சமையலறையில் தண்ணீர் சொம்பு உருண்டு விழும் ஓசை கேட்டதும்தான் ராமச்சந்திரனுக்கு விழிப்புத்தட்டியது. விழித்ததுமே அவன் மனது தன் உள்ளங்கால்களுக்குத்தான் சென்றது. குடைச்சல் இன்னமும் இருக்கிறதா என்று. கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது போலத்தான் இருந்தது. சமீப காலங்களில் தனக்கு தீராத வியாதிகள் சில வந்து சேர்ந்துவிட்டதாய் நமபத்துவங்கியிருந்தான் ராமச்சந்திரன். மாதா மாதம் உடலில் ஏதாவது பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தது. கழுத்துவலி என்று வந்தால் அது விடைபெற்றுப்போக இரண்டு வாரங்களை எடுத்துக்கொள்கிறது. எல்லா வலிகளுக்கும் இவன் பயன்படுத்தும் ஒரே மருந்து தேங்காய் எண்ணெய்தான். கடைகளில் கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி என்பதற்கெல்லாம் தனித்தனி எண்ணெய் வகைகள் பாட்டில்களில் இருக்கின்றன. எல்லாமும் ஏமாற்றுவேலை என்று நம்பிக்கை கொண்டிருந்தான் ராமச்சந்திரன்.

வயது கூடக்கூட உடலின் ஸ்பேர்பார்ட்ஸ்கள் தேய்மானம் அடைகின்றன! என்ற கருத்தில் உடன்பாடுடையவனான ராமச்சந்திரன் அகவை ஐம்பதில் இருந்தான் தற்சமயம். அவனது திருமணம் முடிந்து இருபத்திமூன்று வருடங்கள் கடந்துவிட்டிருந்தது. இதுவரை பல தொழில்கள் செய்து சம்பாதித்து அழித்து என கணக்கீடுகள் எதுவும் போட்டுப்பார்க்காமல் வாழ்ந்திருந்தான். இன்னமும் கணக்கீடுகள் போட்டு வாழ்க்கையை வாழ்ந்துவிடும் ஆசையின்றித்தான் இருந்தான். என்ன திட்டம் போட்டு வாழ்க்கையை நகர்த்தினாலும் அதிலெல்லாம எந்தவித மனநிம்மதியும் வந்துவிடப்போவதில்லை என்பதில் அசாத்திய நம்பிக்கையைக்கொண்டிருந்தான்.

நண்பர்கள் சுற்றம் பெருத்துப்போயிருந்த காலகட்டங்களும் இவனுக்கு இருந்தது தான் ஒருகாலத்தில். இப்போது நண்பர்கள் என்ற சொல்லே அவனுக்குப் பிடிப்பதில்லை. அதில் பல சுயநலங்கள் இருப்பதையும் அறிந்திருந்தான். இவனது ஒரே பெண் சரிதா ஆறுமாதம் முன்பாக சவரக்கடைக்காரனோடு காதலில் விழுந்து அவனோடே வாழ்வேன் என அவன் வீட்டுக்குத் துணிமணிகளோடு போய்விட்டாள். சவரக்கடைக்காரன் குறுநகரின் மையப்பகுதியில் சவரக்கடை வைத்திருந்தான். பெண்கள் யாரும் சவரம் செய்ய சவரக்கடைகளுக்குச் செல்வதில்லைதான். அப்படியிருந்தும் சவரக்கடைக்காரனை எப்படி இவள் கல்லூரிப்படிப்பை உதறி விட்டு கட்டிக்கொண்டாள் என்ற கேள்வி இவனை ஆறுமாத காலமாகவே மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது.

