தலைநகர் சென்னையில் கடந்த ஜனவரி முழுக்க நடந்த கலை இலக்கிய நிகழ்வுகள் இதுவரை தமிழ்நாடு கண்டிராத ஒரு காட்சி. நவீன தமிழுக்கு இத்தகைய வெகுசன கவனமும் அரசின் உத்வேகமும் இதுவரை இந்த அளவு கிட்டியதில்லை. பதினேழு நாள் சென்னை புத்தகக் கண்காட்சி, அதன் அருகிலேயே மூன்று நாள் சர்வதேச புத்தகக் கண்காட்சி, மூன்று நாள் சென்னை இலக்கியத் திருவிழா, மூன்று நாள் சென்னை இலக்கியச் சங்கமம் என சென்னை தமிழால் விழாக்கோலம் பூண்டிருந்தது. எந்த ஒரு மாநில அரசும் இத்தகைய ஒரு பன்முக இலக்கியத் திருவிழாவை நடத்தியதில்லை. ஆண்டின் துவக்கமே தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மறுமலர்ச்சியை கட்டியம் கூறுவதாக அமைந்தது. நவீன தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து பணியாற்றுபவர்களின் நீண்ட கால கலாசார தனிமை ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்த மாபெரும் துவக்கத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டிய பல புள்ளிகள் இருக்கின்றன.
தமிழ்நாடு அரசு நடத்திய பன்னாட்டு புத்தகக் கண்காட்சி மாபெரும் முன்னெடுப்பு எனலாம். தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான பாதை பெரும்பாலும் ஒருவழிப்பாதையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. உலக இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்க்கும் போக்கு ஒரு இயக்கமாகவே இங்கு நிகழ்ந்துவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே இந்த மொழிபெயர்ப்புப் பணிகள் தமிழ்நாட்டில் தீவிரமாக நடந்து வந்திருக்கின்றன. ரஷ்ய, ஃப்ரெஞ்ச், அரேபிய , ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களும் மேற்கத்திய அரசியல் இலக்கியக் கோட்பாடுகளும் கூட தமிழில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்திய பிராந்திய மொழிகளிலிருந்தும்கூட பெருமளவு மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு என்ன சென்றிருக்கிறது என்று பார்த்தால் வெளியிலிருந்து நமக்கு வந்தவற்றில் சிறு சதவிகிதம்கூட இல்லை. இதற்கு நாம் யாரையும் குற்றம்சொல்லவியலாது. நமக்கிடையே பழங்கதைகள் பேசுவதில் இருந்த ஆர்வத்தை நாம் நம்மைப்பற்றி பிறருக்குச் சொல்ல காட்டியதேயில்லை. தேசிய,சர்வதேச அரங்கில் நவீன தமிழ் இலக்கியம் உரிய பிரதிநித்துவம் பெறவே இல்லை. தமிழுக்கு வெளியே அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் வெகு சொற்பம்.
இன்னொன்று, மொழிபெயர்ப்பு சார்ந்த உரிமைகளை பிறமொழிகளில் இருந்து பெறுவதில் ஒரு சில நிறுவனங்களே ஏகபோகமாக செல்வாக்கு செலுத்தி வந்திருக்கின்றன. இதையெல்லாம் மாற்றுவதற்கான பெரும் முயற்சிதான் இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சி. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் அரங்கு அமைத்திருந்தனர். தமிழ் பதிப்பாளர்கள் பிற மொழி பதிப்பாளர்களிடமிருந்து மொழியாக்க உரிமைகளைப் பெற்றும், தமிழ் படைப்புகளை பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்பு உரிமைகளை அளித்தும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. தமிழ் பதிப்பாளர்கள் பிறமொழி பதிப்பாளர்களுடன் கொண்டிருந்த தயக்கங்களும் மனத்தடைகளும் விலகின என்றுதான் சொல்லவேண்டும், இனி அவர்கள் எந்த ஒரு சர்வதேச புத்தகக் கண்காட்சியிலும் உற்சாகத்துடன் பங்கெடுக்கவும் மொழியாக்க ஒப்பந்தங்கள் செய்யவும் இந்தக் கண்காட்சி பாதை சமைத்துத் தந்திருக்கிறது.
