30 நவம்பர் 2022 அன்று பெங்களூரு செல்ல வேண்டியிருந்தது. ஓட்டுநராக வந்த என் மாணவர் அழகர்சாமி ‘எங்க சாப்பிடலாங்கய்யா?’ என்று கேட்டார். உணவுப் பிரியர் அவர். ‘ஓசூர்ல என்னோட வீடு ஒன்னு இருக்குது. அந்த வீட்டப் பாத்துட்டு அங்கயே சாப்பிட்டிரலாம்’ என்றேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நாமக்கல்லில் இருந்து ஓசூருக்குப் போய் யாராவது வீடு வாங்குவார்களா? ‘அங்க யாருங்கய்யா இருக்கறாங்க?’ என்றார் குழப்பத்தோடு. ‘அங்க வாடகைக்குக் குடியிருக்கறவங்க சாப்பாடு செஞ்சிருப்பாங்க’ என்றேன். அவருக்குக் குழப்பம் தீரவில்லை. உண்மையில் எனக்கு ஓசூரில் ஒரு வீடு இருக்கிறது.
1996இல் ஆத்தூர் அரசு கல்லூரியில் சேர்ந்து ஐந்தாண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக 2001இல் இடமாறுதல் பெற்றேன். அங்கிருந்து வர விருப்பமேயில்லை. காலகாலமாக அங்கேயே இருந்துவிட வேண்டும் என மனம் ஆசைப்பட்டது. நடக்கவில்லை. என் மேல் அன்புள்ளம் கொண்ட பலரைப் பிரிய வேண்டியிருந்தது. அதில் முதன்மையானவர் இரா.வெங்கடேசன். அப்போது அவர் இளங்கலைத் தமிழிலக்கிய இரண்டாமாண்டு மாணவர். நண்பர்களோடு நான் தங்கியிருந்த வீட்டுக்குத் தினமும் மாலையில் வருவார். குறிப்பேட்டில் நான் எழுதியிருக்கும் எதையாவது அவரிடம் தருவேன். வெள்ளைத்தாளில் படி எடுப்பார். கையெழுத்து திருத்தமாக இருக்கும். தாளில் படி எடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைச் சொல்லிக் கொடுத்திருந்தேன். ஒருமுறை சொன்னாலே போதும், பட்டென்று பிடித்துக்கொள்ளும் புத்தி.
கையால் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. குறிப்பேட்டில் முதலில் எழுதுவது என் வழக்கம். ஏதேனும் திருத்தம் வேண்டியிருந்தால் அதிலேயே செய்துவிடுவேன். ஒரு பக்கத்தின் மேலும் கீழும் அம்புக்குறிகள் போட்டும் இடையிடையே நட்சத்திரக் குறியிட்டும் சேர்க்கைகள் செய்திருப்பேன். எழுத்துகள் மிகச் சிறியவையாக எறும்பு ஊர்வது போலவே இருக்கும். எழுதித் திருத்தங்கள் செய்து முடித்த பிறகு படி எடுப்பது எனக்குப் பிடிக்காத வேலை. எழுதிய பிறகான விடுபடலைத் தடுப்பது படி எடுக்கும் இம்சை பிடித்த வேலை. படி எடுப்பதைத் தள்ளிப் போட்டதாலேயே தாமதமாகப் பிரசுரமான படைப்புகள் பலவுண்டு. அத்தாமதத்தைப் போக்க உதவியாள் வைத்துக் கொண்டேன். கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் பகுதி நேரமாக அவ்வேலையைச் செய்வதற்கு மாணவர்கள் கிடைத்தனர்.
அரசுk கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் ஏதேனும் பகுதி நேர வேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். தம் செலவுக்குச் சம்பாதிப்பதோடு குடும்பத்துக்கும் உதவ வேண்டிய நிலை. அப்படிப் பகுதி நேர வேலை செய்யும் மாணவர்களில் எனக்கு உகந்த ஒருவரைத் தேர்வு செய்வேன். எழுதுவதற்குச் சில தகுதிகள் உள்ளன. பிழையில்லாமல் எழுதத் தெரிய வேண்டும். கையெழுத்து வடிவாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. திருத்தமாக இருந்தால் போதும். ஒவ்வொரு எழுத்தையும் முழுமையாக எழுதினாலே தெளிவாக இருக்கும். வேறிடத்தில் பகுதி நேர வேலை செய்தால் கிடைப்பதை விடவும் கொஞ்சம் கூடுதலாக ஊதியம் வழங்குவேன். சனி, ஞாயிறு விடுமுறை.