சவரக்கடைக்காரனின் தந்தையாரை இவனுக்குத் தெரியும். இன்னமும் இவனிடம். ‘சாமி! எம்பட காலமெல்லாம் மலையேறிப்போயிடுச்சுங்க சாமி.. எமபடகிட்ட யாருங்கொ இப்பெல்லாம் கட்டிங், சேவிங் பண்டியுடடான்னு வர்றாங்க? துரூவா கடையில போயி சேர்ல உக்கோந்துட்டு வெட்டீட்டு போயிடறாங்க! சாமி, நீங்கெல்லாம் இத்தினீக்கூண்டு இருக்கப்ப புடிச்சி எம்படகிட்டத்தான் கட்டிங் போட்டுக்குவீங்க! உங்கய்யனும் வேற எங்கீம் போயி வெட்ட மாட்டாருங்கெ!’ இப்படித்தான் பேசுவார். அவருக்கு இப்போது பார்வை மங்கலாகிவிட்டதென்று ஊருக்குள் நடமாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இவனுக்கு சம்பந்தியுமாகிவிட்டார்.

காலம் மாறிவிட்டதை முகநூலிலும், செய்தி சேனல்களிலும் இவன் பல வருடங்களாகவே கவனித்து வருகிறான். முந்தைய காலங்களில் காதலுக்கு சில தராதரங்கள் இருந்தன. இன்று அது போய்விட்டது. இவன் மனைவி இன்னமும் தன் மகளோடு போனில் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். இவனுக்கு மருமகப்பிள்ளையாக வந்தவன் நல்ல குடிகாரன் என்று ஊருக்குள் பெயர் பெற்றிருந்தான். பெண்களுக்கு இப்போதெல்லாம் குடிகாரக் கணவர்களையே பிடிக்கிறது போல. ஒருவேளை சரிதாவிடம் எதாவது திட்டங்கள் இருக்கலாம்.

மகள் சரிதா காதலனையே கட்டிக்கொண்டாள் என்றாகிவிட்டதுதானென்றாலும் இவன் மருமகப்பிள்ளையின் பெயர் கூட இவனுக்குத் தெரியவில்லை. நாவிதர் அப்புக்குட்டி பையன் என்றே ஊரும் சொல்கிறது. சரிதா அவனைக் கட்டிக்கொண்டு இந்த ஆறுமாதத்தில் தன் சாமர்த்தியத்தால் அவனது குடியை மறக்கச் செய்துவிட்டாளா? தெரியவில்லை. மனைவி செண்பகமும் அதுபற்றியான தகவல்களை இவனிடம் பகிர்ந்துகொள்வதுமில்லை. இவனது அமைதிதான் செண்பகத்திற்கு இன்னமும் பயமாய் இருந்தது. ஏதாவது ஒரு நாளில் கத்தியோடு சாமத்தில் வீட்டிலிருந்து எழுந்துபோய் மகளையும் மருமகளையும் வெட்டிவீசிவிட்டு வந்துவிடுவானோ என்றே பயம் கொண்டிருந்தாள்.

மகளைப்பற்றியான தகவல்களை கணவனிடம் இவள் சொல்வதுமில்லை. ஆனால் மகளின் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்திலிருந்து அரிசிச் சிப்பத்திலிருந்து காய்கறி வகைகளென இங்கிருந்து தான் ராமச்சந்திரன் இல்லாத நேரங்களில் சரிதா வந்து தன் தாயிடம் பேசிவிட்டுத் தூக்கிப்போய்க்கொண்டிருந்தாள். சரிதாவின் வயிற்றில் இன்னொரு முடிதிருத்தும் நிபுணர் வேறு உற்பத்தியாகியிருந்தார். அதைப்பற்றி தன் கணவனிடம் ஒருவார்த்தை செண்பகம் பேசவுமில்லை.

தீராக்காமத்தோடு வாழ்க்கையை மனைவியோடு ஓட்டிவந்த ராமச்சந்திரன் மகள் வீட்டை விட்டுக் கம்பி நீட்டியதுமே தன் காமத்தை மறந்திருந்தான். பதிலாக முகநூலில் அக்கெளண்ட் ஆரம்பித்து, ‘என்ன மண்ணாங்கட்டிக் காதல்?’ என்றெல்லாம் கவிதை எழுதிப்போட ஆரம்பித்திருந்தான். எந்த நேரமும் காதலுக்கு மரியாதை தராத பதிவுகளைத் தொடர்ந்து முகநூலில் பதிவிட்டான். தன் கோபமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் தீர்வதாய் நம்பிக்கை கொண்டான். இப்படியிருக்க, சில பெண்கள் இவனது அலைபேசிக்கு அழைக்க ஆரம்பித்தார்கள்.

