“நண்பா அவ எனக்கு வேண்டாண்டா. எப்படியாச்சும் டைவர்ஸ் வாங்கிக் குடு”என்று மன்றாடினான் கவிஞன் கார்முகில் வண்ணன்.
“ஏன் நண்பா, கையோடு கை சேர்த்து ஏழு கடல்களையும் கடப்போம்ன்னீங்களே ரெண்டு பேரும் இப்ப என்ன ஆச்சு” நான் அதிர்ச்சியுடன் கேட்டேன். எனக்கு இந்த கவிதை எல்லாம் வராது. இது நண்பன் கவிஞன் தனது திருமணத்தில் படித்த கவிதை. கூடவே அதை வாட்ஸப்பில் அவ்வப்போது அனுப்பிக் கொண்டே இருப்பான். தண்ணியடிக்கும் போதெல்லாம் இதைச் சொல்லிச் சொல்லி சித்திரவதை செய்வான். எனவே கார்முகிலைத் தெரிந்தவர்கள் அத்தனை பேருக்க்கும் இந்தக் கவிதை மனப்பாடம்.
“ஏழு கடல் எங்கப்பா வாலாங்குளத்தையே தாண்ட முடியாது.”
உண்மைதான் வாலாங்குளம் முழுக்க இண்டஸ்ரியல் வேஸ்ட்.. கால் வைக்க முடியாது. ஆனால் நண்பன் சொன்னது அந்தப் பொருளில் அல்ல.
“சரி சொல்லு ஏன் விவாகரத்து வேணும்?’
“நான் நானாகவே இருக்கணும்னு பார்க்கறேன் நண்பா. விடமாட்டேங்கறா’
“நீ நீயாவே இருந்து என்ன புடுங்குன? கொஞ்சம் மாறிக்க வேண்டியது தானே?”
“வக்கீல் மாதிரி ராவா பேசாத நண்பா. மனுச மனசை நுட்பமா பாரு. கொஞ்சம் சென்சிடிவா இரு. ரொம்ப நொந்து போய் வந்திருக்கேன். வாழ்க்கையோட எல்லைக்கே போயிட்டேன்” என்ற போது துயரத்தால் அவன் குரல் கம்மிப் போய் ஆடம் ஆப்பிள் விக்கி விக்கி ஏறி இறங்கியது.
வக்கீல் வாழ்க்கையில் இதெலெலாம் சகஜம்தான். நண்பர்கள் விடியக்காலையில் வந்து விவாக்ரத்து கேட்பார்கள். ஒரு பெக் வாங்கி ஊற்றி விட்டால் போய் விடுவார்கள். அல்லது மனைவியோ, பெருசுகளோ வந்து இழுத்துக் கொண்டு போவார்கள்.
கார்முகிலின் மனைவி ஹர்சினி என்கின்ற ஆதித்தாய் இங்கே வந்து சேர இன்னும் எத்தனை நேரம் ஆகும் என்று என் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் போது செல்போன் ஒலித்தது.
“நான் அட்வகேட் சங்கீதா பேசறேன் சார்”
“குட் மார்னிங் மேம்”
“ இங்க ஒரு லேடி வந்திருக்காங்க. அவங்க பேரு ஹர்சினி அலைஸ் .. . “ மேடம் உங்க இன்னொரு பேர் என்னங்க என்று வக்கீல் அருகில் இருப்பவரிடம் கேட்பது தெரிந்தது. “யா ஹர்சினி அலைஸ் ஆதித்தாய் என்கிறவங்க டைவர்ஸ் கேட்டு வந்திருக்காங்க. உங்களை தெரியும்ன்னாங்க. அதான் கால் பண்ணினேன்”
“ஓ மை காட் மேட்டர் சீரியஸ் ஆகுது போல மேம்”
“அண்ணா நான் ஆதித்தாய் பேசறண்ணா’” வழக்கமாக கொங்கு இலக்கிய பாசறை கவிஞர்கள் தோழர் என்று தான் அழைத்துக் கொள்வார்கள். புதிதாக கவிதை எழுத வரும் அரசு ஊழியர் பெண்கள் தோழர் என்று அழைக்கும் போதும் மழலை தெரியும்., எனக்கும் இந்த விவகாரங்களுக்கும் சம்ப்ந்தம் இல்லை என்ற போதிலும் பெண்களின் தோழர் பிடிக்கும்., ஆனால் இந்த சூழ்நிலையில் அது சரியாகப் படவில்லை போலிருக்கிறது. ரைட் அண்ணா இயல்பாகவும் நெருக்கமாகவும் இருக்கிறது.
