மல்லிகாவை இப்போது பார்த்தால் அழகியாக உணர்வேனா என்று தெரியவில்லை..ஆனால் எட்டு வயதில் அப்படித்தான் உணர்ந்திருக்கிறேன் .
அழகைப் பற்றிய வரையறைகள் இல்லாததாலேயே மனம் அழகாயிருந்த பருவம் அது.
தேனி மாவட்டத்தில் குச்சனூர் என்கிற சிற்றூரில் இப்போதுமிருக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் நாங்கள் படித்தோம். அப்போது நன்னா அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.நான் வாத்தியார் பேரன். அதுவும் ‘ஐஸ்கூல் வாத்யார் பேரன்’ என்பதால் எனக்கு இந்தப் பள்ளியில் கூடுதல் செல்லம். எனக்கிருந்த மனப்பாடத் திறமை , வீட்டிலிருந்த நல்ல சூழல் ஆகியவற்றால் நான் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்து விடுவேன்.அதனால் என்னை ‘அறிவாளி அறிவாளி’ என்று கூடுதலாக ஏத்தி விட்டு ஆசிரியர்கள் முட்டாளாக்கி வைத்திருந்தார்கள்.
மல்லிகாவின் முகம் இப்போதுகூட மங்கலாகத்தான் நினைவிலிருக்கிறது.
இரட்டை ஜடை வைத்து பூப் போட்ட சட்டை , பாவாடை அணிந்த எந்தச் சிறுமிகளைக் கண்டாலும் அவர்கள் எனக்கு மல்லிகாதான் .
இத்தனைக்கும் ஏதாவது விசேஷ நாட்களில்தான் பள்ளிக்கு சாதாரண ஆடைகளைப் போட்டு வர முடியும். மற்ற நாட்களில் பொம்பளைப் பிள்ளைகளுக்கு வெள்ளைச் சட்டை, ப்ளூ பாவாடைதான். பசங்களுக்கு அதைவிட மோசம். காக்கி டவுசர். நன்னா நயந்துணியாக எடுத்து அவரே தைத்துத் தருவார். அது பழைய படங்களில் பார்க்கிற போலீஸ் டவுசர் மாதிரி முட்டி வரைக்கும் நீண்டிருக்கும். ‘ சீக்கிரம் வளந்துருவான் ‘ என்று கணக்குப் பண்ணி நன்னா பெரிய டவுசராகவே தைத்து விடுவார்.சட்டையும் அப்படித்தான். அதுவும் கிட்டத்தட்ட முட்டியைத் தொட முயற்சிக்கும். ஆனால் எம்ஜிஆர் தந்த சீட்டித் துணி பலருக்கும் சரியான அளவில் பொருந்தியிருக்கும். நான் வாத்தியார் வீட்டுப் பிள்ளை என்பதால் செருப்பு , பல்பொடி , சீருடை இவையெல்லாம் தருகிற நாட்களில் அழுது கொண்டே வீட்டிற்கு வருவேன். சித்திமார்கள் விசாரித்தால் ‘ என்னைய வாத்தியாரு வீட்டுக்குப் போடான்னு தொரத்தி விட்டுட்டாரு . ‘ என்று சொல்லி குமுறிக் குமுறி அழுவேன். அதைக் கேட்டு அவர்கள் சிரிக்கும் போதெல்லாம் கோபம் கோபமாய் வரும். ஒரு நாள் இன்னொரு ஐஸ்கூல் வாதியார் மகனும் என் வகுப்புத் தோழனுமான டேவிட் ‘ நாமெல்லாம் பணக்காரங்க. அவங்க ஏழைங்க . அதாண்டா நம்மள அவங்க கூடச் சேராம சார்லாம் போகச் சொல்லிர்றாங்க ‘ என்று ‘பொருளாதாரப் புலியாக’ மாறி விளக்கியபோது உடனே சந்தோஷமடைந்து வீட்டிற்குப் போனவுடன்’ அப்ப நாமெல்லாம் பணக்காரங்களா ?’ என்று நன்னாவைக் கேட்டேன். அப்படிக் கேட்டபோது அவர் வீட்டு முதலாளியின் வருகையை எதிர்நோக்கியபடி வாடகைப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். என்னை எதற்காக்க் குடைக்கம்பால் விரட்டினார் என்பதை இப்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.
