அக்டோபர் 2, 2014 ஆம் தேதி.  மேற்கு வங்க மாநிலத்தில் மிக முக்கியமான திருவிழாவான   துர்க்கா பூஜை கொண்டாட்டங்களின் மூன்றாவது நாள்.   . மேற்கு வங்காளத்தின்  பர்துவான்  முனிசிபாலிட்டியைச்  சேர்ந்த காக்ரகார் பகுதியில் மதியம்  இரண்டு மணிக்கு ஒரு இரண்டு மாடிக் கட்டடத்தில்   குண்டு வெடித்தது.

இந்தக் குண்டு வெடிப்பு குறித்து கீழ்க்கண்ட தகவல்கள் பரவின.

  1. இந்தக் கட்டடம் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான நூருல் ஹசன் சவுத்ரிக்குச் சொந்தமானது. அவர் இந்தக் கட்டடத்தை வாடகைக்கு விட்டு விட்டு அதே சாலையில் இன்னொரு வீட்டில் குடியிருந்து வந்தார். குண்டு வெடித்த கட்டடத்தின் கீழ்தளம் திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாகப் பயன்பட்டு வந்த்து. மேல் தளத்தை   ஷகில் அகமது என்பவருக்கு மாதம் ஒன்றுக்கு 4,700 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

 

  1. இந்தக் கட்டடத்திலிருந்து பெரும் சத்தமும், நெருப்பும், புகையும் வரவும் உள்ளூர் மக்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் கட்டடத்துக்குள் நுழைய முயன்றபோது அங்கிருந்த இரண்டு பெண்கள் துப்பாக்கிகளுடன் மறித்தனர்.  அவர்கள் பல ஆவணங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

  1. வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த ஷகில் அகமது குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். காயமடைந்த இன்னொருவரான ஷோபன் மண்டல் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அப்துல் ஹக்கிம் என்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

  1. போலீஸ் அந்த இரண்டு பெண்களையும் கைது செய்த்து. அவர்கள் ஷகில் அஹமது, அப்துல் ஹக்கிம் ஆகியோரின் மனைவிகளாவர். 50 நாட்டு வெடிகுண்டுகளும், வாட்ச்களும், தாலிபான் பயிற்சி வீடியோக்களும், இஸ்லாமிய பாடல்களும், கைப்பற்றப்பட்டன.  போலி வாக்காளர் அட்டைகள், பாஸ்போர்ட்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

வெடித்தது நாட்டு வெடிகுண்டு. பர்துவான், பிர்பூம், முர்ஷிதாபாத் மாவட்டஙக்ள் உள்ளிட்ட மத்திய வங்காளத்தில் குண்டுவெடிப்பு, குண்டுவீச்சு சர்வ சாதாரணம். எனவே போலீஸ் இதை உள்ளூர் கிரிமினல்களின் நடவடிக்கை என்று கருதியது. முஸ்லிம் பெண்கள் துப்பாக்கிகளுடன் போலீஸை மறித்ததாக போலீஸ் அறிக்கையில் இல்லை. ஆனால் விக்கி பீடியா வரை இந்தத் தகவல் இருக்கிறது.

அடுத்த நாள் தேசியப் புலனாய்வு நிறுவனம், என் ஐ. ஏ. இந்த வழக்கு பற்றி ஆராய பார்துவான் வந்தது. ஆனால் மேற்கு வங்க போலீஸ் என். ஐ. ஏ. அதிகாரிகளை அந்த வீட்டில் நுழைய அனுமதிக்கவில்லை. அக்டோபர் 6 ஆம் தேதி பி.ஜே.பி. இந்த வழக்கு விசாரணையை என். ஐ. ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு பேரணி நடத்தியது. மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசானது விசாரணையை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க மறுத்தது. அக்டோபர் 9 ஆம் தேதி ஒன்றிய அரசு வழக்கை தன்னிச்சையாக என்.ஐ. ஏ.விடம் ஒப்படைத்தது. அக்டோபர் 10 ஆம் தேதி மம்தா பானர்ஜி ஒன்றிய அரசானது மாநிலத்தில்  தலையிட்டுக் குழப்பம் விளைவிக்கிறது  என்று குற்றம் சாட்டினார்.

