சில கதைகளைக் கொஞ்சம் விரித்துச் சொன்னால் மட்டுமே சொல்ல வருவதன் முழுவடர்த்தியைப் புரிந்து கொள்ளவியலும். எல்லாவற்றையுமே மிகச் சுருக்கமாக ஒருவரி யுகத்திற்குத் தகுந்தமாதிரி சொல்ல எவருமே தன்னைப் பழக்குவித்துக் கொள்ளக் கூடாது என்கிற புள்ளிக்கு இப்போது வந்தும் சேர்ந்திருக்கிறேன். ஏனெனில் ஒரு வரிக்குக்கூட தாங்காத, அதை நோக்கக்கூட பொறுமையில்லாத தலைமுறையைப் பற்றியதும்கூட இது.
சமீபத்தில் தோழி ஒருத்தரிடம் ‘இதைப் படித்துச் சொல்லுங்கள்’ எனச் சொல்லி கட்டுரையொன்றைக் கொடுத்தேன். அதிகம் போனால் ஐந்து நிமிடத்தில் படித்து முடித்துவிடக் கூடிய மிகச்சிறிய அளவிலான கட்டுரைதான் அது. அதை வாங்கிய தோழி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, காயம்பட்ட பறவையொன்று தனது சிறகுகளை வலியில் படபடவென ஆட்டுவதைப் போல தனது கால்களை ஆட்டத் துவங்கினார். பிறகு நான்கு வரி படிப்பதற்கு முன்பே முதல் சந்தேகத்தைக் கேட்டு விட்டு, கட்டுரையை பக்கத்தில் இருந்த நாற்காலியில் வைத்தார். “முழுசா படிச்சிட்டு சொல்லுங்க” என்றதும், கட்டாயத்தின்பேரில் மறுபடியும் தூக்கி அடுத்த நான்கு வரிகளுக்குள் மீண்டுமொரு சந்தேகம்.
பதில் சொல்லாமல் பார்வையால் அவரைப் படிக்க வலியுறுத்தினேன். மீண்டும் அதற்குள் மூழ்கிய அவர் அதை முழுவதுமாகப் படித்து முடிக்காமலேயே, “பெருசா இருக்கும் போலருக்கு. நான் வீட்டுக்குப் போய் பொறுமையா படிச்சுக்கிறேன். ப்ளீஸ், கோச்சுக்காத” என்றார். அவரைச் சங்கடவுணர்விற்குள் தள்ள விரும்பாமல் சரியென்று மகிழ்ச்சியாகவே தலையசைத்தேன். பிறகு கொஞ்சம் விலகி நின்று அடுத்து அவர் என்ன செய்கிறார் என்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
உடனடியாகவே தன்னுடைய செல்போனை தூக்கிய அவர் சத்தமாக அதில் இருந்த ரீல்ஸ் வீடியோக்களை ஓடவிட்டார். விடாமல் அரைமணி நேரம் வரை அந்த வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிலசமயம் அதைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்த போதுகூட அனிச்சையாய் அவரது விரல்கள் அடுத்ததை சுண்டித் தள்ளின. காட்டு யானையின் காதிற்குப் பக்கத்தில் முரசை அறைவதைப் போல இருந்தது அந்தச் சத்தம். அதற்குப் பழக்கப்பட்டுவிட்ட அவர் யானை காதுகளை ஆட்டுவதைப் போல, தனது காலாட்டத்தை நிறுத்தவே இல்லை.
அதேமாதிரி என்னுடைய நண்பனொருத்தன் என்னோடு காரில் பழனி வரை வந்தான். காரில் பாடல்களை ஒலிக்கச் செய்தான். இது சாதாரணமான செய்கைதானே என்று தோன்றலாம். அவன் 34 பாயிண்டில் சத்தத்தின் அளவை வைத்தான் என்றால் நம்பவா போகிறீர்கள்? என்றைக்காவது ஒருதடவையாவது 34 பாயிண்டில் சத்தம் எவ்வாறு அறைந்து ஒலிக்கும் என்பதை உணர்ந்து பார்த்தால் புரியும். ஒருகட்டத்தில் எனக்கு மூச்சு முட்டி விட்டது. கொஞ்சம் கடுமையாகவே “இப்ப பாட்டை நிறுத்தப் போறேன். எனக்கு மூளை வலிக்குது” என்று சொன்னேன்.