கண்டிப்பாகப் பலமுறை மல்லிகாவை சீருடையில்தான் பார்த்திருப்பேன். ஆனால் எவ்வளவு யோசித்தும் அது நினைவில் வர மறுக்கிறது. அதைவிட ஆச்சர்யம் ஒன்றாம் வகுப்பிலிருந்தே மல்லிகா என்னுடன்தான் படித்திருக்கிறாள். அந்த இரண்டு ஆண்டுகளில் மல்லிகா தொடர்பான எதுவுமே நினைவில் இல்லை. இத்தனைக்கும் எனக்கு மூன்று வயதில் நிகழ்ந்த சில சம்பவங்கள் கூட இப்போதும் நினைவில் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது முதலிரண்டு ஆண்டுகள் ஏன் நினைவிற்கு வரவில்லை ?என்பது என் வாழ்வின் தனிப்பட்ட மர்மங்களில் ஒன்று. ஆனால் மூன்றாம் வகுப்பை யோசித்தாலே மல்லிகா மட்டும்தான் நினைவுக்கு வருகிறாள். காரணம் அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
மல்லிகாவின் குரல் எப்படியிருக்கும் என்று இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியாது. அவளோடு நான் பேசியதேயில்லை. மற்ற பெண் பிள்ளைகள் எல்லாம் சத்தமாய் ‘ ஆறு பதினொன்னா ஐம்பத்தாறு ச்சீ ச்சீ அறுபத்தாறு ‘ என்று கோரசாகச் சத்தம் போடுகிற போதுகூட மல்லிகாவின் உதடுகள் மட்டும்தான் மெல்ல அசையும். குரல் வெளியே வராது. ‘லே அஜ்மீரு இது ஒன் அண்ணாக்கயிறா ?’ ‘ ரமேஷூ என் சிலேட்டுல ஒன் எச்சியை தடவாதடா..இதுக்குத்தே தர மாட்டின்னீ ‘ என்றெல்லாம் ஒலிக்கும் விதவிதமான குரல்களின் ஜோதியில் அவளுடைய குரல் கலந்ததேயில்லை. வருகைப் பதிவு எடுக்கும் போது ‘ உள்ளேன் ஐயா ‘ என்றோ ‘ எஸ் டீச்சர் ‘ என்றோ ‘ ப்ரசெண்ட் சார் ‘ என்றோ சொல்லியிருப்பாள்தான். ஆனால் பசங்க பெயர் வருகிற போதுதான் நான் பரபரப்புடன் என் பெயருக்காகக் காத்திருப்பேன். பொம்பளைப் புள்ளைங்க பெயர்களை வாசிக்கும் போது கால்சட்டைப் பையில் இருக்கிற கொடுக்காப் புளியோ , ஆரஞ்சு மிட்டாயோ’ பத்திரமாக இருக்கிறதா ?’ என்று எச்சரிக்கையோடு தடவிப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருவேளை மல்லிகா எதுவுமே சொல்லாமல் வெறுமனே கூட எழுந்து நின்றிருக்கலாம்.அது நினைவில் இல்லை.
வகுப்பில் நன்றாகத் தலை வாரி ,ரிப்பன் வைத்துப் பின்னி, பொட்டு வைத்து, பவுடர் பூசிய பெண்கள் அநேகமாக மல்லிகாவும் , அவள் பக்கத்திலேயே இருக்கும் மற்றொருத்தியும்தான். பசங்களிலும் அப்படித்தான். எனக்கு சித்திமார்கள் எல்லா அலங்காரங்களையும் செய்து விடுவார்கள்.கடைசியாக ‘திருஷ்டி பட்ரும்’ என்று வலது நெற்றிப் பொட்டில் கறுப்பு மையை சின்ன சைஸில் வைத்து விடுவார்கள் . முகத்திற்கு மட்டுமல்லாது உச்சந்தலையிலும் கோகுல் சாண்டல் பவுடர் இருக்கும்.
மல்லிகாவுடனான அந்த விநோத விளையாட்டு எப்படித் தொடங்கியது? என்று சரியாக ஞாபகமில்லை. ஆசிரியர் இல்லாத தருணங்களில் மாணவர்களுக்கும் , மாணவிகளுக்கும் ‘யார் பெருசு ? ‘ என்று பரஸ்பரம் நிரூபித்துக் கொள்கிற முனைப்பில் போட்டிகள் நடக்கும். மாணவர்கள் உள்ளேயிருக்கும் புத்தகங்கள் கீழே விழாதபடிக்கு பையைத் தூக்கிக் கரகரவெனச் சுற்றி மாணவிகளைச் சீண்டுவார்கள்.மாணவிகள் சுற்றுகிற போதெல்லாம் சொல்லி வைத்தது மாதிரி புத்தகங்கள் தெறித்து எங்கெங்கோ போய் விழும். மாணவிகள் பதிலுக்கு பாவாடையை தூக்கிச் சொருகிக் கொண்டு பாட்டுப் பாடியபடி நொண்டியடிப்பார்கள். மாணவர்கள் நொண்டியடித்தால் பார்க்கவே சிரிப்பாக இருக்கும்.
