தமிழ்ச் சமூகத்தின் கல்வி வரலாறு குறித்த ஆய்வுகள் இங்கு பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. இன்றும் 100% கல்வியறிவு என்ற எட்டாத சமூகமாகவே இருப்பது கண்கூடு. அதனால் தமிழ்க் குடிகள் எக்காலத்தும் கல்வியறிவு பெற்ற சமூகமாக இருக்கவில்லை என்று மறந்தும் சொல்லிவிட முடியாது. கீழடியும், ஆதிச்சநல்லூரும் இன்ன பிற அகழ்வாய்வு ஆதாரங்கள் எழுத்தறிந்த நாகரிகமடைந்த தமிழ்ச் சமூகத்தின் இருப்பை காலத்தில் பின்நோக்கி நகர்த்தியபடி இருக்கின்றன. ஒரு வளமான அறிவார்த்த சமூக இருப்பிற்கான காலவரையறை கி.மு. ஆயிரத்தையும் கடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் ஏதோ எழுத்தறிவு பெற்ற நகர சமூகத்திற்கான தடமெனக் கருத இயலாது.

‘அரசவையிலும், மேனிலை மக்களிடையேயும் வழிபாட்டுத் தலங்களிலும் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை தமிழகத்தில் காணப்படவில்லை. மாறாக, எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு மிகப் பரவலாகக் காணப்பட்டது’ (ஐராவதம் மகாதேவன் 1996:45).

ஆனால் ‘‘ஐராவதம் மகாதேவன் அவர்களின் தமிழ் பிராமிக்கு அளித்துள்ள கி..மு. இரண்டாம் நூற்றாண்டு என்ற காலவரையறை இப்போது கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல் , மொழியியல் , நாணயவியல் போன்ற தரவுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள இயலாத நிலை உள்ளது என்பதையும் கொடுமணலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றின் காலத்தை அசோகருக்கும் முன்பாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.…. இப்பண்பாட்டு எச்சங்களுடன் கிடைக்கும் பானை ஓடுகளில் குறியீடுகள் கிடைப்பதன் மூலம் அக்காலத் தமிழ் மக்கள் சுமார் கி.மு. ஆயிரம் ஆண்டு வாக்கிலேயே ஒருவகையான பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தைத் தமது கருத்துப் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தினர் எனலாம்’ என்கிறார் கா.இராஜன் ( 2004:73-74 )

தொல்லியல் அறிஞர்கள் நொபுரு கரசிமா மற்றும் சுப்பராயலு ஆய்வுகளின் மிக முக்கியமான கண்டடைவு, இது போன்ற பானைக் கீறல்கள் அறுகியே எழுத்துருக்கள் உருவாகின என்பதாகும். அதாவது ‘கீறல்’கள் எழுத்துரு நிலையை அடைந்த போது ஓடுகளின் பொறிப்புகள் அற்றுப் போயின என்பதாகும். அப்போதுதான் கல்வெட்டுகளும், நடுகற்களும் உருவானது என்பர். கல்வெட்டுகள் மற்றும் இன்னபிற அறிவிப்புகள் பொறிக்கப்பட்டது சமகாலப் பொதுமக்களும், பிந்தைய சமூகமும் அறியும் பொருட்டே. பரவலாக தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் காணப்படும் இவ்வகை தொல்லியல் ஆதாரங்கள், ஒன்றை உறுதியாக நிறுவுகிறது. மக்களிடையே பெருமளவில் எழுத்தறிவு நிலவியது என்பதே அந்தக் கருத்துரு.

