பிப்ரவரி 2023இல் வெளியான ‘டாடா’ என்னும் திரைப்படம் பெருவெற்றி பெற்றிருக்கிறது. பிரபல நடிகர்களின் படங்களை விடவும் கூடுதலாக வசூல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்கள்; புதுமுக இயக்குநர்; குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படம். இருப்பினும் நன்றாக ஓடியதற்கு என்ன காரணமாக இருக்கும் என்னும் ஆவலில் திரையரங்குக்குச் சென்று படம் பார்த்தேன். காதலை மையமாகக் கொண்ட படம்தான். சாதி, கௌரவம் என்றெல்லாம் கதையை விரிக்க இடமிருந்தும் அவற்றைப் பின்தள்ளி இளைய தலைமுறையின் கோணத்தில் கதை செல்கிறது.

திருமணத்திற்கு முன்னரே காதலர்கள் உடலுறவு கொள்கிறார்கள். அதை அழகாகவும் நிறைவாகவும் காட்டுகிறார்கள். இதுவே மிகப் பெரிய மாற்றம். பழைய திரைப்படங்களில் அப்படி உறவு நிகழ்ந்தால் அதை இயற்கைத் தடுமாற்றம் போல மின்னல், இடி, மழை என்று காட்சிப்படுத்துவார்கள். இலக்கியத்திலும் அப்படித்தான். என் பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர், வட்டார இலக்கியத்தின் முன்னோடி ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதிய ‘அறுவடை’ நாவலில் அப்படி ஒரு தருணம். அவர் அக்காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்:

‘மின்னல் மின்னியது. இடி இடித்தது. இளங்காற்று வீசியது. புயல். ஆமாம்! பெருத்த புயல்தான் வீசியது. இந்தப் பூமியே திடீரென வெடித்து ஆகாயத்தில் பறந்தது. மேலே வெகுதூரம் பறந்து சென்றது. அடுத்த கணமே தேவானையும் சுப்ரமணியமும் சோளக்காட்டுக்குள் பாலைமர நிழலில் காணப்பட்டார்கள்’ (ப.30)

ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் உறவு கொண்டால் பூமியே வெடித்து ஆகாயத்தில் பறக்குமாம். இந்த நாவலை 1960இல் அவர் எழுதினார். அறுபது ஆண்டுக்குள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதற்கான சான்றுதான் ‘டாடா’ படம். பழைய படங்களில் அவ்வாறு உடலுறவு கொண்டவர்கள் தவறு செய்துவிட்ட குற்றவுணர்வில் துடித்துப் போவார்கள். இந்தப் படத்தில் அப்படியெல்லாம் எதுவுமில்லை. அது இயல்பாகவும் மனமொப்பியும் நிகழ்கிறது. அதை ஆனந்தமாக அனுபவம் கொள்கிறார்கள். என்ன, பாதுகாப்பான உறவாக இல்லாததால் அப்பெண் கருவுறுகிறாள். கருவைக் கலைத்துவிடலாம் என்று ஆண் சொல்கிறான். அவளுக்கு அதில் விருப்பமில்லை. குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறாள். ஆகவே இருவீட்டாரிடமும் கருவுற்றிருப்பதைத் தெரிவிக்கிறாள். அவ்வாறு தெரிவிப்பதிலும் தயக்கம் ஏதுமில்லை; குற்றவுணர்வும் இல்லை. ஏற்றுக்கொள்ள இயலாமல் பெற்றோர்தான் தவிக்கின்றனர்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் இருவீட்டாரும் கைவிடுகிறார்கள். நண்பன் ஒருவனின் உதவியால் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். வழக்கமாக உடனே திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுதல் நிகழும். இங்கே திருமணம் பற்றிப் பேச்சேயில்லை. இருவருக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் திருமணம் ஒரு விஷயமாகவே இல்லை. வீட்டாரின் ஆதரவு இல்லாததால் பொருளாதார ரீதியாகப் படும் கஷ்டம், பெற்றோரின் ஏற்பின்மை, பிரிக்கச் செய்யும் தந்திரங்கள், இளவயதில் குழந்தை பெற்றுக்கொள்வதால் நேரும் சங்கடங்கள், அதனால் நேரும் பிரிவு, இறுதியில் இருவரும் இணைதல் எனப் படம் மிகையற்றுச் செல்கிறது. மிகை என்று தோன்றும் இடங்களைக்கூட அதைச் சமப்படுத்தும் உத்தியைக் கையாண்டு இயல்பாக்கியுள்ளனர்.