காருக்குள் சத்தமேயில்லாத பூரண அமைதி நிலவிய போது, அவனால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. பதற்றமாகி வண்டியை நிறுத்தச் சொல்லி சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். மீண்டும் ஏறிய பின்னரும் அவனது கைகள் பாடலை ஒலிக்கவிடச் செய்ய முயன்று கொண்டே இருந்தன. இல்லாவிட்டால் இதோடு உறவை முறித்துக் கொள்வேன் என்று சொன்னதால் பதற்றத்தோடு பொறுமையாக உடன்வந்தான்.
அவனுக்காவது ஏழுகழுதை வயது. என்னுடைய கடையில் வேலை பார்க்கும் பையனின் மூன்றரை வயது குழந்தையை அழைத்து வந்திருந்தான். வந்தவுடனேயே செல்போனில் இருந்த வீடியோவொன்றை ஒலிக்க விட்டு அதன் கையில் கொடுத்து விட்டு வேலையைப் பார்க்கத் துவங்கினான். ”சத்தமா வைய்யி” எனக் கட்டளையிட்டது அந்தக் குழந்தை.மீண்டும் வாங்கி இருப்பதிலேயே கடைசி அளவில் சத்தத்தை உயர்த்தி அதன் கையில் கொடுத்து விட்டுச் சென்றான்.
குழந்தைக்குப் பக்கத்தில் விரிந்து கிடந்த இலையில் மூன்று இட்லிக்கள் கிடந்தன. அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, திடீரென செல்போனை தலைமாட்டில் போட்டது. வீடியோவிலிருந்து பெருஞ் சத்தம் வந்து கொண்டிருந்தது. மல்லாக்கப் படுத்தபடி இட்லியைப் பிய்த்துக் கொறித்தது குழந்தை. தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்த போது வீடியோவின் சத்தம் நின்று விட்டது. வாயில் வைத்த இட்லியை அப்படியே விட்டுவிட்டு பதற்றமாகி விட்டது. மறுபடி செல்போனை தூக்கிக் கொண்டு தந்தையிடம் ஓடி, “கட்டாயிருச்சு. வச்சுக் குடு” என்றது.
மீண்டும் சத்தம். இந்தமுறை தன்னையறியாமல் தூங்கத் துவங்கிய குழந்தையின் தலைமாட்டில் எவனோ ஒரு மட்டிப்பயல் அலறிக் கொண்டிருந்தான். “இப்பவாச்சும் அதை அணைக்க முடியுமா?” எனக் கேட்டேன் தந்தையிடம்.“சார் அதை ஆப் பண்ணுனீங்கன்னா முழுச்சிருவா.அதைக் கேட்டுக்கிட்டுதான் படுத்திருக்கா” என்றான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அதைக் கேட்கையில். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் விடாமல் அந்தச் சத்த்திற்குள்ளாகவே தவழ்ந்து வாழ்ந்தது அக்குழந்தை.
இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. குழந்தைகள் சார்ந்த தொந்தரவுகளிலிருந்து தப்பிக்க நினைக்கும் பெற்றோர், செல்போனையும் அது பிரசிவிக்கும் சத்தத்தையும் தற்காப்புக் கேடயமாகப் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். அப்போது செல்போனுக்கு அழைப்பு எதுவும் வந்தால், அதை எடுக்கக் கூடாது, அவ்வழைப்பு குறித்து பெற்றோர்களுக்குத் தெரிவிக்கவும் கூடாது என்கிற அறிவு மிகச் சின்னவயதிலேயே குழந்தைகளுக்கு வந்து விட்டது, மீன் குஞ்சு நீச்சலைக் கற்றுக் கொள்வதைப் போல. நண்பனொருத்தனுக்கு மிகச் சிறந்த வணிக வாய்ப்பு ஒன்று செல்போன் வழியாகக் கதவைத் தட்டியிருக்கிறது. அவர்களும் ஐந்தாறு தடவை தொடர்ச்சியாக அழைத்துப் பார்த்திருக்கிறார்கள். பிறகு வேறொரு நிறுவனத்திற்கு அவ்வுடனடி வணிகம் கைமாறிவிட்டது.
ஆனால் அந்த அழைப்பு குறித்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையிடம் தெரிவிக்கவே இல்லை. பிறகு நண்பன் அதைப் பார்த்துவிட்டுத் திரும்பி அழைத்த போது, சில லட்சங்கள் லாபம் தரும் வணிகம் அவனது கையை விட்டுப் போயிருந்ததை அறிந்தான். “செல்போனை குழந்தை வச்சு விளையாடிக்கிட்டு இருந்துச்சு.அதான் உடனடியா தெரியலை” என்று தனக்கு வாய்ப்பளித்தவர்களிடம் கூனிக் குறுகிப் பேசி இருக்கிறான். அதை அவன் என்னிடம் சொன்ன போது, “குழந்தைக்கு எது தேவையோ அதை காத்தில பறக்க விட்டுட்டு பேச்சைப் பாரேன்” எனக் கடுமையாகச் சாடினேன்.
பகல் முழுக்கச் சத்தம் தொடர்ந்து வந்தால்கூட பிரச்சினை இல்லை என்று ஓரளவிற்கு ஒரு சமாதானத் திற்கு வரலாம். இரவுகள் இதைவிடக் கொடூரமாக மாறத் துவங்கி இருக்கின்றன. எனக்குத் தெரிந்த அரசியல் யூட்யூப் பிரபலம். குறைந்தது நாற்பது நிமிடங்களுக் காவது தொடர்ச்சியாக விடாமல் கோர்வையாக சத்தமாகப் பேசுவார். எனக்குத் தெரிந்த மூத்த தோழி ஒருத்தர் தினமும் விடாமல் அவரது வீடியோவை பார்க்கி றார். பார்க்கிறார் என்று சொல்லக் கூடாது, கேட்கிறார். “நைட் படுக்கறப்ப அதை போட்டு தலையணைக்குப் பக்கத்தில வச்சிருவேன்.காதில அந்த சத்தம் விழுந்துகிட்டு இருக்கும். எப்பவாச்சும் என்னை மறந்து அப்படியே தூங்கிடுவேன்” என்றார்.
இங்கே என்ன நடக்கிறது என்பது புரிகிறதா? காட்சி ஊடகப் பணியில் இருந்துவிட்டு வந்த எனக்கே இப்படியான மிகையான சத்தங்கள் அச்சத்தை ஊட்டுகின்றன. இப்போது நாம் முழுச் சத்தத்தின் உலகத்தில் நுழைந்திருக்கிறோம். ஒவ்வொரு தொழில்நுட்பமுமே வரும் போது மெல்ல பூனைநடை போட்டுத்தான் உள்நுழைகின்றன. அதற்குப் பிறகு அவை நம்மை ஆக்கிரமிக்கத் துவங்குகையில் அதன் விளைவுகள் அதன் கோரமுகத்தைக் காட்டத் துவங்குகின்றன. அதுதான் இப்போது நடந்தும் கொண்டிருக்கிறது. உயரமான பள்ளத்தாக்கின் உச்சியில் நின்று கொண்டிருப்பதைப் போல உணர்கிறேன். அந்தப் பக்கம் மிக விரிந்த பாதாளம். விரைவில் அதற்குள் பொத்பொத்தென மனிதர்கள் விழுவார்கள் எனக் கணிக்கிறேன்.
