறியெழக்கூடுமெனக் கணித்து, மறுநாள் மாலை ஒரு மென்கண்டன அறிக்கையை விடுத்தார். கண்ணியமிக்க மனிதரை இழிவுசெய்பவர் எவராயினும் அவர்கள் சட்டப்படி தண்டனைகளைப் பெறுவார்கள் என எச்சரித்திருந்தார்!

வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சி பலரையும் கொதி நிலைக்குக் கொண்டு போனது. வெட்டு, குத்து, அடி, உடை, கொளுத்து என்று அவரவர் தங்களின் ஆவேசங்களைக் கொட்டியிருந்தார்கள். கோத்ரா பிரச்சினையின் போது குஜராத்தின் மோடி போல ஒரு வார்த்தையை ஸ்டாலின் உதிர்த்திருந்தாலும், அந்த மூடர்களுக்கு என்ன நடந்திருக்குமென அனைவருக்குமே தெரியும். ஆனால் அப்படிப்பட்ட தலைவர்களை நாம் உருவாக்கவில்லை. அவர்களும் தம் தொண்டர்களை ஒருபோதும் அப்படி உசுப்பேற்ற மாட்டார்கள்!

வீட்டுக்கு வீடு கொடியேற்று

நேற்றுவரை, இந்தியத் தேசியக் கொடியை வெறுத்தவர்கள், அதிலிருக்கும் மூன்று வண்ணங்களை விரும்பாதவர்கள், காவி வண்ணம் மட்டும் நிரம்பிக் கிடக்க வேண்டுமென எதிர்பார்த்தவர்கள், விடுதலைக்காகப் போராடிய நிராயுதபாணி தேசத்தந்தையைக் கொன்றவர்கள், திடுக்கென தேசபக்தி அவர்களுக்குள் பீறிட்டெழுந்து, வீட்டுக்கு வீடு கொடியேற்றுவோம் என இந்தியா முழுவதும் கொடி விநியோகம் செய்தனர்.

இருபது ரூபாய், முப்பது ரூபாய், ச்சும்மாத்தான் என்று கொடிகளைத் தலையில் கட்டினர். அரியானா அரசோ ஒருபடி மேலே சென்று, இருபது ரூபாய்க்கு தேசியக் கொடியை வாங்குபவர்களுக்கு மட்டுமே ரேஷன் என்றுவிட; அன்று பார்த்து ரேஷன் பொருட்களுக்கான விலையை மட்டும் சரியாக எடுத்து வந்திருந்த பாமரர்கள் பலருக்கு ரேஷன் பொருட்கள் கிட்டவில்லை. ஏனெனில் அவர்களிடம் அப்போது அந்த இருபது ரூபாய் இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்தவர்கள் கடனளித்ததால் பொருட்கள் கிட்டியது. ஆனால் இந்தக் கொடியை என்ன செய்வதெனத் தங்களுக்குத் தெரியாது என்றபடி பரிதாபமாக நின்றனர்! இங்கும் இவர்கள் இதே வேலையைச் செய்யத் துவங்க, வழக்கம் போல அன்று தங்கள் வீடுகளில் கொடியேற்றுபவர்களும், இவனுக என்ன சொல்றது, நாம என்ன ஏத்தறது என்று பலர் நிராகரித்ததெல்லாம் நிகழ்ந்தது. இதைக்காட்டிலும் கொடுமையாக ஆர்வக்கோளாறுகள் பல அந்தக் கொடியை மதித்த விதம் கோபத்தை வரவழைத்தது!

கொடிகளைத் தலைகீழாக ஏற்றியவர்கள், இரவுக்குள் அதை இறக்காதவர்கள், ஒருவாரம் வரை மழையில் நனைந்து, வாடி வதங்கி கிழிந்து தொங்கிய கொடிகள் மட்டுமே பல்லாயிரம். குப்பைக்குள் வந்தது பல லட்சம். நம் தேசியக்கொடியை அவமதிப்பு செய்ய நினைத்தவர்கள், பவளவிழாவைச் சாக்கிட்டு அதைச் சாதித்தார்கள் என்பதுதான் கள யதார்த்தம். தேசபக்தியை வளர்க்கிறோம் என இவர்கள் போட்ட ஆட்டங்களும், கொடி ஊர்வலங்களும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது மட்டுமே எஞ்சியது!

பவளவிழா பரிசு

குஜராத்தில், கோத்ரா ரயிலெரிப்பை ஒட்டி நிகழ்த்தப்பட்ட கலவரங்களில் மிக மிகக் குரூரமான செயல் பஞ்ச்மகால் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர் கொல்லப்பட்டனர். அதில் இரண்டு குழந்தைகள். இரண்டு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். அதில் ஒரு பெண் ஐந்து மாத கர்ப்பிணி. அவர் பெயர் பில்கிஸ்பானு.