ஒருநாள் ‘ கோழி பெருசா ? சேவ பெருசா ?’ என்று அஜ்மீர் கண்களை உருட்டிபடி பெண்கள் பக்கம் போய் குண்டியை ஆட்டியபடி கத்திய போது ‘ கோழிதாண்டா முட்டை போடும். கோமுட்டித் தலையா ‘ என்று கீதா சொன்னவுடன் ,அந்த பதிலால் எரிச்சலடைந்த அஜ்மீர் ‘ நாங்க டவுசர் போடுவோம். நீங்க போடுவீங்களாடி ?’ என்று விரல்களை ஆட்டிக் கொண்டே எல்லோரையும் நக்கலான பாவனையில் சுற்றி வந்தான் . கீதாவும் எழுந்து பாவாடையைச் சொருகிக் கொண்டே அவனை அடிக்கப் போகிற தோரணையில் ‘ நீ பாவாடை போடுவியாடா ?’ என்று ஐந்து விரல்களையும் காற்றில் சுதி மீட்டுவது போல் அசைத்துக் கொண்டே கேட்டாள். அஜ்மீருக்குக் கோபம் எல்லை தாண்டி ‘ கழட்டித் தாடி, போடறேன் ‘ என்று அவள் முகத்துக்கு நேராகப் போய்க் கேட்டு விட்டான். அன்று முழுவதும் கீதா அழுது கொண்டே இருந்தாள். விஷயம் வாத்தியார்கள் மூலமாக ஹெச்.எம் வரை போய் விட்டது. ஹெச்.எம். வகுப்பிற்கே வந்து ‘ பாவாடை வேணுமா ஒனக்கு..இந்தா வாங்கிக்க இது பச்சைப் பாவாடை..இது மஞ்சப் பாவாடை ..இது ப்ளூ பாவாடை ‘ என்று குனிய வைத்து முதுகில் சாத்தினார். அன்றிலிருந்து அஜ்மீரைச் சீண்ட வேண்டும் என்றால் ‘ அஜ்மீர் பாவாடை வேணுமா ? ‘ என்று எவனாவது கேட்டு விட்டு நிற்காமல் ஓடி விடுவான்.ஹெச் .எம். அஜ்மீரைக் குனிய வைத்து துவம்சம் செய்வதை கீதா முகமெல்லாம் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..
இப்படிப்பட்ட கூத்துகள் நடந்து கொண்டிருந்த ஒரு நாளில் நான் வைத்த கண் வாங்காமல் மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் என்னைப் பார்த்தாள்.அவள் தலையின் பின்புறத்தில் கனகாம்பரம் வைத்திருந்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. மல்லிகாவுக்கு முட்டைக் கண்கள். அந்தக் கண்களில் இருந்தது ப்ரியமா ? பயமா ?தடுமாற்றமா ? என்பதை எவராலும் பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆண் – பெண் விளையாட்டில் மும்முரமாக இருந்த போது நான் எழுந்து மல்லிகாவை நோக்கிப் போனேன்.அவள் அருகில் நின்றபடி ‘ எந்திரி ‘ என்றேன். மல்லிகா கண்களில் குழப்பத்தோடு ஆனால் எதற்கென்றே கேட்காமல் உடனே எழுந்தாள். நான் மல்லிகாவை ஓங்கி அறைந்தேன். நிச்சயமாக அந்த அடி வலித்திருக்கும். என்னதான் பிஞ்சுக் கரங்கள் என்றாலும் அது ஓர் ஆணின் அடி. மல்லிகா கொஞ்ச நேரம் அப்படியே நின்றாள். நான் அடித்த உடனே என் இடத்திற்கு வந்து விட்டேன். மல்லிகாவுக்கு பக்கத்திலிருந்த தோழி மட்டும்தான் இதைப் பார்த்திருந்தாள்.மற்ற யாருமே கவனிக்கவில்லை. மல்லிகா அமர்ந்த பிறகு ஒரே ஒரு முறை கன்னத்தைத் தடவிக் கொண்டே என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் வெறுப்போ , கோபமோ, வருத்தமோ கொஞ்சம் கூட இல்லையென்பதை என்னால் உணர முடிந்தது. ஏதோ ஒரு வேகத்தில் போய் அடித்து விட்டாலும் பயந்து கொண்டேதான் திரும்ப வந்தேன். ஆனால் இப்போது பயம் போய் விட்டது. எதையோ சாதித்து விட்ட மாதிரி ஜிவ்வென்றிருந்தது. மல்லிகாவைப் பார்த்துச் சிநேகமாய்ச் சிரித்தேன். மல்லிகா அதே முகபாவத்தோடு என்னைப் பார்த்தாள். ஆனால் சிரிக்கவில்லை. நான் மீண்டும் பார்த்த போது தலையைக் கீழே போட்டுக் கொண்டாள்.