எனவே எழுத்துப் பொறிப்புகளின் காலம் துவங்கி தமிழி ஊடாக சங்க காலம் வரை தமிழ் குடிகள் கல்வியறிவு பெற்ற சமூகமாகவே இருந்திருக்கிறார்கள். சங்க காலம் தொட்டே இங்கு வந்த பௌத்த, சமண மதத்தவர் மக்கள் கல்வியை வெகுவாகத் தொடர்ந்திருக்கின்றனர். பல்லவர் காலத்தில் துவங்கிய பார்ப்பன / சமஸ்கிருத மேலாதிக்கம் பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் காலத்திலும் வலுவாகத் தொடர்ந்தது. தங்கள் மேலாண்மை ஆயுதங்களாக சமயத்தையும், வேதங்களையும் கையாண்ட பார்ப்பனர், கல்வியையும் பெரும்பான்மை சமூகங்களுக்கு மறுத்தனர். சடங்கு சார்ந்த வேதங்களை பிறரறிதல் ஆபத்து என எண்ணி, வேதங்களைப் படிப்பதும், ஓதுவதும் மாபெரும் குற்றமென விதித்த விதி, அப்படியே நீண்டு பொதுக் கல்விக்குமானது. சங்க காலத்திற்கும் தொன்மையானது எனக் கருதப்படும் தொல்காப்பியம், இந்த ‘ விலக்கத்தை’ உறுதி செய்கிறது. இது எப்படி நேர்ந்தது என்பதையும், அதனைப் போராடி விலக்கிய பௌத்த, சமணக் கல்வி, அதைத் தொடர்ந்த ஆங்கிலேயரின் கல்விப்பணி கரம் பற்றி திராவிடத் தமிழர் எப்படி அந்தத் தடையை உடைத்து வெளியேறினர் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியே இந்தக் கட்டுரை.

சமீப காலத்தில் “ தமிழர் தம் கல்வி வரலாறு” எழுதியுள்ள முனைவர் கோ. பழனிவேலு ( 1993:100) இப்படி எழுதுகிறார்.

‘சங்க காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த சமூகத்தின் பல்தரப்பட்ட பிரிவினரிடமும் கல்வியறிவு பரவலாக இருந்துள்ளது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், இசைக் கலைஞர்கள், மருத்துவர்கள், கணியர்கள், மல்லர்கள், குயவர்கள், குறவர்கள் எனப் பல பிரிவினரும் புலவர்களாக இருந்துள்ளனர். மேலும் நாற்பது பெண்பாற்புலவர்கள் எழுதிய பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்பெண்களும் சங்கத் தமிழ் சமுகத்தின் பலதரப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கல்வி கற்க நிறுவனங்கள் இருந்ததா? எந்தவகைக் கல்வியைக் கற்றனர் என்பதற்கு விடையாகச் ‘ சங்க காலத்தில் பாடல்பாடும் திறம் பெற்றோர் பலர் இருந்தனர். இப்புலவர்கள் தமது பாடல்களை அரசர்களின் முன்பாடினர். எனினும் இவர்கள் பயிலும் முறை இருந்தமையை அறிய இயலவில்லை. அதே நேரத்தில், பாடலியற்றும் திறம் பெற்றிருந்த சங்கப் புலவர்கள் எந்த வகையான கல்வியைக் கற்றுப் பாடல் எழுதினர் என அறிய இயலவில்லை.’

ஆய்வாளரின் ஆய்வுப் பொருண்மை தன்னை வரையறை செய்து கொண்ட விதத்தில் அதற்கான தேடல் வாய்ப்பு இல்லை. ஆங்கிலேயர் வருகை வரை என வரையறுத்துக் கொண்டு பதினாறாம் நூற்றாண்டோடு முடிந்து விட்டது.

