ஊரடங்கு நேரத்தில் குழந்தைகள் உளவியல் ரீதியாக நிறைய பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்பது நாம் கேள்விப்பட்டதே. பெற்றோர்கள் தொடர்ச்சியாகத் தங்களது குழந்தைகளை மேற்பார்வை செய்ததே குழந்தைகளின் உளவியல் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருந்தன என்ற ஆய்வு முடிவுகள் அப்போது ஆச்சர்யமானதாக இருந்தன. ஆனால் அது உண்மைதான் என்பதை சமீபகாலமாக நான் பார்க்கும் பெற்றோர்களிடம் இருந்து அறிந்து கொண்டேன்.

ஒன்பதாவது படிக்கும் தனது மகனை அழைத்து வந்திருந்த அந்த அம்மா ஒரு பெரிய பை முழுக்க அந்தப் பையனுடைய மருத்துவப் பதிவேடுகளை வைத்திருந்தார். மகன் சோர்வாக அமர்ந்திருந்தான். நிறைய மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் அறிகுறிகள் அவனது முகத்தில் தெரிந்தன. எல்லா மருத்துவ சீட்டுகளையும் என மேசையில் அடுக்கி வைத்து விட்டு அந்த அம்மா சொன்னார்.

“என்ன பிரச்சினைனே தெரியல சார், படிப்பே வர மாட்டேங்குது அவனுக்கு, ஒன்பதாவது படிக்கிறான் இப்பதான் தப்பில்லாம எழுதவே கத்துக்கிட்டான், படிப்ப தவிர மத்த விஷயம்லாம் அவ்வளவு நல்லா பண்றான், ஆனா படிப்பு சுத்தம். டாக்டர், ஆஸ்பத்திரினு ரெண்டு வருஷமா இவன கூட்டிட்டு சுத்தறேன், ஒண்ணும் சரியாக மாட்டேங்குது, மாத்திரைதான் தர்றாங்களே தவிர என்ன பிரச்சினைனு சொல்ல மாட்டேங்குறாங்க” என்றார் வருத்தமாக.

நான் அந்தப் பையனைப் பார்த்தேன், பரிதாபமாக இருந்தான். அவன் மருத்துவப் பதிவுகளை வாங்கிப் பார்த்தேன். கிட்டத்தட்டு ஐந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறான்.

“இந்த மாத்திரைலாம் எதுக்குமா?” என்றேன்.

“அவனுக்கு ஏதோ மனப்பிரச்சினை இருக்கு சார், எப்பவும் அமைதியா இருக்கான், வீட்ல கலகலன்னு பேச மாட்டேங்குறான், மந்தமாவே இருக்கான், ஒருவேளை இதனாலதான் படிப்பு வரலயோனு நான்தான் ஒரு டாக்டர்கிட்டு கூட்டிட்டு போய் சொன்னேன், இந்த மாத்திரை கொடுத்தாங்க, இத போட்டதுக்கு அப்புறம் இன்னமும் மந்தமா ஆகிட்டான். அதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன், நீங்களாவது அவன்கிட்ட பேசிப் பாருங்க, அவன் மனசுல என்ன இருக்குனு கண்டுபிடிச்சி கவுன்சிலிங் கொடுங்க, அதுக்கப்புறமாவது படிச்சி நல்லா மார்க் வாங்குறானானு பார்க்கிறேன்.”

“ஏதாவது பண்ணி நல்ல மார்க் வச்சிரணும் அதானே?” என்றேன்.

“ஆமா சார். படிச்சா தானே நல்லாருக்கலாம். அவனுக்காக எவ்வளவு செலவு பண்றோம், நல்ல ஸ்கூல்ல போட்டுருக்கோம், இப்படி படிக்கலான்னா என்ன பண்றது? அவங்க ஸ்கூல்ல இருந்து வேற தொடர்ச்சியாக கம்ப்ளயிண்ட் பண்றாங்க, படிக்கலனா ஸ்கூல்ல மாத்திக்கங்கனு சொல்றாங்க, இந்த ஸ்கூல் கிடைக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா சார், இப்படி பாதில கூட்டிட்டு போறதுக்கா? அதனால எப்படியாவது அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து நல்லா படிக்க வைங்க அது போதும்” என்றார்.

