அவர்கள் நம் மரங்களுக்காக வந்தார்கள்…!

அவர்கள் நம் நிலங்களுக்காக வந்தார்கள்…!

அவர்கள் நம் பிணங்களுக்காக வருவார்கள்…!

ஒராகா பழங்குடிகள்  

ஓர் ஆசிரியர் கரும்பலகையில் வரைகிறார். கட்ச் வளைகுடாவில் தொடங்கி, தெற்குப் பக்கமாக வந்து, குமரி முனை கடந்து, வடக்கு நோக்கிச் சென்று ஒரு சுற்று சுற்றி மீண்டும் கட்ச் வளைகுடாவில் முடித்து, “இது என்ன?” என்கிறார். மாணவர்கள் அனைவரும், “இந்தியா….?” எனக் கத்துகிறார்கள்.  ”இதுதான் முழுமையான இந்தியாவா?” எனக் கேட்கிறார். மாணவர்கள் ஆமாம் என்பதுபோல அமைதியாக இருக்கிறார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து வந்து அரபிக்கடலில் இருக்கும் லட்சத் தீவுகளையும், வங்காள விரிகுடாக் கடலில் இருக்கும் அந்தமான் நிகோபர் தீவுகளையும் வரைகிறான். “இதுதான் முழுமையான இந்தியா?” என்கிறார் ஆசிரியர்.

காலா பானி (Kaala Paani) என்ற வெப் சீரிஸில் வரும் இந்த மிகச் சிறிய காட்சி நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவின் துடைத்தெறிய முடியாத கண்ணீர்த் துளிகள் போல இருக்கும் இந்தத் தீவுகளைப் பற்றி நாம் சிந்திக்கிறோமா? 100 அடிக்கும்மேல் சுனாமி அலைகள் வந்து தாக்கிய அடுத்த நாள் சாப்பாட்டிற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? முழுக்க சுற்றுலாப் பயணிகளை நம்பியே இருக்கும் தீவுகள்மீது பணமதிப்பிழப்பைத் திணித்த போது எப்படி நொறுங்கினார்கள்?   எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தபோதும், நம்முடைய துறைமுகங்களையும், கனிம வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசு, அந்தமான் மரங்களையும், அங்குத் தனித்தன்மையோடு வாழும் பழங்குடிகளையும் எப்படிக் காப்பாற்றும்? போன்ற பல கேள்விகளை எழுப்புகிறது.

இதுவரை அதிகமாகப் பேசப்படாத அந்தமான் நிகோபர் நிலத்தைப் பற்றி இந்த வெப் சீரிஸ் பேசுகிறது என்பதே கவனிக்க வைத்தது. அந்த நிலத்து மக்களின் பிரச்சனைகளைப் பற்றி முழுமையாகப் பேசவில்லைதான் என்றாலும், அந்தத் தீவுகளின் இயற்கையை; அங்கு வாழும் பழங்குடிகளை; கார்பரேட்களின் செயல்பாடுகளைக் கவனம் ஈர்க்கும் அளவிற்குப் பதிவு செய்கிறது.  அதனாலேயே, இந்த வெப் சீரிஸ் பொதுவாக எல்லோரது பாராட்டையும் பெற்றுள்ளது. நாட்டுப்பற்றையும், இஸ்லாமிய வெறுப்பையும் மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கும் இந்தி வெப் சீரிஸ் உலகில், அத்திபூத்தாற்போல இதுபோன்ற மாற்று சீரிஸ்களும் வருகின்றன என்பது உள்ளூர ஆனந்தத்தை வழங்கியது. காலா பானியின் கதையை முதலில் பார்த்துவிடுவோம்.