அப்படி எனக்குப் படி எடுப்பவராக வந்து சேர்ந்தவர் வெங்கடேசன். அவரை எனக்குப் பிடித்துப் போக அவரிடம் இருந்த ஒழுங்குகளே காரணம். நேரம் தவறாமை, நேரத்தை வீணாக்காமை இரண்டும் அவரிடம் உண்டு. சொல்வதைச் சட்டென்று புரிந்துகொள்வார். எதையும் இரண்டாம் முறை சொல்ல வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதும் இல்லை. ஒருநாள் சொன்னால் போதும். அதை எப்போதும் கடைபிடிக்கும் வகையில் மனதில் பதிந்து கொள்வார். பிழையற்ற எழுத்து. ஏதேனும் ஐயம் என்றால் தயக்கம் இல்லாமல் கேட்டுத் தெளிவார். எழுதும் எந்திரமாக இல்லாமல் வாசித்து உள்வாங்கும் திறன் உள்ளவர். எழுதி முடித்த பிறகு அப்படைப்பைப் பற்றி என்னிடம் விவாதிப்பார். தம் கருத்தைத் தயக்கமின்றிச் சொல்வார். இத்தனை திறனுடையவர் என் மனதைக் கவர்ந்ததில் வியப்பென்ன?
வார நாட்களின் மாலை நேரத்தில் அவர் என் அறையில் இருப்பது வழக்கம். அவர் வராத நாட்கள் வெறுமை பீடித்துப் போகும். மிகைப் பேச்சு இல்லை. குறைவாகவும் மென்மையாகவும் பேசுவார். ஒருபோதும் முகத்தில் சலிப்பைக் காட்டியதில்லை. என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எனக்கும் அவர் மேல் அப்படி ஓர் அன்பு துளிர்த்திருந்தது. எழுத்தாளருக்கு இப்படி ஓர் உதவியாளர் கிடைத்தால் எழுதுவதில் சோர்வே தோன்றாது. வெங்கடேசன் எனக்குப் படி எடுப்பாளராக இருந்த காலத்தில் பிற பணிகளையும் தாண்டி நிறைய எழுதினேன். மாலையில் அவர் வரும்போது படியெடுக்க எதுவும் இல்லாமல் அவர் ஏமாந்து போய்விடக் கூடாது என்றும் கவனம் கொண்டிருந்தேன். ஒரு வாசகராகவும் அவர் மாறியிருந்தார். வாசகரை ஏமாற்றக் கூடாதல்லவா?
ஆத்தூரிலிருந்து இடமாறுதலில் கிளம்பிய நாள் மாலையில் அவரையும் உடனழைத்துக் கொண்டேன். வீட்டிற்கு வந்து என்னை விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து சென்றார். என் மகளோடும் மகனோடும் விளையாடிக் களிப்பூட்டினார். அவரை அனுப்பிவிட்டுச் சோர்ந்து போய் உட்கார்ந்தேன். ஊருக்குப் போனதும் தொலைபேசியில் அழைத்துப் பேசச் சொன்னேன். அதே போலப் பேசினார். ஆத்தூரில் இறங்கியதும் பொதுத்தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தகவல் தெரிவித்ததும் ‘சரிப்பா’ என்று சொல்லிப் பேச்சை முடித்துவிட்டேன். ஆனால் தொலைபேசியைக் காதிலிருந்து எடுக்கவில்லை. ஏனோ அப்படியே வைத்திருந்தேன். ஒரு நிமிட மௌனம். எதிரிலிருந்து ‘ஐயா’ என்று குரல் வந்தது. என்னைப் போலவே வெங்கடேசனும் காதிலேயே வைத்திருந்திருக்கிறார். சிரிப்பும் கண்ணீரும் இணைந்த அருமையான தருணம் அது. பிறகு தொலைபேசியை யார் முதலில் வைத்தோம் என்பது தெரியவில்லை.