நான் அவனிடம் தனியாக பேசினேன். அவனது நோட்டுப் புத்தகங்களை வாங்கி பார்த்தேன். அவனுக்கு எழுதுவதிலும், படிப்பதிலும் மிதமான கற்றல் குறைபாடு இருப்பது தெரிந்தது. வேறு ஒரு மருத்துவமனையிலும் கூட அதைப் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் கணக்குகளை அத்தனை வேகமாகப் போடுகிறான். ஏராளமான அறிவியல் தகவல்களை தெளிவான புரிதலுடன் விளக்குகிறான், மிக அழகாக கார்ட்டூன் வரைகிறான். பொது அறிவு தகவல்களை ஏராளமாகத் தெரிந்து வைத்திருக்கிறான்.

“இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கியே, ஏன் அமைதியாவே யார்கிட்டயும் பேசாம இருக்க?” என்று அவனிடம் கேட்டேன்

“எங்கிட்டதான் சார் யாரும் சரியாகப் பேச மாட்டாங்க, நல்லா படிக்கிறதில்லங்கிறதுனால என்கிட்ட சிரிச்சி கூட யாரும் பேச மாட்டாங்க, ஸ்கூல்ல டீச்சர்ஸ்லாம் வந்தவுடனே என்ன கிளாஸ்க்கு வெளிய போகச் சொல்லிடுவாங்க, பசங்கள்லாம் என்ன கிண்டல் பண்ணுவாங்க, என்ன பார்த்து சிரிப்பாங்க, என்கிட்ட பேசறத அவமானமா நினைப்பாங்க, வீட்ல வந்தா எங்க அம்மாவும் என்ன அப்படிதான் பார்ப்பாங்க, எங்க அப்பா ஃபாரின்ல இருக்காரு, அவரும் அப்படித்தான். போன் பண்ணா எல்லார்கிட்டயும் ரொம்ப நேரம் நல்லா பேசுவார். என்கிட்ட மட்டும் உடனே வச்சுடுவார், அப்புறம் நான் போய் யார்கிட்ட பேசறது?” என சோகமாக கேட்டான்.

‘உனக்குனு ஃபிரண்டே இல்லையா?” என்றேன்.

“இருக்கான் சார். எங்க கீழ்வீட்டுப் பையன். ரெண்டாவது படிக்கிறான், அவன் மட்டும் தான் எனக்கு பெஸ்ட் ஃபிரண்டு” என சொல்லி சிரித்தான்.

நான் அவனது அம்மாவை அழைத்துப் பேசினேன். “உங்கள் மகனுக்கு மிதமான கற்றல் குறைபாடு இருக்கு. அதைத் தாண்டி அவனுக்கு பரந்துபட்ட அறிவு இருக்கு. அறிவு என்றால் மதிப்பெண் மட்டுமே அறிவல்ல. உண்மையில் மதிப்பெண்களால் அறிவை முழுமையாக மதிப்பிட முடியாது. கற்றல் குறைபாடோடு அவன் கற்பதற்கு சிரமப்படுகிறான், இந்த நேரத்தில் சுற்றியுள்ளவர்களின் ஆறுதல்தான் அவனுக்கு அவசியமான தேவை. அவனைப் பாகுபாடாக நடத்தினாலோ, மதிப்பெண்களைக் கொண்டு அவனை மதிப்பிட்டாலோ அவன் மனச்சோர்வுக்கு தான் உள்ளாவான். மாறாக அவனைப் புரிந்து கொண்டு அவனுக்கு ஆறுதலாக இருக்கும்போது அவன் மனச்சோர்வு நீங்கி இன்னும் அவனது அறிவை பல தளங்களில் விரிவு படுத்திக்கொள்வான்” என்றெல்லாம் நீண்ட நேரம் அவரிடம் விளக்கினேன்.

“நீங்க சொல்ற மாதிரி நாங்க நடந்துகிட்டா நல்லா படிப்பானா டாக்டர்?” எனத் திரும்பவும் முதல் கேள்வியைக் கேட்டார் அந்த அம்மா.

இந்திய பெற்றோர்களைத் திருப்திபடுத்துவது மிகவும் எளிது. குழந்தைகள் இரண்டு விஷயங்களை செய்துவிட்டால் போதும் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள். ஒன்று, நன்றாக சாப்பிட வேண்டும். இரண்டாவது, நன்றாகப் படிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் செய்து விட்டு அந்தக் குழந்தை வேறு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அந்த பெற்றோர்கள் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில் மருத்துவர்களிடம் வரும் பெற்றோர்கள் கவலைப்பட்டு சொல்வது இந்த இரண்டு விஷயங்களை மட்டும்தான். “சாப்பிடவே மாட்டேன்றான் டாக்டர்”, “படிக்கறதேயில்ல டாக்டர்”.