ஆனால் இந்தக் கல்வி முறை குறித்த பார்வையை சேவியர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் ஆய்வில் காண முடிகிறது. பேரா. பழனிவேலு அவர்கள் பதிவு செய்தது போல ‘ பாடல்’ கட்டியவர்கள் பாணர்களும், பாடிணிகளுமாவர். அவர்கள் கல்வி முறையே வாய்மொழியாகப் பாடலைப் பாடித் தொகுப்பது என்பதாகும் என்கிறார் தனிநாயகம் அவர்கள். அவரது ஆய்வில் தொல் மரபுகளின் கற்றல் முறை கிரேக்கத்தின் பாடல் பாடுவோர் (BARDS) போலவே தமிழகத்திலும் வாய்மொழி மரபாகவே இலங்கியது என்பார். இவர்கள் இசையோடு பாடலிசைத்தல் என்ற மரபை வழி வழியாக கைமாற்றினர் என்கிறார். சங்க இலக்கியங்களில் உள்ள பாணர், பாடிணிகளின் ‘பாடல்கள்’ பாடப்பட்டு பின்னர் எழுத்துருவில் பதியப்பட்டவை. இவை பெரும்பாலும் இசையோடு இணைந்தே இருப்புக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இந்தப் பாணர்களும், பாடிணிகளும் சமூகத்தின் அடிநிலை உள்ளிட்ட பல்வேறு சமூகங்களிலிருந்து வந்தனர். அதே வேளையில் இந்தப் பாணர், பாடிணிகளுக்கு மாறாக அல்லது அதனின்றும் விலகிய புலவர் மரபினரும் இருந்தனர். இந்தப் புலவர்களும் பாடல் செய்பவர்களேயானாலும், தங்களது படைப்பை எழுத்து வடிவில் வடிப்பது கொண்டு புலவர்களாக தரம் உயர்த்திக் கொண்டனர். இது ஓரளவில் குலமரபு சார்ந்தும் நிகழ்ந்தது எனத் தெரிகிறது. கபிலர் தன்னை ‘ புலவர்’ என அறிவித்ததும் இதன் வழியேதான் எனக் கருத வாய்ப்புள்ளது.

இந்தப் புள்ளியில் கவனிக்கப்படாது விடுக்கப்பட்ட ஒரு நூல் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியமானது. கல்வித் துறை/ அறிவுத் துறை சார்ந்த ஆய்வாளர்களும், அறிஞர்களும் ஆழமாகக் காணத் தவறிய கல்வி வரலாற்றை, கல்விப்புலம் சாராத தன்னார்வல அறிஞர் பெருமகனார் திராவிடப் பித்தன் என்ற புனைப் பெயர் பூண்டு எழுதியுள்ள, “திராவிட நாட்டுக் கல்வி வரலாறு” எனும் நூலாகும். திராவிட இயக்க முன்னோடிகளில் என்.வி.என். என்று அறியப்பட்ட என். விஜயரங்கம் நடராஜன் அவர்களால் , 1949 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட வார இதழ் ‘திராவிடன்’. அந்த இதழில் ‘திராவிடப் பித்தன்’ எழுதிய ‘ஆரம்பக் கல்விச் சீர்திருத்தம்’ என்ற 1955 ஆம் ஆண்டின் இதழ்களில் வந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கட்டுரைகளைத் தொகுத்து, சீரிய ஆய்வு முன்னுரை எழுதி மீள் பதிப்புச் செய்தவர் முனைவர் பேரா. பாவேந்தன் அவர்கள் பொருத்தமாகவே இந்த நூலுக்கு, திராவிடப் பித்தன் கூற்றையொட்டியே ‘திராவிட நாட்டுக் கல்வி வரலாறு’ எனப் பெயரிட்டுள்ளார். 1953 ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சரான ராஜாஜி தனது அமைச்சரவையைக் கூட ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்த ‘குலக் கல்வித் திட்டத்தை’ கொண்டு வந்தார். தந்தை பெரியார் வெகுண்டெழுந்து போராட்டக்களம் கண்டு வெகுமக்கள் எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்பினார். இராஜாஜி அவர்களது ‘குலக் கல்வி திட்டம்’ கைவிடப்பட்டதோடு, அவரும் பதவி விலக வேண்டியதானது. இந்தச் சூழலில் ராஜாஜி அவர்களால் பிழையாகக் கையாளப்பட்ட ‘ஆரம்பக் கல்வி சீர்திருத்தம்’ கொள்கையினை விமர்சித்து எழுதப்பட்ட ஆய்வுத் தொடர் மிகுந்த கவனத்திற்குரியது. நிகழ்காலப் போக்கை / கொள்கையை விமர்சித்த கட்டுரைத் தொடர் ஆழமாக திராவிடத் தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை அதன் ஆரம்பக் காலம் தொட்டே ஆய்வுப் பொருளாக்கியுள்ளது. பேரா, தொ. பரமசிவம் நூல் முகத்தில் எழுதியிருப்பது போல, அந்த நாட்களில் துறை சாராத ஆய்வாளர் இத்துணை நுட்பமான ஆய்வுத் தரவுகளைத் தேடிக் கண்டடைந்து அவற்றை முறையாக விளக்கியிருப்பது பெரும் வியப்பிற்குரிய ஒன்றே. இத்தனைக்கும் அந்தப் புனைப் பெயரில் ‘திராவிட இனம்’ எனும் நூலையும் எழுதியவராக அறியப்படும் திராவிடப் பித்தன், இன்றளவும் சொந்தப் பெயர் மற்றும் அடையாளங்களுடன் அறியப்படாதவர்.

