தான் செய்த தொழில் பற்றி ஒருவர் எழுத வேண்டும் என்றால் அந்தத் தொழில் சட்டவிரோதமானதாக இருக்கக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் பொதுவாக வெளியில் சொல்லிக் கொள்ள கூச்சமாக இருக்கும். நான் திருடன், நான் மாமா வேலை பார்ப்பவன் என்றெல்லாம் பொதுவெளியில் சொல்லிக் கொள்ள முடியுமா? மிகவும் பொதுப்படையாக பிசினஸ் என்று சொல்லி முடித்துக் கொள்ளத்தான் முடியும். அந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை என்றால் பொதுவெளியில் அது பற்றிக் கூறலாம். அத்தொழிலில் உள்ள கஷ்டநஷ்டங்கள், அந்தத் தொழிலால் ஏற்படும் டென்ஷன், அத்தொழிலின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் எழுதலாம். அப்படித்தான் பில் மேசன் என்ற திருடர் (அவர் செய்தவற்றைப் படிக்கும்போது ‘ன்’ விகுதி போட மனம் வரமாட்டேன் என்கிறது!) Confessions of a Master Jewel Thief என்று தனது திருட்டுத் தொழில் வாழ்க்கை பற்றி மிக விரிவாக சுமார் 470 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு தான் என்றாலும் கூட, புத்தகம் புதுத் திருடர்களுக்கு பெரிய வழிகாட்டி நூலாக இருக்கிறது. எழுதிச் செல்லும்போதே அவர் தன்னையறியாமல் வருங்காலத் திருடர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டே சென்றிருக்கிறார்.

குற்றவாளிகள் பிறக்கிறார்களா? உருவாக்கப் படுகிறார்களா? என்பது விடை சொல்ல முடியாத ஒரு கேள்வி. சமூக ஆர்வலர்கள் பொதுவாக குற்றவாளிகள் உருவாக்கப்படுவதாகவே சொல்வார்கள். இந்தச் சமூகச் சூழல்தான் அவனைத் திருட வைத்தது என்பார்கள். இந்த வாதம் பில் மேசன் போன்ற மிகப் பெரிய திருடர்களுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. ஏனெனில் அவரே புத்தகத்தின் தலைப்பில் சொல்லிக் கொள்வது போல அவர் ஒரு மாஸ்டர் திருடர். அவரது கதையைப் படித்தால் குற்றவாளிகள் – குறைந்த பட்சம் திருட்டுத் தொழில் செய்யும் குற்றவாளிகள் – பிறப்பதாகவே தெரிகிறது.

ஃபுளோரிடாவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறக்கிறார் பில். நன்றாகப் படிக்கிறார். ரியல் எஸ்டேட், பெரிய பெரிய அடுக்ககங்களை நிர்வகிக்கும் அவுட் சோர்சிங் நிறுவனம் போன்றவற்றில் பணி செய்கிறார். நண்பன் ஒ்ருவனுடன் ஒரு த்ரில்லுக்காக ஒரு பெட்ரோல் பங்கைக் கொள்ளையடித்து மாட்டிக் கொள்கிறார். திருடியது சிறிய தொகை. சில மாதங்கள் சிறைத் தண்டனை. வெளியே வரும் போது ஒரு முடிவு எடுக்கிறார். இனி திருடவே கூடாது என்றல்ல. இனி எந்த சம்பவம் செய்தாலும், உடன் ஒரு கூட்டாளியை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே அது. பல வருடங்கள் மாட்டிக் கொள்ளாமல் கோடி கோடியாகத் திருடிய அவர் ஒரே ஒரு முறை மற்றொரு ஆளை உடன் வருகிறாயா? என்று கேட்டு, தனது விதியைத் தானே மீறுகிறார். அந்த மற்றொரு ஆளால் காட்டித் தரப்பட்டு மாட்டிக் கொண்டு சிறை செல்கிறார்.