அதே போல குழந்தைகள் தங்கள் சொல்படியே நடக்க வேண்டும், தங்கள் எதிர்பார்ப்புகளையெல்லால் பூர்த்தி செய்வதையே முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் பெற்றோர்கள் காலம் காலமாக கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள். குழந்தைகளின் தனித்தன்மைகளை, அவர்களின் வளர்ச்சியை பெற்றோர்களால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

“சின்ன வயசுல அவ்வளவு பாசமா இருப்பான், நான் ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவான், என் பக்கத்துலயே தான் தூங்குவான். ஆனா இப்பல்லாம் அவ்வளவா பேச மாட்டேங்கிறான், தனியாவே இருக்கான், ஃபிரண்ட்ஸ்கிட்ட மட்டும்தான் பேசறான்” என கல்லூரி படிக்கும் தனது மகனைப் பற்றி ஒரு தாய் உண்மையிலேயே என்னிடம் புகாராக சொன்னார். இதெல்லாம் கூட பரவாயில்லை. மகன் திருமணத்திற்குப் பிறகும் கூட இதே புகார்களை வைக்கும் தாய்களையும் எனது அனுபத்தில் நான் கடந்து வந்திருக்கிறேன்.

ஒரு ஃபிரெஞ்ச் பழமொழி இருக்கிறது “குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள், பெற்றோர்கள்தான் வளர்வதேயில்லை” எவ்வளவு உண்மை!.

பத்தாவது படிக்கும் மாணவனை அழைத்துக்கொண்டு ஒரு தந்தை வந்திருந்தார். அந்த மாணவன் அமைதியாக அருகில் அமர்ந்திருந்தான்.

“ஒரே புள்ளனு பார்த்து பார்த்து வளர்த்தது வீணா போச்சு சார், சொல் பேச்சி எதுவும் கேட்கிறதில்ல, படிக்கிறதில்ல, தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்கான்” என எடுத்ததுமே கடுமையாக தொடங்கினார்.

அந்த மாணவன் தலையை குனிந்தபடியே இருந்தான். நான் அவனை வெளியே அமர சொல்லிவிட்டு அந்த தந்தை சொல்வதைக் கவனிக்க தொடங்கினேன்.

“செக்ஸ் வீடியோ பார்க்கிறான் சார், எவ்வளவு ஒழுக்கமா வளர்த்தேன், இப்படி சீரழிஞ்சி போய்ட்டானேனு கவலையா இருக்கு, அவனுக்கு ஒரு குறையும் வச்சதில்ல சார், போன வாரம் ஊருக்குப் போய்ட்டோம், சரி தனியா இருப்பானேனு அவன் அம்மாவோட போன அவங்கிட்ட கொடுத்துட்டு போனேன், அதுலதான் பார்த்துருக்கான், பாதி டெலிட் பண்ணிருக்கான், பாதி பண்ணாம விட்டுருக்கான், நைட் மூணு மணி வரை பார்த்துருக்கான் சார், ஒரே புள்ள சார், இப்படி வீணா போய்ட்டானே” என சொல்லிவிட்டு தலையைப் பிடித்துக்கொண்டு மேசையில் சாய்ந்து கொண்டார்.

“அவங்கிட்ட இத பத்தி கேட்டிங்களா?” என்றேன் அதிர்ச்சியாக.

“கேட்டனாவா, போட்டு சாத்திட்டேன் சார், வீட்ட விட்டு வெளிய தள்ளி கதவ சாத்திட்டேன், இப்படி புள்ள தேவையா சார் நமக்கு?” என்று என்னை பார்த்தார்

நான் பதில் எதுவும் பேசாமல் அவரையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்

“இதெல்லாம் எப்படி சார் அவன் கத்துக்கிட்டு இருப்பான், இப்படியெல்லாம் செய்றதுக்கு அவனுக்கு எப்படி மனசு வந்துச்சினு தெரில, இவ்வளவு பார்த்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி அப்பாவியா இருக்கிறான் பாருங்க, என்ன பண்ணுவீங்களோ தெரியாது சார், இது மாதிரி வீடியோ மேலேயே அவனுக்குக் கவனம் போகக்கூடாது, அதுக்கு தான் இங்க கூட்டி வந்தேன்” என்றார் உறுதியாக.

