“Share market and Money market பெரிய வித்தியாசம் இல்ல. இதுல share-க்குப் பதிலா Government securities, BSE Bonds, Unit இதுல எல்லாம் கொடுக்கல் வாங்கல் நடக்கும். எந்த ஒரு கம்பனியுடைய share-ரோட சரியான புரிதல் புரோக்கருக்குத்தான் இருக்கும். அந்த மாதிரிதான் Money market. எந்த பேங்குக்கு எப்போ செக்யூரிட்டீஸ் தேவை, அது எங்கிருந்து கிடைக்கும் என எல்லாமே புரோக்கருக்குத் தெரிஞ்சுருக்கும். நம்ம வேலை டிமாண்ட் அண்ட் சப்ளையை மேனேஜ் பண்றது. Money market-ல ஒவ்வொரு ட்ரான்ஸாக் ஷன்லயும் ரொம்ப முக்கியமான டாக்குமெண்ட் SGL Note-தான் (SGL – Subsidiary General Ledger). உதாரணத்திற்கு உங்கிட்ட இருந்து நான் 1000 யூனிட் வாங்குறேன். நீங்க அதுக்குப் பதிலா எனக்கு SGL Note குடுக்குறீங்க, அந்த SGL-ல நான் RBI-யோட PDO அதாவது, Public Dept Office-ல deposit பண்ணமுடியும். PDO-கிட்ட உங்க எல்லா யூனிட்ஸோட கணக்கும் இருக்கும்.
புரோக்கர்ஸ், பேங்க் எல்லாருக்கும் அதிகப்படியா பிஸினஸ் பண்ணனும். அவங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னா? SGL-ன்னால transaction ரொம்ப slow ஆகுதாம். நாம SGL-க்குப் பதிலா BR-ர use பண்ணப் போறோம் (BR – Bank Receipt). Bank transaction, SGL இல்லாம நடக்கலாம். எந்த central authority-யும் இல்ல. ஒரு பேங்க் இன்னொரு பேங்க்குகிட்ட securities-ஸ விக்கும். அதுக்கு simple-லா ஒரு receipt-தான் குடுப்பாங்க. அது எதுக்குன்னா securities எங்ககிட்ட இருக்குன்றதுக்கான ஆதாரம்….”
இவ்வளவு நேரம் சொன்னது உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லை என்றால் கவலைப்படவேண்டாம். 1992-இல் நடந்த பங்கு மார்க்கெட் ஊழலை விசாரித்த சிபிஐ அதிகாரி மாதவனுக்கே இவை எல்லாம் என்னவென்று புரியாமல் குழம்பிப் போனார். SBI அதிகாரிகள், BSE, ஷேர் மார்க்கெட் புரோக்கர்கள் போன்றவர்களுக்குக்கூட நிதிநிலையைக் கையாளுவதில் இத்தனை ஓட்டைகள் இருப்பது தெரியவில்லை. RBI கவர்னரும் குழப்பத்தில் இருந்தார். ஒரே ஒருவருக்குத்தான் இத்தனை ஓட்டைகள் இருக்கின்றன, அதைப் பயன்படுத்தி ஐயாயிரம் கோடி (1992-இல்) சம்பாதிக்க முடியும் என்பது தெரிந்திருந்தது. அவர் பெயர் ஹர்ஷத் சாந்திலால் மேத்தா.
நீங்கள் தொண்ணூறுகளில் வாழ்ந்தவராக இருந்தால் உங்களில் பெரும்பாலோர், ‘பங்கு மார்க்கெட் என்ற ஒன்று இருக்கிறது, அதில் கோடிகோடியாகச் சம்பாதிக்கலாம்’ என்பதையே ஹர்ஷத் மேத்தா மூலம்தான் தெரிந்துகொண்டிருப்பீர்கள். ஏனெனில் நான் அப்படித்தான் தெரிந்துகொண்டேன். அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு தனி மனிதனால் 5000 கோடி ஊழல் செய்யமுடியும் என்ற செய்தி எங்களில் பலருக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. பங்கு மார்க்கெட்டுக்கும் பி.காம். பட்டப் படிப்புக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகப் பலர் நம்பினர். என்னோடு பி.காம். படித்தவர்கள் எல்லாம், “நாங்கள் என்ன படிக்கிறோம் தெரியுமா? ராயல் பி.காம்.” எனச் சொல்லிக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டார்கள். இன்றும்கூட பி.காம். பட்டப் படிப்புக்கு மதிப்பு இருக்கிறது என்றால் அதற்கு ஹர்ஷத் மேத்தாவும் ஒரு காரணம். ஏனென்றால் ஹர்ஷத் மேத்தாவும் பி.காம். பட்டதாரிதான். ஒருவர் பணம் சம்பாதித்துவிட்டால் அவரோடு தொடர்புடையதெல்லாம் ஆதர்சமாகிவிடுகின்றன!