இனி திராவிடப் பித்தன் அவர்களின் வார்த்தைகளில், “ ‘ஆரம்பக்கல்வி சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் எழுதப்படும் இக்கட்டுரை ஆரம்பக்கல்வி சீர்திருத்தத்தைப் பற்றி மட்டுமே எழுதப்படாது பொதுவான வகையில் கல்விமுறையைப் பற்றி எழுதப்பட்டு வருகிறது. ஆரம்பக் கல்வி சீர்திருத்தம் பற்றி எழுதுவதற்கு அப்பொருளைப் பற்றிக் கூறும் நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து பார்க்க நேரிட்டது. இப்படி ஆராய்ந்து பார்த்ததன் பயனாய் நம் ‘திராவிட நாட்டின் கல்வி சரித்திரத்தையே’ எழுத வேண்டிய பெரும்வேலை ஏற்பட்டு விட்டது. இந்தியக் கல்வி சரித்திரத்தை எழுதியவர்கள் அத்தனை பேரும் ஒரு மாதிரிக்குக் கூட ஒரு வார்த்தை எழுதவில்லை. அவர்கள் புகழ்ந்து எழுதியிருப்பதெல்லாம் சமஸ்கிருத கல்வியைப் பற்றியும் பார்ப்பனர்களின் கல்வி சரித்திரத்தைப் பற்றியுமே இருக்கின்றன.” (2009:59)

தொடர் கட்டுரையின் முகப்பு வரிகளிலேயே தனது அரசியலை அறிவித்து விடுகிறார் ஆசிரியர். “வர்த்தமான மகாவீரரும், சாக்கிய புத்தரும் தோன்றினர்; பிராமணர்களுக்கும் பிராமணியத்திற்கும் எமனாக மாறினர். அவர்களது சமதர்ம கொள்கைகள் வருணாஸ்ரம முறையைத் தகர்த்து பொதுமக்களின் கல்வி ஞானத்தையும் அறிவையும் தூண்டி விட்டன. சாதிப் பாகுபாடுகளை நிராகரித்த சமண, பௌத்தர்கள் எல்லா மக்களையும் கல்விக் கூடங்களில் சேர்த்து ஒரு படித்தான கல்வி அறிவைப் புகட்டினர். சமண, பௌத்தப் பள்ளிகள் நாடெங்கும் துவங்கப்பட்டு மக்கள் கல்வி வளர்க்கப்பட்டது.” (2009:55) தொடர்ந்து தொல்காப்பிய சூத்திரமான, ‘அவற்றுள் ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன’ என்பதையும் இன்னபிற சூத்திரங்களையும் சுட்டி, அவற்றிற்கான நச்சினார்க்கினியனார், இளம்பூரணார், நம்பியார், மு.இராகவையங்கார் உரைகளைத் தொகுத்துள்ளார். அவற்றில் பலவிதமான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து தொல்காப்பியம் நான்கு வர்ண ஏற்பாட்டையே மொழிந்திருக்கலாம் என ஐயுறுகிறார். அதாவது மேலோர் கீழோர் என்ற தொகுப்புகள் அங்கீகரிக்கப்படத் துவங்கிவிட்டது என்கிறார். மேலோர் மூவர் எனும் வர்ண வரிசை ஆரிய வேதங்கள் கற்பது தொடர்பானதே என்ற வாதத்தை அவரால் ஏற்க முடிவதில்லை. கீழோர் எனக் குறிக்கப்பட்டோர் அனைவரும் தமிழரே என்ற வாதம் ஆறுதலளித்தாலும், வர்ணங்களின் வருகையை மறுப்பதற்கில்லை என்கிறார். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடியதாக புறநானூற்றில் உள்ள பாடலான

