உறங்குதல் போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு                         – குறள் 339

 

உணர்ச்சிகள் மூளையின் எந்தப் பகுதியில் உரு வாகின்றன? அவை தன்னிச்சையானவையா இல்லை நமது கட்டுப்பாடில் உருவாகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் விடை தேடலாம்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து , காரில் ஒரு லாங் ட்ரைவ் போகிறீர்கள். வழியில் ஒரு ஹோட்டலில் பொங்கல் சாப்பிட்டு விட்டுக் காரில் செல்கிறீர்கள். நல்லவேளையாக  டிரைவர்தான் வண்டியை ஓட்டுகிறார். லாங் டிரைவில் இன்றியமையாததாக இருக்கும் பென் டிரைவில் எண்பதுகளின் இளையராஜா பாடல்கள், எந்த வளைவு நெளிவும் இல்லாத நேரான சாலை. அப்படியே உங்களுக்கு இரண்டு கண்களும் சொக்குகின்றன. டிரைவருக்கு ஒரு கண் சொக்குகிறது. திடீரென சாலையைக் குறுக்காகக் கடக்கிறது ஒரு டூ வீலர். பதறிப் போய் பிரேக் அடிக்கிறார் டிரைவர். உங்கள் தூக்கம் எல்லாம் ஈரோடு தூத்துக்குடி பக்கம் போய்விடுகிறது. அடுத்து பயணம் முழுக்க ‘‘பின் காலனிய பின் அமைப்பியலின் பரிமாணங்களின் பரிணாம வளர்ச்சி” என்ற எழுநூறு பக்க நூலை வாசித்துக் கொண்டே சென்றாலும் பொட்டுத் தூக்கம் வராது. காரணம் பதட்டம் என்னும் உணர்ச்சி. உணர்ச்சிகளின் முக்கிய நோக்கம் நமக்கு எச்சரிக்கை (Arousal) அளித்துச் சூழலுக்குத் தகுந்தவாறு எதிர்வினை புரிய வைப்பதே.

எல்லா உணர்ச்சிகளும் இந்த விழிப்புணர்ச்சியைக் கொடுப்பதே.. இந்த இடத்தில் நாம் உணர்ச்சிகளிலிருந்து கொஞ்சம் திசைதிரும்பி விழிப்புணர்வு பற்றிப் பார்க்கலாம். Consciousness என அழைக்கப்படும் அந்த விழிப்புணர்வுதான் மூளையின் மிக மிக முக்கியமான செயல்பாடு. அது சரியாக இல்லையென்றால் மீதி எல்லாச் செயல்பாடுகளும் பாதிக்கப் படும். மனம் என்பது மூளையின் இயக்கமே. ஆகவே விழிப்புணர்வு பாதிக்கப்பட்டால் மனதின் செயல்பாடுகளான கவனம், நினைவுத்திறன், பேச்சு என எல்லாமே பாதிக்கப்படும்.

அதிகாலை எழுகிறீர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறீர்கள், அரைகுறை விழிப்பினிலேயே வாஷ்பேசின் அருகில் வருகிறீர்கள், பேஸ்ட்டை வாயில் வைத்துப் பல் தேய்த்ததும் பாதி தூக்கம் போய் ஃபிரஷ் ஆகிறீர்கள், காபி குடித்ததும் இன்னும் சுறுசுறுப்பாகி முழுவிழிப்புணர்வு அடைகீறீர்கள். என்ன நடக்கிறது மூளையில்?

நம் எல்லோருக்குமே மூளையைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். காலிஃபிளவர் போல் பூவும் தண்டுமாக இருக்கும். (நுங்கு சாப்பிட்டால் அதே வடிவில் உள்ள சில உடல் உறுப்புகள் வளம் பெறும் என ஒரு மருத்துவர் சொன்னது பிரபலமானது போல் காலிஃபிளவர் சாப்பிட்டால் மூளை வளருமா எனக் கேட்கக்கூடாது) காலிஃபிளவரின் பூவாக இருப்பது பெருமூளை (Cerebral Cortex). பெருமூளையோடு அதன் கீழே இருக்கும் சிறுமூளை (Cerebellum) , காலிஃபிளவரின் தண்டு போல் இருக்கும் மூளைத்தண்டு (Brainstem) ஆகியவை மண்டையோட்டின் உள்ளே இருப்பவை, தண்டுவடம் (Spinal cord) நமது முதுகெலும்புகளின் சங்கிலி போன்ற தொடர்களுக்கு நடுவே இருக்கிறது..