என். ஐ. ஏ. அக்டோபர் 16 ஆம் தேதி அந்த வீட்டை சோதனையிட்டு முப்பது குண்டுகளைக் கைப்பற்றியது. இவை தாங்கள் சோதனையிட்டபோது இல்லை என்று மாநிலப் போலீஸ் கூறியிருந்தது.

NIA probes link between bank robbery and Burdwan blastஅகில இந்திய மதச்சார்பற்ற  அமைப்பின் தலைவரான சுரேஷ் கைர்னா தலைமையிலான உண்மையறியும் குழு அந்தப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து வெளீயிட்ட அறிக்கையில் வீட்டு உரிமையாளர் ஹாஜி ஹசன் அலி சவுத்ரி என்பவராவார். இவர் ஒரு ஓய்வு பெற்ற மின் இலாகா இன்ஜினியர்.    அவர் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்தவர்  என்று குறிப்பிடப்படவில்லை.   இந்த அறிக்கையிலும்  பெண்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக இல்லை. பார்துவான் பகுதி ஆள் கடத்தல் தீவிரமாக உள்ள இடம். அரசியல் கட்சிகள் இதில் ஈடுபடுகின்றன போன்ற விஷயங்களை உண்மையறியும் குழு அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

பிர்பூம், பர்துவான், முஷிதாபாத் மாவட்டங்களில் மட்டும் 2012 லிருந்து 2014 வரை 1100 குண்டுவெடிப்புகள், குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன என்று உண்மையறியும்  குழு அறிக்கை கூறுகிறது. எனவே இங்கே குண்டு வெடிப்பது கிரிமினல்களின் செயலாக இருக்கவும்  வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மையறியும் குழுவின் அறிக்கையில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.

காக்ரகார் மதரஸ் தினியா மதனியா என்ற ஆண்கள் மதரஸாவும், அருகில் உள்ள ஷிமுலியா என்ற கிராமத்திலுள்ள ஒரு பெண்கள் மசூதியும் ஜிஹாதிகளின் மையம். இங்கிருந்து குண்டுகள் செய்யப்பட்டு பங்களாதேஷ் கொண்டு செல்லப்படுகின்றன என்றெல்லாம் மீடியா அலறியது. ஆனால் இந்த மதரஸாக்களுக்கு  சோதனையிட பல நாட்களுக்குப் பின்னரே என். ஐ. ஏ. வந்த்து. அங்கே எதுவும் கைப்பற்றப்படவில்லை. இரண்டு குளங்களை வடித்து சோதனை நடந்தது. அப்போது ஒரு குடையின் கைப்பிடி மட்டுமே கிடைத்த்து. அது ரைபிளின் பட் என்று வதந்தி பரவியது.

ரயில் நிலையத்தில் உள்ளூர் மக்கள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நெடுஞ்சாலையிலும் தாடி வைத்திருப்பவர்கள் நிறுத்தப்பட்டனர். முஸ்லிம்களைக் கண்டு பிடிப்பதே நோக்கம் என்று உண்மையறியும் குழு அறிக்கை கூறியது. ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேகத்துக்கு உரியவர் என்ற பாணியில் விசாரணை நடந்த்து.

பி.ஜே.பி. தலைவர்கள் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தினர். எண்ணற்ற ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. போஸ்டர்களிலும் துண்டுப் பிரசுரங்களிலும் மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. திரிணாமூல் காங்கிரஸ் பயங்கரவாதிகளைக் காப்பாற்ற முயல்கிறது, திரிணாமூல் காங்கிரசால் தேசப் பாதுகாப்புக்குப் பெரும் அபாயம் ஏற்பட்டுவிட்டது என்றது பி.ஜே.பி. பிரச்சாரம். முக்கிய ரயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும்  ஜிஹாதி முக்தோ பாங்களா, அதாவது ஜிஹாதிகளிடமிருந்து விடுதலை பெற்ற வங்காளம் என்ற பேனர்கள் இந்துத்துவவாதிகளால் வைக்கப்பட்டன.

