மூளை மனம் மனிதன் 22
புகழ்பெற்ற மூளை நரம்பியல் நிபுணர் வி.எஸ் ராமச்சந்திரன் நாம் ஏன் கலையை விரும்புகிறோம் என்பதற்கு நமது மூளையில் நிகழும் நிகழ்வுகளை வைத்துப் பரிணாம இயல் ரீதியாக விளக்கியிருக்கிறார். அவர் நம் மனம் ஏன் கலையை விரும்புகிறது என்பதற்குச் சில விதிகளைச் சொல்கிறார். அதாவது மூளையின் சில பண்புகள். இவை பூர்த்தியாவதால்தான் மனம் கலைகளை விரும்புகிறது. அதில் ஒன்றுதான் சென்ற கட்டுரையில் பார்த்த கண்ணாமூச்சி விளையாட்டில் இருக்கும் ஆர்வம். சொல்லாமல் சொல்வது. அரைகுறையாக விடுவது. பரிணாமரீதியாக இது நமது தப்பித்தலுக்குத் துணையாக இருக்கிறது
இதற்கு நேர்மாறான ஒரு குணமும் நமக்குக் கலையை ரசிக்கக் காரணமாகிறது. அது மிகைப்படுத்துதல். Peak shift என உளவியலில் சொல்வார்கள். அதாவது ஒருவரின் முக்கியமான அல்லது ஒரு பண்பை மட்டும் மிகைப் படுத்திக் காட்டுவது. உதாரணமாக இந்திரா காந்தியை வரைய வேண்டுமானால் அவரது மூக்கினை மட்டும் மிகையாகப் பெரிதுபடுத்தி வரைவது. அது போல் ஒரு பாம்பினை வரைய வேண்டும் என்றால் அதன் வளைவுகளை மிகைப் படுத்திக் காட்டுவது. கோபமாக இருப்பவர் என்றால் கண்களை அளவுக்கு அதிகமாகச் சிகப்பாகக் காட்டுவது.
மேலோட்டமாகப் பார்த்தால் இது முதலில் நாம் பார்த்த சொல்லாமல் சொல்வதற்கு நேர் எதிராக இருப்பது போல் தோன்றும். இதுவும் எப்படி பரிணாம ரீதியாக நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு விடையாக நிக்கோலஸ் டின்பர்கன் (Nicholas Tinbergen) என்ற உயிரியலாளர் செய்த ஆய்வுகளின் முடிவுகள் இருக்கின்றன. அவர் கடல்புறாக்களில் (Sea gull) ஓர் ஆராய்ச்சி செய்தார். கடப்புறாக்களின் ஒரு வகைப் பறவைகளின் அலகுகளில் ஒரு சின்ன சிகப்புப் புள்ளி இருக்கும். தாயின் அலகில் இருக்கும் அந்தப் புள்ளியைக் கொத்தினால் குஞ்சுகளுக்குத் தாய்ப்பறவை உணவளிக்கிறது. இது பரிணாமரீதியாகப் பல்லாயிரம் வருடங்களாக அப்பறவையினம் கற்றுக் கொண்டு அதன் மரபணுக்களில் ஊறிய பண்பு.
ஆனால் தாய்ப் பறவையின் அலகை விடப் பெரிய அளவில் ஒரு பொய் அலகைக் காட்டினால் குஞ்சுகள் தாயைத் தவிக்கவிட்டுவிட்டு அதனைப் போய் கொத்த ஆரம்பித்து விடுகின்றன. அதிலும் பெரிய சிகப்புப் புள்ளியாக இருக்கும் அலகைத்தான் தேடிக் கொத்துகின்றனவாம். பரிணாமரீதியாக சிகப்புப் புள்ளி என்பது அவைகளுக்கு உணவு கிடைக்கும் இடத்தோடு தொடர்புடையது. ஆகவே எத்தனை பெரிய சிகப்புப் புள்ளியாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை உணவு கிடைக்கும் என்று அவை நினைக்கின்றன.அதன்படி நடக்கின்றன.