வரும் ஆண்டுகளில் இந்த சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி மேலும் விரிவுபெற்று இந்தியாவில் மிக முக்கிமான கண்காட்சிகளில் ஒன்றாக மாறாக வேண்டும். அதற்கு எல்லாவகையிலும் தமிழ்நாடு அரசு ஊக்கமளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரும் ஆண்டுகளில் இந்தப் புத்தக கண்காட்சியில் தமிழின் முதன்மையான படைப்பாளிகளோடு பிறமொழி பதிப்பாளர்களும் படைப்பாளிகளும் கலந்துரையாட தக்கவகையில் அமர்வுகள் அமைக்கப்படவேண்டும். எங்கிருந்தாவது தொடங்குவதுதான் முக்கியம். தமிழின் சாதனைகள் மகத்தானவை. அவை திக்கெட்டும் பரவவேண்டும். அதற்கான ஒரு தமிழ்கூறும் நல்லரசு அமைந்திருப்பது நமக்குக் கிடைத்த நல்வாய்ப்பு.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற, 100 படைப்பாளிகள் பங்கேற்ற சென்னை இலக்கியத் திருவிழா ஒரு பாபெரும் அனுபவம். எல்லாத் தரப்புகளையும் பிரதிநித்துவப்படுத்திய ஒரு ஜனநயாகபூர்வமான இலக்கியத் திருவிழா அது. இதை சென்னையில் வருடாவருடம் இந்து நாளிதழ் நடத்தும் ‘ லிட்ட்டரி ஃபெஸ்டிவல்’ லோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். குறிப்பிட்ட சில வட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் மட்டுமே அந்த விழாக்களில் பங்கெடுக்கும் வாய்ப்பை பெற்றுவந்திருகின்றனர். ஆனால் சென்னை இலக்கியத் திருவிழா இதற்கு மாறாக தமிழின் பல்வேறு சிந்தனைப்போக்குகளையும் இலக்கியப்போக்குகளையும் பன்முகத் தன்மையுடன் வெளிப்படுத்தியது.
அதேபோல சென்னை இலக்கிய சங்கமம் மற்றொரு சிறப்பான இலக்கிய நிகழ்வாக பொங்கல் தினங்களில் நடந்தேறியது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளும் வட்டார அளவில் இலக்கிய திருவிழாக்களும் தமிழ்நாடு அரசின் முன்முயற்சியால் நடந்தேறிவருகின்றன. புத்தகக் கண்காட்சிகளில் இதுவரை புத்தகக் கண்காட்சி மேடையேறியிராத நவீன எழுத்தாளர்கள் பேச அழைக்கப்படுகின்றனர். கெளரவிக்கப்படுகின்றனர்.
இது பெரும் மாற்றங்களுக்கான துவக்கம். அரசின் இந்த மாபெரும் தமிழ்க் கனவை முன்னின்று நடத்தி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். அரசு இயந்திரம் முழுக்க இன்று தமிழுணர்வு எனும் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கிறது.
சில மனக்குறைகளும் முணுமுணுப்புகளும் எழாமல் இல்லை. தாங்கள் அழைக்கப்படவில்லை என சில எழுத்தாளர்களின் குமுறல் கேட்கவே செய்கின்றன. நியாயமான மனக்குறைகள் களையப்படவேண்டியவை. சரி செய்யப்படவேண்டியவை. எந்தத் தேர்விலும் இந்தப் புகார்கள் இருக்கவே செய்யும். கேட்பதற்கு உரிமையுள்ள அரசிடம் கேட்கிறார்கள். அரசு இயந்திரத்திற்கு இது புதிய அனுபவம் என்பதால் சில இடங்களில் சில குழப்பங்கள் நடக்கின்றன. முக்கியமாக இதுபோன்ற விஷயங்களுக்காக அமைக்கப்படும் தேர்வுக்குழுவினர் தங்களது சொந்த விருப்புவெறுப்புகளை பயன்படுத்துவதன் மூலம் அரசின் பரந்துபட்ட நோக்கங்களை சிதைக்க முயற்சிக்கின்றனர். இதனால் இப்போது அரசே அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கியமான படைப்பாளிகள் குறித்த தகவல் பெட்டகம் ஒன்றினை உருவாக்க முயற்சித்து வருகிறது. அப்போது நியாயமான பங்கேற்பும் பிரதிநித்துவமும் கிட்ட வாய்ப்பிருக்கிறது. பட்டி மன்ற பேச்சாளர்கள் திரும்பத் திரும்ப இதுபோன்ற விழாக்களுக்கு அழைக்கப்படுவதில் பொருள் இல்லை. புத்தகங்களை எழுதுபவர்கள், புத்தகங்களைப் படிப்பவர்கள், புத்தகங்களை சுவார்சியமாக அறிமுகப்படுத்தி வாசிப்பை ஊக்கபடுத்தக்கூடியவர்கள் இந்த மேடைகளில் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் நடத்தக்கூடிய இலக்கியத் திருவிழாக்கள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளில் பெருமளவு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பைக் காணமுடிகிறது. மாட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பள்ளிக் கல்லூரிஅதிகாரிகள் இதற்கான முன்னெடுப்பைச் செய்கின்றர். இந்த மாணவர்களை புத்தக வாசிப்பில் ஆர்வம் கொள்ளச் செய்வதற்கான முன் முயற்சிகள் தேவை. முக்கியமாக மாணவர்கள் வாங்ககூடிய வகையில் விலைகுறைவான சிறிய சிறந்த நூல்களை தயாரிக்க பதிப்பகங்கள் முன்வரவேண்டும். பொருளாதார ரீதியாக பின் தங்கிய பகுதிகளில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கு அழைத்துவரப்படும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்க கையில் பணம் இருக்காது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் மாணவர்களுக்கு புத்தகம் வாங்குவதற்கான கூப்பன்களை வழங்கலாம், பபாஸி அமைப்பு இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் .