ஆர். எஸ்.எஸ். வாரா இதழான ஸ்வஸ்திகா இது பற்றித் தொடர்ந்து கவர் ஸ்டோரிகளை வெளியிட்டது. திரிணாமூல் பயங்கரவாதிகளிடம் தொடர்பு கொண்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியது. வங்காளம் இரண்டாவது காஷ்மீர் ஆகிவருகிறது என்றது. திரிணாமூல் காங்கிரஸ் ஜமாத் உல் திரிணாமூல் ஆகிவிட்டது என்றது.   மேற்கு வங்காளத்தை திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு பங்ளாதேஷ் ஆக்கி விட்டது என்று இந்துத்துவ வாதிகள் முழுவீச்சில் பிரச்சாரம் செய்தனர்.  பங்களாதேஷிலிருந்து வரும் முஸ்லிம்களே இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றனர் இந்துத்துவவாதிகள்.

இந்த நேரத்தில் ராய்ட்டர்ஸ்  ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்ட்து. இந்த நிகழ்வுக்கு ஒரு புதிய பன்னாட்டுப் பரிமாணத்தைக் கொடுத்தது. ”இந்தக் குண்டு வெடிப்பை புலனாய்வு செய்துவரும்  என். ஐ. ஏ. ஒரு பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஜேய்ஷே முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பு ஆகும். இதனது நோக்கம்  பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கலீதா ஜியாவைக் கொல்வது ஆகும்”  என்று ராய்டர்ஸ் பெயர் சொல்ல விருபாத இரண்டு என் .ஐ. ஏ. அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட்து.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் பல பிரச்சினைகள் இருந்து வந்தன. வங்க தேச விடுதலைப் போரின் போது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுதந்திரப் போர் வீர்ர்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து போரிட்டனர். இவர்கள் இப்போது பல முக்கிய அரசியல் தலைவர்களாக உள்ளனர். இவர்களை த் தண்டிப்போம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தார் ஷேக் ஹசீனா.  அவர் பதவிக்கு வந்ததும் இப்படி ஒரு தலைவர் தூக்கிலிடப்பட்டார். அதையடுத்து இந்தத் தண்டனையை ஆதரித்தும் மத எதிர்ப்பு  பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தும் வந்த  வந்த பல பிளக்கர்கள் மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டனர். ஷேக் ஹஸினா அரசு நாத்திகர்கள் எல்லை மீறுகின்றனர். அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும் என்று கைகழுவியது.   உலகம் முழுவதிலும் இருந்தும் அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனக் குரல் வந்தது. இதனால் சங்கடத்தில் இருந்து  வந்த  ஷேக் ஹஸீனா தனக்கு மத அடிப்படைவாதிகளால் ஆபத்து என்ற செய்தியை பிடித்துக் கொண்டு மம்தா பானர்ஜிக்கு எச்சரிகை விடுக்கத் தொடங்கினார், திரிணாமூல் கட்சியின் முதுகெலும்பே ஜிஹாதிகள் தான் என்று அடித்துப் பேசியது பி.ஜே.பி.

திரிணாமூல்  ஆட்சிக்கு வந்ததும் பயங்கர வாதிகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட்ட்து. திரிணாமூல் தலைவர் வீட்டிலேயே பயங்கரவாதிகள் குண்டு செய்தனர் என்றனர் பி.ஜே.பி. தலைவர்கள்.

பத்தொன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நால்வர் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள். எல்லோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட்து.