வீட்டினுள் பாடல்கள் எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இல்லையெனில் நாடகங்கள். “சமைச்சுக்கிட்டே வசனத்தைக் கேட்டுக்கிட்டு இருப்பேன்”.காரில் ஏறியவுடன் கேட்கிறோமோ இல்லையோ பாடல்கள் தன்னிச்சையாக ஒலிக்கத் துவங்குகின்றன. “பாட்டையெல்லாம் கவனிச்சு கேட்க மாட்டேன்.ஏதோ அதுபாட்டுக்கு ஓடும். அது இல்லாட்டி என்னத்தையோ இழந்தமாதிரி ஒரு பீலிங்”. இப்போதெல்லாம் அலுவலகத்தில்கூட பாடல்களைக் கேட்டுக் கொண்டே வேலைபார்க்கலாம் என அனுமதி இருக்கிறது. “கேட்டுக்கிட்டே வேலை பார்க்கிறது பிரச்சினையில்லை.மாடு கிளம்பினதும் அதோட தடத்தைப் பார்த்து அதுபாட்டுக்குப் போகுமே அதுமாதிரி வேலையை செஞ்சிருவேன்”. இரவு குடிமேடையில் நண்பர்களுடன் இருந்தால்கூட செல்போனில் சத்தத்தை உயிர்ப்பித்து விடுகிறோம்.“ஒரு ரவுண்ட் போட்டதுமே செல்போனைத்தான் கை தேடுது.அது இல்லாட்டி பதற்றமா இருக்கு”. சத்தமே இல்லாத உலகம் மிகப் பெரும்பாலானவர்களுக்கு அச்சமூட்டுவதாக மாறத் துவங்கி இருக்கிறது.
மற்றவர்களைக் குறை சொல்வானேன். நானுமே ஒருகாலத்தில் இப்படி இருந்தவன்தான். தூங்கும் போது சத்தமாகப் பாடல்களை ஒலிக்க விட்டவன்தான். ஒருதடவை என்னுடைய அறைக்கு வந்த என்னுடைய நண்பர் இயக்குனர் புகழேந்தி அதைக் கவனித்துவிட்டு, “ஏதோ உனக்கு ஆழமான மனநலப் பிரச்சினை இருக்கு. என்னன்னு கவனி” என்றார் கூர்மையாக. அதற்குப் பிறகே நான் விழித்துக் கொண்டேன். தொலைக்காட்சி உலகத்தில் காலாற நடந்து, பின் ஓடிச் சுற்றியவன் என்கிற முறையில் சொல்கிறேன். சத்தம் இல்லாத உலகத்தில் கொஞ்சமாகவேணும் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
என்னுடைய தோட்டத்தில் பறவைகள் சத்தத்தைத் தவிர வேறெந்தச் சத்தமும் இருக்கவே செய்யாது. அங்கே தொலைக்காட்சி இல்லை. மிக அமைதியாக அங்கே அமர்ந்திருக்கும் போதுதான் தன்னை உணர்கிற கலை எனக்கு வசப்படவும் செய்தது. எந்நேரமும் சத்தமும் கொந்தளிப்புமாய் இருக்கிற மனம் பதற்றங் களையே அதிகமும் உற்பத்தி செய்யும் என்பதையும் உணர்ந்தேன். அது ஆழமான உடல் பிரச்சினைகளையும் உருவாக்குக்கிறது என்பதையும் கண்டறிந்தேன். அதற்குப் பிறகு அதிலிருந்து வெளியேற முனைந்து ஒருகட்டத்தில் அதில் வெற்றியும் பெற்றதாக உணர்கிறேன். கூர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் சத்தம் ஆழமான அமைதிக்கு எதிரி. அமைதியின்மையே பதற்றங்களை உருவாக்குகிறது. பதற்றமின்மையே தன்னை அறியும் கலைக்கு முதல்படி. அந்த முதல்படியில் கால்வைக்கையிலேயே உடலும் மனமும் செல்லக் குட்டி நாயைப் போலச் சொல்பேச்சுக் கேட்கத் துவங்குகின்றன. மனம் கூர்மையடைகையிலேயே உள்ளும் புறமும் மெல்ல அறியத் துவங்குகிறது. கூர்மையைக் கலைத்துப் போடுகிற ஒரே ஆயுதம் சத்தம்.
