சார்லஸ் சிமிக் 1938-ல் பிறந்தவர். இயற்பெயர் டுஸன் சிமிக். அந்நாளைய யுகோஸ்லாவியாவில் பிறந்த செர்பியர்.போர்த் துயரங்கள் மண்டிய ஐரோப்பாவில் கழிந்த குழந்தைப் பிராயம், அவரது உலகப் பார்வையை வடிவமைத்தது. சிமிக்கின் பதினாறாவது வயதில் குடும்பம் அமெரிக்காவில் குடியமர்ந்தது. ‘புலம் பெயர்க்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாக இருக்க நேர்ந்தது என்னை பாதித்தது. துரதிர்ஷ்டம் நிரம்பியதான என்னுடைய குட்டிக்கதையோடு, மற்றவர்களின் கதைகளும் ஏகப்பட்டவை கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குப் பார்க்கக் கிடைத்த கீழ்மையையும் முட்டாள்தனத்தையும் இன்னமும் வியந்துகொண்டேயிருக்கிறேன்’ என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார். (குறிப்பு உதவி: விக்கிபீடியா)

சார்லஸ் சிமிக்கின் உரைநடைக் கவிதைகள் இவை. 1990–இல் அவருக்கு புலிட்ஸர் பரிசை ஈட்டிக்கொடுத்த, ‘உலகம் முடிவதில்லை’ என்ற தொகுப்பில் உள்ளவை. உருவத்துக்குக் கட்டுப்பட்டதல்ல கவிதை என்பதை இன்னொரு முறை நிறுவிக்காட்டுபவை. மேற்சொன்ன தொகுப்பை, முழுமையாக மொழிபெயர்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியவை.

உலகெங்கிலும் உள்ள கவிஞர்களுக்கு இப்படியொரு ஒரு தினவு இருக்கிறது – தங்கள் மொழியில் சமகாலத்தில் நிலவும் கவிதை உருவங்கள் போதுமானதாக இல்லை என்று. தமிழில் பாரதியின் வசனகவிதையை நினைவுகூரலாம். இலக்கணத்தைத் துறந்தபோதும் தாளத்தையும் சந்தத்தையும் துறக்க முடியாதிருப்பதன் அழுத்தத்தை வசனகவிதைகளின் மூலம் பாரதி தீர்த்துக்கொண்டார் எனலாம்.

சொல்லப்பட்ட அனுபவங்களை அலங்காரமாக மீண்டும் சொன்னாலே போதும்; பொதுவெளியில் உலவும் கருத்துக்கள் மற்றும் எதிர்க்கருத்துக்களை நவீன கவிதைக்காகத் தமிழில் உருவாகி வந்திருக்கும் மொழியில் எடுத்துச் சொன்னாலும் போதும்; எந்நேரமும் துயரத்தின் விளிம்பில் நின்று புகார் சொல்லிக்கொண்டிருந்தால் போதும் என்கிற மாதிரி உருவாகிவரும் புதிய இலக்கணங்களின் பிரகாரம் தமிழ் நவீன கவிதை புதுவகைச் செய்யுளாக மாற முயலும் காலகட்டம் இது.

கவித்துவமான தருணங்களை அல்ல, முழுமையான கவிதானுபவத்தையே வசனநடையின் வழி கடத்தித் தர முடியுமா என்று அநேகர் முயன்று பார்த்திருக்கிறார்கள்.

உரைநடை என்னதான் கவித்துவமும் அலங்காரமும் பிணைந்த மொழியில் எழுதப்பட்டாலும், நுட்பமான வாசகமனம் உரைநடைக்கும் கவிதைக்குமான வேறுபாட்டை உணர்ந்தபடியேதான் இருக்கிறது.

சிமிக்கின் முயற்சிகளும் அவ்விதமானவையே. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கவிதானுபவங்களையும் தாண்டிச் செல்ல முயல்கிறார். ப்ளைன் பொயெட்ரி என்று அழைக்கப்படும் வகைமைக்கு (தமிழின் மகத்தான உதாரணம் நகுலன்) உதாரணமான கவிதைகள் இவை.

