கேரளா பத்தினம்திட்டா அருகே உள்ள கிராமத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மந்திர, மாந்திரீகங்களில் ஈடுபடும் நபர் ஒருவரும், தம்பதிகள் இருவரும் சேர்ந்து இரண்டு பெண்களை நரபலிக்காகக் கொடூரமாகப் படுகொலை செய்திருக்கிறார்கள், அதன் நீட்சியாக கொல்லப்பட்ட பெண்களின் நரமாமிசத்தையும் அவர்கள் சாப்பிட்டிருக்கலாம் என விசாரணையில் நம்பப்படுகிறது. சம்பவம் நடந்த இதே அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தெற்கு டெல்லியில் இரண்டு நபர்கள் 6 வயதுக் குழந்தையை நரபலிக்காகப் படுகொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தேசிய குற்றவியல் புலனாய்வு அட்டவணையின்படி, இந்தியா முழுவதும் இவை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துதான் வருகின்றன. 2021 ஆம் ஆண்டு மட்டும் நரபலிக்காக ஐந்து படுகொலைகளும், செய்வினை, ஏவல் போன்ற மூடநம்பிக்கைகளின் விளைவாக 68 கொலைகளும் நடந்திருப்பதாக அந்த ஆணையம் சொல்கிறது. 2017 ஆம் ஆண்டுதான் அதிகபட்சமாக 19 நரபலி படுகொலைகளும், 88 மூடநம்பிக்கை விளைவான கொலைகளும் நடந்திருக்கின்றன. கேரளா மட்டுமல்ல, சட்டீஸ்கர், கர்னாடகா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் என கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கேரள சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நரபலிக்கு முயன்றதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை அருகே கிரானைட் சுரங்க முறைகேட்டிற்காக விசாரிக்கும்போது அங்கும் கிட்டத்தட்ட 12 மனநலம் குன்றியவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன, அந்த சடலங்களும் அங்கு கைப்பற்றப்பட்டன.

விலங்குகளையும், மனிதர்களையும் மதரீதியான சில அதீத நம்பிக்கைகளின் விளைவாக பலியிடும் வழக்கம் வரலாறு முழுக்க இருக்கிறது. போருக்குச் செல்வதற்கு முன் வீரர்களை பலியிடுவது ரோமப்பேரரசின் காலத்திலேயே இருந்திருக்கிறது, அதே போல இயற்கை சீற்றங்களின்போதும், பெரும் கட்டுமானங்களின்போதும், தொற்று நோய் காலத்தின் போதும் மனிதர்களைக் கூட்டாகப் பலியிடும் வழக்கம் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கின்றன. அதே போல சூனியம் செய்வது, ஏவல் விடுவது, ஆவி, பிசாசு, முன்ஜென்மம், மறுஜென்மம் போன்ற அதீத நம்பிக்கைகளும்கூட எல்லா கலாச்சாரங்களிலும் இருந்திருக்கின்றன. இப்போதும் கூட இந்த நம்பிக்கைகள் இன்னும் பரவலாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அதீத மூட நம்பிக்கைகளின் ஒரு எல்லையைத் தாண்டும்போதுதான் நரபலி போன்ற விபரீதமான சம்பவங்கள் நடக்கின்றன.

பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் அதன் பெருவெடிப்பு எப்படி இருந்தது என்று அதி நவீன நுண்ணோக்கியில் படம்பிடித்துப் பார்க்கும் அளவிற்குத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இந்தக் காலகட்டத்திலும் கூட மனிதர்களை பிரார்த்தனைக்காக கொல்லும் சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்ற கேள்வி திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது. தகவல் தொடர்புகளும், நவீன மருத்துவ அறிவியலும் எல்லையற்ற சாத்தியங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில்கூட மனிதர்களிடம் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு ஆச்சர்யமாகயிருக்கிறது. என்னதான் விண்வெளியை ஆராய ராக்கெட் அனுப்பினாலும் அதற்கும் பூஜை புனஸ்கார சடங்குகள் செய்துதானே மனிதன் அனுப்புகிறான் என்பது புரிந்தால் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் பரவலாக இருப்பது பற்றி எந்த ஆச்சரியமும் இருக்காது.

