சுமார் 10 வருஷத்துக்கு முன்னாடி ரோட்ல சிம்கார்டு வித்திட்டிருந்த ஸ்கூல் ட்ராப் அவுட் பையன் தன்னோட 17 ஆவது வயசில ஆரம்பிச்ச ஸ்டார்ட் அப் தான் “OYO”. 21 வயசில இந்தியாவின் இளம் வயது தொழிலதிபர். 2022 ல அவர் சொத்து மதிப்பு 7253 கோடி. இன்னிக்கு 30 வயசைக்கூட தொடாத பையனுடைய வருமானம் வருடத்துக்கு 260% வளர்ச்சியில இருக்கு….!!
அந்த OYO மேஜிக் எப்படி நடந்ததுன்னு பார்த்தால் செம்ம சுவாரஸியமா இருக்கு…. உற்பத்தி – வணிகம் செய்வதை விட ப்ரோக்கரேஜ் செய்வதில்தான் லாபம் அதிகம் என்ற சாதாரண மார்க்கெட் யதார்த்தம் தான் OYO…! உற்பத்தி செய்றவன் ஒருத்தனா இருப்பான், அதை அனுபவிக்கிறவன் இன்னொருத்தனா இருப்பான். இரண்டு பேரையும் கனெக்ட் பண்ணி விட்டா நடுவில எந்த முதலீடும் இல்லாம நம்ம அக்கவுண்ட்டுக்கு காசு வந்துரும்… ஸ்மார்ட்ல!?
இதை விட சூப்பர் மாடல் பிஸினஸ் ஒன்னு இருக்கு.. உற்பத்தியே செய்யாம எடுத்து எடுத்து விக்குறது…! கல், மண், மார்பிள், க்ரானைட், தங்கம் மாதிரி கனிம வியாபாரங்கள். இதுல இறங்கினவன் தோற்க வாய்ப்பே இல்லை. அள்ள அள்ளக் காசு….!! ட்ராக் மாறிட்டிருக்கோம், மறுபடி OYOக்கு வருவோம்.
ரித்திஷ் ஒரிசாவைச் சேர்ந்தவர். ஸ்கூல் படிக்கும்போதே பிஸினஸ்ல ஆர்வம், அண்ணன் மூலமா சாஃப்ட்வேர் பற்றி அறிமுகம். அதைப் பற்றிய தேடல் அதிகமாக, 17 வயசில ஊர் சுத்த ஆரம்பிச்ச ரித்தீஷ்க்கு டெல்லிக்கு மீட்டிங்கிற்காகப் போய் தங்க வேண்டிய சூழல்..! அப்படித் தங்கும் போதெல்லாம் ஒன்னு அதிக காசு வாங்கிட்டு நமக்குத் தேவையே இல்லாத ஜிம், ஸ்விம்மிங் பூல்னு உதார் விடுற ஸ்டார் ஹோட்டல்கள் அல்லது பட்ஜட் ஸ்டேன்னு சொல்லிக் குறைவான காசு வாங்கிட்டு கழிப்பறையைக்கூட சுத்தம் செய்யாத பாடாவதி ஹோட்டல்களாகக் கிடைக்குது. நியூட்டனுக்கு ஆப்பிள் போல… ரித்தீஷ்க்கு ஒரு பயணியின் தேவை என்ன என்பதையும், ஹோட்டல்களின் பிரச்சனை என்ன என்பதையும் சிந்திக்கக் கூடிய வாய்ப்பு உருவாகுது…!
உற்பத்தியாளர், நுகர்வோர்னு இரண்டு பேரோட பிரச்சனையும் ஆராயறார்….
ஹோட்டல்களைப் பொறுத்தவரையில் நிறைய ஹோட்டல்கள் எங்க இருக்குன்னு பயணிகளுக்குத் தெரியிறதில்ல. அதனால தங்குறதுக்கு ஆட்கள் வர மாட்றாங்க. அந்த ஹோட்டல் எல்லாம் ரொம்பக் குறைவான தொகையில வாடகைக்குக் கொடுக்கத் தயாரா இருக்காங்கன்னு புரிஞ்சுக்கிறார்.