உணர்ச்சிகரமாகவோ, தத்துவ விசாரமாகவோ முன்னிற்காத வரிகள். முழுமையான காட்சியும் அதில் ஊடுருவும் மர்மமும் என நடைமுறை உலகத்தின் தர்க்கத்தை மீறிய மாயம் செயல்படும் வரிகள். இவற்றில் இடம்பெறும் சில படிமங்கள் விபரீதமானவை. வாசக மனத்தின் போதநிலையை ஸ்தம்பிக்கச் செய்பவை. ஆயினும், எதிர்மறையாய் மிரட்டாத வசீகரம் கொண்டவை.

1
நாடோடிக் கூட்டம் என்னைத் திருடிப் போனது. உடனடியாக என் பெற்றோர் என்னைத் திருடி மீட்டனர். நாடோடிகள் என்னை மீண்டும் திருடினர். இப்படியே நடந்துவந்தது கொஞ்சநாள். ஒரு நிமிடம் வரிசை வண்டிக்குள் இருப்பேன் – என் புதுத் தாயின் கறுத்த முலைக்காம்பை உறிஞ்சியபடி; மறு நிமிடம் நீண்ட உணவறை மேசையில் வெள்ளிக் கரண்டியால் என் காலையுணவை உண்டவாறிருப்பேன்.

வசந்தத்தின் முதல் நாள் அது. என்னுடைய தகப்பன்களில் ஒருவர் குளியலறைத் தொட்டிக்குள் பாடிக்கொண்டிருந்தார். மற்றவர், வெப்பதேசப் பறவையின் நிறங்களை, உயிருள்ள குருவிக்குப் பூசிக்கொண்டிருந்தார்.

2
சூடான நீராவி இஸ்திரிப்பெட்டியால் என்னை மிருதுவாக நீவுகிறாள் அவள் அல்லது செப்பனிட வேண்டிய காலுறைக்குள்போல எனக்குள் தன் கரத்தை
நுழைக்கிறாள். அவள் பயன்படுத்தும் நூல் என் குருதியின் தாரைபோல இருக்கிறது, ஆனால் ஊசியின் கூர்மை அவளுடையதேதான்.

“கண்களைக் கெடுத்துக்கொள்வாய், ஹென்ரீட்டா, எவ்வளவு மங்கலான வெளிச்சம்” என்று எச்சரிக்கிறாள் அவளது தாய். அவள் சொல்வது சரிதான்! உலகம் தோன்றிய நாள்முதல் இத்தனை குறைவான வெளிச்சம் இருந்ததே இல்லை. எங்கள் குளிர்காலப் பின்மதியங்கள் சில சமயம் நூற்றாண்டுக் காலத்துக்கு நீடித்ததாகத் தகவல் உண்டு.

3
நாங்கள் மிகமிக வறியவர்களாய் இருந்தோம்; எலிப்பொறியில் ஈர்க்கும் இரையாக நான் இருக்கவேண்டிய அளவு. நிலவறையில் தனியாய்க் கிடந்தபோது, மேற்
தளத்தில் அவர்கள் இங்குமங்கும் நடப்பதும், படுக்கைகளில் உருள்வதும் புரள்வதும் எனக்குக் கேட்டது.” இருளும் தீமையும் அடர்ந்த காலம் இது” என்று என் காதை மெல்லக் கொரித்த சுண்டெலி சொன்னது. ஆண்டுகள் கடந்தன. பூனைமயிர்க் கழுத்துப்பட்டி அணிந்திருந்தார் என் அம்மா. அதை அழுத்தித் தடவிய
வாறிருந்தார் – அதிலிருந்து எழுந்த பொறிகள் நில வறைக்கு ஒளியூட்டும்வரை.