முதலில் ஒரு நம்பிக்கை எப்படி உருவாகிறது?

நமது நேரடி அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட உண்மைகளைக் கொண்டு நாம் வெகுசில நேரமே நமது நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்கிறோம், ஏனென்றால் அனைத்தையும் நம்மால் நேரடி அனுபவங்களில் இருந்து மட்டுமே பெற முடியாது. பிறரது அனுபவங்கள், எல்லோராலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள், அறிவியலால் நிறுவப்பட்ட உண்மைகள் போன்றவற்றின் முலம் நமது நம்பிக்கைகள் உருவாகின்றன. நாம் பார்க்கும், கேள்விப்படும் அனைத்தையும் நாம் நம்பிவிடுவதில்லை. எதை நம்புவது என்பதில் நமது தனிப்பட்ட ஆளுமைக்கும், கல்விக்கும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் மதிப்பீடுகளுக்கும் பங்கு இருக்கின்றன.

ஓர் தர்க்க ரீதியான ஆளுமைப் பண்பு கொண்டவர் தர்க்கத்திற்குப் புறம்பான எதையும் நம்பி விட மாட்டார். அதே போலவே, மிகவும் உணர்ச்சவசப்படக்கூடிய, பெரிய சிந்தனைத்திறனற்ற ஆளுமையை உடையவர் எதையும் மிக எளிதாக நம்பக்கூடியவராக இருப்பார். பெரும்பாலான மக்கள் இந்த இரண்டு நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள்.தனி நபர்களின் இந்த அறிவியலுக்கும் புறம்பான நம்பிக்கைகளையும், நடவடிக்கைகளையும் சமூகம் அங்கீகாரம்செய்யும் போது அந்த நம்பிக்கைகள் பெருவாரியான மக்களால் மிக சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அந்த நம்பிக்கைகள் தர்க்கரீதியாக விளக்கப்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இன்று நம் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்திருக்கும் பெரும்பாலான நம்பிக்கைகள் தர்க்கத்திற்குப் புறம்பானவையே. ஆனால் அதைக் கொண்டிருப்பதில் மக்களுக்கு எந்த தயக்கமும் இல்லை, ஏனென்றால் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று இருப்பதாகவும், அதைத் தர்க்க ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதும்கூட மக்களிடம் இருக்கும் நம்பிக்கையே! அதனால் அவர்களிடம் இவற்றைத் தர்க்க ரீதியாக விளக்கிப் புரியவைத்து விட முடியாது.

இந்த நம்பிக்கைகள் கல்வி, அறிவு என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இவை எல்லாம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்து விட்டவையாக இருக்கின்றன.படித்த ஒரு மருத்துவர் கூட நேரம் பார்த்து அறுவை சிகிச்சை செய்யும் வழக்கமும் இங்கிருக்கிறது. கேரள சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த எனது சக மருத்துவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“சார், இது ஒண்ணும் புதுசு இல்ல, கேரளாவில் சில பகுதிகளில் இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் வருகின்றன. இந்த மாதிரி நரபலிய விடுங்க, பொதுவாகவே எல்லோருக்கும் அதிகமான supersitious நம்பிக்கைகள் இருக்கின்றன. நல்ல நேரம் பார்ப்பது, ஜோசியத்தைக் கண்மூடிக்கொண்டு நம்புவது என எங்கள் வீட்டிலேயே கூட இந்த நம்பிக்கைகள் மிக அதிகம். எங்க அம்மாவைப் பொறுத்தவரை அங்க அப்பாவை விட ஜோசியரைத் தான் நம்புவார், அவரைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார், நான் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே ஜோசியர் உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டும் என சொல்லியதால் நான் எவ்வளவு வேண்டாம் என சொல்லியும் திருமணம் செய்து வைத்துவிட்டார். அவங்களோட இது மாதிரி நம்பிக்கைகளினால் மற்றவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதைப் பற்றி அவர்கள் உணர்வதே இல்லை” என்று அவரது சொந்தப் பிரச்சினையை சொன்னார்.