பயணிகளைப் பொறுத்தவரையில் எந்த ஊர்ல எந்த ஹோட்டல் நல்லாருக்கும்ன்னு தெரிவதில்லை. தெரிஞ்சாலும் ஹோட்டல்களின் நம்பகத்தன்மை ஒரு சவாலா இருக்கு… இதையும் ரித்தீஷ் புரிஞ்சுக்கிறார். இந்த இரண்டு புள்ளியையும் இணைத்தால் செம்ம பிஸினஸ்க்கு வாய்ப்பு இருக்குன்னு அதற்காக ஒரு ஆப் தயார் செய்கிறார். அது தான் OYO வாக ஹிட்டடிக்கிறது. OYO என்றால் On your Own என்று அர்த்தம்…!
OYOவின் ஸ்டைல் என்னன்னா முதல்ல ஹோட்டல்களுக்குப் போய் ஒரு பயணிக்கு தேவையான அடிப்படை விசயங்கள் ஒழுங்கா இருக்கான்னு சர்வே செய்வது. பெட்ஷீட் துவைக்குறதுல இருந்து, கழிப்பறை சுத்தம், ஏசி, தண்ணீர் ஜக் வரை என்னென்ன குறைகள் இருக்குன்னு ஆராய்ந்து அதை ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்து அது எல்லாத்தையும் சரி செய்ய ஒரு ஒப்பந்தம் போட்டுக்குறது. பயணிகளுக்கு அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன இருக்கோ அதை மட்டும் வைத்து ஒரு டிசைன் செய்து அதைக் கண்டிப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது. ஒரு ஹோட்டலை முழுமையாக மாற்றியமைத்தபின் அதைத் தன்னோட OYO ஆப்பில் பதிவேற்றுவது. இதன் மூலமாக, “OYO மூலமா புக் செய்தால் அடிப்படைகள் சரியா இருக்கும்ன்னு” வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக் காட்ட, பிஸினஸ் பிக்கப் ஆக ஆரம்பிக்குது…!!
பிஸினஸின் அடுத்த கட்டமா ரித்தீஷ் செய்ததுதான் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமாக நம்பப்படுகிறது. அது, ரொம்ப ஒதுக்குப் புறமா இருக்கிற, ஆட்கள் சரியா வராத ஹோட்டல்ளில் “சட்ட சமரசங்கள்” செய்து “கப்பிள் ஃப்ரண்ட்லியாக” கொடுக்கத் தயாராக இருப்பதை அறிந்து அதை ஒரு முக்கிய தூண்டிலாக OYOவில் பயன்படுத்தியது. இது பிஸினஸை வேற லெவலுக்குக் கொண்டு போகுது. சில ஹோட்டல்கள் hourly basisல வாடகைக்குக் கொடுக்கிற அளவுக்கு போகுது. இன்னிக்கு நீங்க OYOல 2 மணி நேரம், 1 மணி நேரம் கூட ரூம் புக் செய்துக்கலாம். எதிர்காலத்துல பாலியல் quickie தேவைகளுக்காக 10, 20 நிமிடம் கூட குடுப்பாங்களோ என்னவோ…. ஆனால் இளைஞர்கள் மத்தியில் இந்த ஸ்கீம் மிகப் பிரபலமானது…! இந்தியா போன்ற கலாச்சார கட்டுப்பெட்டி நாட்டில் மறைமுகமாக ஒரு செக்ஸ் வடிகாலுக்கான வாய்ப்பாகப் பலருக்கு இந்த “ஆப்” பயன்படுது என்பது மறுக்க முடியாத விசயம்.
2013இல் ஆரம்பித்த OYO ஒரு வருட முடிவிலேயே மாதம் 1 கோடி வருமானத்தை ஈட்டுகிற அளவில் Delhi, Gurgaon, Noida, Bangalore, Mumbai, Pune, Goa, Jaipur, Hyderabad உட்பட 25 இந்திய டாப் நகரங்களில் 350 ஹோட்டல்களில் சுமார் 4000 அறைகளைத் தன் வசப்படுத்தியிருந்தது. பராமரிப்பு இல்லாத பழைய ஹோட்டல்கள், அப்பா தாத்தா காலத்தில் கட்டிய லாட்ஜ்கள், போணியாகாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு ப்ளாட் கட்டி வச்சு அதை வாடகைக்குக் குடுக்க முடியாம அவஸ்தையில் இருந்தவர்களுக்கு கூட OYO வாழ்க்கையை வளமாக்கியது.
ஒரு பார்ட்னர்ஷிப் போட்டுக்கிட்டா போதும். அதைப் பொலிவாக்கி, போணி செய்து கொடுத்து பெர்சண்டேஜ் போட்டு உங்க வியாபாரத்தை தூக்கி நிறுத்தி சக்சஸ் செய்து கொடுப்பாங்க. அந்த அளவுக்கு OYOவின் வீச்சு இருக்கிறது.