“ அண்ணா அவரு ஆணாதிக்கத்தோட உச்சத்துல இருக்காருங்கண்ணா. அவங்கம்மா சொல்றதத் தான் கேக்கறாரு. வாழ்க்கைன்னா அவருக்கு என்னன்னே தெரியல. என் வாழ்க்கையே நாசமாப் போச்சுண்ணா. எனக்கு டிவர்ஸ் வேணும்”
அம்மா பேச்சைக் கேட்டு ஆணாதிக்கமா டேய் லூசு என்னடா பண்ணி வெச்சிருக்க . . .
—————————-
கொங்கு இலக்கிய பாசறையின் முக்கியமான கவிஞன் சுரேஷ்குமார் என்கின்ற கார்முகில் வண்ணன். அவனது மூன்று கவிதைத் தொகுப்புகளும், ஒரு இலக்கிய விமர்சன நூலும் வெளிவந்திருந்தன. மனுஷ்ய புத்திரன் அவனது கவிதைகள் சிலவற்றை நன்றாக இருப்பதாக பாராட்டியதாக சொல்லிக் கொள்வான். கொங்கு கூட்டங்கள் பூவாத்தாள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் நடக்கும். பள்ளித் தாளாளர் டீயும் வடையும் வழங்குவார். ஒவ்வொரு நான்கவது ஞாயிற்று கிழமையும் இப்படி அங்கே விவாதம் நடக்கும்.
ஒருநாள் அவனுடைய ஒரு நூல் விமர்சன கூட்டத்துக்கு அங்கே போய் பின்பு எனக்கு பூவாத்தாள் பள்ளி தாளாளரின் வடை பிடித்துப் போய் அடிக்கடி போவது வழக்கமாகிவிட்டது. வடை சப்ளை செய்யப்பட்டதும் நான் அதைக் கைப்பற்றிக் கொண்டு வேப்பமரத்தடி பெஞ்சுக்கு போய் விடுவேன். கூட்ட அமைப்பாளரும் எனது இலக்கிய சேவையைப் பாராட்டி மேலும் வடைகளையும் டீயையும் குடிநீரையும் அனுப்பி வைப்பார். இலக்கிய கூட்டத்தில் இலவச சட்ட ஆலோசனையும் சேரும் போது ஒரு தனிக் கவர்ச்சி உருவாவதாக அவர் நினைத்திருந்தார்.
அப்படியொரு கூட்டத்தில் தான் ஆதித்தாய் முதலில் கவிதை வாசித்தாள். நண்பன் கார்முகில் வண்ணன் உடனே பிளாட் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இரண்டு பேரும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் தீரவேயில்லை. நான் டீ அடித்து, பாத்ரூம் போய் தம் அடித்து, மீண்டும் டீ அடித்து போரடித்துப் போய் “போகலாமா?” என்றேன்.
“நீ போ” என்றான் அவன். அந்த தேவதையும் உற்சாகமாக கையசைத்து வழியனுப்பினாள். பின்பு அந்தக் காதல் கோவை இலக்கிய வட்டங்களில் மிகவும் பிரபலமானது. காதலை சுவாசித்து இலக்கியத்தை நேசித்து கவிதையை பூசித்து வாழும் இணையர் என்றெல்லாம் வாட்ஸப் ஸ்டேட்டஸ் சுற்றியது.
நீண்ட நாட்கள் பழகி, வெள்ளை சட்டை வேட்டி அருவாள் மீசை நபர்களின் எதிர்ப்பைத் தாண்டி உறுதியாக நின்று மணமுடித்த காதல்.
ரைட் அதற்கு இப்போது என்னவானது?
——————————————–
இவர்களது காதல் இலக்கிய காதல் என்றாலும் பிரச்சினை என்னவோ வழக்கமானதுதான்.
“என்னோட நகையெல்லாம் தன்கிட்ட கொடுக்கணும்னு சொல்றதுக்கு உங்கம்மா யார்? நான் உங்கம்மாட்ட கொடுப்பேன், குப்பைப போடுவேன். அது என் இஷ்டம். கண்டிஷன் எப்படி போடலாம்?”
“கல்யாணம் ஆன பிறகு நீ எப்படி உங்கப்பாவுக்கு லோன் கட்டலாம்? பொண்ணு சம்பளம் புகுந்த வீட்டுக்குத் தானே வரணும்”
‘உங்கம்மா கூட ஒரே வீட்ல இருக்க முடியாது. இங்கெ பிரைவஸியே இல்லை”
“உயிரே போனாலும் தனிகுடித்தனம் வர மாட்டேன்”
“உனக்கு பொறுப்பெடுத்துக்க பயம். அதை அம்மா பாசம்ன்னு சொல்லி ஏமாத்தற”
“வயசான காலத்துல அப்பா அம்மாவ விட்டுட்டு போலாமா?”