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவன் மவன்கட் படுமே

(புறநா, 183 )

கூறுவது கருதக்கூடியது என்கிறார் திராவிடப் பித்தன். இந்தப் பாடலின் செய்தியாகிய கீழோர் கல்விச் சிறப்பு, வருணப் பாகுபாட்டு முறைக்கு எதிர்ப்புக் காட்டிய வரலாற்றை நெடுஞ்செழியன் இப்பாடல் மூலம் தெரிவிப்பதாகக் கொள்வதும் பொருத்தமுடையதாகும் என்கிறார்.

இதைத் தொடர்ந்து இந்த நூல் மிக விரிவாக பௌத்த, சமண ‘க்ஷபள்ளிகள்’ வெகுமக்களிற்கு வழங்கிய கல்வியை விரிவாகப் பேசுகிறது. அதன் பின்னரான கிறித்தவ மிசனரிகளின் மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களின் கல்விப்பணியை விரிவாகப் பேசுகிறது.

 

சங்க காலத்திலேயே வடமொழி மரபு ஊடுருவத் துவங்கியது என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. அதே வேளையில் தொல்காப்பியத்தில் காணப்படும் சாதிய மேல் கீழ் சமூக அமைப்பு குறித்த தரவுகளே இடைச்செறுகல் என்பாரும் உண்டு. “சங்கம் மருவிய காலத்திற்குப் பின் வட தமிழகத்தில் பல்லவர்களும் தென் தமிழகத்தில் பாண்டியர்களும் நிலை பெற்றனர். பல்லவர்கள் காலம் தமிழகத்தில் பார்ப்பனரல்லாதோருக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட இருண்டகாலமாகும். பல்லவர்கள் தமிழகத்தின் வடக்கிலிருந்து வந்த பிராமண மரபைச் சார்ந்தவர்கள், பல்லவர் காலச் சமுதாய அமைப்பு முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே இருந்தது மட்டுமல்லாது ஒவ்வொரு சாதியினருக்கும் தனித் தனி விதிகள் உருவாக்கப்பட்டன” என்கிறார் முனைவர் பாவேந்தன் ( 1999:30) இதற்கு ஆதாரமாக “தர்மசாத்திர அடிப்படையிலான சமுதாயம் அமைந்தது. மகேந்திரவர்ம பல்லவன் சாதியின் புனிதச் சட்டத்தைக் காப்பாற்றினான். எனக் கூரம் சாசனம் கூறுகின்றது. பல்லவ வேந்தர்கள் ஒவ்வொரு சாதியினருக்கும் தனி விதிகளை அமலாக்கினர் என்று காசக்குடி பட்டயம் கூறுகின்றது” (வே.