இதற்கிடையில் குண்டு வெடிப்பில் இறந்தவர் ஒருவர் தங்கள் மகன் அல்ல  என்று  ஒரு அப்பாவியும் அவர் மனைவியும் கூறியது யார் காதிலும் விழவில்லை. இறந்தவர் என். ஐ. ஏ. கூறுபவர் அல்ல என்றால் அவர் யார் என்ற கேள்வியை எழுப்ப, அரசியல் ஜுரம் விடவில்லை.  இது மேற்கு வாங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி. தயாரித்த மிஷன் பெங்கால் திட்டத்தின் ஒரு பகுதி அல்ல என்பதால் கண்டு கொள்ளப்படவில்லை.

மிஷன் வங்காளம்  திட்டத்தின்  ஒருபகுதி மேற்கு வங்காளத்தில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து விட்ட்து என்று சாதிப்பது ஆகும். தவிர ,ஆளும் கட்சித் தலைவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று கூறி அவர்கள் நம்பகத் தனமையைக் குலைப்பது.

எல்லா சம்பவங்களும் இரண்டு முறை நடக்கும் என்று சொல்வார்கள். மேலே சொன்ன

மம்தாவுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது.

மேற்கு வங்காளம் தீவிரவாதிகளின் கூடாரம் ஆகிவிட்டது.

திரிணாமூல் அரசு தீவிரவாதிகளைப் பாதுகாக்கிறது.

திரிணாமூல் அரசு இந்துக்களுக்குத் துரோகம் இழைக்கிறது.

இது போன்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் எங்கோ கேட்டது போல உங்களுக்குத் தோன்றினால்  நீங்கள் தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளைக் கவனித்து வருபவர் என்று  பொருள்.

————————

23.10.2022அன்று தீபாவளி.  கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கோட்டை மேடு பகுதியில்  சங்கமேஸ்வரர் கோவில் அருகில்   இரவு  நான்கு மணிக்கு ஒரு கார் வெடித்ததுச் சிதறியது. அதனுள் இறந்து கிடந்தவர் ஜமேஷா முபின் என்று அடையாளம் காணப்பட்டது.  முதலில் அது காரில் உள்ள சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து என்று கருதப்பட்டது.  டி.ஜி. பி. சைலேந்திர பாபு அங்கே வந்து ஆய்வு நடத்தினார்.  பின்பு அது குண்டு வெடிப்பு என்று சந்தேகிக்கப்பட்டது.  ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

பிஜேபி பொங்கியெழுந்தது. தி.மு.க. அரசு வழக்கை என். ஐ. ஏ. விடம் ஒப்படைக்க வேண்டும். வேண்டுமென்றே அதைச் செய்யாமல் தாமதம் செய்கிறது என்றார்கள் பிஜேபி தலைவர்கள்.

கர்நாடகா சுகாதார அமைச்சர் கே சுதாகர் “மங்களூரில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் என்பவர் ஒரு போலி ஆதார் கார்டுடன் இந்துப் பெயருடன் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த குண்டு வெடித்ததில் அவர் காயமடைந்தார்.   இவர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலைத் தகர்க்கத்தான் சென்று கொண்டிருந்தார்”  என்றார்.

இந்த இரண்டு பேரும் அதாவது ஷாரிக்கும், முபினும் தொடர்பு கொண்டிருந்தனர். என்றார் அமைச்சர்.

தமிழ பி.ஜே.பி. துணைத் தலைவர் கரு. நாகராஜன் இந்த இரண்டு குண்டு வெடிப்புகளும் தொடர்புடையவை என்றார்.  அண்ணாமலையும் இதையே கூறினார். தமிழக அரசு இதை மூடி மறைத்தது. ஆனால் கர்நாடக அரசு இதைச்ச் சரியாகக் கையாண்டு என். ஐ. ஏ.விடம் ஒப்படைத்தது என்றார் கரு நாகராஜன்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்  மாநில உளவுத் துறை  ஆழ்ந்த உறக்கத்துக்குள்  சென்றுவிட்ட்து என்றார் அண்ணாமலை. “ தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது.  மங்களூர் குண்டுவெடிப்புக்குக் காரணமான ஷாரிக் கோவையில் செப்டம்பரில் தங்கியிருந்தார்”  என்றார் அண்ணாமலை.

