‘லா… லாலலா… லாலலா… லால்லால்லா’
இது ஏதோ மழலைமொழி என்று நினைத்தால் உங்களுடைய வயது நாற்பதுக்கும் கீழே.
மாறாக –
இது ‘லிரில் ராகம்’ என்று உணர்ந்து, மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தால்… நீங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தைகளால் அங்கிள் என்றோ ஆண்ட்டி என்றோ அழைக்கப்படும் நடுத்தர வயதைக் கடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மறக்க முடியுமா அந்த லிரில் கேர்ளை?
எலுமிச்சை பச்சை நிறத்தில் பிகினி அணிந்த இளம்பெண். சில்லென்று கொட்டித் தீர்க்கும் காட்டாற்று அருவியில் குதியாட்டம் போடுகிறாள். பின்னணியில் ‘லா… லாலலா… லாலலா… லால்லால்லா’ என்று மனசை மயக்கும் ஹம்மிங். லிரில் சோப்பின் புத்துணர்ச்சியை அனுபவிக்க வாருங்கள் என்கிற அழைப்போடு முடியும் அந்த நாற்பத்தியேழு நொடி டிவி விளம்பரம்.
டிவியிலும், சினிமா இடைவேளைகளிலும் இந்த விளம்பரத்தை கண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் குளிக்காமலேயே புத்துணர்ச்சியை அடைந்தார்கள். லிரில் சோப்பின் வாசனையை சுவாசித்தார்கள். இளசுகள் விசில் அடிப்பார்கள். பெருசுகள் விழிவிரிய ஆச்சரியத்தோடு ரசிப்பார்கள்.
காரணம், அந்த லிரில் கேர்ள்.
கரேன் லூனல்.
விளம்பரத்தை ரசித்து முடித்ததுமே, அப்போதெல்லாம் இல்லத்தரசிகள் ‘உச்சு’ கொட்டுவார்கள்.
“பாவம். இந்தப் பொண்ணு விளம்பர ஷூட்டிங் முடிஞ்சதுமே அந்த அருவிலேயே அடிச்சிக்கிட்டுப் போயிட்டாளாம்.”
நாடே அப்படிதான் நம்பியது.
லிரில் கேர்ள், அதே அருவியிலேயே அடித்துக்கொண்டு போய் இறந்துவிட்டார் என்று. இன்றும் கூட ஐம்பதைக் கடந்த அம்மா, அப்பாக்களிடம் விசாரித்துப் பாருங்களேன். இதையேதான் சொல்வார்கள்.
லிரில் கேர்ளை சாக்கிட்டு லேசாக இந்திய விளம்பர உலகில் நிகழ்ந்த அந்த மகத்தான மக்கள் தொடர்பு புரட்சியை அறிந்து கொள்வோம்.
- இந்தியர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துக் கொண்டிருந்தது. விரிவடைந்து கொண்டிருந்த இந்தியச் சந்தையில் கடை விரிக்க ஏராளமான நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தன. நுகர்வோரின் தேவையை ஈடு செய்ய புதுசு புதுசாக சொகுசுப் பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு FMCG (fast moving consumer goods) நிறுவனங்கள் ஆட்பட்டன.
ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் ப்ரீமியம் வகை குளியல் சோப்பு ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. ஏற்கனவே ரெக்ஸோனா, லக்ஸ், லைஃபாய் என்று ஏகப்பட்ட ரகங்கள் இருந்தன. செங்கல்கூட நீரில் கரையும், அந்தக் காலத்து லைஃப்பாய் கரையவே கரையாது.
ப்ரீமியம் வகை சோப்பாக அந்த நிறுவனத்திடம் இருந்தது பியர்ஸ்தான். விலை சற்றே அதிகம் என்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டிய தேவை ஏற்படும். வெயில் காலங்களில் யாரும் பியர்ஸ் வாங்க மாட்டார்கள்.
ரெக்ஸோனாவுக்கும், பியர்ஸுக்கும் இடையில் எலுமிச்சை புத்துணர்ச்சியைத் தரும் சோப்பாக லிரிலை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். எலுமிச்சைதான் கோடைக்காலத்தில் புத்துணர்வு தரும் என்பது இந்தியர்களின் மரபான நம்பிக்கை.