1980களில் இருந்து 1990 வரை Employee Provident Fund (EPF) படிப்படியாக உயர்ந்து 12% வரை சென்றது. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து படிப்படியாகக் குறைந்து இன்று 8.1%-இல் வந்து நிற்கிறது. தொண்ணூறுகளில்தான் ONGC, NHPC, IRPC, NTPC, UTI போன்ற நிறுவனங்களில் இருந்த செக்யூரிட்டி பணத்தை எல்லாம் ஷேர் மார்க்கெட்டில் விட்டு சூறையாடினார்கள். ஊழியர்கள் இருந்தால்தானே அவர்கள் நலன்பற்றி யோசிக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதனால், நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்க ஆரம்பித்தனர். தனியார் நிறுவனங்களை வரைமுறையே இல்லாமல் உள்ளே விட்டார்கள். ஓய்வூதியத் திட்டத்தை மாற்றினார்கள். ‘பொதுத்துறை நிறுவனங்களை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதற்குப் பதிலாக ஒரேயடியாக சோலியை முடிக்கிறேன் பார்’ என நினைத்து நிர்மலா சீதாராமன் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காகவே தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். இந்தியாவின் இத்தனை அழிவுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் ஹர்ஷத் மேத்தா!
ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கினால் அந்தந்தப் பகுதி மக்களின் வேலைவாய்ப்பு பெருகும் என நினைத்தார்கள். அவர்களின் வாழ்வாதாரங்களைப் பற்றி யோசித்தார்கள். பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலன்கள் எல்லாம் ஆட்டம்காணத் தொடங்கின. அவர் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்த பணத்தை எல்லாம் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கான வழியை ஏற்படுத்தினார். ஹர்ஷத் மேத்தா அந்தத் தருணத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். 1990-க்கு முன்னால் 1000கூட தாண்டாத BSE Sensex 1992-இல் 4000 sensex-களைக் கடந்து சென்றது என்றால் பணமழை எப்படிப் பொழிந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். கங்கையில் தண்ணீர் வருகிறது என்றதும் ஆளாளுக்குக் குளித்தார்கள். அதன் ரிஷிமூலம் தெரிந்த பிறகு பங்குச்சந்தை ஆட்டம் கண்டது.
1980-களில், மும்பையின் நெரிசல் மிகுந்த பகுதியில் போதவே போதாத மிகச் சிறிய வீட்டில் வசித்த ஹர்ஷத் மேத்தா, பத்தே ஆண்டுகளில் மும்பையின் பிரபலமான Worli தீபகற்பத்தில் 15,000 சதுர அடியில் நீச்சல்குளமும், கோல்ஃப் மைதானமும் அடங்கிய Penthouse வாங்கினார் என்றால் எவ்வளவு பெரிய ஊழல் செய்திருப்பார் என்பதைக் கற்பனை செய்யமுடிகிறது. ஆனால் அவர் மட்டுமா ஊழல் செய்தார் என்று சொல்லமுடியாது. பி.வி. நரசிம்ம ராவ், சந்திராசாமி, SBI மூத்த அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் எல்லாம் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்த பிறகு, ஹர்ஷத் மேத்தாவைத் தப்பிக்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்வதுதான் சரி. ‘My biggest crime is that I am Harshad Mehta’ என்று ஹர்ஷத் மேத்தா தன் வாழ்வின் பின்பகுதியில் கதறினார். வானளாவிய கொடிகட்டிப் பறந்த மனிதன் இறுதியில் ஒரு போலீஸ் ஸ்டேசன் பெஞ்ச்சில் அநாதையாகச் செத்துக்கிடந்தார் என்றால் அந்த சோகத்தை என்ன சொல்வது! ஹர்ஷத் மேத்தாவைப் போல இனி எந்த ஒரு மனிதனாலும் உச்சத்தையும் வீழ்ச்சியையும் சந்திக்க முடியாது என்பதால் அவர் கதை ஒரு காவியத் துயரம்போல் காட்சியளிக்கிறது? அவர் கதை இதுதான்:
1992-ஆம் வருடம், ஒரு நாள் காலையில் மும்பையின் தலைமை SBI அலுவலகத்திலிருந்து ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு வருகிறார். அந்நாளிதழின் வணிகப் பகுதியில் செய்திகள் எழுதும் சுசித்தா தலால் என்பவரிடம் அதிர்ச்சி தரும் ரகசியமான ஒரு தகவலைச் சொல்கிறார். “மிகப் பெரிய அநியாயம் நடக்குது மேடம், SBI-யில எந்தக் கணக்கும் இல்லாம ஹர்ஷத் மேத்தாவுக்கு 500 கோடி ரூபாய் குடுத்துருக்காங்க, இதப் பத்தி எழுதுங்க மேடம்” எனச் சொல்லிவிட்டுச் சிட்டாய் மறைந்து போகிறார். யார் இந்த ஹர்ஷத் மேத்தா? எந்தக் கணக்கு வழக்கும் இல்லாமல் தனிநபர் ஒருவருக்கு எப்படி 500 கோடி ருபாய் பணம் கொடுப்பார்கள்? என்ற விசாரணையில் தொடங்குகிறது கதை.