”தண்ணீர்…! எல்லாப் பக்கமும் தண்ணீர்…! கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் தண்ணீர்தான்…! அதைக் கடந்து இருக்குறதும் தண்ணீர்தான்…! நம்ம Main இந்தியாவிலேர்ந்து பல கிலோமீட்டர் தொலைவில் ஒரு Mini – India இருக்கு. அந்தமான் நிகோபார்….! இந்த உலகத்தில எங்கேயும் பார்க்கமுடியாத மரங்கள், விலங்குகள், மனிதர்கள இங்க பாக்க முடியும். இந்த இடம் இயற்கையோட பொக்கிஷம்! இந்தப் பொக்கிஷத்துக்குப் பாதுகாப்பு கொடுக்குறதும் தண்ணீர்தான்…!”

என்ற அழகான முன்னுரையோடு படம் தொடங்குகிறது. காலா பானி’ன்னா நமக்கு ஞாபகம் வருவது அந்தமான் தீவில் இருக்கும் செல்லுலார் சிறைதான். இந்தச் சிறையை உருவாக்கிய டேவிட் பெர்ரி என்ற பிரிட்டிஷ் அதிகாரி, “கடவுளே வந்தாலும் இந்தச் சுவருக்கு அந்தப் பக்கம்தான் நிற்க வேண்டும்” என்று சொன்னாராம். உண்மையில் அந்த சிறைச்சாலையின் சுவரைவிடத் தப்பிக்க முடியாத மிகப் பெரிய பிரமாண்டம் அந்தமானுக்கு வெளியில் இருக்கிறது. அதன்பெயர் கடல். சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட அந்தமானுக்கு 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தண்ணீரால்தான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது. (கதை 2027ஆம் ஆண்டு நடக்கிறது)

அந்தமானுக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் மிகப் பெரிய குழாயை ஒராகா பழங்குடி மக்கள் உடைத்துச் சேதப்படுத்துகிறார்கள். (ஒராகா பழங்குடியினர்- கதைக்காகப் பழங்குடியினரின் பெயரை மாற்றியிருக்கிறார்கள்) இதனால் போர்ட் பிளேர் நகரத்தில் வாழ்பவர்கள் குடிதண்ணீரின்றித் திண்டாடுகிறார்கள். தண்ணீர்ப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் காலத்தில்தான், ATOM என்ற கார்பரேட் நிறுவனம்  ’ஸ்வராஜ் மஹோத்சவ்’ என்ற பிரமாண்டத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்கிறார்கள். ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் அந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.

இதுபோன்ற திருவிழாவை நடத்துவதற்குத் தேவையான பாதுகாப்பையும், இடத்தையும், போக்குவரத்து ஒழுங்குகளையும் நிறைவேற்றித் தருவதாகக் காவல்துறையினர் சான்றிதழ்கள் தந்துவிட்டனர். சுகாதாரத் துறை மட்டும் அனுமதி (Clearance Certificate) வழங்க வேண்டும். ஆனால், தலைமை மருத்துவர் டாக்டர் சௌடாமினி சிங் இதற்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ”சௌத் அந்தமான்’ல்ல மூன்று பேர் ஹாஸ்பிடல்’ல அட்மிட் ஆயிருக்காங்க. ஒரே மாதிரியான symptoms-ஸோட… high fever, dry throat, nausea… அதுக்கப்புறம் அதிகமா காணமுடியாத rare symptom… Psoriasis – like black rashes in the nape region of the neck” என்கிறார்.

1989-இல் அந்தமானில் ஒரு நோய் பரவியிருந்தது. அதனுடைய அறிகுறியும் கழுத்தின் பின்பக்கத்தில் இருக்கும் கறுப்பு அரிப்புத் தடுப்புத் தழும்புகள்தாம். அந்த நோய் எங்கிருந்து வந்தது என்ற அடையாளமே தெரியாமல் கொத்துக் கொத்தாக மக்களைச் சாகடித்துவிட்டு அடையாளம் தெரியாமல் மறைந்துபோனது. இப்போதும் அதே போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் விபரீதம் மிகப் பெரியதாக இருக்கும் என்பதைத் தலைமை மருத்துவர் எடுத்துச் சொல்கிறார். ”வெறும் publicity-க்காகக் கற்பனையான ஒரு நோயோட பயத்தை உருவாக்குறாங்க… ஒரு பத்து பேருக்கு விக்கலும் கொப்பளமும் வரப்போகுது’ன்றதுக்காக ஸ்வராஜ் மஹோத்சவ cancel பண்ணறது ரொம்ப தப்பு” என்கிறார் கேதன். இவர் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான காவல் அதிகாரி ( SDPO Sub- Divisional Police Officer). 