4
”டாக்டர். ஃப்ராய்டுக்கும் எனக்குமான விவகாரம் எல்லாருக்கும் தெரியும்” என்கிறார் என் பாட்டனார். “ஒரே ஜோடிக் கறுப்பு ஷூக்களின் மேல் மோகம் கொண்டிருந்தோம் இருவரும். காலணிக் கடையின் கண்ணாடிப் பேழையில் இருந்தன அவை. துரதிர்ஷ்டவசமாக, கடை எந்நேரமும் மூடியிருக்கும். ‘குடும்பத்தில் மரணம்’ என்றோ, ‘மதிய உணவுக்குப் பிறகு திறக்கப் படும்’ என்றோ அறிவிப்பு தொங்கும். ஆனால், நான் எவ்வளவுதான் காத்திருந்தாலும், திறக்க ஆள் வந்ததில்லை.

“ஒருமுறை, டாக்டர்.ஃப்ராய்ட் வெட்கமின்றி அந்த ஷூக்களிடம் சொக்கிக் கிடந்ததைப் பார்த்துவிட்டேன். ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்தோம். பிறகு அவரவர் வழியில் போனோம். பின்னர் சந்திக்கவே யில்லை.”

5
தான் ஏற்கனவே இறந்துவிட்டதாக நம்பும் சாம்பல்நிற யுவதியைச் சக்கரவண்டியில் நகர்த்திவந்தார்கள் – ஈட்டி அழி வேலி கொண்ட மனநலக் காப்பகத்தின் தோட்ட வெளிக்கு. அவள் பெயர் ஆமியோ, ஆன்னோ. இரண்டில் எதைச் சொல்லிக் கூப்பிட்டாலும் அவள் பதிலளிக்க வில்லை. விழிகளை இறுக மூடியிருந்தாள். வெள்ளுடை அணிந்த செவிலி அவளைத் தள்ளிவந்தாள்.

இவற்றில் சில தகவல்களை, நடுங்கியவாறிருந்த இளைஞன் ஒருவன் எனக்குச் சொன்னான். வருடக்கணக்காக மழை பெய்துகொண்டிருக்கிறது, வீட்டின் உள்ளே
கூட, என்று அழுத்திச் சொன்னான். “மிக மிகக் கடுமையான மழை” என்றான் அவன்.

6
காலம் என்பது – சூரிய வெளிச்சத்தில் இருக்கும் பல்லி. நகர்வதில்லை; ஆனால் அதன் கண்கள் அகலத் திறந்திருக்கின்றன. நம் முகங்களை உற்றுப் பார்க்கவும் நமது சொல்லாடல்களைச் செவிமடுக்கவும் மிகவும் விரும்புகிறவை.

காரணம் என்னவென்றால், ஆதியில் இருந்த மனிதர்கள் பல்லிகளே. என்மீது நம்பிக்கை இல்லையென்றால், போய் ஒரு பல்லியின் வாலைப் பிடித்துத் தூக்கிப் பார், வால் உடனடியாய்க் கையோடு வந்துவிடும்.

7
தூக்குமேடையிலிருந்து இறங்கிவருகிறான் இறந்தவன். ரத்தம் தோய்ந்த தலையை அக்குளில் இடுக்கியிருக்கிறான்.

ஆப்பிள் மரங்கள் பூத்திருக்கின்றன. கிராமத்தின் யாத்ரீக விடுதி நோக்கிப் போகிறான் அவன். எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கேயுள்ள மேசை ஒன்றினருகில் அமர்கிறான். இரண்டு பியர் கொண்டுவரச் சொல்கிறான் – தனக்கு ஒன்று, தன் தலைக்கு ஒன்று. தனது கவசத்துணியில் கையைத் துடைத்துக்கொள்கிறாள் என் அம்மா. அவனுக்குப் பரிமாறுகிறாள்.

உலகம் வெகு அமைதியாய் இருக்கிறது. பழைய ஆற்றின் ஒலியைக் கூடக் கேட்க முடியும். அது சில சமயம் குழம்பி, மறந்துபோய், வந்தவழியே திரும்பிப் பாய்கிறது.