படி எடுக்க விஷயம் இருக்கிறதோ இல்லையோ மாதத்திற்கு இருமுறை சனி, ஞாயிறுகளில் ஆத்தூரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். அவர் வருகை எனக்கு மட்டுமல்ல, என் குழந்தைகளுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும். அவர் மூன்றாமாண்டு முடிக்கும் வரைக்கும் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் இந்த வருகை தொடர்ந்தது. அதன்பின் அவர் முதுகலைப் படிக்க வெளியூர் சென்றார். காலம் உணர்வுகளைத் தணிக்கிறது; வேகத்தை மட்டுப்படுத்துகிறது; நினைவுகளாக்கிப் புதியதைப் பொருத்துகிறது. ஆம், காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. என்றாலும் அன்பு அடியாழத்தில் புதைந்திருந்து எந்நேரமும் பெருகிவிடக் காத்திருக்கும் அனல் போலத்தான்.
வெங்கடேசன் படித்து முடித்து ஓசூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியரானார். திருமணம் செய்து கொண்டார். பெற்றோரையும் அங்கேயே அழைத்துச் சென்றார். குழந்தைகள் பிறந்தன. என் வாழ்விலும் எத்தனையோ மாற்றங்கள். எப்போதும் நினைத்திருப்பதும் எப்போதாவது பேசுவதும் எங்கள் வழக்கமாயிற்று. என் எழுத்துக்கள் எல்லாவற்றையும் வாசித்துவிடும் வழக்கம் அவருக்குண்டு. இடையில் என்னை நெகிழ்த்தும் வகையில் இருவிஷயங்களைச் செய்தார். 2016ஆம் ஆண்டு என் மாணவர்கள் எழுதித் தொகுத்த ‘எங்கள் ஐயா’ நூலுக்கு அவரும் கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையின் முடிவு வாசகம் இது:
‘உங்களுக்கான அரிசியில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும்’ என்றொரு வாசகம் உண்டு. எனக்கான அரிசியில் மட்டும் வேறு பெயர் எழுதப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். ஆம். அது ஐயாவின் பெயர்.
இப்படி ஒரு வாசகத்தை அவர் எழுதும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்? வேலை வாங்கிக் கொண்டு அதற்கேற்ற ஊதியத்தை வழங்கினேன். ஆசிரியராகச் சிலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். சிறுசிறு உதவிகள் செய்திருக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பதில் ருசியைக் காட்டியிருக்கிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறேன். இவையெல்லாம் அவருக்கு மட்டும் தனிப்படச் செய்தவை அல்ல. ஓர் ஆசிரியராக என் கடமை எனக் கருதிச் செய்தவை. இயல்பாக எல்லா மாணவர்களுக்கும் செய்வதுதான். ஆனால் என் பெயர் எழுதிய அரிசியைச் சாப்பிடுகிறேன் என்று சொல்கிறாரே? அவர் எழுதிய வாசகத்தைப் படிக்கும் போதெல்லாம் என் மனம் கனிகிறது.