‘லிண்டாஸ்’ என்கிற விளம்பர நிறுவனத்திடம் இந்த சோப்பைப் பிரபலப்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது. மார்க்கெட்டில் இதை கொண்டு செல்வதற்கு முன்பாக சில ஆய்வுப்பணிகளை லிண்டாஸ் மேற்கொண்டது.
அதில் வெளிவந்த முக்கியமான பாயிண்ட் இதுதான். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியப் பெண்மணி மூன்று புறம் சுவர், ஒரு புறம் கதவு மூடிய குளியலறைக்குள் ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் மட்டுமே செலவழிக்கிறாள். மீதி நேரம் சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் கழிகிறது. குளியலுக்காக அவள் செலவழிக்கும் பத்து நிமிடம்தான் ஒரு நாளில் அவளுக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச அந்தரங்கத் தருணமாக இருக்கிறது. அந்தப் பத்து நிமிடங்களை ஒவ்வொரு நாளும் அவள் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறாள்.
இந்த பாயிண்டைப் பிடித்துக் கொண்டது லிண்டாஸ். ‘சுதந்திரமான குளியல்’ என்று பெண்களை டார்கெட் செய்து, லிரிலுக்கு விளம்பரங்களை உருவாக்க வேண்டுமென்கிற ஐடியாவுக்கு மெனக்கெட்டார்கள். ‘டார்ஜான்’ படங்களில் டார்ஜானும், அவளுடைய கேர்ள் ஃப்ரண்ட் ஜேனும் இயற்கை எழில் சூழந்த அருவியில்தான் குளிப்பார்கள். இதைவிட சுதந்திரமான குளியல் வேறு இருக்க முடியுமா? இங்கிருந்துதான் அருவியில் குளிக்கும் பெண் என்கிற கான்செப்ட் உருவாகிறது.
அடுத்ததாக அருவியில் ‘தாராளமாக’ குளிக்க சம்மதிக்கக்கூடிய பெண் வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘பிகினி’ ‘கிகினி’ என்றால் சுளுக்கெடுத்து விடுவார்கள். இப்போதே கூட ஆரஞ்ச் பிகினி என்றால் அலறுகிறார்கள் பாலிவுட் நடிகைகள்.
மேலும் –
இந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டிய பெண்ணுக்கு இதுமாதிரி சுதந்திரக் குளியலில் ஈடுபாடு இருக்க வேண்டும். அருவிநீர் தலையில் கொட்டும்போது கண்களை மூடிவிடக்கூடாது. நல்ல உயரமான பெண்ணாக இருந்தால்தான் விளம்பரங்களில் எடுபடும்.
நாடெங்கும் சல்லடை போட்டுத் தேடினார்கள். மும்பையில் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் சேல்ஸ் கேர்ள் ஒருவர் அம்சமாக இருப்பதைக் கேள்விப்பட்டு, அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்கள்.
அவர்தான் கரேன் லூனல். சொந்த ஊர் பெங்களூர். மாடலிங் ஆர்வத்தில் மும்பைக்கு வந்தார்.
தயங்கித் தயங்கித் கேட்டார்கள்.
“பிகினி அணிந்து நடிக்க சம்மதமா?”
“பீச்சுக்குப் போனால் அதைத்தான் அணிவேன். அதை அணிந்து ஒரு விளம்பரத்தில் நடிக்க எனக்கென்ன பிரச்சினை. நான் யார் என்பது எனக்குத் தெரியும் எனும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை.”
கரேன் நிறைய தத்துவம் பேசுவார் என்று தெரிந்தது. அதே நேரம் ‘எதற்கும்’ துணிந்திருக்கிறார் என்றதுமே, அவருக்கான துணியான ‘பிகினி’யைக் கொடுத்து ஷூட்டிங்குக்கு அள்ளிக்கொண்டு சென்றார்கள்.
மகாராஷ்டிராவில் இருக்கும் ‘கண்டாலா’ என்கிற ஊர் அருவியில்தான் விளம்பரங்களைப் படம் பிடித்தார்கள். குளிரில் நடுங்கி, சரியான ரியாக்ஷன் கொடுக்க முடியாமல் சிரமப்படுவார் கரேன். இதைச் சமாளிக்க லைட்டாக ‘பிராண்டி’யையோ, ‘ரம்’மையோ ஒரு கட்டிங் போடுவார். லிண்டாஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த விளம்பர ஜாம்பவான் பதம்ஸீ வேடிக்கையாக இதைக் குறிப்பிடுவார். “அவளது கண்களில் தெரிந்த குறும்புத்தனம் லிரில் சோப்பு போட்டுக் குளித்ததாலா அல்லது மதுவின் விளையாட்டா என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.”