இருவரும் பிரிவதற்கான காரணம் பெண்ணின் குடும்பத்தார் சொல்லும் பொய்தான். அதை ஊகிக்க முடிகிறது என்றாலும் இறுதிக் காட்சி வரை வெளிப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். காதலர்கள் திருமணம் செய்து கொள்வதிலோ சேர்ந்து வாழ்வதிலோ எந்தச் சிரமமும் இல்லாத காலம் நம் சமூகத்தில் இன்னும் வரவில்லை. தங்கள் பிள்ளைகள் மேல் எவ்வளவோ பாசம் வைத்திருப்பதாகப் பிதற்றும் பெற்றோர் அவர்கள் காதலிப்பதாகத் தெரிந்தால் உடனே கைவிட்டு விடுகிறார்கள். அந்தச் சமயத்தில்தான் அவர்களுக்கு மனரீதியாகவும் பொருளாதார அளவிலும் ஆதரவு வேண்டும். வழிகாட்டல் தேவை. ஆனால் குடும்பம் முழுமையாகக் கைவிட்டு விடுகிறது. ஏற்பாட்டுத் திருமணத்திற்கு உற்றார் உறவினர் காட்டும் ஆதரவும் கொடுக்கும் பலமும் காதல் திருமணத்திற்குத் துளியும் இல்லை. பாசம் என்று பிதற்றுவது எத்தனை பாசாங்கானது!

ஆதரவு காட்ட வேண்டிய சந்தர்ப்பத்தில் கைவிடுபவர்கள், அந்தக் காதலர்கள் தேவையற்ற கஷ்டங்களை எல்லாம் பட்டு மேலேறி வந்த பிறகு அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். மேலேற முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டேயிருந்தால் வாழ்க்கை முழுதும் தூற்றுகிறார்கள். ஒருபோதும் உதவி செய்ய வருவதில்லை. ‘நீயாகத் திருமணம் செய்துகொண்டால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும்’ என்று சொல்லிக் காட்டிக் காட்டிப் புண்படுத்துகிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்களைக் குடும்ப நிகழ்வுகளிலும் சடங்குகளிலும் பொதுவெளியிலும் ஒதுக்குதல் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நடக்கிறது. இப்படி ஒரு மடத்தனமான சமூகம் இது.

அதே போலப் பாலுறவைப் பெரும்பாவமாகக் கருதி அதற்கு ஏராளமான தடைகளை ஏற்படுத்தி வைக்கிறார்கள். ஆணும் பெண்ணும் பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் பாலியல் வேட்கை பெறுகின்றனர். தம் வேட்கையைத் தணித்துக்கொள்ள அவர்கள் பல்லாண்டுகள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. சுய இன்பத்தைக்கூட இயல்பென்று ஏற்றுக் கொள்வதில்லை. அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் ஏராளம். பாலுணர்வின் காரணமாக ஏற்படும் உளவியல் சிக்கல்கள் மிகுதி. கல்விக்கூடங்களில் பதின்பருவத்தினரால் உருவாகும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படை பாலியல்தான்.

கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தபோது ஓர் ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் தமிழ் நன்றாகப் பேசவும் படிக்கவும் இயன்றவர். தமிழிலிருந்து பிரெஞ்சு மொழிக்குச் சிலவற்றை மொழிபெயர்த்துள்ளார். பள்ளி ஆசிரியர். பன்னிரண்டிலிருந்து பதினேழு வயது வரைக்குமான பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்பதாகச் சொன்னார். பதின்வயதுப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது மிகவும் கடினமாயிற்றே, உடலில் ஏற்படும் மாற்றங்கள், பாலியல் வேட்கை ஆகியவற்றின் காரணமாகப் பல பிரச்சினைகள் கொண்டவர்களாக இருப்பார்களே, எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டேன். ‘எங்கள் பிள்ளைகளுக்கு அப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை. பதின்மூன்று, பதினான்கு வயதில் அவர்களுக்குக் காதல் வந்துவிடும். இருவர் சம்மதத்தில் உறவு வைத்துக்கொள்வார்கள். பள்ளிப் பாடத்திலேயே பாலியல் கல்வி உள்ளது. பாதுகாப்பாக உறவு கொள்வது பற்றியும் அறிந்து கொள்வார்கள். அதனால் அவர்கள் கல்வியில் கவனம் சிதறுவதில்லை. ஆசிரியர்களுக்குப் பெரிதாகப் பிரச்சினையும் இல்லை’ என்று சொன்னார்.