சில நாட்களுக்கு முன்பு இதே போல எட்டாவது படிக்கும் மாணவி ஒருவரை அவரது குடும்பமே அழைத்து வந்தார்கள். மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, பாட்டி, தாத்தா என ஏதோ திருமணத்திற்குப் போவது போல குடும்பமாக வந்திருந்தார்கள். அந்த மாணவி ஊரடங்கு நேரத்திலிருந்தே ஆபாச படங்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறாள் என்பதுதான் குற்றச்சாட்டு.

“ஆன்லைன் கிளாஸ்க்காகதான் செல்போன் கொடுத்தோம், பார்த்தா இப்படிப்பட்ட வீடியோலாம் பார்த்துட்டு இருக்கா, அவளோட தம்பிதான் கண்டு பிடிச்சிருக்கான், ஒரு பொம்பள புள்ள இதெல்லாம் பார்க்குறானா அவ புத்தி எப்படிக் கெட்டுபோய் கெடக்குதுனு நீங்களே பாருங்க” என்றார் அந்த மாணவியின் அம்மா.

தனது மகள் இப்படியெல்லாம் பார்க்கிறாள் என்பதை அந்த அம்மா தனது கூட பிறந்த அக்கா, தங்கை எல்லோருக்கும் சொல்லி வந்து தனது மகளைக் கண்டிக்க சொல்லியிருக்கிறார், அது மட்டுமில்லாது அவளது பள்ளி ஆசிரியைக்கும் சொல்லி கண்டிக்க சொல்லியிருக்கிறார், அவள் இப்படிப் பார்க்கிறாள் என்பது அவளது சொந்தக்காரர்கள் முதற்கொண்டு பள்ளி வரை அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

“இந்த வயசுல அப்படி என்னா சார் செக்ஸ் வெறி?” என அந்த சித்தி கேட்டபோது நான் அதிர்ந்து போனேன்.

வளரிளம் பருவத்திலுள்ளவர்கள் பாலுறவு சார்ந்த ஃபேண்டசியிலும், அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமுடனும் இருப்பது இயல்பானதுதானே? அதுவும் இன்றைய தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலகட்டத்தில் அப்படிப்பட்ட காணொளிகளைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமில்லையே. சக மாணவர்களின் உந்துதலிலும், தன்னிச்சையான குறுகுறுப்பிலும், அதைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்திலும் அந்தக் காணொளிகளைப் பார்த்து விடுவதை ஒரு கொலைக்குற்றம் அளவிற்கு நிறுத்தி பெரிதுபடுத்தி அவர்களைக் குற்றவாளிக்கூண்டில் கேள்வி கேட்பதினால் குழந்தைகள் எவ்வளவு மனவுளைச்சலுக்கு உள்ளாவர்கள்? அதுவும் அவர்களை செக்ஸ் வெறி கொண்டவராக சித்தரிப்பதெல்லாம் எவ்வளவு கொடுமையானது? அதற்குப் பிறகு அவர்கள் சந்திக்கும் அவமானங்களை, கேலி பேச்சுகளையெல்லாம் அந்தப் பெற்றோர்களும், உறவினர்களும் கொஞ்சம் கூட உணராமல் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பெற்றோர்களின் வளர்ப்புமுறைக்கும், பாலுணர்விற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். பாலுணர்வே வராமல் யாரையும் வளர்த்து விட முடியாது. அந்த உணர்வுகளெல்லாம் இயற்கையாக வரக்கூடியவை. அதுவும் பதின்பருவத்தில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களின் விளைவாகப் பாலுணர்வும், எதிர் பாலினரின் மீதான ஈர்ப்பும் இயல்பாக உருவாகக்கூடியவை. அந்தப் பருவத்தில் அவர்களின் உரையாடலும், நடவடிக்கைகளும் பெரும்பாலும் இந்தப் பாலுணர்வை மையப்படுத்தியும், அதனால் தூண்டப்பட்ட ஒன்றாகவும் இருக்கும். பாலுறவு சார்ந்து பார்க்கும் அல்லது கேட்கும் விஷயங்களில் தன்னிச்சையாகவே கிளர்ச்சி உண்டாகும், அதன் விளைவாக ஆபாசக் காணொளிகள் பார்ப்பது போன்ற நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடக்கூடும். அதுவும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் தகவல் தொழில்நுட்பங்களின் விளைவாக இப்படிப்பட்ட கணொளிகள் மிக எளிதாகவே அவர்களுக்குக் கிடைத்துவிடுகின்றன. முதல் முறையாக அதைப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியினால் அவர்கள் மீண்டும் மீண்டும் அதை பார்க்க தூண்டப்படுவார்கள். அப்படிப் பார்க்கும்போது அவர்களுக்குள் மிதமான குற்றவுணர்ச்சி கூட ஏற்படும். இப்படித்தான் அவர்கள் ஆபாச காணொளிகளுக்கு வந்தடைகிறார்கள். இப்படி இயல்பாக நடக்கும் ஒரு நடவடிக்கையை மிகப்பெரிய குற்றமாக, சீரழிவின் அடையாளமாகப் பார்க்கும்போது அது அவர்களின் குற்றவுணர்ச்சியையும், தாழ்வு மனப்பான்மையையும் இன்னும் அதிகமாக்கும், அதனால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து விலக தொடங்குவார்கள், அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் சொல்லிகாட்டும்போது இந்த தாழ்வு மனப்பான்மை அதிகமாகி மனஅழுத்தத் தில் வந்து முடியும். இந்த மன அழுத்தம் அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும், அதனால் தனிமைப்படுத்திக்கொள்வார்கள், கவனமின்மை அதிகரிக்கும், படிப்பில் நாட்டம் குறைய தொடங்கும். இந்த மன அழுத்தம் அதிகமாகும்போது மிகவும் கடினமானவர்களாக, எதற்கும் கவலைப்படாதவர்களாக, யார்மீதும் கவலையற்றவர்களாக அவர்களை மாற்றிவிடும் அது இன்னும் அவர்களின் நிலைமையை மோசமாக்கும்.

