எஸ்.எஸ்.தென்னரசு காலத்தை முன்வைத்து…

திராவிட இயக்க எழுத்துகளின் தேவை அதன் காரண காரியங்கள் அடிப்படையில் தன்னை நிரூபித்துக் கொண்டவை.  திராவிட இயக்கங்கள் உருவாக்கிய அரசியல் பயனை அனுபவித்துக்கொண்டே, இப்போது அந்தக் குதிரை மீது ஒவ்வாமை கொள்ளும் ஒரு பிரிவினர் திராவிட இயக்கக் கலை இலக்கியங்களில் ஒவ்வாமை உச்சம் கொள்கின்றனர்.

திராவிட இயக்கக் கலை இப்போது எந்தத் தீர்மானத்தையும் கோரி நிற்கவில்லை. சிறைச்சாலைக் கொட்டடியில் உருவான இலக்கியப் பிரதிக்கு இப்போது தேவையில்லை.  கல்வி இல்லை, வேலை இல்லை, மருத்துவம் இல்லை, பொதுப் போக்குவரத்து இல்லை என மக்களின் பாடுகளை எழுத்துகளாகத் திரட்டியதற்கு இப்போது வேலையில்லை. அதனினும் நுட்பமான பாடுபொருள்களை இப்போது மனம் நாடுகிறது எனில், திராவிட இயக்கக் கலை, திராவிட இயக்க அரசியல் எழுச்சியின் ஊடாகத் தன்னைக் கரைத்துக் கொண்டு, கலையை ஒரு கருவியாக நிரூபித்துக்கொண்டது. 

அந்த வகையில், திராவிட இயக்க அரசியல்வாதிகள் கலைச் செயல்களை அரசியலாக அணுகியதை, கலை இலக்கியங்களில் அரசியல் பேசியதை, கலையின் எழுச்சிமிக்க காலம் எனலாம். அப்படியான எழுச்சிமிக்க காலத்தில், தனது எழுத்துகளினூடாக அரசியலும், அரசியல் செயல்களினூடாக இலக்கியமும் படைத்தவர் எஸ்.எஸ். தென்னரசு.

*

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரைச் சுற்றிலும் அடர்ந்திருக்கின்றன கருவேல மரங்கள். கண்மாய்கள் காய்ந்து மண் மேவிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரும் அந்த வெம்மையைச் சுமந்துகொண்டிருப்பதைப் போல நினைக்கத் தோன்றுகிறது. உயர்ந்த மதில்களுடன் செளமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.  ராமானுஜர் பாடல் பெற்ற தலம் என்றனர். தென்னரசு பிறந்த ஊரை அடைவது எனில், இந்த அடையாளங்கள் வரவேற்கின்றன. சமீபத்தில் அங்கு சென்றிருந்தபோது, அம்மக்களுக்கு ஒரு  மழை வேண்டும் என நினைத்தேன். போக்குவரத்து இப்போது சரளமாக இருக்கிறது. எளிதாகச் சென்று சேரும் நெடுஞ்சாலை வசதி திருக்கோஷ்டியூருக்கு உள்ளது.

ஐம்பதுகளில் அந்த ஊருக்கு என்ன போக்குவரத்து இருந்திருக்க முடியும் ?  கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு சைக்கிள் பயணம் அமைந்திருக்கும். அங்கிருந்து ஒருவர் அரசியல் பயணம் தொடங்குவதும், எழுத்துலகில் தனி இடத்தை அடைந்ததும் சாதாரணமான நிகழ்வாக நினைக்கத் தோன்றவில்லை.

என்ன ஒரு வசதி எனில், காரைக்குடி நகரத்தார்களின் அறிவியக்க செயல்களில் அவர்கள் சொந்த ஊரிலும் அதை நிகழ்த்தியது. அறிவியக்கச் செயல்கள் எனில் எழுத்து, பத்திரிகை, அச்சு என அவர்கள் கையில்  சரஸ்வதி ராஜ்ஜியம் செய்தாள்.  அந்த ஒரு வசதியும் தென்னரசு வளர்ந்து வரக்காரணமாக இருந்தது. அப்போது அவர் சிந்தாமணியாக இருக்கிறார். அதுதான் அவரின் பெற்றோர் வைத்த பெயர்.

அவர் முதன் முதலில் கண்ணதாசனிடம் அறிமுகம் ஆகிறார். கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் எழுதுகிறார். பின்பு அந்த இதழின் ஆசிரியர் குழுவில் இணைகிறார். கவியரசு கண்ணதாசனின் நட்பு அவரை, அப்போது வளரும் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. 