தி. செல்லம், 2000:239). இந்தப் பல்லவர் ஆட்சிக் கால ஆதரவே பலவிதமான சமூக பிளவுகளிற்கும், தமிழ் மொழியில், ஏற்கனவே இருந்த இலக்கிய, இலக்கண நூல்களில் ‘திருத்தங்களைப்’ புகுத்தவும் வாய்ப்பளித்தது எனலாம். பல்லவர் காலத்தில் அவர்கள் ஆட்சித் தலைநகரான காஞ்சிபுரம் வடமொழி வளர்க்கும் கல்வி நிலையங்களால் நிறைந்திருந்தது. பல்லவர்காலக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துக்களே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. இதில் வேதனை என்னவெனில் பல்லவரைத் தொடர்ந்து காஞ்சியின் ஆட்சிப் பொறுப்பேற்ற பாண்டியர்கள், அதியமான்கள், முத்திரையர்கள், கொடும்பாளூர் வேளிர் எனத் தமிழ் அரசமரபினரும் அதையே பின்பற்றி வடமொழி மரபைப் பேணி கிரந்தத் தையே பயன்படுத்தினர். அரச ஆதரவின்றி வட்டெழுத்து மரபு வழக்கொழிந்து போயிருக்கும் வாய்ப்பும் இந்தத் தமிழ் அரசமரபினர் கிரந்த ஆதரவளித்தமைக்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவின் அறிவு மரபில் அறிவியல், மருத்துவம் போன்ற துறைகள் ஆரம்ப காலங்களில் பெற்ற வளர்ச்சி பின்னர் அருகிப் போனதற்கான காரணத்தை ஆராய்ந்த ஆய்வாளர் பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் அவதானிப்புகள் இங்கு கவனத்திற்குரியது. ஆரியப் பார்ப்பனரது ‘அறிவு வன்முறை’ கொள்கையே இந்தத் துறைகள் நீர்த்துப் போனதற்குக் காரணமென காண்கிறார். வேதங்களைத் தம்முடைய தனித்துவமான அறிவுச் சொத்தாகக் கைக்கொள்ள வேண்டி அவர்கள் உருவாக்கிய கொள்கையே, அறிவு வளர்ச்சியைத் தடை செய்தது என்கிறார். அதாவது பொது சமூகத்தில் புழக்கமற்றுப் போகும் அறிவுத் திரட்சி தன்னளவிலும் வளராமல் போவதே இயல்பு. இந்த அறிவு அதிகாரத்துவக் கோட்பாடு அதே விதமான சிந்தனை முறை தொடர்ச்சியை பொது சமூகத்திலும் அழிந்து போகக் காரணமானது. விதந்தோதும் பொருளற்ற வேதங்களை ‘புனிதமாக்கி’ தமது சடங்கு சார்ந்த அதிகாரத்தை நிறுவ முனைந்த பார்ப்பனரது நடவடிக்கையின் விளைவுகள் வெகுவானது. பார்ப்பனரது தீண்டாமைக் கோட்பாடு, மருத்துவம், தச்சு, நெசவு, கைவினை போன்ற துறைகளை இழிவானதாக்கி சாதியாக்கி ஒதுக்கித் தள்ளியது. மருத்துவம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் ‘செயல்பாடாக’ ஆக்கிய வன்முறை அதன் வளர்ச்சியில் பொது சமூகப் பங்கேற்பு சாத்தியமற்றதாக்கியது. குறிப்பாக, மருத்துவம் போன்ற துறைகளில் பார்ப்பன நோய்க்கூறான ‘அறிவுச் சொத்து வம்சாவளி’ எனும் பிணி பற்றியதன் விளைவு அந்தத் துறை வளர்ச்சியில் பெரும் தடையாகிப் போனது.