எண்பதுகளில், ஹர்ஷத் மேத்தா மும்பையின் நெருக்கமான பகுதியில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார், “ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று வடிவேல் சொல்கிறார் இல்லையா? இதை அவருக்கு முன்னால் சொல்லியவர் ஹர்ஷத் மேத்தா. “Risk hai toh ishq hai” (ஒன்றை அடைய விரும்பினால் ரிஸ்க் எடுக்க வேண்டும்). அதனால் தொடக்கத்தில் பல வேலைகளைப் பார்த்துவிட்டு, கடைசியாக ஷேர் மார்க்கெட்டில் ஜோப்பர் (Jobber) வேலைக்குச் சேருகிறார். அது ஷேர் புரோக்கர் வேலை. Mumbai Stock Exchange (BSE) அலுவலகத்தில் நின்று பங்கு மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப, பங்குகளை வாங்கி விற்க வேண்டும். ஹர்ஷத் மேத்தாவிடம் இருக்கும் பழக்கம் தொடக்கத்தில் எவ்வளவு தடுமாறினாலும், மிக விரைவில் அதற்குள் இருக்கும் சூட்சுமத்தைக் கண்டுபிடித்துவிடுவார். அதனால்தான் பிற்காலத்தில் அவரைப் பங்கு மார்க்கெட்டின் ஐன்ஸ்டின் என அழைத்தனர்.
ஹர்ஷத் மேத்தா வெறுமனே பங்குகளை வாங்கி விற்காமல் சம்பந்தப்பட்ட கம்பெனி நிலவரங்களை அங்கிருக்கும் ஆட்களை வைத்து நோட்டம் விட்டார். அங்கு உற்பத்தி எவ்வளவு? போராட்டம் நடக்கப் போகிறதா? விற்பனை சரியப் போகிறதா? என எல்லாத் தகவலும் முன்கூட்டியே சொல்வதற்கு ஆட்களை
ஏற்பாடு செய்துகொண்டார். எந்த நிறுவனத்தின் உள்விவகாரங்கள் பற்றிய தகவல்கள் அவருக்குக் கிடைக்குதோ அந்த நிறுவனத்தின் பங்குகளை மட்டுமே குறி வைப்பார். ஒருவேளை கிடைக்கும் தகவல்கள் நிறுவனத்துக்கு எதிரானதாக இருந்தால் அந்த ஷேர்களைக் குறைவான விலைக்கு விற்பார். ஓரிரு நாளில் நிறுவனம் பற்றி நியூஸ் வரும். அப்போது ஷேர்களின் விலை இன்னும் இறங்கும். அப்போது அந்த ஷேர்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவார். எப்போது ஏற்றம் காண்கிறதோ அப்போது விற்பார். ஒருவேளை ஒரு நிறுவனத்தைப் பற்றிய நல்ல செய்திகள் வந்தது என்றால் அந்த ஷேர்களை corner பண்ணுவார். நியூஸ் வரும்போது அந்த நிறுவனத்தின் ஷேர்கள் இன்னும் அதிக விலைக்கு விற்பனை ஆகும். அப்போது விற்றுவிடுவார். அதாவது ஒரு நிறுவனம் லாபம் அடைகிறதோ அல்லது நஷ்டம் அடைகிறதோ அதைப் பற்றி ஹர்ஷத்துக்கு எந்தக் கவலையும் இருக்காது. அவருக்கு Profit-க்கு மேல் Profit கிடைத்துக்கொண்டே இருக்கும். ஹர்ஷத் மேத்தா பங்கு வர்த்தகத்தில் சில நேரங்களில் Bear-ஆக இருப்பார். முக்கால்வாசி நேரம் Bull-ஆக இருப்பார்.