‘காதல்னா உங்களுக்கு ஏன் பிடிக்காது? உங்க மனைவி இன்னொருத்தனைக் காதலிச்சு ஓடிட்டாளா சார்? பாவம் சார் நீங்க! இப்ப தனியாவா இருக்கீங்க? என்ன தொழில் பண்றீங்க சார்? பிள்ளைங்க எத்தனை? அவிங்க என்ன பண்டுறாங்க? எனக்கும் காதல் பிடிக்காது சார்! என் வீட்டுக்காரன் பக்கத்து ஊட்டுக்காரியைக் கூட்டிட்டு போயி ஒரு வருசமாச்சி சார்!’ என்று பொழுதுபோகாமல் கதையடிக்கும் பெண்கள் இவன் அலைபேசிக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தார்கள். ஒருத்தி ‘அண்ணே!’ போட்டு பேசினாள். தொடர்ந்த பேச்சில், ‘அண்ணே.. எல்லாரும் மோசமா பேசுறாங்கண்ணே! மெசஞ்சர்ல வந்து தப்புத்தப்பா பேசுறாங்கண்ணே! என் வீட்டுக்காரன் இப்பத்தான் குடியைவிட்டு மருந்து சாப்டுட்டு வீட்டோட கிடக்காண்ணே! முகநூல்ல முட்டாப்பயன்னு ஒரு ஐடி இருக்குண்ணே.. அவன் கொஞ்ச நேரம் முந்தி கடுப்பைக் கிளப்பிட்டாண்ணே! நானு அழகா உருண்டையா லட்டாட்டம் இருக்கனாம்ணே.. திமுறு பாருங்கண்ணே!’ என்று ஆக்ரமிப்பு நடந்தது.

இதற்காகவெல்லாம் இவன் சோர்ந்துவிடவில்லை. யார் கூப்பிட்டாலும் அலைபேசியை எடுத்துப் பேசினான். சில நேரங்களில் ராக்காலங்களில் இவன் மனைவி
யிடமே போனைக் கையில் கொடுத்து, ‘இந்த பொம்பளைக்கி என்ன வேணும்னு கேளு செண்பகம்!’ என்று நீட்டிவிடுவான். ராத்திரி சாப்பாடு சாப்பிட்டதிலிருந்து காலையில் கத்திரிக்கா கூட்டு வைப்பது வரை பேசிவிட்டு போனை இவனிடம் நீட்டுவாள். ‘என்னாங்க.. திடீர்னு சம்சாரத்து கையில் குடுத்துட்டீங்க? பகீர்னு ஆயிடுச்சு!’

“இனிமேல் எவகிட்ட பேசினாலும் என்கிட்ட போனைக் குடுக்காதீங்க! நொய்யி நொய்யின்னுட்டு..’’ செண்பகம் சுவர் பார்த்து திரும்பிப் படுத்துக்கொள்வாள். இவன் யூடியூப் சேனலில் நுழைவான். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை சமீப நாட்களில் பழசே என்றாலும் போய் முக்கால் மணி நேரம் கேட்டான். ‘பொண்டாட்டி இருக்கறப்ப நீ எப்படிம்மா இவரைக் கட்டிக்கிட்டே? நாளைக்கி உன்னையும் விட்டுட்டு இன்னொருத்தியைக் கட்டிக்க மாட்டார்னு என்ன நிச்சயமிருக்கு?’ போன் பாட்டுக்கு கத்திக்கொண்டிருக்க இவன் அப்படியே தூங்கிப்போய்விடுவான். கனவில் இவனும் போய் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தான். ‘சொல்லுங்க.. என்ன பிரச்சனையின்னு இங்க எங்களைத்தேடி வந்திருக்கீங்க ராமச்சந்திரன்?’ என்ற கேள்வி இவனை நோக்கி வந்தது. இவன் ‘பே..ஃபே பே.. பெப்பே.. பே’ என்று சொல்லிவிட்டு அதிர்ந்து எழுந்து பாயில் அமர்ந்தான். அருகில் இவன் மனைவி குறட்டை போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