நம் அன்றாட வாழ்வில் சடங்குகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. உண்மையில் பெரும்பாலான வேலைகளை நாம் சடங்குகளைப் போலவே செய்கிறோம். சடங்குகளுக்கு என்ன தர்க்கம் இருக்கிறது? அதே போலதான் இந்த நம்பிக்கைகளும். முன்ஜென்மம், மறுஜென்மம் என்பவை கற்பிக்கப்பட்டதற்குப் பின்னால் மதரீதியான நோக்கங்கள் இருக்கின்றன. ஒருவன் இந்த வாழ்க்கையில் மதம் அவனுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்ய வைக்க வேண்டுமானால் அதை எப்படி செய்ய வைக்க முடியும்? அதனால் அவனுக்கு இந்தப் பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாதல்லவா? அதனால் இதை நீ செய்வது இந்த ஜென்மத்தின் பலனுக்காக அல்ல, அடுத்த ஜென்ம பலனுக்காக அல்லது முன் ஜென்மத்தில் நீ செய்த பாவத்தைப் போக்கதான் இந்த ஜென்மத்தில் நீ இந்த இழிவை பெற்றிருக்கிறாய் என்று சொல்லி அவனை ஏற்றுக்கொள்ள வைப்பது சுலபம். இப்படித்தான் இந்த நம்பிக்கைகள் மதரீதியாக வலுப்பெற்றன. பெரும்பாலான நமது சடங்குகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் பின்னால் இப்படிப்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன. மனிதனைப் பொறுத்தவரை என்னதான் மூட நம்பிக்கைகள் இருந்தாலும் அவனது தர்க்க ரீதியான அறிவும் எப்போதும் விழித்தே இருக்கின்றன. ஒரு மூட நம்பிக்கையை எந்த அளவிற்குக் கொள்ள வேண்டும் என்பதை அவனது தர்க்க ரீதியான அறிவு தீர்மானிக்கிறது. தேர்விற்கு முன்பு கடவுளை வணங்கிச் சென்றால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்பது அவனது நம்பிக்கையாக இருந்தாலும், அதற்காகப் படிக்காமல் சென்றால் பயனில்லை என்ற தர்க்கத்தின் விளைவாகப் படித்துவிட்டும் செல்கிறான். எந்த சூழ்நிலையில் இந்த தர்க்க அறிவு குறைகிறதோ அங்கு மூட நம்பிக்கைகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கும். மனம் என்பது தர்க்கங்களும், உணர்வுகளும் கலந்த அமைப்பு. அதன் சம நிலையான இயக்கம் மூட நம்பிக்கைகளின் தீவிரத்தைக் குறைக்கிறது. எங்கு மனதின் சமநிலை பாதிக்கப்படுகிறதோ அங்கு தர்க்கங்களும் செயலிழக்கின்றன அதன் விளைவாக தர்க்கத்திற்கு புறம்பான விபரீத நம்பிக்கைகள் ஆளுமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன. மூட நம்பிக்கை ஒருவனின் ஆளுமையைக் கைகொள்ளும்போது அவன் நரபலி போன்ற விபரீத நடவடிக்கைகளில் இறங்குகிறான்.

மனமும், மூட நம்பிக்கைகளும்:

அமானுஷ்ய சக்தி, பேய், பிசாசு போன்றவற்றின்மீதான நம்பிக்கைகள்“ உடலும், மனமும் வேறு வேறு” என்ற கோட்பாட்டில் இருந்துதான் உருவாகிறது. அதாவது மருத்துவ அறிவியல் வளராத காலகட்டத்தில் ‘மனம்’ என்பதன் மீது ஏராளமான புதிர்கள் இருந்தன. உடல் என்பது வேறு; மனம் என்பது வேறு. உடல் அழியக்கூடியது, ஆனால் மனம் அழிவற்றது. மனம் என்பது கடவுளின் பொருள். மனம் வழியாகவே கடவுள் மனிதனுடன் நேரடியாக பேசுகிறார். மனதின் மீதான இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கும், அதன் விசித்திரத்தன்மைக்கும் காரணம் மனதிற்கு எந்த உருவமும் இல்லை என்பதே!