“ஏன் நான் எங்க அப்பா அம்மாவை விட்டுட்டு வரலயா? நமக்கு ஒரு இடம், குடும்பம் வேண்டாமா?”
“பத்து மணிக்கு மேல பொம்பளைக கிட்ட இருந்து போன் வரக்கூடாது”
“நீ அந்தக் கவிஞர் முகநூல் பக்கத்துக்கு போய் லைக் போடக் கூடாது”
—————————–
இது ஒரு பிரச்சினையா பஞ்சாயத்து பேசி முடித்து விடலாம் என்று நானும் சங்கீதா வக்கீலும் நினைத்தோம். திரும்பவும் வெள்ளை வேட்டி அரிவாள் மீசை கும்பல்கள் புறப்பட்டன. கண்ணீரும் கம்பலையுமாக சோக நாடகங்கள் அரங்கேறின. பேச்சு வார்த்தை இழுத்துக் கொண்டு சென்றது. குற்றப்பத்திரிக்கை அனுமார் வாலாக நீண்டது.
ஒருநாள் சங்கீதா அட்வகேட்டிடமிருந்து போன். “சார் அந்த லேடி கேஸ் போட்டே தீரணும்னு நிக்கறாங்க. வேற வழியே இல்லேங்கறாங்க”
“என்ன கேஸ் மேடம் போடப் போறீங்க?” எனக்கு குடும்ப வன்முறை வழக்கு ஏதாவது போட்டு கார்முகிலை உள்ளே தள்ளிவிடுவார்களோ என்று பயம்.
“ கல்யாணம் ஆகி ஒருவருஷம் ஆகலேங்கறதால கல்யாணம் செல்லாதுன்னு வழக்கு போட்டிருக்கேன் சார்”
“ஒக்கே மேடம்” நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
———————–
”கல்யாணம் செல்லாதுன்னு கேஸ் போட்டிருக்காளா? என்ன ஒரு ஏத்தம். எப்படிப்பட்ட கல்யாணம். தமிழ் இலக்கிய உலகமே முன்னால் நின்னு பண்ணி வெச்ச கல்யாணம். அதை இல்லேங்கறாளா? அவள விட மாட்டேன்” நண்பன் கொதித்துக் கொந்தளித்தான்.
“ யோவ் ரொம்ப அலட்டிக்காத இது வக்கீல் எடுத்த முடிவு” நான் புகையை இழுத்து விட்டேன்.
“யார் எடுத்த முடிவா இருந்தா என்ன? டைவ்ர்ஸ் வேணுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போக வேண்டியதுதானே? இவ எப்படி அந்தக் கல்யாணம் செல்லாதுன்னு சொல்லலாம்?”
‘சரி நீ கல்யாணம் செல்லும். அவளோட சேந்து வாழறேன்னு சொல்லப் போரியா?”
“அதெப்படி முடியும்? இவளோட மனுசன் சேர்ந்து வாழ்வானா?”
‘அப்ப கம்முன்னு இரு. நான் பாத்துக்கறேன்”
————————-
வாய்தா அன்று காலையிலேயே டார்ச்சர் தொடங்கிவிட்டது.
“நன்பா எனக்கு கோர்ட்டெல்லாம் பழக்கமில்ல. என்கூடவே இருப்ப இல்ல”
“இருப்பேன் நண்பா. பயப்படாதே” எனக்கு வேறு வழக்குகள் இருந்தன. இருந்தாலும் வேறு வழியில்லை. நண்பன் தந்தி அடித்துக் கொண்டிருக்கும் போது கைவிட முடியாது.
இருவரும் கூடுதல் குடும்ப நீதிமன்றத்துக்குப் போனோம். எதிரே ஆதித்தாய் . . . கொரூரமாக முறைத்துக் கொண்டு . . .
“நண்பா பாரு பாரு மொறைக்கறா” நண்பன் என் பின்னே ஒளிந்தான். அவன் கண்களில் கண்ணீர் .
“ஏன் நண்பா?”
“இந்த அளவுக்கு என்னை வெறுக்கறதுக்கு நான் என்ன செய்தேன்?”
“ஏன் திடீர்ன்னு என்ன ஆச்சு?”
“எனக்கு புடிக்கவே புடிக்காதுன்னு சொன்ன சுடிதாரை போட்டுட்டு வந்து நிக்கறா பாரு நண்பா?”
‘ பின்னே என்ன உன்னைப் பாக்க ஃபேமிலி கோர்ட்டுக்கு தலைக்கு குளிச்சு மல்லிகைப்பூ வெச்சுட்டா வந்து நிப்பா”
‘ஓ காட்” நண்பன் புலம்பினான்.
நான் ஆதித்தாயிடம் சென்று “ஹலோ “ என்றேன்.