ஒரு பயணத்தில் திருப்பத்தூர் வந்த கலைஞரிடம், கண்ணதாசன் அறிமுகம் செய்கிறார்.  நன்றாக எழுதக்கூடிய பையன் என்பது கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள். தென்னரசு தனது கையில் இருந்த ஒரு நோட்டினை, வாசித்துப் பார்க்க கலைஞரிடன் அளிக்க அந்த கையெழுத்துப் பிரதிதான் அவரை சென்னைக்கு அழைத்து வருகிறது. 

திராவிட இயக்க முன்னோடிகளின் பண்பாட்டுப் பங்களிப்பாக இதழியல் பணிகளைக் குறிப்பிடலாம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் முக்கிய இடம் வகித்த என்.வி. நடராசன் திராவிடன் இதழை நடத்தி வந்தார். அதற்கு ஒர் உதவி ஆசிரியர் தேவை என்கிறபோது, தென்னரசுவை அழைத்து அங்குப் பொருத்துகிறார் கலைஞர்.   அங்கிருந்து முரசொலி இதழுக்கு வந்ததும், பேரறிஞர்  அண்ணா கொண்டிருந்த பிரியம் எல்லாம் தனிச் சுவை கொண்டவை.

தென்னரசு மீது அளவுகடந்த பிரியம் வைத்தவர் பேரறிஞர் அண்ணா.  எழுத்தாளர் என்கிற அடையாளம் கலைஞர் கொண்டாடப் போதும்.  அப்படித்தான் சிந்தாமணியாக இருந்தவர்  தென்னரசு என மாற்றப்பட்டார்.   தென்னரசு ஆனது மட்டுமல்ல, சேதுநாட்டுச் செல்லக்கிளி, சிறுகதை மன்னன் என இவரது அடையாளங்கள் இப்போதும் நிலைத்து நிற்பவை. 

*

திராவிட இயக்க எழுத்தாளர்களில் எஸ். எஸ் தென்னரசு வேறுபட்டவராக அறியலாம்.  குறிப்பாகச் சொல்வதெனில், இலக்கிய வகைமைகளில் திராவிட இயக்கத்தினரை ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரிவினர்கூட தென்னரசு எழுத்துகளை ஏற்கின்றனர். அவரை எழுத்தாளராக ஏற்றுக்கொள்கின்றனர்.

அவருக்கு அளிக்கப்பட்ட ’சிறுகதை மன்னன்’ என்கிற பட்டத்துக்கு எதிரான இலக்கியக் குரல்களைப் பார்க்க முடியவில்லை.   அந்தப் பட்டத்தை அளித்தது அவரை ஊக்குவித்து வளர்த்தவர் கலைஞர் என்பதென்றாலும், அவர்களால் தென்னரசுவைப் புறந்தள்ள முடியவில்லை.

அந்த வகையில் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களாலும் கொண்டாடப்பட்டவர் தென்னரசு.  

எழுத்தாளராக அறியப்பட்டாலும் அவர் பூரணமான திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி.  அவரது திருமணம் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் நடைபெறவில்லை. ’அண்ணா எந்த நேரத்தில்  திருமண நிகழ்வுக்கு வந்தாரோ’ அந்த நேரம்தான் நல்ல நேரம் என்று முடிவு செய்தவர். அப்படியான கருத்து நிலைகளில் பிடிவாதம் கொண்ட அரசியல்வாதி.

தென்னரசு அவர்களின் அரசியல் வளர்ச்சிதான் அப்பகுதி மக்களின்  வெளியுலக வாழ்க்கைக்கான திறவு. அதற்கு முன்பு அரசியல் ரீதியாக மக்கள் ஒருங்கிணைக்கப்படவில்லையா என்கிற கேள்விக்குத்  திட்டமான பதிலை நூற்றாண்டு அரசியல் களத்தை அறிந்தவர்கள் கேட்க வாய்ப்பில்லை.  இப்போதும் புதிய தொழில் வாய்ப்புகள் இல்லாத சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில்,  நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மக்கள் மனங்களை வெல்ல வேண்டுமெனில், அங்குதான்  அவர் கலை மனம் மக்களின் பாடுகளை அறிந்ததாக மாறுகிறது. 