செவ்வகமாக இருக்கும் ஒரு பெட்டியை முட்டினால் மசால்வடை கிடைக்கும் என ஓர் எலியைப் பழக்கினால். அதன் பின் அது செவ்வகம் என்ற கருத்தை மனதில் பதித்துக் கொண்டு விடும். அதன் நான்கைந்து செவ்வகப் பெட்டிகளை வைத்தால் பின்னர் இருப்பதிலேயே பெரிய செவ்வகப் பெட்டியைத்தான் போய் முட்டும். செவ்வகம்= உணவு , ஆகவே பெரிய செவ்வகம் = நிறைய உணவு எனப் பதிந்து விடுகிறது அதன் மனதில்.
பசுமை உணவோடு செழிப்போடு தொடர்புடையது. ஆகவே ஓவியத்தில் இயற்கையைக் காட்ட அதீதமாகப் பச்சை நிறத்தைக் காட்டுவதும் பீக் ஷிஃப்ட் தான். காற்றில் மரங்கள் அதீதமாக ஆடுவது, பாய் மரங்கள் சாய்வது, ஏராளமான நட்சத்திரங்கள் இருப்பது, முடிவே இல்லாத கோதுமை வயல்களின் மஞ்சள் இப்படி எல்லாம் வான் கா மாதிரியான ஓவியர்கள் இம்பிரஷனிஸ ஓவியங்களில் நிகழ்த்திக் காட்டுவதும் பீக் ஷிஃப்ட் தான் என ராமச்சந்திரன் கூறுகிறார்.
கடவுள்கள் உருவங்களை வடிக்கும் போதும் இது போன்ற மிகைப்படுத்தல்கள் இருக்கும். நான்கு கைகள் இருந்தால் இன்னும் பல வேலைகள் செய்யலாம் என்பதும் மிகைப்படுத்தல்தான்.
ஒரு விஷயத்தின் சாரத்தை அல்லது ஒரு வித்தியாசமான பண்பை மட்டும் மிகைப்படுத்திக் காட்டும் போது அது நமக்கு அந்த விஷயத்தினைச் சட்டென்று புரிந்து கொண்டு அதன்படி நடக்க உதவுகிறது. முழு பாம்பையும் வரையாமல் அதன் பிளவுபட்ட நாக்கை மட்டும் பெரிதாக வரைந்தால் சட்டென்று நமக்குப் பாம்பென்று புலப்படும்.
இன்னொரு பண்பினையும் அவர் கலையை ரசிப்பதற்கான காரணமாகச் சொல்கிறார். அது சமச்சீரான தன்மையை விரும்புவது (Symmetry) . இயற்கையில் பல விஷயங்கள் சமச்சீராக இருக்கின்றன . குறிப்பாக மனித உடல். ஆகவே தாறுமாறாக வரைந்த ஒரு வட்டத்தை விட மிகச்சரியாக வரைந்த ஒரு வட்டம் நமக்கு அழகாகத் தெரிகிறது.