அதற்குப் பிறகு வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாமல் ஆண் / பெண் விளையாட்டு நடக்கும் போதெல்லாம் ‘இந்த அறை விளையாட்டும் ‘ தொடர்ந்து. ஒரு முறைகூட மல்லிகா என்னைக் கண்டு ஓடவோ , தடுக்கவோ முயலவில்லை. அறைந்த பிறகு ஒருநாள் கூட அழவில்லை. அவளோடு அமர்ந்திருக்கும் பெண்தான் என்னை முறைத்துக் கொண்டேயிருப்பாள். சில சமயம் என்னைக் காட்டியபடி மல்லிகாவைத் திட்டுவாள். அவள் திட்டுகிற தருணங்களில் எதுவுமே சொல்லாமல் மல்லிகா தலையைக் கீழே போட்டிருப்பாள். ஒரு நாள் நான் அடிக்கிற போது எதிர்பாரா விதமாக கீதா பார்த்து விட்டாள். அன்று அஜ்மீர் வரவில்லை.நாயைத் துரத்துகிற பாவனையில் என்னை நோக்கி ஓடி வந்தவள் ‘ ஒன் கையை நல்ல பாம்பு புடுங்கும்டா..நா அடிக்கட்டா ஒன்னிய ‘ என்று கையை ஓங்கினாள். ஒரு நிமிடம் அடித்து விடுவாளோ? என்று பயமாக இருந்தது. அஜ்மீருக்கு ‘ பாவாடை ‘ என்று பெயர் வந்ததைப் போல் எனக்கு ‘ பொம்பளைப் புள்ளகிட்ட நொக்குப் பெத்தவன் ‘ என்று பட்டப் பெயராகி விடுமோ என்று யோசித்த போது அவமானமாக இருந்தது. ஆனால் கீதா அடிக்கவில்லை. ஓங்கிய கையோடு நகர்ந்து விட்டாள. ‘ ஏண்டி சும்மா சிலை மாதிரி நிக்கிற. நீயென்ன ஒண்ணுக்குமத்த ஜடமா ? திருப்பியடிக்க கையில்லையா ஒனக்கு ? ”என்று கீதா ஆவேசப்பட்ட போது மல்லிகா வழக்கமான அதே அமைதியோடு உட்கார்ந்திருந்தாள். அவள் ‘ இரு நா போயி வாத்தியாரை” கூட்டிட்டு வாரேன் ‘ என்று நகர்ந்த போது மல்லிகா அவள் காலில் விழாத குறையாகக் கெஞ்சி கீதாவின் சட்டையே கிழிந்து போகுமளவுக்கு இழுத்து உட்கார வைத்ததை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். எனக்கு அது ரொம்பப் பெருமிதமாக இருந்தது. அந்த வயதிலேயே கூடுதலான தன்னம்பிக்கையோடு என்னை உணர வைத்தது. நான் முதன்முதலில் என்னை ஆணாக உணர்ந்தது அந்த நொடியில்தான்.அந்தத் தன்னம்பிக்கையும் , பெருமிதமும் அடுத்த நாளும் மல்லிகாவை அடிப்பதற்குரிய தைரியத்தை வழங்கியது.
மல்லிகாவுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவன் பெயர் ராஜா. அவன் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தான். கலைந்த தலையும் உயரமான தோற்றமும் , தெனாவெட்டான பார்வையுமாய் ஆள் ரௌடி போலவே இருப்பான். அவனை மல்லிகாவின் அண்ணன் என்று நம்பவே முடியாது. மல்லிகாவுக்கு அவ்வளவு சாதுவான முகம். அவன் ரீசஸ் பீரியடில் யாரையாவது சும்மா கூப்பிட்டால் கூட பயந்து ஓடி விடுவார்கள். எல்லோரின் சட்டைப் பையிலும் , டவுசரிலும் உரிமையாகக் கை விட்டு பிடுங்கித் தின்பான்.ஒருநாள் அஜ்மீர் டவுசரில் கை விட்டு’ ஊறுன நிலக்கடலையை’ பிடுங்கித் தின்றதால் கோபத்தில் அவன் தர்ஹாவுக்குப் போய் முட்டை ஓதி வைத்துதான் ராஜாவுக்கு மூன்று நாட்கள் ‘வகுத்தாலை போனதாக’ எல்லோரும் பேசிக் கொண்டார்கள். எனக்கு மட்டும் அந்த நிலக்கடலை மீதுதான் சந்தேகம் இருந்தது. ராஜாதான் மல்லிகாவின் அண்ணன் என்கிற விஷயம் எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியாது. அஜ்மீர்தான் அந்த விஷயத்தை ஒரு நாள் போட்டுடைத்தான். அன்றிலிருந்து பல நாட்கள் மல்லிகாவை அடிக்காமல் இருந்தேன். வழக்கமான ஆண் / பெண் விளையாட்டுத் தருணங்களில் மல்லிகா என்னை நிமிர்ந்து பார்ப்பாள். இப்போது நான் தலை குனிந்து கொள்வேன்.