அவர் சொன்னதைப் பற்றித் தொடர்ந்து யோசித்து வருகிறேன். என் மாணவர்களைப் பொருத்தியும் பார்க்கிறேன். பதின்வயது மாணவர்களைச் சமாளிப்பது பெருங்கஷ்டமாகவே இங்கிருக்கிறது. ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்ளக் கூடாது, ஒருவருக்கொருவர் பேசவும் கூடாது, சேர்ந்து நடக்கக் கூடாது என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடுகள். ஏராளமான ஒருதலைக் காதல்கள். காதலிக்கச் சொல்லிமிரட்டல்கள். காதல் தோல்விகள். தற்கொலைகள். எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறிக் காதலிப்பவர்களும் படிக்கும் காலத்திலேயே திருமணம் செய்து கொள்பவர்களையும் தொடர்ந்து கண்டிருக்கிறேன். திருமணத்திற்கு முந்தைய உறவில் கருவுறுவதால் அவசரம் அவசரமாகத் திருமணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பாதுகாப்பான உறவு பற்றிப் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் சமூகப் பார்வை தரும் தயக்கம் காரணமாக ஆணுறை வாங்கக்கூட முடியாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சாதிப் பிரச்சினையால் கலையும் காதல்கள், ஆணவக் கொலை செய்யப்படுபவர்கள் என்று பலவற்றையும் பார்த்திருக்கிறேன்.

படிக்கும் காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் காதலர்களுக்கு ஒருவரும் ஆதரவு தருவதில்லை. ஆசிரியர்களின் ஆதரவு துளியும் இல்லை. பெற்றோர்கள் ஆதரிக்கவே மாட்டார்கள். நண்பர்களால் என்ன முடியும்? இருவரும் திருமணம் செய்துகொள்ள உதவுவார்கள். மேற்கொண்டு அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு உதவ முடியாது. நண்பர்களும் படித்துக்கொண்டிருப்பவர்கள்தான். திருமணம் செய்துகொண்டால் உடனே படிப்பை நிறுத்தித்தானாக வேண்டும். இளநிலைப் படிப்பைக்கூட முடிக்க மாட்டார்கள். குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் தெளிவு கிடையாது. திருமணமான உடனே குழந்தை பெற்றுக் கொள்வார்கள். குழந்தை இல்லை என்றால் நம் சமூகம் மதிக்காது. திருமணமானதும் அடுத்த மாதமே பெண் கருவுற வேண்டும். நான்கைந்து மாதமாகிவிட்டால் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். சொத்துள்ளவர்கள் அதை ஆள்வதற்கு வாரிசு வேண்டும் என்று நினைப்பார்கள். சொத்தில்லாதவர்கள் வாரிசு வந்துதான் நம்மைச் சொர்க்கலோகத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்று நம்புபவர்கள். அதுவும் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் போதாது. அடுத்த வருடமே இரண்டாவது குழந்தையும் பெறுவார்கள். இருபத்தைந்து வயதிற்குள் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்வதென்றால் சாதாரண விஷயமா? குழந்தை வந்துவிட்டால் திருமணத்தைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் எதிர்பார்ப்பும் உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ளக் காரணம்.

‘டாடா’ படத்தில் இருவரும் பொறியியல் படிப்பவர்கள். அனேகமாக இறுதிப் பருவத்தில்தான் அவர்களுக்குப் பிரச்சினை வருகிறது. அதைச் சமாளித்துத் தேர்வெழுதிப் பட்டம் பெறுகிறார்கள். அக்கல்வி அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பு ஆணிடம் இருப்பதும் இப்படத்தில் முக்கியமான மாற்றம். அவன் வளர்ப்புக்கும் கல்விக்கும் பொருத்தமில்லாத உடல் உழைப்பு சார்ந்த வேலைக்குச் சென்று பெரிதும் சிரமப்படுகிறான். ஓர் ஆணின் வெளியுலகப் பார்வைக்கும் பெண்ணின் வெளியுலகப் பார்வைக்குமான வேறுபாட்டையும் படம் தொட்டுச் செல்கிறது. எப்படியோ அவர்கள் தம் கல்விக்குப் பொருத்தமான வேலைகளைப் பெறுகிறார்கள்.

அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் ஏதுமில்லை. காதலில் ஈடுபட்டுத் திருமணம் செய்துகொண்டால் அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது. மிகக் குறைவான ஊதியத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைக்குச் சென்று காலம் முழுக்கக் கஷ்டப்பட வேண்டியதுதான். இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும்போதே காதல் திருமணம் செய்துகொண்டு அடுத்தடுத்து இரு குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட மாணவர் ஒருவர் மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியத்திற்குப் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறார். அது முடிந்ததும் வேறொரு வேலைக்கும் செல்கிறார். வேறு வழியில்லை. எந்த ஆதரவும் அற்றவர். அவசரப்பட்டு இருகுழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். எல்லோரும் சாப்பிட்டாக வேண்டுமே. இந்த நிலையில் பல மாணவர்களைக் கண்டிருக்கிறேன்.

பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்கு, இளநிலைப் படிப்புக்கு வருவோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 50 விழுக்காடுதான் என்கிறார்கள். இளநிலைக் கல்வியை முடிப்போர் விழுக்காடு எவ்வளவு, முதுநிலைக் கல்விக்குச் செல்வோர் எவ்வளவு என்பது பற்றித் தெளிவான எண்ணிக்கை இல்லை. அரசு கல்லூரியைப் பொருத்தவரைக்கும் இளநிலைப் பட்டப் படிப்பை முடிப்போர் எண்ணிக்கை அதிகபட்சம் இருபத்தைந்து விழுக்காடு இருக்கும். அந்த இருபத்தைந்தில் பத்து விழுக்காட்டினர் முதுநிலைக் கல்விக்குச் செல்லக் கூடும். அவற்றிலும் பெண்கள் விழுக்காடு மிகமிகக் குறைவாகவே இருக்கும். பாலியல் வேட்கை, காதல், திருமணம் ஆகியவை கல்வியிலிருந்து திசை மாற்றி எதிர்கால வாழ்வையே குலைத்து விடுகின்றன.

சமூக நீதிக் கொள்கையின் காரணமாக வழங்கப்படும் இடஒதுக்கீடு மட்டும் போதுமானதல்ல. கல்வி, பாலியல் குறித்தான பார்வைகள் மாற வேண்டும். தனிப்பட்ட ஒரே ஒருவரின் வாழ்வைக் கல்வி மாற்றும் என்று கல்வியின் எல்லையைக் குறுக்கிவிட முடியாது. ஒருவர் உயர்கல்வி கற்று அது சார்ந்த பணிக்குச் சென்றுவிட்டாரானால் அவர் குடும்பமே மாறிவிடும். அடுத்தடுத்த தலைமுறைகள் மாறும். அவருடைய ஊரில் மாற்றங்கள் நிகழும். அடிநிலையில் உள்ள அவர் சாதியினரின் வாழ்க்கைப் பார்வையே மாறும். பள்ளிக் கல்வியை முடித்து ஒரு பையனோ பெண்ணோ கல்லூரிக் கல்விக்கு வருவது என்பது இன்றும் சாதனைதான்.

முதல் தலைமுறையாகக் கல்லூரியில் கால் பதிக்கும் பெரும்பான்மையான மாணவர்களைக் கண்டு வருகிறேன். அவர்களில் உயர்கல்விக்குச் சென்று முடித்து ஏதேனும் ஒரு போட்டித் தேர்வில் வென்று அரசுப்பணிக்குப் போய்விட்டால் அப்போது நிகழும் மாற்றங்களையும் பார்க்கிறேன். என் மாணவர்கள் எத்தனையோ பேர் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றுகிறார்கள். ஊதியம் குறைவாக இருந்தபோதும் அப்பணியின் காரணமாக நான் சொல்லும் மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்விலும் நடக்கின்றன. ‘எல்லோரும் படித்து மூளை உழைப்பு சார்ந்த வேலைகளுக்கே சென்றுவிட்டால் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைp பார்ப்பதற்கு ஆள் வேண்டாமா?’ என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு. இக்கேள்வி வருவதற்கு நம் கல்விமுறையும் காரணம். உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கும் முறையான கல்வியும் பயிற்சியும் வேண்டும். அதை நம் ‘ஏட்டுச் சுரைக்காய்’ கல்வி முறை தருவதில்லை. திறன் பெற்ற தொழிலாளர்களை உருவாக்கும் கல்வி முறை இருப்பின் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளும் மதிப்புப் பெறும்; ஊதியம் உயரும்.

உயர்கல்விக்கு வரும் மாணவர்கள் அனைவரும் அதை முடித்துப் பட்டம் பெற வேண்டும். முதுநிலைக் கல்விக்குச் செல்ல வேண்டும். காதலும் திருமணமும் தடையாக இருக்கக் கூடாது. பாலுறவு, திருமணம், வாரிசு பற்றிய பார்வைகளும் மாற வேண்டும். அதற்குப் பாலியல் கல்வி பெருமளவு உதவும் என்பது என் நம்பிக்கை.

 

பயன்பட்ட நூல்:

ஆர்.ஷண்முகசுந்தரம், அறுவடை, 2019, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம், மறுபதிப்பு.

 

murugutcd@gmail.com