அண்ணா அண்ணா நான் கர்ப்பிணி. உங்களை பலமுறை பார்த்திருக்கிறேனே சகோதரரே என்னைத் தெரியவில்லையா ? விட்டுவிடுங்கள் என ஒவ்வொருவரிடமும் கதறியுள்ளார். தங்களுக்குத் தெரிந்த குடும்பப் பெண் என அறிந்திருந்தும் வெறி பிடித்திருந்த அந்த மிருகங்களுக்கு அன்று கண்கள் குருடாகின. காதுகள் செவிடாகின. உடம்பெல்லாம் ஆயிரம் குறி முளைத்த இந்திரனைப் போல் அந்தப் பெண்ணை ஒருவர் பின் ஒருவராய் வன்கலவி புரிந்தனர். மொத்தம் 11 பேர். அந்தப் பெண்ணின் கையிலிருந்த மூன்று வயது பெண் குழந்தையைப் பிடுங்கி, மேலே தூக்கியெறிந்து, குழந்தையின் தலை பாறையில் பட்டு சிதறடித்துக் கொன்றனர். அத்தனை கொடுமையையும் பில்கிஸ் கண் முன்னே நிகழ்ந்தன!

கலவரங்கள் ஓய்ந்த பின் அந்தப் பெண் புகாரளிக்கச் சென்ற போது அதை ஏற்காமல் அழிச்சாட்டியம் புரிந்தது குஜராத் காவல்துறை!

சளைக்காமல் போராடிய அந்தப் பெண், அந்த பதினோரு கயவர்களுக்கும் ஆயுள்தண்டனையைப் பெற்றுக் கொடுத்தார். உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் வேறு ஒரு மாநிலத்தில் நடந்த அந்த வழக்கு விசாரணையில் வெளியான தீர்ப்பில்தான் குறைந்தபட்சமான நியாயம் அந்தப் பெண்ணுக்கு கிட்டியது!

கடந்த பதினெட்டு வருடங்களாக ஆயுள்தண்டனையை அனுபவித்து வந்த அந்த 11 பேரையும், பவள ஆண்டு அமுதப்பெருவிழா நாளை முன்னிட்டு, விடுதலை செய்துவிட்டது பாரதிய ஜனதா அரசு!

அதற்காக அவர்கள் அளித்த விளக்கம் மேலுமொரு கொடுமை.

அந்த 11 பேரும் பார்ப்பனர்கள். ஒழுக்கமானவர்கள். சிறையில் நன்னடைத்தை மிக்கவர்களாக மிளிர்ந்தனர். அதனால் அவர்களை விடுதலை செய்ய நாங்கள் பரிந்துரைத்தோம் என்கிறார் பாரதிய ஜனதாவின் குஜராத் எம்.எல்.ஏ. ராவுல்ஜி. நீண்ட நாள் சிறைவாசிகள் யார் யாரை விடுவிக்கலாம் எனப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவில் இவரும் ஓர் உறுப்பினர்!

இந்தியளவில் மட்டுமல்ல, உலகளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது இந்தச் சம்பவம். பல உலக நாடுகளும் இந்த விடுதலையைக் கடுமையாக கண்டித்துள்ளன!

குற்றவாளிகளின் கூடாரம்

அகில இந்தியளவில், பாரதிய ஜனதாக் கட்சி குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு கட்சியாகவே இருப்பதால், தமிழ்நாட்டிலும் குற்றங்களைச் செய்யும் பலர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப, அந்தக் கட்சிக்குத்தான் போகிறார்கள். தாம் செய்யும் குற்றங்களை ஒன்றிய அரசு மன்னித்துவிடும் என்றும் அவர்களுடைய ஆசி இருந்தால் நீதிமன்றங்கள் எளிதில் பிணை அல்லது விடுதலை கொடுத்துவிடும் என்றும் ஆழமாக நம்புகிறார்கள்!

கல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை, படப்பை குணா, குட்கா பஜன்லால் துவங்கி பல கோடிகளை மோசடி செய்து ஓடிய சிட்பண்ட் முதலாளிகள், பெண்களை சீரழிக்கும் சைபம் க்ரைம் குற்றவாளிகள் வரை அண்ணாமலை முன்னிலையில் தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்கள். மறுநாளே காவல்துறை பல மோசடி வழக்குகளில் அவர்களைக் கைது செய்கிறது. ஒருபக்கம் எனக்கு அவர்களை முன்னே பின்னே தெரியாது என்று ஓர் அறிக்கை வரும், இன்னொரு பக்கம் பழிவாங்கும் திமுக என்றும் வரும். கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே பல்வேறு குற்றங்களைச் செய்யும் நபர்கள், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்!