அந்தமானின் லெப்டினெண்ட் கவர்னர் தலைமை மருத்துவ அதிகாரி சௌதாமினி சிங்கிடம், “1989-இல் இந்த நோய் தாக்கி எத்தனை பேர் இறந்தார்கள்?” எனக் கேட்கிறார். எளிமையாக இருக்கும் இந்தக் கேள்விக்கான பதில் ஏழு பேர். ஆனால் இந்தக் கேள்விக்கான பதிலை எளிமையாக உள்வாங்கிக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தில்போய் முடியும். 

ஏனெனில், அந்தமானிலுள்ள ஜென்கின்ஸ் தீவில்தான் இந்த நோய் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தத் தீவு அளவில் சண்டிகர் நகரத்தைவிடப் பெரியது. ஆனால் மக்கள் தொகை வெறும் 400 பேர்தான் வாழ்கிறார்கள். மீனவக் கிராமங்கள் ஆறு அல்லது ஏழு இருக்கலாம். கிராமங்களில் மக்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. சில கிராமங்களில் 20பேர்கூட இல்லை. பல கிராமங்களில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளவே மாட்டார்கள். அதனால் நோய்த்தொற்றுப் பரவல் மிகக் குறைவாக இருக்கும். அந்த மக்களிடம் நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு நோய்த்தொற்று பரவி அதனால்  ஏழு பேர் இறந்துவிட்டார்கள் என்பது எளிமையாகக் கடந்துசெல்ல வேண்டிய விசயம் இல்லை.

”ஆனால் எனக்குத் தெரிஞ்சு ஒரு நோய் இந்தத் தீவுல ஏழு பேரவிட பல மடங்கு ஆள்கள கொன்னுருக்கு. அதுக்குப் பேர் Poverty. ஸ்வராஜ் மஹோத்சவ் வர்ற டூரிஸ்ட்டுக்கு எல்லாம் ஒரு ஹாலிடேவா இருக்கலாம். ஆனால் உள்ளூர்ல இருக்குற மக்களுக்கு எல்லாம் அது ஒரு Vaccine” என்று லெப்டினெண்ட் கவர்னர் இந்தப் பிரச்சனைக்குப் புதிய விளக்கம் ஒன்றைத் தருகிறார். மக்களின் வாழ்வாதாரத்திற்குமுன் என்ன தருக்கத்தைச் சொன்னாலும் எடுபடாது போய்விடும். அதனால்  திருவிழாவை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குகிறார் டாக்டர் சௌடாமினி சிங்.

இந்த வெப் சீரிஸில் இரண்டு குட்டிக் கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த இரண்டு குட்டிக் கதைகளின்மீது ஒட்டுமொத்த திரைக்கதையும் கட்டமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த வெப் சீரிஸின் அழகியல். 