உடலில் உள்ள பகுதிகளைக் காணமுடிகிறது. ஆனால் மனம் ஒன்றைக் காணமுடிவதில்லை. உருவமற்ற ஒன்றின்மீதே தத்துவங்கள் எழுதப்படுகின்றன. மனதின் மீது நிறுவப்பட்ட ஏராளமான தத்துவங்கள் மனதிற்கு இந்தப் புதிர்த்தன்மையை வழங்கியிருக்கின்றன. மனதின்மீதான இந்தப் புதிரை ஒட்டியே ஏராளமான மூட நம்பிக்கைகள் புனையப்பட்டன.

மனதிற்கு உருவமில்லையென்றால், மனம் என்பது என்ன? அது எங்கிருக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

அதற்குப் பதிலளிக்க முனைந்த ஆன்மீகவாதிகள் மனதைக் ‘கடவுளின் பொருள்’ என விவரித்தார்கள். ‘உடலுக்கு அழிவுண்டு, மனம் அழிவதில்லை’ என்று மனதிற்கு ஒரு அமானுஷ்ய சக்தியை அவர்கள் கொடுத்தார்கள். அழிவற்ற மனம்தான் ஆன்மா, ஆவி, ஸ்பிரிட் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இறந்த ஒருவரின் உடலை விட்டுப் பிரியும் மனம் அமானுஷ்யமாக மாறிவிடுகிறது என்ற சுவாரசியமான கதைகள் இதன் வழியே எழுந்தன, இதன் நீட்சியாகவே இப்படிப்பட்ட நம்பிக்கைகள் புழக்கத்தில் வந்தன.

கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும், கலாச்சாரங்களிலும் இப்படிப்பட்ட ஏராளமான புனையப்பட்ட கதைகள் இருந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் இந்தக் கதைகள் பெரும்பாலான மக்களால் நம்பப்பட்டு அவர்களது பண்பாட்டு நம்பிக்கையாகவும் (Cultural belief) மாறிப்போய்விட்டன. நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் பெருவாரியான மக்களிடம் காணப்பட்ட இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு அதன் வழியாக அந்த மதத்தின் வலிமையைக் கூட்டிக்கொண்டன. மதங்கள் இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொள்ளும் போது அந்த நம்பிக்கைகள் கேள்விகேட்க முடியாததாகவும், தர்க்க ரீதியாக விளக்கத் தேவையில்லாததாகவும் மாறிப்போய்விடுகின்றன. அந்த மதத்தைப் பின்பற்றும் பெருவாரியான மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளில் இந்த நம்பிக்கைகள் கலந்து விடுகின்றன. இதிகாசங்களும், புராணங்களும் இந்த நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் விதமாகப் புனைவை அன்றாட மக்களின் பிரார்த்தனைகளோடு இணைத்துவிடுகின்றன.

இந்த நம்பிக்கைகள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பல கதைகளின் வழியாக ஊட்டப்படுகின்றன. அதாவது சுயமாக சிந்திக்கும் வயதை, தர்க்க ரீதியான பகுத்தறியும் அறிவைக் குழந்தை பெறுவதற்கு முன்னதாகவே இந்த நம்பிக்கைகள் அவர்களின் மனதில் பதிந்துவிடுகின்றன. பயம் என்பது இயல்பாக இருக்கும் உணர்வு. ஆபத்தை எதிர்கொள்ளும் போது நம்மைக் காப்பாற்றிக்கொள்ள பரிணாம ரீதியாகவே பயம் என்ற உணர்வு அத்தியாவசியமாகிறது. இந்த பயத்தை ஒட்டியே குழந்தைகளிடம் இந்த மூட நம்பிக்கைகளைக் கடத்துவது எளிமையான ஒன்று. உதாரணத்திற்கு, இருளின்மீது பரிணாம ரீதியாகக் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய அச்ச உணர்வும், பேய், பிசாசு என்ற நம்பிக்கைகளும் சேரும்போது இதன்மீதான நம்பகத்தன்மை கூடுகிறது. கல்வியின் வழியாக பகுத்தறியும் அறிவைப் பின்னாளில் அந்தக் குழந்தை பெற்றாலும் கூட, சிறு வயதிலேயே மனதில் படிந்துவிட்ட இந்த நம்பிக்கைகள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டதாக நிலைத்து நின்றுவிடுகின்றன.