இதையெல்லாம் உணர்ந்த பிறகு, காரில் தினமுமே நீண்ட பயணம் செய்தபடியே இருக்கும் நான் இப்போதெல்லாம் பாடல் கேட்கவேண்டும் என்று தோன்றுகிற சமயத்தில் மட்டுமே அதை ஒலிக்க விடுகிறேன். மற்ற நேரங்களில் மிக அமைதியாக எனக்குள் என்னைக் கவனித்தபடி, அல்லது சாலையோர மனிதர்களைக் கவனித்தபடி என்னுடைய எண்ணங்களைப் பின் தொடரக் கற்றுக் கொண்டேன். இச்செய்கை என்னுடைய பதற்றங்களைத் தணிப்பதை உணர்ந்திருக்கிறேன். கைகள் நடுங்காமல் சிறு குண்டூசியை வானை நோக்கி ஏந்திவிட முடியும் என்கிற நம்பிக்கைக்குக்கூட வந்து சேர்ந்திருக்கிறேன். வயிற்றுக் கோளாறு, தூக்கமின்மை போன்ற உடல் உபாதைகளில் இருந்து சட்டென வெளியேயும் வந்திருக்கிறேன். உறவுகளிடம் காது என்கிற உறுப்பை அதிகம் பயன்படுத்தவும் துவங்கியுள்ளேன். அது அந்த ஆழமான அமைதியின்பாற்பட்டு விளைந்தவொன்று என்பதையும் உணர்கிறேன். ஒரு வகையிலான பரிந்துரைக்காகவே இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஏனெனில் இந்த மிகையான சத்தங்கள் மிகப் பதற்றமான ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறை கூட இப்போது, விலங்குகள் குடிக்க லாயக்கற்ற கரியநீர் ஓடுகிற அந்தக் குட்டையில் தங்களையும் மூழ்கடிக்கத் துவங்கி இருக்கிறது. உடல்ரீதியிலான பிரச்சினைகளும் இதனால் அதிகம் விளைகின்றன. என்னுடைய கடையில் வேலைபார்க்கும் பையனுக்கு ஆரம்பத்தில் எழுபது சதவீதம் காது கேட்கிற திறனே இருந்தது. தொடர்ச்சியான செல்போன் சத்தங்களின் வழியாக இப்போது கேட்கும் திறன் முப்பது சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதுவொரு உதாரணம்தான், இதைப் போல ஏராளமான உடல்சார்ந்த பிரச்சினைகள் வரிசை கட்டத் துவங்கி விட்டன.
தூக்கமின்மை நோய் இங்கு பலரை ஆட்டுவிக்கத் துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக பெரும் பாலான ஆண்கள் குடிநோயாளியாகவும் மாறத் துவங்கி இருக்கின்றனர். “ரெண்டு கட்டிங்க போட்டாத்தான் நிம்மதியா தூங்க முடியுது” என்று அதை நியாயப்படுத்தவும் துவங்கி விட்டனர்.குறிப்பாக தூக்கமின்மை என்கிற பிரச்சினை பெண்களைத்தான் அதிகமும் தாக்கத் துவங்கி இருக்கிறது. என்னுடைய தோழிகளில் பலர் கண்களுக்குக் கீழே கருவளையத்தோடுதான் வளைய வருகிறார்கள். பவுடர் போட்டு அதை மறைப்பதற்கு பெரும்பாடு படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறேன். எதனால் இப்பாடு என்கிற தெளிவின்மையும் அவர்களைத் தொடர்கிறது.