“அண்ணா பாருங்கண்ணா என்ன அட்டகாசம் பண்றாருங்கண்ணா” என்றாள் ஆதித்தாய். அவள் கண்கள் கலங்கி மூக்கு சிவந்திருந்தது.
“ஏம்மா உங்களுக்குப் பிடிக்காத பேண்ட் சட்டை ஏதாவது போட்டிருக்கானா?”
“இல்லன்ணா எனக்கு புடிச்ச சட்டைதான் போட்டிருக்காரு. ஆனா கைல அந்தப் பெண் கவிஞர் புக் வெச்சிருக்காரு”
வழக்கு அழைக்கப்பட்டதும் நீதிபதி இருவரையும் பார்த்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ கவுன்சிலிங் போகச் சொல்லி விட்டார். அதற்குள் மற்ற கட்சிக்காரர்கள் என்னை பிய்த்து எடுத்து விட்டனர்.
“நண்பா இங்கியே நில்லு. பியூன் வந்து கவுன்சிலிங் கூப்பிடுவாரு. போய் உன் தரப்பு நியாயத்தை சொல்லு. அதுக்குள்ள நான் வந்துர்றேன்” என்று கிளம்பினேன். கார்முகில் ஏறக்குறைய என்னைப் பிடித்துத் தொங்கினான். “நண்பா இவகிட்ட என்ன விட்டுட்டு போயிடாத”
“இத்தன பேர் இருக்கற கோர்ட்ல என்ன நடந்துடும்?” என்று தைரியம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
நான் ஒவ்வொரு வேலயாக ஓடிக் கொண்டிருக்கும் போது கார்முகிலிடம் இருந்து போன் வந்து கொண்டே இர்நுதது.
“அவ நிக்கறா”
“அவ நடக்கறா’
“அவ கீழ குதிச்சு சுஸைட் பண்ணிக்க போறான்னு பயமா இருக்கு”
“நான் சூஸைட் பண்ணிக்குவனோன்னு பயமா இருக்கு”
நான் ஷட் அப் என்ரு பதீல் செய்த் அனுப்பினேன். இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சிபிஐ கோர்ட்,, போதைப் பொருள் கோர்ட் குண்டுவெடிப்பு கோர்ட்டில் எல்லாம் என்ன நடக்கும் என்று ஊகம் செய்யலாம். குடும்ப நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பார்க்கவே முடியாது.
வேலைகளை முடித்து விட்டு குடும்ப நீதிமன்றம் செல்ல இரண்டு மணி ஆகிவிட்டது. காரிடாரில் நுழைகிறேன் கார்முகிலும், ஆதித்தாயும் தம்பதி சமேதரராய் எதிரே வந்து கொண்டிருந்தனர். கார்முகில் முகத்தில் சிரிப்பு. ஆதித்தாய் இதழ்களில் புன்னகை.
நான் குழம்பி நின்ற போது இருவரும் வர்றோம் என்று என்னைக் கடந்து சென்றனர். பின்பு கார்முகில் ஓடி வந்தான்.
“நாங்க ரெண்டு பேரும் எதிரெதிரே நின்னுட்டு இருந்தமா லஞ்ச் பிரேக்குன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல. என்னையறியாமலேயே நான் அவகிட்ட போய் வா சாப்டுட்டு வரலாம்னு சொல்லிட்டிருக்கேன். அவளும் வந்துட்டே இருக்கா”
‘ஓ மை காட் இப்ப என்ன செய்யப் போற?”
“அப்படியே ஆழியார் கடத்திட்டு போயிடலாம்னு இருக்கேன்”
“டேய் முட்டாள் அங்க போய் என்னடா செய்ய முடியும். இதுக்காகவே வெள்ளைக்காரன் ஒரு ஊரைக் கட்டி வெச்சிருக்கன்ல . . .ஊட்டி அங்க கூட்டிட்டு போ. லேட் பண்ணிட்டு சேரிங் கிராஸ்ல ரூம் போட்ரு”
“லாட்ஜா?’ நண்பன் அதிர்ந்தான்/
“ பொண்டாட்டி தானேப்பா”
“அட ஆமா இல்ல”
——————————
ஒரு ஆறு மாதம் கழித்து
சங்கீதா வக்கீலிடமிருந்து போன்
“சார் ஒரு ஃபேமிலி கேஸ் செட்டில் ஆச்சுல்ல அந்த லேடி வந்திருக்காங்க. டைவர்ஸ் வேண்டுமாம். என்ன செய்யலாம்?”
‘நான் இருபதாயிரம் பீஸ் கேக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன் மேடம். உங்க பீஸை நீங்க முடிவு பண்ணிக்கங்க” என்றேன்.
—————————————-