வெளியே ரியல் எஸ்டேட் கம்பெனி ஊழியர். அழகான மனைவி. மூன்று குழந்தைகள். யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வாழ்க்கை. ஆனால் அவருக்குத் திருடுவதில் உள்ள த்ரில் பிடிக்கும். மிக மிகப் பாதுகாப்பான இடத்தில் வாழ்ந்து கொண்டு, கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள நகைகளைப் போட்டுக் கொண்டு, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று கர்வமாகத் திரியும் கொழுத்த பணக்காரப் பெண்கள், பிரபலங்களைக் கண்டால் அவர்களிடம் இருப்பதைக் கொள்ளையடித்தே தீர வேண்டும் என்று அவருக்குள் ஒரு பரபரப்பு வரும். அந்தக் கொள்ளையை நடத்தினால்தான் அது தீரும்.

முதன்முதலாக ஒரு கோல்ஃப் கிளப்பின் லாக்கரிலிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார். அதற்குத் தேவையான கருவிகள் சரிவர எடுத்துச் செல்லாமல், மிகவும் சிரமப்பட்டு, அந்த லாக்கரையே தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார். அதை உடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. அத்தனை சிரமங்களையும் ஈடு செய்யும் விதமாக அதில் பணம் இல்லை என்பதுதான் கொடுமை. இதற்குப் பின்னரே பில் தன் திருட்டுத் தொழிலுக்குத் தேவையான சில திறமைகளை வளர்த்துக் கொள்கிறார். உயரமான கட்டிடங்களில் கயிறு போட்டு மேலே ஏறி, மொட்டை மாடியிலிருந்து தனக்குத் தேவையான மாடிக்கு இறங்கி வருதல், சன்ஷேடில் நடந்து ஜன்னல் கண்ணாடியை கழற்றி உள்ளே நுழைதல், கள்ளச் சாவி போட்டு எந்தப் பூட்டையும் திறந்து விடுதல் (அவசரமாகப் ஒரு பூட்டைத் திறக்க வேண்டுமென்றால் பில் சாவியை வைத்துத் திறந்தால் நேரமாகும் என்று தன் பூட்டுத் திறக்கும் கம்பியை வைத்து சட்டென்று திறப்பான் என்று பின்னாளில் அவரது நண்பர் ஒருவர் போலீசிடம் சொல்லியிருக்கிறார்) என்று கற்றுக் கொள்கிறார். மிக விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளைத்தான் பணக்காரப் பெண்கள் விரும்புவார்கள் என்பதால், கற்களை மதிப்பிடுவதற்குப் படிக்கிறார். மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகத் தனக்கென்று திருடுவது குறித்த சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொள்கிறார்.

மிகப் பெரும் பணக்காரர்கள் தம்மிடம் பெருமை யாகச் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லாத போது, தமது பண வசதியை அளவுக்கு அதிகமாகவே வெளிக்காட்டுவார்கள் என்று அறிந்தவர் பில். அமெரிக்கப் பத்திரிகைகளில் பொது நிகழ்ச்சிகள், பார்ட்டிகள் போன்ற செய்திகள் அதிகம் இடம்பெறும். அதில் வரும் சீமாட்டிகளின் படங்களைக் கவனமாகப் பார்ப்பார். ஒவ்வொரு படத்திலும் வேறு வேறு நகை போட்டுக் கொண்டு அவர்கள் வந்தால், அவர்களைப் பின் தொடர ஆரம்பிப்பார். அவர்கள் குடியிருக்கும் அடுக்ககம், அதன் பாதுகாப்பு, இது போன்ற பார்ட்டிகளுக்குச் சென்றால் அவர்கள் பொதுவாக இரவு எத்தனை மணிக்கு வீடு திரும்புவார்கள், ஒவ்வொரு முறை பார்ட்டிக்குச் செல்லும்போதும் வங்கிக்குச் சென்று லாக்கரிலிருந்து நகையை எடுக்கிறார்களா அல்லது வீட்டிலிருந்தே எடுத்து அணிந்து செல்கிறார்களா என்று கவனிப்பார். இதற்கெல்லாம் அவர் Prospecting and Qualifying என்று பெயர் வைத்திருக்கிறார். இப்படி தேர்ந்தெடுத்ததும் அடுத்த கட்டத்திற்கு நகர்வார். அந்தக் கட்டத்தில் நான் ஒரு ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி போல, புதிதாய் ஒன்றைக் கண்டுபிடிக்கப் போகும் அறிவியலாளன் போல செயல்படுவேன் என்கிறார். அதனால் பில் செய்த பல திருட்டுகளை போலீஸ் ஒரு கும்பல் செய்ததாகவே கடைசி வரை நினைத்தது.