இவ்வளவு அருமையான ஸ்டார்ட் அப் ஐடியா & சக்சஸ்ஃபுல் பிஸினஸ் மாடலாக இருக்கும் OYO, புதுசா பிஸினஸ் ஆரம்பிக்கிறவங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஊட்டுகிற OYO எல்லா வகையிலும் சரியானவர்களாகவே இருக்காங்களான்னு தேடிப் பார்த்தால்… OYOவின் பிடிக்குள் வரும் ஹோட்டல்கள் வெகு விரைவிலேயே துண்டைக் காணோம், துணியைக் காணோம்ன்னு ஓடுற அளவில் OYOவின் செயல்பாடுகளில் சில நம்ம கண்களுக்குப் படுது. ஒரு தனி நபர் கார்ப்பரேட்டா மாறினதுக்கு அப்புறமா அவங்க எப்படிச் செயல்படுறாங்க என்பதைப் புரிஞ்சுக்கிறதும் பிஸினஸ் பாடங்களில் முக்கியம் இல்லியா… அதையும் பார்க்கலாம்….
OYOவின் கருப்புப் பக்கங்கள்:
OYOவோட பிஸினஸ் ஐடியாவை முன்னாடியே பார்த்தோம். அதை இன்னும் கொஞ்சம் ஆழமா இறங்கிப் பார்த்தால் OYO ஹோட்டல்காரர்களிடம் செய்கிற தகிடுதத்தங்கள் தெரிய வரும்…
இன்னிக்குத் தேதிக்கு 12க்கு 16 சைஸ்ல அடிப்படைக் கட்டுமானத்தோட ஒரு ரூம் என சுமார் 10 ரூம் கட்டி ஒரு லாட்ஜ் நடத்தணும்னா இடம், கட்டிடம் என சுமார் 2 கோடி இன்வெஸ்ட் செய்யணும். என்னிக்கோ இன்வெஸ்ட் செய்த ஹோட்டல்களில் பல காரணங்களால பராமரிப்பு சரியா இல்லாம இருக்கும் போது, அவங்ககிட்ட போய் “உங்க ஹோட்டலுக்கு ஆட்கள் கொண்டு வர்றதுக்கு முன்னாடி, ஏசியை சரி செய்யணும், பெட்ஷீட் மாற்றணும், வாளியை மாற்றணும்னு சொல்லி அதுக்கு சுமார் 4,5 லட்சம் ஆகும்னு” பட்ஜெட் போடும் போது ஏற்கனவே தள்ளாடிட்டு இருக்கிற நிர்வாகம் மறுபடியும் இந்த 5 லட்சத்தைப் போட்டு ஆட்கள் வரலைன்னா என்ன செய்றதுன்னு யோசிப்பாங்க இல்லியா…?! அப்ப தான் OYO அந்தத் தூண்டிலை வீசுறாங்க, “கவலைப்படாதீங்க, அந்த முதலீட்டை OYO செய்யும்னு” சொல்றாங்க.
ஆகா, இது நல்ல திட்டம்தானேன்னு தோணுது இல்லியா… இதுக்கு உடனே ஹோட்டல்காரர்களும் சம்மதம் தெரிவிப்பாங்க. இப்போ OYOக்கும் அவங்களுக்கும் ஒப்பந்தம் எழுதப்படும். மொத்த வாடகையில் OYOக்கு 30 – 40 சதவீதமும் ஹோட்டல் ஓனர்க்கு 60 – 70 சதவீதமும் ஒப்பந்தம் சொல்லும். அதாவது 2 கோடி முதல் போட்டு, ஆள் சம்பளம், கரண்ட் பில், பராமரிப்பு என அனைத்தும் செய்யும் பங்குதாரருக்கும் 5 லட்சம் முதல் போட்டு ப்ரோக்கரேஜ் செய்ய வந்த நிறுவனத்துக்கும் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பங்கு..!! அடடே..!!