முதல் கதை: காட்டுல வெள்ளம் வந்துச்சு அதுல மூழ்கிட்டு இருந்த தேள் தவளைகிட்ட ‘என்ன காப்பாத்து… உன் முதுகுல ஏத்திட்டு என்னைக் கரையில் கொண்டுபோய் விட்ரு’ன்னுச்சு. ஆனா தவளையோ, “ நீ ஒரு தேள்… உன்னை என் முதுகுல ஏத்திக்கிட்டா என்னையே கொட்டிருவே”னுச்சு.  அதுக்கு அந்தத் தேள், “உன்னை ஏன்’ப்பா நான் கொட்டப் போறேன். நீ செத்துட்டா உன்னோட சேர்ந்து நானும் மூழ்கிடுவேன்’ன்னு சொல்லுச்சு. தவளைக்கும் அது சரி’ன்னு பட்டுச்சு. அது தேளைத் தன் முதுகுல ஏத்திக்கிச்சு. ரெண்டும் நதியோட நடுப்பகுதிக்கு வந்ததும் அந்தத் தேள் தவளைய கொட்டிடுச்சு. செத்துக்கிட்டிருந்த தவளை, “ஏன் இப்பிடி செஞ்சே.. இப்ப என்கூட நீயும் மூழ்கிருவியே”ன்னு தேள்கிட்ட கேட்டுச்சு. அதுக்கு அந்தத் தேள், “என்ன பண்றது இதுதான் என் சுபாவம்…!”-ன்னு சொல்லுச்சு.

இது பஞ்ச தந்திரக் கதைதான். இயற்கையின்மீது பயணிக்கும் மனிதனின் குண இயல்புகளைப் புரியவைப்பதற்கும் இந்தக் கதை உதவுகிறது. ”நம்முடைய ஒவ்வொரு மூச்சும் இயற்கை நமக்குக் கொடுத்த வரம் என்பதை மறந்தே போய்விடுகிறோம். இயற்கை நம்முடைய தேவைக்காக இல்லை. இயற்கையின் தேவைக்காகத்தான் நாம் உருவாகி இருக்கிறோம். இயற்கையோடு போராட முடியாது. ஏனென்றால் இயற்கைதான் எப்போதும் வெல்லும்” என்ற அழகான செய்தியைச் சொல்லி முதல் எபிசோடை நிறைவு செய்கிறார்கள்.

அடுத்த எபிசோடின் தொடக்கத்தில் இன்னொரு கதையை அந்தமான் நிகோபரின் லெப்டினெண்ட் கவர்னர் சொல்கிறார். “அஞ்சு ரயில் workers தண்டவாளத்தில work பண்றாங்க. காதுல headphone இருக்கு. அதனாலயோ என்னவோ supersonic speed-ல வந்துட்டிருக்க train-அ அவங்க கவனிக்கல. மோதுனா அஞ்சு பேருக்கும் மரணம்தான். But control room-ல நீங்க இருக்கீங்க ஆனா உங்க முன்னால இருக்கு ஒரு switch. அந்த switch-அ திருப்பிட்டா train திரும்பி வேறவொரு தண்டவாளத்தில போயிரும். ஆனா அதுலயும் ஒரு worker வேலை செய்யிறான். அஞ்சு உயிர்கள் ஊசலாடிட்டிருக்கு. அத மாத்தனும்’னா நீங்க உங்க கையால ஒரு உயிர எடுக்கணும். கேள்வி என்னன்னா உங்கள்’ல்ல எத்தனபேர் அந்த switch-அ திருப்புவீங்க. Control room வழியா எட்டிப் பாக்குறீங்க. ரெண்டாவது தண்டவாளத்துல work பண்றது உங்க பையன். என்ன செய்வீங்க? அப்பவும் switch-அ திருப்புவீங்களா?” எனக் கேட்கிறார்.

 ”மனித உயிர்களுக்கிடையில தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்தால் right decisions இல்லை. Wrong decisions, கொஞ்சம் குறைவான wrong decisions-தான் இருக்கு. நிஜ வாழ்க்கையில இருக்குற problem ரொம்ப சிக்கலானது. சினிமாவுல பாக்குறமாதிரி right or wrong; good or bad; hero or villain எதுவும் கிடையாது”  என்று இந்தக் கதைக்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார். இயற்கையைச் சிதைக்கும் மனித இயல்புகளும், அதனைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் தவறான முடிவுகளும்தான் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கின்றன. 

நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் அபாயத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தும், கார்ப்பரேட் முதலாளிகளின்  விருப்பத்திற்கு ஏற்ப ஸ்வராஜ் மஹோத்சவ் கொண்டாட அனுமதி வழங்கிவிடுகிறார்கள். கொண்டாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், தண்ணீரில் பரவியிருக்கும் புதுவகையான superbug பாக்டீயா மக்களைத் தாக்குகிறது. எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு அந்த பாக்டீரியா கட்டுப்பட மறுக்கிறது. இதனுடைய அறிகுறிகளைப் பொறுத்தவரை leptospirosis-ஐப் பிரதி எடுத்ததுபோல இருக்கிறது. ஆனால் Pulmonary manifestations என அழைக்கப்படும் நுரையீரல் தொற்றைப் பெற்றிருக்கிறது. (கோவிட் 19 போன்றது)

இந்த நோயின் அறிகுறிகள் கழுத்தில் கறுப்பு நிறத்தில் உடல் அரிப்புத் தடிப்புகள் (Rashes) உருவாகும். காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல் இருக்கும். சற்றுக் குணமானதுபோலத் தோற்றம் தரும். ஆனால் மறைந்து நின்று தாக்கும் எதிரியைப் போலச் செயல்படும். விக்கல் எடுக்க ஆரம்பிக்கும். நுரையீரலும், சிறுநீரகமும் செயலிழக்க ஆரம்பிக்கும். ஒரு மணி நேரத்திற்குள் மரணத்தை அழைத்து வந்துவிடும். மிகவும் ஆபத்தான இந்த நோயை LHF -27  (Leptospiral Hemorrhagic Fever – 27) என அழைக்கிறார்கள்.

ATOM நிறுவனத்தின் முதலாளிகள் அந்தமானில் இருந்து பர்மாவிற்கு அருகில் இருக்கும் ஹஸ்லி தீவிற்குக் கப்பலில் வெளியேற ரகசியமாக முயற்சி செய்கிறார்கள். இதைப் போலிஸார் கண்டறிந்து தடுத்துவிடுகிறார்கள். LHF -27 நோய்த்தொற்று பற்றி முதன்மை இந்தியாவிற்குத் (Mainland என அழைக்கிறார்கள்) தெரிந்துவிடுவதால் அவர்கள் அந்தமானோடு முழுமையாக உறவைத் துண்டித்துவிடுகிறார்கள். ATOM நிறுவனத்தினரோடு பொதுமக்களில் 5000 பேரை அனுப்பினால் பிரச்சனை ஓரளவு குறையும் என நினைக்கிறார்கள்.

ஆனால் ATOM நிறுவனரின் மனைவி ஸ்வஸ்திக்கு LHF -27 நோய்த்தொற்று வந்துவிடுகிறது.  அவர் உயிரோடு இல்லை என்றால் கப்பலைக் கிளப்ப மாட்டார்கள். எப்படியாவது அவரைக் குணப்படுத்த வேண்டும். சௌதாமினி சிங்கைத் தொடர்ந்து ரிது காக்ரா என்ற மருத்துவர் இந்த நோய்க்கான மருந்தைத் தேடி ஜென்கின்ஸ் தீவுக்குப் போகிறார்.  Andamani Echinacea என்ற மரத்தின் இலைகள்மூலம் அது குணமாகும் என்பதைக் கண்டறிகிறார். ஜென்கின்ஸ் பயோ பார்க் அருகில் இந்த மரங்கள் நிறைய இருந்தன. ஆனால் அவை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றை அழித்தவர்கள்  ATOM நிறுவனத்தினர்தான்.

ATTAVUS என்பது அந்தப் பகுதியில் வாழ்ந்துவந்த ஒராகா பழங்குடிகளின் சுடுகாடு. இறந்தவர்களை அந்த இடத்தில் புதைத்துவிட்டு Andamani Echinacea மரங்களின் விதைகளைத் தூவி விடுவார்கள். ATOM நிறுவனத்தினர் தங்கள்  திட்டத்திற்காக மண்ணைத் தோண்டியபோது அதிலிருந்து வெளியேறிய பாக்டீரியா அருகில் இருந்த ஜென்கின்ஸ் ஏரியில் கலந்துவிட்டது. பாக்டீயாக்கள் நிறைந்த அந்தத் தண்ணீரைக் குடித்தவர்களுக்கெல்லாம் தொற்றுநோய் பரவியிருக்கிறது.