மருத்துவ அறிவியலில் கடந்த நூற்றாண்டுகளில் நடந்த ஏராளமான தொழில்நுட்ப வளர்ச்சிகளின் விளைவாக இன்று மனம் கிட்டத்தட்ட முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ‘மனம் என்பது உடலின் ஒரு அங்கம், அதற்கு உருவமில்லை. ஆனால் மூளை என்ற வன்பொருளைச் செயல்படுத்தும் மென்பொருள்தான் மனம், அது மூளையின் செயல்பாட்டு அலகு (Functioning Unit)’ என்பதுதான் மனம் தொடர்பான நவீன அறிவியலின் விளக்கமாக இருக்கிறது. அதாவது ஒரு கணினியில் இருக்கும் மென்பொருளைப் போன்றதுதான் மனம். மென்பொருளை நாம் பார்க்க முடியவில்லையென்றாலும் கூட, கணிணியை அதுதான் இயக்குகிறது, அது போல மூளை என்ற கணிணியை மனம் என்ற மென்பொருள்தான் இயக்குகிறது. மின்சாரம் இயங்கும்போது மட்டுமே மென்பொருளின் செயலை நம்மால் பார்க்க முடியும். அதுபோல சுய நினைவு இருக்கும்போதே மனதின் செயல்பாடுகளை நாம் பார்க்க முடியும்.

மனிதன் சுய நினைவற்றுப் போகும்போது அல்லது இறந்து போகும்போது மனமும் அத்துடன் செயலிழந்து விடுகிறது. அறிவியலின் இந்த விளக்கத்தின்படி, மனம் அழிவற்றது அல்ல, அதுவும் அழியக்கூடியதே. மனம் தொடர்பான இந்தப் புரிதலுக்கு நாம் வந்துவிட்டால், ஆன்மா, ஆவி, ஸ்பிரிட் என்பதற்கெல்லாம் எந்தப் பொருளும் இல்லை என்ற முடிவிற்கு நாம் வரமுடியும்.

நிறைய நேரங்களில் மூளையில் ஏற்படும் சில நோய்களின் காரணமாகவும், மனப்பிறழ்வின் காரணமாகவும் ஏற்படும் அசாதாரண அனுபவங் களையும்கூட நாம் அமானுஷ்யங்களாக நம்பிவிடுகிறோம். இயல்பாகவே தூக்கத்தின் ஒரு நிலையில் உடல் தசைகள் செயலிழந்து (Sleep paralysis) போவதால் அந்த நேரத்தில் நம்மால் கைகால்களை அசைக்க முடியாது, குரலெழுப்ப முடியாது. அந்த நேரத்தில் சில மாயத்தோற்றங்கள் கூட (Hallucination) உருவாகலாம். பெரும்பாலான நேரங்களில் இப்படிப்பட்ட அனுபவங்கள் மனப்பிறழ்வின் வெளிப்பாடாகவும் இருக்கவும் வாய்ப்புண்டு.

இப்படிப்பட்ட அத்தனை அனுபவங்களுக்கும் மருத்துவ ரீதியாக ஏராளமான விளக்கங்கள் இருக்கின்றன, ஆனால் இந்த விளக்கங்களைப் புரிந்து
கொள்வதைவிட ஏற்கனவே சமூகத்தில் நிலவி வரும் இது தொடர்பான நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கிறது, சுவாரசியமானதாகவும் இருக்கிறது. அதன் விளைவாக, மனப்பிறழ்வின் காரணமாக ஏற்படும் இந்தக் குணமாறாட்டங்களுக்காக அவர்கள் மருத்துவரை நாடுவதற்கு முன்பு கோவில் பூசாரிகளையும், பேய் ஓட்டுபவர்களையும், செய்வினை எடுப்பவர்களையுமே நாடுகிறார்கள்.