இதில் விழிப்புணர்வு என்பது பெருமூளையின் செல்கள் பல துடிப்போடு இருப்பதில் இருக்கிறது, ஆனால் இந்தப் பெருமூளையின் செல்களை மூளைத்தண்டில் இருக்கும் மூளையின் செல்களான சில நியூரான்கள் விழிப்புணர்வோடு வைக்கின்றன. இவற்றுக்கு ARAS (Ascending Reticular Activating System) என்று பெயர். ஆங்கிலத்தில் ஏ.ஆர்.ஏ.எஸ். (ARAS) என்று சொன்னாலும் தமிழில் பொருத்தமாக அரஸ் என்று இருக்கிறது. அதுதான் விழிப்புணர்வின் அரசன்.

பெருமூளை வலதுமூளை, இடதுமூளை என இரண்டு பகுதிகளாக இருக்கிறது என்பது எல்லாருக்குமே தெரியும். விழிப்புணர்வு என்பது இந்த இரண்டு பக்க மூளை செல்களின் இயக்கமே என்றோம், அப்படி விழிப்புணர்வோடு இருப்பதால்தான் நாம் சிந்திக்கிறோம், கவிதை கதை எழுதுகிறோம், உணர்ச்சிவசப் படுகிறோம். இந்த பெருமூளையின் விழிப்புணர்வை மின்சார விளக்குகள் என்று கருதினால் இந்த ஏ.ஆர்.ஏ.எஸ். என்னும் மூளையின் தண்டுவடப் பகுதியில் இருக்கும் நியூரான்களை ஸ்விட்ச் போர்டுக்கு உதாரணமாகச் சொல்லலாம். எல்லா விளக்குகளும் எரிந்தால் பிரகாசமாக இருக்கும். எல்லா விளக்கும் ஃப்யூசானாலும் சிக்கல்தான். அதே போல் சுவிட்ச் போர்டில் பிரச்சனை என்றாலும் விளக்கு எரியாது. பெருமூளை விளக்கு எரிந்து கொண்டே இருப்பதற்கு இந்த ஏ.ஆர்.ஏ.எஸ். என்னும் தூண்டுகோல்தான் காரணம்.

தூங்கும்போது இந்தப் பெருமூளையின் பல பகுதிகள் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஏ,ஆர்,ஏ,எஸ். பகுதி தூண்டுதல்களைக் குறைத்துக் கொள்கிறது. அதுவே முற்றாக நின்றுவிட்டால் அதுவே மரணம் ஆகிறது. மரணம் என்பது மூளையின் இயக்கம் முற்றாக நிற்பதைத்தான் குறிக்கிறது (Brain death). அதனால்தான் உறக்கத்தை ஒரு மினிச் சாவு என்கிறார் வள்ளுவர்.

மீண்டும் நாம் தூங்கி எழுந்து நின்ற வாஷ்பேசின் அருகே செல்வோம். நம்முடைய உடலின் ஐம்புலன்களிலிருந்தும் பெறப்படும் சமிக்ஞைகள் இந்த ஏ.ஆர்,ஏ.எஸ்.ஸைத் தூண்டுகின்றன. இது நமது பெருமூளையைத் தூண்டுகின்றது. மூளை சுறுசுறுப்படைகிறது. அதனால்தான் பேஸ்ட், தண்ணீர் போன்றவை தரும் தூண்டுதல்களால் மூளை சுறுசுறுப்படைகிறது. கூடுதலாகக் காபியில் இருக்கும் கஃபீன் நாம் பதட்டப் பட்டு கார் பிரேக்கைப் போட்டதும் உடலில் சுரக்கும் ஹார்மோன்களைத் தூண்டிவிட்டு மூளையை முழு விழிப்புணர்வுக்கு ஆளாக்குகிறது,

விழிப்புணர்வு தூக்கத்தில் மட்டுமின்றி ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள், மயக்க மருந்து, தலைக்காயம், மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவை பெருமூளையின் விளக்குகளை அணைப்பதால் அரைமயக்கம் அல்லது கோமா என ஏற்படுகிறது. மூளைத் தண்டில் ஏ.ஆர்.ஏ.எஸ். பகுதியில் ஏற்படும் பருப்பு சைஸ் சிறிய ரத்தக் கசிவுகூட ஸ்விட்ச் போர்டைப் பாதித்து விளக்குகளை அணைக்கலாம்.

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியைத் தூண்டுவதே உணர்ச்சிகளின் நோக்கம், விழிப்புணர்வுடன் இருப்பதே மூளையின் முதல்பணி. அப்படி உணரச்சிகள் தூண்டப்படும்போது உடலில் ஏன் மாறுதல்கள் ஏற்படுகின்றன? கோபப்பட்டால் ஏன் இதயம் துடிக்க வேண்டும்? ஸ்ட்ரெஸ் எனப் பரவலாக அழைக்கப்படும் மன அழுத்தம் மூளையை, உடலை எப்படிப் பாதிக்கிறது? இதையெல்லாம் யார், எப்படிக் கண்டுபிடித்தனர்? இதையெல்லாம் அடுத்துப் பார்ப்போம்.

 

ramsych2@gmail.com