பிஜேபி தலைவர்கள் இந்தக் கார் குண்டு அல்லது சிலிண்டர் வெடிப்பை கோட்டை ஏஸ்வரன் கோவில் குண்டு வெடிப்பு என்றே குறிப்பிட்டனர்.

அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறினார். மத்திய அரசு குறிப்பான எச்சரிக்கை விடுத்தும் மாநில அரசு மாவட்ட அதிகாரிகளுக்கு அதை அறிவிக்க நான்கு நாட்கள் எடுத்துக் கொண்டது என்றார்.  முதல்வர் ஸ்டாலின் தான் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இதற்கு அவரே பொறுப்பு என்றார். வழக்கை என். ஐ .ஏ.வுக்கு மாற்ற தாமதம் செய்யப்பட்டது என்றார்.  திமுக சில நபர்கள்மீதான கண்காணிப்பைத் தளர்த்தியது என்றார் அண்ணாமலை. கவர்னர் ரவியும் வழக்கை என். ஐ. ஏ.வுக்கு மாற்றுவதற்கு மாநில அரசு தாமதம் செய்வதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தமிழகக் காவல்துறை அப்படி எந்தக் குறிப்பான எச்சரிக்கையும்  ஒன்றிய அரசிடமிருந்து அனுப்பப்படவில்லை என்று பதிலளித்தது. ஒன்றிய அரசிடமிருந்து வந்த சுற்றறிக்கை எல்லா காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. அதில் கோவை பற்றி எதுவும் இல்லை என்று கூறியது.

ஒரு வாரத்தில் பாஜகவின் வற்புறுத்தலால் இந்த வழக்கு  என். ஐ. ஏ. விடம் ஒப்படைக்கப்பட்டது. என். ஐ. ஏ. 43 இடங்களில் சோதனையிட்டது. டிஜிட்டல் சாதனங்கள், சந்தேகத்துக்கிடமான ஆவணங்கள், கைப்பற்றப்பட்டன என்று  என். ஐ. ஏ. கூறியது.

“ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் ஜமேஷா முபின்,

ஐ.எஸ். ஐ.எஸ்.  அமைப்பைச் சேர்ந்தவர். அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சின்னங்கள், நினைவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியற்றின் மேல்  தற்கொலைத் தாக்குதல் நட்ததி பீதியை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது தெரியவருகிறது” என்று என். ஐ. ஏ. செய்தியறிக்கை கூறியது.

“இதில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ( கோவை போலீசால் கைது செய்யப்பட்ட) ஆறு நபர்கள் முபினுடன் சேர்ந்த சதி செய்து கெமிக்கல் பொருட்கள் மற்றும் குண்டு செய்யத் தேவையான பொருட்கள் வாங்கி கார் குண்டு தயாரித்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர் “ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

முபினுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் சோதிக்கப்பட்டனர்.  இவர்களுக்கு முபினுடன் அரசியல் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

காரை விற்றவரான முகம்து டல்ஹா என்பவரின் தாயார் தனது மகன் பழைய கார்களை வாங்கி விற்கும் வியாபாரி. அவருக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றார்.  டல்ஹாவிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இந்த விற்பனையை அவர் ரகசியமாக வைத்திருந்தார் என்றார் காவல் அதிகாரி.

விசாரணை தொடர்ந்து நடக்கும். உண்மை வெளிவரும் என்று நம்பலாம். அதற்கு வாய்ப்பும் இருக்கிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரு குறிப்பிட்ட கட்சி பயன்படுத்திய சொற்கள், வீசிய குற்றச்சாட்டுகள், சொன்ன கதைகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைதான்.

மேற்கு வங்க சம்பவத்திலும் கோவை சம்பவத்திலும் ஒரே ஸ்கிர்ப்ட் இருப்பதை கொஞ்சம் ஊன்றிக் கவனிப்பவர்கள் கண்டு கொள்ளக் கூடும்.