‘சுதந்திரக் குளியல்’ விளம்பரங்கள் சக்கைப்போடு போட, லிரில் சோப் சந்தையில் அடுத்த ஓராண்டுக்குள்ளேயே நெம்பர் ஒன் இடத்துக்கு வந்தது. அடுத்த பத்தாண்டுகளுக்கு ‘லிரில் கேர்ள்’ ஆக கரேனே தொடர்ந்தார்.
பிளாக் & ஒயிட்டில் இருந்த டிவி வண்ணத்துக்கு மாறும்போது, இன்னும் கூடுதல் கவர்ச்சி விளம்பரத்துக்கான தேவை ஏற்பட்டது. ஏற்கனவே விளம்பரங்கள் எடுத்துக் கொண்டிருந்த கண்டாலா அருவியைவிட நல்ல லொக்கேஷன் தேடினார்கள்.
கடைசியாக நம்மூர் கொடைக்கானலில் பாம்பாற்று அருவி மாட்டியது. அங்கே எடுக்கப்பட்ட விளம்பரம்தான் நாம் டிவியில் பார்த்துப் பல்லாண்டுகளாக ரசித்ததும், இன்றும் யூட்யூப் போன்ற இணையத்தளங்களில் பல லட்சம் பேர் ரசித்துக் கொண்டிருப்பதும். லிரில் விளம்பரம் எடுக்கப்பட்டதாலேயே அந்த அருவி இன்றுவரை ‘லிரில் அருவி’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
கரேனுக்குப் பிறகு ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, பூஜா பத்ரா, தாரா ஷர்மா என்று நிறைய லிரில் கேர்ள்ஸ் வந்துவிட்டார்கள். ஆனால் இன்றுவரை கரேனுக்கு இணையே இல்லை.
சரி. கதைக்கு வருவோம்.
கொடைக்கானல் படப்பிடிப்பில் அருவி வெள்ளத்தில் கரேன் லூனால் அடித்துச் செல்லப்படவில்லை என்பதால், அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது வெறும் வதந்தி.
ஆனால் –
1980ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் கிட்டத்தட்ட மரணத்துக்கு அருகே சென்று திரும்பினார். தன்னைப் பற்றிய வதந்தி உண்மையாகி விடுமோ என்றுகூட நினைத்தாராம் கரேன்.
மாடலிங்கில் இவருக்குக் கிடைத்த புகழின் காரணமாக இடையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஆகப் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பயணிகள் எல்லோருமே “லிரில் பெண் தானே நீ?” என்று கேட்டு, ஆட்டோகிராப் வாங்குவார்களாம். ஒருமுறை பிரதமர் ராஜீவ்காந்தி பயணத்தின் போது இவரை அடையாளம் கண்டுகொண்டு கைகுலுக்கி வாழ்த்தி இருக்கிறார்.
அந்த பிரபலமான டிவி கமர்ஷியலுக்குப் பிறகு தொடர்ச்சியாக இவர் மாடலிங் துறையில் ஈடுபடவில்லை. ஏனெனில் மும்பையில் அப்போது நடந்த விபத்து ஒன்றின் காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட தையல்கள் இவரது முகத்திலும், உடலிலும் போடப்பட்டது. லிரில் விளம்பரத்துக்குப் பிறகு அவரை எங்கும் காணமுடியாத விரக்தியில் யாரோ ஒரு ரசிகர் கற்பனையாகக் கட்டிவிட்ட வதந்திதான் அருவியில் அடித்துச் சென்று மரணம்.
ஏர் ஹோஸ்டஸாக இருந்தபோது தஷி என்கிற திபெத்தியரை விமானப் பயணத்தில் சந்தித்தார். கண்டதும் காதல். ஐந்து ஆண்டுகள் காதலித்துவிட்டு 1985ல் திருமணம் செய்து கொண்டார். கரு தரித்ததுமே விமானப் பணிப்பெண் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். ஒரே மகன் ஸ்காட்.
பின்னர் டைம்ஸ் எஃப்.எம்.மில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிபெண்களுக்குப் பயிற்சியாளராக இருந்தார். தற்போது நியூசிலாந்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டே, குடும்பத்தோடு சகல செளபாக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்.