கேட்டால் குடும்பப் பிரச்சினை என்று சொல்லி எல்லாவற்றையும் தூக்கி அதன் அல்லது அவனின் தலையில் போடுவார்கள். அதுவும் இருக்கலாம், ஆனால் ஆழமான வேர்களும் பலவுண்டு என்பதை உணர விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள். உடலைத் தாண்டி இது உருவாக்கும் மனநலப் பிரச்சினைகள் மிகக் கூர்மையானது. ஐந்து வரியைக் கூடப் படிக்கமுடியாத தலைமுறை, “இதையெல்லாம் படிச்சு என்னாகப் போகுது? அதான் எல்லாம் ஆடியோவா கேட்க வந்திருச்சே” என்கிற புள்ளிக்குக் குற்றவுணர்வில்லாமல் நகரத் துவங்கி இருக்கிறது. இந்த இலட்சணத்தில் குழந்தைகளுக்கு கேட்டல் வழி கல்வி அளிக்க வேண்டுமென சிலர் இப்போது அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார்கள். எங்கே போய் முட்டிக் கொள்ள?
எதையுமே கூர்மையாகக் கவனிக்க முடியாத இந்தத் தலைமுறை தன்னுடைய உளப் பிரச்சினைகளையும் கூட அவ்வாறே அணுகத் துவங்கி இருக்கிறது. காயம்பட்ட பறவையின் சிறகுகளைப் போல ஏன் கால்களை விடாமல் ஆட்டிக் கொண்டிருக்கிறோம்? என்கிற கேள்வியைக்கூட தனக்குள் அது கேட்டுப் பார்த்துக் கொள்ள மறுக்கிறது. ஏன் எதற்கெடுத்தாலும் பதற்றம் என்னை ஆட்டிப் படைக்கிறது? என்கிற கேள்வியை அச்சத்தோடே எதிர்கொள்கிறது. உறவுகளில் ஏற்படும் மோதல்களுக்கும் இந்தப் பதற்றத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதாவது தெரியுமா அத்தலைமுறைக்கு?
“எம் பொண்டாட்டி எந்நேரமும் மூட் ஸ்விங்க் லயே இருக்கா.மத்த பொம்பளைங்களுக்கு மென்சஸ் வர்ற அந்த மூணு நாளைக்குத்தான் பிரச்சினை. ஆனா என் பொண்டாட்டிக்கு மாசம் முழுக்க மென்சஸ்தான்” என்றான் ஒருத்தன். “என்னோட ஹஸ்பெண்ட்க்கு எதுக்கு எடுத்தாலும் பதட்டம், கோபம். என்னை முழுசா ரெண்டு வரிகூட பேச விடமாட்டேங்குறான். உடனடியாவே எதாச்சும் கவுண்ட்டர் கொடுக்கிற மாதிரி சத்தமா பேசி சண்டை சச்சரவுன்னு வாழ்க்கை நரகமா இருக்கு” என்றாள் ஒருத்தி. மொத்தத்தில் சத்தத்திற்கு மட்டுமே காதைக் கொடுத்துவிட்டு, உறவுகளிடம் காதென்கிற உறுப்பை ஒப்புக் கொடுக்காத தலைமுறையாய் ஒன்று உருவாகிக் கொண்டு இருக்கிறது.
பொறுமையின்மையின் விளைவாகவே இங்கே மிகப் பெரும்பாலான உறவின் பிரிதல்கள் நிகழ்கின்றன. இப்போது ஆழமான அமைதி என்பது மிகச் சிறந்த விற்பனைப் பொருளாகவும் மாறியிருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் இன்னும் இந்த ஆழமான அமைதியை விற்பதற்கு கார்ப்பரேட் குருமார்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். அதைக் குறையாக ஒருபோதும் சொல்லமாட்டேன் என்கிற முடிவிற்கு இப்போது வந்தும் சேர்ந்திருக்கிறேன். அவர்களும் இல்லாவிட்டால், இங்கே சத்தத்தை மட்டுமே சாக்லேட் போலச் சுகிக்கும் மனநலக் கோளாறுகளை மேலாடையாய் அணிந்தவர்கள் லட்சக்கணக்கில் பெருகிப் போய்விடுவார்கள்.