எந்த ஒரு முன்னேறிய சமூகமாக இருந்தாலும் கூட, இது போன்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் பெரும்பாலான மக்களின் அடிமனதில் இருக்கத்தான் செய்கிறது. அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஏராளமான நெருக்கடிகளில் இருந்து அல்லது தீர்க்கவே முடியாத பிரச்சினைகளில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மக்களுக்கு இந்த நம்பிக்கைகள் ஏதோ ஒரு வகையில் தேவையானதாக இருக்கிறது. அதிசயங்களின்மீதும், அற்புதங்களின் மீதும் மக்களுக்கு இயல்பாகவே ஒரு ஏக்கம் இருக்கிறது. நிறைய நேரங்களில் வாழ்வதற்கான முனைப்பையும்கூட அவர்களுக்கு இந்த நம்பிக்கைகள் கொடுக்கின்றன. சகமனிதர்களும், சார்ந்திருக்கும் சமுதாயமும் எந்த ஒரு நம்பிக்கையும் கொடுக்காத ஒரு சந்தர்ப்பத்தில் “கடவுள் மீது பாரத்தைப் போட்டு வேலைய பார், நடக்குறது நடக்கட்டும்” என்ற வேலையைத் தொடர்கிற வெகுஜன மக்கள் நிரம்பிய சமூகம் இது. இங்கு அப்படிப்பட்ட தனிப்பட்ட மக்களின் நம்பிக்கைகளின்மீது நடத்தப்
பட்டும் தர்க்க ரீதியான விவாதங்கள் பெரும்பாலும் பலனளிக்காது.

நரபலி போன்ற கொடூரமான சம்பவங்களுக்குப் பெரும்பாலும் இப்படிப்பட்ட எளிய மனிதர்களே பலியாகின்றனர. ஏனென்றால் சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான எந்த தர்க்க ரீதியான வழிகளும் இல்லாதவர்களாக இவர்களே இருக்கின்றனர். எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லாத நிலையில், ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து வெளியேற வழியே இல்லாத நிலையில் மந்திரங்களை நம்பும் மனநிலைக்கு அவர்கள் செல்கின்றனர். அது ஒரு பலவீனமான மனநிலை.

எந்த நேரமும் உடைந்து விடக்கூடிய சருகைப் போன்ற மனநிலை. அந்த மனநிலையில் அவர்கள் மற்றவர்களைப் பற்றி யோசிப்பதில்லை, ஏனென்றால் சக மனிதர்களின்மீதும், சமூகத்தின்மீதும் நம்பிக்கைகளெல்லாம் நொறுங்கிப்போன நிலையிலேயே அவர்கள் இந்த மனநிலைக்குக் செல்கின்றனர். இந்த மனநிலையில் அவர்கள் உண்மைகளை வெறுக்கிறார்கள், தர்க்கங்களை அலட்சியப்படுத்துகிறார்கள்.

உண்மையில் இருந்து வெகு தூரம் செல்ல வேண்டும் என்ற முனைப்பே அவர்களை இந்த மனநிலைக்குக் கொண்டு வரும்போது அவர்களால் எப்படி உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால்தான் நிஜவுலகில் இருந்து ஓர் மாயவுலகிற்குச் செல்ல மதகுருமார்களையும், மந்திரவாதிகளையும், பேயோட்டும் ஆசாமிகளையும் நாடிச் செல்கின்றனர், ஏனென்றால் தங்களது நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு இவர்களை நம்புவதைத் தவிர வேறு எந்த வழியும் தென்படுவதில்லை. இப்படிப்பட்ட பலவீனமான மனிதர்களின், உடைந்த மனநிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் மூன்றாம் நபர்கள் தங்களது சக்தியை, வீரியத்தை, மகிமையைப் பரிசோதிக்கும் எலிகளாக இவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லாத எளிய மனிதர்கள் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு செய்தியாக வெளிப்படும்வரை நாம் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி கருத்தில் கொள்வதேயில்லை.

இப்படிப்பட்ட எளிய மனிதர்களின் நம்பிக்கைகளைப் பயன்படுத்தி வணிக ரீதியாக வெற்றியடையும் வாழ்வியல் முகாம்களையும், யோகா நிறுவனங்களையும் நாம் தினம் தினம் காண்கிறோம்தானே? அதே போலவே பில்லி சூன்யம், செய்வினை, ஏவல், நரபலி செய்யவும் ஒரு கும்பல் இருக்கின்றன. அவர்களூம் மக்களின் இந்த மூட நம்பிக்கைகளைத் தங்களின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

யார் இவற்றைச் செய்கிறார்கள்?