நான் வகுப்பு லீடர் என்பதால் ஆசிரியர் இல்லாத தருணங்களில் கரும்பலகையில் ‘பேசுகிறவர்கள்’ பெயர் எழுதிப் போட வேண்டும்..அன்று போத்திராஜா என்பவன் என்னைக் கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்து கொண்டான். அவன் பெயரை எழுதி ‘மிக மிக மிக மிக அதிகமாகப் பேசியவன்’ என்கிற குறிப்பையும் சேர்த்து விட்டேன். அப்போதுதான் ஹெச். எம். மிடம் எதற்காகவோ திட்டு வாங்கி விட்டு வந்திருந்த கணேசன் சார் அவனைப் புளிய விளாறால் அடித்து நொறுக்கி விட்டார். பலமுறை அலறியும் அவர் அவனை விடவில்லை. அந்த வகுப்பு முடிந்ததும் ‘ என்ன மாட்டி விட்டீல.. ஒனக்குச் சாயங்காலம் இருக்குடி மாப்ள ‘ என்று காதுக்குள் சொல்லி விட்டுப் போய் விட்டான். போத்தி ராஜா தனி ஆள் இல்லை. அவனுக்கு நாலைந்து எடுபுடிகளும் உண்டு.எனக்கோ பயத்தில் அப்போதே ஒண்ணுக்கு வரும் போல் இருந்தது. போத்தி ராஜா மிரட்டியதை நேரிலேயே பார்த்திருந்ததால் சாயங்காலம் மணி அடித்ததுமே டேவிட்டும் , அஜ்மீரும் என்னைத் தனியே விட்டு விட்டு ஓடி விட்டனர். வேறு தெருக்களைச் சுற்றியாவது வீட்டுக்குப் போய் விடலாம் என்று ஒளிந்து ஒளிந்து பின் வாசலுக்குப் போனேன். நான் முள்ளுச் செடியைத் தாண்டியதும்தான் போத்திராஜாவும் அவன் ஆட்களும் என்னைச் சுற்றி வளைத்திருந்தது தெரிய வந்தது. அந்தப் படுபாவி கையில் காம்பஸ் வேறு வைத்திருந்தான். கெஞ்சி அழுது காலில் விழுவதற்கும் சுயமரியாதை இடம் தரவில்லை. பயத்தில் கண்களை மூடிக் கொண்டேன். யாரும் என்னை அடிக்கவில்லை. ஆனால் நாலைந்து பேர் ஓடும் சத்தம் கேட்கவும் கண்களைத் திறந்து திரும்பிப் பார்த்தேன். ராஜா என் அருகில் வந்து ‘ இவனையாம்மா?’ என்று கேட்டான். அவனுக்குப் பின்னால் நின்ற மல்லிகா மௌனமாக தலையசைத்தது. ‘ எதுக்குடா உன்னைய அடிக்க வர்றானுங்க? ‘ ..எனக்கு பயத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது. என்னைக் காப்பாற்றத்தான் மல்லிகா ராஜாவை அழைத்து வந்திருக்கிறாள் என்று புரிவதற்கே கொஞ்ச நேரம் ஆனது. ‘ நீ போடா அண்ணே இங்கேயே நிக்கிறேன்..தைரியமா போ .எந்தங்கச்சிதே வந்து விஷயத்தைச் சொல்லுச்சு ‘ என்றவனிடம் பலவீனமான குரலில் ‘ நன்றிண்ணே ‘ என்றேன். அவன் பின்னால் நின்ற மல்லிகா என்னைப் பார்த்து முதல்முறையாக லேசாகச் சிரித்த மாதிரி இருந்தது. இரண்டு மாதமாக அவளை அடிக்காமல் இருந்தவனுக்கு மீண்டும் தைரியம் வந்தது அதற்கடுத்த நாள்தான்.