அதனாலேயே அவர்கள் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவதும், கலவரங்களை உருவாக்கும் விதமாக நடந்துக் கொள்வதும் எளிதாக இயல்பாக நடந்தேறுகிறது! வன்கலவி புரிந்து கொடூரக் கொலைகளைச் செய்தவர்களையே எளிதில் வெளியே விடும் கட்சி, தம்மையும் அது போல் காக்கும் என அத்தகைய அக்யூஸ்ட்கள் நம்புகிறார்கள்! அதனால்தான் தற்கொலை மரணங்களிலும் மதரீதியில் ஏதேனும் மோதல்களை உருவாக்க முடியுமா என அலைந்து, இத்தகைய குற்றவாளி கும்பல்களை முன்னால் இறக்கி, காரியங்களைச் சாதிக்கத் துடிக்கிறார்கள்!

இத்துப்போன முன்னாள் ஸ்டண்ட் மாஸ்டர்கள், மார்க்கெட் இழந்த டான்ஸ் மாஸ்டர்களைக் கொண்ட இந்தக் கூட்டம், இதனால்தான் இந்த மண்ணில் நின்றுகொண்டு பெரியார் சிலைகளை தகர்ப்போம் என கொக்கரிக்க முடிகிறது. அப்படிப் பேசிவிட்டு பொந்துக்குள் ஓடி ஒளிந்து கொள்ளவும் முடிகிறது. இப்படிப் பேசிய கனல்கண்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தது புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி!

இலவச அரசியல்

ஒன்றியத்தின் தலைமை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தூண்களில் தலையானவருமான மோடிக்கு இலவசங்கள் பிடிப்பதில்லை. அவருடைய அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எவருக்கும் இலவசம் மட்டுமல்ல, மானியங்கள்மீதும் ஒவ்வாமை உண்டு!

அதற்காக அவர்களுடைய கட்சி ஆட்களைக் கொண்டே, தேர்தல் வேளைகளில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு போடுகிறார்கள். உச்சநீதிமன்றமும் அதை ஏற்கிறது. என்ன நடவடிக்கை எடுக்கலாம், இலவசங்கள், மானியங்களை எப்படி ஒழிக்கலாமென தேர்தல் ஆணையத்திடம் கேள்விகளை எழுப்புகிறது!

ஒருபக்கம் இலவசங்களால் இந்தியாவும் இலங்கையாகத் திவாலாகும் என்று முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டே மறுபுறம் அவர்களே ஏகப்பட்ட இலவசங்களை அறிவிக்கிறார்கள். மகளிர் தினத்தில் மூன்று நாட்கள் மகளிருக்கு அனைத்து வகை பேருந்துகளிலும் இலவசம் என அறிவித்தார் யோகி ஆதித்யநாத். சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் கட்டணச் சலுகை இனி எப்போதுமில்லை எனச் சொல்லிவிட்டு, பேருந்துகளில் அவர்கள் இலவசமாக பயணிக்க உத்தரவிடுகிறார்கள் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில்! திமுக தங்களின் தேர்தல் அறிக்கையில் சொன்ன இலவசத் திட்டங்கள் அனைத்தையும் இப்போதே நிறைவேற்ற வேண்டும், இல்லையேல் போராட்டம் என்று உருட்டுகிறார் திரு. அண்ணாமலை!

தசாவதாரம் படத்தில் கமல்கூட இத்தனை வேடங்கள் போட்டிருக்க மாட்டார். இவர்கள் அவரையும் விஞ்சி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோலம் பூணுகிறார்கள்! தமிழ்நாட்டின் பெரிய எதிர்க்கட்சியாக வலம் வந்திருக்க வேண்டிய அதிமுகவில், நாற்காலிச் சண்டைக்கே நேரம் போதாமல் இருப்பதாலும், நடுப்பகலில் போராட்டக் களத்திற்கு வந்தால் ஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் தலைவருக்கு மயக்கம் வருவதாலும், அது சுணங்கி, முடங்கிக் கிடக்கிறது! இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாம் இடத்திற்கு முன்னேறத் துடிக்கும் பாரதிய ஜனதாவோ, தரம்கெட்ட செய்கைகளால், மக்கள் மனத்தில் கடும் வெறுப்புக்குள்ளாகியுள்ளது! ஒரு மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் இவ்வளவு இழிபட்டு நாடு பார்த்ததில்லை. இப்போதைக்கு அது மக்களுக்கு நலம்தான் எனினும், திறன்வாய்ந்த, நாகரீகமான அரசியலை முன்னெடுக்கும் எதிர்க்கட்சி இல்லாவிடில் அது மக்களாட்சிக்குப் பின்னடைவே!!!

rashraja1969@gmail.com