  1. தேசத்துக்கு மாநில ஆளும் கட்சியால் ஆபத்து என்று அடித்துப்

பேசுவது. அதன் மூலம் அதன் நம்பகத் தன்மையைக் குலைப்பது.

  1. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை பயங்கரவாதிகளால்

ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பீதி கிளப்புவது.

  1. இஸ்லாமிய பகுதிகளை தொடர் சோதனைகள், செக் போஸ்டுகள்

மூலம் முடக்குவது.

  1. பெரும்பான்மை பகுதிகளில் இந்த ஆபத்து பிரச்சாரம் மூலம்

நினைத்த விதத்தில் ஆள் சேர்க்கும் மையங்களை உருவாக்குவது.

சரி தேசத்துக்கு இந்த அளவுக்கு ஆபத்து என்றால் இந்த வழக்குகளில் அந்தக் கட்சி எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது, இந்த வழக்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று அடுத்த சம்பவத்தில் பார்க்கலாம்.

ஒரு குண்டு ஒரு உடல் ஒரு வழக்கு


இந்து முன்னணி தலைவர் ரவி என்பவர்   14.4.1995  அன்று அதாவது சித்திரை முதல் நாள் அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள  இந்து முன்னணி அலுவலகத்துக்கு வருகிறார். நுழைவாயிலில் ஒரு நீல நிற ரெக்சின் பை கிடக்கிறது. அது யாருடையது என்று விசாரிக்கிறார். அங்கிருந்த எல்லோரும் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகின்றனர்.  அவர் அந்தப் பையை உள்ளே கொண்டு செல்கிறார். அப்போது  ஒரு இருபத்தி ஐந்து வயது இளைஞர் வந்து ஒன்றும் பேசாமல் பையைப்   பிடுங்கிக் கொண்டு அருகில் இருந்த மார்க்கெட்டை நோக்கிப் போகிறார்.   அங்கிருந்தவர்கள் யார் நீ என்று கேட்கின்றனர். வந்த இளைஞர் பதில் சொல்லாமல் நடக்கவே, அவர்கள் அவர் பின்னால் சென்று பிடிக்க முயல்கின்றனர்.

அந்த இளைஞர் ஒரு துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறார்.   துரத்தியவர்கள் சிதறி ஓடுகின்றனர்.

அந்த இளைஞர் திரும்பி வந்து இந்து முன்னணி அலுவலக வாயிலில் நின்று ஏதோ செய்கிறார். எல்லோரும் அவர் பாம் வைக்கிறார் என்று கத்துகின்றன்ர். அடுத்த சில கணங்களில் வெடிகுண்டு வெடிக்கிறது. இந்து முன்னணி அலுவலகத்தின்  முன்பக்கம்  சேதமடைகிறது. இந்து முன்னணி அலுவலகத்திலிருந்த பைபிள் சண்முகம் என்பவர் இந்தக் குண்டு வெடிப்பில் மரணமடைகிறார்.

எதிர் வீட்டு பால்கனியில் அடையாளம் தெரியாத ஒரு உடல் கிடக்கிறது. அதன் இரண்டுகால்களும் முழங்காலுக்குக் கீழே இல்லை. ஒரு கை இல்லாமலிருக்கிறது. கண்களும் முகமும் சேதமடைந்துள்ளன.

பைபிள் சண்முகத்தின் உடலும், அந்த அடையாளம் தெரியாத உடலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கே சடலக் கூறாய்வில் குண்டு வெடிப்பின்போது சிதறிய இரும்புத் சிதாறுகளால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்து முன்னணி அலுவலகத்தின் இடிபாடுகள் நீதிமன்ற அனுமதி பெற்று தடையவியல் துறைக்கு ஆய்வுக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.   அவ ற்றை ஆராய்ந்த நிபுணர் கட்டட இடிபாடுகளில் இன்னும் சில வெடிகுண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். பாம் ஸ்குவாட் வந்து அவற்றைச் செயலிழக்க வைக்கிறது  .