இதே கதை அடுத்தடுத்த மாதங்களிலும் அவ்வப்போது தொடர்ந்தது. ஒரு நாள் நான் அறைகிற நேரத்தில் மிகச் சரியாக கணேசன் சார் வகுப்புக்கு வந்து விட்டார். எனக்கு பயத்தில் உடல் வியர்த்து விட்டது. ‘ வாடா இங்க ‘ என்று உறுமினார்.இன்று என் வாழ்வின் இறுதி நாள். மனிதர் என்னைத் தோலை உரித்துக் கொல்லப் போகிறார் என்று பயந்து கொண்டே அருகில் சென்றேன்..
‘ எதுக்குடா பொம்பளப் புள்ளைய அறைஞ்ச? ‘
‘……………’
‘ சொல்றியா ஈரல் , கிட்னியை எல்லாம் உள்ள கைய விட்டு உருவி எடுக்கவா. ‘
‘ ம்மேய் இங்க வா ..இவன் ஒன்னிய அடிச்சானா? ..பயப்படாம சொல்லு..இவனுக்கு ரெட் இங்க்ல சுழிச்சு டிசிய தந்திரலாம்.வாத்யார் பேரன்னா கொம்பா இருக்கு ..சொல்லுமா.. அடிச்சானா? ‘
மல்லிகா ‘இல்லை’யென்று தலையசைத்ததை குனிந்தபடியே உணர முடிந்தது.
‘பின்ன. ‘
எங்களையே பார்த்துக் கொண்டிருந்த அஜ்மீர் சந்தர்ப்பம் கிடைத்து விட்டதை உணர்ந்து என்னைக் காப்பாற்றும் முனைப்போடு ‘ அவன் அடிக்கலை சார்..இது சும்மா விளையாட்டு சார் ‘ என்று எழுந்து நின்று கத்தினான்..
‘இல்ல சார் ..அடிச்சான் சார் ‘ கீதா ஆக்ரோஷமாக எழுந்து வந்தாள்.மல்லிகா மீண்டும் ஒரு முறை ‘இல்லை’யென்று தலையசைக்க அஜ்மீர் உச்ச கட்ட ஆவேசத்துடன் ‘ சார் விளையாட்டு சார்..வேணும்னே யாராவது அடுத்த வீட்டு பொம்பளைப் புள்ளிய அடிப்பாங்களா சார்.. விளையாட்டு சார் ‘ என்று விடாமல் கத்த, கீதா என்னை முறைத்தபடி உட்கார்ந்து விட்டாள்.
அவனைக் கையமர்த்தி விட்டு கணேசன் சார் சில நிமிடங்கள் மல்லிகாவையே உற்றுப் பார்த்து விரல்களால் அமரச் சொல்லி சைகை காட்டியபடி கரும்பலகையை நோக்கிப் போனார். அமரப் போன மல்லிகாவை உற்றுப் பார்த்தேன். அவள் கண்கள் முதல் முறையாகக் கலங்கியிருந்தன. என்னை ஒரு முறை பார்த்து விட்டுத் தலையைக் கீழே போட்டுக் கொண்டாள்.
அந்தப் பள்ளியில் அதுதான் என் கடைசி நாள் என்றோ , அதற்குப் பிறகு நான் மல்லிகாவை பார்க்கவே போவதில்லை என்றோ அந்த நிமிடம் எனக்குத் தெரியாது. காலையில் பள்ளிக்குப் போகிறபோது யாருமே என்னிடம் சொல்லவில்லை. ‘இவனென்ன பெரிய மனுஷனா ?’ என்கிற நினைப்பில் சொல்லாமல் இருந்திருக்கலாம். நன்னாவுக்கு வேலை மாற்றலானதால் மறுநாளே சின்னமனூர் போய் விட்டோம்.
அதற்குப் பின் நீண்ட நாட்கள் இந்த நினைப்பேயில்லை. ‘ஆட்டோகிராப் ‘படம் பார்த்த போதுதான் மீண்டும் மல்லிகா நினைவுக்கு வந்தாள்.
அதற்குப் பின் பள்ளிக்காதல் குறித்த பேச்சு வருகிற போதெல்லாம் மல்லிகாவே நினைவுக்கு வந்திருக்கிறாள். ஆனால் எப்போதும் அவளை நான் நெகிழ்வுடனோ , கடந்த காலம் பற்றிய ஏக்கத்துடனோ , பிள்ளைக் காதலின் பரவசத்துடனோ நினைவு கூர்ந்ததில்லை. மாறாக, அவள் குறித்து யோசிக்கிற போதெல்லாம் நான் ஆழமான குற்ற உணர்வுக்கு ஆளாவேன்.
வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் அவளை ஏன் அறைந்தேன் ?என்று பலமுறை யோசித்திருக்கிறேன். மூன்றாம் வகுப்பு படிக்கிற காலகட்டத்தில் அவளைக் குறித்து இன்னதென்று தெரியாத பரவச உணர்வுடனே தனிமைப் பொழுதுகளில் அவளை நினைத்திருக்கிறேன் என்பதை இப்போது உணர முடிகிறது. அந்த அளவுக்கு மனதுக்கு நெருக்கமானவளை ஏன் அத்தனை முறை அறைந்தேன் என்று அடிக்கடி யோசிப்பேன்.
அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. திராவிட உணர்வு கொண்ட நன்னா அவருடைய இறுதி நாட்களில் தீவிரமான மதவாதியாக மாறியிருந்தார். தொலைக்காட்சி வழியாக சாத்தான் வீட்டுக்குள் நுழைந்து விடுவான் என்பது அவருடைய பல்வேறு பயங்களில் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. அவர் தொழுவதற்காக அஸருக்குப் பள்ளிவாசல் போனால் இஷா முடிந்துதான் வீட்டுக்கு வருவார். இந்த இடைப்பட்ட தருணங்களில் அவருக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டு ஆஷூரா மாமி வீட்டில் போய் படம் பார்ப்பேன். அப்போது சென்னை தொலைக்காட்சி நிலையம் மட்டும்தான்.ஞாயிற்றுக்கிழமை விளம்பரங்களுக்கு நடுவில் ஏதாவதொரு பழைய படத்தைப் போடுவார்கள். என்னுடைய பொது அறிவு ஞாயிற்றுக்கிழமை படங்கள் வாயிலாகவே கொஞ்சூண்டு வளர்ந்தது..அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.. நன்னிமாவும் நன்னாவுக்குத் தெரியாமல் ஞாயித்துக்கிழமை என்னோடு படம் பார்க்க வருவார். எம்ஜிஆரோ , சிவாஜியோ , ஜெமினியோ , ஜெய்சங்கரோ , முத்துராமனோ ஏதாவது ஒரு நடிகையுடன் வாயைக் குவித்தபடி காதல் வயப்பட முயல்கிற போதெல்லாம் நன்னிமா என் முகத்தை மூடிக் கொள்ளச் சொல்வார். நான் உடனே தலையைக் கவிழ்ந்து கண்ணை மூடிக் கொள்வேன்.சில சமயங்களில் அவரே என்னை மடியில் போட்டு சேலையால் முகத்தை மூடி விடுவார். சண்டைக் காட்சிகளை விரும்பிப் பார்ப்பேன். ஆனால் சரோஜாதேவியோ , சாவிதிரியோ , சௌகார் ஜானகியோ ,வாணிஸ்ரீயோ, ஜெயலலிதாவோ தங்கள் ப்ராண நாதர்களிடம் அறை வாங்குகிற காட்சிகளை ‘பார்க்காதடா பேராண்டி’ என்று நன்னிமா ஒருபோதும் தடுத்ததேயில்லை.
எங்கள் வீட்டிலிருக்கிற ஒரே தம்பதியான நன்னா , நன்னிமா வயதானவர்கள். சித்திகள் திருமணமாகாதவர்கள்.மாமா டீன் ஏஜ் பையன். நானோ அதிகம் வெளி உலகத்திற்கு அனுமதிக்கப்படாத கட்டுப்பாடுகளுக்குள் வளரும் சிறுவன். வீட்டில் வானொலியோ , தொலைக்காட்சியோ இல்லை. தாத்தாவின் தொழுகைத் தருணங்களில் வாய்க்கிற கொஞ்ச நேரத்தில் நான் பார்த்ததெல்லாம் ஆண் பெண்ணை அடிப்பதை மட்டுமே. கணவன் , மனைவி என்றாலே சிறுவயதில் என் மனதில் இப்படித்தான் பதிவாகியிருக்கிறது . அதனால்தான் எனக்கே தெரியாமல் மல்லிகாமீதான உரிமையை நான் இப்படிக் காட்டியிருக்கிறேன். கடந்த தலைமுறையில் கோபம் மட்டுமல்ல அன்பும் , உரிமையும்கூட வன்முறை வடிவத்திலேயே ஆண்களால் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த வயதில் யோசித்தால் அயர்ச்சியாக இருக்கிறது. ஆனால் மல்லிகாவும் அதே அர்த்தத்திலேயே எப்படிப் புரிந்து கொண்டாள் ? அவள் வளர்ந்த சூழலில் ஆண் பெண்ணை அறைவது சர்வ சாதாரணமாக இருந்திருக்கலாம். அதனால்தான் விரும்பியே என்னை அனுமதித்தாளோ? ஒருவேளை அவளைப் பற்றிய இந்த மதிப்பீடு என் அதீத கற்பனையாகக் கூட இருக்கலாம். அவளுக்கு நான் அறைந்தது பிடிக்காமல் அதே நேரத்தில் எனக்கு ஹெச்.எம். டிசி கொடுத்து விடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்திருக்கலாம். ‘நீ செய்வது தவறு ‘என்று ஒரு ஆண் பிள்ளையிடம் சொல்வதற்குத் தைரியம் வராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் ,அன்று ஏன் போத்திராஜாவிடமிருந்து என்னைக் காப்பாற்ற ஓடி வந்தாள்?. ‘நல்ல பெண், அப்படித்தான் பண்போடு நடந்து கொள்வாள் ‘ என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொள்வேன். அவள் குறித்து மாற்றி மாற்றி யோசித்தாலும் என்னை மட்டும் என்னால் ஒருபோதும் மன்னிக்கவே முடிந்ததேயில்லை.