உழைப்பு நம்மளது, மூளை நம்மளது. ‘‘அப்போ பணமும் நம்மளோடதான?” என்ற கேள்வி ஹர்ஷத்துக்கு எழுந்த பிறகு, அடுத்தவர்களுக்காக வேலை செய்யாமல் அவருக்காக வேலை செய்யத் தொடங்குகிறார். பெரிய பங்குகளில் கவனத்தைச் செலுத்தாமல், ஆல்வார் ஃபார்மா என்ற யாருமே கண்டுகொள்ளாத பங்குகளை வாங்குகிறார். அதன் விலை வெறும் 5 ரூபாய்தான். மார்க்கெட்டில் ஆல்வார் ஃபார்மா பற்றி ஆஹா ஓஹோ என்று வதந்திகளைப் பரப்பி விடுகிறார். மார்க்
கெட்டில் வதந்திகளைப் பரப்பிவிட்டு லாபம் பார்ப்பதில் ஹர்ஷத் கில்லாடி. வதந்திகளைக் கேட்டதும் பசியோடு இருக்கும் டீலர் கூட்டங்கள் ஹர்ஷத்தைத் தேடி வருகிறார்கள். மிகச் சரியான நேரத்தில் profit அடித்துவிட்டு மார்க்கெட்டில் மறுபடியும் ஷேரை tumb பண்ணுகிறார்.
இப்படியாகப் பல தில்லாலங்கடி வேலை பார்த்து முன்னேறி வரும்போது Money market-இல் ஈடுபட்டு வரும் அஜய் கேடியா என்பவரால் Market crash ஏற்படுகிறது. ஒரே நாளில் எல்லாப் பங்குகளும் ராக்கெட் வேகத்தில் சரிவதை Market crash என்பார்கள். ஒரு சூறாவளியைப் போல சுழன்றடித்த அந்த வீழ்ச்சியில் ஹர்ஷத் மேத்தாவும் வீழ்கிறார். ஏறத்தாழ பத்து லட்சம் ரூபாய் நஷ்டம் அடைகிறார். எண்பதுகளில் பத்து லட்சம் என்பது நினைத்துப் பார்க்கமுடியாத மிகப் பெரிய தொகை.
இனி இந்த வீழ்ச்சியிலிருந்து ஹர்ஷத்தால் எழுந்து வரமுடியாது என நினைக்கிறார்கள். எப்போதும் உடன் நிற்கும் தம்பி அஸ்வின் மேத்தாகூட “நான் இலங்கைக்கு வேலைக்குப் போகிறேன்” எனச் சொல்கிறார். அவரை ஹர்ஷத் தடுக்கிறார்.
ஒன்றுமே இல்லாத வெற்றுக் கட்டடத்தில் Grow more என்ற நிறுனத்தை ஆரம்பிக்கிறார்கள். ஹர்ஷத்தின் மூளைதான் முதலீடு. மார்க்கெட்டில் எந்த பங்கு அதிக லாபம் சம்பாதிக்கும், எது வீழ்ச்சியடையும் என்பதை அவருடைய வாடிக்கையாளர்களுக்குச் சொல்கிறார். அதில் நல்ல பெயரும் கொஞ்சம் லாபமும் கிடைக்
கிறது. 1984-இல் இந்திரா காந்தி இறந்த பிறகு, ராஜீவ் காந்தி பதவி ஏற்கிறார். “இனி இந்தியா வளர்ச்சி அடையாது” என்று மனுமுத்ரா என்ற பிரபல பங்கு வர்த்தகர் சொல்கிறார். ஆனால் ஹர்ஷத் மேத்தா அந்தச் சூழலை நேர்மறையாக எதிர்கொள்கிறார். பெட்ரோலிய நிறுவனங்களான Indrol, Zuari, Agro, Spic போன்ற நிறுவனங்களில் பங்குகளை வாங்கி லாபம் பார்க்கிறார்.