ATTAVUS என்பது பழங்குடிகளின் இடம் மட்டுமில்லை சுற்றுச்சூழல் தாங்கு மண்டலப் பகுதியும்கூட (Environmental buffer zone). அந்தப் பகுதியில் வணிகரீதியாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது. ஆனால், ATOM நிறுவனத்தின் முதலாளி பிராண்டன் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கு ஒரு ஹெலிபேட் தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக அந்தப் பழங்குடிகளின் இடத்தை அபகரித்து சுடுகாட்டை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். கதையின் இறுதியில் போலிஸ் அதிகாரி கேதன்,  “உங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தபோதும், அந்த ஒரு ஏக்கர் பழங்குடிகளின் சுடுகாட்டை ஏன் அபகரித்தீர்கள்” எனக் கேட்கிறார். அதற்கு ATOM நிறுவனத்தின் மேனேஜர் சொல்லும் பதில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒன்று.  “Because we could. எங்களால முடிஞ்சது அதனால செஞ்சோம்…!” என்கிறார் அவர்

ஒரு நோய் அந்தமான் முழுவதும் பரவுவதற்குக் காரணம் முதலாளிகளின் பேராசை. அந்தப் பேராசையின் விளைவாக அதன் முதலாளிப் பெண்ணே பாதிக்கப்படுகிறாள். அவளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் Andamani Echinacea மரங்களின் இலைகள் வேண்டும். ATTAVUS என்ற பழங்குடிகளின் இடத்தை அழித்து, அந்த இலைகளை இல்லாமல் செய்தவர்களும் அவர்கள்தாம். 

இந்த நோயைப் போக்கும் வழி ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. ஒராகா பழங்குடிகளின் ரத்தத்தில் இந்த நோயை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. Cisternal puncture, mass spectroscopy and intervenes infusion மூலம் ஒராகா பழங்குடியினர் ரத்தத்தை எடுத்து சாதாரண மக்களிடம் செலுத்தி நோயைக் குணப்படுத்தலாம். ஒராகா மக்களிடம் இதுபோல ரத்தம் எடுத்தால் அவர்கள் இறந்துபோகக் கூடும். ஆனால் சில ஆயிரம் ஒராகா மக்களிடம் ரத்தம் எடுத்துப் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். அந்தமான் லெப்டினெண்ட் கவர்னர் தன் கையில் இருக்கும் switch-ஐத் திருப்பினாரா? இல்லையா? என்பதுதான் முடிவு.

ஒரு கட்டடப் பொறியாளர் வரைபடம் வரைந்து, அதன்படி கட்டடம் எழுப்புவதுபோலத் திரைக்கதையும், வசனங்களும், நடிப்பும் கனக் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நடிகரும் அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்கள். குறிப்பாக லகான், ஜோதா அக்பர் போன்ற படங்களை எடுத்த இயக்குநர் அஷுதோஸ் கோவாரிக்கர் அந்தமானின் லெப்டினெண்ட் கவனராக அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்.

கதையில்  இரண்டு விசயங்கள் ஈர்ப்புடையதாக அமைந்தன. ஒன்று character Art.  அந்தமானைச் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் குடும்பத்தைப் பிரிந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து வாடும் சந்தோஷ் என்ற கதாப்பாத்திரத்தின் வார்ப்பு மிக அற்புதமாக அமைந்திருந்தது. நான் SDPO-வாக வரும் கேதன் காமத் கதாப்பாத்திரத்தை வெகுவாக ரசித்தேன். கேதன் ஒரு சுயநலமான அதிபயங்கர புத்திசாலி. என்ன புத்திசாலியாக இருந்தாலும் பின்னடைவுகளை மட்டுமே சந்திப்பான். சக அதிகாரிகள் அவன்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள், “வருத்தமா இருக்கு காமத். உன்னைவிட ஒரு அரசியல்வாதிய நான் நம்புறேன்’னு நினைச்சா எனக்கு வருத்தமா இருக்கு” என அவனுடைய மூத்த அதிகாரி சொல்லும்போது, “என்னை நம்பலை’ன்னாலும் நான் சொல்றத ஏத்துக்கிறீங்க’ல்ல சார்” எனச் சொல்லும் நயவஞ்சகமான பேச்சு அவ்வளவு அருமை.