கடந்த வாரம் ஒரு வேலையாக குச்சனூர் பக்கம் போனபோது பள்ளிக்குள் போக வேண்டும் என்று தோன்றியது.பாதி வகுப்பறைகள் இடிந்து கிடந்தன. அழிந்துபோன உலகமொன்றின் எலும்புச் சிதிலங்களாய் சில சுவர்கள் எழுந்து நின்றன. சுவர்களில் ஆங்காங்கே பல கிறுக்கல்கள் இருந்தன. ஏதோ ஓர் உந்துதலில் அருகில் போய் பார்த்தேன்.. ஒரு ஓரத்தில் ‘கணேசன் சார் ஒழிக ‘ என்று யாரோ எழுதியிருந்தார்கள்.அவர் ஓய்வு பெற்றே பல ஆண்டுகள் ஆகியிருக்கும். அவரை ‘ஒழிக ‘ என்று சொன்னவனே ஒருவேளை ஒழிந்து போயிருக்கலாம். கணேசன் சார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா ? என்று யாரிடமாவது கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே அந்தப் பெயரை மெல்லத் தடவிப் பார்த்தேன். ‘அன்று நீங்கள் என்னை ஒரு முறையாவது அறைந்திருக்கலாம் கணேசன் சார் ‘ என்று மானசீகமாக அவரோடு உரையாடினேன்.சின்னத் தப்புச் செய்தாலே உண்டதைக் கக்குமளவு அடிக்கிற கணேசன் சார் அன்று அவர் கண் முன்னால் ஒரு பெண் பிள்ளையை அறைந்தும் ஏன் உடனே அடிக்காமல் சாவகாசமாக விசாரிக்க ஆரம்பித்தார் ? அதுவும் மல்லிகா ‘இல்லை’யென்று தலையாட்டியதும் ‘எனக்கென்ன ? ‘என்று சாதாரணமாக விட்டு விட்டு தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டாரே..அன்று அவர் மல்லிகாவைப் பார்த்த ஒரு நிமிடப் பார்வையிலேயே எதையோ கண்டு பிடித்தவர் மாதிரி இருந்தார். அதனாலேயே என்னை விட்டு விட்டாரா?. ‘உனக்கு உரிமையான பெண்மீது கை நீட்டலாம். அடுத்தவளைத்தான் அடிக்கக் கூடாது ‘ என்பதுதான் அவர் தன் மௌனத்தால் நடத்திய கடைசிப் பாடமா ?
இதுவரை மல்லிகா பற்றி மட்டுமே யோசித்திருக்கிறேன். கணேசன் சார் குறித்து இப்படிச் சிந்தித்ததில்லை. எவனோ ஒரு பாதிக்கப்பட்டவனின் ‘ஒழிக ‘கோஷம் அவர் குறித்தும் இப்படி நினைக்க வைத்து விட்டது..
அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த போது ஒரே ஒரு முறை பயத்தோடு வணக்கம் சொல்லியிருக்கிறேன். சாரை முண்டா பனியனோடு பார்த்ததும் அன்றுதான்..
வழிமறிப்பது போல் அடைத்த கதவுக்கு முன்னே நின்று சுவரோரம் வரை கைகளை நீட்டியிருந்தவரின் தோள்களில் தன் முகத்தை மட்டும் வைத்து ‘ இவன்தான் மூணாப்புல ஃபர்ஸ்டு வாங்குற பையனா?’ என்று ஆர்வமாகக் கேட்டு அவரிடம் இருந்து எந்த பதிலும் பெறாமல் அடுத்த நொடியே சுணங்கிய முகத்தோடு வீட்டுக்குள் மறைந்து விட்ட கணேசன் சார் மனைவியின் நெற்றியிலிருந்த பெரிய தழும்பு காரணமே இல்லாமல் ஒரே ஒரு நிமிடம் நினைவில் வந்து போனது.
maanaseegan24@gmail.com