அந்த நேரத்தில்தான் அஜய் கேடியாவை முதன் முதலில் நேரில் சந்திக்கிறார். அவர் Money market செய்பவர். Citi Bank துணையோடு இந்திய வர்த்தகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஏற்கனவே இவரால்தான் Market crash ஆனது. அதனால்தான் ஹர்ஷத் அதல பாதாளத்தில் விழுந்தார். இப்போது மீண்டும் அவரோடு ஒரு சிறு மோதல் ஏற்பட்டபோது Money market-இல் இறங்க முடிவு செய்கிறார். Cartel of Brokers ஒன்றை ஆரம்பித்து வங்கிகளோடு தொடர்பு கொள்கிறார். Cartel of Brokers என்பவர்கள் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களின் விலையையும், சேவையையும் கவனிப்பவர்கள்; நிறுவனங்களின் supply, price-fixing, collusive bidding, market carving ஆகியவற்றைப் பார்த்துக்கொள்பவர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் பெரும்பாலும் போட்டி நிறுவனங்களுக்கு எதிராக illegal-லாக இயங்கக்கூடியவர்கள். ஹர்ஷத் மேத்தா Cartel of Broker-ஆன சில நாட்களிலேயே SBI வங்கியைத் தன் வலையில் விழ வைக்கிறார். ONGC, NHPC, IRFC, NTPT எனப் பல நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தை நிர்வகிக்கிறார். “இந்த உலகத்தில் விலைமதிக்க முடியாதது நம்பிக்கை. ஆனால், அது எல்லார்ட்டயும் கிடைக்காது” என்கி
றார்கள். ஹர்ஷத்திடம் நிதி தொடர்பான நம்பிக்கை கிடைத்ததாகப் பின்னாளில் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை. ஹர்ஷத் அவர்களுக்கு வாரி வாரி லஞ்சம் கொடுத்தார். லஞ்சம் என்று சொல்லாமல் அதற்குப் புது வார்த்தை ஒன்றைக்கண்டுபிடித்தார். அதன் பெயர் Bankarege. அதற்கு மயங்கிய எல்லா நிறுவன அதிகாரிகளும் ஹர்ஷத்தின் காலடியில் பொதுமக்களின் பணத்தை எல்லாம் கொட்டினர்.
ஹர்ஷத் மேத்தாவின் கதை என்பது அவர் செய்த ஊழல்தான். ஒரு வெப் சீரீஸ் பார்த்து அவருடைய ஊழல்களை எல்லாம் புரிந்து கொண்டு சரியாகச் சொல்லமுடியாது. மிகச் சரியாகச் சொல்வதற்கு, வங்கிகளின் நிதி செயல்பாடுகள் குறித்து நான் நிறைய படிக்க வேண்டும். அதனால் வெப் சீரீஸ் பார்த்து நான் புரிந்துகொண்டவற்றைச் சொல்கிறேன்.
அந்தக் காலத்தில் வங்கிகளும், பொதுத்துறை நிறுவனங்களும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருந்துள்ளன. அதனால் வங்கிகள் security dealing செய்வதற்கான நேரத்தைக் குறைப்பதற்காகப் பணத்தை எல்லாம் புரோக்கர் வங்கிக் கணக்கில் வைத்துள்ளார்கள். இது சட்ட விரோதமானதுதான். ஆனால் best dealing வரும்போது security வாங்க முடியும். ஹர்ஷத் மேத்தா இந்த இடத்தில் மிகப் பெரிய ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்தார். Security வாங்குவதற்காக அவருடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தார். அந்தக் காலத்தில் வங்கி நடவடிக்கைகள் எல்லாம் ஆமை வேகத்தில் இருந்திருக்கின்றன. கோடிக்கணக்கான பணம் ஹர்ஷத் மேத்தாவின் வங்கிக் கணக்கில் பத்துப் பதினைந்து நாள்வரை இருக்கும். அதை அவர் தன்னுடைய சொந்தப் பணத்தைப் போலப் பயன்படுத்த ஆரம்பித்தார். எந்த ஷேரையும் அவரால் விலையை ஏற்றவும் முடியும், குறைக்கவும் முடியும். இதனால் Money market dealing-ஐ அவரால் மிகக் குறைந்த விலைக்குச் செய்ய முடிந்தது. வங்கிக்கு best deals கிடைத்தது. ஹர்ஷத் லாபத்துக்கு மேல் லாபம்
பார்த்தார். Money market அவருக்கு Money making market-ஆ மாறியது. இது ஒரு வகை.