மனிதர்கள் ஒன்றிரண்டு கேள்விகள் கேட்டால், அது தொடர்பான அத்தனை விஷயங்களையும் கொட்டிவிடக் கூடியவர்கள் என்கிறார் அவர். அந்த அடுக்ககத்தின் மேலாளரைப் பார்த்து இங்கு ஒரு ஃபிளாட் வாங்குவதாக இருக்கிறேன். செக்யூரிட்டிதான் எனக்கு முக்கியம். விலை பற்றி கவலையில்லை என்பார். அந்த மேலாளர் அங்கு எத்தனை செக்யூரிட்டி, அவர்கள் எத்தனை ஷிப்ட்டில் வருவார்கள், எத்தனை பேர் வாசலில், எத்தனை பேர் ஒவ்வொரு தளமாக ரவுண்ட்ஸ் வருவார்கள், எத்தனை சிசிடிவி கேமரா, அவை எங்கெங்கு உள்ளன என்று நுணுக்கமாக விவரிப்பார். தான் திருடப் போகும் வீட்டின் பூட்டு எந்த மாடல் , அதன் வரிசை எண் என்ன என்பதைக் கூடப் பார்த்துவிடுவார். பின்னர் தனது ரியல் எஸ்டேட் கம்பெனி லெட்டர்பேடில், அந்த பூட்டுக் கம்பெனிக்கு ஐயா, நாங்கள் இன்ன இடத்தில் உள்ள அபார்ட்மெண்ட்டை வாங்கியுள்ளோம். இன்ன வரிசை எண் உள்ள பூட்டை மட்டும் திறக்க முடியவில்லை. அதன் காம்பினேஷன் எண் பற்றி விற்றவரிடம் கேட்டால் பதில் இல்லை. உங்கள் கம்பெனி பூட்டு என்பதால் நீங்கள் தரமுடியுமா? விலை உயர்ந்த பூட்டை உடைக்க மனமில்லாததால் உங்கள் உதவியை நாடுகிறோம் என்று எழுதுவார். இரண்டே நாட்களில் பூட்டின் காம்பினேஷன் எண் வரும்.

குறித்த நாளில் சம்பந்தப்பட்ட நபர் வெளியே சென்றதும், அந்த வீட்டுக்கு சற்று இடைவெளி விட்டு விட்டு ஐந்தாறு முறை பொது தொலைபேசியகத்திலிருந்து அழைப்பார். எவரும் எடுக்கவில்லை என்றால் உள்ளே நுழைவார். வேலையை முடிப்பார். எடுத்தவற்றை ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனித்தனியாக வேறுவேறு இடங்களில் விற்பார். அதன் அசல் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் கிடைக்கும் என்றாலும் அதுவே மில்லியன் கணக்கில் இருக்கும். திருடிய எந்தப் பொருளையும் ஆசைப்பட்டு நாமே வைத்துக் கொள்ளக் கூடாது. அது என்றாயினும் ஒருநாள் நம்மை மாட்ட வைத்து விடும் என்பது அவரது சொந்த விதிகளில் மிக முக்கியமானது.