இதை இயல்பான ஒன்றாகக் பெற்றோர்கள் கடந்து வர வேண்டும். இந்தக் காணொளிகளை குழந்தைகள் பார்க்கிறார்கள் என்று தெரிய வரும்போது பார்ப்பதற்குண்டான சூழலை மாற்ற வேண்டும். தனிமையில் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நேரடியாக அல்லாமல் மறைமுகமாக இந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் பற்றி அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்தப் பாலுணர்வை எப்படி பக்குவமாகக் கையாள வேண்டும் என்பதை உறுத்தாத வகையில் அவர்களிடம் சொல்ல வேண்டும். பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட தவறுகளை, பிரச் சினைகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமான வெளியை பெற்றோர்கள் உருவாக்கித் தரவேண்டும். “நம் பெற்றோர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள், நாம் செய்த தவறுகளைக் கொண்டு நம் பெற்றோர்கள் நம்மை மதிப்பிட மாட்டார்கள்” என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

வளரிளம் பருவமென்பது ஒரு சிக்கலான பருவம். உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக ஏராளமான மாற்றங்கள் நிறைந்த பருவம். மற்ற பருவங்களிலும் கூட இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும். ஆனால் வளரிளம் பருவத்தில் இந்த மாற்றங்கள் மிக வேகமாக நடக்கும். அதனால்தான் அவர்களின் நடவடிக்கைகள் புரிந்துகொள்ள முடியாததாகவும், வேடிக்கையானதாகவும், விசித்திரமானதாகவும், சில நேரங்களில் ஆபத்தானதாகவும்கூட இருக்கும்.