அதே போன்றுதான் patterns எனச் சொல்லப் படும் நுட்பமான வேலைப் பாடுகளிலும் இந்த சமச்சீர்தன்மையை மனம் விரும்பும். உதாரணமாக வரிசையாகப் நீல நிறக் கற்களாவே ஒரு நகையில் கோர்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென ஒரு பச்சை நிறக் கல் இருந்தால் அது ரசனைக் குறைவாகத் தோன்றும். அல்லது கருப்பு வெள்ளைக் கட்டங்கள் மாறி மாறி இருந்து ஒரு இடத்தில் மட்டும் அந்த ஒழுங்கு குலைந்தால் அந்த இடம் நமக்கு அசிங்கமாகத் தோன்றுகிறது. வரிசையாக எல்லாவற்றையும் அடுக்கி வைப்பது நமக்கு அதனைப் பயன்படுத்த எளிமையாக்கும். ஆகவே ஒழுங்காக அடுக்கி அமைக்கப்பட்டிருக்கும் விஷயங்களை நமக்குப் பிடித்திருப்பதால் அவை நமக்கு அழகாகத் தோன்றுகின்றன. இது போல் தெளிவாக ஒரு ஒழுங்குடன் விஷயங்களை ஒருவர் செய்தால் எழுதியிருந்தால் அழகாகச் செய்கிறார், அழகாக விளக்குகிறார் என்கிறோம் அல்லவா? இங்கு அழகு என்பது பயன்மதிப்பீட்டினால் வருகிறது,
இந்த முழுமை விரும்பும் நேர்த்தித் தன்மையைப் (Perfectionism) பல கலைஞர்களிடம் காணலாம். அவர்கள் விடாப்பிடியாகச் சிலவற்றைச் செய்வதற்கு இதுதான் காரணம். முழுமையாகச் செய்தால்தால் ஒரு திருப்தி. (இந்தப் பண்பு அதீதமாகப் போனால் எதிலும் முழுமையடைந்த திருப்தி இருக்காது. அதைத்தான் அப்சஸ்ஸிவ் கம்பல்ஸிவ் நடவடிக்கை obsessive compulsive behavior என்கிறோம்.) நுட்பமான வேலைப்பாடுகளில் இந்த ஒழுங்கும் நேர்த்தியும் இருப்பதால் அவை நமக்குப் பிடிக்கின்றன. அதன் அடிப்படைமுறையான ஒழுங்குடன் ( organized ) இருக்கும் எந்த விஷயத்தையும் நம்மால் எளிதில் பயன்படுத்த முடியும் என்னும் அடிப்படை நம்பிக்கை. இது போன்ற வேலைப்பாடு (Pattern)களில் அடுத்து என்ன வரும் என நம்மால் கணிக்க முடிகிறது (Predictability). இது நமக்கு ஒரு சின்ன புதிர் போல் தோன்றி விடையளிக்க வைக்கிறது. இதுவும் இவை அழகாகத் தோன்ற ஒரு காரணம்.
அடுத்ததாக வி எஸ் ராமச்சந்திரன் சொல்வது கிட்டத்தட்ட சமச்சீர்தன்மை போன்றதுதான். அதை Grouping என அழைக்கிறர். அதாவது ஒரே மாதிரி இருப்பதைச் சேர்த்து அடுக்கும் தன்மை. மேட்சிங்காக உடை அணிகிறோமே அதற்குப் பின்னணியில் இருப்பது இந்தப் பண்புதான். இதுவும் அடிப்படையில் நமக்கு எளிதில் முடிவெடுக்க உதவுவதால் இப்படி இருப்பது அழகாகத் தோன்றுகிறது.
அடுத்ததாக மிக முக்கியமான பண்பு முடித்து வைத்தல் (completion). இதுவும் கண்ணா மூச்சி போன்றதுதான். மூளை எப்பவுமே முழுமையை விரும்பக் கூடியது. இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். இங்கு அரைகுறையான உருவம்தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மூளை அதை நிறைவு செய்து முக்கோணமாகப் பார்க்கிறது. இது போன்ற தன்மைகளைக் கலையில் வெளிப்படுத்தும்போது அது நமக்குப் பிடித்தமானதாக ஆகிறது.
மேலே குறிப்பிட்டிருப்பவை பலதும் பார்வைப் புலனோடு தொடர்புடையது. இவையெல்லாம் ஓவியக்கலையோடு தொடர்புடையது. ஆனால் கவிதை, இலக்கியம் போன்று கலைகள் சிந்தனைகளோடும் அறிவோடும் வார்த்தைகளோடும் தொடர்புடையனவாக இருக்கின்றவே? அவற்றையெல்லாம் ஏன் மூளை விரும்புகிறது? தொடர்ந்து காணலாம்.