இது மட்டுமில்ல… OYO ஹோட்டல்காரர்களிடம் போடும் ஒப்பந்தத்தில் தன்னை முழுமையான பங்குதாரராக ஒப்பந்தம் செய்கிறது. அதாவது OYO மூலமாக வருபவர்கள் மட்டுமல்லாமல் அந்த லாட்ஜுக்கு நேரடியாக வருபவர்களும், அல்லது லாட்ஜ் ஓனரே இரண்டு நாள் ரூம்ல தங்கினார் என்றாலும் வாடகைப்
பங்கை கொடுக்கணும். OYO மூலமாக வருமானம் வருதோ இல்லியோ ஏற்கனவே வந்த வருமானத்தில் பங்கு கொடுத்தே ஆகணும் என்பது என்ன வகையான பிஸினஸ் மாடல்??
இதைப் புகார் அளிக்க முடியாதா?? இங்க தான் ட்விஸ்டே இருக்கு… இந்த ஹோட்டல்கள் பெரும்பாலும் கப்பிள் ஃபிரண்ட்லியா இருக்கிறதால அவங்களே புகார், நடவடிக்கை பக்கம் எல்லாம் போக அஞ்சுவாங்க. திருடனுக்குத் தேள் கொட்டின கதையா ஹோட்டலுக்கு OYO கொட்டினதை வெளியே சொல்ல முடியாமல் போகும்.
அடுத்ததாக OYO வோட மிகப்பெரிய பலம்,அவங்க கஸ்டமர்கள் புக்கிங் ஏஜண்டான OYOவிடமே பணத்தை செலுத்துவது. இதனால ஒரு ஹோட்டலில் தங்க வருபவர் முன்கூட்டியே பணத்தை OYOகிட்ட கொடுத்துருவார். அவங்க 15 அல்லது 30 நாள் கழிச்சு கமிஷனையும் தங்களோட பங்கையும் கழிச்சுட்டு தான் ஹோட்டலுக்குக் கொடுப்பாங்க. சில நேரம் இன்னும் தாமதமாகலாம். OYOவின் transactionக்கு அந்தப் பணம் மிகப்பெரிய பலம்… ஆனா ஹோட்டல்காரருக்கு இது கடுமையான மன உளைச்சலைக் கொடுக்கும். “என்னடா இது நம்ம ப்ராப்பர்டியை அவன் வாடகைக்கு விட்டுட்டுப் பங்கையும் எடுத்துட்டு நம்ம பணத்தையும் சாவகாசமா கொடுக்கிறானே” என்கிற நியாயமான எரிச்சல்தான் அது. அதை விட பிரமாதமா இன்னொன்னு நடக்கும். புக் செய்தவங்க சில நேரம் கேன்சல் செய்வாங்க.. அப்படிக் கேன்சல் செய்தால் புக்கிங் அட்வான்ஸில் ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிக் கடைசி நேரத்தில் புக்கிங் கேன்சல் செய்வதால வரும் சிரமங்கள் ஹோட்டலுக்குப் போகும்… அந்த கட்டணத்தில் கணிசமான தொகை மட்டும் ஒப்பந்தப்படி OYOவுக்கு போகும். cancellation charges மூலமாகவே ஒரு வருடத்துக்குப் பல கோடி வருமானத்தை பார்க்கிறதும் ஒரு திறன்தானே….!!
சரி, ஹோட்டல்காரருக்கு மட்டும்தான் பாதிப்பா என்றால் இல்லை. கஸ்டமருக்கும் பிரச்சனைகள் உண்டு. தன்னோட பங்குதார ஓட்டல்கள் சரியான லைசன்ஸ் வச்சிருக்கா இல்லியா என்பதெல்லாம் OYO பார்ப்பதில்லை…! நாலு ரூம் இருந்தா போதும், வா பிஸினஸ் பண்ணலாம்னு வர்றதால பிரச்சனைன்னு வராத வரைக்கும் 1 மணி நேரம், 2 மணி நேரம்னு தங்கி ஜாலியா இருக்கலாம். ஆனால் ஒரு பிரச்சனை என வந்துட்டால் சட்டரீதியாகப் பல்வேறு பிரச்சனைகளை சந்திச்சு எதிர்காலத்தையே இளைஞர்கள் பலி கொடுக்க வேண்டி வரும்.
இப்படிப் பல்வேறு குற்றாச்சாட்டுகளை OYO சந்தித்தாலும். “after a while negative publicity is just another way to get publicity”என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப… OYOவின் பிஸினஸ் மாடல் இந்தியாவில் சக்கைப்போடு போடுவது மறுக்க இயலாத உண்மை….! இப்போதைக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத சாம்ராஜ்யம் ரித்தீஷின் OYO சாம்ராஜ்யம்தான் என்றால் அது மிகையில்லை….!