மற்றொன்று, PSU என்று சொல்லப்படும் Public Sector Undertaking நிறுவனங்களில் அரசினுடைய பங்குகள் அதிகம் இருக்கும். அங்கு பயன்படுத்தாமல் இருக்கும் பணத்தை பங்கு மார்க்கெட்டில் போடலாம் என்று அந்த நிறுவனங்களின் இயக்குநர்களிடம் பேசுகிறார். “ONGC இப்படித்தான் ஏராளமான பணம் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை. அவர்களுடைய பணத்தை வங்கி PMS -இல் (Portfolio Management Service – இவர்கள் பங்கு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பர்) போடும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணத்தைப் போட்டார்கள் இன்று நிறைய லாபம் பார்க்கிறார்கள்” என்கிறார். ஹர்ஷத்தின் இந்தப் பேச்சைக் கேட்டு, அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனத் தலைவர்கள் எல்லோரும் மயங்குகிறார்கள். Profit என்ற சொல் ஹர்ஷத்தின் தாரக மந்திரம். அதற்கு மயங்காதவர்களே இல்லை.
ஓரிடத்தில் சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் வங்கித் தலைமை மேலாளரிடம் ஹர்ஷத் இப்படிப் பேசுகிறார், “ ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கிகிட்ட 200 கோடி கடன் வாங்க வேண்டும். அவங்க security கேட்கிறாங்க. இதுவரைக்கும் எந்த வங்கிக்காவது physical securities குடுத்திருக்கோமா? எப்பவாவது நேர்ல கைல குடுத்துருக்கோமா? BR (Bank Receipt) குடுத்து ஆகணும்? அதுதான் Proof! Bank Receipt குடுத்தா அது security கிடைச்ச மாதிரி. நீங்க BR issue பண்ணுங்க, அவங்களுக்கு receipt கிடைச்ச உடனே உங்களுக்கு 200 கோடி வந்துரும். அதுல 4 கோடி உங்களுக்கு Bankarege. நான் பதினைஞ்சு நாள்ல 200 கோடி திருப்பிக்
குடுத்த உடனே உங்க BR உங்ககிட்ட குடுக்கப் போறாங்க. அதக் கிழிச்சுப் போட்டுட்டுப் போங்க. அவங்களுக்கு 15 நாள் செக்யூரிட்டி கிடைச்சிரும். உங்களுக்கு கமிஷன் கிடைச்சிரும். சிட்டிபேங்க் இன்னவரைக்கும் BR-ர வச்சித்தான் ஓட்டிட்டிருக்காங்க” என்கிறார்.
அதாவது ஹர்ஷத் மேத்தா ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளின் பணத்தைப் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார்; அரசு நிறுவனங்களின் பணத்தைப் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார்; பணமே இல்லாத வங்கிகளைக் கடன் வாங்க வைத்து பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார். எல்லாமே மக்களுடைய பணம்தான். எல்லோரையும் நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறார். ஆனால் நிறுவனங்கள் ஹர்ஷத் மேத்தாமேல் தொடர்ந்து கண்மூடித்தனமான நம்பிக்கைகள் வைத்தன. ஹர்ஷத் மேத்தா ஓரிடத்திலிருந்து பணத்தை எடுத்து இன்னொரு இடத்திற்கும், இன்னொரு இடத்திலிருந்த பணத்தை எடுத்து வேறொரு இடத்திற்கும் மாற்றி மாற்றி விளையாடிக்கொண்டிருந்தார். தப்பு செய்வதற்கு ஹர்ஷத் எப்போதும் பயந்ததில்லை. ஆனால் இதைத் தெரியாத மக்கள் நாட்டில் பணமழை பொழிவதாக நம்பிக்கொண்டிருந்தார்கள். ஹர்ஷத் மேத்தாவைப் பங்கு மார்க்கெட்டின் அபிதாப் பச்சன், Ragging Bull, Einstein of share market, Cobra killer, Cheetah எனப் புகழ்ந்து தள்ளினர். நிறுவனங்கள் மட்டுமில்லை, இந்திய மக்களும் ஹர்ஷத்மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்தனர். எந்த அளவிற்கு என்றால், “இந்தியாவின் நிதியமைச்சராக ஹர்ஷத் மேத்தா வரவேண்டும்” எனச் சொல்லும் அளவிற்கு!