இந்தக் கதாப்பாத்திரத்தில் அமே வாக் என்பவர் நடித்திருக்கிறார். எங்கிருந்து அவரைக் கண்டுபிடித்தார்கள் என வியப்படைய வைத்திருக்கிறார். படத்தின் இறுதியில், “Impression-அ create பண்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பத்தி யாரு என்ன நினைக்கிறாங்க’ன்னு நான் கவலைபட்டதே இல்லை. ஆனா என்னைப் பத்தி அவ(ள்) (டாக்டர் ரிது காக்ரா) இப்போ என்னை நினைக்கிறா(ள்)’ன்னு இப்ப மட்டும் நான் ஏன் கவலைப்படுறேன்…? மிஸ்டர் வாணி அவ(ள்) எங்க இருக்கா(ள்)’ன்னு எனக்குத் தெரியும். அத உங்ககிட்ட சொல்லமாட்டேன். ஆனா(ல்) அது ஏன்’னு எனக்குத் தெரியல…! ஏன்’னு எனக்குப் புரியல…!” எனச் சொல்லிவிட்டு அவர் நடிக்கும் நடிப்பு அற்புதம்.

ஒன்று character Art என்று சொன்னேனா…? இன்னொன்று இந்த சீரிஸ் முன் வைக்கும் சமூகப் பார்வை. பொதுவாக இந்தி வெப் சீரிஸ்கள், தாழ்த்தப்பட்டவர்களையும் இஸ்லாமியர்களையும் எப்படிக் காட்சிப்படுத்தும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்த சீரிஸிலும் ஓரிடத்தில் ரிது காக்ராவைப் பற்றிச் சொல்லும்போது, “கோட்டாவுல டாக்டர்க்குப் படிச்ச பொண்ண நம்பி வந்துட்டோம் என்ன செய்யப் போறாளோ?” என ஒரு வசனம் வந்தபோது ‘சரிதான் இதுலயும் ஆரம்பிச்சுட்டாங்களா?’ என்பதுபோல யோசித்தேன். ஆனால் தலித் குடும்பத்திலிருந்து அறிவை நோக்கி வருபவர்களின் உளக் கிடக்கையை அடுத்த அடுத்த காட்சிகளில் அற்புதமாக உணர்த்துகிறார்கள். 

குறிப்பாக ரிதுவின் அப்பாவிடம் ரிது “உங்களுக்குத் தாத்தா என்ன கொடுத்தார்?” எனக் கேட்கும்போது, “ஒரு குரல்… இன்னைக்கும் எனக்குள்ள ஒலிக்கிற அவரோட குரல்… ‘நீ தோக்கவே பிறந்த ஆள். எப்பவும் பின் தங்கியே இருப்ப’ன்னார். அவர் ஒரு தலித். இருந்தாலும் அவருக்கு ஜாதி நம்பிக்கை அதிகம். அவர மாதிரியே நானும் சமூகத்தில inferior-ஆ இருந்திடுவேன்’ன்னு நினைச்சார். ஆனா எனக்கு என்ன cards வரணும்’ன்ற control நம்மகிட்ட இல்லை’ன்னு புரிஞ்சுச்சு. வர்ற cards’ஸ வச்சி என்ன முடிவெடுக்கலாம் தெரிஞ்சுச்சு” என்று ரிதுவிடம் சொல்லும் இடம் உணர்வுபூர்வமாக இருந்தது.