அறிவை, கல்வியைப் பரவலாக்கும் கொள்கையை அறவே மறுத்த பார்ப்பனக் கோட்பாடு மிக அரிதானது. இதர மதங்கள் தங்களது கொள்கைப் பரவலை முனைந்து செய்யும் மரபைக் கொண்டிருக்க, பார்ப்பனர் தங்கள் வேதங்களின் மொழியெனச் சொன்ன சமஸ்கிருதம் வெகுகாலம் (கி.பி) கழித்தே எழுத்து வடிவம் பெற்றது என்பது கருதத் தக்கது. இதில் வேடிக்கை ரிக் வேதம் சொல்லப்பட்டது சமஸ்கிருத மொழியில் அல்ல என்பது. வாய்மொழியாக ஒரு குறுகிய வெளியில் கையாளப்பட்ட மொழியான சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு மொழியாக இயங்கியது இல்லை என்பதே அதனைப் போற்றிப் புகழ்ந்த ஷெல்டன் போலாக் போன்ற அந்தத் துறை சார்ந்த அறிஞர்களின் கூற்று. சமஸ்கிருதம், புலமை மரபாகத் தொடராமல் போனதற்கும், ‘வழக்கொழிந்து’ போனதற்கும் இந்தப் பார்ப்பன அறிவு வன்முறையே காரணம். வேதங்களின் ‘ புனிதத்தை’, பொருளை நிறுவும் பணியை சிரமேற்கொண்டு செய்தது ஸ்மிருதிகளே. உண்மையில் கருதத்தக்க சிந்தனைகளோ, எண்ணங்களோ அறவே இல்லாத வேதங்களை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது இந்த ஸ்மிருதிகளே என்பார்கள் ஆய்வாளர்கள். இந்தப் பார்ப்பன அடாத செயலே தமிழ் சமூகத்தையும் பெருந்தொற்றாகப் பற்றி அதன் ஒருநாளைய அறிவார்த்த நிலையிலிருந்து வீழச் செய்தது. இந்தப் பிணியை ஒழிக்கும் முனைப்பு ஒருபோதும் தமிழ்ச் சமூகத்தில் அற்றுப் போகவில்லை. ஆனாலும் பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் அவர்களைத் தொடர்ந்த சிற்றரசுகளும், அண்டை ஆட்சிகளும் பார்ப்பன ஆதரவைத் தொடரவே செய்தன. ஒவ்வொரு புதிய மன்னனும் தனது அரசின் மாட்சிமையை அங்கீகரிக்கும் அதிகாரம் வேண்டி பார்ப்பன சதுர்வேதி மங்களங்களையும், பிரமதேயங்களையும் உருவாக்கிய படியே இருந்தனர். பார்ப்பன அதிகாரம் ஆட்சியை நடத்தும் கோட்பாடுகளை வழங்கும் நிலையைக் காலத்தே எட்டின. அதன் விளைவு தமிழ்ச் சமூகத்தின் எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்படுவது தொடர்ந்தது.

எளிய மக்களுக்கான கல்வி மறுப்பை முறியடிக்கும் பணியை, ஏற்கனவே பார்த்தபடி பௌத்த, சமண கல்விநிலையங்களும், அதைத் தொடர்ந்து கிறித்தவ மிசனரிகளும், ஆங்கில ஆட்சியாளர்களும் செய்த போதும், அதனையும் முற்றிலும் தங்களுக்கானதாக மாற்றி விட்டிருந்தனர் பார்ப்பனர். மெக்காலே கல்வித் திட்டத்தின் பயனான ஆங்கிலக் கல்வியையும் அவர்களே கைப்பற்றினர். ஆரம்பக் கல்வி ஓரளவில் வெகுமக்களுக்குக் கிடைத்த போதும், உயர்கல்வியை முற்றிலுமாக ஆக்கிரமித்தனர் பார்ப்பனர். அரச சேவையிலிருந்து ஆங்கிலேய சேவையிலும் அவர்களே முன்னிலை வகித்தது இதற்கு ஏதுவானது. ஆர். சுந்தரலிங்கம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடான ‘Politics and Change in Madras Presidency’ நூல் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளது. மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆட்சியாளர் எல்பின்ஸ்டன் முன்னெடுத்த ஆங்கில வழி உயர் கல்வித் திட்டத்தில், சென்னைப் பிரதேசம், பிற ஆந்திர மற்றும் மலபார் பகுதிகளை மிகுதியான கல்வி நிலையங்களைக் கொண்டிருந்தது. பிரசிடென்சியின் 45 % மக்கள் தொகை கொண்ட பகுதி அறுபது சதவிதத்திற்கும் மேலான கல்வி கற்றோரை உருவாக்கியது. இந்த நிலை 1859லும், 1871லும் அதேவிதமாகத் தொடர்ந்தது. சென்னை மாகாணத்திலும் உயர்கல்வி கற்றவர்களில் 70% பேர் பார்ப்பனர்.முதலில் நிறுவப்பட்ட பள்ளிகளும், கல்லூரிகளும் கும்பகோணத்தில் என்பதே இதற்குப் போதுமான ஆதாரம். ஏனைய உயர்சாதியினரும் ஓரளவில் கல்வி பெற்றனர். ஆனால் பஞ்சமர் எனப்பட்ட அடிநிலைச் சமூக மக்கள் அறவே வாய்ப்புப் பெறவில்லை.