பில்லி சூனியமோ, நரபலியோ இவை போன்ற விபரீத செயல்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் மனநிலை பிறழ்வடைந்தவர்களாக இருக்கிறார்கள் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அவர்களின் நடவடிக் கைகள், எண்ணங்கள், சிந்தனைகள் அனைத்தும் விசித்திரமானதாகவும், விபரீதமாகவும் இருக்கும், அவர்கள் பெரும்பாலும் சக மனிதர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள். அவர்களின் இந்த விபரீத, விசித்திரமான நடவடிக்கைகள்தான் அவர்களைத் தேடி மக்களை வரவழைக்கின்றன. இவர்களை தேடி வரும் மக்களின் பலவீனமான மனநிலை காரணமாக இவர்கள் சொல்வது அத்தனையும் கண்ணை மூடிச் செய்கிறார்கள், அது நரபலியானாலும்கூட!

என்ன தீர்வு?

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலகட்டத்தில், ஏராளமான தகவல்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். உண்மைகளை விட பொய்யும்,புனைவுகளும், வெறுப்பையும், வன்மத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் தகவல்களும்தான் நம்மிடம் மிக வேகமாக வந்து சேர்கின்றன. அதையெல்லாம் அப்படியே நம்புவது, ஏற்றுக்கொள்வது என்பது இந்த சமூகத்தின் சம நிலையையும், பரஸ்பர சுமுக உறவையும் பாதிக்கக்கூடியது.எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பண்பை நாம் நமது வாழ்க்கை முறையாக்க வேண்டும். பேய்க்கதைகளையும், தேவதைக் கதைகளையும் சொல்லிக் குழந்தைகளை வளர்க்கும் போக்கை நிறுத்திக்கொண்டு எந்த தகவலையும் அறிவியல் பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

ஒரே ஒரு சக்திமான் தொடர் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த காலகட்டத்தில் கூட அதைப் பார்த்த குழந்தைகள் அதன் பாதிப்பில் உயரமான கட்டடத்தில் இருந்து குதித்த சம்பவங்கள் நடந்தன. இன்று சக்திமான் போன்று ஓராயிரம் பராக்கிரமக் கதைகளைக் குழந்தைகள் பார்க்கிறார்கள். எந்த நேரமும் மெய் நிகர் உலகத்தின் ஏதாவது ஒரு கதாபாத்திரங்களைத் தங்களுக்குள் வரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் முந்தைய காலகட்டத்தைவிட குழந்தைகளை இப்போது பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களிடம் அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்த்தால்தான் எதிர்காலத்தை நாம் இது போன்ற பிறழ்வான நம்பிக்கைகளிடம் இருந்து காப்பாற்ற முடியும்.

அதே போல மனம் என்பதும், அதன் சமநிலை பாதிப்பென்பதும் முற்றிலும் அறிவியல் பூர்வமானவை. விசித்திரமான செயல்பாடுகள், விபரீத எண்ணங்கள் போன்றவையெல்லாம் மனநோயின் விளைவுகளாகக்கூட இருக்கலாம். அதற்கெல்லாம் எந்த அமானுஷ்ய தன்மைகளும் இல்லை. அப்படிப்பட்ட பிறழ் நடவடிக்கைகளையெல்லாம் முற்றிலும் குணப்படுத்த முடியும். எனவே மனரீதியான பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் நாம் அறிவியல் பூர்வமாகப் பெற முயல வேண்டும். அதற்கான முனைப்புகளை சமூகம் ஏற்படுத்த வேண்டும்.

ஒரு சமூகம் தன்னளவில் அறிவியல் பூர்வமானதாக இருக்கும் பட்சத்தில் அதிலிருக்கும் மக்களின் சிந்தனைகளுமே அறிவியல் பூர்வமானதாகவே இருக்கும். அறியாமையை நாம் எப்போதும் அறிவியலால் மட்டுமே விரட்ட முடியும்! அதுவே இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாகவும் இருக்கும்.

 

 

sivabalanela@gmail.com