உடலில் ஏற்படும் அதீத ஆற்றல், பிறர் கவனத்தை ஈர்க்கும் ஆவல், எதிர்பாலின மோகம், ஆபத்துகளுக்கு அஞ்சாமை போன்றவையெல்லாம் அவர்களின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன. இந்த மனநிலையில் அவர்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் ஆபத்தானதாக, தீங்கிழைக்கக்கூடியதாக இருப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்கள் ஆபத்தில் சிக்கும்போது அவர்களை பெற்றோர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதனால் அவற்றையெல்லாம் அவர்கள் பகிர்ந்துகொள்ளுமளவுக்கான சுதந்திரமான வெளியைப் பெற்றோர்கள் உருவாக்கித்தர வேண்டும். நிறைய வெளிப்படைத்தன்மையைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். இவற்றை செய்தால்தான் குழந்தைகளை ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியும். மாறாக, நாமே குழந்தைகளை இந்த தவறுகளை கொண்டு மதிப்பிட்டால், இதை வைத்துக்கொண்டு அந்த குழந்தையின் குணாதிசயமே சீரழிந்து விட்டது என்று எண்ணிவிட்டால் பிறகு குழந்தைகள் நம்மீது நம்பிக்கையிழந்து போவார்கள். எந்த ஒரு நெருக்கடியில் தவிக்கும் போதும் அதை நம்மிடமிருந்து மறைக்கவே முயல்வார்கள். பெற் றோர்களுக்குத் தெரியாமல் மறைவாய் செய்யக்கூடிய நடவடிக்கைகளால் தான் குழந்தைகள் எப்போதும் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்துதான் வந்திருக்கிறோம்.

இணைய வழி விளையாட்டை நிறைய நேரம் விளையாடுகிறான் எனப் பதினைந்து வயது மகனை பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தார்கள். அவனிடம் தனியாகப் பேசும்போதுதான் அவனது அப்பாவின் வங்கி கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமல் ஐம்பதாயிரம் எடுத்திருப்பதை சொன்னான். அதுவரையில் அந்த பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரியாது. ஒரு கட்டத்தில் அந்தப் பையனே தாம் அதில் நிறைய செலவு செய்து மாட்டிக்கொண்டு விடுவோம் என உணர்ந்து மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல சொல்லியிருக்கிறான், அதற்குப் பிறகே பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தார்கள். அவன் சொல்லவேயில்லையென்றால் அந்த பெற்றோர்களுக்கும் தெரியபபோவதேயில்லை. இதை வீட்டில் சொல்லாமல் இருந்ததற்கு காரணமாக அந்தப் பையன் சொன்னதுதான் ஆச்சர்யம். “ஒரு வேளை நான் சொல்லிருந்தேனா என்ன அவமானப்படுத்தி, ஸ்கூல் முன்னாடியே அசிங்கப்படுத்திருப்பாங்க சார், அவங்களால இத புரிஞ்சிக்கவே முடியாது. நான் இப்படி நிறைய நேரம் இந்த கேம் விளையாட ஆரம்பிச்சதுக்குக் காரணமே அவங்க தான்” என்றான்

நான் ஆச்சர்யமாக “எப்படி?” என்றேன்

“தினமும் எங்க வீட்டுக்கு கீழ இருக்க பார்க்ல கிரிக்கெட் விளையாடப் போவேன். எனக்கு அங்க நிறைய ஃபிரண்ட்ஸ். ஆனா எங்க பேரண்ட்ஸ்க்கு நான் விளையாடப் போறது பிடிக்காது, திட்டிக்கிட்டே இருப்பாங்க, படிக்கிறதுல்ல, எப்ப பார்த்தாலும் விளையாட்டுனு குறை சொல்லிட்டே இருப்பாங்க. பத்தாவது வந்ததுக்குப் பிறகு விளையாடவே போகக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க, அதுக்குப் பதிலா இந்த மொபைல் வாங்கிக் கொடுத்து இதுல கொஞ்சம் நேரம் விளையாண்டுக்க, மீதி நேரம் படின்னு சொல்லிட்டாங்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நான் ரொம்ப நேரம் விளையாட ஆரம்பிச்சிட்டேன்” என்றான்

குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக விளையாடப் போகக்கூடாது, யாரிடமும் நீண்ட நேரம் பேசக்கூடாது, வேற எதையும் செய்யாமல் படித்துக்கொண்டு மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிறைய பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதன் காரணமாக குழந்தைகளிடமும் இறுக்கமாக நடந்து கொள்ளத் தொடங்குகின்றனர். இது பெற்றோர்கள், குழந்தைகளுக்கான இடைவெளியை அதிகரிக்கிறது, வெளிப்படைத்தன்மை குறைகிறது. அதன் விளைவாக குழந்தைகள் இது போன்ற சிக்கல்களில், ஆபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.

