நாம் அந்தக் காட்சியை மறந்திருக்க முடியாது. பாராளுமன்றத்தில் மோடியின் அரசின்மீது ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார். பிரதமர் தனது பதிலுரையில் ராகுல் காந்தியை நோக்கி ‘பப்பு பப்பு’ எனக் கேலி செய்கிறார். அப்போது மோடியிடம் வெளிப்பட்ட முகபாவமும் உடல்மொழியும் நாட்டு மக்களை பெரும் வியப்பிலாழ்த்தியது. அது நாட்டின் மிக உயரிய பொறுப்பினை வகிக்கும் ஒருவரின் உடல் மொழி அல்ல. அது ஒரு கண்ணியம் மிக்க மனிதரின் உடல் மொழியும் அல்ல. ஒரு நாட்டின் பிரதமர் அப்படி நடந்துகொண்டு யாரும் பார்த்ததுமில்லை. லட்சக்கணக்கானமுறை அந்தக் காட்சி திரும்பத் திரும்பக் காட்டடப்பட்டது. அது 56 இஞ்ச் மார்பளவு கொண்ட ஒரு தைரியமான மனிதரின் செயல்போலவே இல்லை. மாறாக மிகவும் அச்சப்படுகிற ஒரு மனிதரின் நடத்தை அது. ராகுல் காந்தி அல்ல, மோடிதான் ஒரு சிறுவனைப்போல நடந்துகொண்டார். மோடியின் எகத்தாளச் சிரிப்பின் பின்னே அவர் கண்களில் ஒளிந்திருந்த பயத்தை இந்த நாடு பார்த்தது. அவர் கட்டமைத்த அவரைப் பற்றிய போலி பிம்பம் வெளிப்படையாக நொறுங்கிய தருணம் அது.
மோடி பாராளுமன்றத்தின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி. ஒரு தெருமுனைப் பிரச்சாரகனின் மனப்பான்மையைக் கொண்டவராக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறார். போலி ஆவேசக் கூச்சல்கள், பொய்யான பிரகடனங்கள், மலிவான உணர்ச்சிகளைத் தூண்டும் வெற்று தேசபக்த நாடகங்கள், பிழையான தகவல்கள்…இவைதான் மோடியின் அரசியல் ஆளுமையாக இருந்திருக்கிறதே ஒழிய கண்ணியத்தையோ நேர்மையையோ கற்றறிந்த ஒருவரின் சொற்களையோ ஒரு நாடாளுமன்றவாதியின் நடத்தையையோ அவரிடம் காண முடிந்ததில்லை.
அரசியல் பண்பாடு மோடியின் காலத்தில் புதிய பாதாளங்களை அடைந்தது. ஆனால் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வின் மிருக பலத்தாலும் எதிர் கட்சிகளின் ஒற்றுமையின்மையின் பலவீனங்க ளாலும் தன்னை எதிரிகளேயற்ற பேரரசனாக மோடி கற்பனை செய்து கொண்டார். சர்வாதிகாரம், அராஜகம் மூலமாக எல்லாவற்றையும் சாதித்துக்கொண்டுவிடலாம் என்று அவர் நம்பி வந்தார்.
எல்லா அமைப்புகளையும் தனது சர்வாதிகாரத்திற்கு அடிபணிய செய்தார் அல்லது அவற்றை தனது கைப்பாவையாக்கினார். நாடாளுமன்ற ஜனநாயகம் அரசியல் சாசன அடிப்படை உரிமைகள், கருத்து சுதந்திரம் ஊடக சுதந்திரம், நீதிமன்ற சுதந்திரம், புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் எதுவுமே தப்பிப் பிழைக்கவில்லை. ஜனநாயகத்தின் பேரழிவுக் காலமாக இந்தக் காலத்தை மோடி மாற்றியிருக்கிறார். பெருமூலதன நிறுவனங்கள், மதவாதம் என்ற இரண்டு தண்டவாளத்தில் தனது பாசிச ரயில் எந்தத் தடையும் இல்லாமல் சென்றுகொண்டே இருக்கும் என்று மோடி நம்பினார்.
ஆனால் காங்கிரசின் அரசியல் ரீதியிலான பலவீனங்களையும்தாண்டி ராகுல் காந்தி தேசிய அளவில் ஒரு பெரும் தலைவராக எழுந்து வருவார் என மோடி நினைக்கவில்லை. அவரது கண்முன்னே அந்தக் காட்சி நிகழ்ந்தது. நாடாளுமன்றத்தில் தொடர்சியாக ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சினைகள் நாடெங்கிலும் எதிரொலித்தது. வசீகரமும் துணிச்சலும் மிக்க அந்த இளம் தலைவரின் சொற்களை தேசம் உற்றுக் கேட்கத் தொடங்கியது. ராகுல் உண்மையின் பலத்தின் மேல் நின்று பேசினார். தார்மீக உணர்சியிலிருந்தும் நீதி உணர்சியிலிருந்தும் பேசினார். அவருடைய சொற்களில் பாசாங்கு இல்லை. கவித்துவம் இருந்தது. மக்களின் உரிமைகளுக்கான உக்கிரம் இருந்தது. ஜனநாயகத்திற்கான அறைகூவல் இருந்தது. காரிருள் நடுவே ஒரு வெளிச்சமாக அந்தக் குரல் இருந்தது.