18

இப்படி அவர் செய்த ஏராளமான திருட்டுகளில் மிக முக்கியமான பல திருட்டுகள் பற்றி நுணுக்கமாக வகுப்பு எடுப்பது போல் எழுதியிருக்கிறார். மிக அமைதியான இடத்தில் திருடுவதில் ஒரு வசதி என்னவென்றால், யாரேனும் வந்தால், பக்கத்து வீட்டில் கதவைத் திறந்தால் நமக்குக் கேட்டுவிடும். அதே சமயம் நாம் செய்யும் சிறு சப்தம்கூட நம்மைக் காட்டியும் கொடுத்துவிடும். யாரும் இல்லாத வீட்டில் என்ன சேரை நகர்த்தும் சத்தம் என்று யாரேனும் ஒருவருக்கு சந்தேகம் வந்துவிடும். அதே போல்தான் பக்கத்து. எதிர் ஃபிளாட்டுகளில் பாட்டை அலற விடும்
அக்கம் பக்கத்தினர் இருப்பதும் சாதக பாதகம் இரண்டும் கலந்ததுதான். அந்தப் பாட்டுச் சத்தம் திருடும் சத்தத்தை அமுக்கிவிடும். அதில் உள்ள ஒரு சிரமம், யாரேனும் வந்தாலும் தெரியாது என்பதுதான். திருடச் செல்லும்போது பயம் இருக்கவேண்டுமா? கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுதான் மாட்டிக் கொண்டு விடாமல் கவனமாக இருக்க வைக்கும். ஆனால், வேலையைப் பாதியிலேயே விட்டு விட்டு ஓடிவந்து விடுமளவு இருக்கக் கூடாது. வயதானவர்களிடம் திருடுவதில் பல சாதகங்கள் உண்டு. மிக முக்கியமானது அவர்கள் நீண்ட காலமாக நிறைய சேமித்து வைத்திருப்பார்கள். வருங்காலத் திருடர்களுக்கு அவர் கூறியிருக்கும் அறிவுரைகளில் மிக முக்கியமானது, வேலையை முடித்து விட்டுத் திரும்பிச் செல்லும் பாதையை கவனமாகத் தேர்ந்தெடுத்த பிறகே களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான். திருடப் போகும் போது உங்களை யாராவது நிறுத்தி விசாரித்தால் ஏதேனும் பதில் சொல்லித் தப்பிவிடலாம். ஆனால் கையில் திருட்டுப் பொருளோடு இருக்கும்போது அவ்விதமாகப் பதில் சொல்லித் தப்பித்தல் கடினம். கூடிய வரையில் சம்பவம் நடத்திய இடத்திலிருந்து உடனடியாக வெகு தூரம் சென்றுவிட வேண்டும். சம்பவம் நடந்தது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிய வேண்டும். வீட்டில் இருந்த வைர நெக்லஸ் காணோம் என்பதே பத்து நாட்களுக்குப் பிறகுதான் அவர்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தத் திருட்டில் மாட்டிக் கொண்டாலும் தப்பி விடலாம். ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை எங்கே இருந்தீர்கள்? என்று அரசு வழக்கறிஞர் கேட்பதற்கும், ஆகஸ்ட் மாதம் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? என்று அவர் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் ஜெயிலுக்கும், வீட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் புரிந்து கொண்டேன்.

இப்படியாக அவர் மிகப் பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள், பாப் பாடகிகள், என்று பல பிரபலங்கள் வீட்டில் கொள்ளையடித்திருக்கிறார். ஒரு முறை ஒரு பெரிய பணக்காரக் கிழவர் வீட்டில் கொள்ளையடிக்கிறார். என்ன எடுத்தோம் என்று கூடப் பார்க்காமல் அப்படியே லாக்கரில் வைத்து விடுகிறார். பேப்பரில் பார்த்தால் அந்தக் கிழவர் தான் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் வென்ற தங்கப்பதக்கங்களைக் காணோம் என்று அழுகிறார். 1924 பாரீஸ் ஒலிம்பிக்கில் நீச்சலுக்காக அவர் மூன்று பதக்கங்கள் வென்றவர். பில்லுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விடுகிறது. காரை எடுத்துக் கொண்டு பக்கத்து மாநிலம் சென்று அங்கு ஏதோ ஒரு கிராம அஞ்சலகத்திலிருந்து அந்த தங்கப் பதக்கங்களை அவரது முகவரிக்கு பார்சலில் அனுப்புகிறார். தொலை தூர இடங்களுக்கும் அவர் காரில்தான் செல்வார். விமானப் பயணத்தைத் தவிர்ப்பார். ஏனெனில் விமான நிலையங்கள் மிகப்பெரிய சல்லடைகள். அவை தன் போன்ற குற்றவாளிகளை மிக எளிதாகச் சலித்து எடுத்துவிடும் என்கிறார் பில். தன் தங்கப்பதக்கங்களைத் திருப்பித் தந்த புண்ணியவானுக்குக் கிழவர் நன்றி சொன்ன செய்தியைப் பத்திரிகையில் பார்த்த பிறகு குற்ற உணர்வு நீங்குகிறது.