படுக்கையிலிருந்தபடியே இடதுபக்கம் கிடந்த அலைபேசியை எடுத்து அழுத்தி மணி பார்த்தான். ஆறுமணியாக பத்துநிமிடமிருந்தது. முகநூலுக்குத் தாவினான். இறந்துபோன பெரியவர் படத்தைப் பதிவிட்டு அவரது பிறப்பு வருடம் இறப்பு நாள் போட்டிருந்தார்கள். நேற்று மாலையில் இறந்திருக்கிறார். கண்ணீர் வழியும் சிம்பளைக் குத்திவிட்டு அடுத்து நகர்ந்தான். ஓபிஎஸ் ஊர் ஊராகச் சென்று கட்சிக்காரர்களை சந்திப்பதாய் தகவல் இருந்தது. அங்கேயும் கண்ணீர் வழியும் சிம்பளைப் பதிவிட்டு
விட்டு அவரது மொட்டையில் முடிகள் முளைத்திருக்கிறதாவெனக் கவனித்து கீழிறங்கினான். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் அட்டையில் படத்தை மாற்றிவிட்டேன் என ஒருவர் பதிவிட்டிருந்தார். அங்கேயும் போய் அழும் சிம்பளைக் குத்திவிட்டு எழுந்தான். லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

இவன் சமையல்கட்டுக்குள் வருகையில் செண்பகம் அங்கில்லை. ஆறுமணி என்றதும் வீட்டுப்பைப்பில் தண்ணீர் வந்துவிடும். குடங்களைத் தூக்கிக்கொண்டு போயிருப்பாள். இவனாக காபிச்சட்டியை எடுத்து கேஸ் அடுப்பில் வைத்து சூடுபண்ணி டம்ளரில் ஊற்றிக் குடித்தான் சமையலறையில் நின்றபடியே! கொத்தவரங் காயைப் பொடிப்பொடியாய் நறுக்கி தட்டில் வைத்திருந்தாள். ஆக இன்று பருப்புக்குழம்பு இருக்காது. கொத்தவரங்காய் பொறியலோடே தான் சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடவேண்டும். டம்ளரைக் கழுவாமல் திண்டில் வைத்துவிட்டு வெளியேறினான்.

இவனாக பைப்படிக்கு வந்து நிரம்பியிருந்த தண்ணீர்க்குடங்களைத் தூக்கிப்போய் பாத்ரூம் தொட்டியில் ஊற்றி நிரப்பினான். வீட்டைச்சுற்றிலும் வைத்திருந்த தக்காளி, வெண்டை, கத்தரிக்காய் செடிகளுக்கு மொடேர்ச் மொடேர்ச்சென கொண்டு போய் தண்ணீர் ஊற்றினான். தக்காளிச் செடி கூடாரம் போல வளர்ந்து நிலத்தோடு ஒட்டிப் படுத்துக்கிடந்தது. அதற்கு தாங்கு குச்சி வைக்கவேணுமென ஒருவாரமாய் நினைக்கிறான். ஒன்றிரண்டு செடிகளென்றால் கையோடு குச்சியொடித்து நட்டி டொய்ன் போட்டு கட்டி நிமிர்ந்து நிற்கச் செய்துவிடலாம். அங்கங்கே குட்டான் குட்டானாய் கிடக்கிறது. கத்தரிச்செடிகளில் வெள்ளைப்பூச்சி விழுந்துவிட்டது சில செடிகளில். அவைகளுக்கு என்ன மருந்திட்டாலும் பயனில்லை. வேரோடு பிடுங்கிப்போய் தூர வீசிடத்தான் வேணும்.