இந்த சூழ்நிலையில் சென்னை சிபிசிஐடி விசாரணையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது. போலீஸ் அந்த அடையாளம்  தெரியாத உடல் காஜா நிஜாமுதீன் என்பவருடையது என்ற  முடிவுக்கு வருகிறது.  இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவரான இமாம் அலி என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸ் இந்த முடிவுக்கு வருகிறது.

அந்த உடலின் பலபாகங்கள், விதைகள் உட்பட சேதம் அடைந்திருந்தாலும் ஆண்குறி சேதமடையவில்லை. அதைக் கொண்டு இறந்தவர் சுன்னத் செய்தவர் என்று முடிவுக்கு வந்ததாகப் போலீஸ் கூறியது.   இன்ஸ்பெக்டர் சிதம்பரம் நெல்லையைச் சேர்ந்த காஜ நிஜாமுதீனின் பெற்றோர் போன்ற உறவினர்களை அழைத்து உடலை அடையாளம் காட்டச் சொல்கிறார்.

காஜா நிஜாமுதீனின் தந்தை ஷாகுல் ஹமீத் உடலைப் பார்த்து விட்டு இது தனது மகன் அல்ல என்று உறுதியாகச் சொல்கிறார்.  பின்பு அவர் கேட்டுக் கொண்ட படி காஜா நிஜாமுதீனின் சகோதரர்களான அபுபக்கர், முகமது மொய்தீன் ஆகியோர் உடலைப் பார்த்து அவர்களும் இது காஜா அல்ல என்று சொல்லி விடுகின்றனர்.

பின்பு இந்தக் குடும்பத்தினர்  அந்த உடலின் பாகங்களை எடுத்து தங்கள் ரத்த மாதிரியுடன் டிஎன் ஏ டெஸ்ட் செய்யும்படி நீதிமன்றத்தில் மனு செய்து கொள்கின்றனர்.  நீதிமன்ற உத்தரவின்படி ஹைதாராபாத்தில் உள்ள சென்ட்ரல்  லேப்பை சேர்ந்த டாக்டர் ராவ் என்பவர் சென்னை வந்து இந்த மாதிரிகளை எடுத்துச் செல்கிறார்.

அதே நேரம் காரைக்காலில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில்  உடலின் மண்டையோட்டையும் காஜா நிஜாமுதீனின் படத்தையும் வைத்து சூப்பர் இம்போசிசன் டெஸ்ட் செய்யப்படுகிறது. இந்த டெஸ்ட்டில் உறுதியான முடிவுகள் கிடைப்பதில்லை.

14.3.1996 அன்று ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலார் பயாலஜி லேப்பில் இருந்து அறிக்கை வருகிறது. அதில் இறந்து போனவர் காஜா நிஜாமுதீந்தான், அவரது உடல் சாம்பிள்களும், அவரது பெற்றோரின் ரத்த மாதிரிகளில் உள்ள டி என் ஏவும் ஒத்துப் போகின்றன என்று முடிவு வருகிறது.

இந்நிலையில்  26.11.1998  அன்று வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட  ஏர்வாடி காசிம் என்பவர், இறந்து போனவர் காஜா நிஜாமுதீன் அல்ல, காஜா நிஜாமுதீன் உயிருடன் இருக்கிறார் என்று வாக்குமூலம் அளிக்கிறார். இறந்து போனவர் முஸ்தபா ரசாதிக் என்கிறார் ஏர்வாடி காசிம். ஆடிப் போன போலீஸ் விசாரித்து காஜா நிஜாமுதீன் உயிருடன் இருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கொள்கிறது. மூன்று ஆண்டுகள் ஓடிவிடுகின்றன. அந்த உடல் யாராலும் வாங்கப் படாமல் பிணக்கிடங்கிலேயே கிடக்கிறது.