இன்னும் சில பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்டிப்பாக வளர்க்கிறேன் என நினைத்துக்கொண்டு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்த நினைப்பார்கள். எதுக்கு இவ்வளவு நீளமா முடி வளர்க்குற? எதுக்கு கசங்குன சட்டைய போடற, எதுக்கு சட்டை கைய மடிச்சி விடற என ஒவ்வொன்றுக்கும் ஏராளமான கேள்விகள், ஏராளமான கட்டுப்பாடுகளை வைப்பார்கள் ஆனால் மிக முக்கியமான விஷயத்தில் அலட்சியாக இருந்து விடுவார்கள். நண்பர்கள் கூட வெளியே போகக்கூடாது, போனால் இவ்வளவு நேரத்தில் வர வேண்டும், குடும்பத்தை தவிர யாருடனும் வெளியே செல்லக்கூடாது, பள்ளி முடிந்து அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் வீட்டில், ஒரு பையன் இரவு முழுவதும் செல்போன் பார்க்கிறான், மற்றவர்களை மரியாதையில்லாமல் பேசுகிறான், எப்போதும் தனியறையிலேயே இருக்கிறான். இதைப் பற்றி பெற்றோரிடம் கேட்டால் “சொன்னா கேட்க மாட்டேங்கிறான் சார், சரி, வயசுப் பையன் அப்படி தான் இருப்பான்னு நாங்களும் கண்டுக்கிறதில்ல” என்றார்கள். உண்மையில் வயசுப் பையன் என்று எதை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும், எதைக் கண்டுகொள்ள வேண்டும் என்ற தெளிவு அவர்களிடம் இல்லை.

பெரும்பாலான பெற்றோர்களின் நிலையும் அதுவே. தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை அனைத்தையும் தாங்களே கட்டுப்படுத்த வேண்டும், தாங்கள் நினைத்தபடிதான் குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் விளைவாக குழந்தைகளின் எந்த நடவடிக்கையையுமே அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. குழந்தைகளை நாம் சில விஷயங்களில் அவர்களின் போக்கில் அனுமதித்தால்தான் சில முக்கியமான விஷயங்களில் அவர்களை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். எதை அனுமதிக்கிறோம், எதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதே இங்கு முக்கியமானது. தேவையில்லாத விஷயங்களை
யெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறேன் என மெனக்கெட்டுவிட்டு மிக அவசியமான விஷயங்களிலெல்லாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

நவீன தொழில்நுட்ப காலத்தில் குழந்தைகள் குழந்தைமையை மிக விரைவாகவே தொலைத்து விடுகிறார்கள். ஐந்து வயசுக் குழந்தை ஐம்பது வயது தாத்தாவைப் போல பேசுவதை ரசிக்கும் நம்மால், பதினைந்து வயது பதின்பருவ மாணவன் ஆபாசப் படம் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழந்தைகள் வெகு சீக்கிரம் பெரியவர்களாகிவிட வேண்டும், பெரியவர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தால் அதனால் உண்டாகும் எதிர்மறையான விளைவுகளையும் பொறுத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். இல்லையென்றால் குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர அனுமதிப்பது தான் பொறுத்தமானது. அதுதான் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும்.

ஒரு பெற்றோராக இருப்பதின் பதட்டத்தையும், அச்சத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிற அதே வேளையில், அந்த பதட்டத்தின் விளைவாக குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது என்பதையும் சொல்லாமல் இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் குழந்தை வளர்ப்பில் முதன்மையானதாக பாதுகாப்பாக வளர்ப்பதையும், பண்பாக வளர்ப்பதையுமே சொல்வேன். அதைத் தாண்டி வேறு எதையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் எனது அனுபவங்களில் நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

இன்றைய சூழலில் எனது குழந்தை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஏராளமான ஆபத்துகளை சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்துதான் வெளியே அனுப்புகிறேன், அந்த ஆபத்துகள் அவனுக்கு வராது என்ற நம்பிக்கையில் அல்ல, அப்படிப்பட்ட ஆபத்துகளை அவன் சந்திந்தாலும் அதை எதிர்கொள்ளும் முறைகளை அவன் கற்றுக்கொண்டுதான் செல்கிறான் என்ற நம்பிக்கையின் விளைவாகவும், அதையும் மீறி அவன் அதில் சிக்கிக்கொண்டாலும் அதை என்னிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வான் என்ற நம்பிக்கையிலும்தான் என்னால் தைரியமாக இருக்க முடிகிறது. அந்த நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான் இன்றைய பெற்றோர்கள் செய்ய வேண்டிய பிரதானமான ஒன்றாக நான் நினைக்கிறேன்.

sivabalanela@gmail.com