பைப்பில் தண்ணீர் நிற்கும் சமயம் இவன் குளியலுக்காக பாத்ரூமில் நுழைந்தான். கடந்த மூன்று மாதங்களில் அரைமணி நேரம் வரை பாத்ரூமில் இவன் குளியல் போடும் பழக்கத்திற்கு வந்திருந்தான். உடலுக்கு இரண்டுமுறை குளியல் சோப்பை பயன்படுத்தினான். எதற்காக என்றெல்லாம் தெரியவில்லை இவனுக்கே. வருடத்தில் ஞாபகம் வந்தால் மட்டும் இரண்டுமுறை இவன் மனைவி பாத்ரூமில் நுழைந்து இவனுக்கு முதுகு தேய்த்துவிடுவாள். ‘அழுக்கைப்பாரு! அழுக்கைப்பாரு!’ என்று நகத்தால் சுரண்டி தேய்ப்பாள். இவனே முடிந்த அளவு கைகளைப் பின்னால் செலுத்தி முயற்சித்தான். எருமைகள் சுவற்றில் உரசுவதுபோல முதுகை சுவற்றில் உரசலாமென்றால் டைல்ஸ் ஒட்டி வைத்திருந்தான்.

குளியலை முடித்தவன் இடுப்பில் துவட்டிய துண்டைச்சுற்றிக்கொண்டு நேராக வீட்டின் வெளியில் வந்தான். செம்பருத்தி செடியிலிருந்து பூக்களைப் பறித்தவன் நேராகப் பூஜை அறைக்குள் நுழைந்தான். சமையலறையில் வடைச்சட்டியில் கடுகு பொறியும் சப்தம் கேட்டது. சுவாமி படங்களில் இருந்த பழைய பூக்களை எடுத்து ஓரம் கட்டிவிட்டுப் புதிய பூக்களை செருவினான். விளக்கு பற்ற வைத்துவிட்டு ஊதுபத்தியைப் படங்களுக்குக் காட்டியவன் அதை அரிசி நிரம்பிய டம்ளரில் குத்தி நிறுத்திவிட்டு கும்பிடு போட்டான். நெற்றி நிறைய திருநீரு பூசிக்கொண்டு வெளிவந்தவன் பீரோவைத்திறந்து அயர்ன் செய்து வைத்திருந்த வெள்ளைச்சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். அடுத்ததாக நீலவர்ண ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்தவன் கண்ணாடி முன்பாக வந்து நின்றான். காதுக்கும் மேலாகவும் பொடணியிலும் முடிகள் கத்தையாய் கிடந்தன. வெளியூர் போய் முடிவெட்டிவிட்டு வரவேண்டுமென நினைக்கிறான். ஆனால் என்னவோ தடை நடந்துகொண்டே இருக்கிறது.

தலையை சீப்பால் சீவிக்கொண்டவன் சீப்பை அதனிடத்தில் வைத்துவிட்டு சாப்பாட்டு டேபிளுக்கு வந்து அமர்ந்தான். செல்போனில் மணி பார்த்தான். எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. திடீரென படபடப்பு கூடிக்கொண்டது இவனிடம். ‘ஆச்சா இல்லையா?’ என்று சப்தமிட்டான். ‘சும்மா ஏன் கத்தறீங்க? இதா வட்டல்ல சாப்பாடு போட்டுட்டேன்!’ என்று செண்பகத்தின் குரல் சமையலறையிலிருந்து வந்தது. அப்படி கத்தியிருக்கக்கூடாதோவெனவும் நினைத்தான். சாப்பிட்டு முடித்தவன் ஹாலுக்கு வந்து தன் ஷூவை எடுத்து கால்களுக்கு அணிந்து கொண்டான். தோளில் பேக்கை மாட்டிக்கொண்டு செண்பகத்திடம் விடைபெற நின்றான்.

“அப்புறம் நான் போயிட்டு வந்துடறேன் செண்பகம்” என்று குரல் கொடுத்தான்.