30.11.1998 அன்று காவல்துறை அந்த அடையாளம் தெரியாத உடல் யாரென்று யாருக்காவது தெரியுமா என்று கேட்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறது.    உடலைத் தொடர்ந்து பாதுகாத்து வரும்படி போலீஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கேட்டுக் கொள்கிறது.

இந்நிலையில்   இறந்து போனதாகச் சொல்லப்பட்ட காஜா நிஜாமுதீன் மும்பையில் கைது செய்யப்பட்டு 99 ஆம் ஆண்டு  சென்னை கொண்டுவரப்படுகிறார்.

இந்நிலையில்   11.3.2002 அன்று போலீஸ் காஜா நிஜாமுதீன் மற்றும் முஸ்தபா ரஸாதிக் இருவரின் குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளையும் சேகரித்து இன்னொரு டெஸ்ட்டுக்கு ஏற்பாடு செய்கிறது.    அவை ஹைதராபாத்துக்கு அனுப்பப்படுகின்றன. போலீஸ் திரும்பவும் அந்த உடலைப் பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறது. இப்போது அந்த உடல் முஸ்தஃபா ரஸாதிக் என்று அழைக்கப்படுகிறது.

போலீஸ் அந்த உடலை வைத்துப் பல்வேறு சோதனைகள் செய்கிறது. ஏதேதோ சோதனைசாலைகளுக்கு அனுப்புகிறது. பதினான்கு ஆண்டுகள் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்ததால் உடல் இறுகி உறைந்து ஒரு கட்டை போலாகிவிடுகிறது. உடல் யாரென்று தெரியாமல் வழக்கு விசாரணையை முடிக்க முடியாமல் அதுவும் இழுத்துக் கொண்டு செல்கிறது.

இதற்கிடையில் இன்னும் சில ஆண்டுகள் ஓடிவிடுகின்றன. 2008 ஆம் ஆண்டு அந்த உடலை இதற்கு மேல் வைத்திருக்க முடியாது என்று மருத்துவக்கல்லூரி கூறுகிறது. ஏற்கனவே குண்டுவெடிப்பில் சிதிலமடைந்திருந்த உடலானது பதினான்கு ஆண்டுகளாக உறைநிலையில் வைத்திருந்தால் இறுகி ஒரு கோடுபோலாகிவிட்டிருக்கிறது. போலீஸ்  உடலை பல படங்கள் எடுத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் சுடுகாட்டுக்கு சென்று முஸ்லிம் முறைப்படை அடக்கம் செய்ததாகச் சொல்கிறது.

இல்லை, பொது சுடுகாட்டுக்கே கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். இந்த உடல் யாருடையது என்று போலீஸுக்குக் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதமாகும். வேறு பல சிக்கல்களும் இந்த வழக்கில் வந்தன. அந்த இடம் இந்து முன்னணி அலுவலகம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற வாதம் எதிரிகள் தரப்பால் முன்னெடுக்கப்பட்ட்து. உண்மையில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. சாட்சிகளின் வாய்மொழி சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு  நீதிபதி அது இந்து முன்னணி ஊழியர்கள் வந்து போகும் இடம் என்பது நிரூபிக்கப்பட்டதால் அலுவலகம் என்ற முடிவுக்கு வருகிறார்.

ஆனால்  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இருபத்தி ஏழு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்படுகின்றனர்.

சரி, டி. என். ஏ. டெஸ்ட் எடுத்து அறிக்கை கொடுத்த ஹைதராபாத் சோதனைச் சாலை?

குறிப்பு

THE SESSIONS COURT FOR EXCLUSIVE TRIAL OF BOMB BLAST CASES CHENNAI AT POONAMALLEE, CHENNAI56  S.C. No.1/2012 என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்புரை [PRC No. 88/2011 on the file of XIV Metropolitan  Magistrate’s Court,  Egmore, Chennai  in  F1 Chintadripet P.S. Cr.No.581/1995] (CNR No.TNCH060000012012)