சென்னை புத்தகக் கண்காட்சி பிரமாண்டமாக நடந்தாலும் இந்த ஆண்டு விற்பனை உற்சாகம் அளிக்கவில்லை என்பதை பல பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் குறிப்பிட்டனர். எல்லா மாவட்ட தலைநகர்களிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் குறைந்துவிட்டனர் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. வாசிப்பு மற்றும் புத்தக இயக்கம் தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லாமே சென்னையை மையம் கொண்டிருக்கவேண்டும் என்று அவசியமும் இல்லை. சென்னை புத்தக் கண்காட்சி கால மாறுதலுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காறோட்டமில்லாத வெப்பமான அரங்குகள்,சுகாதரமற்ற சூழல், நியாயமற்ற விலையில் விற்கப்படும் உணவுப் பொருள்கள், எந்த சுவாரசியமும் அற்ற மேடைப்பேச்சுகள் எனற நிலையெல்லாம் மாற்றப்படவேண்டும். மாறாக நல்ல ஒரு சூழலில் அது கலைத்திருவிழாவாகவும் அறிவுத்திருவிழாவாகவும் மாற்றப்படவேண்டும். பாடல்கள், கவிதை வாசிப்புகள், வினாடி வினா போட்டிகள், நவீன நாடகங்கள் என அனைத்து தரப்பு மக்களையும் பங்கேற்கச் செய்யும் நிகழ்வுகள் இருந்தால் மட்டுமே சென்னை புத்தக்கண்காட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது.
சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளில் இதையெல்லாம் சிறப்பாக செய்கிறார்கள். கலை நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் எனன் களைகட்டுவதைக் காண முடிகிறது. நல்ல கூட்டமும் விற்பனையும்கூட அங்கெல்லாம் நிகழ்கின்றன. வேறு சில மாவட்ட புத்தகக் கண்காட்சிகள் தூங்கிவழியவும் செய்கின்றன. நடத்துபவர்களின் ஆர்வமும் முனைப்புமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. சில மாவட்ட புத்தக் கண்காட்சிகளில் கிராமப்புற பஞ்சாயத்து நூலகஙக்ளுக்கு புத்தகங்கள் வாங்கப்படுவதன் மூலம் பதிப்பாளர்கள்- விற்பனையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
நவீன தமிழுக்காக இந்த ஒன்னரை ஆண்டுகளில் இந்த அரசு விருதுகள். எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம், மொழிபெயர்ப்புகளுக்கான பல்வேறு திட்டங்கள், இலக்கியத் திருவிழாக்கள், மாவட்டம் தோறும் புத்தக் கண்காட்சி என எத்தனையோ திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் நவீன எழுத்தாளர்களில் எத்தனைபேர் இவற்றை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எப்போதும் நிராகரிப்பையும் கசப்பையுமே நம் இயல்பாகக் கொள்ளவேண்டியதில்லை. ஆக்கபூர்வமாக ஒன்று நடைபெறுகிறபோது அதனோடு சேர்ந்து நிற்பதில் என்ன மனத்தடை?
தமிழுக்கும் தமிழ் அடையாளத்திற்கும் தமிழின் நவீனத்துவத்திற்கும் இன்று உருவாகியிருக்கும் இந்த வெளி மென்மேலும் விரிவடைய இணைந்து செல்வோம். செயல்படுவோம்.