“பார்த்து பதனமா போயிட்டு வந்து சேருங்க!” செண்பகத்தின் குரல் வந்ததும் இவன் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தான். சாலையில் வாகன இரைச்சல் அதிகமிருந்தது. திடீரென இன்று என்ன கிழமை என்று அவனுக்குத் தெரியவில்லை. ரொம்பவும் யோசித்துக்கொண்டே நடையிட்டான் சாலையின் ஓரமாக. என்ன யோசித்தும் கிழமை ஞாபகம் வருவேனா என்றது. ஒருமனதாக ஞாயிற்றுக்கிழமையாகத்தான் இருக்க வேண்டுமென முடிவுக்கு வந்தவனுக்கு படபடப்பு கூடியது. இன்னமும் கொஞ்சம் தூரம் சென்றிருந்தால் மருமகப்பிள்ளை முடிதிருத்தகம் வந்திருக்கும். அந்தக்கடை முன்பாக ராமச்சந்திரன் நடப்பதா? நெவர்!

மருமகப்பிள்ளை சேவிங் செய்து கொண்டிருந்தால் சாலையில் செல்லும் ராமச்சந்திரனைக் கவனிக்க வாய்ப்பிருக்காது தான். ஆனால் வேலையின்றி கடையில் நின்றிருந்தால்..? இவனைப்பார்த்து, ‘எப்பிடி.. உன் பிள்ளையை தட்டி எங்கூட்டுக்கு எனக்கு சோறாக்க கூட்டிட்டு வந்துட்டேன்ல! உன்னால என்ன பண்ட முடியும்?’ என்ற பார்வை பார்ப்பான். அதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது. பக்கத்து சந்தில் நுழைந்து வேறு வீதியில் நுழைந்த ராமச்சந்திரன் நேராகப் பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தான். இவன் போய் நின்ற சமயம் வரிசையாக பேருந்துகள் வந்து நின்று கிளம்பிச் சென்றவண்ணமாக இருந்தன. இவனுக்கு மலையாளத்தான் கடையில் ஒரு லெமன் டீ குடிக்க வேண்டும் போல இருந்தது.

நேராக மகாலட்சுமி பேக்கரிக்குள் நுழைந்தான். வட்ட வடிவமான டேபிளின் முன்பாக சேரில் சென்று அமர்ந்தான். தன் பேக்கை களவாடிச் செல்லும் முனைப்பில் யாரேனும் கடையினுள் இருக்கிறார்களா? என்று நோட்டம் விட்டான். யாருமில்லை என்றபோது நிம்மதியானான். எதிர்க்கே யாருமில்லை என்ற போதும் ‘என் பெயர் ராமச்சந்திரன்!’ என்று வாய்விட்டே சொன்னான். இவன் டேபிளுக்கு லெமன் ஜூஸ் ஸ்ட்ராவோடு வந்து ஒருபயல் வைத்துவிட்டுச் சென்றான். இவன் யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா? என்று உற்றுப்பார்த்துவிட்டு திருட்டுத்தனமாய் உறிஞ்சிக்குடித்தான்.

காலிடம்ளரை உற்றுப்பார்த்தவன் பக்கத்து டேபிளில் கிடந்த அன்றைய தினசரியைத் தாவி எடுத்து விரித்தான். செய்திகளில் கவனம் செலுத்தினான். கள்ளக்காதலியின் கணவனைக் கொன்றவனின் புகைப்படமும் செய்தியும் இருந்தது. கள்ளக்காதலியை அழகாக இருக்கிறாளா என்று உற்றுப்பார்த்தான். அவள் எந்த விதத்திலுமே இவனுக்கு அழகாய்ப்படவில்லை. தன் செல்போனில் அதை ஒரு புகைப்படமெடுத்து முகநூலில்.. ‘நாடு ஒரு நாளும் நலம் பெறப்போவதில்லை! காதல் என்கிற கருமம் எல்லோரையும் புதைகுழிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது! நீங்கள் எப்போது புதைகுழிக்குப் போவீர்கள்?” என்று எழுதி பதிவிட்டான்.