1992 மும்பையின் தலைமையகமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஹர்ஷத் மேத்தா செய்த முறைகேடு ஒன்று தெரியவருகிறது. 500 கோடி எந்த ஆவண
மும் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. RBI கவர்னர் வெங்கட்ராமன் (தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் தந்தை)
அதைப் பற்றி விசாரிக்கிறார். விஷயத்தை ஹர்ஷத் மேத்தாவிடம் சொல்கிறார்கள். 500 கோடிதான, இதோ கொடுக்கிறேன் என அவரும் ஏறத்தாழ கொடுத்து
விடுகிறார். 500 கோடி ஸ்டேட் பேங்க்குக்கு வந்தது என்றால், ஹர்ஷத்துக்கு 500 கோடி கொடுத்தது யார் என சுசித்தா தலால் என்ற பத்திரிகையாளர் தோண்டித் துருவி ஆராய்கிறார். ஹர்ஷத் மேத்தா செய்தது 500கோடி ஊழல் இல்லை, 5000 கோடி ஊழல் என்று சுசித்தாவிற்கு ரகசியமாகத் தகவல் வருகிறது. அதைவிட முக்கியமான தகவல், ஹர்ஷத் மேத்தா ஸ்டேட் பேங்கைப் போல ஏராளமான வங்கிகளிடம் ஊழல் செய்திருக்கிறார் என்பதையும் அந்த ரகசியத் தகவல் சொல்கிறது.
RBI கவர்னரிடம் இது குறித்துத் தொடர்ந்து கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார் சுசித்தா. நாடெங்கும் ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் பற்றிய செய்தி பற்றிக்கொண்டு எரிகிறது. வழக்கமாகப் பொருளாதாரக் குற்றத்திற்கு CBI விசாரணை நடைபெறாது. ஆனால் ஹர்ஷத் மேத்தா விஷயத்தில் சிபிஐ அதிகாரி மாதவனிடம் விசாரணையை ஒப்படைக்கிறார்கள். அவர் ஏற்கனவே போபர்ஸ் ஊழல் பற்றி விசாரித்தவர். கடுமையும் நேர்மையும் கலந்தவர். அவருடைய அதிரிபுதிரி விசாரணையில் NHB chairman பெர்வானி ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஸ்டேட் பேங்க் அதிகாரிகளை விசாரிக்கிறார்கள். ஹர்ஷத் மேத்தாவின் தம்பி அஸ்வின், உடன் பணியாற்றியவர்கள் என எல்லோரையும் விசாரிக்கிறார்கள். கடைசியாக ஹர்ஷத்தையும் பிடித்து உள்ளே போடுகிறார்கள். ஹர்ஷத் மேத்தாவுக்கு உதவி செய்யும் மேலிடத்து ஆள் யார் என்பதுதான் விசாரணையின் மையமாக மாறுகிறது. இறுதியில் அந்த மேலிடம் யார் என்பதை வெளிப்படையாகச் சொல்கிறார். அவர் அப்போதைய இந்திய பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ். அவருக்கு உதவியாக இருந்தவர் சந்திராசாமி!
இந்த உண்மை வெளியில் கசிந்த பிறகு சிபிஐ அதிகாரி மாதவன் மாற்றப்படுகிறார். ஹர்ஷத் மேத்தா எல்லாவகையிலும் முடக்கப்படுகிறார். ஹர்ஷத் மேத்தா மட்டுமே குற்றவாளி என அடுத்தடுத்துப் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்படுகிறார். 2001 டிசம்பர் 31ஆம் நாள் இதயவலியினால் இறந்துபோகிறார்.
“நம்பிக்கை எப்பவுமே எல்லா legalities-ஸைவிட பெரிசு. Problem எப்போ வரும்னா ஹர்ஷத் மாதிரி ஆளுங்க Parallal Systemம use பண்ணித் தப்பு பண்ணுறப்போதான்” என இந்த வெப் சீரீஸில் அழகான வசனம் ஒன்று வருகிறது. உண்மையில் Parallal System-த்தைப் பயன்படுத்தி தப்புசெய்தவர்கள் பட்டியலில் ஹர்ஷத் மேத்தா மட்டுமே இல்லை. “ஹர்ஷத் மேத்தாவுக்குப் பிறகு இதுவரை 27 பேர் தேசிய வங்கிகளை ஏமாற்றிப் பல்லாயிரம் கோடிப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்கள். அவர்களில் 26 பேர் குஜராத்திகள். ஒருவர் விஜய் மல்லையா, அவரும் ஒரு பிராமணர்” என்று வாட்சப்பில் ஒரு செய்தி வலம் வருகிறது. உண்மையில் இன்றைய நிலையிலிருந்து யோசித்தால் ஹர்ஷத் மேத்தா பொதுத்துறை நிறுவனப் பணத்தையும், வங்கிகளின் பணத்தையும் எடுத்தாலும் அதற்குரிய லாபத்தைக் கொடுக்கத்தானே செய்தார். லாபம் கொடுக்க கொடுக்கத்தானே எல்லா நிறுவனங்களும் அவரிடம் வந்தன என சிந்திக்கவும் இடம் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் தேசிய வங்கிகளிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் வாழ்பவர்களைவிட வங்கிகளின் பணத்தை மட்டுமில்லாமல் LIC போன்ற இன்ஸூரன்ஸ் நிறுவனங்களையும் காலி செய்துகொண்டிருக்கும் அதானியைவிட; அவருக்குத் துணைபோகும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைவிட ஹர்ஷத் மேத்தாவைக் கெட்டவர் என்று சொல்லமுடியாது.