இதேநிலையே அரசு வேலை வாய்ப்பிலும் நிலவியது. 1854-ஆம் ஆண்டின் ஆணை ஒரு மாவட்டத்தின் ஷெரஸ்த்ததாரும், தலைமை எழுத்தரும் பார்ப்பனராக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியது. ஆனாலும் அதற்குப் பல ஆண்டுகளிற்குப் பிறகு மாவட்ட ஆட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளில் அந்த விதி நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. காரணம், வேண்டுமென்றே விதி மீறப்பட்டது என்பதல்ல, மாறாக விரும்பினாலும் அதற்கான மாற்று ஏற்பாடுகளிற்கான அலுவலர்கள் இல்லை என்பதே. 1880-ஆம் ஆண்டு வாக்கில் ஆந்திராவின் சித்தூர் ஜில்லாவின் வருவாய்த் துறையின் கிராம அதிகாரி முதல் ஷெரஸ்த்ததார், தாசில்தார்கள், ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள், கிளார்க்குகள் அனைவரும் பார்ப்பனர்களாகவும், ஒரே குடும்பத்தின் உறவுக்காரர்களாகவும் இருப்பதைக் காண முடிந்தது. இந்த இருள் நீக்கும் பணியைச் செய்யும் உத்தேசங்கள், முன்னெடுப்புகள் பல காலமாகத் தொடர்ந்தது. எனினும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பலவாறாக உருப்பெற்று ‘பார்ப்பனரல்லாதோர் அறிக்கை’ (Non Brahmin Manifesto ) வெளியிடப்பட்டு, நீதிக்கட்சி உருவானது. நடேசனார், டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர் போன்ற பெருமக்களால் 1916 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரட்டையாட்சி முறை அறிமுகமானபோது நீதிக் கட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று 1920 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. அது குறிப்பிடத்தக்க மிக முக்கியமான அரசியல் தருணம் என்றே கருதலாம். சுயராஜ்யம் பெறுவதற்கு முன்னரே தங்களைத் தாங்களே ஆளும் வாய்ப்பை இதுவரை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெரும்பான்மை சமூகம் பெற்றது. ஆட்சி அதிகாரம் முழுமையானது இல்லையெனினும், அதில் பங்கேற்றவர்களும் பார்ப்பனரல்லாதோரில் உயர்சமூகத்தினரே என்ற போதும், மாற்றத்திற்கான வாய்ப்பினைத் திறந்து விட்டது என்பது மெச்சத்தக்கதே. 1921 ஆம் ஆண்டின் கம்யூனல் ஆணையும் (அனைவருக்கும் வேலைவாய்ப்பு) அதைத் தொடர்ந்த 1928 ஆம் ஆண்டின் முத்தையா அவர்களின் வகுப்புவாரி ஒதுக்கீடும் ஒரு திறப்பை உருவாக்கின. நீதிக்கட்சி ஆட்சி கல்வி கற்பித்தல் பணியை முன்னுரிமை கொண்டதாக்கி மாநிலமெங்கும் ஆரம்பக்கல்வியைப் பரப்பும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியது.

இந்தப் புள்ளியில் சுயமரியாதை இயக்கம் ( 1925) கண்ட சிந்தனையாளர் தந்தை பெரியார், திராவிடத் தமிழர் வாழ்வின் இருண்ட வாழ்வுப் பகுதிகளில் வெளிச்ச
மேற்றும் பணியைச் செய்தார். பெரியாரின் பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவக் கொள்கைகள் இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்துவமான நிலத்துண்டாக தமிழ் மண்ணை மாற்றியது. பெரியார் சிந்தனைகள் மண்ணில் ஏற்கனவே வேரூன்றியிருந்த எண்ணங்களை புதிய தளங்களிற்கு இட்டுச் சென்றது. மாற்றத்தின் விளைவுகளின் சாட்சியாக நாமிருக்கிறோம்.

 

subagunarajan@gmail.com