கல்லாவில் நின்றவனிடம் இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டு கடையை விட்டு இறங்கினவன் நேராக வீடு நோக்கி நடையிட்டான். முகநூலில் நேற்று கருவாட்டு தினம் கொண்டாடினார்களா முகநூல் வாசிகள் என்ற ஐயம் இவனுக்குள் எழுந்தது. காதலர் தினத்திற்கு அடுத்த நாள் கருவாட்டு தினம். ஆனால் மார்ச் இருபத்தியொன்றுக்கு கருவாட்டு தினத்தை மாற்றிவிட்டார்கள் எல்லோரும் கூடி. எல்லாமும் அவரவர் சவுகரியமாய் போய்விட்டது. யாருக்கும் கருவாட்டு தினத்தின்மீது அக்கறையே இருப்பதில்லை. சகமனிதனுக்கும் சகமனுஷிக்கும் கருவாட்டு தின வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளாத உலகம் என்ன உலகம்? இத்துப்போன உலகம்!

இவன் வீட்டு வாசலுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. நிதானமாக நடந்துபோய் வழக்கமாக செண்பகம் வைத்துவிட்டுப்போகும் இடம் சென்று சாவியை குகைக்குள் கைவிட்டு எடுத்து வந்து வீட்டின் பூட்டைத்திறந்தான். உள்ளே நுழைந்தவன் தன் ஷூவைக் கழற்றி பத்திரமாய் வைத்துவிட்டு கதவை உள்புறமாய் தாழிட்டான். பேக்கை முதுகிலிருந்து கழற்றி கொண்டுபோய் டேபிளில் வைத்துவிட்டுப் படுக்கையறைக்குள் நுழைந்து உடைகளைந்தான். நிர்வாணமாகவே நடந்துபோய் சமையலறையில் செம்பில் தண்ணீர் மோர்ந்து குடித்துவிட்டு படுக்கையறைக்கே வந்தவன் கட்டிலில் விழுந்து இரண்டு தலையணையை தலைக்குக் கொடுத்துப்படுத்தான்.

அலைபேசியை எடுத்து முகநூல் பக்கத்திற்கு வந்தான். இவன் பதிவிட்டிருந்த பதிவின் கீழே கமெண்ட்ஸ்கள் இருந்தன. லேடி டாக்டர் என்று அறியப்பட்ட பெண்ணொருவர் இவனை சீக்கிரம் போய் மனநல மருத்துவரை சந்திக்கச் சொல்லியிருந்தார். அப்ப நீங்க பல்டாக்டரா மேடம்? என்று பதிலிட்டான். ‘நீ போடா லூசு புதைகுழிக்கு!’ என்றொருவன் சொல்லியிருந்தான். ‘கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்’ என்று அவனுக்குப் பதிலிட்டான்.

வெளியே கதவை யாரோ பலமாய் தட்டும் ஒலி கேட்டு அலைபேசியைப் படுக்கை மீது வைத்துவிட்டு நிர்வாணமாகவே ஹாலுக்கு வந்தான்.

“ஏம் போட்டு இந்தத் தட்டு தட்டறீங்க கதவை? ஒடஞ்சிட்டா உங்கொப்பனா வந்து கதவு மாட்டிக்குடுப்பான்? யாரது?” என்று குரலிட்டபடி வந்தான்.

“நா கீரைக்காரிங்கண்ணோவ்! பாப்பா மாசமா இருக்குதுன்னு அக்கா போனவாட்டி சொல்லுச்சுங்கொ! சத்துமானம் வேணும்னு முருங்கைக்கீரை கொண்டாந்தா குடுத்துட்டு போன்னு அக்கா சொல்லுச்சுங்கண்ணா!” இவன் மளாரெனப்போய் கதவு நீக்கினான். இவன் கோலத்தைப்பார்த்த கீரைக்காரி கையிலிருந்த கீரைக் கட்டோடு அப்படியே வாசலில் சாய்ந்தாள்.

 

vaamukomu@gmail.com