தன்னை உணர்தல் என்பது ஆழமான அமைதி என்பதில் இருந்து மட்டுமே துவங்குகிறது. வேறெங்கும் அதற்குக் கிளைகளும் இல்லை. தன்னை உணர்ந்தவனாலேயே தன்னைச் சுற்றி இருப்பதையும் உணரத் துவங்க முடியும். அதுவொரு படிநிலை. மெல்ல மெல்ல அதன் படிகளில் எவராலும் ஏறிவிடவும் முடியும். ஆனால் அதற்கு முழுவதுமாக நம்மை ஒப்புக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும், அதுதான் படிநிலையின் முதலெட்டு. குறைந்தபட்சம் ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது சத்தத்தில் இருந்து ஒதுங்கி இருக்க தன்னைப் பழக்குவித்துக் கொள்ளவேண்டுமென பரிந்துரையும் செய்கிறேன். குறைந்தபட்சம் கழிவறையில் இருக்கும் சமயத்திலேனும். மெதுவாக நமக்குள் அது என்னவிதமான மாற்றங்களை நடத்துகிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள், ஒருநாள் அதை நீங்களும் வேறொருவருக்குப் பரிந்துரைப்பீர்கள். வேறென்ன சொல்ல?
பதற்றத்தின் உச்சியில் எந்நேரமும் கணவனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் தோழி ஒருத்தருடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, “அமைதியா இரு. புத்தர் என்ன சொல்றாருன்னா…” எனத் துவங்கியபோது, அவளது கணவனின் புகார் குறித்துத்தான் பேசப் போகிறேன் என நினைத்து, “புத்தர் என்னத்தை புடுங்கினார்” எனக் கேட்டாள் கோபமாக. இப்போது அவர் இருந்திருந்தால், தான் புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள் என்கிற முடிவிற்கே வந்து சேர்ந்துவிடுவார் என விளையாட் டாக எனக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.
அவள் போக்கிலேயே சொல்ல வேண்டுமெனத் தீர்மானித்து, “கடைசியா எப்ப உன்னோட இன்னர்ஸ துவைச்ச” என்று கேட்டேன். “புல்ஷீட்.என்ன பேசற? துவைக்காம ஒருநாளும் போட மாட்டேன்” என்றாள். “நான் கேட்டது ஷூ ட்ரெண்ட்ஸ்ல வாங்கின உன்னோட இன்னர்ஸ் பத்தி இல்லை உனக்குள்ள இருக்க இன்னர்ஸ் பத்தி. அழுக்கா போட மாட்டேன்னு பதர்றீயே. பலகாலமா துவைக்காமயே இருக்க உன்னோட ஒரிஜினல் இன்னர்ஸ் பத்தி கவலைப்படமாட்டீயா?” என்றதும் சட்டென அமைதியானாள் என் தோழி. “உன்னைக் கொஞ்ச நேரமாவது அமைதியா கவனி.அதைத்தான் புத்தர் புடுங்கினார்” என்றேன். மேலும் அவளது அமைதி கூர்மையடைந்தது.
இந்தச் சத்தத்தின் உலகத்தில் அக அடுக்குகளில் ஏராளமான அசுத்தங்கள் தன்னையறியாமல் படிந்திருக்கின்றன. அதைத் துவைத்துக் காயப்போடுகிற நேரம் இது என்பதை ஆழமாக உணர்கிறேன். ஆழமான அமைதி என்பது இப்போது கோடி ரூபாய் மதிப்பிலான பொருளும்கூட!
Saravanamcc@yahoo.com