அவர் செய்த இரண்டாம் விஷயம் இதை விடவும் பெரிது. மாதொருபாகன் பிரச்சினையால் சென்னைக்குச் சென்று சில காலம் இருந்துவிட்டு இரண்டாம் முறையாக ஆத்தூர் கல்லூரிக்கு இடமாறுதல் பெற்று வந்திருந்தேன். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். என்னைப் பார்ப்பதற்காக அக்கல்லூரிக்கு வெங்கடேசன் வந்தார். ‘ஐயா, ஓசுருல வீடு கட்டியிருக்கறங்கய்யா. புதுமனைப் புகுவிழாவிற்கு நீங்கள் வர வேண்டும்’ என அழைத்தார். பைக்குள்ளிருந்து அழைப்பிதழை எடுத்து நீட்டினார். அழைப்பிதழில் ‘நாங்கள் புதிதாகக் கட்டியிருக்கும் பெருமாள்முருகன் குடிலின் புதுமனைப் புகுவிழா’ என்றிருந்தது. ஆம், அவர் வீட்டுக்கு இட்டிருந்த பெயர் ‘பெருமாள்முருகன் குடில்.’ தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து சிறுகச் சேர்த்து மனை வாங்கி அவர் கட்டியிருந்த வீட்டிற்கு என் பெயர். சொந்த வீடு கட்டுவது வாழ்நாள் சாதனையாக இருப்பது நம் சமூகச் சூழல். தம் சாதனைக்கு அவர் சூட்டியது என் பெயர்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கண்களைத் தாழ்த்திக்கொண்டு ‘என்னப்பா இது’ என்றேன். ‘இதுதாங்கய்யா பொருத்தமான பெயர்’ என்றார். சரி, அவர் உணர்வுக்கு மதிப்பளித்து என்னை மீட்டுக்கொண்டேன். ‘சரி, என்னுடைய பேர் வெச்சிட்ட. அப்படீன்னா அது என்னோட வீடுதான், பாத்துக்க’ என்றேன். அவர் அசரவில்லை. ‘ஆமாங்கய்யா. அது உங்களோட வீடுதாங்கய்யா’ என்றார். புதுமனைப் புகுவிழாவிற்குச் செல்ல வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என் பெயர் சூட்டிய வீட்டு விழாவிற்குச் செல்ல இயலாத வருத்தம் இருந்தது. அதைப் போக்கிக்கொள்ள இப்போதைய பெங்களூருப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.
ஓசூரின் புறநகர்ப் பகுதியில் குறைவான வீடுகளே இருந்த பகுதியில் அழகான சிறுவீடு. நல்ல குடில். வெங்கடேசன் தம் மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். தந்தையும் உடனிருக்கிறார். என் வரவுக்காக விடுப்பு எடுத்துக் காத்திருந்தார். அவர் குழந்தைகள் இருவரிடமும் கேட்டேன், ‘உங்கப்பா புத்தகமெல்லாம் படிக்கிறாரா?’ அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ‘எந்நேரமும் படிச்சுக்கிட்டேதான் இருப்பாரு’ என்றார்கள். ‘எங்களுக்குப் புத்தகம் வாங்கித் தருவாரு’ என்று சொல்லித் தம் புத்தகங்கள் சிலவற்றைக் காட்டினார்கள். அலமாரிகள் புத்தகங்களால் நிறைந்திருந்தன. ஓசூரில் எழுத்தாளர் பா.வெங்கடேசன் மாதந்தோறும் ‘புரவி இலக்கியக் கூடுகை’ என்னும் பெயரில் இலக்கிய நிகழ்வைத் தொடங்கியுள்ளார். அதில் இரா.வெங்கடேசனும் பேசுகிறார். கடந்த மாதம் ‘நொய்யல்’ நாவல் பற்றிப் பேசியதாகச் சொன்னார். இந்த மாதம் ‘ஸலாம் அலைக்’ நாவல் பற்றிப் பேச உள்ளார். அவர் செல்லும் வழியெல்லாம் பூக்கள் பூக்கட்டும்; நறுமணம் கமழட்டும். அன்பான உணவு உண்டுவிட்டுச் சிறிது நேரம் அளவளாவிய பிறகு புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
‘பெருமாள்முருகன் குடில்’ உருவாகி மூன்றாண்டுகளுக்குப் பிறகு அங்கே சென்றிருக்கிறேன். ஏதேதோ நினைவுகள் மனதில் ஓடப் பயணம் தொடர்ந்தது. வெங்கடேசனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் என் மனைவி கேலியாகக் கேட்பார், ‘அன்னைக்குப் போன மொதல்ல வெச்சது யாரு? குருவா சிஷ்யனா?’ பதில் தெரியாததால் சிரித்துக் கடந்துவிடுவேன். இந்தப் பயணக் கணத்தில் சட்டென்று பதில் தோன்றியது. அன்றைக்குத் தொலைபேசியை முதலில் வைத்தது குருவுமில்லை; சிஷ்யனுமில்லை. இருவரும் ஒரே கணத்தில் தொலைபேசியை வைத்தோம். முதல் என்று யாருமில்லை. முதல் என்று எதுவுமில்லை.