இந்த வெப் சீரீஸும் ஹர்ஷத் மேத்தாவைக் கெட்டவர் என்றும் பதிவு செய்யவில்லை. அதே நேரத்தில் நல்லவர் என்றும் பதிவு செய்யவில்லை. “என்னதான் எல்லாவித தொழில்நுட்பங்களும் இப்போதும் இருந்தாலும், என்னதான் ஹர்ஷத் மேத்தா பிரச்சனைக்குப் பிறகு இந்தச் சட்டங்கள் எல்லாம் கடுமையானாலும், விதிமுறைகள் மென்மேலும் வலுவாகிவிட்டாலுகூட ஊழல்களும் ஏமாற்று வேலைகளும் மட்டும் குறையவே இல்லை. அவை நடந்துகொண்டேதான் இருக்கின்றன” என்கிற குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்த வெப் சீரீஸின் இயக்குநர் ஹன்சல் மேத்தா & ஜெய் மேத்தா. ஹன்சல் மேத்தா இயக்கிய படங்களில் ஷாகித் மிகச் சிறந்த படம்.. ஊழலில் சம்பந்தப்பட்ட உண்மை நபர்கள் அனைவரின் பெயரையும் உள்ளது உள்ளவாறே சொல்லி எடுக்கப்பட்ட முதல் இந்திய வெப் சீரீஸ் இதுவாகத்தான் இருக்கும். ஹர்ஷத் மேத்தா தவறானவர் என்றாலும், அவர் மட்டும்தான் தவறு செய்தாரா என்ற கோணத்தில் படமாக்கியுள்ளனர். அதனால் திரைக்கதையில் தொய்வே இல்லை. பங்கு வர்த்தக ஊழலை அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாது என்றாலும் முடிந்தவரை அதைப் புரிய வைக்கிறார்கள். நிறைய பஞ்ச் டயலாக் வைப்பதற்கு இடமிருந்தும் அதைச் செய்யவில்லை.
அழிக்கிறதா இருந்தா அவன் Stock-கை இல்ல, அவனோட Reputation-னை அழிக்கணும். ஒருத்தனோட வேலைய நம்மனால கெடுக்க முடியலன்னா அவன் பேரக் கெடுத்துறணும். பேரு எந்த அளவுக்குக் கெடுதோ அந்த அளவுக்கு நம்பிக்கை போயிரும். நம்பிக்கை போச்சுன்னா investment போயிரும்.
எப்பவும் யாருக்கு வெற்றி கிடைக்கும் தெரியுமா? எல்லாத்தையும்விட வேகமாக இருக்குறவனுக்குத்தான் போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
இந்த வெப் சீரீஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றிய சுசித்தா தலால் அவருடைய கணவர் தேபாஷிஷ் பாசு ஆகியோர் இணைந்து எழுதிய 1992 book The Scam: Who Won, Who Lost, Who Got Away என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. வெப் சீரீஸிலும் சுசித்தாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியமான இடத்தை வழங்கியுள்ளனர். சுசித்தா ஹர்ஷத் மேத்தா ஊழல் பற்றி எழுதும்போது அவருக்கு ரகசிய மனிதர் தகவல் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் யார் தெரியுமா? RBI கவர்னர் வெங்கட்ராமன். தொண்ணூறுகளில் நடந்த ஊழலுக்கும் இப்போது நடக்கும் ஊழலுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், அப்போது ஊழல் நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவரக்கூடிய நியாயமான பத்திரிகையாளர்கள் இருந்திருக்கிறார்கள்; அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். இப்போது அது போன்றவர்களைப் பார்க்கமுடியாது என்பதுதான் வரலாற்றுத் துயரம்
sankarthirukkural@gmail.com