காங்கிரஸ் செல்வாக்குச் செலுத்தி வந்த சேது மண்ணில், திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அப்போதைய கருதுகோள்படி துஷ்டர்கள் கட்சியையும் குடியானவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

கருவேலங்காடுகளூடே திராவிட முன்னேற்றக் கழகக் கொடியைப் பறக்கவிடுவதற்காகக் கொடிக் கம்பங்களைத் தூக்கிச் சுமந்து சென்ற அரசியல்வாதி. அப்படியாக 

அப்பகுதி மக்களின் அரசியல் எழுச்சிக்கு அவர்தான் அடிகோலியவர் என மக்கள் இன்றைக்கும் நினைவூட்டுகின்றனர்.

*

அவர் தனது அரசியல் பார்வையைத்தான் கதைகளுக்குள் கொண்டு வந்தார்.  தனது பக்கத்து வீட்டில் நடந்த ஒரு குடும்ப வரலாற்றினை நாவலாக எழுதியதைப் பதிவு செய்கிறார் அவரது மகள் இளவரசி. பார்த்தவை, கேட்டவைதான் அவரது கலை உலகமாக இயங்கியது.

செம்மாதுளை நூல் அன்றைய ராமநாதபுரத்தின் கள்ளர் சமூக மக்களிடையேயான கொள்வினை – கொடுப்பினை உறவு முறை கதை என அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதைத்தான் தென்பாண்டிச் சிங்கம் எனப் பெரும் நூலாக எழுதினார் கலைஞர்.

புனைவுகளிலும் ஆதிக்கம் செலுத்தியவர். ஆனந்தவிகடனில் தொடராக வந்த ’ சேது நாட்டுச் செல்லக்கிளி ‘நாவல் சிலப்பதிகாரச் சாயல் கொண்டது.  அந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் எழுதி அனுப்பியதுடன், அவர் இறப்பும் நிகழ்ந்தது என்பது நினைவுகூர வேண்டிய நிகழ்வு. 

தென்னரசு எழுத்துகள்  வாழ்க்கைப் பிரதி, புனைவுருவாக்கம் என இரண்டு நிலைகளில் இயங்கினாலும் அந்த எழுத்துகள் பகுத்தறிவுவாத எல்லைக்குள் நின்றே இயங்கி இருப்பதைக் கவனிக்கலாம்.

1930 களில் பிறந்தவர் என்பதால், மிகத் தீவிரமாகத் தனது 40, 50 வயதுகளில் இயங்கி இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில்தான் அரசியல் களம் மிகத் தீவிரம் அடைந்த நேரம்.  போராட்டம், கைது, சிறை எனப் புற உலக இயக்கம் தீவிரம் கொண்டிருந்தாலும் , அகநிலை உலகில் அவர் இயங்கிக்கொண்டே இருக்கிறார். ’பெண்ணில்லாத ஊரிலே’ என்கிற சிறு நூலில், சிறை வாழ்க்கை நாட்குறிப்பாக அந்த நாள்களை வாசிக்கலாம்.

*

திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர்களில் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இலக்கியப் பிரதிகள் நேரடியாகச் சமூக உறவுகளைச் சித்தரிக்கும் விமர்சனப் பிரதிகளாக நிற்பவை. அதனால்தான், கலை உபாசகர்கள் அவற்றை இலக்கியப் பிரதிகளாக ஏற்பதில் அளவுகோல் கொண்டுவருகின்றனர்.  

தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் திராவிட இயக்கக் கலை வடிவங்கள் எழுப்பிய எதிர் குரல்கள் எந்த வெறுப்பாலும் சிறுமைப்படுத்திவிட முடியாதவை. காலத்தின் தேவையாக எழுந்த குரல்கள் அவை. எனினும், அந்த வரிசையில் எஸ்.எஸ். தென்னரசு எழுத்துகள், முதலிலேயே குறிப்பிட்டதைப்போலத் தவிர்க்க முடியாமல் கலை அளவுகோல்களில் முன் நிற்கிறது. முன் நிற்கிறார்.

இப்போது முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட வெறுப்பு அரசியலில் மனநிலைக்கு,  கடந்த நூறு ஆண்டுகளின் தூரம் கண்களுக்குத் தெரிவதில்லை. புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையிலானவை தமிழ் நிலத்தில் மாற்றங்கள். அவற்றுக்கான ஓட்டத்தில்  திராவிட இயக்க எழுத்துகள் காலத்தின் கலக்குரல்கள். அந்த கலகக் குரல்களில் இருந்து கலை நெகிழ்வுடன் இயங்கியதுதான் தென்னரசு கொண்ட அடையாளம்.