ராகுல் காந்தி எதைப்பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினார்?
கொரோனா இந்தியாவில் பரவுவதற்குப் ஆறு மாதத்திற்கு முன்பே இந்தியாவை நோக்கி ஒரு மாபெரும் அபாயம் வந்துகொண்டிருக்கிறதென எச்சரித்தார். முன்னெச்சரிக்கை நடவட்க்கைகள் தேவையென வற்புறுத்தினார். மோடியின் அரசு அதனை அலட்சியப்படுத்தியது. அதன் விளைவாக நாம் மிகப்பெரிய விலையைக் கொடுத்தோம்.
பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திய பேரிழப்புகளை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
ராஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார்.
சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் பலநூறு மைல் உள்ளே வந்து ஆக்கிரமித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதை பற்றி மோடி ஏன் வாய் திறந்து பேச மறுக்கிறார் என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
எல்லாவற்றையும்விட அதானி மற்றும் அம்பானிகளுக்கும் மோடி அரசுக்குமிடையிலான உறவுகள் குறித்த கேள்வியை ராகுல் இடையறாமல் எழுப்பினார். ‘‘நாம் இருவர் (மோடி, அமித் ஷா) நமக்கு இருவர் (அதானி, அம்பானி) என்பது தான் இந்த அரசின் கொள்கையாக இருக்கிறது’’ என்ற ராகுலின் வாசகம் இந்தியா முழுக்க எதிரொலித்தது.
அதானிகளுக்கான ஒரு நிறுவனமாக இந்திய அரசு மாற்றப் பட்டுவிட்டதை ஹிண்டன்பெர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. அதை உண்மையில் பெரும் வெடிகுண்டு என்றே சொல்லே வேண்டும். அதானிகள் போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி வருமானம் காட்டி தங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்புகளை போலியாக உயர்த்திக் காட்டி அதன் மூலமாக தமது நிறுவன பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரித்து பெரும் நிதின் மோசடியில் ஈடுபட்டார்கள் என்பதை ஹிண்டன்பெர்க் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அதன் விளைவாக அதானின் குழுமத்தின் பங்குகளின் விலை மளமளவென சரிந்தது. அவர்கள் சொத்துமதிப்பு பாதிக்கும் கீழாக சென்றது.
மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அதானி குழுமத்தின் நம்பமுடியாத விபரீத வளர்ச்சி ஏராளமான சந்தேகங்களை எழுப்பியது. இதைப்பற்றி பலரும் கேள்வி எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். செஃபி போன்ற பொருளாதார குற்றங்களை கண்காணிக்கும் அமைப்புகள் இவ்வளவு பெரிய விவகாரத்தை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தன. எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் தொழிலாளர் எதிர்கால வைப்பு நிதியின் அதானியின் சந்தீகத்திற்கு இடமான நிறுவனங்களின்மேல் பெருமளவு முதலீடு செய்ததன் நோக்கம் என்ன?
பிரதமரினுடைய வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமரின் முன்னிலையில் அதானிகள் செய்த வணிக ஒப்பந்தங்களில் பிரதமருக்கு எந்தத் தார்மீகப் பொறுப்பும் கிடையாதா?
ஆனால் இதைப்பற்றி பாராளுமன்றத்தில் மோடி பேச மறுக்கிறார். பேச மறுப்பதுமட்டுமல்ல, வேறு யாருமே இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தினுள் பேசிவிடக்கூடாது என்பதற்காக பா .ஜ.கவினர் தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்க நாடளுமன்ற கூட்டுக்குழுவையும் அமைக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
குஜராத் படுகொலை தொடர்பான பி.பி.சியின் ஆவணப்படத்தால் ஆத்திரமடைந்த மோடி அரசு பி.பி.சி. அலுவலகத்தில் நடத்திய ரெய்டு குறித்து லண்டனில் பேசுகிறபோது ‘இந்தியாவில் இதுதான் கருத்துச் சுதந்திரத்தின் நிலை’ என ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார். அது தேச விரோதச் செயலாம் . அதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும்வரை பா.ஜ.கவினர் நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டார்களாம். இதுதான் அதானியை காப்பாற்ற பா.ஜ .க. நடத்திக் கொண்டிருக்கும் நாடகம். அந்த நாடகத்தினுடைய தொடர்ச்சி தான் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திற்கே வரவிடக்கூடாது என இந்த தகுதி நீக்க சதி.