ரிதுவின் அப்பா மகளின் கண் எதிரே ஆதிக்க ஜாதியினரால் பாதிக்கப்பட்ட பிறகு, “நீ என்னதான் டாக்டர் பட்டம் வாங்குனாலும் உன் பேருக்கு முன்னால இருக்குற டாக்டர் பட்டம் தெரியாது. பேருக்குப் பின்னால இருக்குற ஜாதிதான் தெரியும். உனக்கும் என் குரல் கேட்கும். நீ என்ன செய்யணும்’ன்றத உன் படிப்பும் திறமையும்தான் தீர்மானிக்கணும். உன் பரம்பரை இல்லை. அதனால எப்பவும் உன்னை மட்டும்தான் நம்பணும். கடந்து போனவங்களோட பாரத்தை நீ சுமக்க வேணாம்”  என அப்பா பேசும் வசனத்தைக் காட்சியின் மிக முக்கியமான இடத்தில் வைத்த விதமும், அந்தக் காட்சியில் ரிதுவாக நடித்தவர் வெளிப்படுத்திய நடிப்பும் அபாரமாக இருந்தன.  சாதாரணமாகக் கடந்துபோகக் கூடிய எளிய காட்சி ஒன்றில் மிகச் சிறந்த உணர்வைக் கடத்தியிருக்கிறார்கள்.

எனக்கு இந்த வெப் சீரிஸ் பற்றி ஒரு குறை உள்ளது. 2019-இல் கொரானா வைரஸ் இந்தியாவைத் தாக்கியது. அப்போது ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், போக்குவரத்து முடக்கம் போன்றவை இருந்தன. அதற்கடுத்து 2027-இல் அந்தமானில் அதே போன்ற ஒரு பாக்டீரியாத் தாக்குதல் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் ஏற்கனவே நடந்த தொற்றுநோய்த் தாக்குதல் பற்றிய பதிவு இந்த சீரிஸில் மிகக் குறைவாகவே இருக்கிறது.  ஓர் இடத்தில் ஒரு பதிவைச் செய்கிறார்கள். 

“பாக்டீரியாவினால் தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என லெப்டினெண்ட் கவர்னர் கேட்டுக்கொள்கிறார். ஆனால் இந்தியாவிலிருந்து போதுமான உதவி கிடைக்க வேண்டும் என நினைத்து ரிது காக்ரா பேங்களூருவில் இருக்கும் தன் பேராசிரியருக்குத் தெரியப்படுத்தி உதவி கேட்கிறார். இந்த விசயம் லெப்டினெண்டுக்குத் தெரிந்ததும் அவர் ரிதுவிடம் சொல்கிறார், “உண்மைக்கு எப்பவும் பெரிய விலை உண்டு. அந்த விலை மனிதர்களா இருக்கும்போது ரொம்ப கவனமா இருக்கணும். இப்ப mainland-க்கு இந்தப் பிரச்சனை தெரிஞ்சதால என்ன செய்யப் போறாங்க? தீவுகள தனிமைப்படுத்துறதத் தவிர வேற எந்த முடிவும் எடுக்கமாட்டாங்க…!” என்கிறார்.

ரிது இந்த விசயத்தைப் பேராசிரியரிடம் சொன்னதைவிட இன்னொருவரிடம் சொல்லியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அவர் மக்களைக் கைதட்டச் சொல்லி; விளக்கு ஏற்றச் சொல்லிக் கொரானா வைரஸை விரட்டி இந்தியாவைக் காப்பாற்றியவர்…! அவருடைய வழிமுறையைப் பின்பற்றினால் 2027-இல் மட்டுமில்லை 3037-இல்கூட பாக்டீரியா அந்தமானைத் தாக்காது. இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் விரைவில் வரவிருக்கிறது. அதிலாவது அவருடைய வழிகாட்டலைப் பின்பற்றுவார்கள் என்று நம்புவோமாக…!

sankarthirukkural@gmail.com