இத்தனை கவனமாக இருந்தும் போலீசில் மாட்டுகிறார். தண்டனை பெறுகிறார். பரோலில் வந்து தப்பித்து வேறு பெயரில் வாழ்கிறார். விவாகரத்து ஆகிறது. மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தியை இரண்டாம் முறையாக மணக்கிறார். போலீஸ் வழக்கு மேல் வழக்காகப் போடுகிறது. முதல், இரண்டாம் மனைவிகளை, குழந்தைகளைப் பாடாய்ப்படுத்துகிறது. புத்தகத்தின் பல இடங்களில் தானொரு திருடன் என்பதையே மறந்து போலீஸ் அராஜகம், தனிமனித உரிமை பற்றியெல்லாம் பில் முழங்குவதைப் படிக்க சிரிப்பாக இருக்கிறது. ஒரு நாள் ஒரு மிகப் பெரிய அடுக்ககத்தில் திருடப் போய், 170 அடி உயரத்தில் இவர் ஏறிய ஏணி வழுக்கி விழ, அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்படுகிறது. அன்றோடு தொழிலை விட்டுவிடுகிறார். அந்தரங்கத்தில் தொங்கிய அந்த சில நிமிடங்களில் தான் செய்த கேவலமான செயல்கள், தன்னை மணந்த ஒரே பாவத்திற்காக மனைவிகள் பட்ட துன்பம், இழந்தவர்களின் வலி (ஒலிம்பிக் தங்க மெடலை இழந்தால் மட்டும்தான் வேதனையா? கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய சின்ன வெள்ளிக் கிண்ணமும் அந்த மெடல் போன்றதுதானே!) எல்லாம் மனதில் வந்து போக, மாறிய மனிதனாகக் கீழே விழுந்து தப்பிக்கிறார்.

என் செயல்களை நான் நியாயப்படுத்தவில்லை. என் வாழ்வில் நடந்தவற்றை, நான் செய்தவற்றை, உணர்ந்தவற்றை அப்படியே சொல்லியிருக்கிறேன். கூடுதலாக, என் இந்த அத்தனை செயல்களும் என்னைச் சுற்றியிருந்த எனது குடும்பத்தாரை எப்படி பாதித்தன என்பதைச் சொல்லியிருக்கிறேன் என்கிறார். இந்தப் புத்தகத்தின் வருமானத்தின் பெரும்பகுதியைத் திருட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பிற்கு நன்கொடையாகத் தருகிறார்.

வாசிப்பு சுவாரஸ்யத்திற்காக தலைப்பு அமெரிக்கா வின் மணியம் பிள்ளை என்று நான் தந்திருந்தாலும், மணியம் பிள்ளை பில் மேசனுக்கு முன்னால் பச்சைக் குழந்தை. பில் மேசன் கோடி கோடியாகத் திருடியபோதும், மணியம் பிள்ளை போல் அரசியலில் இறங்கிக் கலக்கவில்லை என்பது மற்றொரு முக்கியவேறுபாடு. ஒரு வேளை இந்திய அரசியல் திருடர்களுக்கான பிரத்யேகமான களமாக இருப்பது போல் அமெரிக்காவில் இல்லை போலும். இருந்திருந்தால் பில் மேசன் அதிலும் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்!

ஆர்வம் உள்ளோர் வாசிக்க – Confessions of a Master Jewel Thief by Bill Mason.

subbarao7@gmail.com