ராகுல் காந்தி, 2019ம் ஆண்டில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது பொருளாதாரக் குற்றம் செய்து நாட்டைவிட்டு ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி ஆகியவர்களைக் குறிப்பிட்டு ‘‘இந்த நாட்டில் திருடர்கள் பலரின் பெயர் மோடி என்று முடிகிறது’’ எனக் குறிப்பிட்டார். இதை எதிர்த்து மோடி என பெயர் முடியக்கூடிய ஒரு பா.ஜ.க.காரர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பிறகு அவரே அந்த வழக்கை விசாரிக்க வேண்டாமென ஓராண்டிற்கு முன் தடை வாங்கினார். ஆனால் அதானி விவகாரத்தை ராகுல் பாராளுமன்றத்தில் பேசத் தொடங்கியதும், வழக்கை உடனே விசாரிக்கும்படி மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதின்மன்றமும் அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்து இருபத்தி நான்கே நாட்களில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. உடனே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அடுத்த எட்டாண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதித்துவிட்டதாக சொல்லி இரண்டு வருடம் தண்டனை வழங்குவதெல்லாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று.
எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் கடும் குற்றம் இழைத்து அவர்கள் இரண்டாண்டு தண்டனையினைப் பெற்றால் அவர்கள் பதவியைப் பறிக்கலாம் என சட்டம் இருந்தபோதும் கீழமை நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பினை மேல்முறையீட்டுக் காலம்வரை நிறுத்தி வைப்பார்கள். அதன்பிறகு உயர்நீதி மன்றம் உச்ச நீதிமன்றம் என இறுதி தீர்ப்பு வர பல காலம் ஆகும். இது பாதிக்கப்பட்டவருக்கு சட்டம் வழங்கக்கூடிய சலுகையும் உரிமையும் ஆகும். சமீபத்தில் லட்சத்தீவு எம்.பி.ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை கேரள உயர்நீதி மன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் அவரை மறுபடியும் எம்.பி. பதவியில் அமர்த்த சபாநாயகர் தாமதித்து வருகிறார்.
ஆனால் ராகுல் காந்தி விவகாரத்தில் எல்லாம் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. 24 மணி நேரத்தில் அவருடைய நாடாளுமன்ற வீட்டை காலி செய்வதற்கான உத்தரவு வருகிறது.
ஆனால் ராகுல் காந்தியின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டு உண்மையா?
இதோ எழுத்தாளர் சுபகுணராஜன் இதுபற்றி எழுதியிருக்கும் குறிப்பு:
‘‘எந்த ஜாதிப் பட்டத்துக்கும் ‘ஜாதி’க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (தமிழ்நாட்டிலேயே பிள்ளை, தேவர், கவுண்டர், நாடார் போன்ற பட்டங்கள் கொண்ட நூற்றுக் கணக்கான ஜாதிகள் உள்ளன)
உட்ஜாதிப் பிரிவுதான் ஜாதி. அதிலும் ஆயிரத்து எட்டு உட்பிரிவுகள் உண்டு.
வேடிக்கை இந்த ‘மோடி’ ஜாதிப் பட்டம் கொண்டவர்களில் இந்துக்கள் தவிர இஸ்லாமியரும், பார்சிகளும் உண்டு.
இந்தப் பட்டம் கொண்ட சமூகம் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பிகார் மாநிலங்களில் வாழ்கிறது.
மோடியின் ஜாதிப் பெயர் ‘காஃஞ்ஜி’ அல்லது ‘ஹாஞ்ஜி ‘ ( Ghanchi) ( கவனம் , ஜீகள் காந்திஜி என வாசித்து விட வேண்்டாம் .) இந்த Ghanchi ஜாதியிலேயே இஸ்லாமியர்களும் குஜராத்தில் வாழ்கிறார்கள்.
பல உட்ஜாதிப் பிரிவுகள் கொண்டது. ஒரு சில ஓபிசி (OBC) பட்டியலில் உள்ளது. சில பிரிவுகள் ஓசி (OC) சேர்ந்தவை.
ராகுல் குறிப்பிட்ட லலித் மோடியும், நீரவ் மோடியும் மார்வாரி அகர்வால்கள். இந்த ஜாதியினரின் தொழில் வைர வியாபாரம் என அறியப்படுகிறது.
தலையமைச்சர் மோடியின் ஜாதியின் தொழில் எனக் கருதப்படுவது எண்ணை வித்து பிழிதல் மற்றும் வியாபாரம்.
எனவே எந்த ஜாதிக்கு ‘அவமானம்’ நேர்ந்து விட்டது என தெளிபடுத்த வேண்டியது ‘சங்கிகள்’ மற்றும் ‘நீதியின் ‘ கடமை .’’
[ஆதாரம்: Indian Express 27.03.2023]
அடிப்படையற்ற ஒரு வழக்கின்மேல் ஒர் நியாயமற்ற தீர்ப்பு. ஒரு நியாயமற்ற தீர்ப்பின்மேல் அரசியல் அற்பத்தனத்துடன் ஒரு விரைந்த நடவடிக்கை. ராகுல் காந்தியின் பதவி நீக்கம் இந்தியா முழுக்க எதிர் கட்சிகளை ஓரணியில் நிறுத்தியிருக்கிறது.
ராகுலின் ‘‘பாரத் ஜோடா’’ யாத்திரை பா.ஜ.க.விற்கு முதல் சாவுமணி அடித்ததென்றால், இந்தப் பதவி பறிப்பு இறுதி சாவு மணியை அடித்திருக்கிறது.
ராகுல் காந்தி பதவி நீக்கம்: ஜனநாயகத்திற்கான இறுதி யுத்தம்
Tags: